இலங்கை தீவில் வரயிருக்கின்ற அதிபர் (ஜனாதிபதி) தேர்தலில் முக்கியமான போட்டி மகிந்தா ராஜபக்சேவிற்கும், சரத்பொன்சேகாவிற்கும் என்பதாக ஆகிவிட்டது. இதில் தமிழர் வாக்குகள் எந்தப் பக்கம் என்பது ஒரு இமாலய கேள்வியாக நின்றுக் கொண்டிருக்கிறது. அதை அடைவதற்கான முயற்சிகள் இரண்டு பக்கமும் தீவிரமான ஏற்பாடுகள், வாக்குறுதிகள், குற்றச்சாட்டுகள், வாய்ச்சவடால்கள், சூளுரைகள் விடப்படுகின்றன.
யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய சரத்பொன்சேகா தமிழர்கள் மத்தியில் புதுவிதமான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார். அதில் தான் தன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால், அவசர கால சட்டம் உடனடியாக நீக்கப்படும் என்கிறார். இதை அவரை ஆதரிக்கும் ஐக்கிய தேசிய கட்சியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் ஏற்கனவே சொல்லிவருகின்றன. யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வளையங்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்படும். காணாமற் போனவர் மற்றும் கைதுச் செய்யப்பட்டோர் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பலாலி விமான நிலையம் விரிவாக்கப்பட்டு, அனைத்து நாட்டு தரத்திற்கு மாற்றப்படும். மேற்கண்ட வாக்குறுதிகளை மக்களிடம் கூறியதுமட்டுமின்றி, ஊடகவியலாளர் சந்திப்பிலும் குறிப்பிட்டுள்ளார். உயர் பாதுகாப்பு வளையங்கள் இன்று தேவையில்லை என்றும், போர் முடிவடைந்த நிலையில் அவற்றின் அவசியம் இருக்கவில்லை என்பதும் அவரது கூற்று. போர் முடிந்த உடனேயே அவை நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால் மகிந்தா ஆட்சியில் அது நடக்கவில்லை. இப்படித்தான் பொன்சேகாவின் பேச்சு இருக்கிறது. தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், முதலில் முகமாலை, தணங்கிளப்பு, அறியாலை, யாழ்நகர், பலாலி, நாகர்கோவில் பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ பாதுகாப்பு வளையங்கள் அனைத்தும் நீக்கப்படும் என்பதாக குறிப்பிட்டே பொன்சேகா கூறுகிறார்.
காணாமற்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் ஆகியோரில் இன்னமும் சிறையில் உள்ளவர்களின் விவரங்கள் உடனடியாக பகிரங்கப்படுத்தப்படும் என்கிறார். இதில் போர்காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தவிர இப்போது முகாமில் வைக்கப்பட்டுள்ள 10,000க்கு அதிகமான இளைஞர்களின் விவரங்களும் அதற்குள் அடங்கும் என்கிறார். சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். காணாமல் போனவர்கள் உயிருடன் உள்ளவர்கள் குடும்பங்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.
மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான, அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படாமலேயே மக்கள் மீள்குடியேற்றப்படுகிறார்கள் என்றும், அதை மகிந்தா தேர்தல் நாடகமாக நடத்துவதாகவும் பொன்சேகா கூறியிருக்கிறார். அப்படி மீள்குடியேற்றம் நடத்தப்பட்ட பகுதிகளிலும், கள்ள ஓட்டுகள் போட ஆளும்கட்சி திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். மீள்குடியேற்றத்திற்காக அனைத்து நாட்டு நிவாரண நிதி வந்தது என்றும், அதை ராஜபக்சே கம்பெனி களவாடி விட்டது என்றும் கூறுகிறார். உயர் பாதுகாப்பு வளையம் சம்மந்தப்பட்ட ராணுவ, அரசியல் விவரங்கள் தனக்கு தெரியும் என்கிறார் பென்சேகா. தன்னைப் போல் களத்தில் இல்லாமல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வெளிநாட்டவர் போல பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே அந்த இடத்திற்கு வந்தார் என்று பொன்சேகா குற்றஞ்சாட்டினார்.
தன்னை ராணுவ ஆட்சிக்கு வழிவகுப்பவன் என்று குற்றம் சுமத்துவதாகவும், அப்படி தான் நினைத்திருந்தால் இப்போதுள்ள அரசத்தலைமையை எப்போதோ சிறையிலடைத்து ஆட்சிக்கு வந்திருப்பேன் என்றும் பொன்சேகா கூறினார். இந்த நாடு அனைத்து குடிமக்களுக்கும் சொந்தம் என்றும், தமிழ் மக்களை இரண்டாந்தர குடிமக்களாக பார்ப்பது தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாகவும், வடக்கிலும், கொழும்பிலும் கணிசமாகவும் இருக்கிறார்கள். அவர்களது பெரிய கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிம், பொன்சேகாவை ஆதரிக்கிறார். அவரும் வலிய பொன்சேகா ஆதரவு கூட்டத்தில் பேசும்போது திறந்த வெளிகளிலே தமிழ் மக்கள் ஒழுங்கான மலசல வசதிகள் கூட இல்லாமல், ஒழுங்கான மருத்துவ வசதிகள் இல்லாமல், பாடசாலைகள் இல்லாமல் ஆடு, மாடுகள் போல் விரட்டியடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று மகிந்தாவை சாடிப் பேசுகிறார். மன்னார் மாவட்டத்திலே, சிலாவத் துறையிலே வாழ்கின்ற மக்களுக்கு நகருக்குச் செல்கின்ற சுதந்திரம் கூட இல்லை என்றும் கூறுகிறார். பொன்சேகா வந்தால் ராணுவ ஆட்சி என்கிறார்கள் என்றும் கிழக்கிலே நடப்பது என்ன என்றும் கேள்வி கேட்டு, திருகோண மலையிலே முன்னாள் ஜெனரல் தான் அரசாங்க அதிபர் என்றும் குற்றஞ்சாட்டினார். அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்தை கொடுக்கின்ற மிகப்பெரிய பொறுப்பை பொன்சேகா ஏற்றுள்ளார் என்றும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
ஆயுத கொள்முதலில் ஊழல் செய்ததாக மகிந்தாவை பொன்சேகா குற்றஞ்சாட்ட, பகிரங்க விவாதத்திற்கு தயாரா என மகிந்த தரப்புக் கேட்க, பொன்சேகா தயார் என பதில் சொல்ல, அரசத்தலைவர் மகிந்தா நேரடியாக பகிரங்க விசாரணையில் கலந்துகொள்ள முடியாது என்று அவர் தரப்பு பல்டி அடித்துள்ளது. இந்த சவால்கள் ஒருபுறம் இந்திய அரசியல் வாதிகளின் லாவணிக் கச்சேரியை நினைவுப்படுத்துகிறது. அதேபோல பொன்சேகா முதலிலேயே 13வது சட்டத்திருத்தத்தை தாண்டியும் தான் அதிகாரங்களை மாகாணங்களுக்கு கொடுக்க முடியும் என்று கூறிய சொற்றொடரை, இப்போது மகிந்தாவும் கூறத்தொடங்கியுள்ளார். அதிரடிப்படையினர் மத்தியில் மகிந்தாவிற்கு வாக்களிக்கக் கோரி, பிரத்தியக துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் இழவு விழுந்த எம் தமிழர் வீட்டில், இருவரும் வாக்குக் கேட்கவா வருகிறார்கள் என்ற கேள்வியும் தமிழர் நெஞ்சங்களில் எழுந்துள்ளது. மகிந்தா தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அறிவித்துள்ளது. 2 கொலைகாரர்களில் யாரையும் அரசியல் என்ற பெயரில் ஆதரித்தோமானால், இனப்படுகொலை வாதத்தை மழுங்கடிக்கவே செய்யும் என்றும் கருத்துக்கள் வருகின்றன. கொலைக்கார இருவரில் ஒருவருக்கு ஆதரவாக தமிழ் சமூகம் செல்லுமானால், உலகத்தின் முன்னால் என்ன சொல்வீர்கள் என்றும் கேட்கிறார்கள்.
அதே நேரம் சில சிந்தனையாளர்களின் கேள்விகள் கூட, விவாதத்திற்கு வந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றால், சகஜமான குடிமக்கள் நிர்வாகத்தை ஏற்படுத்துவேன் என்று பொன்சேகா கூறுகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்காக ஒரு குழு உருவாக்கப்படும் என்றும், அதில் ஜனாதிபதியின் நியமனப் பிரதிநிதி ஒருவரும், வட்டார செயலாளர்கள், மற்ற அதிகாரிகள், எம்.பி.க்கள், வட்டார அதிகாரப் பிரதிநிதிகள், நிதித்துறை அதிகாரிகள், பாதுகாப்பு படையின் தளபதிகள் மற்றும் காவல்துறை, குடிமக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இருப்பார்கள் என்பது பொன்சேகாவின் விளக்கம். அவர்கள் ஒவ்வொரு மாதமும் அரசத்தலைவருக்கும், அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் அறிக்கைகள் கொடுப்பார்கள் என்றும், முன்னேற்ற ஏற்பாடுகளை அரசத்தலைவர் கண்காணிப்பார் என்றும் பொன்சேகா விளக்கியிருக்கிறார். இதில் சகஜமான குடிமக்கள் நிர்வாகத்தை வடக்கே எப்படி நிறுவப்போகிறார் என்றும், எப்போது அது சாத்தியம் என்றும் கேள்விக் கேட்கிறார்கள்.
ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டுமே, அதை பொன்சேகா எப்படிப் பெறுவார் என்றும் கூட கேள்விகள் எழுந்துள்ளன. குடிமக்கள் நிர்வாகத்திற்கு பாதுகாப்புப் படையின் தளபதிகள் எதற்காக பிரதிநிதிகளாக வரவேண்டும் என்றும் அறிவு ஜீவிகள் கேள்விக் கேட்கிறார்கள். அது ஒரு வழியில் குடிமக்கள் நிர்வாகத்தை முழுமையாக ராணுவ மயமாக்கல் செய்வதாகத் தானே மாறும் என்றும் சிக்கலான கேள்விகளை எழுப்புகிறார்கள்.
இத்தனை குழப்பமான விவாதங்களுக்கு மத்தியில், மகிந்தாவை தோற்கடிப்பது என்ற மனோபாவம் பொதுவாக எழுந்து வருகிறது. இந்திய அரசு எந்தப் பக்கம் என்பதை பொறுத்து இருந்து தான், சொல்வார்கள் போலும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment