இன்று ஊடகங்களில், பர,பரப்பு செய்திகளில் முக்கியமாக பெண்கள் யாராவது வேறொரு பெண்ணுக்கு எதிராக கருத்து சொன்னாலோ, வழக்கு தொடுத்தாலோ, அதை பெரிய கட்டம் போட்ட செய்தியாக போடுவதும் அதையே நாளேடு, அல்லது வார ஏட்டின் சுவரொட்டி செய்தியாக போடுவதும், அதன்மூலம் தங்களது வணிக நோக்கங்களை அதிகப்படுத்திக்கொள்ளலாம் என்று ஊடகங்கள் எண்ணுவதும் வழமையாக ஆகிக்கொண்டு இருக்கிறது. அவ்வாறு வருகின்ற செய்திகளில் குறிப்பாக சம்பந்தப்பட்ட பெண் ஒரு சினிமா நடிகையாக இருந்துவிட்டால், அதைவிட சுவாரசியமான செய்தி உலகத்திலேயே கிடையாது என்று ஊடக நண்பர்கள் கருதுவதும் , அப்படியே சில வாசகர்களும் கருதுவதும் அன்றாட நடப்பாக இருக்கிறது. இந்த விசயம்தான் இன்று ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும், பிரபுதேவா-நயன்தாரா--லதா ஆகியோரின் விவகாரத்திலேயும் நடந்து வருகிறது.
பிரபுதேவா என்ற சினிமா நடிகரின் மனைவி லதா, குடும்ப நீதிமன்றத்திற்கு சென்று மனு செய்கிறார். தனது கணவன், இன்னொரு நடிகையான நயன்தாராவுடன் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும், அதை தடுக்க வேண்டும் என்றும் அவர் கோருகிறார். நீதிமன்றமும் அவரது மனுவை ஏற்று வழக்கை இரண்டு வாரத்திற்கு தள்ளி போடுகிறது. இது சாதரணமாக நடக்கின்ற குடும்ப நீதிமன்றத்தின் முன் வந்துள்ள பல வழக்குகள் போன்ற ஒரு வழக்குதான். ஆனால் இந்த வழக்கில் ஒரு பிரபல நடிகையும், பிரபல நடிகரும் இருப்பதால் இதுவே வணிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக மாறி விட்டது. அதனால்தான் அதற்கு அவ்வளவு விளம்பரம். இதில் பிரபுதேவா மனைவி, நயன்தாரா என்ற இன்னொரு பெண்ணை பற்றி கடுமையாக பேசுவதாக ஊடகங்கள் எழுதுவதில் ஊடகங்களுக்கு ஒரு திரில் இருக்கிறது. அதை படிப்பதில் வாசகர்களுக்கும் ஒரு திரில் ஏற்படுகிறது. இங்கேதான் பாலின உயரிமை என்ற ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது. ஆண்களும், ஆண்களின் மேலாதிக்கத்தை ஒப்புக்கொள்ளும் பெண்களும் ஊடகங்களில் இருந்தாலும், வாசகர்களில் இருந்தாலும் அவர்கள் இதை ஒரு திரில் எனவும், மற்றும் மாற்றார் கணவனிடம் ஏன் இந்த நயன்தாரா செல்கிறார் என்றும் கேட்கிறார்கள். அவர்களது கேள்வி பிரபுதேவா என்ற சம்பந்தப்பட்ட ஆண் மீது பாய மறுப்பது ஏன்? மனைவி இருக்கும்போது ஏன் இந்த பிரபுதேவா இப்படி அலறுகிறார் என்று கேட்பதில்லை.
இப்போது இந்த பிரச்னைக்கு இசை சேர்ப்பது போல ஒரு செய்தி தெலுங்கு திரைப்பட உலகிலிருந்து வந்துள்ளது. "ஸ்ரீ ராமஜெயம்" என்ற தெலுங்கு சினிமா படத்தில் என்.டி.ராமாராவின் மகன் பாலகிருஷ்ணன் உடன் நயன்தாரா சீதை பாத்திரத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது நடிகை நயன்தாராவிற்கு, பிரபுதேவாவுடன் திருமணம் என்ற பேச்சு வந்துள்ளதால், சீதை வேடத்தில் நயன்தாரா நடிக்க கூடாது என்று சில அமைப்புகள் பிரச்னையை கிளப்புவதாக ஒரு செய்தி வந்துள்ளது இது எந்த வகையில் நியாயம்? இதற்க்கு முன்பு சீதை வேடத்தில் நடித்த நடிகைகள் பற்றியெல்லாம் இது போல பல்வேறு பிரச்சனைகள் வராமல் இருந்தனவா? அல்லது இதற்க்கு முன்பும், இப்போதும் ராமர் வேடத்தில் நடிக்கும் எந்த ஆண் நடிகராவது ஒரு தாரம் என்ற கோட்பாட்டில் பிறழாமல் இருப்பவர்களா?
சீதை--ராமர் என்ற கதையே, புராணக்கதைதானே? அந்த கதையை தானே சினிமாவாக எடுக்கிறீர்கள்? சினிமா என்பது படம்தானே? அது உண்மையாக ஆகிவிடுமா? முதலில் சினிமாவாக புனித மத நூல்களை, அவற்றின் கதைகளை, எடுக்கலாமா? அப்படி எடுப்பதால் எந்த ஒரு புனிதமும் கெட்டுவிடாது என்று கருதுவீர்களானால், அதற்கு ஏற்ற கலைஞர்களைத்தானே போடுவீர்கள்? இப்படித்தானே பெரியார் படம் எடுப்பதற்கும் குஷ்புவை, மணியம்மை பாத்திரத்தில் நடிக்க வைக்கலாமா? என்ற கேள்வி எழுந்தது? அப்போது எல்லா பெரியார்வாதிகளும், யார் மணியம்மையை ஒத்த உருவம் இருக்கிறார்களோ, அவர்கள் நடிப்பதில் தவறு இல்லை என்று கூறவில்லையா? அதை ஒட்டி குஷ்பு அந்த பாத்திரத்தில் நடிப்பதில் தவறில்லை என்று கூறப்படவில்லையா? அதேபோல குஷ்புவும் நடித்தாரே? படமும் வெளிவந்ததே? அதை பார்த்த எந்த பெரியார்வாதிகளும், அய்யகோ என்று கொந்தளிக்கவில்லையே? அப்போதும்கூட, யாரும் சத்தியராஜ் எப்படி பெரியாராக நடிக்கலாம் என்று கேட்கவில்லையே? ஏன் பெரியாருக்கு உள்ள எல்லா பண்புகளும் கொண்டவர் என்று அந்த நடிகரை மக்கள் மதிப்பீடு செய்தார்களா? ஆண்கள் விசயத்தில் மட்டும் இந்த கேள்விகளை யாரும் கேட்பதில்லை.
இங்கேயும் அந்த கதைதான் நடந்துள்ளது. பெண்ணான நயன்தாராவை, பெண்ணான லதா கேள்வி கேட்கிறார்; வழக்கு போடுகிறார்; சரி. ஆனால் ஆணான பிரபுதேவா எதற்குமே சம்பந்தமில்லாதவர் போலவும், வாயில் விரலை விட்டால் கடிக்க தெரியாதவர் என்பது போலவும் வர்ணிப்பதோ, அதை ஊடகங்கள் உற்ச்சாகப்படுத்துவதோ, எப்படி சரி? இதற்க்கு முன்னால் தமிழ்பட வரலாற்றில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்காமல் இருந்ததா? ராதிகா-பிரதாப் போதன் விவகாரம், ரேவதி, கணவருடன் உள்ள விவகாரம், ஊர்வசி கணவரிடம் பட்ட வன்முறை பற்றிய விவகாரம், சரத்குமார்-மனைவியுடன் இருந்த விவகாரம், கமலஹாசன்-வாணி கணபதி விவகாரம், இப்படி பல விவகாரங்களை பட்டியல் போட முடியாத அளவில் தமிழ் சினிமா சந்தித்தது இல்லையா? இவை ஒவ்வொன்றிலும் பெண்ணை சித்தரிக்கும் போது தனியாகவும், ஆணை அணுகும் போது வேறுவிதமாகவும் இந்த சமுதாயம் அனுகுகிறதே? அது எப்படி நியாயம்?
தமிழ் திரை உலகில் எடுத்துக்கொண்டாலும் அதிகமாக பெண் நடிகைகள்தானே தற்கொலைகள் செய்துகொண்டுள்ளார்கள்? அதற்கு யார் காரணம்? வேறொரு பெண்ணை சொல்ல முடியுமா? ஒவ்வொரு தற்கொலைக்கும் ஒரு ஆண் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு சில ஆண் மேலாதிக்கவாதிகளிடமும், சில ஊடக இயலாலர்களிடமும் தயாராக ஒரு பதில், இருக்கிறது. அதுதான் சம்பந்தப்பட்ட ஒரு பெண்ணையே, பெண்ணுக்கு எதிராக நிறுத்தி விடுவார்கள். அதில் அவர்கள் தப்பிவிட்டதாக ஒரு மாயை. ஒரு மயக்கம். ஒரு திருப்தி. எந்த காட்சி ஊடகத்திலும் வருகின்ற தொடர் நாடகங்களில், ஒவ்வொன்றிலும் ஒரு பெண்ணுக்கு எதிராக ஒரு பெண்ணை வில்லி போல காண்பித்து ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் வில்லிகளை உருவாக்க உதவுவதை என்னவென்று சொல்வது? இது ஆண் ஆதிக்க மனோபாவம் கொண்ட பெண்கள் எடுக்கும் நாடகங்கள் என்று அடையாளம் காணலாமா? இதற்க்கு பெயர் ஆண் ஆதிக்க பண்பாட்டு ஆக்கிரமிப்பு என்று அழைக்கலாமா? எந்த சாதி ஆனாலும், எந்த மதம் ஆனாலும் இதுதான் நடக்கிறது. பெரியாரை ஏற்றுக்கொண்டதாக கூறும் பூமி என்பதால் இதை இன்னமும் அழுத்தமாக பேச நாம் விரும்புகிறோம். பெண்ணுக்கு எதிராக பெண்ணை நிறுத்துவது ஆண்களின் தந்திரம் என்று சொல்வதை தவிர வேறு என்ன கூறமுடியும்?
பொம்பளை சிரிச்சா போச்சு, புகையில விரிச்சா போச்சு என்று பாடும் பூமியாயிற்றே இது? ஆம்பள எங்கயும் காலை நனைக்கலாம் என்று அனுமதி கொடுத்துள்ள பூமியாயிற்றே இது? இங்கே பெண்கள் மட்டுமே கற்பு என்ற விலங்கால் பூட்டப்படவேண்டும். ஆண்களுக்கு அந்த கற்பு தேவை இல்லை என்று எழுதப்படாத சட்டத்தை தாங்கி நிற்கும் பூமியாயிற்றே? அதனால்தான் இங்கேயும் பெண் செய்தால் பிழையை பெரிதாக விவாதிப்போம். ஆண் செய்தால் கண்டு கொள்ளமாட்டோம் என்ற கருத்து யாரும் அறிவிக்காமலேயே நடைமுறையில் அமுலில் இருந்து வருகிறது. இது இந்த சமூகத்தில் எந்த விதமான முன்னேற்றத்திற்கும் உதவப்போவதில்லை.
அகவே இனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நேரமும் காப்போம். கற்பு என்று வந்தால் அதை இரு பாலர்க்கும் பொதுவென்று வைப்போம் என்ற் பாரதியின் வரிகளில் பொதிந்துள்ள உண்மை என்ன சொல்கிறது என்று பார்ப்போம். கற்பு என்பது பெண்களுக்கு விலங்கு என்று பெரியார் சொன்ன வார்த்தைகளின் பொருளை தேடுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment