Monday, December 21, 2009

விவசாயத்துறை அமைச்சர் எதைச் சாதித்தார்?

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர். இந்த கட்சி, இந்திய தேசிய காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, மத்திய அரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆண்டு கொண்டு வருகிறது. இவர்களது கட்சியின் அகில இந்திய மாநாட்டில், பேசும் போது, சரத்பவார் இந்தியாவில் நிலவி வரும் விலைவாசி உயர்வு பற்றி அக்கறையுடன் பேசியுள்ளார். அத்தியாவசிய உணவு பொருட்களில் விலை உயர்வு என்பது, சாதாரண மக்களை தாக்கி வருகிறது என்ற உண்மையை அப்போது மொழிந்துள்ளார். இந்த உண்மை நிலவரத்தை மாற்றி அமைப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாடு எதிர்கொண்டு வரும் பெரும் வறட்சியை சமாளித்து வருவதாகவும், பெருமையாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்திய அரசு தான் எடுக்கின்ற முன்னேற்றமான நடவடிக்கைகளின் மூலம், பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்கு குறைத்திருக்கிறோம் என்றும் பீற்றிக்கொண்டுள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு கட்டாயத்தேவை என்பதை அந்த மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்திருப்பதாகவும், செய்து கொண்டிருப்பதாகவும், மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டியதுதான் பாக்கி என்பதாகவும் அமைச்சர் சரத்பவார் புரிய வைத்துள்ளார். இதுதான் உண்மையா என்பதையும், உண்மை நிலை என்ன என்பதையும் விரிவாக பார்க்க வேண்டியிருக்கிறது. 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள் நள்ளிரவில் சுதந்திரம் வாங்கிய பிற்பாடு, இந்திய ஆட்சியாளர்கள் விவசாயத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் என்ன என்பது பார்க்கப்படவேண்டும். விவசாயத்தை வளர்ப்பதற்கான திட்டங்களாக, 5ஆண்டு திட்டங்களும், கட்டப்பட்ட அணைக்கட்டுகளும், அன்றைய கால முயற்சிகளாக இருந்தன. அதன் பிறகு தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அமைச்சர்களும், ஆட்சியாளர்களும், விவசாயத்திற்கு எந்த அளவுக்கு கவனம் செலுத்தினார்கள் என்பதை கணக்கில் கொண்டுதான் விவசாயத்துறை அமைச்சரின் வாதங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளமுடியும். அத்தியாவசிய உணவுப் பொருள்கள் என்று அமைச்சர் சரத்பவார் கூறியிருப்பது, சமவெளிப்பகுதிகளில் விவசாயத்தின் மூலம் கிடைக்கின்ற விளை பொருள்களையும், மலைப்பகுதிகளில் இயற்கையாக உருவாகின்ற பழவகைகள் மற்றும் தேன் போன்ற இயற்கை பொருட்களையும், கடல் பகுதிகளில் கிடைக்கின்ற மீன், நண்டு, மற்ற கடல் வாழ் உயிரினங்களையும் மொத்தமாக குறிக்கிறது. இன்னமும் குறிப்பாக சொல்லப்போனால், கடல் வாழ் உயிரினங்களை பிடித்துக் கொண்டு வருகின்ற மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கின்ற மீன்வளத்துறையும், இவரது கைகளில் இருக்கின்ற விவசாயத்துறைக்கு உள்ளேதான் அடக்கம். அதாவது மீன்வளத்துறைக்காக மாநிலங்களில் இருப்பது போல, தனியானதொரு அமைச்சகம் மத்திய அரசில் இல்லை. இதன் மூலம் வேறுபட்ட உற்பத்தி முறைகளைக் கொண்ட, உணவுப் பொருட்களுக்கு அவற்றின் உற்பத்தியை ஒழுங்குபடுத்த பிரத்யேகமான ஆய்வுடனும், பார்வையுடனும், அக்கறையுடனும் செயல்பட வேண்டிய பிரத்யேக அமைச்சகத்தை ஏற்படுத்தாமல் அனைத்தையும் ஒரே துறையின் கீழ் மத்திய அரசு வைத்திருப்பதனால் கூட, வளர்ச்சிக்கு குந்தகமான நிலைமை உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. விலை உயர்வால் அவதிப்படுகின்ற பொதுமக்களைப்பற்றி பவார் கவலைப்பட்டிருக்கிறார். அதுவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறிப்பிட்டு கவலைப் பட்டிருக்கிறார். அப்படி அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மக்களை சென்றடையாவிட்டால், மக்கள் நிலைமை பட்டினியில் தான் சென்று முடியும். அப்படிப்பட்ட பட்டினி சூழல் எத்தனை மக்களை பாதித்திருக்கிறது என்று பட்டியல் கேட்போம் என்றால், அதற்கும் அரசு ஒரு புள்ளி விவரத்தை தருகிறது. அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான புள்ளி விவரப்படி, இந்தியாவில் இப்போது 35 கோடி மக்கள் வறுமையின் எல்லைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். வறுமையின் எல்லைக் கோடு என்பதை அரசாங்கம் ஒரு அளவுக்குறியோடு வரையறுத்துள்ளது. கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.12 வருமானம் பெறக்கூடிய மக்களும், நகர்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.18 வருமானம் பெறக்கூடிய மக்களும், வறுமைக்கோட்டின் எல்லைக்கு கீழ் உள்ளவர்கள் என்பதாக அரசாங்கம் வரையறுத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பெண்களின் மக்கள் தொகையில் 50 விழுக்காடுவே எழுத்தறிவு இன்றி இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை அரசாங்கமே தருகிறது. பெண் சிசுக்கள் பல இடங்களில் கொல்லப்படுவதால், பல மாநிலங்களில் ஆண் பெண் விகிதாச்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் பல மாநிலங்களிலிருந்தும், அதிகமான எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருப்பதால், இப்போது அதை தொடர்ந்து சொல்வதற்கே ஆளில்லாமல் ஆகிவிட்டது. பல லட்சம் பள்ளிக் குழந்தைகள், பள்ளிப்படிப்பை முடிக்கமுடியாத நிலையில் வெளியேறி விட்டனர். அதில் பல குழந்தைகள் தெருவோர குழந்தைகள் பட்டியலில் சேர்ந்து விட்டனர். அதில் பலரும் 10 வயதுக்கு முன்பே, கடுமையான உழைப்பில் ஈடுபடுத்த வைக்கப்படுகின்றனர். அதாவது குழந்தைத் தொழிலாளர்களாக நாடெங்கிலும் அவதிப் பட்டுவருகின்றனர். இப்படிப்பட்ட அனைத்துப் பிரச்சனைக்கும் காரணமாக இருப்பது வறுமை, வேலையின்மை ஆகியவை. பட்டினி என்பது இந்த நாட்டு மக்களுடைய இணை பிரியா சொத்தாக மாறியிருக்கிறது. அனைத்திற்கும் பொறுப்பெடுக்க அமைச்சர் சரத்பவாரின் விவசாய அமைச்சகம் தயாராக இருக்கிறதா? அமைச்சர் கூறும்போது, இதுவரை இல்லாத அளவு எழுந்துள்ள வறட்சி நிலைமை பற்றிக் கூறுகிறார். அதற்கான காரணத்தை அடுக்கும் போது, மழை பொய்த்துவிட்டதால் நாட்டின் பல்வேறு பாகங்களில் இந்த முறை வறட்சி ஏற்பட்டுள்ளது என்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இதே கூற்றைத்தான் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும், தான் ஆட்சிப் பொறுப்பு எடுத்தவுடனேயே கூறி, அதற்காக பல்வேறு அகில இந்திய மாநாடுகளை நடத்தி, அதெற்கெல்லாம் தீர்வு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்தான் என்று கூறினார். அதன் பெயரையும் கூட, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டம் என்பதாக பெயர் மாற்றம் செய்து, அதன் மூலம் ஆட்சியாளர்கள் அகமகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படியிருந்தாலும், மக்களின் பிரச்சனை மட்டும் தீரவில்லை என்பதை, அவர்களது உரைகளே அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அமைச்சர் சரத்பவார் பொறுப்பில் உள்ள அமைச்சகத்திலிருக்கும், மீன்வளத்துறை இப்போது மீனவ மக்களுக்கு முன்னால், பெரும் சவாலை வைத்துள்ளது. 2009ம் ஆண்டின் மீன்பிடி தொழில் ஒழுங்கு படுத்தல் மசோதா என்ற ஒன்றை கொண்டு வந்திருக்கின்ற அந்த துறை, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்களாலும், வெவ்வேறு கட்சிகளாலும், அந்த மசோதாவுக்கு எதிரான கருத்தையும் பெற்றுள்ளது. அப்படி இருந்தும் கூட 12 கடல் மைல்களைத் தாண்டி, பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என்ற இந்த புதிய வரைவு மசோதா, நாடெங்கிலும் சீக்கிரத்தில் கலந்துரையாடலுக்கு அனுப்பப்படும் என்ற செய்தியை மௌனமாக மத்திய அரசு தருகின்றது. 12 நாட்டிங்கல் என்ற கடல் மைல்களை தாண்டி உள்ள பகுதியை முழுமையான பொருளாதார மண்டலம் என்பதாக இந்திய அரசு அழைக்கிறது. அப்படிப்பட்ட பொருளாதார மண்டலத்தில் மீன் பிடித்தல் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் முன்வைக்கின்ற நகல்தான் அது என்பது அவர்களது விளக்கம். இப்போது எதிர்ப்பு எல்லா திசையிலிருந்தும் எழுந்து வந்ததால், மாநில அரசாங்கங்கள் உட்பட, மீனவ மக்களையும் சேர்த்து, இதன்மீதான கலந்தா லோசனைகளை விரிவாக நடத்தப்போகிறோம் என்றும், அதற்கு பிறகே இந்த மசோதாவை சட்டமாக்கும் முயற்சிக்கு முன்செல்வோம் என்றும், இந்த துறை கூறுகிறது. இந்தியா மீன்களையும், மீன்களிலிருந்து உருவாக்கப்படும் உற்பத்தி பொருள்களையும் ஏற்றுமதி செய்வதில் முதன்மையான நாடாக, உலகத்தில் நிற்கிறது. அதை இறக்குமதி செய்யும் நாடுகளில், ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட உலகின் பலநாடுகள், சட்ட விரோதமான மீன் பிடித்தல், ஒழுங்கு படுத்தப்படாத மீன் பிடித்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒழுங்கு படுத்தலுக்கான ஒரு சட்டத்தை உருவாக்காமல், அத்தகைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்ற நிலையில், இத்தகைய சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் பாரம்பரிய மீனவ சமூகத்தை, இத்தகைய மசோதாக்கள் எந்தளவு திவாலா ஆக்கிவிடும் என்ற சமூகப்புரிதல் அரசு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கு, மத்திய அரசு பொறுப்பு எடுப்பதுதான் முறையே தவிர, மாநில அரசுகள் மீது பொறுப்பை தள்ளி விடும் முறை, ஒரு பொறுப்பற்ற தன்மை கொண்டதே.

Sunday, December 20, 2009

காடுகளிலிருந்து தலைநகர் நோக்கி...

டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் அவர்கள் கூடினார்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் கூடிய அந்த கூட்டத்தில் பெருவாரியானவர்கள் ஆதிவாசிகள். ஒரிசாவிலிருந்து பலர் வந்திருந்தார்கள். பஞ்சாபிலிருந்து அந்தப் பேரணிக்கு அணி திரண்டவர்கள் எண்ணிக்கை அதிகம். தமிழ்நாட்டிலிருந்தும் ஆதிவாசிகள் அணிதிரண்டு வந்தார்கள். நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி புறப்பட்டது. ஜந்தர்மந்தர் மையத்திலேயே வழக்கமாக டெல்லியில் எடுக்கப்படும் பேரணிகள் எல்லாம் தடுக்கப்படுவது போல, அவர்களும் தடுக்கப்பட்டார்கள். அவர்களது பேரணி முக்கியமாக சத்திஸ்கர் மாநிலத்தில், துணை ராணுவமும், காவல்துறையும், சல்வாஜுடும் என்ற காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையும் இணைந்து கொண்டு, ஆதிவாசி மக்களை அடிப்பதையும், உதைப்பதையும், கிராமங்களில் புகுந்து படுகொலை செய்வதையும், முழக்கங்களாகவும், கோரிக்கைகளாகவும் உயர்த்தி பிடித்து, அந்த பேரணி நடத்தப்பட்டது. நடத்தப்பட்ட பேரணியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும், டெல்லிப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்டவர்களில் சத்திஸ்கர் மாநிலத்திலிருந்தும், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்தும் வந்திருந்த ஆதிவாசி மக்களின் பின்னணி கொண்ட மாணவர்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் வினவும் போது, அந்த இரு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கின்ற காவல்துறையின் அடக்குமுறை பற்றி விரிவாக எடுத்துக்கூறினர். ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த பெண்களை இந்திய அரசப்படையினர் எத்தனை தூரம் பாலியல் பலாத்காரங்கள் செய்து வருகின்றார்கள் என்ற விவரங்களையும் ஊடகயியலாளர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார்கள். சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து, 10,000 ஆதிவாசி மக்கள் மூன்று ரயில் வண்டிகளில் முழுமையாக ஏறி, பயணச்சீட்டின்றியே டெல்லி நோக்கி தங்களது ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கைகளை எழுப்பிக் கொண்டு வர இருக்கிறார்கள் என்ற செய்தி, டெல்லி ஊடகயியலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்களை, ரயில் வண்டியிலே ஏறவிடாமல், ரயில்வே துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், திட்டமிட்டு தடுத்துவிட்டார்கள். இதுதான் ஜனநாயக நாட்டில், ஜனநாயக ரீதியான கோரிக்கைகளை முன்வைத்து, தலைநகர் வரை வந்து தங்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பி, அதன் மூலம் அரசுக்கு தங்களது கோரிக்கைகளை வைத்து விட்டதாக திருப்தி அடைகின்ற மக்களுடைய உணர்வுகளுக்கு கிடைக்கின்ற மரியாதை. அதே போல ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இதே பேரணிக்கு ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்கள் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று பேசிய காவல்துறை அதிகாரிகளும், துணை ராணுவப்படையினரும், ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், அங்கிருந்து புறப்பட்டு டெல்லிக்கு பல்லாயிரக்கணக்கில் ஆதிவாசி மக்கள் செல்வார்களானால், வன்முறை வெடிக்கும் என்பதாக எடுத்துச் சொல்லி, அவர்களை பீதியடைய வைத்து, அங்கிருந்தும் டெல்லிப் பேரணிக்கு வரவிடாமல் செய்வதில் அரசு வெற்றியடைந்துள்ளது. டெல்லி பேரணி மூலம் சில ஆயிரங்களில் திரண்ட ஆதிவாசி மக்களின் நலன்களுக்கான கூட்டம், கடைசியாக அரசிடம் ஒப்படைத்த மனுவில் பல்வேறு அமைப்புகள் கையெழுத்திட, அதில் மணிப்பூர் மாணவரமைப்பும், நாகாலாந்து மாணவர் அமைப்பும் கையெழுத்திட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அடிப்படையில் இத்தகைய அணி திரளலுக்கு காரணமாக இருந்த சூழல், சத்திஸ்கர் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சத்திஸ்கர் மாநிலத்தில் ஆண்டு வருவது பா.ஜ.க. ஆனால் அங்கே ஜனநாயக உரிமைக்குரல் எழுப்புகின்ற ஆதிவாசிகளை, அடக்கிக் கொண்டிருப்பது மத்திய அரசு அனுப்பி வைத்த துணை ராணுவ படையினர். மாநில காவல்துறை காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற ஆதிவாசி மக்களின் நிலங்களையும், வளங்களையும் கொள்ளையடிக்க வருகின்ற, தனியார் லாபநோக்க நிறுவனங்களுக்கு தங்களது நிலத்தில் இருக்கும் கனிம வளங்களை களவாட விடாமல் தடுத்த ஆதிவாசிகளை, போஸ்கோ என்ற ஆலையை நிறுவுவதன் மூலம் பாதிக்கப்படுவோம் என்று போராடும் ஆதிவாசி மக்களை, அடித்து உதைத்து அராஜகம் செய்கின்ற போக்கை எதிர்த்து போராடி வருகிறார்கள். அதே போல ஆந்திராவிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும் டெல்லி பேரணிக்கு புறப்பட்ட ஆதிவாசி மக்களையும் கூட பல்வேறு முறைகளில் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தடுத்து நிறுத்தல்கள், ஜனநாயக ரீதியான போராட்ட வடிவங்கள் மீது அந்த மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமா? ஆயுதம் ஏந்திய பாதையை பரப்புரை செய்யும் மாவோயிஸ்டுகள் பக்கத்தில் அந்த மக்களை தள்ளிவிடுமா? மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் மத்திய அரசு இருக்கிறது. ஏனென்றால் வருகிற 25ம் நாள் ஒரு சத்தியாகிரக போராட்டத்தை தொடங்க வேண்டிய நிலைமைக்கு, சத்திஸ்கர் மாநிலத்திலிருக்கின்ற காந்தியவாதிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் டிசம்பர் 10ம் நாள், உலகம் மனித உரிமை நாள் நிகழ்ச்சிகளையொட்டி, ஒரு பாத யாத்திரையை திட்டமிட்டார்கள். அந்த பாதை யாத்திரையை தண்டே வாடா என்ற இடத்தில் தொடங்கி, சத்திஸ்கர் மாநில தலைநகர் ரெய்பூர் நோக்கி எடுத்துச் செல்வதாக, காந்தியவாதிகள் திட்டமிட்டிருந்தார்கள். தண்டேவாடாவிலுள்ள வனவாசிகள் சேத்னா ஆசிரமம் ஒன்றை காந்தியவாதி ஹிமன்ஷû குமார் நடத்தி வருகிறார். அவர் ஆதிவாசிகள் மக்கள் மீது அனுதாபம் கொண்டு, அவர்களுக்கான உதவிகளை செய்து வருகிறார். அனைத்து விதமான வன்முறைகளையும் அவர் எதிர்த்து வருகிறார். அரசு தரப்பிலிருந்து வன்முறைகள் வந்தாலும், மாவோயிஸ்டு தரப்பிலிருந்து வந்தாலும் அவர் அவற்றை சமரசமற்று எதிர்த்து போராடி வருகிறார். அரசு தரப்பு வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும், அதனாலேயே அரசு படைகளின் வன்முறைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஆதிவாசிகள் மாவோயிஸ்டு உதவிக்கு செல்வதையும், விளக்கமாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் அவர் விளக்கினார். அப்படிப்பட்ட ஹிமன்ஷû குமார், சந்தீப் பாண்டேயுடன் சேர்ந்து, மனித உரிமை ஆர்வலர்களை அழைத்துக் கொண்டு, சமாதானத்தையும், சகஜநிலையையும் ஏற்படுத்துவதற்காக தண்டே வாடாவிலிருந்து அன்று பாதையாத்திரையை தொடங்கினார். ஆனால் சத்திஸ்கர் மாநில அரசாங்கமும், சல்வாஜுடும் என்று அழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய கூலிப்படை அவர்களை தடுத்து நிறுத்தியது. அந்த வட்டாரத்தில் பொதுமக்கள், குறிப்பாக ஆதிவாசி மக்கள், அரசு ஒடுக்குமுறையாலும், ராணுவ மயத்தாலும், வன்முறையாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனால்தான் அப்படி ஒரு சமாதானத்திற்கான பாத யாத்திரை தேவைப்பட்டது. அந்த மாநிலத்தின் காவல்துறை தலைமை அதிகாரியான டி.ஜி.பி. விஸ்வரஞ்சன், ஊடகயியலாளர்களிடம் காவல்துறை பாதுகாப்பில் பாத யாத்திரை தொடங்கியுள்ளது என அறிவித்தார். ஆனால் பாத யாத்திரை தொடங்குவதற்கு முன்பே அரசு சார்பில் வன்முறை சக்திகளால் தடுக்கப்பட்டது என்பதே உண்மை. நாடு தழுவிய அளவிலிருந்து 39 பெண் ஆர்வலர்கள் பாத யாத்திரையில் கலந்து கொள்ள, ரெய்பூர் வந்திறங்கி தண்டேவாடா நோக்கி புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் வரும் வழியிலேயே, காங்கர் என்ற இடத்தில் சல்வாஜுடுமால் தடுக்கப்பட்டு, பேருந்திலிருந்து இறக்கப்பட்டனர். அந்த பெண் ஆர்வலர்களை சித்ரவதை செய்து, ரெய்பூருக்கு கூலிப்படை திருப்பி அனுப்பியது. வருகிற 2010ம் ஆண்டின் ஜனவரி 7ம் நாள் வனவாசி சேத்னா ஆசிரமம் ஏற்பாடு செய்துள்ள புது விசாரணையில் கலந்து கொள்ள, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த சந்திப்பில் சல்வாஜுடும் பற்றியும், பச்சை வேட்டை பற்றியும், நீதிக்கான போராட்டம் பற்றியும், அந்த வட்டார ஆதிவாசி மக்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். ஜனநாயக இயக்கங்களை ஒடுக்குகின்ற மாநில அரசாங்கம், அப்படிப்பட்ட சந்திப்பை அனுமதிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் தான் ஹிமன்ஷû குமாரும், மற்றவர்களும் தண்டேவாடாவில் தங்களுடைய உரிமை கோரிக்கைகளுக்காக சத்தியகிரகத்தை தொடங்க இருக்கிறார்கள். உள்துறை அமைச்சரிடம், அவரது வருகையை அதிகாரபூர்வமாக அறிவிக்கச் சொல்லி கோரியிருக்கிறார்கள். சத்திஸ்கர் மாநில அரசாங்கம் எந்த சதி செய்தாலும், உள்துறை அமைச்சர் தனது வருகையை ரத்து செய்யக்கூடாது என்றும் கூட கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக பி.யூ.சி.எல். தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் ரஜிந்தர்சச்சார், மேதாபட்கர், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ஆதிவாசி மகளிர் சங்க தலைவி மமதா குஜுர், பி.யூ.டி.ஆர். ஆஷிஷ் குப்தா, ஆகியோர் அதே குரலை எதிரொலித்துள்ளார்கள். உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால், இங்கே உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், அவரை நோக்கி இதே குரலை எதிரொலிப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

Saturday, December 19, 2009

தலைக்கு மேல் தொங்கும் வாளாக பருவநிலை மாற்றம்

உலக நாடுகள் 119ம் இணைந்து டென்மார்க் நாட்டில், கோபன்ஹெகன் நகரில் கூடியுள்ளன. டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை ஒவ்வொரு நாட்டின் சுற்றுசூழல் அமைச்சர்களும், பிரதிநிதிகளும் பேசினார்கள். அவரவர் கருத்துக்களை கூறிவந்த பிரதிநிதிகள், உலகளாவிய ஒரு முடிவை எட்டுவதற்கு முன்சென்றார்களா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும், இடையில் தொடர்ந்து இழுபறி நிலை இருந்தது. இரண்டு முகாம்களும் தங்கள் கருத்தை மட்டுமே வலியுறுத்திக் கொண்டிருந்தனர். வளர்ந்த நாடுகள் என்று சொல்லக்கூடிய பணக்கார நாடுகள், தங்களது நிதியுதவியை, வளரும் நாடுகளான ஏழை நாடுகளுக்கு கொடுத்து அதன் மூலம் வளரும் நாடுகள், தங்களது நாட்டிற்குள் இருந்து வெளியேறக் கூடிய கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கை களை எடுக்கவேண்டும் என்பதுதான் உலக கெங்கிலும் உள்ள நாடுகளின், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின், கருத்து. இதே கருத்தை ஐ.நா.வும் வலியுறுத்தி வந்தது. ஆனால் அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகள் மேற்கண்ட கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் இழுத்தடித்து வந்தன. அதன் விளைவாகவே பல முறைகளில், பல கூட்டங்களில் பருவநிலை மாற்றத்தை கட்டுப் படுத்துவதற்கான பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடந்தும் கூட, ஒத்த கருத்துக்கு இரண்டு முகாம்களும் வரமுடியவில்லை.ஐ.நா.வின் மூலம் பருவநிலை மாற்றம் பற்றியும், பூமி வெப்பமடைதல் குறித்தும், அதனால் உலகெங்கிலும் வரயிருக்கும் ஆபத்துக்கள் சம்பந்தமாகவும், விரிவாக பல மாநாடுகள் நடத்தப்பட்டு, அவற்றில் அனைத்து நாடுகளும் விவாதித்துள்ளன. அப்படி விவாதிக்கப்பட்ட மாநாடுகளில், முக்கியமானதாக ரியோடிஜெனரோ மாநாடு குறிப்பிடப்பட வேண்டும். அப்போது ஓசோன் லேயரில் ஓட்டை விழுந்திருக்கிறது என்ற செய்தியை ஆபத்தான செய்தி என்று உலகுக்கு அந்த மாநாடு அறிவித்தது. ஓசோன் லேயர் என்றால் பிராணவாயு மண்டலம் என்பதாக விளக்கப்பட்டது. அகிலத்தில் இருக்கின்ற பல்வேறு மண்டலங்களில், இந்த பிராணவாயு மண்டலம், முக்கியமாக உலகின் ஜீவராசிகள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கின்ற சீதோஷ்ண நிலை சமன்பாட்டை ஒரே நிலையில் தக்கவைத்துக் கொள்ள உதவி வருகிறது என்பதை புரியமுடிந்தது. அப்படிப்பட்ட முக்கியமான பிராணவாயு மண்டலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது என்றால், உலகில் இருக்கின்ற காற்றழுத்த மண்டலங்கள் மாறி, மாறி ஏற்றத்தாழ்வாகி வருகின்றன என்பதும் உணரப்பட்டது. அவ்வாறு பிராண வாயு மண்டலத்தில் ஓட்டை விழுகின்ற அளவுக்கு, எத்தகைய வாயுக்கள் உலகிலிருந்து வெளியேற்றப்பட்டு, அந்த மண்டலத்தை தாக்குகின்றன என்ற விவாதம் எழுந்தது. சாதாரணமாக மக்கள் பயன்படுத்தக்கூடிய குளிர்சாதன பெட்டிகள், குளிர்சாதன அறைகள், குளிர்சாதனம் பொறுத்தப்பட்ட வாகனங்கள், நிறுவனங்களின் அலுவலகங்கள், தொழிற் சாலைகள், திரையரங்குகள், பல்அங்காடிகள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு வாயுக்கள் அனைத்தும் வானத்தில் பறந்து சென்று, இந்த பிராண வாயு மண்டலத்தை தாக்குகின்றன. அப்படி வெளியேற்றப்படும் கழிவு வாயுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, சல்பர் ஹெக்சா பிளோரைடு ஆகியவை நச்சு வாயுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாயுக்களை சாதாரணமாக பொதுமக்கள் தங்களது வாழ்க்கை ஓட்டத்தில் அதிகமாக பயன்படுத்தி வெளியேற்றுவதால், நகர்மயமாதல் அதிகமாகும் சூழலில், உயர் தொழில் நுட்பங்கள் அதிகமாக உள்ளே நுழையும் காலத்தில், மேற்கண்ட நச்சு வாயுக்களின் வெளியேற்ற அளவு அதிகரிக்கிறது. இப்படி அதிகமான அளவு வாயுக்களை வெளியேற்றக்கூடிய நாடுகளாக, அமெரிக்காவும், சீனாவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாயு வெளியேற்றத்தால் ஏற்பட்ட பிராணவாயு மண்டல ஓட்டைகளால், உலகெங்கிலும் இருக்கின்ற உஷ்ணநிலை மாற்றமடைகிறது. அதையொட்டி இருக்கின்ற பனிக்கட்டிகள் நாளுக்கு நாள் உருகிவிடுகின்றன. அதனால் ஏற்படுகின்ற மாற்றங்கள் பூமியை தாக்குகின்றன. கடல் அளவிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த மாற்றங்கள் கடலை உள்வாங்குவதற்கும், அதையொட்டி நிலத்தின் அளவை அதிகப்படுத்துவதற்கும் சில நேரங்களில் பயன்படுகின்றன. அதே போல பல இடங்களில் கடல், நிலத்திற்குள் வீறிட்டு பாய்வதற்கும் வழி வகுக்கின்றன. அப்படி நடக்கின்ற நடவடிக்கைகள்தான், சுனாமி போன்ற பேரழிவுகளையும் ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவிலேயே கடல் நாட்டிற்குள் வந்து தொடுத்த பாதிப்புகளை, அந்த நாட்டு அரசாங்கமே தாங்க முடியாத சூழல் பிறந்தது. இதுபோன்ற கரியமில வாயு வெளியேற்றத்தை அதிகமாக செய்யக்கூடிய கருவிகளை வணிக நோக்கத்தில் அளவுக்கு அதிகமாக விற்பனை செய்யும் வணிக குழுமங்கள் பட்டியலிடப் படுகின்றன. குறிப்பாக அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான டூப்பாண்ட் நிறுவனம், இதுபோன்ற நச்சு வாயு வெளியேற்றத்தை அதிகமாக உற்பத்தி செய்வதில், அதன் மூலம் பூமியை வெப்பமடைய செய்வதில் சாதனை படைத்துள்ளது. அதனால் அந்த டூப்பாண்ட் நிறுவனத்திற்கு, பசுமை அமைதி இயக்கம் என்ற உலக சுற்றுசூழல் இயக்கத்திலிருந்து, உலகிலேயே அதிகமாக மாசு கற்பித்தல் என்ற கேவலமான பணியை செய்ததாக ஒரு சான்றிதழை அளித்துள்ளது. அப்படிப்பட்ட டூப்பாண்ட் கம்பெனிதான், இந்தியாவிலுள்ள தாப்பர் கம்பெனியுடன் சேர்ந்து கொண்டு, தாப்பர் டூப்பாண்ட் என்ற ஆலையை, சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையில் நிறுவ எத்தனித்தனர். விமானங்களுக்கு தேவையான டயர்களை உருவாக்கக்கூடிய கம்பெனி என்ற பெயரில் இந்த ஆலை, கும்மிடிப்பூண்டியில் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை, ஆட்சியாளர்கள் ஒத்துழைப்போடு செய்தார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த முயற்சி அப்போதே, சுற்றுசூழல் ஆர்வலர்களாலும், வட்டார விவசாயிகளாலும், ஆலைத் தொழிலாளர்களாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அதன் பிறகு பயோனியர் ஏட்டின் முதலாளியான தாப்பர் கம்பெனி, அந்த கூட்டு தொழிலிருந்து விலகிக் கொண்டது. அதன் விளைவாக டூப்பாண்ட் கம்பெனியின் தனது மாசுபடுத்தும் உற்பத்தியை மாற்றிக் கொண்டது. இப்படிப்பட்ட டூப்பாண்ட் கம்பெனி, அமெரிக்காவின் பன்னாட்டு மூலதன கம்பெனி என்ற காரணத்தினால், அமெரிக்க அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கியோடா நகரில் ஜி8 நாடுகள் என்று அழைக்கப்படும் பணக்கார நாடுகள் கூடி, பூமி வெப்பமடைதலையும், பருவநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்துவதற்காக சில திட்டங்களை தீட்டினார்கள். அப்படி தீட்டிய திட்டங்களை, கியோடா பிரகடனம் என்ற பெயரில் வெளியிட்டார்கள். அந்த பிரகடனத்தில் கூறியுள்ளபடி 2012ம் ஆண்டுக்குள் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பணக்கார நாடுகளான வளர்ந்த நாடுகள், கணிசமான தொகையை நட்டஈடு போல, வளரும் ஏழை நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என்றும், அதை வைத்து புதிய தொழில் நுட்பங்களையும் பெற்று, வளரும் நாடுகள் தங்கள் நாடுகளில் இருந்த வெளியேற்றப்படும் கரியமில வாயு போன்ற நச்சு வாயுக்களின் அளவை குறைப்பதற்கான திட்டங்களை தீட்டமுடியும் என்றும் எழுதப்பட்டிருந்தது. அந்த பிரகடனத்தை அமெரிக்க அதிபராக ஜார்ஜ்புஷ் இருந்த காலம் வரை அமுல்படுத்தாமலேயே தள்ளிப் போட்டு வந்தார். ஒரு முறை ஜி8 நாடுகளின் கூட்டத்திற்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சென்ற போது இந்த கியோடா பிரகடனத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை மன்மோகன் முன் வைத்தார். ஆனாலும் அதை அமெரிக்க அதிபர் அலட்சியப்படுத்தி விட்டார். அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு மூலதன கம்பெனிக்கு நடத்துகின்ற உற்பத்தி குறைக்கப்படுமானால், அவர்களுக்கு கிடைக்கின்ற லாபம் குறைந்து விடும் என்பதனால் தன்நாட்டின் வணிக நலன்களுக்காக அமெரிக்க அரசு இந்த பிரகடனத்தை அமுல் படுத்தாமலேயே காலத்தை தள்ளி வந்தது. அதற்கு பிறகு வந்த பாரக் ஒபாமா முற்போக்கு முகத்தை காட்டிக் கொண்டிருந்தாலும், இந்த விசயத்தில் ஜார்ஜ் புஷ்ஷின் அணுகுமுறையையே பின்பற்றி வந்தார்.இதற்கிடையே கோபன் ஹெகன் மாநாட்டிற்கு முன்பே இரண்டு மாத காலமாக, மாநாட்டிற்கான வரைவு நகலை தயார் செய்வதற்காக நாடுகளுக்குள் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. அப்போது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வளரும் நாடுகளை முதலில் வாயு வெளியேற்றத்தை குறைத்துக் கொள்ளும் படி வற்புறுத்தி வந்தன. குறிப்பாக இந்தியாவையும், சீனாவையும் வலியுறுத்தி வந்தன. அது சம்பந்தமாக இந்தியா வந்த, ஹிலாரி கிளின்டனும் அப்படிப்பட்ட வற்புறுத்தல்களையும் செய்து தோல்வியுற்றார். இப்போது கோபன் ஹெகன் மாநாட்டில் முதல் பத்துநாட்களும் ஒரு முடிவு வராத நிலையில், அமெரிக்கா 10,000 கோடி டாலர்களை 2020க்கு பிறகு தாங்கள் தரவேண்டும் என்றால், ஏழை நாடுகள் அதற்கு முன்பே தங்கள் நாட்டு வாயு வெளியேற்றத்தை குறைத்து அதை சட்டமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதை இந்தியா, சீனா உட்பட ஜி77 நாடுகள் நிராகரித்தன. அதன்பிறகே மன்மோகனும், வென்னும் மாநாட்டை விட்டு வெளிநடப்பு செய்து, மீண்டும் உள்நடப்பு செய்யும் நாடகம் அரங்கேறியுள்ளது. இப்போது இல்லா விட்டாலும், அடுத்த ஆண்டு என்பதாக மன்மோகன் சமரச உரை நிகழ்த்தியுள்ளார். உலக மக்கள் தலைகளுக்கு மேல் தொங்குகின்ற வாள் கூர்மையாக இறங்கி வந்து கொண்டேதான் இருக்கிறது.

Friday, December 18, 2009

இலங்கை அதிபர் தேர்தலும், தமிழர் வாக்குகளும்

இலங்கைத் தீவில் ஒரு காலத்தில் நாடாளுமன்ற ஆட்சிமுறை இருந்து வந்தது. நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும், தலைமையமைச்சரும், அவரால் நியமிக்கப்படும் அமைச்சர்களும் நாட்டை ஆண்டுவந்தனர். அத்தகைய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்காக, உறுப்பினர்களை விகிதாச்சார முறை மூலம் பொதுமக்கள் தேர்வு செய்து வந்தனர். விகிதாச்சார முறை என்பது ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை வாக்குகள் என்பதாக வாக்களிப்பதும், அதில் கட்சித்தலைமையால் நியமிக்கப்படும் வேட்பாளர்கள் வரிசைப்படி தேர்வு செய்யப்படுவதும் நடைமுறையாகும். இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு, இங்கே நடந்துவரும் தேர்தல்முறை வித்தியாசமாகயிருக்கிறது. இந்தியாவில் ஒரு தொகுதியில் இருக்கின்ற 100% வாக்களர்களில், 60% வாக்காளர்கள் பொதுவாக, உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கிறார்கள். 3அல்லது 4 கட்சிகள் அதே தொகுதியில் போட்டிபோடும் போது, பதிவுசெய்யப்பட்ட வாக்குகளில், 20% அளவு வாக்குகள் பெற்ற ஒரு வேட்பாளர், அந்தத் தொகுதியிலேயே அதிகமான வாக்குப்பெற்றவராக ஆகமுடியும். அப்போது அவர்தான் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். அதாவது 20% வாக்குகளைப் பெற்ற ஒரு வேட்பாளர், 80% வாக்காளர்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்கப்படாத ஒரு வேட்பாளர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கின்ற ஒரு தேர்தல் முறை நமது நாட்டில் இருந்து வருகிறது. ஆனால் விகிதாச்சார தேர்தல் முறை என்பது குறைந்தளவு வாக்குகளை பெற்றிருக்கின்ற ஒரு சமூகமோ, அல்லது ஒரு அரசியல்கட்சியோ கூட, தனது பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அனுப்புவதற்கு வாய்ப்புக் கொடுக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தேர்தல் முறை இலங்கைத் தீவில், நாடாளுமன்ற பாதையில் இருந்து வருகிறது. இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் நாடாளுமன்ற முறையில், குடியரசுத் தலைவர் என்ற ஒரு பதவி, நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்வு செய்யப்படுகிறது. அப்படி தேர்வு செய்யப்படுகின்ற குடியரசுத் தலைவர், அரசியல் சட்டத்தின்படி தீர்மானகரமான முடிவெடுக்கும் இடத்தில் இருந்தாலும் கூட, நாடாளுமன்றத்தின் தலைமையிலிருக்கும் மத்திய அமைச்சரவையில் எடுக்கின்ற முடிவுகளையொட்டி தனது ஒப்புதலை கொடுப்பது என்ற ஒரு அதிகாரத்தைத் தான் அவர் கொண்டிருக்கிறார். அதையே நமது அரசியல் வாதிகளின் வார்த்தைகளில் சொல்லப்போனால், குடியரசுத் தலைவர் பொறுப்பை, ரப்பர் ஸ்டாம்பு பொறுப்பு என்ற அழைக்கிறார்கள். தலைமை அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் மட்டுமே இந்தியாவில் அதிகமான அதிகாரம் இருக்கிறது. அதேசமயம் அதிபர் ஆட்சிமுறை என்று கூறக்கூடிய, அமெரிக்கா போன்ற நாடுகளில் செனட்சபை என்றபெயரிலும், காங்கிரஸ் என்ற பெயரிலும், மேல்சபையும், கீழ்சபையும் இயங்கி வருகின்றன. அங்கே அதிபர் என்று அழைக்கப்படும் குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை என்று கூறுவதால், அவருக்கு அதிகமான அதிகாரம் என்பதாக ஆகிறது. இந்தியாவில் கூட, அவசரநிலையை இந்திராகாந்தி கொண்டுவந்த நேரத்தில், அனைத்து அதிகாரங்களையும் ஒருவரே கையில் வைத்திருக்கவேண்டிய தேவையை, ஆட்சியில் இருந்தவர்கள் உணர்ந்தபோது, குடியரசுத் தலைவர் ஆட்சிமுறையை கொண்டுவரலாமா என்ற விவாதம் பெருமளவு நடத்தப்பட்டது. ஆனாலும் 100 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், பரந்த அளவு நிரப்பரப்பில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள நாடாளுமன்ற ஆட்சிமுறை தான் ஜனநாயக ரீதியாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்ற ஆரோக்கியமான விவாதம் எழுந்த காரணத்தினால், குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை கொண்டுவரப்படாமல் காப்பாற்றப்பட்டது. ஆனால் இலங்கைத் தீவின் நிலைமையை வேறுபோலாகிவிட்டது. 1970ன் காலந்தொட்டு, இனவாத அணுகுமுறையை ஆளுகின்ற சிங்கள ஆட்சியாளர்கள் கடைபிடித்து வந்ததனால், பொருளாதார வளர்ச்சி சீராக அங்கே இல்லாமலிருந்தது. 1980ன் தொடக்கத்தில் நேரடியான ரத்தகளரிகளாக மாறிவிட்ட இனவாத மோதல்கள், ஆள்வோரின் ஆசிபெற்று நடத்தப்பட்டதால், அங்குள்ள பொருளாதாரம் மேலும் சீரழிந்தது. உடைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட பெருமுதலாளிகளின் நிறுவனங்கள் தமிழர்களுக்கு சொந்தமானது என்ற காரணத்தினால், சிங்கள காடையரின் கோபத்திற்குள்ளானது. அதன் விளைவாக மூலதனமிட்டு தொழில் செய்தவர்களும் கூட, அந்த நாட்டை விட்டு இடம்பெயர்ந்தனர். இதுவே அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இடியாக அமைந்தது. தமிழர்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் மத்தியில் போராளி குழுக்களை உருவாக்கின. அவற்றைச் சமாளிப்பதற்காக, சிங்களஅரசு ராணுவத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவே அரசுக்கு மேலும் நிதிச்சுமையை அதிகரித்தது. பொருளாதார சிக்கல்களில் சிக்கிவிட்ட சிங்கள அரசு, விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் அளிக்கமுடியவில்லை. அப்படிப்பட்ட சூழல், ஜனத விமுக்தி பெரமுனா என்ற மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இடதுசாரி கட்சியை மேலும் வலுவாக்கியது. அவர்கள் ஏற்கனவே 2முறை ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியை, அரசுக்கு எதிராக செய்தவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க, ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சிமுறையை மாற்றியமைக்க எண்ணினார்கள். அப்படிப்பட்ட எண்ணத்தின் தொடர்ச்சிதான், அதிபர் ஆட்சிமுறையை கொண்டுவருவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து, கடைசியாக சந்திரிகா காலத்தில் கொண்டுவந்தார்கள். அதன்மூலம் அதிபர் அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்துக்கொள்பவராக மாறிவிட்டார். இதுவே அதிகார குவிதலை ஒரே இடத்தில் கொண்டுபோய் கொட்டிவிட்டது. அதன்மூலம் மாறுபட்ட கருத்துள்ளவர்கள், அமைச்சரவையில் தொடர்ந்து இருக்கமுடியவில்லை. மங்கள சமரவீரா என்ற அமைச்சர், மகிந்த ராஜபக்சேயிடம் மாறுபட்ட கருத்துக் கொண்டு, வெளியேறி விமர்சனங்களை அள்ளி வீசிக்கொண்டு, அரசியல் நடத்திவருவது ஒரு உதாரணம். 3படைகளும் அதிபரின் அதாவது அரசத் தலைவரின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுவது என்பது அதனுடைய அடுத்தக் கட்ட வளர்ச்சி. நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில், மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சி கூட்டணி சார்பாகவும், முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, பிரபல எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனத விமுக்தி பெரமுனா ஆகியவற்றுடன் சேர்ந்துள்ள 14 கட்சிகளின் கூட்டணி முன்னிறுத்தும் பொது வேட்பாளராகவும், மனுச் செய்திருக்கிறார்கள். இதுதவிர நீண்ட காலமாக அரசியலிலிருக்கும் லங்கா சமசமாஜ கட்சி என்ற பழம்பெரும் இடதுசாரி கட்சியிடமிருந்து பிரிந்த நவசமசமாஜ கட்சியின் தலைவர் டாக்டர் விக்ரம பாகு கருணாரத்னேயும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். மகிந்தாவிற்கு எதிராக நிற்கின்ற பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்துள்ள கட்சிகளின் அறிவுறுத்தல்படி, அந்த பொதுவேட்பாளர் பொன்சேகா தான் வெற்றி பெற்றால் உடனடியாக அதிபர் ஆட்சிமுறையை கலைத்துவிட்டு, நாடாளுமன்ற ஆட்சிமுறையை கொண்டுவருவேன் என உறுதி கூறியுள்ளார். அவரை ஆதரிக்கின்ற ஐதேகவும், ஜே.வி.பி.யும், மற்ற 14 கட்சிகளும் இதையே தங்களது தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்துள்ளார்கள்.

பொதுவாக வன்னிப்போரை நடத்தி வெற்றி பெற்றதில், மகிந்தாவிற்கு ஒரு மாபெரும் வரவேற்பு சிங்கள பெரும்பான்மையிடம் இருக்கிறது. அந்த வரவேற்பை, வாக்குகளாக மாற்றுவதற்கு தான் உடனடியான தேர்தலை அதிபர் பதவிக்கு மகிந்தா ஏற்பாடு செய்துள்ளார் என்பது நாடறிந்த செய்தி. அதேபோல வன்னிப்போர் வெற்றியை கணக்கில் கொண்டுதான் தென்னிலங்கையில் பொன்சேகாவும் வாக்குப் பெற போகிறார். அதேசமயம் தமிழர் வாக்குகளுக்காக, பொன்சேகா சில புதிய முயற்சிகளை எடுத்து வருகிறார். அதிபர் தேர்தலில் 50%க்கு மேல் எடுப்பவர் தான் அதிபராக முடியும். இதை 2பெரிய வேட்பாளர்களும் எட்டாமல் இருப்பது, தமிழர் கையில் தான் இருக்கிறது. 2வது சுற்றில்தான் அதிபருக்குத் தேவையான 50% வாக்குகளை பெறமுடியும் என்ற சூழலை தமிழர்கள் நினைத்தால் ஏற்படுத்த முடியும்.

Saturday, November 7, 2009

நவம்பர் புரட்சி நினைவிலிருக்குமா?

நவம்பர் புரட்சி நினைவிலிருக்குமா?


ரஷ்ய புரட்சி என்று அழைக்கப்பட்ட 1917ம் ஆண்டு நடந்த புரட்சி, நவம்பர் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. அது ஜார் மன்னருடைய ஆட்சியில் தூக்கி எறிந்து, சோவியத் யூனியன் என்ற புதியதொரு நாட்டை உருவாக்க உதவியது. நவம்பர் மாதத்தின் தொடக்கத்தை, ரஷ்ய புரட்சியை நினைவு கொள்வதற்காக உலகமெங்கிலும் கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி, ஜனநாயகத்தை விரும்புவோரும், மன்னார் ஆட்சியை எதிர்ப்போரும், கொண்டாடுவது வழக்கம். போல்ஷ்க் கட்சி என்ற பெயரில், அப்போது லெனின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கப்பட்டது. சோவியத் யூனியனின் அந்த வெற்றி, உலகமெங்கிலும் பல்வேறு நாடுகளில் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் தேவையை உணர்த்தியது.

அதன் விளைவாக உலகமெங்கிலும், 1917க்கு பிற்பாடு பல நாடுகளில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின. உலகில் பெரும்பாலான நாடுகளில், ஆட்சி அதிகாரத்தில் பெரும் பண்ணையார்களோ, அண்ணாவின் வார்த்தையில் நிலம் ஆளும் முதலாளிகளோ, நிலங்களை குவித்து வைத்துக் கொண்டு இருக்கும் நிலத்திமிலங்களின் நலன்களை பாதுகாப்பவர்களோ இருந்து வந்தார்கள். அவர்கள் உள்நாட்டு முதலாளிகளைக் கூட, வளரவிடுவதில்லை. இதை மார்க்சிய வாதிகள், நிலப்பிரபுத்துவ ஆட்சி முறை என்பதாக வர்ணித்தார்கள். நிலம் சார்ந்த பொருளாதாரத்தை மாற்றியமைத்து, தொழிற்சாலைகள் சார்ந்த பொருளாதாரத்தை கொண்டு வரக்கூடிய சமுதாய அமைப்பை, முதலாளித்துவ சமுதாய அமைப்பு என்று அழைக்கிறார்கள்.

அப்படி நிலம் சார்ந்த பொருளாதாரமான, நிலப்புரபுத்துவ சமுதாய அமைப்பை, மாற்றியமைத்து முதலாளித்துவ சமுதாய அமைப்பை ஏற்படுத்துவதற்கு உள்ள முயற்சி என்பது வரலாற்றில் ஒவ்வொரு நாட்டிலும் நடந்தேறியிருக்கிறது. அது வெற்றி பெற்ற நாடுகளின் சமுதாய அமைப்பை, முதலாளித்துவ அமைப்பு என்பதாக அழைப்பதும், அத்தகைய நாடுகளை முதலாளித்துவ நாடுகள் என்று அழைப்பதும் வழக்கம். அதுபோல புதிய சமுதாய அமைப்பை உருவாக்கிய நாடுகளாக, இங்கிலாந்து, மற்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளை குறிப்பிடலாம்.

ஐரோப்பிய நாடுகளில், ஜெர்மன் நாட்டில் வளர்ந்து இருந்த முதலாளித்துவ அமைப்பை நேரில் அனுபவித்த காரணத்தினால்தான், அங்குள்ள தொழிலாளர்களது அவல நிலையை விரிவாக தெரிந்து கொண்டு, அதன் மீது ஒரு சமூக, பொருளாதார, அரசியல் ஆய்வுகளை செய்த அடிப்படையில்தான், காரல்மார்க்ஸ் தனது மூலதனம் என்ற புத்தகத்தை எழுத முடிந்தது. அதில் அவர் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பை தூக்கி எறிந்து விட்டு முதலாளித்துவ சமுதாய அமைப்பு அமைக்கப்பட்ட விவரத்தை கூறுகிறார்.

மூலதனம் புத்தகம் அரசியல் பொருளாதாரம் பற்றி அடிப்படையாக விவரிக்கப்பட்டிருந்தாலும், காரல்மார்க்ஸ் எழுதிய மற்ற புத்தகங்களிலிருந்து, முதலாளித்துவத்தின் மூல வேர்களை அவர் விளக்கியிருப்பதை அறியமுடிகிறது. தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற முதலாளிகளுடைய ஆட்சி அதிகாரத்தில், தனது உழைப்பு சக்தியை விற்று விட்டு, அதன் ஒரு பகுதியை மட்டும் கூலியாக பெறுகின்ற தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றி அவர் எழுதுகிறார்.

நிலவுடமை சமுதாயத்தில் வாழ்ந்து வரும் பெருவாரியான உலக மக்களுக்கு, வெல்லப்படமுடியாத, வளர்ச்சியடைந்த, விஞ்ஞானத்தை சார்ந்த சக்தி, முதலாளித்துவ அமைப்பு என்ற எண்ணமே இருந்தது. அப்படிப்பட்ட முதலாளித்துவ சமுதயாத்தைக்கூட, தூக்கி எறிய முடியும் என்றும், தொழிலாளி வர்க்கத்தினுடைய தலைமையில் ஒரு ஆட்சியை நிறுவிக்கொள்ள முடியும் என்றும், உலக மக்களுக்கு நிரூபித்துக்காட்டியது, ரஷ்யாவின் நவம்பர் புரட்சி. அதனால்தான் உலகமெங்கிலும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு, ஒரு ஒளிவிளக்கு போல, ரஷ்யாவில் நடந்த போல்ஷ்விக் புரட்சி தோன்றியது. அதன் மூலம் நிலமற்ற, ஏழை உழவர்கள் உட்பட, அனைத்து உழைக்கும் மக்களுக்கும், தொழிற்சாலை பணிகளுக்கு செல்லும் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கி, சமுதாய அமைப்பையே மாற்றியமைக்க முடியும் என்ற புதிய உண்மையை புரிய வைத்தது 1917ன் நவம்பர் புரட்சி.

அதனால்தான் அத்தகைய ரஷ்ய புரட்சிக்கு பிறகு, உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும், இத்தகைய நம்பிக்கை ஏற்பட்டு, பல நாடுகளில் பொதுவுடமை கருத்துக்களை அடிப்படையாக கொண்ட கட்சிகளை உருவாக்கினார்கள். ரஷ்யாவை ஆண்டு வந்த ஜார் என்ற மன்னன் கொடுங்கோலன் என்று நம் முன்னால் வர்ணிக்கப்படுகிறது. பாரதியாரும் கூட, கொடுங்கோலன் ஜார் வீழ்ந்தான். ஆவென எழுந்தது யுகப்புரட்சி என்று எழுதுகிறார்.

மாகாளி கண் திறந்தால் என்பதாக தன்னுடைய நம்பிக்கையை, தனக்கு கிடைத்த புதிய நம்பிக்கையுடன் இணைத்து எழுதுகிறார் பாரதி. அத்தகைய முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுதான் இந்த நவம்பர் புரட்சி. செயின் பீட்டர்ஸ் பர்க்கை சுற்றி எழுந்த தன்னெழுச்சியான புரட்சியாக, பிப்ரவரியில் நடந்த புரட்சிகர செயல்பாடுகள் விவரிக்கப்படுகின்றன. ஜார் ஆட்சியை தூக்கி எறிந்து தற்காலிக அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்படுகிறது. அதன் பிறகு அக்டோபர் மாநிலத்தில் தற்காலிக அரசாங்கம் நீக்கப்பட்டு, போல்ஷ்விக் அரசாங்கம் நிறுவப்படுகிறது. ரஷ்யாவில் தற்காலிக அரசாங்கம் நிறுவப்படும் போது, டூமா என்று அழைக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அமைப்பு முறை ஏற்படுத்தப்படுகிறது.

சோவியத்துக்கள் என்பது தொழிலாளர்களுடைய கவுன்சில்கள் என்று பொருள்படும். பிப்ரவரி புரட்சி என்று அழைக்கப்பட்ட ரஷ்யாவின் புரட்சி முதல் உலகப் போர் கால கட்டத்தில் நடந்தது. அப்போது ரஷ்யாவின் ராணுவம் பெருமளவுக்கு தாக்கப்பட்டு பின்வாங்கியிருந்தது. அதனால் சிப்பாய்களுக்குள் கலவரம் நீடித்தது. தற்காலிக அரசாங்கத்தின் தலைமை பொறுப்பிலிருந்த சோசலிச சிந்தனையாளர்கள், இடது சாரி திசைக்கு அதை எடுத்து சென்றார்கள். குழப்பமான சூழ்நிலையில், தொடர் கலகங்களும், வேலைநிறுத்தங்களும் நடந்தன. தற்காலிக அரசாங்கம் ஜெர்மனி நாட்டுடன் சேர்ந்து கொண்டு, போல்ஷ்விக்குகைளயும், மற்ற சோசலிச பிரிவுகளையும் இணைத்து கொண்டு செயல்பட்டன.

செம்படை ஒன்றை கட்டி அதை ஆயுதம் தாங்கிய படையாக உருவாக்கியிருந்த போல்ஷ்விக்குகள், அதன் மூலம் எளிதாக ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரமுடிந்தது. அரசாங்க அதிகாரத்திலும், அனைத்து பொருட்களிலும், போல்ஷ்விக்குகள் அமர்த்தப்பட்டார்கள். 1918ல் நடந்த ஜெர்மனியுடனான ஒப்பந்தத்தில் போல்ஷ்விக்கள் கையெழுத்திட்டார்கள். ஆனாலும் கூட, போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள் என்ற இருசாரர் மத்தியில் உள்நாட்டு போர் போல மோதல் நடந்தது. அதில் போல்ஷ்விக்குகள் என்று அழைக்கப்பட்ட பெரும்பான்மையினர் என்று பொருள் கொண்ட லெனின் தலைமையிலான பிரிவினர் வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் தான் சோவியத் ரஷ்யாவின் ஒன்று பட்ட நாடுகள் என்ற யூ.எஸ்.எஸ்.ஆர். உருவானது.மேற்கண்ட அனுபவங்கள் பாட்டாளி வர்க்கம் என்று அழைக்கப்படும் ஆலைத் தொழிலாளர்களான, முன்னேறிய வர்க்கத்தின் தலைமையில், அனைத்து உழைக்கும் வர்க்கங்களும் அணி திரட்டப்பட்டு, மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் உழைப்பவர்கள் தான் என்ற உண்மையிருப்பதனால், எந்த நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற விவரம் உலகிற்கு கிடைத்தது.

கம்யூனிஸ்ட் கட்சியை தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படை என்பதாக அழைப்பார்கள். ரஷ்ய புரட்சியை வெற்றிகரமாக நடத்திய லெனினது பாதை என்பது, காரல்மார்க்ஸ் வழிவகுத்து கொடுத்த பாதையை, நடைமுறை படுத்தி செயலிலே வென்ற ஒரு நிகழ்வு அதனால் காரல்மார்க்சிற்கு பிறகு, உலகமெங்கிலும் பெரும்பான்மையாக அவரை பின்பற்றியவர்கள், லெனினை ஏற்றுக் கொண்டு, அவரது அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு, லெனினிஸ்டுகளாக பவனி வந்தார்கள். இன்னமும் கூட, மார்க்சியம் என்ற சமூக அறிவியல் தத்துவத்திற்கு, லெனினது பங்களிப்பு புதிய, புதிய படைப்பாற்றல் மிக்க, உலகம் பற்றிய சித்தரிப்பு என்பதை மறுக்க முடியவில்லை.லெனினது ரஷ்யாவை நேரில் சென்று பார்த்து வந்த தந்தை பெரியார், அதே பாதையில் சமத்துவத்தை ஏற்படுத்த அறைகூவல் விடுத்தார்.

தந்தை பெரியாரை ரஷ்யநாடு சென்று, அனுபவங்களை பார்த்து வருவதற்கு ஏற்பாடு செய்த, பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடி, சிந்தனை சிற்பி சிங்காரவேலர். இந்த சிங்கார வேலர் சென்னையில் உள்ள, மயிலாப்பூரில் நடுக்குப்பத்தில், ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்தவர். சிங்கார வேலரது செயல்பாடுகளும், கருத்துகளும் கூட, இன்று வரை உயிர்ப்புடன் நிற்கிறது. அதனால் இந்த நவம்பர் மாதம், உலக வரலாற்றிலிருந்து நமக்கு அதிகமான பலத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கலாமா?