மார்ச் 28 | 10:31 pm Dinath Thanthi today's editorial
முத்திரை பதித்த தீர்மானம்!
29.3.2013 (வெள்ளிக்கிழமை)
தமிழ்நாட்டில் இப்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எல்லா தரப்பிலும் இருந்தும் போராட்டம் வலுத்து வருகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகியுள்ளது. இந்த நிலையில், தமிழர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் முத்தாய்ப்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்துள்ளார். அதில், இலங்கை நாட்டை நட்புநாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்கள் மீது அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை அதன் மீது பொருளாதார தடை விதித்திடவேண்டும். ஈழத்தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தனிஈழம் குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்பட பல கோரிக்கைகளை அந்த தீர்மானத்தில் ஜெயலலிதா கொண்டுவந்து, அதுவும் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. நிச்சயமாக இது வரலாற்றில் முத்திரை பதித்துள்ள தீர்மானம்தான். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதா தீர்மானம் ஒரு விடியலை காட்டும் தீர்மானம் ஆகும். இந்த தீர்மானம் ஒரு புத்துணர்வை, எழுச்சியை, உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. உண்மையிலேயே வரலாற்றில் முத்திரை பதித்துள்ள ஒரு தீர்மானம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவர்கோர் குணம் உண்டு என்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பாடிச்சென்றார். அந்த வகையில், தமிழனுக்கு பல்வேறு தனி குணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான், யாதும் ஊரே யாவரும் கேளிர். அதாவது, எல்லா ஊர்களும் என் சொந்த ஊரே. எல்லோரும் எனது உறவினர்களே என்பதுதான். அதிலும் குறிப்பாக, இலங்கை தமிழரை அவன் யாரோ என்று நினைப்பதில்லை. தனது தொப்புள் கொடி உறவாகத்தான் தமிழன் நினைத்து வருகிறான். இலங்கை என்பது தமிழ்நாட்டிற்கு சொந்தமான பூமி. இலங்கையின் பூர்வ குடிமக்கள் தமிழர்கள்தான். பண்டைய காலத்தில் அவர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு நிலப்பகுதிகளில் தனி அரசுகள் கண்டு கோலோச்சி வந்தனர். 1619-ம் ஆண்டு முதலில் போர்ச்சுகீசியர்களும், பின்பு ஆங்கிலேயர்களும் இலங்கையில் தமிழர்கள் ஆண்ட பகுதிகளையும், சிங்களர்கள் ஆண்ட பகுதிகளையும் கைப்பற்றி இலங்கையை அடிமை நாடாக வைத்திருந்தனர். இலங்கையின் சுதந்திர போரில் தமிழ் தலைவர்கள் முன்னணியில் நின்றனர். ஆனால், 1948-ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோது, அரசியல் அதிகாரம் முழுவதும் சிங்கள இனத்திற்கு போய்விட்டது. முதலில் தமிழ் மக்களின் வாக்குரிமையை பறித்து, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்தார்கள். அதாவது இந்திய வம்சாவளி தமிழர்கள் 10 லட்சம் பேரின் குடியுரிமை பறிபோனது. அன்று தொடங்கியது இலங்கை தமிழர் பிரச்சினை. 1983 முதல் இனப்படுகொலை தொடங்கியது. பேரறிஞர் அண்ணா ஒருமுறை, கடல்நீர் ஏனடா உப்பாக இருக்கிறது?, அது கடல் கடந்த தமிழன் வடித்த கண்ணீரால்தான்என்று மிகவும் உருக்கத்தோடு சொன்ன வாசகங்கள் இன்று நிலைத்துவிட்டது.
தனிஈழம் வேண்டும். அது ஒன்றுதான் பிரச்சினைக்கு தீர்வு என்ற முழக்கங்களை விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் முன்வைத்து போராடினார். தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்பட பெரும்பாலான கட்சிகள் அனைத்தும், இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் உறுதுணையாக இருந்தது. 1995-ம் ஆண்டு ம.தி.மு.க.வின் முதல் மாநில மாநாட்டில் வைகோ, தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று முழக்கமிட்டார். தொடர்ந்து இலங்கையில் இனப்படுகொலைகளும், மனித உரிமை மீறல்களும் நடந்துகொண்டே இருந்தன. விடுதலைபுலிகள் இயக்கத்திற்கு மறைந்த எம்.ஜி.ஆர். செய்த உதவியை நிச்சயமாக சரித்திரம் மறந்துவிடாது. தொடர்ந்து போராட்டங்கள் நடந்தாலும் 2009-ம் ஆண்டு நடந்த உச்சக்கட்ட போரில் நடந்த நிகழ்வுகள் தமிழக மக்களின் இதயத்தில் ஆறாத ரணத்தை உருவாக்கிவிட்டது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் பிரச்சினை அல்ல. தமிழ்நாட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையால் கொடுமைகள்தான் இழைக்கப்படுகிறது.
மற்ற மாநில மீனவர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் மத்திய அரசாங்கம் அதை இந்திய மீனவர் பிரச்சினை என்று எடுத்துக்கொள்கிறது. ஆனால், தமிழக மீனவனுக்கு ஒரு பிரச்சினை என்றால், அதை இந்திய மீனவர் பிரச்சினை என்று சொல்லாமல், தமிழக மீனவர் பிரச்சினை என்று எடுத்துக்கொள்வதுதான் வேதனையாக இருக்கிறது என்றார் மீனவர் ஒருவர். தமிழக அரசின்- தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசாங்கம் இனி, அதை பிரதிபலிக்கும் வகையில் தன்னுடைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment