Monday, January 11, 2010

தமிழர் கிழக்கு மாவட்டங்களை ஆக்கிரமிக்கும் சிங்களர்கள்.

இலங்கைத் தீவில் வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் ஈழத்தமிழர்களது தாயகமாக இருந்து வருகிறது. வடக்கு மாகாணத்தில் பல மாவட்டங்களும், கிழக்கு மாகாணத்தில் பல மாவட்டங்களும் இருக்கின்றன. வடக்கும், கிழக்கும் இணைந்து தான் தமிழர் தாயகம் என்பதாக, இலங்கைத் தீவை ஆண்ட ஜெயவர்தனே காலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதனால் தான், அவர் 1987ல் இந்திய தலைமையமைச்சராக இருந்த ராஜிவ் காந்தியுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில், அந்த முறையிலேயே எழுதி கையெழுத்திட்டிருந்தார். இலங்கை ஆட்சியாளர்களாலேயே எழுதப்பட்ட கையெழுத்தின் தலையெழுத்தை மாற்றி எழுத ஒரு மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு வந்தார். வந்த கையோடு உச்சநீதிமன்றம் மூலமாக, வடக்கையும், கிழக்கையும் தனித்தனியாக பிரித்தார். அன்று ராஜபக்சேக்கு ஆதரவாக வடக்கையும், கிழக்கையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்று தீர்ப்புக் கொடுத்த, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர், இப்போது வடக்கையும், கிழக்கையும் இணைத்து தமிழர்களுடைய வாழ்விடத்திற்கு சரியான அடையாளத்தை கொடுக்க வேண்டும் என்று தனது கருத்தை, தனது பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிற்பாடு கூறுகிறார். இப்போது அதே ஓய்வு பெற்ற தலைமை நீதியரசர், மகிந்த ராஜபக்சேக்கு எதிராக சரத்பொன்சேகாவை ஆதரிக்கும் அணியிலிருக்கிறார். இப்படி சில தனிநபர்கள் அணி மாறினாலும், தமிழர் தாயகத்தை இணைப்பதா, பிரிப்பதா என்பதில் தான் இரண்டு அணிகளுக்கும் மத்தியில் முக்கியமான வேறுபாடு இருப்பதாக சமீபத்திய விவாதங்கள் காட்டுகின்றன.
வடக்கையும், கிழக்கையும் ஒன்று சேர்க்க விடமாட்டேன் என்று பகிரங்கமாகவே, ராஜபக்சே கொக்கரித்துள்ளார். இரண்டு மாகாணங்களையும் பிரிப்பதின் மூலம் அவர் எதைச் சாதிக்க விரும்புகிறார் என்பதுதான் முக்கியமான விஷயம். தமிழர்களுக்கு என்று ஒரு தாயகம் இருக்கக் கூடாது என்ற எண்ணம் சிங்கள பேரினவாதிகளிடம் ஊறியிருக்கின்ற ஒரு சிந்தனை. சிங்கள மக்கள் அனைவருக்கும் இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான சிந்தனை இருப்பதாக தெரியவில்லை. பெருவாரியான சிங்கள மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் விவசாயிகளாக வாழ்கிறார்கள். விலைவாசி உயர்வை தாக்குப்பிடிக்க முடியாதவர்களாக, வறுமையில் வாடுகிறார்கள். அவர்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய தவறான ஒரு காட்சி காட்டப்பட்டு வருகிறது. அதாவது தமிழர்கள் தனிநாடு கேட்டு, தங்களது நாட்டு ஒற்றுமையை உடைத்து விடுவார்கள் என்று பேரினவாதிகள் பரப்புரை செய்து வருகிறார்கள். தமிழர்களின் விடுதலைப் போராளிகள் என்று பிரபலமாக அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சிங்கள மக்கள் மத்தியில் இந்த பேரினவாதிகள் பரப்பியிருக்கிறார்கள். இந்தியாவிலிருக்கும் தமிழ் நாட்டைச் சுட்டிக்காட்டி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று ஏற்கனவே பரப்பியிருக்கிறார்கள். இந்தியா என்ற பெரியதொரு வரைபடத்தைக் காட்டி, அங்கேயிருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதுபோல ஒரு மாயையை ஏற்படுத்தி, பீதியை உருவாக்கியிருக்கிறார்கள்.
சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள், முதலில் பெருவாரியான சிங்கள மக்கள் மீது தான் தங்களது உளவியல் பரப்புரை போரை நடத்தியிருக்கிறார்கள். அதனால் பீதியடைந்த சிங்கள மக்கள், தமிழர்கள் என்றாலே பயம் கவ்வும் அளவிற்கு சென்றிருக்கிறார்கள். அந்த நேரத்தில் பயங்கரவாதத்தை எதிர்த்துத்தான் போர் நடத்துகிறோம் என்று இனவாத போரை நியாயப்படுத்தி பரப்பினார்கள். அதை நம்பிய சிங்கள மக்களும் புலிகள் மீதான போரை விரும்பினார்கள். அதனால் தான் போர் வெற்றியை சிங்கள மக்கள் கொண்டாடினார்கள். பட்டினிக் கிடக்கும் சிங்கள மக்கள் தங்கள் வீட்டு இளம் பிள்ளைகளை, நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ராணுவத்திற்கு அனுப்பினார்கள். ராணுவத்தில் சிங்கள இளைஞர்கள் பலியாவதன் எண்ணிக்கை அதிகமாகும் போது, துவண்டு போனார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ராணுவத்திற்குச் சென்ற சிங்கள வீரர்களின் பலி எண்ணிக்கை கூடியதைக் கண்டு விரக்தியடைந்தார்கள்.
இத்தகைய நிலைமையில் தான், இதுவரை ஏற்படாத அளவு போரை விரும்பிய சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியிலேயே, அதிபர் தேர்தலுக்கான இரண்டு முக்கிய வேட்பாளர்களின் போட்டியால், பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. போர் முடிந்த பிற்பாடு நாட்டை ஒற்றுமைப்படுத்த, தமிழ் மக்களையும் அணைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் சிங்கள மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. அத்தகைய சூழலில் தான் வடக்கும், கிழக்கும் இணைப்பது அல்லது பிரிப்பது என்ற விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது.
கிழக்கு மாகாணத்தை தங்கள் கைக்குள் ராஜபக்சேயின் ராணுவம் கொண்டு வந்த பிற்பாடு, அங்கே தங்களது கைப்பொம்மை பிள்ளையானை முதலமைச்சராக்கியது. கருணாவை தங்களது கட்சியான ஐக்கியச் சுதந்திர முன்னணிக்குள் ராஜபக்சே சேர்த்துக் கொண்டார். அதனால் பிள்ளையான் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்ற கட்சி இயங்குகிறது. தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெருவாரியாக இருக்கின்ற கிழக்கு மாவட்டங்களில், இந்த இரண்டு சமூகங்களையும் நம்பி ஆட்சி நடத்த ராஜபக்சே விரும்பவில்லை. அதனால் கிழக்கு மாகாணத்தை சிங்களமயமாக்குவது என்பது அவர்களின் திட்டம். அதற்கு சிங்கள குடியேற்றத்தை கொண்டு வந்து, கிழக்கு மாகாணத்தில் திணிக்க வேண்டும். அதன் மூலம் தமிழர்களுடைய பாரம்பரிய பூமி என்ற பெயரை, கிழக்கு மாகாணம் இழக்க நேரிடும்.
வடக்கையும், கிழக்கையும் இணைப்பதற்கு ஒப்புதல் கொடுக்கும் பொன்சேகாவை, மீண்டும் தமிழீழத்தை உருவாக்க முயற்சிக்கிறார் என்பதாக ராஜபக்சே கட்சியினர் குற்றம் சாட்டியது இத்தகைய புரிதலில் தான். இப்போது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் மட்டகிளப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுநகர் நகராட்சிக்கு மேயராக, ராஜபக்சே கூட்டணியை தேர்வு செய்யப்பட்ட தமிழ் பெண்ணான சிவகீதா பிரபாகரன் கூட்டணி மாறிவிட்டார். இவர் பிள்ளையான் கும்பலுடன் இருந்தார். பிறகு ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சென்றுவிட்டார். நேற்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களிடம், தான் பொன்சேகாவை ஆதரிப்பதாக கூறிவிட்டார்.
இத்தகைய சூழலில் அவசர, அவசரமாக கிழக்கு மாகணத்திலுள்ள மாவட்டங்களை, சிங்கள குடியிருப்புகளாக மாற்றுவதற்கு ராஜபக்சே அரசு திட்டமிடுகிறது. அதில் ஒரு உதாரணம் தான், திரிகோண மலை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி. அங்கே குரான்ங்குப்பாங்சான் என்ற முஸ்லிம் கிராமத்தில் சிங்களர்களை நிர்பந்தமாக குடியேற்றும் செயல் நடைபெறுகிறது. இதை முன்னாள் எம்.பி.எம்.எஸ்.தௌபீக் புகாராக கூறியுள்ளார்.
அதேபோல மட்டகிளப்பு மாவட்டத்திலுள்ள, தமிழ்தேசிய கூட்டமைப்பபின் நாடாளுமன்ற உறுப்பினராக பி.அரியநேத்திரன் ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார். கடந்த 3 மாதங்களாக அரசாங்கம் பாரம்பரிய தமிழர் பகுதிகளில் 107 சிங்கள குடும்பங்களை, குடியேற்ற ஏற்பாடு செய்துள்ளது என்ற புகாரை கூறியுள்ளார். 2009ம் ஆண்டு டிசம்பர் 7ம் நாள், மட்டகிளப்பு அரசு செயலகத்தில் நடந்த வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், பட்டிப்பாழை என்ற பிராந்தியத்தில் கேவுலியாமடு என்ற இடத்தில், 107 சிங்கள குடும்பங்களை குடியேற்ற மண் குடிசைகளை கட்டி வருகிறார்கள் என்று அந்த எம்.பி. கூறுகிறார்.
அரசு ஏஜென்ட் மூலம் அந்த குடிசைகளை நீக்க முயற்சித்தும் முடியவில்லை என்கிறார். கேவுலியாமடுவிலிருந்து கச்சக்கோடி சுவாமிமலை வரை 230 சிங்கள குடும்பங்களை குடியேற்றியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். கேவுலியாமடுவில் உள்ள அரசு நிலத்தில் சில சிங்கள ஆக்ரமிப்பாளர்களுக்கு, நில உரிமை ஆவணத்தை, கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாரை மாவட்டத்தின் அரசு ஏஜென்ட் செய்துள்ளார் என்றும் அம்பலமாகியுள்ளது. அதிபர் தேர்தல் நேரத்திலும், ராஜபக்சேயின் சிங்கள குடியமர்த்தல் என்ற காலனிமயப்படுத்தல் என்ற கொடுமை நிகழத்தான் செய்கிறது. தேர்தல் நேரமானதால் இந்த உண்மைகள் வெளியே வந்துள்ளன. உலக சமூகம் இந்த உண்மைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கான தாயகத்திற்காக குரல் கொடுக்குமா என்பதை நாம் இப்போது கேட்போம்.

No comments:

Post a Comment