காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் மரியாதையை உலக அரங்கில் அசிங்கப்படுத்திவிட்டதா? இந்தியாவின் கௌரவத்தை காலி செய்துவிட்டதா? இந்திய நாட்டிற்கு இது தலைகுனிவா? இதை செய்தவர்கள் தேச துரோகத்தை செய்துள்ளனரா? இப்படிப்பட்ட பட்டிமன்றம் நாடெங்கும் உள்ள ஊடகங்களில் நடந்து வருகிறது. அக்டோபர்- 3 ஆம் நாள் டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. சென்ற ஆண்டே இந்த விளையாட்டு போட்டிகள் பற்றி கூறும்போது, டில்லியின் முதல்வர் ஷீலா தீட்ஷித், ஒரு கடுமையான சோதனையாக அது இருக்கும் என்று கூறியிருந்தார். விளையாட்டு போட்டிக்கான நாட்கள் நெருங்க, நெருங்க பல்வேறு பிரச்சனைகள் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர், இந்த விளையாட்டு போட்டிக்கு இத்தனை கோடி ரூபாயை செலவழிப்பதா என்று கேள்வி எழுப்பினார். அதையே காங்கிரசு கட்சியின் இன்னொரு மூத்த தலைவரான திக் விஜய்சிங்கும், பிரதிபலித்தார். மணிசங்கர் ஐயர் ஒரு கட்டம் மேலே சென்று, காமன்வெல்த் போட்டி நடக்குமானால், அந்த நேரம் டில்லியில் இருக்க பிடிக்காமல் தான் வெளிநாடு சென்று விடுவதாக கூறினார். அதன் பிறகு இந்த விளையாட்டு போட்டிக்கான செலவுகள் செய்யப்ப்பட்ட புள்ளி விவரங்கள் வெளிவந்தன. அதில் தேவையற்று அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கும் பொருள்கள் ஒவ்வொன்றும் பற்றி பட்டியல் போடப்பட்டது. அதுவே புதிய தலைவலியாக ஆட்சியாளர்களுக்கு ஆனது.
வழமையாக நமது அரசாங்க திட்டங்களுக்கு முதலில் செலவு கணக்கு ஒன்று போடப்படும். பிறகு திட்டம் நடைமுறைக்கு வரும்போது, அதிக செலவு ஆகிவிட்டது என்றும், அதிக செலவு ஆகும் என்றும் ஒரு புதிய கணக்கை கூறுவார்கள். இத்தகைய போக்கு இங்கே காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் நடந்தது. அதாவது ரூ. 655 கோடி செலவாகும் என்று முதலில் கூறப்பட்டது. அதையே மனிசங்கரையர் போன்றவர்கள் கேள்வி கேட்டனர். அந்த அளவுக்கு விளையாட்டு போட்டிக்கு செலவழிப்பதற்கு பதில், அதையே இந்த நாட்டில் வறுமையில் வாடும் மக்களுக்கு உணவளிக்க பயன்படுத்தலாம் என அவர்கள் கூறினார். ஆனால் காலம் ஆக, ஆக செலவு கணக்கு அதிகரிக்கத்தொடங்கியது. 11490 கோடி ரூபாய் வரை செலவு கணக்கை கூட்டினார்கள். பகிரங்கமாக இந்தியா வறுமையிலும், வேலையில்லா திண்டாட்டத்திலும் உழன்று கொண்டு இருக்கும் போதே, இவர்கள் விளையாட்டு போட்டிக்காக பல ஆயிரம் கோடிகளை செலவழிப்பது நாட்டு மக்களை எரிச்சலடைய செய்தது.காமன்வெல்த் போட்டிக்கான செலவு இவ்வளவு என்று அதன் ஒருங்கிணைப்பு குழு கூறும்போதே, இந்த விளையாட்டு போட்டிக்காக, டில்லி பெருநகருக்குள், அரசு அதாவது டில்லி யூனியன் பிரதேச அரசு உள்கட்டுமான ஏற்பாடுகளை செய்யவேண்டி வந்தது. அதற்க்கான செலவாக டில்லி அரசு 17000 கோடியை செலவு செய்துள்ளது. அது டில்லியின் எதிர்கால தேவைகளுக்கும் பயன்படும் என்பது அவர்களது வாதம்.
கல்மாடி தலைமையின் மீது பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகள் வந்தபோதும், வாங்கிய கருவிகள் விசயத்தில், கருவிகளின் விலையைவிட அதிகமான அளவு கொடுத்து வாடகைக்கு கருவிகளை வாங்கினார் என்ற விமர்சனம்கூட வந்த போது அவர் கலங்கவே இல்லை. அந்த அளவுக்கு அவருக்கு காங்கிரசு தலைமையின் அழுத்தமான ஆதரவு இருந்தது தெரியவந்தது. அதேநேரம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக தீம்பாடல் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பாட, பகிரங்கமாக மேடை போட்டு, கல்மாடி டிஷர்ட் போட்டுக்கொண்டு வெளிட்டதை நாம் காட்சி ஊடகங்களில் காண முடிந்தது. .இப்படிப்பட்ட கல்மாடி அராஜகத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று பலரும் காங்கிரஸ் கட்சிக்குள் விரும்பினர்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்குமிடங்களில், பல்வேறு விளையாட்டு அரங்கங்கள் கட்டவேண்டி வந்தது. அதில் நேரு, இந்திராகாந்தி, என்று ஒவ்வொரு விளையாட்டு அரங்கிற்கும் பல நூறு கோடி ரூபாய்க்கு கட்டுமானப்பணிக்காகவே செலவழித்துள்ளார்கள். ஆனாலும் அவ்வாறு கட்டப்பட்ட விளையாட்டு அரங்கங்கள் ஒவ்வொரு நாளும், ஒரு அரங்கம் என்று உடைந்து விழுவதை கண்டு ஊரே சிரிக்கிறது. உதாரணமாக ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில், நடைமேடை பாலம் உடைந்து விழுந்தது. அதில் இருபத்தேழு பேர் தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளார்கள் என்ற செய்தி இன்னொரு இடியாக வந்து விழுந்தது. அதற்கு மறுநாளே, பளு தூக்கும் போட்டி நடைபெற இருந்த அரங்கில், செயற்கை கூரை ஒரு பகுதி உடைந்து விழுந்தது. இவையெல்லாம் எல்லா ஊடகங்களிலும் உலகெங்கிலும் பெரிதாக காட்டப்பட்டது. அதன்விளைவாக பல பங்குபெறும் நாடுகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். காமன்வெல்த் நாடுகள் என்று பெயர் பெற்ற பெரிய நாடுகளான இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, போன்ற நாடுகள், விளையாட்டு போட்டிகளில் தாங்கள் கலந்துகொள்ளப்போவது இல்லை என்றும் அறிவித்தனர். அதில் சில நாடுகள் தாங்கள் பொறுமையாக தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களை செப்டம்பர் கடைசியில் இந்தியாவிற்கு அனுப்புவோம் என்றும் கூறி உள்ளனர். தங்கள் நாட்டு குடிமக்களையும், விளையாட்டு வீரர்களையும், எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்களிலும் மாட்டாமல் இருப்பதற்காக எச்சரிக்கையாக இருக்குமாறு இந்த நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் நாடுகளின் கூட்டமைப்பு தலைவர் மைகேல் ப்பேணல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான கிராமம், சுத்தமாக இல்லைஎன்றும், கட்டி முடிக்கப்படவில்லைஎனவும், கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
இத்தனை விமர்சனங்களுக்கு பிறகும் ஒருபுறம் முதல்வர் ஷீலா தீட்ஷித் தாங்கள் எல்லா குறைபாடுகளையும் சரி செய்து விடுவோம் என்றும், இப்போது எழுகின்ற குறைபாடுகள், விளையாட்டு போட்டிகளை ஒருபோதும் தடுத்து விடாது என்றும் கூறினார். இன்னொருபுறம் அந்நிய நாடுகள் பார்க்கும் தரம் என்பது வேறு என்றும், இந்த நாட்டில் தரம் என்று நாம் பார்ப்பது வேறு என்றும் பதில் கூறிக்கொண்டிருந்தனர். அசுத்தம், சுகாதாரம் பற்றிய விமர்சனகளுக்கு இப்படி பதில் சொல்ல இந்த நாட்டு அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் முடிகிறது என்று சொன்னால், இந்த நாட்டின் மரியாதை உலக நாடுகள் மத்தியில் எந்த நிலையில் இருக்கும் என்பது சொல்லாமலேயே தெரியமுடியும். இப்படி சூழலில்தான் நேற்று தலைமை அமைச்சர் மன்மோகன், ஒரு தீவிர நடவடிக்கையாக கல்மாடியை இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து ஓரங்கட்டிவிட்டு , ஜெயபால் ரெட்டியையும், எம்.எஸ்.கில்லையும் பொறுப்பில் போட்டு, அமைச்சர்கள் குழுவை முழு பொறுப்பையும் கவனிக்க அந்த இடத்தில் நியமித்தார்.. அதுபற்றி கூறிய மணி சங்கர் ஐயர் இந்த விளையாட்டு போட்டி நடத்துவதில் உள்ள குறைகளை தான் ஏற்கனவே நாலு ஆண்டுகளுக்கு முன்பே கூறியதாகவும், இப்போது ஒருங்கிணைப்பாளரை மாற்றியதால் இனி விளையாட்டு போட்டி சரியாக நடைபெறும் என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு காங்கிரசு கட்சிக்குள் பிளவுகள் இருப்பது பகிரங்கமாக வெளிவந்துள்ளது.
இப்போது நமக்கு எழுகின்ற கேள்வி என்னவென்றால், கல்மாடியை நீங்கள் நீக்கலாம் அல்லது ஓரங்கட்டலாம். ஆனால் கலமாடியின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டுள்ள குளறுபடிகள், வீண்செலவுகள், மற்றும் ஊழல்கள் ஆகியவை அப்படியே எடுத்துக்கொள்ளப்படுமா? அவற்றை நீக்குவதற்கோ, போக்குவதர்க்கோ, அல்லது ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ காங்கிரஸ் கட்சி தலைமை என்ன செய்யப்போகிறது? அல்லது ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணமாவாது அவர்களுக்கு இருக்கிறதா? இந்தநாடு ஒரு பெரிய பஞ்சத்தை, எதிர்நோக்கி இருக்கும்போது, பெரும் அளவில் வறுமையை தாங்கிக்கொண்டு இருக்கும்போது, இவ்வாறு 77000 கோடி ரூபாய் பணத்தை உலக நாடுகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக செலவழிக்கலாமா? இது இந்த நாட்டிற்கு இழுக்கா? அல்லது பெருமையா என்பது அவரவர் கண்ணோட்டத்தில் இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமையான பதிவு,,
Post a Comment