சாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேரா’ - டி.எஸ்.எஸ்.மணி: பாகம் 2
செவ்வாய், 5 ஜூலை 2016
டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல்பாரி உட்பட 40 கிராமங்கள் இருக்கும் சிலிகுரி வட்டத்தில், சிலிகுரி நகரில், மஹானந்த பரா சாலையில் தனது வீடான 25ஆம் எண் வீட்டில் அமர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 8 கட்டுரைகளை சாரு மஜூம்தார் எழுதுகிறார். அந்தக் கட்டுரைகள் மார்க்சிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதக் கொள்கைகளை முறியடிக்கும் தன்மை தேவை. அவற்றில், ‘இந்தியச் சமூகம் ஒரு அரைக் காலனி, அரை நிலப்பிரபுத்துவத்தன்மை கொண்டது’ என நிரூபிக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியோ, இது ஒரு சுதந்திர நாடு என்றது. அடுத்து இந்தியாவை ஆளும் முதலாளிகளை தரகு முதலாளிகள் என்று விவரிக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியோ, அவர்கள் சுதந்திரமான முதலாளிகள் என்றது. இந்தியா, அரசியல் சுதந்திரம் பெற்ற நாடு. பொருளாதார சுதந்திரத்தைப்பெற போராட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. சாரு மஜும்தாரோ, இந்தியா ஒரு அரைக்காலனி நாடு என்று எழுதுகிறார். இங்கு, மாவோ வழியில் விவசாயப் புரட்சிமூலம் ஆயுதம் தாங்கிய போராட்டம் செய்யவேண்டும் என்று, சாரு அந்த கட்டுரைகளில் எழுதுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியோ, ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கான சூழல் இப்போது இல்லை. ஆகவே, தேர்தல்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றது. மாவோ கூறிய, ‘ஐக்கிய முன்னணி, விவசாயிகள், தொழிலாளர்களைக் கொண்ட ஆயுதப் போராட்டத்துக்கான ஒன்று’ என்று சாரு எழுதுகிறார். மாவோ கூறியபடிதான் தேர்தலில் முதலாளித்துவ கட்சியுடன் ஐக்கிய முன்னணி என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை எதிர்த்து புரட்சிகர மாற்று தத்துவார்த்த நிலைப்பாடுகளை முன்வைத்ததுதான் சாருவின் எட்டுக் கட்டுரைகள். அவைதான் நக்சல்பாரி எழுச்சிக்கு முதுகெலும்பாக அமைந்தன.
1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் திட்டமிட்டபடி, டார்ஜிலிங் மாவட்டக் கட்சியின் மாணவரணி, தோட்டத் தொழிலாளர் அணி, விவசாயிகள் அணி என புரட்சிகர நடவடிக்கைக்கு திரட்டிய தோழர் சாரு மஜூம்தார், வட்டாரத்தின் விவசாய முன்னோடிகளான ஆதிவாசிகள் சமூகத்தைச் சேர்ந்த தோழர் கணுசனயால், ஐங்கல சந்தால் ஆகிய தலைவர்களுடன் இணைந்து அந்த ஆயுதப் பேரெழுச்சியை ஏற்படுத்தினார். அது அங்கிருந்த பெரும் பண்ணையார்களைக் குறிவைத்து, அவர்களது வீடுகளில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி, அவர்களது நிலங்களை மீட்டெடுக்கும் போராட்டமாக அமைந்தது. விவசாயிகளின் ஆயுதப் போராட்டமாக எழுந்தது. இந்திய விவசாயிகள் ஆயுதப் போராட்டத்துக்கு தயாராகத்தான் இருக்கிறார்கள்! என்பதை உலகுக்கு மெய்ப்பித்தது.
உடனடியாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரபூர்வமான ஏடான ‘பெய்ஜிங் ரெவியூ’-வில், நக்சல்பாரியில் வசந்தத்தின் இடிமுழக்கம் என்று கட்டுரை வெளியிட்டு, ‘இந்தியாவில் உள்ள திரிபுவாத கம்யூனிஸ்ட்டுகளை எதிர்த்து, சாரு மஜூம்தார் தலைமையில், நக்சல்பாரியில் ஆயுதப் புரட்சி தொடங்கியது’ என்று பாராட்டி எழுதியது. இதுவே, இந்திய துணைக்கண்டம் எங்கும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு செய்தியாக மாறியது. அனைவருக்கும், சாரு மஜூம்தார் என்ற மையப்புள்ளி அடையாளம் தெரிந்தது. அனைத்து புரட்சிகர சக்திகளும், தோழர் சாரு மஜூம்தாரை நோக்கி ஈர்க்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டு, நிலங்கள் ஏழை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட நக்சல்பாரி கிராமத்தை சுற்றிவளைக்க, அன்றைய மாநில உள்துறை அமைச்சர் ஜோதிபாசு, கிழக்கத்திய எல்லை துப்பாக்கிப் படையை வரவழைத்து, நக்சல்பாரி கிராமத்தில் முதல் பலியாக தோழர் பாபுலால் பிஸ்வகர்மாவை சுட்டுக் கொன்றது. விடுதலைப் பகுதியையும் அரசின் ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவந்தது.
கேரளாவில் வயநாடு, புலப்பள்ளி, தலைச்சேரி காவல் நிலையங்களைத் தாக்கி, ஆயுதங்களை மீட்டு, தோழர்கள் குன்னிக்கல் நாராயணன், அவரது மனைவி தோழர் மந்தாகினி நாராயணன், அவர்களின் மகள் அஜிதா ஆகியோர் பீடித் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, காட்டுக்குள் சென்று ஆயுதப் போராட்டத்துக்கான ஒரு முன்னுதாரணத்தைப் படைக்கிறார்கள். அதேபோல ஆந்திராவில், தோழர் தரிமள நாகிரெட்டி (அப்போது அனந்தப்பூர் சட்டமன்ற உறுப்பினராகி இருந்தார். குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டியின் சகலர்), தோழர் சந்திர புல்லாரெட்டி ஆகியோர் இருந்தனர். மேற்கு வங்கத்தில் மின்வாரியத் தொழிலாளர் சங்கத் தலைவர் அஜித் சென் இருந்தார். இவர்கள் எல்லோருமே வெவ்வேறு கருத்து உள்ளவர்கள். ஆனால், அனைவரும் இந்தியாவுக்கு ஆயுதப்புரட்சி அவசியம் என்ற கருத்தில் உடன்பாடு கொண்டவர்கள்.
அனைவரையும் தோழர் சாரு மஜூம்தார் அழைத்து, ‘அனைத்திந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு’ (ஏ.ஐ.சி.சி.சி.ஆர்.) என்று 1968இல் கூட்டுகிறார். அதில் குன்னிக்கல் நாராயணன் குழுவினர், நேரடியாக காவல் துறையையும், ராணுவத்தையும் தாக்கும் கொரில்லா போராட்டம் என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பே பிரதான முரண்பாடு என்றும் முன்வைக்கிறார்கள். நாகிரெட்டி குழுவினர், தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தேர்தலில் பங்குகொள்வது எனவும், மீதி இடங்களில் ஆயுதப் போராட்டம் என்றும் முன்வைக்கிறார்கள். அஜித் சென் குழுவினர், தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கி போர் என்று முன்வைக்கிறார்கள். ஆனால், தோழர் சாரு மஜூம்தார் முன்வைத்த ‘கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான விவசாயிகளின் ஆயுதப் போராட்டம்’ என்றும், ‘தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும்’ என்றும், ‘நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான முரண்பாடே பிரதான முரண்பாடு’ என்பதும்தான், அந்தக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஏ.ஐ.சி.சி.சி.ஆர். ‘அடுத்த அறுவடை நமக்கே’ என்ற முழக்கத்தை முன்வைக்கிறது. எல்லா மாநிலங்களிலும் விவசாயிகளைத் திரட்டி, ஆயுதபாணியாக்கி, அறுவடையைக் கைப்பற்றுகிறார்கள். அவ்வாறு செய்யும்போது, விவசாயிகள் தாங்களாகவே தங்களுக்கு எதிரான வர்க்க எதிரிகளின் நிலங்களில் அறுவடையை பலாத்காரமாக மீட்டெடுக்க முனையும்போது, தாக்க வருவான் என்ற எதிர்பார்ப்பில், பெரும் நிலவுடைமைவாதிகளை அழித்தொழித்துவிட்டு, அறுவடையைக் கைப்பற்றுகிறார்கள். இது, விவசாயிகள் தாங்களாகவே தங்களது எதிரியை ‘நிர்மூலமாக்க’ எடுத்த செயல்தந்திரம். இதன்மூலம்தான், வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பது என்ற செயல்தந்திரம் அறியப்பட்டது. அதுவே, புரட்சியாளர்களின் அடுத்தகட்ட செயல்பட்டு தந்திரமாக ஆனது.
1969ஆம் ஆண்டு, லெனின் பிறந்தநாளான ஏப்ரல் 22 அன்று, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உதயமாகிறது. தோழர் சாரு மஜூம்தார் அதன் முதல் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் தோற்றத்தை. கல்கத்தா நகரின் ஒரு மாபெரும் வித்தியாசமான கொரில்லா முறையில் அணிதிரட்டி, பேரணிமூலம் பொதுமேடைக்குவந்து, தோழர் கானுசன்யால் மூலம் அறிவிக்கிறார்கள். தோழர் சாரு மஜூம்தார் அப்போதே தலைமறைவாகிவிடுகிறார். கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு, கல்கத்தாவில் ஒரு திருமண விழாவுக்கிடையே மாடியில் ரகசியமாகக் கூடி தனது கொள்கைகளை, செயல் தந்திரத்தை, ‘வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் கொரில்லா போரே தொடக்கப் போர்!’ என்ற வழியை அறிவிக்கிறது. அழித்தொழிப்புப் போர் எங்கணும் தொடங்குகிறது. அதன்மூலம், மக்களுக்கு நம்பிக்கையை வரவழைத்து, மக்கள் திரள் போராட்டங்களை நடத்தும்படி அதில் தோழர் சாரு மஜூம்தார் எழுதுகிறார். அந்த விவரங்களை சவுகரியமாக பிற்காலத்தில் சிலர் மறந்துவிடுகிறார்கள்-மறைத்தும் விடுகிறார்கள்.
நிலங்களைக் கைப்பற்றி, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பிரித்துக்கொடுக்க, கிராமங்களில் புரட்சிகரக் கமிட்டியை ஏற்படுத்த சாரு பணிக்கிறார். கிராமப்புற முன்னோடிகளைக்கொண்ட தொண்டர் படைகளை நிர்வகிக்கச் சொல்லி கட்டளையிடுகிறார். அத்தனையையும் மறைத்துவிட்டு சாருவை விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனாலும் இந்திய ஆளும்வர்க்கமும் நாடும் நடுங்குகிறது. அவர்களும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களை அழித்தொழிப்பு செய்ய முனைகிறார்கள். கேரளாவில் தோழர் வர்கீஸ், ஆந்திராவில் சிறீகாகுளம் விடுதலைப்பகுதிக்கு வித்திட்ட தோழர்கள் சத்தியநாராயணா, ஆதிபத்திய கைலாஸா, சுப்பாராவ் பணிக்கிரஹி, எம்.எல்.நாராயணா, பஞ்சதரி கிருஷ்ணமூர்த்தி, நிர்மலா கிருஷ்ணமூர்த்தி, பஞ்சாபில் புஜாசிங், தமிழ்நாட்டில் தோழர் எல்.அப்பு, மேற்குவங்கத்தில் சரோஜ் தத்தா, காஷ்மீர் புரட்சியாளர்கள் என கைது செய்தபின் சுட்டுக் கொன்றது. சுற்றிவளைத்து தாக்குதலில் விடுதலைப் பகுதிகளை அழித்தது. 1972இல் ஜூலை மாதம் கல்கத்தா நகரில், ஒரு தங்குமிடத்திலிருந்த தோழர் சாரு மஜூம்தாரை, காட்டிக் கொடுத்ததால் கைதுசெய்து, சிறையிலடைத்து அவருக்குத் தேவையான உயிர்வாழ் மருந்துகளைக் கொடுக்காமல் ஜூலை 28ஆம் நாள் அவரது மரணத்துக்கு அரசு காரணமானது. அந்த நாள், இன்றுவரை தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எத்தனை படிப்பினைகளைத் தந்தாலும், நக்சல்பாரி புரட்சிகர எழுச்சி என்பது இந்திய விவசாயிகளின் வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாகத் திகழ்கிறது.
No comments:
Post a Comment