Friday, July 31, 2015

சசிபெருமாளின் மரணமும், மதுவிலக்கும்??


     என்ன இது?  அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறதே? மதுவிலக்கு பற்றி தொடர்ந்து "செய்திகள்" வருவதற்கு உதவியாக இருந்த ஒரு சசிபெருமாள் குமரி மாவட்டத்தில் "செல்போன் டவரின்" மேலிருந்து விழுந்து இறந்துவிட்டாரே? இதை எப்படி எடுத்துக் கொள்ள?  மதுவிலக்கு மட்டுமே பேசிவந்த ஒருவர் இப்படி சாகவேண்டுமா? தாங்க முடியவில்லையே? அந்த வயதான சசிபெருமாள்,தொடர்ந்து "சாகும்வரை பட்டினிப்போர்  மறியல், சத்தியாக்கிரகம், முக்கிய இடங்களில் அமர்வது, சேலத்திலிருந்து சென்னை வந்து செய்தியாக ஆவது, பல தலைவர்களைப் பார்த்து மதுவிலக்கை எடுத்துரைப்பது, அரசியல் தலைவர்கள் மதுவிலக்கு அறிவித்தால்,அவர்களை சென்று பார்த்து நன்றி கூறுவது, இப்படி தொடர்ந்து விடாப்பிடியாக செயல்பட்டவர் திடீரென மரணம் அடைந்துவிட்டாரே? என்று நமக்கும் அதிர்ச்சிதான். ஊடகங்கள் உடனடியாக  அவரது மரணத்தின் மீது , தலைவர்களிடம்  கருத்துக் கேட்டு, அவற்றை வெளியிடுகின்றன. அவை வேண்டுமானால் ஊடகங்களின் வேலை அல்லது கடமை அல்லது ஊடகங்கள் மீதான "தாக்கம்" என்று சொல்லலாம். ஆனால் சசிபெருமாள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக  ஊடகங்களில் கூறுவது உண்மைதானா? மக்கள் மத்தியில் அப்படி ஒரு "தாக்கத்தை" அவரால் ஏற்படுத்த முடிந்ததா?என்ற கேள்வி எழுகிறது. 

           பொதுமக்கள் மத்தியில் எல்லோருக்கும் சசிபெருமாளை தெரிகிறதா? நமக்கு அப்படி புலப்படவில்லை. ஒரு சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தையுடன் சேர்ந்து இதேபோல அவ்வப்போது மதுரையிலிருந்து புறப்பட்டு, சென்னை வரை பல ஊர்களிலும் மதுவிலக்குக்காக பட்டினிப்போர் நடத்திவருகிறார். அதேபோல நெல்லையிலிருந்து ஒரு விவேகானந்தன் சென்னை வந்து ஒரு பெரும் பட்டினிப்போராட்டம் நடத்தி, மதுவிலக்கை பரப்பினார். நெல்லையிலேயே 1000 குழந்தைகளுக்கு "மகாத்மா காந்தி" வேடம் போட்டு மதுவிலக்கை வலியுறுத்தி  நிகழ்ச்சி நடத்தினார். அடுத்து சமீபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து, மதுவிலக்கு அறிவித்ததற்காக "நன்றி" கூறினார். இப்படியாக ஊடக செய்திகளில் வந்துகொண்டிருக்கிறார். இவர்கள் "தனிநபர்களாக" இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பரப்பும் கொள்கைதான் அவர்களை "அடையாளம்" காட்டுகிறது. அதேபோல சசிபெருமாள் இன்று நம்முடன் இல்லை. அது நமக்கு வருத்தமே. ஆனால் அவர் ஏன் "செல்போன்" டவர் மீது ஏற வேண்டும்?".  "முழுமையான மதுவிலக்கு" மட்டுமல்ல , கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை என்ற ஊரில்,ஒரு குறிப்பிட்ட "டாச்க்மாக் கடையை" அகற்றவேண்டும் என்ற கோரிக்கையையும்  சசிபெருமாள் வைத்ததாக தெரிகிறது.   ஐந்து மணிநேரம் சசிபெருமாள் அந்த "செல்போன் டவர்" மீது ஏறி நின்று  போராட்டம் நடத்தியுள்ளார். அத்தகைய போராட்டத்தை அவரது "நண்பர்கள்" ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

                   சசிபெருமாளின் மரணத்தை ஒட்டி அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். அவர்கள் அரசாங்கத்தை மட்டுமே குற்றம் சாட்டலாம்.அதை பொதுமக்கள் "பெரிதாக"  எடுதுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மதுவிலக்கு கொள்கையை தொடர்ந்து பரப்பி வரும் "தமிழருவி மணியன்" சசிபெருமாளின் மரணம் பற்றி கூறும் போது "தனது கோரிக்கை  தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கவில்லையே" ,என்ற "ஆதங்கத்தில்" செல்போன் டவர்" ஏறியிருக்கிறார் என்று கூறுகிறார். அவரும் "செல்போன் டவர்" ஏறியதை ஆதரிக்கவில்லை. இப்படி விரக்தியில் போராட்டங்களை செய்யலாமா? சிறைக்குள் இருக்கும் சிறைவாசிகள் "வேறு வழியே" இல்லாமல், "செல்போன் டவரின் மீது ஏறுதல்" போன்ற போராட்டங்களை நடத்தும்போது,"புரிந்தகொள்ள" முடியும். அதை அண்ணன் சசிபெருமாள் செய்யலாமா? அவரது உயிர் அவருக்கு பெரிதாக தோன்றாமல் இருக்கலாம். நமக்கு அது "ஒரு உயிர்" என்பதும், அனாவசியமாக ஒரு உயிர் சாககூடாது என்பதும் தெரியுமே? நாம் "பயங்கரவாதி" ஆனாலும் ஒரு உயிரை எடுக்க "அரசுக்கு" உரிமை இல்லை என்றுதானே "மரண தனடனையையே" எதிர்த்து வருகிறோம். தனது உயிரை போக்கிக்கொள்ளவும் யாருக்கும் உரிமை கிடையாது என்பதுதான் நமது வாதமும். எந்தவகையிலும் சசிபெருமாளின் இத்தகைய "போராட்ட வடிவத்தை" நாம் ஏற்க முடியாதல்லவா?

                      நம்மவர்கள் "தனிநபர்கள்" ஒரு சமூக பிரச்சனைக்காக, மக்களின் கவனத்தையும், அரசின் கவனத்தையும் ஈர்க்க, சில நேரங்களில் சிலவகை போராட்டங்களை நடத்துகிறார்கள்.யாரும் நல்ல கோரிக்கைகளை "கவனிக்கவில்லையே" என்ற ஆதங்கத்தில்தான், சில நேரங்களில் "விரக்தியில்தான்" சில "தனிநபர்" போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதனால் அவை எலலாவற்றையும் "காந்திய முறை போராட்டங்கள்" என்று கூறி விடலாமா?  காந்திய வழி என்றால் "தொடர்ந்து மக்கள் மத்தியில் அறவழியில்" ஒரு கோரிக்கையை கொண்டு  செல்வதும், அதன்மூலம் பொதுமக்களின் ஆதரவை பெருவாரியாக பெறுவதும் என்பதுதானே? மறைந்த அப்துல் கலாம் அவர்கள் தொடர்ந்து "மாணவர்களிடையே" தனது கொள்கைகளை கூறி,ஒரு "தொலைநோக்கிய" பார்வையில் அத்தகைய கொள்கைகளில் வெற்றி பெற முயன்றதால்தானே மதிக்கப் பட்டார்? நாம் என்று கோரிக்கையை வைத்துக் கொண்டு தெருவில்,இறங்கினோமோ அதை "மூன்றே ஆண்டுகளில்" வெற்றி பெற துடித்து, அதற்காக விரக்தி மனம் கொண்டு "விபரீதங்களில்" ஈடுபடலாமா? 

                       செல்போன் டவரில் ஏறி நின்றுகொண்டு, மதுக் கடையை மூடசொல்வது என்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை,மிரட்டி, பணியவைப்பது" என்றுதானே பொருள்? அது எப்படி "காந்திய நடைமுறை" ஆகும்? ஆனாலும் சசிபெருமாள் தனது "நலனுக்காக" போராடவில்லை என்பதால், நாம் வேதனைப்படுகிறோம். சமூகத்தில் பொதுவாகவே "போராட்ட உணர்வு " குறைந்துவரும் காலத்தில், சசிபெருமாள் போன்றவர்களின் மரணம்,போராட்டமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. பல பத்து ஆண்டுகளாக பேசப்படும்" மதுவிலக்கு" என்ற முழக்கம்,மூன்று ஆண்டுகளாக சசிபெருமாள் அவர்களால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது என்று நாம் கூறவில்லை. ஆனால், ஊடகங்களின் தொடர்ந்த உதவியால், அவரது போராட்டம் "வெளியே" தெரிகிறது.இது "ஊடகங்களின் காலம்".

                     குமரி மாவட்டத்தில், உன்னாமலைக் கடை என்ற இடத்தில, பள்ளிக்கூடங்கள், தேவாலயம், ஆகியவற்றின் அருகே "டாச்க்மாக்" கடை அகற்றப்படவேண்டும் என்று, 1000 நாட்களாக மக்கள் போராடுகிறார்கள். அங்கே குறிப்பாக கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் "தீவிரமான" போராட்டங்களை நடத்த உணர்வு கொண்டவர்கள். அவர்களிடம் "மக்கள் திரள் போராட்டங்களை" நடத்த தொடர்ந்து முயலவேண்டியது அவசியம். அங்கேபோய், இவ்வாறு, "தனிநபர்" போராட்டமோ, "வீரசாகச மிரட்டல்" போராட்டமோ, அவசியமில்லை. அது சரியான வழியும் அல்ல, என்ற கருத்தும் இருக்கிறது.  ஆனால் நமது வட்டாரங்களில், "இலங்கை போரை நிறுத்த முத்துகுமாரின் உயிர் தியாகம்" என்ற "போராட்ட வடிவமோ", " ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியுள்ள "மூன்று தமிழர்களின் உயிர் காக்க, மக்கள் மன்றத்தின் செங்கொடியின் நெருப்பிட்டு எரிந்த மரணமோ" நம்மால் ஏற்கககூடியவை அல்ல. நாம் அவர்களது "கோரிக்கை நியாயத்தை" ஏற்றுக் கொண்டாலும், அவர்களது "போராட்ட வடிவத்தை" ஏற்றக் கொள்ள முடியாது.

                     இந்த நாட்டில் எந்த ஒரு "அறவழியோ","அமைதிவழியோ",அரசையும், நிர்வாகத்தையும்,  அசைத்துவிடும் என்று நாம் "மூட நம்பிக்கை" கொண்டிருக்க வில்லை. மக்களை திரட்டி போராடுவது என்பது ஒரு "கடினமாக,விடாப்பிடியாக" செய்யவேண்டிய ஒன்று. அதற்கு நமக்கு "பொறுமை" வேண்டும். ஆனால் பொறுமையாக, ஆழமாகக் கடுமையாக மக்கள் மத்தியில் உழைத்து, மக்களை திரட்டுவது என்பது ஒரு வழிமுறை. உணர்ச்சிவசப்பட்டு, அவசரமாக, வீரசாகசத்தோடு, "போராட்ட முறைகளை" திட்டமிடுவது எப்படி சரி?  நாம் சசிபெருமாளுடைய மரணத்திலிருந்து, நிறைய "கற்றுக்கொள்ள"வேண்டும். அவரது உறுதி, தொடர் முயற்சிகள், விடாப்பிடியாக, மதுவிலக்கு கொள்கையை வெற்றிபெற வைக்க முயல்வது ஆகியவற்றை நாம் போற்றவேண்டும். அதேநேரம், "ஊடகங்கள்" கொடுக்கும் உற்சாகத்தை மட்டுமே நம்பி, மக்களை திரட்டும் "கடின முயற்சியை" எடுக்காமல், முன்செல்ல முயல்வது தவிர்க்கப்பட 
வேண்டும்.

                உதாரணமாக, சென்னை மயிலாப்பூர் பகுதி, நிறைய "குடிகாரர்களை" கொண்ட பகுதிதான். அங்கு வாழும் அடிப்படை மக்கள் மத்தியில், "நொச்சிக்  குப்பம்"  பகுதியில், சாந்தோம் சாலையான "காமராஜர் சாலையில்" இருந்த  மதுக் கடை, அந்த வழி செல்லும், "உயர்நீதிமன்ற நீதியரசர்களால்" ஒரு நாள் கோபத்தோடு தடுக்கப்பட்டது. உடனே அந்த கடை, "அம்பேத்கர் பாலம்" என்ற அடிப்படை மக்கள் வாழும் அருகாமை பகுதிக்கு, மாற்றப்பட்டது. அங்கும்,வசிக்கும் மக்களால்,"கடையை அடை" என்ற போராட்டம் நடந்தது. அங்கிருந்தும் அந்த கடை அகற்றப்பட்டு, அருகே உள்ள,"தண்ணீர்தொட்டி மார்கெட்" என்ற இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கும் சில காலம் கழித்து, மக்கள் கடையை அகற்ற கோரி, போராடினார்கள். அதற்குப்பிறகு அங்கிருந்தும் அந்த கடை  அகற்றப்பட்டது. ஆகவே, சென்னை மயிலாப்பூரில் மக்கள் போராட்டம் மூலம் மதுக் கடை மூடப்பட முடியும் என்றால், ஏன் கன்யாகுமரி மாவட்டத்தில் "விடாபிடியான மக்கள் போராட்டத்தினால்" மதுக் கடை மூடப்பட முடியாது? அதற்கு பொறுமையுடன் கூடிய மக்கள் திரள் போராட்ட அணுகுமுறை தேவை..

1 comment:

சேக்காளி said...

//சென்னை மயிலாப்பூரில் மக்கள் போராட்டம் மூலம் மதுக் கடை மூடப்பட முடியும் என்றால், ஏன் கன்யாகுமரி மாவட்டத்தில் "விடாபிடியான மக்கள் போராட்டத்தினால்" மதுக் கடை மூடப்பட முடியாது//

Post a Comment