Sunday, June 27, 2010

போபால் நச்சுவாயு விபத்தில், குற்றவாளியை தப்பிக்கவைத்தது ராஜீவ் காந்திக்கு தெரியுமா?

போபால் மக்களின் கொலைகள் மீதான வழக்கு, விசாரணைக்கு பிறகு இருபத்தாறு ஆண்டுகள் கழித்து, தீர்ப்பு வந்தாலும் வந்தது, அது இப்போது இந்திய அரசியல் அதிகாரத்தில் காலம், காலமாக இருப்பவர்களின் நாட்டுப்பற்றை கேள்விக்கு உள்ளாக்கி விட்டது. முதலில் வெளிவந்த போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி குற்றவாளிகளுக்கு வெறும் இரண்டாண்டு தண்டனையை மட்டும் கொடுத்தது என்று விவாதம் எழுந்தது. அதற்கு காரணமும் உச்சநீதிமன்றத்தின் 1996 ஆம் ஆண்டின் தீர்ப்புதான் என்று விளக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் தனது குறுக்கீட்டில் குற்றபபிரிவை நீர்த்து போகச்செய்து விட்டது என்பதே அந்த விளக்கம். அதற்கு பொறுப்பு அன்று இருந்த தலை நீதியரசர் அகமது என்பது அம்பலமானது. அந்த அகமதும் இரண்டாண்டு கழித்து போபாலில் குற்றவாளி கம்பெனியான அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனம் யூனியன் கார்பைடு நடத்திய , போபால் நினைவு மருத்துவ மனையின் தலைவர் பொறுப்புக்கு அமர்த்தப்பட்டார் என்பது தெரிய வந்தது. இது பச்சையான ஊழல் என்பதை உலகம் புரிந்து கொண்டது. ஆனாலும் பெரிய அளவில் ஊழல் செய்தவர் பெரிய இடத்தை சேர்ந்தவர் என்றால் இந்தியாவில் பெருமாள் செய்த மாதிரி எனக்கூறி விட்டு விட்டுவிடுவார்கள். தனது குடும்பத்தின் இளைய தலைமுறைக்கு அதாவது வாரிசுகளுக்கு பதில்சொல்ல வேண்டிவருமே என நினைத்தாரா என்று தெரிய வில்லை நீதியரசர் அகமது, தான் காரணமல்ல என்று பதில் சொன்னார். ஏன் அரசு முதல் குற்றவாளி வாரன் ஆண்டர்சன்னை ஓடவிட்டார்கள் என்று அகமது பதில் கேள்வியை கேட்டுவிட்டார். இப்போது ஊடகங்கள் அதிகமாக வந்து விட்டதால், குறிப்பாக காட்சி ஊடகங்கள் போட்டிபோட்டுக்கொண்டு, சம்பந்தப்பட்டவரை நேரில் சென்று பேட்டி கேட்டுவிடுகிறார்கள்.சம்பந்தப்பட்டவரும் தனது அப்போதைய மனோநிலையில் இருந்து பதில் சொல்லி விடுகிறார். அதுவே ஒளிபரப்பப்பட்டு விடுகிறது. அப்படி செய்திகள் வெளிவரும்போதுதான் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருகின்றன. மக்களுக்கு தெரிந்துவிடுகிறது. மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் தங்களுக்கு எதிராக வந்த பிறகு அரசியல் கட்சிகள் அஞ்சுகின்றன. அதை உடனடியாக மறைக்க அல்லது மறுக்க அரசியல் கட்சிகள் முயல்கின்றன. இந்த இடத்தில் போபால் பிரச்சனை மக்கள் மனதுகளில் இந்திய அரசை பற்றி, குறிப்பாக காங்கிரசு ஆட்சியை பற்றி, அதன் மக்கள்விரோத மனப்பான்மை பற்றி, அதிலும் பன்னாட்டு மூலதன கம்பெனியை பாதுகாப்பதற்க்காக, இந்திய மக்களின் மரணங்களை கூட துச்சமாக நினைப்பது பற்றி, அதுவும் அமெரிக்க அரசுக்கு அடிபணிந்து மத்திய அரசு சென்றதை பற்றி, பகிரங்கமாக இருபத்தாறு ஆண்டுகள் கழித்து அம்பலமாகி உள்ளது. குறிப்பாக திருவாளர் பரிசுத்தம் என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி, 25000 பேரை கொலை செய்த வழக்கில் அமெரிக்க பணக்காரரை, தப்பவிட்ட சம்பவம் பற்றி, அதற்கு காரணமானவர் என்று அந்த ராஜீவ் காந்தி அம்பலமாகி இருப்பது பெரிய சிக்கலை ஏற்ப்படுத்திவிட்டது. ஏன் என்றால் அந்த ராஜீவ் பெயரை சொல்லித்தான் இப்போதைய காங்கிரசு கட்சியின் தலைமையும், எதிர்கால காங்கிரசு கட்சியின் தலைமையும், அதாவது ராஜிவின் மகன் ராகுலும் ஆட்சியில் அமர்ந்திருக்க முடியும்.
இந்த அளவுக்கு முக்கியமான பிரச்சனையாக ஆள்வோர் இந்த தீர்ப்பை எண்ணுவதால்தான், ஒரு அதிகாரமுள்ள அமைச்சர்கள் குழுவை அரசு அறிவித்தது. எதோ மக்கள் மீது அக்கறை வைத்து, அல்லது மக்களுக்கு ஆபத்து வந்துவிட்டதே என அக்கறைப்பட்டு, அல்லது உண்மை குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில், அல்லது உணமைக் குற்றவாளியான ஆண்டர்சன்னை பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், திட்டமிடவோ, ஆலை வளாகத்தில் இன்னமும் இருக்கும் திடக்கழிவுகள் நீக்கப்படவேண்டும் என்ற சிறந்த நோக்கத்தில், . அல்லது பாதிக்கப்பட்ட போபால் மக்களுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டுமே என்ற உணர்வில் இந்த அதிகாரமுள்ள அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது அரசு என்று அரசை பற்றி யாரும் எண்ணவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது இப்போது. ஏனென்றால், பிரச்சனை கிளம்பி விட்டது. ராஜீவ் காந்தி பெயரை கருப்பு புள்ளி விழுந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்பது அவர்களுக்கு இப்போது முதல் பணியாக மாறிவிட்டது. ஏன் என்றால் அன்றைய மத்திய பிரதேச முதல்வராக இருந்த அர்ஜுன்சிங்,
தான் ஆண்டர்சன்னை வெளியே விட்டதற்கு காரணமே, மத்திய மேலதிகாரம் தான் என்பதை அநேகமாக கூறிவிட்டார். ராஜிவுக்கு ஆண்டர்சன் தப்பித்தது பற்றியே தெரியாது என்று கூறி வந்த இன்றைய காங்கிரசு ஆட்சியாளர்களுக்கு, அன்றைய ராஜிவின் முதன்மை செயலாளராக இருந்த பீ.சீ.அலக்சாண்டர், பதில் கூறி விட்டார். அதாவது ராஜிவுக்கு ஆண்டர்சன் அமெரிள்ளவிளிருந்து கிளம்பும்போது போட்ட நிபந்தனை தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதற்கு பிறகு எல்லாம் கூறப்பட்டது என்று கூறி விட்டார். அதாவது ஆண்டர்சன் தப்பித்து செல்லும்போது, ராஜிவின் ஒப்புதலுடன் தான் அந்த நாடகம் நடத்தப்பட்டது என்பதை கூறிவிட்டார். இநத்தகைய சூழலில்தான், இன்றைய மத்திய அரசு ஒரு அதிகாரமுள்ள மைச்சர்கள் குழுவை போபால் பற்றி முடிவு எடுக்க போட்டுள்ளது. அந்த குழுவும் தனது பங்குக்கு, இழப்பீடு தொகையை நிர்ணயித்து அதை கொடுக்கவேண்டும் எனவும், ஆண்டர்சன்னை பிடித்து வரவேண்டும் எனவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்ற போதுமான வேலைகளை செய்ய வேண்டும் எனவும் தனது கம்பீரமான தீர்மானங்களை அறிவித்து முதலில் தனது இருப்பை காட்டியது. பிறகு மெல்ல பூனை பையை விட்டு வெளியே வருவதுபோல, ராஜிவுக்கு ஆண்டர்சன் வந்ததும், தப்பித்ததும் தெரியாது என ஒரு பச்சை பொய்யை சொல்லிவிட்டது.
இப்போது அதிகாரமுள்ள அமைச்சர்கள் குழுவின் ஒவ்வொரு தீர்மானமாக அலசி பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த குழுவின் பரிந்துரைகளில், இறந்தவர் எண்ணிக்கையிலும், ஆலை வளாகத்தில் இருக்கும் கழிவுகளின் அளவுகளிலும், போபால் நச்சால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான அமைப்புகள் மாறுபடுகின்றன.கூடுதலாக ரூ.700 கோடியை இழப்பீட்டுக்காக இந்த குழு பரிந்துரை கூற, மத்திய அரசு அறிவித்துள்ளது.2010 ஆம் ஆண்டு ரூ. 700 கோடி என்பது, 1989 ஆம் ஆண்டு இந்திய ரூபாயின் டாலர் மதிப்பீட்டின்படி, ரூ.150 கொடிதான் வரும். இந்த நிதி பாதிக்கப்பட்ட 5 ,74 367 மக்களுக்கு போய்ச்சேராது. மாறாக 45166 பேர்களுக்கு மட்டுமே போய்ச்சேரும். இந்த எண்ணிக்கை மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் எட்டு விழுக்காடே வரும். குறைந்தது 529201 பேராவது இழப்பீடு கிடைக்காமல் இருக்கிறார்கள்.150000 மக்கள் இருபத்தைந்து ஆண்டுகளாக பதிப்பிலேயே இருப்பவர்களை, இப்போது அரசு தற்காலிகமாக காயம் பட்டவர்கள் என்று அறிவித்து அவர்களுக்கு எந்த இழப்பீடும் கிடையாது என அறிவித்துள்ளது.இறந்தவர் எண்ணிக்கையை பொறுத்தவரை 1992 வரை ஏழு பேர்தான் இறந்ததுபோல அதிகாரபூர்வமாக கூறப்பட்டுள்ளது.1997 ற்கு பிறகு மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதுபற்றி இந்த அமைச்சர்கள் குழு எதுவுமே கூறவில்லை.இப்போது கழிவை சுத்தப்படுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசும், மத்திய பிரதேச அரசும் தங்களிடம் அதற்க்கான தொழில்நுட்ப வசதிகள் இருந்தால் இது நாள் வரை அந்த கழிவு அகற்றலை செய்யாமல் இருப்பார்களா? அவர்களிடம் அதற்க்கான வசதிகள் கிடையாது. ஆனால் இப்போது இந்த அமைச்சர்கள் குழு அவர்கள் செய்வார்கள் என அறிவித்துள்ளது.அதற்காக ரூ.300 கோடியை அரசு அறிவித்துள்ளது.நீரி என்ற மத்திய அரசின் சுற்றுசூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஆலை வளாகத்திற்கு வெளியே கழிவுகள் நிலத்தடி நீரில் பரவவில்லை என்று தவறாக கொடுத்த தகவலை, இந்த அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டுவிட்டது. 11 லட்சம் டன் நச்சு கழிவுகளை, ஆலை வளாகத்திற்கு உள்ளேயே 16 ஹெக்டர் நிலத்திற்குள் புதைக்கவேண்டும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.இந்த கழிவுகளை அளக்க முதலில் வளர்ந்த தொழில்நுட்பம் தேவை. அதை ஐரோப்பிய யூனியன் அளிக்கத்தயார் என அறிவித்தும்கூட, நீரி கூறும் தவறான கருத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நீரி கூறிய நிலத்தடி நீரில் கழிவு பரவவில்லை என்பதை யூனியன் கார்பைடு நிர்வாகமே மறுத்துள்ளது.மேலும் 13 ஆய்வுகள் இந்த நீரி அறிக்கையை நிலத்தடி நீர் கழிவாகவில்லை என்பதை மறுத்துள்ளன.ஆனால் இப்போது அமைச்சர்கள் குழு இந்த தவறான அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இதுதவிர யூனியன் கார்பைடையும், அதை இப்போது வாங்கியுள்ள டௌ கெமிகல்சையும், பொறுப்பேற்க செய்வதிலும் இந்த அமைச்சர்கள் குழு தவறி விட்டது. கழிவுகளை ஆலை வளாகத்திலேயே புதைப்பது என்பது மிகவும் ஆபத்தானது. அதை வெளிநாடுகளுக்கு கப்பல் ஏற்றி அனுப்புவதே சரியாக இருக்கும் என ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
வாரன் ஆண்டர்சன்னை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பிடித்து வருவது சம்பந்தமான அமைச்சர்கள் குழு அறிவிப்பை ஆர்வலர்கள் ஆதரிக்கிறார்கள்.உச்சநீதிமன்றம் வழக்கின் முக்கிய பிரிவை நீர்த்து போகச்செய்ததை மீண்டும் வலுப்படுத்த அமைச்சரவை குழு எடுத்த முடிவையும் ஆர்வலர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட போபாலுக்கு, பொருளாதார, மருத்துவ, சமூக மறுவாழ்வு பணிகளுக்காக, ஒதுக்கப்பட்ட ரூ. 272 கோடியில் முக்கால் பங்கை மாநில அரசுக்கு கொடுத்துள்ளது. ஆனால் மாநில அரசு ரூ.530 கோடிக்கு மேல் செலவழித்ததாக கூறியும், யாருக்கும் ஒருவருக்கு கூட பொருளாதார மறுவாழ்வு கிடைக்கவில்லை. ஏன் இன்றும் 20000 பேருக்கு மேல் நல்ல குடிநீர் கிடைக்காமல் இருக்கிறார்கள்? ஒரு ஆணையத்தை அமைத்து அதன் மூலம் எல்லா விசயத்தையும் கையாளுமாறு, மத்திய அரசை வற்புறுத்தி போபால் பாதிக்கப்பட்டோர் டில்லி வரை நடந்து சென்று நீண்ட நாள் போராட்டத்திற்கு பின், மன்மோகனிடம் வாக்குறுதி பெற்றார்கள். அது என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. அதனால் இந்த அதிகாரமுள்ள அமைச்சர்கள் குழு, முக்கியமாக ராஜீவ் காந்தியின் முகத்தை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் காப்பாற்றவே போடபாட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.இந்த நேரத்தில் பிரபல ஆங்கில இதழ் நேற்றைய தனது அம்பலப்படுத்தலில், 1984 ஆம் ஆண்டு டிசம்பர்-7 ஆம் நாள் வெளிவந்த தங்கள் இதழில் வெளியிடப்பட்ட செய்தியை இப்போது எடுத்து போட்டுள்ளனர். அதில் அன்றைய பிரபல ஊடகவியலாளர் ஜி.கே.ரெட்டி எழுதியதை வெலியிட்டுள்ளனர். ஜி.கே.ரெட்டி அன்றைய காலத்தில், டில்லி அதிகாரவர்க்கத்தின் ஊடகவியலாளர் பிரதிநிதி என்றே அழைக்கப்பட்டவர். அன்றாடம் டில்லியில் அதிகார மட்டத்தில் நடக்கும், அல்லது நடக்க இருக்கும் எந்த செய்தியையும் விமர்சனங்களுடன் எழுதக்கூடியவர். அவர் செய்திகளை கூறுவதைவிட விமர்சனங்களையே எழுதுவார். அந்த கட்டுரையில் அவர் அன்றைய பிரதமரின் மூத்த செயலாளராக இருந்த அலக்சாண்டரின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அந்த நாளில், ராஜீவ் மத்திய பிரதேசத்தில் இருந்தார் என்றும், அதனால் அவரிடம் ஆண்டர்சன் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையை விட்டு புறப்படுவதற்கு முன்பே, அந்த செய்தி பற்றி ராஜீவ் காந்திக்கு சொல்லியாகிவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு சிக்கல் இப்போது வரும் என்று யாருக்கும் தெரியாத சூழலிலேயே இந்த செய்தி வெளியாகி இருக்கிறது என்பதே இன்றைக்கு கூடிய அதிகாரமுள்ள அமைச்சர்கள் குழு அறிவித்துள்ள விவரத்திற்கு முரணாக உள்ளது. ஆகவே அமைச்சர்கள் குழு இந்த மூடி மறைக்கும் முயற்சியில் தோற்று விட்டது என்பது நிரூபணமாகிவிட்டது. நீங்கள் எவ்வளவு மறைத்தாலும், உண்மை ஒருநாள் வெளியாகும், அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும் என தெரிகிறது.
அன்றைக்கே ராஜீவ் காந்திக்கு பெரிய அளவில் செல்வாக்கு இருந்தும்கூட, அமெரிக்காவை சார்ந்து நிற்க வேண்டிய தேவை இல்லாத சூழ்நிலையிலும், அமேரிக்கா கூறிய கட்டளைகளுக்கு படிந்தும், அமெரிக்க பன்னாட்டு கம்பனியின் மூலதநித்திர்க்கு தலைவனங்கியும், அவர்களது உத்தரவுப்படி ராஜீவ் காந்தியும், இந்திய அரசாங்கமும், அடிபணிந்துள்ளது என்பது ஆண்டர்சன்னை தப்பவிட்ட கதை அம்பலமானத்தில் அம்பலமாகியுள்ளது.

No comments:

Post a Comment