ஆமைகளா? மீனவனா?
வெள்ளி, 4 நவ 2016
பொதுவாக கடலிலே வாழும் உயிரினங்களை பற்றி, நிலத்திலே வாழும் மனிதர்களுக்கு நேரடி அனுபவமும் கிடையாது. அதனால் அது பற்றிய அறிவு பற்றாக்குறையுடனேயே இருக்கும். மலைகளில் வாழும் உயிரினங்களை பற்றிக் கூட சமவெளியில் வாழும் மனிதர்களுக்கு போதுமான அறிவு இருப்பதில்லை. இது இயல்பானதே. அப்படி இருக்கையில், நிலம் சார்ந்த உலகம் என்பது வேறு, கடல் சார்ந்த உலகம் என்பது வேறு. இதுவே உண்மையில் நிலவும் நிலைமை.
இதில் பல்வேறு காரணங்களால் நிலம் சார்ந்த உலகத்திலிருந்துதான், அரசாங்கமோ, அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ, ஊடகத்தாரோ, வருகிறார்கள். அவர்களுக்கு கடல் சார்ந்த உலகம் பற்றி, யாராவது ஆராய்ச்சியாளர்கள் கூறுவதையே கேட்கின்றனர். அதிலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது எழுதப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையே தங்களுக்கான ஆதாரமாக எடுத்துக் கொண்டு முடிவுகளை செய்கின்றனர். எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், கடலைப் பற்றியும், கடலிலே வாழும் உயிரினங்களைப் பற்றியும், கடலிலே நிலவும் நீரோட்டங்களைப் பற்றியும், வருகின்ற புயல், காற்று, மின்னல், மழை ஆகியவற்றைப் பற்றியும், நேரடியாகவும், அனுபவித்த காரணத்தினாலும், மீனவர்களுக்கு அதிகமாகத் தெரியும் எனபதை நிலம் சார்ந்த அறிவு ஜீவிகள் ஏற்றுக் கொள்வதேயில்லை. இப்படி ஒரு சிக்கலை தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றம் எதிர்கொள்ள, அதுவே இன்று 26 மீனவக் கிராமங்களின் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
செப்டம்பர் 27 நாள், தமிழக அரசு ஒரு உத்தரவு போட்டுள்ளது. அதன்படி, வருகிற ஜனவரி 1 தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை, சென்னை நேப்பியர் பலம் முதல் திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் வரையிலும், கொட்டிவாக்கம் முதல் கோவளம் வரையிலும் கடலிலே மீன்பிடிக்கும் மீனவர்கள், விசைப்படகையோ, எந்திரம் பொருத்தப்பட்ட எந்த படகையோ, 5 கடல் மைல்கள் (நாட்டிங்கல் மைல்) வரை மீன் பிடிக்கத் தடை செய்யப்படுகிறது. இது உள்ளபடியே, விசைப்படகுகளையம், கண்ணாடி இழைப்படகுகளான பைபர் படகுகளையும் தடை செய்துவிடும். அநேகமாக இப்போது அனைத்து மீனவர்களும் சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் கட்டுமரங்களுக்குப் பதில் கண்ணாடி இழைப் படகுகளைத்தான் பயன்படுத்துகின்றனர். ஆமைகளுக்கு முட்டையிடும் காலம் என்பதிலோ, இனப் பெருக்க காலம் என்பதிலோ, அதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதிலோ, ஆமைகள் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உதவக் கூடியவை என்பதிலோ, மீனவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆகவே ஆமைகளைப் பாதுகாப்பதில் மீனவர்களும் அக்கறையோடு இருக்கிறார்கள்.
இத்தகைய நிலையில், சுப்ரஜா என்பவர் நடத்தும் ட்ரீ பவுண்டஷன் ‘ஆமைகளைக் காப்பதில்’ அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அவர்களது முயற்சியில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்த வழக்கில், தலைமை நீதியரசர், தானாகவே அக்கறையுடன், ஒரு வழக்கறிஞரை நியமித்து, அரசிடம் ஆமைகளைப் பாதுகாக்க என்ன செய்யப் போகிறீர்கள் என வினவ, காத்திருந்ததுபோல, அரசும் மேற்கண்ட ‘தடையை’ அறிவித்துள்ளது. அதற்காக ஒடிசா அரசாங்கம் தங்களது கடலோரத்தில் ஆமையாக்களைப் பாதுகாக்க மீன்பிடித் தடையை அறிவித்துள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார்கள். ஒடிசா கடற்கரை வேறு, சென்னை கடற்கரை வேறு என்பது இந்த நிலம் சார்ந்த அறிவாளிகளுக்குத் தெரியுமா என கடல் சார்ந்த பழங்குடிகளான மீனவர்கள் கேட்கிறார்கள். ஒடிசா கடற்கரையில் ஆமைகளின் நடமாட்டம் மிக அதிகம். இங்கே சென்னை கடற்கரையில் வந்து பாருங்கள், ஆமைகள் அதிகமாக இயல்பிலேயே இல்லை என்கின்றனர் அந்த மீனவர்கள். அதுமட்டுமின்றி, நேப்பியர் பாலம் முதல் திருவான்மியூர் வரையும், கொட்டிவாக்கம் முதல் கோவளம் வரையும் மீனவர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே ‘தடை’ அறிவித்த தமிழக அரசு, ஏன் செம்மஞ்சேரி முதல் கடப்பாக்கம் வரை எந்த தடையும் யாருக்கும் விதிக்கவில்லை என்று கேட்கின்றனர். ஏன் என்றால் அந்தப் பகுதிகளில் மீனவர் குப்பங்கள் இல்லை. மாறாக பெரும் பணக்காரர்களுடைய வீடுகள், பொழுதுபோக்கு நிறுவனகளும் உள்ளன என்றும் அவற்றில் அரசு அதிகாரிகள் உள்ளே நுழைந்து தடங்கல் செய்ய விரும்பவிலை என்றும் ஊழல் குற்றச்சாட்டுகளும் கூறுகின்றனர்.
மீனவர்கள் தரப்பில், தாங்கள் இயற்கையோடு இயைந்து வாழும் பழங்குடிகள் என்றும், அன்றாடம் கடலுக்குச் சென்று இயற்கையை எதிர்த்து போராடி, இயற்கையுடனேயே உறவாடி, மீன்களை வேட்டையாடி, உலகுக்கே உணவு தருகின்ற கடல்சார்ந்த உலகை சேர்ந்தவர்கள் என்றும், ஆகவே ஆமைகளை பாதுகாக்கும் மனோபாவம், இயற்கையாகவே தங்களுக்கு நிலம் சார்ந்த உலகத்தவர்களை விட அதிகமாகவே உண்டு என்றும், விலங்குகளா? மனிதர்களா? என்ற கேள்வியில், மனிதர்களைக் காப்பதில், அவர்களது வாழ்வாதராத்தை பாதுகாப்பதில், நிலம் சார்ந்த உலகத்தார் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் மீனவர்கள் கோருகின்றனர். நிலம் சார்ந்த உலகத்து ஆர்வலர்களோ, அறிவு ஜீவிகளோ, அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றத்தாரோ தங்களது “ஆமைகளை பாதுகாக்கும் ஆர்வத்தை, கடலிலே சென்னைக்கு கடற்கரையோரம் எப்படிச் சூழல் இருக்கிறது என்று ஆராய்ந்து, கடல் சார் பழங்குடி மீனவர்களிடம் கருத்துக்கேட்டு, பிறகு முடிவுகளை எடுப்பதுதான் சரியானது?” மாறாக யாரோ ஒடிசா மாநிலத்தில் போட்டுள்ள ஒரு தடையை எடுத்துக் கொண்டுவந்து, இங்கே அதை அப்படியே எந்திர ரீதியாகப் பொறுத்த முயல்கிறார்கள் என்று மீனவர் பிரதிநிதிகள் கூறுகிறார்கள். விசைப்படகுகள் உள்ள பிராப்பளர்களில் அடிபட்டு ஆமைகள் இறந்து விடுவதாகவும், அதற்காக விசைப்படகுகளில் உள்ள பிராப்பளர்களில் பாதுகாப்பு கவசங்கள் இருக்க வேண்டும் என்றும் தான் தாங்கள் கேட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால், அரசு ஏன் இதைப் பயன்படுத்தி மீன்பிடித் தடை போடுகிறது? அந்த தடை காலத்தில் தாங்கள் ஏற்கனவே மாநகராட்சி மூலம், சட்ட விரோதமாக கொண்டுவர விரும்பும், பிற மாநில மீன்களின் விற்பனைக்கு கூடங்களை அடையாறு ஆற்றுப்பகுதியில் நிறுவ, மறைமுகத் திட்டமா? என்று மீனவர்கள் சந்தேகிக்கிறார்கள்.
யார் உங்களுக்கு ஆராய்ச்சி செய்து கூறினார்கள் என்று கேட்டால், சி.எம்.எஃப்.ஆர்.ஐ. என்ற ‘கடலோர மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்’ கூறியுள்ளது என்கிறார்கள். இதே நிறுவனம் கடலுக்கு அடியில் தேங்கிக் கிடக்கும், பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிக் கூறவில்லையா? என்று மீனவர்கள் கேட்கிறார்கள். பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக கடலிலே சேர்ந்ததால்தான், ஆமைகள் அவ்வப்போது மேலே வந்து மூச்சு விட்டுச் செல்பவை, கடலுக்கு கீழே வாழ் முடியாமல், மேலே மிதக்கத் தொடக்கி விட்டன என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள். அதையெல்லாம் விடுத்து, மீனவர்களின் வாழ்வாதாரம் மீது கை வைக்கிறீர்கள்? என்பதே அவர்களது கேள்வி. இதே கடலோர மீன்வள ஆராய்ச்சி நிறுவனம [சி.எம்.எஃப்.ஆர்.ஐ.] தமிழக அரசு கொண்டுவந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை எதிர்த்தபோது, அரசும் அதிகாரிகளும் செவி மடுத்தார்களா? என்றும் மீனவர்கள் கேட்கிறார்கள். அப்போது, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தால் உப்புத் தண்ணீரை, நல்ல தண்ணீராக்க, உப்புக்கழிவுகளை அடர்த்தியாக மீண்டும் கடலுக்குள் கொட்டுவது அதிகமான அளவுக்கு, கடலின் சுற்றுச்சூழலைக் கெடுத்து, கடல் வாழ் உயிரினங்களின் அழிவை ஏற்படுத்தாதா? என்று ஏன் இதே நிலம் சார்ந்த ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், நீதிமன்றத்தாரும் கேட்கவில்லை எனபதே மீனவர்களின் ஆதங்கம்.
ஆகவே, நவம்பர் 1ஆம் தேதி, மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் கடற்கரையிலே கூடிய 25 கிராமத்து மீனவர்கள், 300 பேர், இன்று (நவம்பர் 4ஆம் தேதி), திருவல்லிக்கேணி மாட்டங்குப்பம் தொடக்கி கோவளம் வரை உள்ள மீனவக் கிராமங்களில், கறுப்புக்கொடி ஏற்றி பட்டினிப் போராட்டம் நடத்தி, தமிழக அரசின் மீன் பிடி தடைக்கு எதிர்ப்பு காட்ட இருக்கிறார்கள். வருகிற நவம்பர் 7ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் வர இருக்கின்ற இந்த வழக்கின் அடுத்த விசாரணையில் தமிழக அரசு, தடையை நீக்கிக் கொள்ளாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment