Friday, November 9, 2018

மாவோயிஸ்ட் தலைமை மாற்றப்பட்டதா?

சிறப்புக் கட்டுரை: மாவோயிஸ்ட் தலைமை மாற்றப்பட்டதா?

சிறப்புக் கட்டுரை: மாவோயிஸ்ட்  தலைமை மாற்றப்பட்டதா?

டி.எஸ்.எஸ்.மணி

சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைமை மாற்றப்பட்டது என்பதாகப் பல ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களை வைத்து யூகமாகச் செய்தி வெளியிட்டு வருகின்றன. மாவோயிஸ்ட் கட்சி இன்று இந்தியாவின் இதயப் பகுதியான, மத்திய இந்தியாவில், அரசுக்கும் துணை ராணுவப் படைக்கும் சவாலாக இருக்கிறது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை ஒட்டிய ஆந்திர மாநிலத்திலும் இன்று மாவோயிஸ்ட்டுகளுடைய நடவடிக்கைகள் ஊடகங்களால் கணிக்கப்படுகின்றன.
மாவோயிஸ்ட் கட்சியின் பின்னணி
இந்த மாவோயிஸ்ட் கட்சி 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் தோழர் கணபதி என்று அழைக்கப்படும் முப்பளா லக்ஷ்மண ராவ் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. உடனடியாக அக்டோபர் 14இல் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ஒன்றுபட்ட ஆந்திரா, ஒடிசா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த மக்கள் யுத்தம் குழுவினரும், ஒன்றுபட்ட பிகாரில் பணியாற்றிவந்த எம்சிசி என்ற மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் கட்சியும், பிகாரில் பணியாற்றிவந்த பார்ட்டி யூனிட்டி குழுவும் இணைந்து இந்த மாவோயிஸ்ட் கட்சியைத் தோழர் கணபதியின் முன்முயற்சியில் ஏற்படுத்தினார்.
தோழர் கணபதி என்ற முப்பளா லக்ஷ்மண ராவ், இன்றைய தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜாகிட்டியால் மாவட்டத்திலிருக்கும் பீர்பூம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர், கொண்டப்பள்ளி சீதாராமையா தலைமையிலான மக்கள் யுத்தம் குழுவில் பணியாற்றி வந்தார்.கொண்டப்பள்ளி சீதாராமையா, 1967இல் மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல்பாரி கிராமத்தில் உருவான நக்சல்பாரி ஆயுத எழுச்சியின் மூலம் 1969இல் ஏப்ரல் 22ஆம் நாளான லெனின் பிறந்த நாளில் பிறந்த, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்ற தோழர் சாரு மஜூம்தார் தலைமையிலான கட்சியிலிருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து, மக்கள் யுத்தம் என்ற குழுவை ஆந்திராவில் முதலில் உருவாக்கினார். அதுவே அன்று, தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் எனப் பல்வேறு மாநிலங்களில் உள்ள புரட்சிகரக் குழுக்களையும் இணைத்துக்கொண்டது.
மக்கள் யுத்தம் குழு என்ற மார்க்சிய லெனினிய அமைப்பில்தான், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.எம்.கோதண்டராமன், மறைந்த தோழர் பெண்ணாடம் கலியபெருமாள், மறைந்த தோழர் தமிழரசன் மற்றும் தோழர்கள் தமிழ்வாணன், சிவலிங்கம், ஏலகிரி ராமர் போன்றோர் பணியாற்றிவந்தனர். அப்போது தமிழ்நாட்டில் அந்தக் குழுவினருக்கு, கூட்டகக் குழு என்று பெயர். அதேநேரம், தமிழ்நாட்டில், தோழர் சாரு மஜூம்தார் வழியை ஏற்றுக்கொண்ட குழுவினரும் மறைந்த தோழர்கள் காரைக்குடி பழனியப்பன், தாத்தா என்ற பாண்டியன், மச்சக்காளை, ராயப்பன் போன்றோர் தலைமையில் செயலாற்றி வந்தனர். அது தவிர, கூட்டகக் குழு அமைப்பிலிருந்து பிரிந்து, மறைந்த தோழர்கள் கண்ணாமணி, ஜெயபால், தனபால் போன்றோரும் தனி அமைப்பாகச் செயல்பட்டு வந்தனர்.
கொண்டப்பள்ளி சீதாராமையாவுடன் கருத்து வேறுபாடு வந்த பிறகு, தோழர் கணபதி என்ற முப்பளா லக்ஷ்மண ராவ், தனது தலைமையில் இருந்த மக்கள் யுத்தம் குழுவை, எம்சிசி, பார்ட்டி யூனிட்டி ஆகிய குழுக்களுடன் இணைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சி கடந்த பதினான்கு ஆண்டுகளில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ஒடிசா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் உத்தரப் பிரதேசம், டெல்லி எனத் தனது செல்வாக்கு மண்டலத்தை விரிவுபடுத்தியது. அப்போது தமிழ்நாட்டில் ஏற்கனவே கொண்டப்பள்ளி சீதாராமையாவுடன் செயல்பட்டுவந்த மேலே குறிப்பிட்ட தோழர்கள், புதிய மாவோயிஸ்ட் கட்சியில் சேராமல் தனித்தனியாகப் பிரிந்து செயல்படத் தொடங்கினர்.
போர்க் குணம் மிக்க படையினர்
ஆனாலும், தோழர் கணபதி தலைமையிலான மாவோயிஸ்ட் கட்சி, இந்தியாவின் இதயப் பகுதியில், ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. மாவோவின் ராணுவக் கோட்பாடுகளின், சிந்தனை வழியில், கெரில்லா போராட்டம், நிலையான படை, சீரான ராணுவம் ஆகியவற்றை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறது. கட்சியின் தலைமையில் சிஎம்சி என்ற மத்திய ராணுவ ஆணையம் ஒன்றையும் உருவாக்கி வைத்துள்ளது. மக்கள் விடுதலை கெரில்லா படை என்ற பெயரில், பிஎல்ஜிஏ என்று அடிப்படை உழைக்கும் மக்களான, பழங்குடிகளையம், வனவாசிகளையும் இணைத்துக்கொண்டு இந்திய அரசுக்கு எதிராகப் போரில் ஈடுபடுகிறது.
அத்தகைய போர்க் குணம் மிக்க, மக்கள் விடுதலை கெரில்லா படை, மாவோயிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவக் கமிஷன் தலைமையில் செயல்படுகிறது. அந்த மத்திய ராணுவக் கமிஷன் தலைவராக இருப்பவர்தான் 63 வயதுள்ள பசவராஜ் என அழைக்கப்படும் தோழர் நம்பள்ள கேசவராவ். இவர் இன்றைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜியான்னபேட் கிராமத்தைச் சேர்ந்தவர்.
தோழர் பசவராஜ், மாவோயிஸ்ட் கட்சியின் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலான ராணுவ நடவடிக்கைகளில், இந்தியத் துணை ராணுவப் படையின் மீதான, ஆம்புஷ் என்ற நகர்ந்து செல்லும் படையின் மேலான தாக்குதல்களில், கடும் சேதங்களை ஏற்படுத்தும் வண்ணம் திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்தியவர் என்ற பெயர் பெற்றவர். அத்தகைய தோழர் பசவராஜ், இப்போது, மாவோயிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு எடுத்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 71 வயதான தோழர் கணபதி, வயது மூப்பின் காரணமாக பொதுச் செயலாளர் பொறுப்பைத் தோழர் பசவராஜ் வசம் கொடுத்துவிட்டதாகவும் அவை சித்திரிக்கின்றன.
யார் தந்த செய்தி?
இச்செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு, இந்தச் செய்திகளைக் கொடுத்தவர் என்று சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரணடைந்த ஒரு மாவோயிஸ்ட் அடையாளம் காட்டப்படுகிறார். அவரும் தன்னிடம் ஒரு தலைமறைவுத் தோழர் கூறினார் என்றுதான் சொல்லியுள்ளார். ஆகவே இது உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்திதான். அதிகாரபூர்வமாக மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து,அறிவிக்கப்பட்ட ஒரு செய்தி அல்ல. மாவோயிஸ்ட் கட்சி தங்களது அதிகாரபூர்வமான செய்திகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள். அவ்வாறு அவர்களிடமிருந்து எந்தச் செய்தியும் இதுவரை வரவில்லை.
ஆனாலும், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூடியபோது இவ்வாறு முக்கியப் பொறுப்பை மாற்றிக் கொடுப்பது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது என்று தெரிகிறது. ஆனாலும் முடிவு எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் இருக்கும் 33 உறுப்பினர்களில் 17 தோழர்கள், தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். நான்கு பெண் தோழர்களும் மத்தியக் குழுவில் இருக்கிறார்கள். அது தவிர, ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடிச் சமூகத்தின் தோழர்களும் மத்தியக் குழுவில் பங்கு கொண்டுள்ளனர்.ஆகவே, அவர்கள் கூடி எடுக்கின்ற முடிவுதான் கட்சியின் முடிவாக இருக்க முடியும்.
பசவராஜின் உறுதியான தலைமை
தோழர் பசவராஜ், 1980ஆம் ஆண்டு, ஆர்எஸ்யு என்ற, மக்கள் யுத்தக் குழுவின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் சங்கம் பொறுப்பாளராக இருக்கும்போது, ஆர்எஸ்எஸ் உடன் நடந்த மோதலில், தலைமறைவானவர் என்கிறது அந்தச் செய்தி. தோழர் பசவராஜ், வாரங்கல் நகரில் ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜ் எனச் சொல்லப்படும் பிராந்தியப் பொறியியல் கல்லூரியில் பயின்றவர். எழுபதின் பத்தாண்டுகளில் ஆந்திர மாநில, வாரங்கல் ஆர்ஈசி (ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜ்) உட்பட இந்தியாவின் எல்லா ஆர்ஈசிக்களும் மாவோயிஸ்ட் கருத்துகளின் கோட்டைகளாக இருந்தன.பொறியியல் படிப்பு படித்த மாணவர்கள், தங்களது படிப்பின் அடிப்படையில்,இந்தியாவில் தொழில்மயப்படுத்தல் நடக்கவில்லையே என ஏங்கித் தவித்தபோது, அதற்குத் தடையாக இருக்கும் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற புரட்சிகரக் கருத்தை உள்வாங்கித் தோழர் சாரு மஜூம்தாரின் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கிய காலமாக அது இருந்தது.அப்படித் தனது இளமைக் காலத்திலேயே ஆழமான கருத்தியல் தளத்தில் கருக்கொண்ட புரட்சிகரக் கொள்கைகள்தான் தோழர் பசவராஜை இன்று வரை உறுதிப்படுத்தி வைத்துள்ளது.
இதற்கிடையே, அரக்கு சட்டமன்ற உறுப்பினரான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான கிடாரி சர்வேஸ்வர் ராவ் செப்டம்பர் மாதம் 23ஆம் நாள் கொல்லப்பட்டதையும், பசவராஜ் தலைமை எடுத்ததையும் ஊடகங்கள் முடிச்சு போடுகின்றன. பல்வேறு வகையான ராணுவத் தந்திரங்களை பசவராஜ் கைக்கொள்கிறார் என அவை விவரிக்கின்றன. ஆந்திரா - ஒடிசா எல்லைப் பகுதிகளில், பசவராஜ் என்ற தோழர் கேசவராவ் கடுமையாகப் பணியாற்றியுள்ளார் எனவும் அவை சித்திரிக்கின்றன. அதேசமயம் வடக்கு தெலங்கானா பிராந்தியக் குழு பொறுப்பாளர் தோழர் பிரசாத், தந்திரமான பின்வாங்கல் என்ற யுத்த தந்திரத்தைக் கடைப்பிடித்துவருகிறார். அதனாலேயே, தற்போதைக்கு அந்தப் பகுதிகளில், தாக்குதல்கள் இல்லை. இத்தகைய நிலைப்பாட்டை தோழர் பசவராஜ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.
மொத்தத்தில் ஊடகங்களின் பார்வையில், தோழர் கணபதி அதிகமாகக் கருத்தியல் சார்ந்து இருந்தவர் என்றும், தோழர் பசவராஜ் அதிகமாக ராணுவத் தந்திரம் சார்ந்து இருப்பவர் என்றும் ஒரு விளக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியில் எப்போதுமே, மத்தியக் குழுவும், அதற்கு மேலே உள்ள பொலிட் பீரோ என்ற அரசியாக தலைமைக்கு குழுவும், அனைத்திற்கும் மேலே உள்ள கட்சிக் காங்கிரஸ் என்ற பொதுக் குழுவும்தான் கொள்கை முடிவுகளை எடுக்கும் என்பதை ஏனோ இவர்கள் அறிந்திருக்கவில்லை.
இப்போது சத்தீஸ்கரிலும் தெலங்கானாவிலும் நடைபெற இருக்கும் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் இந்த மாவோயிஸ்ட் கட்சியின் செயல் தந்திரங்கள் எத்தகைய தாக்கங்களைச் செலுத்தும் என்றும் பேசிவருகிறார்கள். கணிசமானவர்கள் வெளியே வந்து தேர்தலில் நடுவண் அரசை ஆளும் மதவாதக் கட்சிக்கு எதிராக வேலை செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் சில அவதானிகளிடம் இருக்கிறது. சமீபத்தில், சத்தீஸ்கரில், மாயாவதி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்று கூறியது இவர்களை இப்படிச் சிந்திக்க வைக்கிறது. ஆனாலும், மாவோயிஸ்ட்டுகள் மத்தியில், தற்போது செயல்தந்திரமாக, நடுவண் மதவாத ஆட்சிக்கு எதிராகப் பரந்த ஐக்கிய முன்னணியை ஜனநாயக ரீதியாகக் கட்டமைக்க வேண்டும் என்ற கருத்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment