இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டிலிருந்துதான் இந்திய துனைக்கண்டத்திற்க்கே எடுத்து சொல்லப்பட்டது என்பது நாம் பெருமையாக கூறிக்கொள்ளும் ஒரு வரலாறு. தந்தை பெரியார் வழி வந்தவர்கள்தான், இட ஒதுக்கீட்டின் தேவையை உணர்ந்தவர்கள் என்று அரசியல்வாதிகளும், சமூக சிந்தனையாளர்களும், பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்களும் கூறி வரக்கூடிய கூற்றுக்கு ஒரு அழுத்தமான கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஏற்கனவே மற்ற பிற்படுத்தப்பட்டோர் என்று இந்திய அளவில் கூறப்படும், பிற்படுத்தப்பட்டோர் சமுதாயம் தனது இட ஒதுக்கீட்டை பெறுவதில் ஒரு நீண்ட கால போராட்டம் தேவைப்பட்டது. அதை தமிழகம்தான் தொடங்கிவைத்தது. தொடர்ந்து நடத்தி வைத்தது.
அப்படி இருக்கையில் சமீபத்தில் மூன்று ஆண்டுகளாக சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான உயர் கல்விக்கான இட ஒதுக்கீடு என்பது முதலில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங்கால் கொண்டுவரப்பட்டதாகவும், பிறகு சில மத்திய அமைச்சர்களால் மறுக்கப்பட்டதாகவும், பிறகு உச்சநீதிமன்றம் சென்ற ஆதிக்க சாதியினரின் வேண்டுகோள்படி அது தடை செய்யப்பட்டதாகவும் செய்திகள் தமிழ்நாடு போன்ற இட ஒதுக்கீடு ஆதரவு பகுதிகளை உலுக்கியது. ஐ.ஐ.டி. போன்ற கல்விச்சாலைகளிலும், மருத்துவ கழகத்திலும், ஜே.என்.யு. [ ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம்] போன்ற உயர் கல்வி பல்கலைக்கழகங்களிலும், இந்த ஒ.பி.சி. என்ற மற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது தடைகளையே தொடர்ந்து சந்தித்து வந்தது.
மத்திய அரசு சில சமூகங்களை, அவர்களது சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளை கணக்கில் எடுத்து அவர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்வி பெறுவதற்கான மற்றும் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது என முடிவு செய்தது. சுதந்திரம் பெற்ற பின்பு ஏற்ப்படுத்தப்பட்ட காகா கலேல்கர் ஆணையம், மற்றும் மண்டல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் ஆய்வின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக அங்கீகாரம் பெற்றது. அனால் அதை அமுல்படுத்தும் போது ஒவ்வொரு கட்டத்திலும் வருகின்ற தடைகளை நீக்குவது என்பதுதான் பெரும் கடினமான விஷயம் என்பது இப்போது புரியப்படுகிறது. தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ஆரம்பத்திலேயே சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது நீண்ட காலமாக ஆளும் வர்க்கத்தினரால் கவனிக்கப்படவில்லை. மண்டல் ஆணையம் அதை வலியிறுத்தியும்கூட, கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
அதை வெள்யே கொண்டு வந்தவர் வி.பி. சிங் என்பதால் அவர் முற்ப்பட்டோர் வகுப்பிலிருந்து வந்தவர் என்றாலும் பெரிதும் பிறபடுத்தப்பட்ட மக்களால் பாராட்டப்பட்டார்.
அதன் பின்பும், உயர் கல்வியில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற செய்தி தாமதமாக உணரப்பட்டது. அதற்கும் உச்சநீதிமன்றம் 2007 மார்ச்-29 அன்று இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது. 27 விழுக்காடு உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு என்பதே அந்த கோரிக்கை. 1985 க்கு முன்னால் பிற்படுத்தப்பட்டோருக்கான விவகாரம், உள்துறையில் இருந்த பிற்படுத்தபட்டோர் செல் மூலம் கவனிக்கப்பட்டது. அதன் பின் புதிதாக உரூவாக்கப்பட்ட தனி பிறபடுத்தப்பட்டோர் நல த்துறை, அதை கவனித்தது.. 1998 இல் அதுவே சமூக நீதி மற்றும் அதிகார மேம்படுத்தல் அமைச்சகம் என்று பெயர் பெற்றது. பிறகு 2008 ஆம் ஆண்டு ஏப்ரல்--10 அன்று உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில், மற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான 27 % இட ஒதுக்கீட்டை ஆதரித்து கூறியது. ஆனாலுல் கிரிமி லேயர் என்ற ஒரு பொருளாதார கணக்கை நிபந்தனையாக கொடுத்தது. அதேசமயம் அரசு உதவி பெறும், மற்றும் தனியார் கல்விச்சாலைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று கூறியது.
சமீபத்தில் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விசயத்தில் ஒரு சதி நடந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மார்ச்-18 இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அகடமிக் கவுன்சில் கூட்டத்தில் ஒரு முடிவு நிறைவேற்றப்பட்டது. அது பொதுநுழைவு தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்ணில், எது குறைவான மதிப்பெண்ணாக இருக்கிறதோ அதைவிட பத்து எண் குறைவாக எடுத்த பிறபடுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே இடம் தர முடியும் என்ற முடிவே. இது கடுமையாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களாலும், பிற மாணவர் சங்கங்களாலும் எதிர்க்கப்பட்டது. இதை எதிர்க்கும் பட்டினிப்போராட்டம் அந்த வளாகத்திர்க்குள்ளேயே நடத்தப்பட்டது..
ஜே.என்.யு. வில் உள்ள ஐசா என்ற அகில இந்திய மாணவர் கழகம் எனும் சி.பி.ஐ.எம்.எல்.[விடுதலை] அமைப்பின் மாணவர் அமைப்பும், எஸ்.எப்.ஐ. என்ற இந்திய மாணவர் கூட்டமைப்பு என்ற சி.பி.எம்.இன் மாணவர் அமைப்பும், டி.எஸ்.யு. என்ற ஜனநாயக மாணவர் சங்கம் என்ற புரட்சிகர சிந்தனை உள்ள மாணவர் அமைப்பும், பி.எஸ்.யு. என்ற முற்ப்போக்கு மாணவர் சங்கம் என்ற இன்னொரு எம்.எல். கட்சியின் மாணவர் அமைப்பும், எதிர்ப்பிற்கான மாணவர் அமைப்பும், இட ஒதுக்கீட்டை பாதுக்காக்கும் மற்றும் அமுல்படுத்துவதர்க்கான கூட்டமைப்பும், சேர்ந்தது போராட்டங்களை அந்த வளாகத்திற்குள் நடத்தியுள்ளனர். அதை அடுத்து ஒரு மாணவர் டில்லி உயர் நீதிமன்றத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு சென்றுள்ளார்.
அபூர்வா என்ற அந்த வடகிழக்கு மாநில மாணவனின் கோரிக்கைக்கு செவி மடுத்த டில்லி உயர்நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளது. நீதியரசர் ராஜீவ் சஹாய் என்பவர் கொடுத்த அந்த தீர்ப்பில் நடைமுறையில் வந்துள்ள தடங்கல்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய அரசையும், ஜே.என்.யு. நிர்வாகத்தையும் பிரதிவாதிகளாக சேர்த்து இந்த தீர்ப்பை 2010 ஆம் ஆண்டு செப்டம்பர்-7 ஆம் நாள் நீதியரசர் கொடுத்துள்ளார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அதாவது மாணவர்களுக்கு எங்குமே இந்தியாவில் வெட்டு மதிப்பெண் என்று ஒன்று பார்க்கப்படுவதில்லை. அப்படி இருக்கையில் அதே காரணமான சமூக ரீதியில், மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், பிற பிற்படுத்தப்பட்டோருக்கும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குவது என்ற அணுகுமுறையில் எப்படி வெட்டு மதிப்பெண் என்று ஒன்று புதிதாக வர முடியும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இப்படியாக நீதியரசர் வைக்கும் வாதங்கள்தான் சதி எண்ணத்துடன் அரசின் மற்றும் பல்கலைகழகங்களின் உயர்பதவிகளில் இருக்கும் ஆதிக்க சாதிவெறி படைத்தோரின் முகத்திரையை கிழிக்க உதவும்.
நுழைவு தேர்வ்களில் எத்தனை மதிப்பெண் பெற்றாலும், அவரவர்களுக்கு உள்ள அதாவது அந்த, அந்த சமூகங்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதுதானே கல்விச்சாலைகளின் வேலை? இந்த வழக்கை தொடுத்தவர்கள் தனி இட ஒதுக்கீட்டை, தனி வெட்டு மதிபெண் மூலம் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கவேண்டும் என்றுதான் கோரியிருந்தனர். நுழைவு தேர்வின் பொது மதிப்பெண்களில் எப்படி ஒரு குறைந்தபட்ச மதிப்பினை எடுத்துக்கொண்டு அதற்கும் பத்து மதிபெண் குறைவாக பெரும் பிற பிற்படுத்தப்பட்டோரை மட்டுமே சேர்த்துக்கொள்வோம் என கூறமுடியும் என்ற மாணவர்களின் வாதம் நன்றாக நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டு மாணவர்களும், ஏற்கனவே ஜே.என்.யு.வின் நிர்வாகத்தால் மறுக்கப்பட்டவர்கள் உள்ளே நுழையலாம் என்ற முயற்சி இப்போது செய்யப்படுகிறது.
இந்தியாவின் எதார்த்தத்தில் இருக்கின்ற சாதி பாகுபாடும், சாதி இழிவும், சாதிரீதியான ஒடுக்குமுறையும் ஒழிக்கப்படவேண்டுமானால், அதற்கு ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சேர்ந்த மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேறாமல் இந்த சாதிரீதியான ஏற்றத்தாழ்வை போக்கமுடியாது. அகவே பெரியாரால் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநித்துவம் உணமையாக நடைமுறையாக, நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. இன்று நீதிமன்றங்களின் மூலம் நடத்தப்படும் சமூக நீதிக்கான இந்த போர், ஆதிக்க சாதிகளின் கரங்களில் சிக்கியுள்ள கல்வியையும், கல்விச்சாலைகளையும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் கைகளில் எடுக்க வேண்டும். அதை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் இன்னமும் போதுமான அளவுக்கு கண்டுகொள்ளாதது கவலையளிக்கிறது. இனியாவது பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இத்தகைய பிரச்சனைகளை கையில் எடுப்பார்களா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment