Tuesday, July 27, 2010

ஜூலை-28 தியாகிகள் தினம்.

இந்திய புரட்சியின் தானைத்தலைவர், தத்துவ வழிகாட்டி, வசந்ததத்தின் இடிமுழக்கத்தை நக்சல்பாரி கிராமத்தில், விதைத்த புரட்சியாளன், மார்க்சிசத்தை திரித்த திரிபுவாதத்தை புறமுதுகிட்டு ஓடச்செய்த புதிய பூகம்பம், எட்டு கட்டுரைகள் மூலம் திரிபுவாதத்தின் அனைத்து முகங்களையும் அம்பலப்படுத்திய அரசியல் புயல், இந்தியாவின் இளைய தலைமுறைக்கு எழுச்சியை ஊட்டிய வங்காள சிங்கம், இளம் தலைமுறையினரை தியாகம் செய்ய ஊக்குவித்த உணர்வு ஏந்தல், எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த வரலாறு, தோழர் சாருமஜூம்தார், இந்த நாளில்தான் வங்காள சிறையில் எதிரிகளின் சதியால் படுகொலை செய்யப்பட்டார். அதனால்தான் எங்களுக்கு இன்று தியாகிகள் தினம். அன்று சாரு எழுதிய திரிபுவாத எதிர்ப்பு எழுத்துக்கள், எங்களுக்கு நாடாளுமன்ற இடதுசாரிகளின் திரித்தல் வேலைகளை வெளிச்சம் போட்டு காட்டின. அன்று மாவோவின் போர்த்தந்திரங்களை, அப்படியே மாற்றி தேர்தல் களத்தில், பங்களா காங்கிரசுடன் கூட்டணி சேர்வதற்காக அதுதான் மாவோ சொன்ன ஐக்கியமுன்னணி தத்துவம் என திரித்து சொன்ன இடது சொரியர்களை அம்பலப்படுத்திய பதிவுகளில், சாருவை கண்டோம். இந்தியாவிற்கு அரசியல் சுதந்திரம் கிடைத்துவிட்டது என பொய்யான செய்தியை கூறி, தோழர்களை ஏமாற்றி வைத்த இடதுசாரிகளை அமபலப்படுத்தி, பொருளாதார சுதந்திரம் கிடைக்காமல் அரசியல் சுதந்திரம் எப்படி கிடைக்கும் என கேள்வி எழுப்பியவர் சாருமஜூம்தார். இது அரைக்காலணி நாடு என்பதை எடுத்து சொன்னதில், நாங்கள் சாருவை கண்டோம். இந்தியாவில் உள்ளது நிலபிரபுத்துவ மிச்ச சொச்சம் என்று சொன்ன நாடாளுமன்ற இடதுகளை எதிர்த்து, அரை நிலபிரபுத்துவம் இருப்பதை அமபலப்படுத்தி எங்கள் கண்களை திறந்தவர் சாருமஜூம்தார்.
இந்திய முதலாளிகள் சுதந்திரமான பெருமுதலாளிகள் என்று சொல்லி எங்களை குழப்பிய நாடாளுமன்ற இடதுகளின் குழப்பவாதத்தை உடைத்தெறிந்து, தரகு முதலாளிகள் இந்த நாட்டை ஆள்வதை எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்கள்
கண்களை திறந்தவர் சாருமஜூம்தார். மாவோ சிந்தனை மகத்தானது என்று எங்கள் சிந்தைகளை தெளிவுபடுத்தி, புரட்சிக்கு வழிகாட்டியவர் சாருமஜூம்தார். மார்க்சிய- லெனினிய- மா-சே-துங் சிந்தனை என்ற தத்துவ வழிகாட்டல்தான் நமது வழிகாட்டும் தத்துவம் என எங்களுக்கு புரியவைத்தவர் எங்கள் சாருமஜூம்தார். கிராமப்புறங்களை விடுதலை செய்து நகர்ப்புறங்களை சுற்றிவளைத்து விடுதலை செய்வதே மாவோவின் மக்கள் யுத்த தந்திரம் என எங்களுக்கு விளங்க வைத்தவர் சாருமஜூம்தார். நிலபிரபுத்துவ கட்டுமானத்தை பாதுகாக்கும் ஏகாதிபத்தியத்தை லெனினை காட்டி எங்களுக்கு விளங்கவைத்தார் சாருமஜூம்தார். ஏகாதிபத்தியத்திற்கு அடிமை வேலை செய்யும் தரகு முதலாளிகளை அம்மணமாக எங்களுக்கு அடையாளம் காட்டியவர் சாருமஜூம்தார். தத்துவ வழிகாட்டல் மட்டுமின்றி, போர்த்தந்திரத்தையும் கற்றுத்தந்தவர் சாருமஜூம்தார். மாவோவின் போர்த்தந்திரங்களை கற்று வந்த சாரு, எங்களிடம் கொரில்லா போரின் துவக்கத்தை எளிமையாக எங்கள் கிராமங்களில் பொருந்தும் நிலையில் பொருத்தி கூறினார். விளங்கிகொண்டோம். கொடுமை மிகு பண்ணையார்களை அழித்தொழிக்கும் கொரில்லா போரின் துவக்கத்தை எளிமையாக புரிய வைத்தார். அழித்தொழிப்பு இல்லாவிட்டால் எதிரியான எங்கள் ஊர் பண்ணையார்கள் எங்களை அழித்து, எங்கள் படையணியான கூலி மக்களின் முன்னோடிகளை அழித்துவிடுவர் என்ற யதார்த்த உண்மையை புரிந்து கொண்டோம். வர்க்கப்போரின் உச்சகட்டம் அது என அழகாக சாரு எடுத்து சொன்ன அறிவுரையை புரிய முடியா அறிவுஜீவிகள், கிராமத்தில் கூலி மக்களுடன் இணைய முடியாமல் ஓடி போனதையும் நாங்கள் கண்டோம். ஓடிபோனவர்கள் சாரு பற்றி புரிதல் இன்மையால், புரட்சி பற்றிய பயத்தின் காரணமாய், தியாகம் செய்ய அஞ்சி நடுங்கியதால், கிராமங்களை விட்டு, கூலி மக்களை விட்டு ஓடிச்சென்றனர். ஓடுகாலிகள் எப்போதுமே அதிகமாக நியாயம் பேசுவர். அதனால் எங்கு நோக்கினும் சாரு பற்றிய விமர்சனகளை அள்ளிவிட்டனர். அவதூறு செய்தனர். அது எல்லா நாட்டு புரட்சியிலும் நடக்கின்ற துரோக வரலாறுதான்.சாருவை நம்பியவர்கள், சாரு கூற்றை ஏற்றவர்கள், சாரு வரிகளை உணர்ந்து கொண்டவர்கள், அதை கிரகித்தவர்கள், புரட்சியில் நின்றார்கள். சாருவை தரித்தது தத்துவம் பேசியவர்கள், ஓடிச்சென்று சமரச பாதையில் பயணம் ஆனார்கள். மக்கள் திரள் அமைப்பு பற்றி பேசிவிட்டு மக்களை திரட்டாமலே எழுதியும், பேசியும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். சாரு நடைமுறையின், நடைமுறைக்கான தத்துவம். அதை விளங்கிகொண்டவர் மட்டுமே புரட்சிகர வாழ்க்கையை தொடர முடிந்தது. 1972 ஆம் ஆண்டு ஜூலை பதினாறில், மேற்குவங்க அரசு சாருவை கைது செய்தது. பன்னிரண்டு நாட்கள் சிறையில் இருந்தவரை, இருபத்திஎட்டாம் நாள் கொலை செய்தது. இதுதான் அரச பயங்கரவாதத்தின் செயல்பாடு. அதனால் இந்த நாள் இந்திய புரட்சியின் தந்தை கொல்லப்பட்ட நினைவு நாள். அதையே இந்திய புரட்சியாளர்கள் தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.

No comments:

Post a Comment