சமீபத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்று அழைக்கப்படும் ஜார்கண்ட் விடுதலை முன்னணி என்ற கட்சியின் தலைவரான சிபுசோரன் முதலமைச்சராக, ஜார்கண்ட் மாநிலத்தில் பதவியேற்றார். சென்ற முறை காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் சிபுசோரன் முதல்வரானார். இந்த முறை பா.ஜ.க.வின் ஆதரவில் அவரே முதல்வராகியுள்ளார். யாருடைய ஆதரவு என்பது கேள்வி இல்லை. சிபுசோரன் முதல்வராக ஆக வேண்டும் என்பதே அங்குள்ள கணக்கு. இந்த கணக்கு சிபுசோரன் என்ற தனிமனிதனுடைய விருப்பக்கணக்கு மட்டுமா? ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சியின் விருப்பம் மாத்திரமா? காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க. கட்சிக்கும், ஜார்கண்ட் மாநிலத்தில் வேறு வழியே இல்லையா? காங்கிரசும், பா.ஜ.க.வும் தங்களை அகில இந்திய கட்சிகளாக நம்பிக் கொண்டிருப்பவர்கள், ஜார்கண்டில் மட்டும் ஏன் மாறி, மாறி ஒரு பிரபல ஜார்கண்டியை, அதாவது ஆதிவாசி தலைவரை முதல்வராக்க முயலவேண்டும்? அப்படிப்பட்ட சூழல் ஜார்கண்ட் மக்களிடையே நிலவுகிறது என்று அவர்கள் அனுமானித்திருக்கிறார்களா? ஜார்கண்ட் வாசி என்ற மனோபாவம் அங்குள்ள மக்கள் மத்தியில், உள்நீரோட்டமாக இருக்கிறது என இந்த அகில இந்திய கட்சிகள் உணர்ந்திருக்கிறார்களா? தங்களது இருத்தல் பாதிக்கப்படுவதாக உணரக்கூடிய இனம் தான், அதிகமாக தங்களது நேரடி பிரதிநிதித்துவத்தை விரும்பிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட உணர்வு ஜார்கண்ட் வாசிகளுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ஜார்கண்ட் வாசிகளின் இருத்தல் என்ற உரிமை பறிக்கப்படுவதாகவோ, மறுக்கப்படுவதாகவோ அவர்கள் உணரத் தலைபட்டு விட்டார்களா?
மேற்கண்ட கேள்விகளெல்லாம், சிபுசோரன் முதல்வராக மீண்டும் நியமிக்கப்படும் போது உருவாவது நியாயம் தானே? அதையொட்டி சிபுசோரன் மாவோயிஸ்ட் தலைவருடன் பேசுவதற்கு, தனது உதவியாளரை அனுப்பியதாக செய்திகள் வந்திருக்கின்றன. மாவோயிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட இயக்கம். அதன் தலைவராக அந்த வட்டாரத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற கிஷன் ஜி, அரசாங்கங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற ஒரு நபர். முதலமைச்சராக சிபுசோரன் பொறுப்பெடுத்த பிற்பாடு, இப்படிப்பட்ட ஒரு ரகசிய சந்திப்பு நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு ரகசிய சந்திப்புக்கு அவசியம் என்ன? பொதுத்தேர்தலில் பதினெட்டு இடங்களில் வெற்றிபெற்ற, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, அதில் ஆறு இடங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதரவில் தான் வெற்றி பெற்றது என்பதாகவும், அதனால் தான் ரகசிய சந்திப்புகள் என்பதாகவும் சில ஏடுகள் அங்கலாயிக்கின்றன. இதுதான் உண்மையான காரணமா? அல்லது ஜார்கண்ட் வாசிகளின் இருத்தல் கேள்விக்குறியாயிருக்கும் நேரத்தில், அத்தகைய ஆதிவாசிகளின் அடையாளத்தை உயிர்ப்பிக்க, ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகளுடன் பேச வேண்டிய நிர்ப்பந்தம் முதல்வர் சிபுசோரனுக்கு ஏற்பட்டுள்ளதா? இத்தகைய ஆழமான கேள்வி நமக்கு எழுகிறது.
ஜார்கண்ட் வாசிகள் என்ற அடையாளம் பல்வேறு ஆதிவாசிகள் இனங்களின் ஒட்டுமொத்த அடையாளமாக அந்த வட்டாரத்தில் இருக்கிறது. அந்த வட்டாரத்தில் இறக்கப்படும் பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் மூலமாக, ஆதிவாசிகளின் பாரம்பரிய உரிமையான கனிமவளங்கள் களவாடப்படுகின்றன. மலைகளும், காடுகளும் லாபநோக்க சிந்தனையுள்ள தனியார் மூலம் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆதிவாசிகளுடைய உழைப்பும் கூட கடுமையாக சுரண்டப்படுகிறது. இவையெல்லாம் பொருளாதார ரீதியாக ஆதிவாசிகளது பாரம்பரிய சொத்துக்களை அழித்தல் என்று நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இப்போது புதியதொரு பிரச்சனையும் தெரியவருகிறது. அது ஜார்கண்ட வாசிகளின் பண்பாடு அழிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு.
மேற்கண்ட குற்றச்சாட்டை எழுப்புபவர் ஏ.கே.ராய் என்ற ஆதிவாசி தலைவர். அவர் ஜார்கண்ட முக்தி மோர்ச்சா ஒரு அரசியல் கட்சியாக, தேர்தல் பாதைக்கு வருவதற்கு முன்னால், அந்த இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவர். 1982ம் ஆண்டு, அதாவது ஏறத்தாழ 28 ஆண்டுகளுக்கு முன்னால், முதன் முதலில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை, ஏ.கே.ராய் எழுப்புகிறார். அப்போது ஜார்கண்ட் என்ற தனி மாநிலம் உருவாக்கப்படவில்லை. அந்த வட்டாரம் பீகார் மாநிலத்தில் அப்போது இருந்தது. மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி அதை ஏ.கே.ராய் தலைமை தாங்கி வருகிறார். அவர் பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக அந்த வட்டாரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது கட்சி 4 சட்டமன்ற உறுப்பினர்களை பலமுறை தேர்தலில் வெற்றி பெற வைத்து அனுப்பியுள்ளது. அப்படிப்பட்ட அனுபவம் கொண்ட எம்.சி.சி. என்ற தொழிற்சங்கத்தின் தலைவரான ஏ.கே.ராய் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைப்பதால், அதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஜார்கண்ட் மக்களின் பண்பாடு என்பது குறிப்பாக ஆதிவாசிகளின் பண்பாடு. அது அடிப்படையில் சமத்துவ பண்பாடு. அதை சோசலிச பண்பாடு என்று ஏ.கே.ராய் அழைக்கிறார். மேல், கீழ் என்ற பாரபட்சம் அந்த பண்பாட்டில் கிடையாது. வரதட்சணை, பர்தா, சடங்குகள், மதவாதம் ஆகியவை அவர்கள் மத்தியில் இல்லை. சமத்துவமும், உழைப்பை பெருமையாக மதிப்பதும் பாரம்பரியமாக அங்குள்ள ஆதிவாசிகள் கொண்டுள்ள குணங்கள். அவர்களில் கல்வி கற்றோர் இப்போது முதலாளித்துவ பண்பாடுகளில் பழகி விட்டனர். அதனால் தங்கள் மக்களின் பாரம்பரிய பண்பாட்டிலிருந்து, அன்னியப்பட்டு வருகின்றனர். அவர்களின் பாரம்பரிய பண்பாடு சிறிது, சிறிதாக அழிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் பகுதிகளில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அதில் அந்த ஆதிவாசிகளுக்கு பணியாற்ற உரிமையில்லை. அவர்கள் சுரங்க தொழில் வேலைகளை முன்பு பெற்று வந்தார்கள். அதையும் இப்போது இயந்திரங்கள் செய்யத் தொடங்கிவிட்டன. ஆகவே சுரங்க தொழில் துறையிலிருந்தும் அந்த ஆதிவாசிகள் நீக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் காடுகளில் வாழ்கிறார்கள். ஆனால் வனயிலாகா என்ற அரசாங்கத் துறையில், அவர்களில் யாரும் பணியில் இல்லை. மரங்களை காடு முழுக்க, ஒப்பந்தக்காரர்களும், வனயிலாகா அதிகாரிகளும் இணைந்து வெட்டுகிறார்கள். பழியை ஆதிவாசிகள் மீது போட்டு விடுகிறார்கள். சோட்டா நகர் வனங்களை அழித்தது யார்? வனயிலாகாவும், ஒப்பந்த காரர்களும் தானே. அந்த இருகும்பலும் தங்களது வீடுகளை, பங்களாக்களாக கட்டியிருப்பதிலிருந்தே தெரியவில்லையா?
தன்பாத், ஹசாரிபக், ராஞ்சி, பாட்னா ஆகிய இடங்களிலுள்ள ஆதிவாசிகள் அல்லாத ஒப்பந்தக்காரர்கள் காடுகளை அழிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆதிவாசி மக்களுக்கு இடம் இல்லாமல் போனது போல, அவர்கள் வளர்த்த மரங்களுக்கும் இடம் இல்லாமல் போய்விட்டது. ஆதிவாசிகளின் பாரம்பரிய கருவிகளான வில்லையும், அம்பையும் எடுத்துச் செல்ல இப்போது அனுமதி மறுப்பு வரத்தொடங்கியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் ரவீந்திர நாத் தாகூர் சீனா பற்றி ஒரு செய்தியைக் கூறினார். ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு சீனாவில், ஹாங்காங் மூலமாக பீரங்கிகளுடன் போதை மருந்தை பரப்பினார்கள் என்று கூறினார். இப்போது அதேபோல, காவல்துறை உதவியோடு ஆதிவாசிகள் மத்தியில் போதை பரப்பப்படுகிறது. பாரம்பரிய பண்பாட்டில் ஜார்கண்ட் வாசிகள் போதை மருந்துகளை பயன்படுத்தாதவர்கள் தொழிற்சாலைகள் இந்த வட்டாரத்தின் வளங்களை கொள்ளையடித்துச் செல்கின்றன.
பிர்சா முண்டா சிலை ஜார்கண்ட் தலைநகரில் வைக்கப்பட்டுள்ளது. அந்த தலைவர் ஆங்கிலேயரை எதிர்த்து ஆதிவாசிகள் இயக்கத்தை பொருளாதார, அரசியல், பண்பாட்டு புரட்சியாக நடத்தினார். அவரது இயக்கத்தில் அனைத்து வகை ஆதிவாசிகளும் இணைந்து செயல்பட்டனர். தனி மாநிலமாக அறிவித்த பிறகு, அன்னிய சக்திகள் ஆதிவாசிகளின் பண்பாட்டை அழிப்பது என்ற நோக்கத்தை செயல்படுத்தி வருகிறார்கள். அங்கே எழுகின்ற எழுச்சியெல்லாம், அவர்களது பண்பாட்டை, அதன் அடையாளத்தை காப்பாற்றுவதற்கான எழுச்சிதான் என்பதை அனைத்து இந்திய மக்களும் புரிந்துகொள்ளும் காலம் வந்துவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment