Thursday, April 19, 2012

பச்சை என்ற காத்து படம் லயிக்கவைத்தது.

நான் லயித்து போனேன். அது எனது பலமான அம்சமா? பலவீனமான அம்சமா? எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே நான் அந்த " போடிநாயக்கனூர் கணேசன்" படத்தை பார்த்து விட்டு இப்படித்தான் லயித்து போனேன். ஆனால் இந்த பச்சை படத்தில் எனக்குள் நிறைய வித்தியாசமான உணர்வுகள். ஒரு படத்தை பார்த்து விட்டு நாம் அதில லயித்து போனோம் என்றால், ஏதோ வகையில் அந்த படம் நம்மை ஈர்த்துள்ளது என்று பொருள். நான் மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் "தலைமறைவு இயக்க" பணிகளில் இருக்கும் போது, நிறைய கிராமப்புற இளைஞர்கள், அதேபோல நகர்ப்புற இளைஞர்களில் "கண்டபடி திரிந்தவர்கள்" {அவர்கள்தான் நமக்கு கிடைப்பார்களோ} இவர்களிடம் நெருங்கி அவர்களை புரட்சிகர வன்முறைக்கு உற்ச்சாகப்படுத்தும் பணியை ஒருவித "கலை நுணுக்கத்துடன்" வெற்றிகரமாக செய்த அனுபவம் நினைவுக்கு வந்தது. இந்த படத்தில் எந்த புரட்சியும் இல்லை. ஆனாலும் அந்த முரட்டுத்தனமான, உதிரி தன்மை கொண்ட கிராமப்புற இளைஞரின் பாத்திரத்தை வகிக்கும் கதாநாயகன் நம்மை ஈர்த்து விட்டார்.

படத்தை நாகரிக பாணியில் ஒரு "கருத்தாக்கத்துடன்" சொலவேண்டும் என்றால், இன்றைய இளைஞர்களை "கட்சி அரசியல்வாதிகள்" தங்கள் நலனுக்கு பயன்படுத்துவதும், பயன்படுத்தி முடிந்த பின்பு அவர்களது உயிரை கூட "விலை" பேசுவதும், இந்த படத்தில் அம்மணமாக அமபலப்படுத்தபடுகிறது. படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று அந்த படத்தின் இணை இயக்குனர் விச்வபாலா இரண்டு மூன்று நாட்களாக தொடர்பு கொண்டு கடைசியில் என்னை பார்க்க வைத்து விட்டார். அதுவும் ஜீவா, ஓவியா, சமி,குழந்தை சிற்பி ஆகியோருடன் பார்த்ததில் ஒரு திருப்தி. படத்தில் வரும் பச்சை வேடம் தாங்கிய "வாசகன்" தம்பி நல்லா செய்திருக்குது. அது அப்படியே தேனீ மாவட்ட கிராமப்புற முரட்டு இளைஞரை ஒவ்வொரு காட்சியிலும் கொண்டு வந்து நிறுத்துகிறது .கோபத்தில் கண்ணை அகல விரிக்கும்போதும், நாக்கை துருத்த்ம்போதும், சண்டை போடும்போதும், காதலில் திளைக்கும்போதும், அப்பாவித்தனமாக காதலிக்கும்போதும், அதற்காக வலிய சிரிக்கும்போதும், உண்மையிலேயே தாய் பாசத்தையும், காதலி பாசத்தையும் காட்டும்போதும், முரட்டு பாசத்தால் காதலியை நீரில் அமுக்கி அதுவே கொலையாக ஆகும்போதும்,மோட்டார்சைக்கிளில் ஹாயாக வரும்போதும், தங்கை பாசம் காட்டும்போதும், தெருவில் இறங்கி வீரசாகசம் காட்டும்போதும் நமக்கு உண்மையிலேயே ஒரு கிராமப்புற துடிப்புள்ள இளைஞரை பார்க்கும் திருப்தி.
ஆமாம், எங்கள் நன்பரும் தோழருமான பேராசிரியர் மு.ராமசாமியை பற்றி கூறாமல் விடக்கூடாதே. அவர்தான் பச்சையின் தந்தை.பின்னிபோட்டாறு ராமசாமி. அவருடைய நடிப்பை எப்படி சொல்ல?. பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் கோபப்படும் தந்தையாக ,சண்டை கட்டும் தந்தையாக ராமசாமி கொன்று விட்டார்.போங்க. என்னய்யா இந்த படத்தை பற்றி இப்படி பாராட்டுகிறேனே. அத்தனைக்கும் காரணம் அந்த இயக்குனர்தான் என்ற உண்மையும் நமக்கு தெரிகிறது. பரவாயில்லை ஒரு நம்மூர் படம் பார்த்த திருப்தி.

கிராமப்புற இயல்புகளை படமாக்கினால் நகர்ப்புறங்களில் ரசிக்க மாட்டார்களோ? தெரியவில்லை.ஆனால் அந்த பச்சை ஏதோ உண்மை பாத்திரம் என்கிறார்கள். மணப்பாறை அருகே நடந்த கதையாம். திரைக்காக தேனீ மாவட்டம் என்று இயக்குனர் கூறுகிறார் என்றால், முழுமையாக தேனீ மாவட்ட மக்களது சொல் நடை வேண்டாமா? அதற்கு முயற்சி நடந்துள்ளது. பரவாயில்லை. ஆனால் துல்லியமாக அந்த சொல்லாடல் {slangs ] முழுமையாக கவனம் எடுத்து பயன்படுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த கதாநாயகி பெண்ணும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

No comments:

Post a Comment