Sunday, October 3, 2010

எந்திரன் படம் வசீகரிக்கிறதா? விமர்சிக்கப்படுகிறதா?

நூற்று எண்பது கோடியை செலவழித்து, ஒரு பெரிய சினிமா பேனர் ஒரு பெரிய நடிகரை போட்டு ஒரு பெரிய விளம்பரம் செய்யப்பட்டு , ஒரு பெரிய படத்தை எடுத்திருக்கும் போது, அதை சாதாரணமாக விமர்சிக்கலாமா? படம் சுமார் மூவாயிரம் கொட்டகைகளில் திரையிடப்பட்டு, தமிழ்நாடெங்கும் தொண்ணூறு விழுக்காடு கொட்டகைகளில் வெளியாகி, முதல் மூன்று நாள் வசூலிலேயே முழு செலவையும் எடுத்துவிடும் என்று கூறப்படுகிறது என்றால், இது என்ன சினிமா தானா, வேறு ஏதாவதா என்று மலைக்க தோன்றும். இதுதான் இன்றைய வணிக உலகம் என்று நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அதை எப்படி சாத்தித்தார்கள் என்பது அசிங்கமான வரலாறாக இருக்கலாம். ஆனால் சாதித்து விட்டார்கள் என்பது யதார்த்தமாக ஆகிவிட்டது.

இனி யார் படம் எடுத்தாலும் ஐந்து கோடிக்கு எடுக்கிறேன் என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் எந்த ஒரு திறமையும், கலைப்படைப்பும், படைப்பாற்றலும் இனி பல நூறு கோடிகளுடன் வந்தால் மட்டும்தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற ஒரு மாயை பரவிவிடும்.

பல கோடிகள் மட்டுமே படத்தின் வெற்றியை தீர்மானித்து விட்டதா? ரஜினி என்ற ஒரு பெரிய சூபர் ஸ்டார் நடித்ததனால் இது பெரும் வெற்றியை எட்டிவிட்டதா? வெறும் பணமும், வெறும் ரஜினியும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று தெரியவில்லையே? ரஜினி எப்போதுமே நடிப்புக்கு பெயர் பெற்றவர் அல்ல. அவரது ஸ்டைல் மட்டும்தான் எப்போதுமே உயர்ந்து நிற்கும். இந்த படத்திலும் அது அப்படியே நிற்கிறது. ஆனால் இந்த படத்தில் வழமையான ஸ்டைல் போல இன்னொரு ஸ்டைலும் இருக்கிறதே? அதுதானே ஐஸ்வர்யாராய் ? அந்த நடிகை நடிக்கவும் செய்கிறார். ஸ்டைலும் செய்கிறார்.. அழகாகவும் இருக்கிறார் என்பதுதானே இளைஞர்களின் கருத்து? அதனால் ரஜினியை தூக்கி சாப்பிட்டு விடுகிறாரே? இரண்டு ரஜினி வந்தும் ஒரு ஐஸ் சோபிக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அதை ரஜினியே ஒரு விளம்பரத்தில் கூறியிருந்தாரே? தான் நாற்பது முறை பயிற்சி எடுத்தும், ஒரே மூவில் அந்த ஐஸ் நடனம் ஆடிவிட்டார் என்று சொல்லவில்லையா?

சரி. பணமோ, ரஜினியோ வெற்றியை தீர்மானிக்கவில்லை என்றால் யார்தான் தீர்மானித்தது? இசை அமைப்பாளர் பங்கை சொல்லாமல் இருக்க முடியாது. அது என்ன இந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கும்போதேல்லாம், முதல் முறை நாம் கேட்கும் பாட்டு ஈர்ப்பதில்லை. பிறகு மீண்டும் கேட்கும்போது, பயங்கரமா ஈர்க்குதே? அது எண் என்றே புரிய வில்லை. கேமெரா கோணங்களை எல்லோரும் பாராட்டறாங்க. ஆமா. சொல்லமாட்டாங்களா. இத்தனை காசை போட்டு கரியாக்கி கேமெரா கோணம் பெயர் வாங்கல்லைனா என்ன அர்த்தம்? அதே மாதிரி சாபுசரில் கேட்கணுமா? ஆர்ட் இயக்குனர்னா சும்மாவா? கிராபிக்ஸ் என்னாமாதிரி வருது? அம்மாடி. இந்தமாதிரி பெரிய அளவில் கிராபிக்ஸை பயன்படுத்தியவர்களே இல்லை என்று சொல்லும்படி செய்து விட்டாரே ஐயா? சரி இது திறமையா? திறமை போன்ற மாயையா? எப்படியோ எல்லோரும் சங்கரை இதற்காகவே பாராட்டிவிட்டார்கள். நாமும் சேர்ந்து கொள்ளா விட்டால், தனிமைபடுவோம் போல இருக்கே?
டானி டென்சான்க்பா வருகிறார்னு எழுத்து போடும் போது பார்த்தவுடன் எனக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஏன் என்றால் அவர் அஞ்சல் பெட்டி 520 ல நடிச்சார் பாருங்க. நான் அவரது ரசிகனா ஆயிட்டேன். ஆனா அந்த டானிய பார்க்க முடியல்லையே? சங்கர் அவர பேராசிரியர், விஞ்ஞானி அப்படின்னு காட்டுதுக்காக போட்டிருப்பார் போலும்.

எப்படியோ. தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கா பணம் பட்டுவாடா செய்து இனிமே யாராவது தேர்தல்ல நில்லுங்க காசு இல்லாம பார்க்கலாம் என்று சவால் விட்டார்கள். முழு வணிகமாக தேர்தலை ஆக்கிவிட்டோமே என்று அவர்கள் பெருமைபடலாம். அதுபோல இப்போ எவனாவது நூறு கோடிக்கு குறைவா காசை எடுத்துக்கிட்டு வந்து சினிமா எடுக்கனும்னு சொல்லுங்க பார்க்கறோம் என்று சவால் விடுவதுதானே இது.அப்படியானால் சினிமாவை ஏகபோகப் படுத்தியாச்சா? சரி. சினிமா காட்டுற இடத்தையுமில்ல ஏகபோக படுத்திட்டாக? எல்லா சினிமா கொட்டகையையுமில்ல அவுக ஏகபோக படுத்திட்டாக? இப்போ புரியுதா ஏக போகம்னா என்னனு? இதுதான் ஏகபோகம்னு அமெரிக்காகாரனுக்கே இனிமே விளங்கப்படுத்துவோமில்லா? எப்படியோ ஒரு ஏகபோக படத்தை முதல்நாளே பார்த்த திருப்தி.

2 comments:

silviya said...

ஏகபோகம் என்ற வார்த்தையை மிக எளிதாக சினிமாவை வைத்து விளக்கி விட்டீர்கள்.

மனிதநேயம் மலரட்டும்! said...

"....திட்ரீங்கள! இல்ல வாழ்த்துறீங்கள! தெரியாத அளவுக்கான விமர்சனம் அருமை ஆனால் இன்று ரஜினி என்ற ஒரு தனி மனிதனின் கட்டவுட்டுக்கு பால் ஊத்தி அறிவை அடமானம் வைக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை 180 கோடி என்ன 1800 கோடி போட்டாலும் ஒரே நாளில் எடுத்துவிடுவார்கள்......
-பாம்பன்.இஸ்மாயில்

Post a Comment