தெலுங்கானா தனிமாநில கோரிக்கை தீவிரமாக எழுந்த பிற்பாடு, அதை மத்திய அரசு அங்கீகரிக்கும் மனோநிலை வெளிப்பட்டபிறகு, ராயலசீமா மாவட்டங்கள், ஆந்திரா மாவட்டங்கள் தங்களது எதிர்ப்பை, ஆத்திரத்தை அளவுக்கு அதிகமாகவே காட்டத்தொடங்கின என்பது நாடறிந்த செய்தி. அந்த எதிர்ப்புகள் மத்திய அரசினுடைய அதிகார மட்டத்தை ஆட்டிக்காட்டியதால், தெலுங்கானா தனி மாநில அறிவிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. மீண்டும் தெலுங்கானா மாவட்டங்களிலும், குறிப்பாக ஐதராபாத் தலைநகரிலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் கலகக் கொடி உயர்ந்தது. இப்போது நியாயத்தின் அடிப்படையிலும், மக்கள் எழுச்சியின் காரணமாகவும் மீண்டும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலைமையில் மத்திய அரசு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. அதனால்தான் முதலில் தெலுங்கானா தனி மாநிலம் என்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பிறகு பல்டி அடித்து ஆந்திராவிலிருந்து வந்திருந்த காங்கிரஸ் தலைவர்களிடம் தற்போது எந்த முடிவும் இல்லை என்று அறிவித்தார். இப்போது மீண்டும் தெலுங்கானாவின் எழுச்சி, ப.சிதம்பரத்தை மீண்டும் மாற்றிப் பேசுவதற்கு தள்ளியுள்ளது.
எளிமையாக அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை 5ம் நாள் கூட்டுவதாக அறிவித்துள்ளார். இடையில் தமிழக முதல்வரை வந்து சந்தித்தார். அந்த சந்திப்பில் தன்னுடைய முதல் அறிவிப்பை நியாயப்படுத்தி விளக்கியுள்ளார். அவசரகதியில் முதல் அறிவிப்பை மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதாகவும், தெலுங்கானா பற்றி மத்திய அரசின் கொள்கை தடுமாற்றத்தில் இல்லை என்பதாகவும் ஊடகங்களுக்கு எடுத்துச் சொல்கிறார். இதிலிருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிதல் என்ற இயற்கையான நிகழ்ச்சி நடக்கத்தான் செய்யும் என்று இடையில் உள்துறை அமைச்சர் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. அப்படியானால் ராயலசீமா, ஆந்திரா பகுதிகளிலிருந்து வருகின்ற தலைவர்களை எப்படி இணங்க வைக்கப்போகிறது மத்திய அரசு என்ற கேள்வி எழுகிறது.
அனைத்துகட்சி கூட்டத்தை தைரியமாக அறிவித்திருக்கும் மத்திய அரசு, அதற்காக என்ன திட்டத்தை வைத்திருக்கிறது என்ற விவாதம் எங்கெணும் எழுகிறது. தெலுங்கானா தனிமாநிலமாக செல்ல வேண்டும் என்ற அந்த மக்களின் எதிர்பார்ப்புக்கு, ஆதரவான குரல் நாடெங்கிலும் ஒலிப்பதற்கு அடிப்படை காரணமாக இருப்பது எது? அதிகாரத்தை பரவலாக்கினால் மட்டும்தான், பின்தங்கிய பகுதிகளாக இருக்கின்ற வட்டாரங்களுக்கும், அரசாங்கத்தின் சலுகைகளும், திட்டங்களும் போய் சேரும் என்ற அறிவியல் பூர்வமான அடிப்படையில்தான், ஜனநாயகம் வேண்டுகின்ற பல சக்திகளும் தனிமாநில கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.
மக்களுடைய முழுமையான ஈடுபாட்டில் தெலுங்கானா என்ற முழக்கம் எழுந்து வருவதை உணர்ந்து கொண்ட பல கட்சிகளும், தங்களது நிலைப்பாடுகளை மாற்றி அமைத்துக் கொண்டு, இப்போது தெலுங்கானா தனி மாநிலம் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். பா.ஜ.க. சற்று முன்பே தெலுங்கானா கோரிக்கையை ஆதரித்து விட்டது. சமீபத்திய மோதல்களுக்கு பிறகு மக்கள் உணர்வுகள் பற்றி கற்றுக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி, வாக்காளர்களை மனதில் கொண்டு இப்போது தெலுங்கானா ஆதரவு நிலையை எடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)ம் இப்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, தெலுங்கானா தனி மாநிலத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களது பழைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி, 60 ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கானா கோரிக்கையை, ஆந்திர மகா சபா என்ற அமைப்பின் மூலமாக ஆதரித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு) என்ற நக்சல் பாரி இயக்கத்தவர்கள் இன்று தெலுங்கானாவில் முழுமையாக களம் இறங்கி, போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற சந்திரசேகர் ராவ் தலைமையிலான கட்சி தொடங்கிய போரட்டங்கள், அதற்கு பெருவாரியான மக்கள் மத்தியிலிருந்தும், மாணவர்கள் மத்தியிலிருந்தும் கிடைத்த ஆதரவு ஆகிய அனைத்துமே, நிபந்தனை அடிப்படையிலான ஆதரவுகள்தான். அவர்களுக்கு சந்திரசேகர ராவ் கட்சியின் மீது முழுமையான நம்பிக்கை இல்லாத நிலையில், அவரது தனி மாநில கோரிக்கையை மட்டும் ஆதரித்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதனால்தான் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், சந்திரசேகர ராவின் பட்டினிப் போராட்ட நிறுத்த அறிவிப்பை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இப்போது காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், டெல்லி கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ராஜினாமாக்களை திரும்ப பெறும் போது, அவர்களையும் எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலமே தங்கள் ஆதரவு நிபந்தனை அடிப்படையிலானது என்பதை அந்த மாணவர்கள் நிரூபிக்கிறார்கள். அதே சமயம் கடைசியாக மாவோயிஸ்டுகள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். சனிக்கிழமை அவர்கள் ஒரு முழு அடைப்பை 10 மாவட்டங்களிலும் தனித்து நடத்தியிருக்கிறார்கள். இது அவர்களது பழம் பெரும் செல்வாக்கை, மறுபடி புதுப்பித்தல் போன்று தென்படுகிறது.
அதிகாரப் பரவலாக்கல் என்ற அடிப்படையில் மட்டும் ஆதரவும், எதிர்ப்பும் வருகிறதா? அல்லது அதற்கும் மேல் ஏதாவது சக்திகளின் தலையீடுகள் இருக்கிறதா? இப்படிப்பட்ட ஆய்விற்குள் செல்வோமானால், ஒன்று பட்ட ஆந்திரமாநிலத்தில் விவசாயம் தான் முக்கியமான பொருளாதாரம். அதில் அநேகமாக பெருவிவசாயிகள் மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பெரும் பண்ணையார்கள், பல்லாயிரக்கணக்கான நிலங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அந்த மாநிலத்தின் வரலாறு. அதிலும் பெரும்பண்ணைகளாக இருப்பவர்கள் சில குறிப்பிட்ட சமூகங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
குறிப்பிட்டு சொல்லப்போனால் ரெட்டியார் சாதிப் பண்ணையார்களும், கம்மாநாயுடு சாதிப் பண்ணையார்களும் பெரும்பாலும் ஒன்று பட்ட ஆந்திராவின் பல்லாயிரக்கணக்கான நிலங்களை ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இவர்கள் பெருவாரியாக இருக்கக்கூடிய வட்டாரங்களாக ராயலசீமா மாவட்டங்களும், கடலோர மாவட்டங்களும் அடையாளம் காட்டப்படுகின்றன. ஆகவே அந்த வட்டாரங்களிலிருந்து எழுகின்ற ஒன்றுபட்ட ஆந்திரா என்ற முழக்கம், இத்தகைய சக்திகளின் பிரதிநிதித்துவத்தை புலப்படுத்துகிறது. இதில் குறிப்பாக சிக்கலுக்கு உள்ளான பகுதியாக, ஐதராபாத் நகரம் இருக்கிறது. ஒன்றுபட்ட ஆந்திராவின் தலைநகர் அது என்பதனால், மேற்கண்ட ஆதிக்க சாதிகள் தங்களது நலன்களுக்கான பல்வேறு சொத்துக்களையும், தொழில்களையும் ஐதராபாத் நகரிலேயே குவித்திருக்கிறார்கள். ஐதராபாத் நகரம் வரலாற்று ஆதாரப்படி, தெலுங்கானா உடன் சென்று விடும் என்ற கருத்து இவர்களை அச்சுறுத்திவிட்டது. அதுவே இவர்களது பெரும் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.
இப்போது ஐதராபாத் நகரையும் இழக்காமல், அதே சமயம் தனி தெலுங்கானாவிற்கும் இசைவு கொடுத்து மத்திய அரசு ஒரு சமரசத்தீர்வை வைக்கலாம் என்று சம்மந்தப்பட்டவர்கள் எண்ணுகிறார்கள். அதாவது தெலுங்கானா மாநிலத்திற்கும், ஆந்திர மாநிலத்திற்கும் பொதுவான ஒரு நகரமாக ஐதராபாத் நகரை ஆக்கிவிடலாம் என்பது அந்த சமரச திட்டத்தின் ஒரு பகுதி என்பதாகவும் செய்திகள் வருகிறது. அதே சமயம் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், தங்களது போராட்டத்தை டெல்லி வரை எடுத்துச் செல்ல தயாராகிவிட்டார்கள். ஐதராபாத் நகரம், ஆதிக்க சாதி பண்ணையார்களுக்கு, தனிநபர் நலன் சார்ந்த விசயமாக இருப்பதனால்தான், சிக்கல் கூடியுள்ளது என்பதை இப்போது மத்திய அரசு உணர்ந்திருப்பதாக தெரிகிறது.
எது எப்படி இருந்தாலும் தெலுங்கானாவில் இப்போது எழுந்து இருக்கும் எழுச்சி, அவர்களுடைய முன்னேற்றப்பாதைக்கு ஒரு முதல்படி என்பதை கூறாமல் இருக்கமுடியாது. அதுவே ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் என்றும் உணராமல் இருக்கமுடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment