சிறப்புச் செய்தி: உதயநிதி சொன்னது சரிதானா?
டி.எஸ்.எஸ்.மணி
நவம்பர் 21 சனிக் கிழமை அமித் ஷா சென்னை வந்த நாள். அன்று உதயநிதி, திருவாரூரில் இருந்தார். அமித் ஷா தமிழக முதல்வருடன் சென்னை கலைவாணர் அரங்கில் அரசு விழாவில் கலந்து கொண்டார். அரசு விழாவிலே முதல்வரும், துணை முதல்வரும் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவித்தார்கள்.
அதற்கு சில வாரங்கள் முன்பாக அந்தக் கூட்டணி தொடருமா என்பது குறித்து ஊடகங்கள் யூகங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தன. அதற்கான காரணங்களாக பாஜக நடத்தும் வேல் யாத்திரையும், அதற்கு அதிமுக அரசு அனுமதி அளிக்காததும் கூறப்பட்டது. எனினும், அது சட்டம்--ஒழுங்கு சம்பந்தப்பட்ட விஷயம். அனுமதி கொடுத்தும் கொடுக்காது இருந்ததுமாக வேல் யாத்திரை செயல்பாடுகள் பார்க்கப்பட்டன.
வேல் யாத்திரை ஒவ்வொரு கோவில் வரை அனுமதிக்கப்படும். பாஜக மாநிலத் தலைவரின் வேல் யாத்திரைக்கு விளம்பரம் தருவதற்கு மட்டும் தினசரி வாய்ப்பு கொடுத்து வந்ததாகவும் பேசப்பட்டன. அப்படிப் பேசியது கூட பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன்தான். பாஜக மாநிலத் தலைவர் முருகனுக்கு கொடுக்கப்படும் விளம்பரம் பிடிக்காமல் கணேசன் பேசினார் என்று நினைத்து விடாதீர்கள். அவர் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் சொந்த ஊர்க்காரர் என்பதாலும், நண்பர் என்பதாலும், அதிமுக- பாஜக உறவில் உடன்பாடு இல்லாமல் பேசினார் என்றும் நினைத்து விடாதீர்கள்.
விளம்பரத்திற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், வேல் யாத்திரை மத மோதலை உருவாக்கும் என்றும், சாதி, மத மோதல்களை தமிழக அதிமுக (அம்மா) அரசு அனுமதிக்காது என்றும் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக கூறியதும், அதிமுகவின் அதிகார பூர்வ ஏடான நமது அம்மாவில் எழுதியதும், இரு கட்சிகளுக்கும் இருக்கும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் என்று ஊடகங்களுக்கு தீனியாகின. கொள்கை ரீதியாக வேல் யாத்திரைக்கு எதிராக அதிமுக இருப்பது அறுதியிடப்பட்டதால், அந்த கூட்டணி அமையுமா என்ற சந்தேகத்தை ஊடகங்கள் கிளப்பின.
ஏற்கனவே மத்திய அரசு, தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதிகளை கொடுக்காமல் இழுத்தடிப்பதால் அப்படி ஒரு முரண்பாடு பேசப்பட்டது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு கேட்டு கொடுக்காததாலும் அந்த இடைவெளி பேசப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கு இட ஒதுக்கீடு அறிவித்து, அதை நிர்ப்பந்தம் செய்து பழனிச்சாமி அரசு பெற்றதாலும் அப்படி பேசப்பட்டது. மருத்துவ மேற்படிப்புக்கு தமிழக ஒதுக்கீடு என்பதற்கு மத்திய அரசின் கறாரான மறுப்பை எதிர்த்து, ஒதுக்கீட்டிற்கான அரசாணையை அம்மா அரசு அறிவித்ததாலும் அப்படி முரண்பாடு இரு கட்சிகளுக்கும் இடையில் அறியப்பட்டது. ஏழு பேர் விடுதலையில் ஒப்புதல் கிடைக்காமல் இழுத்தடிப்பதால் அதுவும் காரணமாக புரியப்பட்டது.
இத்தனையும் சேர்ந்துதான் காட்சி ஊடகங்களின் பேச்சுக் காட்சிகளில் அதிமுக-பாஜக உறவில் விரிசல் என்று விவாதங்கள் நிரம்பி வழிந்தன. அதனால் தான் அமித் ஷா வந்திருந்தபோது, விழா மேடையிலிருந்தே அறிவிக்கப்பட்ட அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்ற செய்தி, ஊடகங்களால் பெரிதும் அறிவிக்கப்பட்டன.
அந்த அறிவிப்பு பற்றி உடனடியாக எதிர்வினை ஆற்றியவர், திருவாரூர் பகுதியில் திமுகவின் பரப்புரையைத் தொடக்கி வைக்கச் சென்றவரான திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். தான் கைது செய்யப்பட்டதற்காக முதல்வர் மீது கேள்விக் கணைகளால் கோபப்பட்ட உதயநிதி, அதேசமயம் ஒரு மகிழ்ச்சி செய்தி என்று கூறினார். பாஜக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி செய்தி என்றார். அது நமக்கு எளிதாக வெற்றி வாய்ப்பைக் கொடுக்கும் என்றும் கூறினார்.
அதிமுகவோ, திமுகவோ போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு முறையும் சிறுபான்மை மக்களான முஸ்லீம், கிறிஸ்தவர் வாக்குகளை அள்ளுவதில் அனுபவம் உள்ளவர்கள். யார் அதிகமாக சிறுபான்மை மதத்தவர்களின் வாக்குகளை வாங்குவது என்ற போட்டி, இந்த இரண்டு கட்சிகளுக்கும் எப்போதும் உண்டு. அந்தப் போட்டியில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு அந்த சிறுபான்மை வாக்குகள் விழுவதில்லை என்பதும் தமிழ் நாட்டில் இருக்கும் அழுத்தமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே, உதயநிதியின் கருத்து வெளிப்பட்டது.
அப்படியானால் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் கூட்டணி அமையாவிட்டால், பாஜக அல்லாத ஒரு கூட்டணியை அதிமுக கட்டுமானால், சிறிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு செல்லவும் ஒரு வாய்ப்பு உள்ளது. இதனால் அதிமுகவை எதிர்கொள்வதில் திமுகவிற்கு சவாலான சூழல் வந்துவிடும் என்பதாக உதயநிதி மறைபொருளாக கூறுவதாக எடுத்துக் கொள்ளலாமா?
சிறிய கட்சிகளுக்கு பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேரும்போது, எத்தனை தொகுதிகள் என்பதிலும், எவ்வளவு நிதி உதவி என்பதிலும், பேரம் நடைபெறும் என்பது வெளிப்படை. அந்தப் பேரம் படியாத நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜக அல்லாத அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கு ஒரு வாய்ப்பு உருவாகி விடும். அத்தகைய வாய்ப்பு, பா.ஜ.க.-அதிமுக கூட்டணி உறுதியாகும்போது அடைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிறுபான்மை மக்களது வாக்குகளும், பாஜக இருக்கும் கூட்டணிக்கு எதிராக இருக்கும் ஒரே கூட்டணியான திமுக கூட்டணிக்குத்தான் வந்து விழும் என்பது சாதாரண கணக்கு.
இந்த கணக்கின் அடிப்படையிலேயே உதயநிதி அப்படி தனது மகிழ்ச்சியையும், எளிதாக வெற்றி பெறலாம் என்ற கருத்தையும் கூறியுள்ளார். ஆனால் அது அப்படித்தான் நடக்குமா? அதிமுகவும், பாஜகவும் கூட்டணி சேர்ந்து உதயநிதி கணக்கை உண்மையாக்குவார்களா? கூட்டணி தொடரும் என்றுதானே முதல்வர் கூறியுள்ளார். அத்தகைய வார்த்தைகளை ஆறு மாதமாக சொல்லி வருகிறார்களே? அதிமுக தொண்டர்கள் மத்தியில் அப்படி ஒரு கூட்டணி வேப்பங்காயாக பார்க்கப்படுவதாக, ஊடகங்கள் ஆய்வு எழுதுகிறார்களே? அதிமுக கட்சியின் பொதுக் குழு முடிவு செய்யும் என்றும் இடையில் சொல்லியிருக்கிறார்களே? பாஜகவும் தனித்து நின்று தனது பலத்தை கணிக்க விரும்புவதாகவும் செய்திகள் வருகின்றதே? இந்துக்கள் வாக்கு என்று ஒரு அடித்தளத்தை உருவாக்க முடியும் என்ற எண்ணம் பாஜகவில் சிலருக்கு அழுத்தமாக இருப்பதாகத் தெரிகிறதே? தேர்தல் நெருங்கும்போது, இரு கட்சிகளும் பிரிந்து சென்று உதயநிதியின் எதிர்பார்ப்பை பொய்யாக்குவார்களா
இல்லை உதயநிதியின் மகிழ்ச்சி உண்மையாகி விடுமா?
No comments:
Post a Comment