உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு எதிர்பாராத இடத்திலிருந்து, எதிர்பாராத மனிதராக சீத்தாராம் யெச்சூரி வந்தார். உரையாற்றினார். தமிழ்மொழி தழைத்தோங்கி இருக்கிறது என்றார். அதற்கு காரணம் எளிய மக்கள் மத்தியில் உயிரோட்டமாக தொடர்ந்து இருப்பதுதான் என்றார். சமஸ்கிருதம் என்ற மொழி எளிய மக்கள் மத்தியில் பேச்சு வழக்கில் இல்லை என்பதை சொல்லவில்லை. காரல் மார்க்ஸ் மொழியை சிந்தனையின் உடனடி வெளிப்பாடு என்று கூறியதை மேற்கோள் காட்டினார். ஸ்டாலின் மொழி பற்றி, அது ஒரு சாதனம் என்று கூறியதாக விளக்கினார். ஸ்டாலின் கூற்றுப்படி மொழி என்பது ஒரு சமூகத்தின் மேல்தளமுமல்ல; அடித்தளமுமல்ல. அது ஒரு உற்பத்தி கருவி. உற்பத்தி கருவியின் இன்றியமையாத பங்கை, சமூக முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள். மொழி பற்றி மொழி மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி தனது பாராட்டுக்களை மொழி மாநாட்டில் கூறியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.
தமிழனின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் பற்றியும் கருத்து சொல்லாமல் அவரால் தமிழ்நாட்டை விட்டு புறப்பட முடியவில்லை. மதுரைக்கு சென்றிருக்கிறார். சனிக்கிழமை ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். அதில் இலங்கைத் தமிழர்கள் பற்றி ஒரு உரையாற்றி இருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுக்க, தங்கள் கட்சியின் பார்வையில் நின்று கொண்டு, ஒரு அரசியல் தீர்வை பேசியிருக்கிறார். ஏற்கனவே புலம் பெயர்ந்த தமிழர்களால், ஈழத்தமிழர் போர் நடந்து வரும் காலத்திலேயே பல ஆண்டுகளுக்கு முன்னால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக து.ராஜாவையும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக சீத்தாராம் யெச்சூரியையும் வெளிநாட்டிற்கு அழைத்து , விவாதித்து சில விளக்கங்களை கொடுத்து இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களது பார்வையில் சிறிதாவது மாற்றம் வருமா என்று உலக தமிழ் சமூகம் கவனித்து வருகிறது. அந்த நிலையில் யெச்சூரியின் இந்த உரை கவனிக்கப்படவேண்டும்.
யெச்சூரி தனது உரையில் மனிதாபிமான தளத்தில் நின்று கொண்டு, உள்நாட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு நிவாரணமும், மறு குடியேற்றமும், மறுவாழ்வும் கொடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். அவற்றை அமலாக்கும் போதே, அனைத்து நாட்டு பார்வையாளர்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்றும் அதை இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதையும் தாண்டி அனைத்து நாட்டு நிறுவனங்கள் இடம் பெயர்ந்த தமிழர்களின் மறுகுடியேற்றத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்த உடனடியாக அவர்களை இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதை விரைவு படுத்துவதனால் மட்டும்தான் சிறுபான்மை தமிழ் மக்கள் வாழும் இடங்களில், பெரும்பான்மை சிங்கள மக்களது குடியேற்றம் நடத்தப்படாமல் இருக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
அப்படி நடக்குமானால் அதுவே மீண்டும் பதட்ட சூழலை ஏற்படுத்தி விடும் என்று யெச்சூரி பேசியிருக்கிறார். அதை அனைத்து நாட்டு சமூகம் அனுமதிக்கக்கூடாது என்றும் சுட்டிகாட்டிருக்கிறார். அதற்காக அண்டை நாட்டிலிருக்கும் அரசாங்கம் தனது முழுமையான முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்பதாக கூறியிருக்கிறார். அதே சமயம் அரசியல் தீர்வு ஈழத்தமிழர்களுக்கு அமுலாக்கப்படவேண்டும் என்பதை தங்களது கட்சி விரும்புவதாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். இந்த இடத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருக்கும், அரசியல் விழிப்புணர்வு பெற்ற முன்னேறிய பிரிவினரின் கருத்துக்களையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில், கொழும்பில் இருக்கும் அரசாங்கம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களை அரசியல் தீர்விலிருந்து தள்ளி வைப்பதற்கான முயற்சியை செய்து வருகிறது என்ற உணர்தல் அவர்கள் மத்தியில் இருக்கிறது.
தமிழர்களுக்கான அரசியல் இறையாண்மையைப் பற்றிய முடிவு எடுக்கப்படாமல் வளர்ச்சி என்பதை தொடர்பற்று பார்க்கக் கூடிய பார்வை, சிங்கள குறுங்குழுவாத அரசியலுக்குத்தான் வழி வகுக்கும். அதுவே அனைத்து நாட்டு அளவில் இயங்கக்கூடிய கார்ப்பரேட்டுகள் என்ற பெருவணிக குழுமங்களுக்கு சௌகரியமாகப் போய்விடும். எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பயனுள்ளதாக அமையாது. அதனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற தனிநபர்களோ அல்லது குழுக்களோ தனியாக வளர்ச்சிப் பற்றி முடிவெடுப்பது தற்கொலை முயற்சியாகும். மாறாக அவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டு அரசியல் முடிவை எடுத்துக் காட்ட வேண்டும். கொழும்பின் தொடர்பில் இல்லாமல் சுதந்திரமாக வளர்ச்சிப் பற்றி கையாள வேண்டும். நார்வேயில் இருக்கும் பேராசிரியர் சண்முகரத்தினம் கூட, அரசியல் தீர்வு இல்லாத வளர்ச்சிப் பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகிறார். அவர் தனி தமிழீழத்திற்கு ஆதரவானவர் அல்ல. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வேண்டி நிற்பவர். தன்னார்வமுள்ள கைதிகள் மூலமாக, சிறையை நிர்வாகம் செய்வதற்கொப்ப ஒரு முயற்சியை கொழும்பு அரசு கையாளத் தொடங்கியுள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் சிலரை முதலிலும், பிறகு பகுதி, பகுதியாகவும் தனது திட்டத்திற்கு கொழும்பு அரசு இழுத்து வருகிறது. அதன் மூலம் அவதியுறும் ஈழத்தமிழர்களுக்கு உடனடியான வளர்ச்சித்திட்டம் என்பதாக பேசி வருகிறது. அத்தகைய வளர்ச்சித் திட்டங்களை சிங்கள ராணுவமும், சிங்கள வெறிபிடித்த தன்னார்வ அமைப்புகளும் கையில் எடுத்துள்ளன.
ஈழத்தமிழர்களின் சொந்த தாயகத்திலேயே, ஒரு கட்டமைப்பு இன அழிப்பு என்பதை முழுமைப்படுத்த இந்த வளர்ச்சித் திட்ட அமுலாக்கல் என்ற தந்திரத்தை கொழும்பு அரசு முன்வைக்கிறது. உலக வணிகக்குழுமங்களும், போரில் வெற்றி பெற்றவர்கள் பக்கத்தில் தான் நிற்பார்கள். உலக சமூகம் மத்தியில் இருக்கின்ற அரசியல் உறுதி படைத்தோர் மட்டுமே இத்தகைய முயற்சியை எச்சரிக்கையுடன் காணமுடியும்.
ராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கல், புத்தமயமாக்கல் ஆகியவற்றை அமுலாக்குவதன் மூலம், தமிழ் தேசத்தின் நிலங்களை தங்களது பொருளாதார நலன்களுக்கு கீழ் சேவை செய்யும் ஒரு நிலைக்கு கொண்டு போக சிங்கள அரசு திட்டமிடுகிறது. உண்மையிலேயே வளர்ச்சி அல்லது நிவாரண திட்டங்களை செயல்படுத்த விரும்புகின்ற புலம் பெயர்ந்த தமிழர்கள், தங்களுக்குப் பின்னால் ஒரு நங்கூரத்தை அரசியல் தீர்வை நோக்கி எடுத்துச் செல்ல உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஈழத்தமிழர்களின் இணைய தளங்கள் எச்சரிக்கை மணியை ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் யெச்சூரியின் மதுரை உரையில் இருக்கின்ற சில செய்திகளை காணவேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு சுயாட்சி என்பதாக ஒரு அரசியல் தீர்வை அவர் பேசுகிறார்.அதே நேரம் ஒற்றையாட்சி என்பது வேறு என்றும் விளக்கியுள்ளார். ஒன்றுபட்ட என்பதற்கும், ஒற்றையாட்சி என்பதற்கும் வேறுபாடு உள்ளது என்கிறார். அவர் கூட்டமைப்பு முறையை முன்வைக்கிறார். அவரது புரிதலிலிருந்து அதற்கு இந்தியாவை உதாரணம் காட்டுகிறார். இந்த இடத்தில் அரசியல் தீர்வுக்கான ஒரு அழுத்தம் ஏற்கக்கூடியதே. தமிழர்கள் தங்களுடைய தேசிய விடுதலைக்கான போராட்டத்திலிருந்து, வளர்ச்சிக்கான தேவைக்காக சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் வருகின்ற அல்லது திணிக்கப்படுகின்ற வளர்ச்சித் திட்டங்களை, எந்த ஒரு அரசியல் தீர்வுடனும் இணைக்காமல் அனுமதிப்பது ஏற்கக்கூடிய ஒன்றா என்று சிந்திக்க வேண்டும்.
மனிதாபிமானம் என்ற பெயரில் அரசியல் அற்ற நிவாரணத்தையும், வளர்ச்சியையும் பேசக்கூடிய யாருமே உண்மையில் நிரந்தரமான, நீடித்த தன்மைக் கொண்ட மனிதாபிமானத்தை புரிந்து கொள்ளா தவர்கள். அல்லது மறைமுகமாக சதி செய்ப வர்கள் என்பதை வரலாற்று அனுபவங் களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டி யிருக்கிறது. குறைந்த பட்சம் யெச்சூரி போன்றவர்கள், இந்திய அரசின் மூலம் இலங்கை அரசை நிர்ப்பந்தித்து, தமிழ் நிலங்களை சிங்கள மயமாக்கு வதிலிருந்து தடுக்கட்டும். அதை உலகத் தமிழ் சமூகம் புரிந்து கொள்ளட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment