Thursday, May 27, 2010

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஏன் தாமதம்?

மத்திய அமைச்சரவை நேற்று கூடிய போதும், விவாதித்து ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. இந்தியாவில் நடந்து வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் இணைக்கப்பட வேண்டுமா என்பது பற்றி ஒரு முடிவு எடுக்கமுடியவில்லை. இதுதான் இந்திய மத்திய அமைச்சகத்தின் கொள்கை நிலை. அமைச்சர்கள் குழு ஒன்றை நிறுவி, அந்த குழு தனது கருத்தை தெரிவிக்கும் என்பதாக ஒரு நழுவல்வாத முடிவை மத்திய அமைச்சகம் நேற்று எடுத்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஏன் இந்த அளவுக்கு சர்ச்சைக்குள்ளாகிறது? இந்தியாவின் மத்திய அரசால் 1931ம் ஆண்டு, அரசியல் சட்டத்தின் 340வது பிரிவின் அடிப்படையில் நிறுவப்பட்ட காகா கலேல்கர் தலைமையிலான, பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையம் நாடு தழுவிய அளவில் உள்ள சமூகரீதியில், கல்விரீதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை பற்றிய ஆய்வை செய்தது. அந்த காகா கலேல்கர் ஆணையம் 1955ம் ஆண்டு தனது அறிக்கையை கொடுத்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை அவர்களது வேலை அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும், எழுத்தறிவு விழுக்காடு அடிப்படையிலும், பொதுவான கல்வி முன்னேற்ற அடிப்படையிலும் அந்த ஆணையம் மதிப்பீடு செய்திருந்தது. அந்த ஆணையத்தின் அறிக்கை அப்போதே நாடாளுமன்றம் முன்னால் வைக்கப்பட்டது. ஆனாலும் கூட அதன் மீது எந்த விவாதமும் நாடாளுமன்றத்தில் நடத்தப்படவில்லை.
அதேசமயத்தில் 1961ம் ஆண்டு மத்திய அரசு, மாநில அரசாங்கங்களுக்கு ஒரு வழிகாட்டல் அனுப்பியது. அதில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் வரையறைச்செய்யும்படி கேட்டுக்கொண்டது. அந்த வழிகாட்டலில் மத்திய அரசு, சாதிவாரியாக மதிப்பீடு செய்யாமல் பொருளாதார அளவுகோலை வைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அடையாளம் காணுமாறு கூறியிருந்தது. அதாவது அன்றைய சூழலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து, அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சென்ற, மற்றும் அரசு அலுவலகப் பணிகளுக்கு சென்ற, அமைச்சர்களாக பொறுப்பேற்றிருந்த நபர்களுக்கு தங்கள் சமூகங்களின் முன்னேற்றத்திற்கான இடஒதுக்கீட்டை, சமூக, கல்விரீதியான பின்தங்கிய நிலையை கணக்கில் கொண்டு அடைய வேண்டும் என்ற விழிப்புணர்வு கிடைக்கவில்லை என்பது புரிகிறது.
அதையொட்டி பல்வேறு மாநில அரசாங்கங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை அடையாளம் காண தனி ஆணையங்களை நியமிக்கத் தொடங்கின. அதுதான் தமிழ்நாட்டில் அம்பாசங்கர் ஆணையம் என்ற ஒன்று உருவாவதற்கும் வாய்ப்பாக அமைந்தது. அம்பாசங்கர் ஆணையத்தின் வழிகாட்டல் தமிழ்நாட்டில் சில முன்னேறிய சாதிகளைக் கூட, பிற்படுத்தப்பட்ட சாதிகளாக அறிவிக்கும் நிலையை ஏற்படுத்தியது. இந்த அணுகுமுறை அகில இந்திய ரீதியில் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகங்களை அணுகிப்பார்த்த தன்மையிலிருந்து, மாறுப்பட்டு இருந்ததா என்பது இப்போதும் சர்ச்சைக்குள்ளாக்கப்படாமல் இருக்கிறது.
உதாரணமாக பீகார் மாநிலத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பூமிகார் என்ற சமூகம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தது. மண்டல் ஆணையத்தின் அறிக்கையில் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பற்றிய மறுஆய்வு வெளியிடப்பட்டது. அதில் பூமிகார் என்ற அந்த சமூகம் முன்னேறிய சமூகமாக அறிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட புதிய நிலைமைகளை ஒட்டிய மதிப்பீடுகளை, மண்டல் ஆணையம் தன்னால் முடிந்த அளவிற்கு செய்து காட்டியது. ஆனாலும் கூட 1931ம் ஆண்டு இந்தியாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான், மண்டல் ஆணையமும் தனது மதிப்பீட்டை செய்ய வேண்டியிருந்தது. அதுவே காலாவதியான கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டது என்பதால், சில இடங்களில் பொருத்தமாக இல்லை என்ற விமர்சனத்திற்குள்ளானது.
அதனால் தான் 1931ம் ஆண்டிற்குப் பிறகு, எடுக்கப்படாத சாதிவாரி கணக்கெடுப்பு, இந்த முறையாவது மக்கள் தொகை கணக்கெடுப்பில் இணைக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை வலுவாக எழுகிறது. உள்ளபடியே இந்திய அரசியல் சட்டப்பிரிவுகள் 341 மற்றும் 342 ஆகியவற்றின் கீழ் இடஒதுக்கீடு, பட்டியலின சாதிகளுக்கும், பட்டியலின பழங்குடியினருக்கும் மட்டுமே, குடியரசுத் தலைவரின் அறிவிப்பாணையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சாதிகள் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது அனுமதிக்கப்படவில்லை. மாறாக சமூக ரீதியில் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியுள்ள வகுப்புகள் என்ற பெயரில் இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
1979ம் ஆண்டு சட்டபிரிவு 340ன் கீழ், இன்னொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையமான மண்டல் ஆணையம் உருவாக்கப்பட்டது. அதில் சமூக, கல்வி ரீதியான பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை விளக்குவதற்காக 4 நிபந்தனைகள் கொடுக்கப்பட்டன. 1980ம் ஆண்டின் இறுதியில் மண்டல் தனது அறிக்கையை கொடுத்தார். அந்த அறிக்கையில் 3வது பாகத்தில் 1வது பிரிவில் காகா கலேல்கர் ஆணையம் பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது. கலேகர் ஆணையம் சமூக, கல்வி ரீதியான பின்தங்கிய வகுப்புகளை சரியான நிபந்தனைகளுடன், புறநிலை சோதனைகளுடன் முன்வைக்க தவறிவிட்டது என்பதாக கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றமும், பல உயர்நீதிமன்றங்களும் இதே வரையறைகளை கேட்டுக்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் அடையாளங்களையும் கேட்டு வருகின்றனர். கெடுவாய்ப்பாக மண்டல ஆணையமும், அதை நிவர்த்திச் செய்யவில்லை. மண்டல ஆணையத்தின் 12வது பாகத்தில், 22வது பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், இந்திய மக்கள்தொகையில் 52% என்பதாக எழுதப்பட்டுள்ளது. அதுவும் 1931ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே தொடர்ந்து நிலையானது என்று எப்படி கூறமுடியும்?
1931ம் ஆண்டில் இந்தியா என்ற நாடு, பாகிஸ்தானையும், இன்றைய வங்காளதேசத்தையும் சேர்த்து இருந்தது. அப்போதுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இப்போது எப்படிப் பொருந்தும்? அதனடிப்படையில் 1981ம் ஆண்டிற்கும், அதன்பிறகு 2007ம் ஆண்டிற்கும் பொருத்திப் பார்க்கும் மத்திய அரசை எந்த நிலையில் ஏற்றுக் கொள்ளமுடியும்? 198283ம் ஆண்டு மண்டல் அறிக்கை நாடாளுமன்றத்தில் 2 முறை விவாதிக்கப்பட்டது. அப்போது மாநிலங்கள் அடையாளம் கண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும், மண்டல் அறிக்கையால் அடையாளம் காணப்பட்டதற்கும் மத்தியில் பெருத்த வேறுபாடு தெரிந்தது.
1991ம் ஆண்டு செப்டம்பர் 25ல், பிரதமர் வி.பி.சிங்கால், மண்டல் அறிக்கை மறுஉரு பெற்று அமுலாக்கப்பட்டது. மண்டல் அறிக்கையில் 3743 சாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், மண்டலால் 2 கிராமங்களும், ஒரு ஒன்றியமும் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 0.06% கிராமங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சமூகபொருளாதார கள ஆய்வு 3745 சாதிகளில், 406 சாதிகள் பற்றி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 11% சாதிகள் மட்டுமே கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதனால் தான் இப்போது எடுக்கின்ற மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் மீண்டும் வலுப்பெறுகிறது.
கலேல்கர் ஆணைய அறிக்கையில் தமிழ்நாட்டில் 156 பிற்படுத்தப்பட்ட சாதிகள் அடையாளம் காணப்பட்டன. அதேசமயம் தமிழ்நாடு அரசு 1245 சாதிகளை, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாக அறிவித்துள்ளது. அசாமிலும், கர்நாடகாவிலும், மஹாராஷ்ராவிலும் இதேபோல மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் உச்சநீதிமன்றம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான உயர்கல்வி இடஒதுக்கீட்டில் 27% கூட இடைக்கால தடைசெய்தது. அதற்கான காரணத்தைக் கூறும் போது, 1931க்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை என்பதையே கூறியிருந்தது. இத்தனை காரணங்களையும் எடுத்துச்சொல்லி, இன்னமும் பின்தங்கியிருக்கும் மக்கள் பிரிவினரை முன்னேற்ற, அரசாங்கம் திட்டங்களை தீட்டுவதற்கு, சாதிவாரி கணக்கெடுப்பின் காரணங்களை முன்வைத்து, தமிழக அரசு கடுமையாக போராட வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment