Tuesday, July 27, 2010

அமெரிக்கர்களைக் கொல்ல அமெரிக்கப் பணம்

2008ம் ஆண்டு ஆகஸ்ட் ஆவணம் என்ற பெயரில் விக்கிலீக்ஸ் மூலம் பல ரகசியங்களை நியூயார்க் டைம்ஸ் இணையத்தளத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. இங்லாந்தைச் சேர்ந்த கார்டியன் ஏடும், ஜெர்மனைச் சேர்ந்த தெர் ஸ்பிகல் ஏடும் இதேபோல செய்திகளை அம்பலப்படுத்தியது. அவையெல்லாமே பாகிஸ்தான் அரசின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. ஆப்கானிஸ்தானிற்கு எதிராகவும், இந்தியாவிற்கு எதிராகவும் சதி செய்ததாக ஆவண ரகசியங்களை வெளியிட்டிருந்தன. அதில் ஆப்கான் போர் பற்றி 92,000 அமெரிக்க ராணுவ ஆவணங்களை வெளியிட்டிருந்தன. அவை அனைத்துமே ரகசிய ஆவணங்கள். ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்த ஒரு அதிகாரி, தாலிபன் அதிகாரியுடன் சேர்ந்து ஆப்கான் அதிபர் ஹமீது கார்சாயை கொலை செய்ய சதி செய்ததற்கான ஆவணமும் இருக்கிறது.
பாகிஸ்தான் அரசுக்கு நேச நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் ஆப்கான் போருக்கு பாகிஸ்தான் அரசின் உதவியையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த போர் தாலிபனை எதிர்த்த போராக இருக்கிறது. அதே சமயம் பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை, ஆப்கானிலிருக்கும் தாலிபன் சக்திகளுக்கு உதவி செய்தால் அதுவே அமெரிக்க ராணுவத்திற்கு எதிரான செயலாக அமைகிறது. இவ்வாறு அமெரிக்க ராணுவத்திற்கு எதிரான சதிச் செயல்களையும், அவற்றை அமெரிக்க அரசின் நேச நாடான பாகிஸ்தான் அரசே தனது உளவுத்துறை மூலம் செய்ததையும், அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்தையும் கண்டு, அமெரிக்க அரசின் வெள்ளை மாளிகை கொதித்துப் போய்விட்டது. ஆனால் அதை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்காரர்கள் அது வெளிப்படைத் தன்மை கொண்டது என்பதாகவும், அதீத ரகசியத்திற்கு எதிரான போராட்டம் என்பதாகவும் விளக்கமளிக்கிறார்கள்.
ஆப்கான் தலைநகரான காபூல் நகரில் 2008ம் ஆண்டு ஜூலை 7ம் நாள் இந்திய தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது. அதில் 58 பேர் மரணமடைந்தனர். போலந்து நாட்டின் உளவுத்துறை இப்படிப்பட்ட தாலிபன் தாக்குதல் நடக்கும் என்று முன்கூட்டியே கூறியதாக, வெளியான அமெரிக்க ராணுவ ஆவணங்கள் கூறிப்பிட்டுள்ளன. சரியாக தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்பு இத்தகைய செய்தி கூறப்பட்டதாம். உடனடியாக அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் துணை இயக்குனர் ஸ்டீபன் ஆர். காப்பஸ், பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு சென்று அத்தகைய தாக்குதலுக்கு உதவி செய்வதாக ஐ.எஸ்.ஐ. உடன் சண்டையிட்டதாக அந்த அமெரிக்க ராணுவ ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் அத்தகைய தாக்குதல் பற்றி இந்திய அரசுக்கு கூறப்பட்டதா என்பது பற்றி அதில் தகவல்கள் இல்லை.
இப்போது ஆவணங்களில் உள்ள ரகசியங்கள் பற்றி வாய் திறக்காத அமெரிக்க அரசு, ரகசிய ஆவணங்கள் கசிந்தது எப்படி என்று ஆய்வு செய்கிறதாம். அதற்காக ஒரு விசாரணை தொடங்கியுள்ளது. அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் இந்த அம்பலப்படுத்தும் வேலையை செய்ததாகவும் தெரியவருகிறது. ஆப்கானில் நடக்கும் போரில் பல அப்பாவி குடிமக்களை நேட்டோ படைகள் கொலைச் செய்துள்ளன என்றும், அவை வெளியிடப்படவில்லை என்றும் இந்த ஆவணங்களிலிருந்து அம்பலமாகியுள்ளது. மேலும் ஆப்கானில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடும் தாலிபன்களுக்கு, பாகிஸ்தானும், ஈரானும் உதவி செய்துள்ளன என்ற ஆதாரங்களும் அதில் உள்ளது. நேட்டோ படைகளின் தாக்குதலில், 195 அப்பாவி ஆப்கான் மக்கள் அனாவசியமாக கொல்லப்பட்டனர் என்றும், 174 அப்பாவி மக்கள் காயமடைந்தனர் என்றும், மோட்டார் சைக்கிள் ஒட்டிய அப்பாவிகள் அல்லது ஒட்டுநர்கள் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டார்கள் என்றும் அது கூறுகிறது. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நேவடாவிலிருந்து, ரிமோட் மூலம் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கை குழுவிற்கு பணிக்குழு 373 என்று பெயர். அவர்கள் பயங்கரவாதிகளை தாக்கும் போது, அப்பாவி மக்கள் பலரையும் கொலைச் செய்திருக்கிறார்கள் என்ற உண்மையும் வெளியாகி உள்ளது. முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள கூட்டு செயல்பாடுகள் பட்டியல் என்ற பெயரில் 2000 மூத்த தாலிபன் மற்றும் ஆல்கெய்தா காரர்களை அமெரிக்கா குறிவைத்தது என்பது தெரியவந்துள்ளது. அதேபோல ஈரான் அரசும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக செய்திகள் உள்ளன. 100 ஆப்கான் தாலிபன்கள், ஈரானிலிருந்து தற்கொலைப் படைகளாக தாக்குதலுக்கு ஆப்கான் சென்றனர் என்ற செய்தியும் அதில் உள்ளது. இந்த அம்பலப்படுத்தலை செய்த விக்கிலீக்சின் நிறுவனர் ஜூலியன் அஸாங்கே கூறுகையில், ஆயிரக்கணக்கான போர் குற்றங்கள், ஆப்கானில் இழைக்கப்பட்டுள்ளன என்றும் அவை நீதிமன்றம் முன்னால் கொண்டுவர வேண்டும் என்றும், அதற்கான ஆதாரங்கள் இந்த ஆவணங்களில் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
போர்க் குற்றங்கள் பற்றி இலங்கையிலும், இந்தியாவிலும் விவாதங்கள் நடக்கின்ற இன்றைய சூழலில் இத்தகைய ஆவண அம்பலப்படுத்தல் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது. ஆப்கானில் உள்ள பயங்கரவாத்தை எதிர்த்து போராடுவதற்காகவே, அமெரிக்க அரசு பாகிஸ்தான் அரசுக்கு ஆண்டுதோறும் ஒரு பில்லியன் டாலர் கொடுத்துவருகிறது. அந்த பணத்தை பயன்படுத்தி, பாகிஸ்தான் அரசு தனது உளவுத்துறையின் மூலம் தாலிபன்களுக்கு கொடுத்து வருகின்றது என்ற செய்தி இப்போது அம்பலமாகின்றது. அதன் மூலம் ஆப்கான் போரில் அமெரிக்க ராணுவ வீரர்களை கொலைச் செய்வதற்கு, அமெரிக்க நிதியே உதவிகரமாக இருந்துள்ளது என்ற அதிர்ச்சி செய்தி உலகத்திற்கு தெரிந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் போர் தந்திர செயல்பாடுகள், மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளன என்பது வெளிப்படையாக தெரிவருகிறது.
அதில் இங்கிலாந்து ராணுவம் செய்த கேள்விக்குறிய துப்பாக்கிச் சூடுகளும் அம்பலமாகியுள்ளன. 2008ம் ஆண்டின் பிரான்ஸ் நாட்டு ராணுவம் ஆப்கானில் குழந்தைகள் பயணம் செய்த பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, 8 குழந்தைகளை காயப்படுத்தியதையும் இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. அதேபோல அமெரிக்க ராணுவம் பொது மக்கள் சென்ற பேருந்து மீது சுட்டு, 15 பயணிகளை கொலைச் செய்ததும் குறிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் ஒரு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குள் நுழைந்த போலந்து நாட்டு ராணுவம் சுட்டதில் பிரசவ வேதனையுடன் ஒரு பெண் உட்பட கொலைச் செய்யப்பட்டதும் குறிக்கப்பட்டுள்ளது. 2007 அக்டோபர்நவம்பர் மாதங்களில் காபூலில் தெருக்களில் இங்கிலாந்து ராணுவம் கண்டபடிச் சுட்டதும் பதிவாகியுள்ளது. ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஆங்கிலேயர்கள் விசாரணையை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டதால், அமெரிக்க ராணுவம் உண்மைச் செய்திகளை பெற முடியவில்லை என்றும் எழுதப்பட்டுள்ளது.
மேற்கூறியது போன்ற ஆதாரபூர்வமான செய்திகள், அனைத்து நாட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவதற்கான பல போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ள ஆப்கான் போரை நம் முன்னே வெளிப்படுத்துகின்றன. ஆயுத வியாபாரிகளை ஊக்குவிக்கும் நேட்டோ அரசுகள், ஆயுதம் தாங்கிய தாலிபன்களுடன் ஊடுருவி செயல்பட, பாகிஸ்தான் உளவுத்துறையை உற்சாகப்படுத்தினார்கள். அது தான் எரிகின்ற கொள்ளியை வைத்து தலையை சொறிந்து கொள்ளும் அணுகுமுறையின் எதிர் விளைவை இங்கே காட்டியுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் போர் என்ற பெயரில், பணக்கார நாடுகள் அதிபயங்கரவாதிகளாக மாறியுள்ள வரலாறுதான் இது.

No comments:

Post a Comment