Tuesday, May 4, 2021

மூன்று மாநில மக்களும் மறுத்தது எதை?

 மின்னம்பலம் மின்னம்பலம்

மாலை 7 -செவ்வாய் 4 மே 2021

மூன்று மாநில மக்களும் மறுத்தது எதை?

மூன்று மாநில  மக்களும் மறுத்தது எதை?

டி.எஸ்.எஸ். மணி

ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. அதில் மூன்று மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகியவை முறையே, பா.ஜ.க. எதிர்ப்பு, நடுவணரசு எதிர்ப்பு என்பதை முதன்மை நோக்காக தங்கள் பரப்புரையில் வைத்திருந்தார்கள்.

தங்கள் மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும்? யார் வரக்கூடாது? என்பதற்கான தரவுகளையும் பரப்புரையில் கொண்டு சென்றார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், ‘பா.ஜ.க. வின் அபாயத்தைச் சுட்டிக் காட்டுவதை’ தூக்கலாகச்செய்தார்கள் என்பதை மறுக்க முடியுமா? அதற்கான கூட்டணியையும் கட்டித்தானே, தேர்தலில் போட்டியிட்டார்கள்.

ஆகவே இந்த மூன்று மாநிலங்களின் வெற்றி என்பதை, ‘மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான, பா.ஜ.க.விற்கு எதிரான வெற்றி’ என்பதாகத்தானே கொள்ள முடியும்? பா.ஜ.க.ஒரு அகில இந்திய {தேசிய}க் கட்சி என்பதாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியுமா? நடுவண் அரசில் ஏழு ஆண்டுகளாக ஆளும் ஒரு கட்சி என்றும் பார்க்க வேண்டுமல்லவா? பா.ஜ.க. வை ஒரு மதவாதக் கட்சி என்று மட்டும் பார்க்க முடியுமா? கார்ப்பரேட் கட்டுப்பாட்டை இந்த நாட்டின் மீதும், மக்கள் மீதும், திணிக்கும் கட்சி என்றும் பார்க்க வேண்டும் அல்லவா?

அப்படிப்பட்ட ஒரு கட்சி எதிர்க் கட்சியாக இருந்தால் கதை வேறு. அவ்வப்போது தேசியம், தேசப்பற்று பேசுவதற்காக, ’சுதேஷி, விதேஷி’ என்று கூறிக் கொண்டு, அந்நிய நாட்டு நிர்ப்பந்தங்களை எதிர்ப்பார்கள். அப்படிப்பட்ட கட்சி,. மாநிலத்தை ஆளும் கட்சியாக இருந்தால் கதை வேறு. அவ்வப்போது, மத்திய அரசின் அழுத்தத்தை, மாநில உரிமை பறிப்பை எதிர்ப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு கட்சி மத்தியில் ஆட்சியில் ஐந்து ஆண்டு மட்டுமல்ல, அதற்குப் பிறகும் அதிகப் பெரும்பான்மையுடன் ஆள வந்த பிறகு எப்படி உள்ளே இருக்கும், ‘சுய ரூபத்தை’ காண்பிக்காமல் இருப்பார்கள்? மதவாதத்தை சட்டபூர்வமாக செயல்படுத்தாமல் இருப்பார்கள்? அதற்காக, சி.ஏ.ஏ.போன்ற சட்டங்களைக் கொண்டு வராமல் இருப்பார்கள்? எப்படி விதேஷியான, அந்நிய நேரடி மூலதனத்தை திறந்து விடாமல் இருப்பார்கள்? எப்படிப்பட்ட ஒரு கட்சி, இந்திய நாட்டின் முதுகெலும்பான விவசாயப் பொருளாதாரத்தின், சுய சார்புத்தன்மையை உடைக்க, அதை கார்ப்பரேட் சார்புக்குத் தள்ளி விடும் மூன்று சட்டங்களைக் கொண்டு வராமல் இருப்பார்கள்?

ஆகவேதான் இந்த தேர்தல் முடிவை ஒரு ஆங்கில ஏடு, ‘காவி வளைவு வீழ்த்தப்பட்டது ( Saffron Curve Flattened)’ என்று கொரோனா செய்திகளின் மொழிநடையிலேயே, தலைப்பு போட்டுள்ளது.

ஆகவே, நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவுகள், மூன்று மாநிலங்களில், பா.ஜ.க.வும், அதனுடன் கூட்டு சேர்ந்திருந்தவர்களும் வெற்றி பெறவில்லை என்ற செய்தியைக் கூறும்போது, அதில், ‘ஆட்சிக்கு எதிரான மனோ நிலை ( Anti Incombebcy)’ என்பது, ‘மத்திய ஆட்சிக்கு எதிரான மனோ நிலை’ என்பதாகத்தான் முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும். ஏன் என்றால், கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும், ஆட்சியில் இருந்த சி.பி.எம்., மற்றும் மம்தா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதைக் காண முடிகிறது. அவர்களது வெற்றி, மாநில உரிமைகளுக்காகவும், அதை பறிக்க முயலும் மத்திய பா.ஜ.க.வின் ஆட்சிக்கு எதிராகவும், சிறுபான்மை மத நம்பிக்கையுள்ள மக்களின் பாதுகாப்பிற்காகவும், தேர்தல் களத்தில் நிற்கும் காங்கிரஸ் கூட்டணியா? அல்லது தாங்களா? என்ற கேள்விக்கு, மக்கள் அளித்த பதிலாகப் பார்க்கப்பட வேண்டும்.

அதாவது, பா.ஜ.க.வை எதிர்க்க, வழமையாக காங்கிரசிற்கு வாக்களித்து வந்த கிறித்துவர்கள் உட்பட,கேரள மக்கள் இந்த முறை சி.பி.எம். ஐ தேர்வு செய்ததும், மேற்கு வங்க மக்கள், ‘காங்கிரஸ் + சி.பி.எம். + சித்திக் கட்சி கூட்டணி’யை விட, பாஜக எதிர்ப்பில், மம்தா கட்சியையே மீண்டும் தேர்ந்தெடுப்பதில் கவனத்தைக் காட்டியுள்ளதும் கவனிக்கப்பட வேண்டும்.

அதனால்தான், மேற்கு வங்கத்தில்,மூன்றாவது கூட்டணிக்கு என்று கணிக்கப்பட்ட தொகுதிகளிலும், மக்கள் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையே தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதனால்தான், காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. அதே சமயம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 217 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆகவே இந்த தேர்தல் முடிவுகளை, ‘மத்திய பா.ஜ.க.ஆட்சிக்கு எதிரான அலை’ என்றே எடுத்துக் கொள்ளலாம். அதனால்தான், தி.மு.க.வும், தனது தேர்தல் பரப்புரையில், பழனிச்சாமி அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை விட, ‘ பா.ஜ.க.வின் எடுபிடி அரசு’ என்பதையும், நடுவண் அரசின் அத்து மீறல்களையும் பட்டியலிட்டு, அதற்கும் மேலாக, ஜெயலலிதா ஏற்காத மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோத கொள்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்திய பழனிச்சாமி அரசு என்பதையும் சேர்த்தே அம்பலப்படுத்தி வந்தனர்.

தமிழக மக்களுக்கு எதிராக, பழனிச்சாமி அரசு செயல்பட்டது என்பதை ஆதாரபூர்வமாகக் கூறும்போதுகூட, திமுக கூட்டணியின் பரப்புரைகளில், நாடாளுமன்றத்தில் அதிமுக வின் " முத்தலாக் ஆதரவு வாக்களிப்பு, சி.ஏ.ஏ. ஆதரவு வாக்களிப்பு, மூன்று விவசாயச் சட்ட ஆதரவு வாக்களிப்பு, எட்டு வழிச்சாலை நிலப்பறிப்பு, நீட் தேர்வு அமலாக்கல், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற நடுவண் அரசின் திட்டங்களுக்கு சரண்டைந்தவற்றையே முதன்மைப்படுத்தினர்.

பொதுமக்களுக்கு குறிப்பாக, மோடி ‘காட்சி ஊடகங்களில்’ தோன்றும் போதெல்லாம் கோபம் வருவதையும், குறிப்பாக பெண்கள் மத்தியில் இருந்த அப்படிப்பட்ட வெறுப்பையும் நாம் கண்ணுற்றோம். இவையெல்லாம் வாக்குகளாக மாறும் என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபித்துள்ளது. மவுனமாகவே இருந்து மக்களவை தேர்தலில், தமிழக மக்கள் எப்படி 39 இடங்களை திமுக கூட்டணிக்கு கொடுத்தார்களோ, அதேபோல, இப்போதும் மவுனமாகவே இருந்து,திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

மக்கள் கொடுத்திருக்கும் இந்த, ‘மத்திய பா.ஜ.க.ஆட்சிக்கு எதிரான வாக்குகளை’ மூன்று மாநிலங்களும் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பதே எதிர்காலம் பற்றிய கேள்வி

No comments:

Post a Comment