சபரிமலையில் பெண்கள்: தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது?
டி.எஸ்.எஸ். மணி
சபரிமலையில், பெண்களுக்கும் அனுமதி என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?
உலகமெங்கும்,ஒவ்வொரு நாட்டிலும், ஆளவந்த சிறுபான்மை சக்திகள், பரந்துபட்ட மக்களை மயக்க நிலையில் வைத்திருக்க, ஆள்வோரை எதிர்த்த நீதிக்கான எழுச்யில் ஒன்றுபட்டுத் திரள்வதைத் தடுக்க சமூக, பொருளாதார, அரசியல், கட்டமைப்பை இருப்பது போலவே பாதுகாக்க, ஆன்மிகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையே, காரல் மார்க்ஸ், மதம் மனிதருக்கு அபின் என்றார்.
அந்த ஆன்மிகத்தின் அம்புறாத் தூணியில் உள்ள அம்புகள் பல்வேறு நம்பிக்கை நீரோட்டங்களாக (Sects) மதங்களாக (Religions) பவனி வருகின்றன. அதில் ஒரு நீரோட்டமே, சபரிமலை ஐயப்பன்.
அத்தகய ஆன்மிக ஆயுதத்தில், ஆண், பெண் வேறுபாடு வேண்டாம் என்ற இன்றைய காலத்துக்கு ஏற்ற தீர்ப்புதான் இது. நம்பிக்கை நீரோட்டத்தை விட்டு ஒரு சரி பாதி பாலினத்தை விலகி நிற்கச் செய்யாமல் தடுக்கிறது. பெரும்பான்மை மத்த்தின் நம்பிக்கையைக் கட்டிக்காக்க, அதைப் பாலின வேறுபாடு இன்றிப் பின்பற்றச் செய்ய வேண்டும் என்ற அறிவார்ந்த உணர்தல்களை, நீதியரசர்கள் கொள்கையாகக் கொண்டுள்ளதால், பழைய பழக்கங்களை மாற்றி அனைவரையும் தங்கள் நம்பிக்கை வலைக்குள் வீழ்த்த எடுத்த தந்திரமான தீர்ப்புதான், அனைத்துப் பாலினதிற்கும், ஆன்மிகச் சமத்துவம் என்ற கருத்துக் கோப்பு.
உலகமெங்கும் இணைய தலைமுறை, இளம் பெண்கள் உட்பட, பழைய பழக்கங்களுக்கு உட்பட்டு, பாலின சமத்துவமுன்றித் தொடர்ந்து பயணிக்க விரும்பவில்லை என்ற உண்மையை உணர்ந்த நீதியரசர்களின் காலத்திற்கேற்ற கருத்துத்தான் இந்தத் தீர்ப்பு.
அரசியல் சட்டப் பிரிவு 377ஐ ( தன்பாலின உறவைக் குற்றமாகக் கருதும் பிரிவு) நீக்கியதும், சட்டப் பிரிவு 497ஐ (மண உறவுக்கு வெளியே நடக்கும் உடலுறவைக் குற்றமாகக் கருதும் பிரிவு) நீக்கியதும், மேற்கண்ட உணர்தல்களின் வெளிப்பாடே. அந்த வரிசையில்தான், இந்தத் தீர்ப்பும் வெளிவந்துள்ளது.
காலம் தமது கையை விட்டு விலகிச் செல்வதையும், மக்கள் தங்களது பிடியிலிருந்து நழுவிச் செல்வதையும் தடுத்து நிறுத்தச் சில பழைய பழக்க வழக்கங்களிலிருந்து வெளியே வர விரும்பும் அறிவார்ந்த செயல்தான், உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் இந்தத் தீர்ப்பு. அழுகிக்கொண்டு இருக்கும் சமூகத்தைத் தொடர்ந்து கட்டிக்காக்க இத்தகய தீர்ப்புகள் தேவைப்படுகின்றன.
ஒரேயொரு பெண் நீதியரசரின் அதிருப்திப் பதிவு மட்டும் தனித்து நிற்கிறது. எல்லோரும் மாற்றத்தை நோக்கிச் சென்றாலும், ஆள்வோரெனும் சிறுபான்மையினருக்குப் பெரும்பான்மையைக் கட்டிப்போட, நம்பிக்கை நீரோட்டப் பயணத்தில் பாலினச் சமத்துவம் கட்டாயத் தேவை என்பதை, எச்சரிக்கை மணியாகச் சூழல் கோரினாலும், அதைவிட வலுவான ஆணாதிக்க நம்பிக்கைகளின் பிரதிபலிப்பா அவருடைய கருத்து எனச் சமூகம் ஆய்வு செய்யத்தானே செய்யும்?