Wednesday, November 9, 2016

Paper money vs Digital money

கறுப்புப் பணம் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

புதன், 9 நவ 2016

நாடு முழுவதும் ஒரே விவாதம். கறுப்புப் பணத்தை எதிர்த்து ஒரு ‘மாபெரும் நடவடிக்கை’. அன்றாட வாழ்க்கையில் உழலும் மக்களுக்கு உடனடியான பணப் பரிமாற்றங்களுக்கு ‘சில சங்கடங்கள்’ உருவாக்கலாம். ‘சிரமங்களுக்கு மன்னிக்கவும்’ எனும், பிரதமரின் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை. நாட்டின் தேவைக்காக, நாட்டின் நலனுக்காக, சிறிது சிரமங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள் என்று பரப்புரை வருகிறது. உண்மையில், இது நாட்டின் நலனுக்காக ‘கறுப்புப் பண’ எதிர்ப்பு வேட்டையா? ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துக்கொண்டு மொத்தமாக வீட்டுக்குள்ளேயோ, குடோனிலோ, கன்டெய்னர்களிலோ ஒளித்துவைத்துள்ள ‘புதிய பணக்காரர்கள், இடைத்தரகர்கள், கந்துவட்டிக்காரர்கள், சட்டவிரோத வணிகர்கள், அரசியல்வாதிகள்’ ஆகியோரின் ‘ரூபாய் நோட்டுகள்சார்ந்த கறுப்புப் பணத்தை அழிக்க’ இந்த நடவடிக்கை பயன்படும் என்பது உண்மையே.
ஆனால் இதுவே ‘ஒட்டுமொத்த கறுப்புப் பணத்தை’ வெளியே கொண்டுவரவோ அல்லது அழிக்கவோ உதவுமா? ஸ்விஸ் வங்கி மற்றும் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக கறுப்புப் பணத்தை குவித்துவைத்துள்ள பெரும் ‘மலைமுழுங்கி மஹாதேவன்களை’ இந்த நடவடிக்கை பாதிக்குமா? அவர்கள், ‘புக்வொர்க்’ மூலம், ‘இணையம்’ மூலம் தங்கள் பரிவர்த்தனைகளை செய்துவருகிறார்கள். அப்படிப்பட்ட ‘கடோத்கஜன்கள்’ தங்களது ‘கறுப்புப் பணத்துக்கு’ ஒரு உலக அங்கீகாரம் பெற்றுவைத்துள்ளனர். உலகமயமாக்குதலின் இன்றைய காலகட்டத்தில், ஏகபோக பெருமுதலாளிகளை ஆட்சியாளர்கள் சார்ந்து நிற்கிறார்களே தவிர நெருங்கித் தொடுவதில்லை. அவர்களது கறுப்புப் பணத்தை நாம் ‘இணைய கறுப்புப் பணம்’ என்று அழைக்கலாம். இடைத்தரகர்கள், உதிரிகள், சமூக விரோதிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் வைத்திருக்கும் சட்டவிரோத ‘பணக்குவித்தலை’ நாம், ‘ரூபாய் நாட்டுக்கு கறுப்புப் பணம்’ என்று அழைக்கலாம்.
அப்படியானால், இங்கே ஆட்சியில் அமர்ந்திருபோர் ஏற்கனவே, கார்பொரேட் நலனுக்காக செயல்படுபவர்கள் என்ற பெயர் இருக்கும்போது, அவர்கள், ‘இணைய கறுப்புப் பணத்தின் நலனுக்காக’ இடையிலே இடையூறாக இருக்கும் இடைத்தரகர்களான ‘ரூபாய் நாட்டுக்கு கறுப்புப் பணத்தின்’மீது எடுக்கும் நடவடிக்கையா இது? அதாவது, ‘டிஜிட்டல் கறுப்புப் பணம், கரன்சி கறுப்புப் பணம்’மீது நடவடிக்கை எடுத்துள்ளதா? எப்படியோ இது, நிச்சயம் இளைய தலைமுறையினருக்கும் நியாயம் வேண்டுவோருக்கும் கவர்ச்சியாக இருக்கும். அதனால் அவர்கள் வாக்குகள் உத்திரப்பிரதேசத்தில், இவர்களை ஆட்சிக்குக் கொண்டுவர வாய்ப்புள்ளது. அதுவே, மாநிலங்களவையில் இவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். அதன்மூலம் தாங்கள் நினைத்ததையெல்லாம் நடத்த, ராமர் கோவில், 370 சட்டப்பிரிவு நீக்கல், பொது சிவில் சட்டம் என விருப்பப்படி நிறைவேற்றலாம். அப்படித்தானா?
டி.எஸ்.எஸ்.மணி

No comments:

Post a Comment