Thursday, January 26, 2012

நீதியரசர்கள் ஒட்டுமொத்த பார்வையையும் பெற்றால்தான் நல்லதோ?

தமிழ்நாட்டில் செவிலியர்களுக்குள் மோதல் என்பதாக ஒரு நீதிமன்ற அறிவிப்பு புது பிரச்னையை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே கல்வி வணிகமான ஒரு நாட்டில், ஏற்கனவே சுகாதார துறையில் தனியார் மருத்துவ கல்லூரிகளையும், தனியார் மருத்துவ மனைகளையும், கட்டவிழ்த்து விட்டு எங்கும் தனியார், எதிலும தனியார் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ள நாட்டில், இப்போது தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்களா? அரசு பயிற்சி பள்ளிகளில் கற்ற செவிலியர்களா? யார் சிறந்தவர்கள்? என்றும், யாருக்கு அரசு பணிகளில் இடம் கொடுக்க வேண்டும் என்றும் ஒரு புதிய சர்ச்சையை நீதிமன்றமும், அரசாங்கமும் சேர்ந்து ஏற்படுத்தி உள்ளது.அதாவது அரசு பயிற்சி பள்ளிகளில் கற்று வெளியே வந்துள்ளவர்களை, முக்கியமாக பணிக்கு எடுத்து, அரசு மருத்துவமனைகள் நடந்து வரும் வேளையில், தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளும், அரசின் அங்கீகாரம் பெற்றுத்தானே இயங்கி வருகின்றன? அவற்றில் படித்து முடித்து வெளியே வரும் எங்களுக்கு ஏன் அந்த தகுதி இல்லையா? என்று கேள்வி கேட்க அந்த வேலையில்லா திண்டாட்டத்தால் அவதியுறும் தனியார் பயிற்சி பள்ளிகளின் செவிலியர்கள் தொடங்கினர்.

அதன் தொடர்ச்சியாக அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் கோரிக்கையை முன்வைத்து, போராட்டங்கள் நடத்தினர். அதுபோன்ற போராட்டங்களை சென்ற ஆட்சி சந்தித்தது. அதன்பிறகு அவர்கள் உயர்நீதிமன்றம் சென்றார்கள். அங்கே சுகுணா உட்பட நீதியரசர்கள் தனியார் பயிற்சி பள்ளி செவிலியர்களையும் அரசு பணிகளில் அமர்த்தும்படி தீர்ப்பு கூறினர். அதை அரசு அமுல்செய்யாத நிலையில், அரசின் நடவடிக்கைகளுக்கு அதாவது அரசு பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்களுக்கு மட்டுமே பணி என்ற நிலைக்கு, உச்சநீதிமன்றம் ஒரு தடையை அறிவித்துள்ளது. அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்த உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. அதை ஒட்டி தமிழக அரசும் தனியார் பயிற்சி பள்ளிகளில் பயின்ற செவிலியர்களை அரசு பணிகளில் சேர்க்க ஒரு அரசாணையை அறிவித்தது.

இதுகண்டு அதிர்ச்சி அடைந்த அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்று செவிலியர்களாக வெளியே வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு செவிலியர் பணியிடங்களில் தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்கள் நிரப்பப்பட்டுவிட்டால், அதுவே அரசு பயிற்சி பள்ளிகளில் படித்து வெளியே வரும் தங்களுக்கு அரசு பணியிடங்கள் கிடைக்காமல் போவதற்கான காரணமாக ஆகிவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதன்விளைவாகவே, இன்று அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களும், அரசு பயிற்சி பள்ளிகளில் படித்துவரும் செவிலியர் மாணவ, மனைவிகளும், தெருவில் இறங்கி போராட முன்வந்துள்ளதை காட்டுகிறது.. அதைகண்டு துணுக்குற்று தாங்கள் நீதிமன்றம் சென்று வாங்கி வந்த வேலை வாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ,அந்த தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர் மாணவ, மாணவிகளின் சங்கத்தார் அரசு பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்கள் மீது கோப்பப்படுவதும், அவர்களது போராட்டத்தை கொச்ச்சைப்படுத்துவதும், ஊடகங்களுக்கு வேண்டுமானால் "தீனி" யாக இருக்கலாம். ஆனால் அதுவே இருயதரப்பு செவிலியர்களுக்கும் "வாழ்க்கை உத்திரவாதமாக" இருக்காது. தனியார்துறை படித்தவர்களை, "தகுதி" குறைந்தவர்கள் என்று அரசுத்துறை பயின்றோர் சொல்வதும், பதிலுக்கு அவர்கள் இவர்களை போராடாதீர்கள் என்றும், நீதிமன்றம் செல்லுங்கள் என்றும் கூறுவதும், ஜனநாயக நாட்டில் ஈடுபடக்கூடியது அல்ல.

இரு தரப்பினரும் தங்களது வாழ்க்கை தேவைக்காக பணி தேடி பயில வந்தவர்கள்.இருவருமே வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்து வருபவர்கள். இருவருக்குமே செவிலியர் பணிகள் வேண்டும்.இரு தரப்புமே இந்தியாவிற்கு எப்படிப்பட்ட பொருளாதார திட்டமிடல் வேண்டும் என்று சிந்திப்பதை விடுத்து தங்கள், தங்கள் வேலை வாய்ப்புகளுக்கு மற்றவர்களால் பாதிப்பு வருமோ என்று எண்ணியே கோபப்படுகிறார்கள். இந்திய நாட்டில் முக்கிய துறை இந்த சுகாதாரத்துறை. தமிழ்நாட்டில் அந்த துறை பெறும் அளவில் முன்னேறி இருக்கிறது. அதை நேற்று டாக்டர் பினாயக் சென் அவர்களே கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது ஏன் தமிழக அரசு இந்த பிரச்சனையை சரியாக கையாள முடியவில்லை? ஏன் நீதிமன்றம் இந்த பிரச்சனைக்கு முழுமையான தீர்வை தராமல் இருபிரிவினரையும் "கோர்த்து" விட்டுள்ளது?.ஏன் அந்த தீர்ப்பை சரியாக அமுல்படுத்த தங்கள் யதார்த்தத்தை மனதில் வைத்து அரசுத்துறை பயின்ற மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் சுகாதாரத்துறை அணுகுமுறையை எடுக்கவில்லை?

இந்தியாவில் தனியார் துறை என்பதே "லாபம்" தேடும் நோக்கோடு உருவானதுதானே? இது நீதிமன்றத்திற்கு ஏன் தெரியவில்லை? சேவைத்துறை என்பது அரசு கைகளில் இருக்கும்வரை அது சேவை மனோபாவத்துடன் செயல்பட்டு வரும்.அதுவே தனியார் கைகளில் செல்லும்போது, சேவையை "வணிகமாக்கும்" லாப நோக்கோடுதானே செயலப்டும்? லாப நோக்கோடு செயல்படும் தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு துறையில் அதேபோல பயின்று வெளிவரும் மாணவ, மாணவிகளின் அளவுக்கு சேவை மனோபாவ அனுபவங்கள் கிடைக்க வாய்ப்பு குறைவுதானே? இந்த உண்மையை ஒப்புக்கொள்ளத்தானே செய்யவேண்டும்? அப்படி இருக்கும்போது, அரசு துறை பயின்ற மாணவ, மாணவிகள் பணி தேடி போராட வருவதையும் நியாயம் என்று ஏன் நீதிமன்றம் பார்க்கவில்லை? இந்த பிரச்சனையின் முழு உணமைகளை நீதியரசர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று கூறமுடியும் அல்லவா?

நாட்டில் எங்கும் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. சுகாதார துறையில் இன்னமும் ஏகப்பட்ட செவிலியர்களும், மருத்துவர்களும் தேவைப்படுகிறார்கள். இப்போது பன்னிரண்டு லட்சம் செவிலியர்கள் நாடெங்கும் இருப்பதாகவும், இருபத்திநாலு லட்சம் செவிலியர்கள் மொத்தம் தேவைப்படுவதாகவும் ஒரு கணக்கு கூறுகிறது.அப்படியானால் அரசு மற்றும் தனியார் நிறுவன கல்வி நிலையங்களில் படித்து வெளிவரும் அனைவருக்கும் வேலை கொடுக்க அரசால் முடியும். பின் எதற்காக இந்த "தடை போக்கு"? அரசு மருத்துவமனையில் இருக்கின்ற ஒரு ஐ.சி.யு. என்ற அறையில், அதாவது அவசர சிகிச்சை பிரிவு என்ற இடத்தில் ஒரு நோயாளிக்கு அதாவது ஒரு கட்டிலுக்கு ஒரு செவிலியர் எந்நேரமும் இருக்க வேண்டும். அதாவது மூன்று ஷிப்டுகளிலும் நோயாளியை கவனிக்க செவிலியர் ஒருவர் இருக்க வேண்டும்.ஆனால் அந்த அறைக்கு முழுவதும் சேர்த்தே ஒரே செவிலியர் மட்டுமே இருக்கிறார் என்ற உண்மை இருக்கிறது. ஆகவே செவிலியர் எண்ணிக்கை அரசு மருத்துவ மனைகளில் அதிகப்படுத்தப்பட் வேண்டியது கட்டாயம்.அப்போது இரு பிரிவு செவிலியர்களுக்கும் பணி உத்திரவாதம் கிடைக்கும்.


அரசு மருத்துவமநிகளில் பணியாற்றும் மருத்துவர்கள்தான், தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் பணியை செய்கிறார்கள். ஏன் தனியார் மருத்துவமனைகள் தங்களை போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்த மருத்துவர்களை தங்கள் மருத்துவமனைகளில் அமர்த்தி கொள்வதில்லை? அவர்கள் திறமை குறைந்தவர்கள் என்று அந்த தனியாரே நினைக்கிறார்களா? தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயில மாணவர்கள் முப்பது லட்சமும், நாற்பது லட்ச்சமும் கட்டாய நன்கொடை கொடுத்து படிக்கிறார்களே? அவர்கள் எந்த நோக்கத்தில் மருத்துவ தொழிலில் ஈடுபடுவார்கள்? லாபம் சம்பாதிக்கும் நோக்கிலா? சேவை செய்யும் நோக்கிலா? இதே கணக்கு செவிலியர் பயிர்ச்ச்சிக்கும் பொருந்தும் அல்லவா? ஆனாலும் வேலையில்லா திண்டாட்ட நாட்டில், வேலை தேடிவரும் தனியார் பயிற்சி மாணவர்களுக்கும் வேலை உத்திரவாதம் வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.


ஆகவே அரசு பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு பணி எப்படி கட்டாயமாக உண்டு என்பதை சுகாதாரத்துறை கூறவேண்டும்.இந்த விசயத்தில் நீதியரசர்களுக்கு விவாதத்தில் உள்ள வழக்கில் வாதம் செய்யபப்டும் வேலை வேண்டும் என்பது மட்டுமே புரிகிறது. அவர்கள் முழு சமூக கண்கொண்டு பார்க்க பயிற்சி பெறவேண்டும். ஏன் இப்படி கூறவேண்டி வந்துள்ளது? இதேபோல "மக்கள் நல பணியாளர்கள்" விசயத்திலும் அதே நீதியரசர் சுகுணா, ஒரு தீர்ப்பை கூறினார். மக்கள் நல பணியாளர்களுக்கு பணி கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த தீர்ப்பை கொடுக்கும்போது சில வாதங்களை அவர் முன்வைத்துள்ளார். அதாவது அரசு தரப்பு வாதத்திற்கு பதில் என்ற பெயரில், வேலை வாய்ப்பு அலுவலக விதிகளில், மக்கள் நல பணியாளர்களை அதன்மூலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறப்படவில்லை என்பது சுகுணாவின் வாதம். எப்போது வேலைவாய்ப்பு துறை விதிகள் உருவாகின? எப்போது மக்கள் நல பணியாளர்கள் என்ற வேலைப்பிரிவு உருவானது? இப்படி ஒப்பிட்டு பேசலாமா? சரி. வாதத்திற்கு அது சரி என்று வைத்துகொண்டாலும், வேலை வாய்ப்பு அலுவலக விதிகளில் மக்கள் நல பணியாளர்களை எடுக்க கூடாது என்று எங்காவது கூறப்பட்டுள்ளதா? அப்படி இருக்க ஏன் இந்த நீதியரசர் சொதப்புகிறார்?

அடுத்து இட ஒதுக்கீடு மக்கள் நல பணியாளர்கள் விசயத்தில் பின்பற்றப்படவில்லை என்ற வாதம். கிராமத்தில் மக்கள் நல பணியாளர்களாக வேலை செய்பவர்கள் அனைவரும் அடிமட்டத்து மக்கள்தான் என்றும், அதனால் தனியாக இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் இந்த நீதியரசர் சுகுணா கூறியுள்ளார். இது அதிகப்பிரசங்கி தனமாக் உள்ளது. நகர்புறத்தில், மேட்டுக்குடி சமூகத்தில் வளர்க்கப்பட்ட சில நீதியரசர்களுக்கு கிராம சூழல் தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்கு இட ஒத்துக்கீடு என்பது தங்களுக்கு இல்லாத ஒன்று என்பதுதான் தெரியும். கிராமப்புற இட ஒதுக்கீட்டில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரிவுகளாக இருக்கிறது எனபதும் அதில் பிறபடுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு நிரப்பப்பட்டாலும், தாழ்த்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு வழமையாக நிரப்பப்படுவது இல்லை என்பதும் இந்த நீதியரசர்களுக்கு, அவர்களின் வளர்ப்பு காரணமாக தெரிந்திருக்க நியாயம் இல்ல. ஆகவே அப்படி தீர்ப்பில் "தவறான" வாதங்களையும் முன்வைத்து விடுகிறார்கள். அதனால்தான் இந்த நீதியரசர்களுக்கு முழுமைப்பார்வை தேவை என்ற எண்ணம் நமக்கு வருகிறது.

1 comment:

ARUL GAJENDRA BOOPATHY said...

தங்களுடைய போதனை, செயலுக்கு வழி காட்டியே தவிர வறட்டு சூத்திரம் இல்லை, என்று எடுத்துக்கொண்டாலும்.
எல்லாவிதமான சமூக அவலங்களையும் எதிர்த்து போராடி கொண்டு இருக்கும் புரட்சியாளருக்கு (தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்கள்) எங்கள் அவல நிலை, உண்மை நிலையை பற்றியும் தெரியப்படுத்த கடமைபட்டுள்ளேன்,
1) இதுகண்டு அதிர்ச்சி அடைந்த அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்று செவிலியர்களாக வெளியே வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகண்டு அதிர்ச்சி அடைய தேவையற்றது ஏன் என்றால். இந்த முடிவு திடிரென்று எடுக்கப்படவில்லை பதிமூன்று வருட பல கவன ஈர்ப்பு போராட்டம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தும் பெறப்பட்டது, தீர்பானது ஒருதலைப்பட்சமானதும் அல்ல இருவரும் போட்டி தேர்வு எழுத வேண்டும் தகுதியானவர் மருத்துவ தேர்வானையத்தின் முலம் தேர்வு செய்யபடுவர்.
இது இருபது வருடங்களாக போராடி வரும் தனியாரில் பள்ளியில் படித்த செவிலியர்களுக்கு கிடைத்த சமநீதி.
2) இந்தியாவில் தனியார் துறை என்பதே "லாபம்" தேடும் நோக்கோடு உருவானதுதானே? இது நீதிமன்றத்திற்கு ஏன் தெரியவில்லை?
தங்களது கருத்து பொதுவானது என்றாலும், எல்லாவற்றிக்கும் பொருந்தாது குறிப்பாக எங்கள் துறையில் ஏன் என்றால், எங்களுக்கும் அதாவது தனியாரில் பள்ளியில் படிக்கும் செவிலியர்களுக்கும் தமிழக அரசின் பாடத்திட்டம் பொதுவானது,நாங்களும் தமிழக அரசு மருத்துவமனை பயிற்சி பெற்று மற்றும் சிறப்பு பயிற்சிக்காக(புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் கருவிகள்) தனியார் மருத்துவமனையிலும் பயிற்சி பெற்று, தமிழக அரசே இருவருக்கும் பொதுவான தேர்வு நடத்தி தமிழக அரசின் செவிலிய ஆசிரிய பெருந்தகையின் மூலமாக விடைதாள் திருத்தப்பட்டு, தமிழக அரசே தேர்வு முடிவுகளை அறிவிக்கின்றது, அது மட்டும்மின்றி தமிழக அரசே சான்றிதழ் வழங்கும். எனவே தனியாரில் பள்ளியில் படித்த செவிலியர் தகுதி பற்றிய அச்சம் தேவையில்லை.
தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை ஆவளுடன் எதிர்பார்க்கிறேன் இப்படிக்கு
என்றும் அன்புடன் அருள் கஜேந்திர பூபதி

Post a Comment