அணுசக்தி பேராபத்து இழப்பீடு மசோதா 2010 என்று அழைக்கப்படும் ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழு முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைக்குழு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அமைச்சகத்தின் ஒரு குழு. அந்த நிலைக்குழு பல்வேறு கருத்துக்களை நாடெங்கிலும் கேட்டு அதன்மீது தங்களது பரிந்துரைகளை கூறவேண்டும். அதாவது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த இழப்பீடு மசோதாவின் மீது செய்யப்பட வேண்டிய மாற்றங்களை, அந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு தொகுத்து வைக்க வேண்டும். வருகிற வெள்ளிக்கிழமை அப்படிப்பட்ட கருத்துக்களை அந்த நிலைக்குழு பெறுவதற்கான கடைசி நாளாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவுடன் இந்திய அரசு செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தையொட்டி, நாடெங்கிலும் அணு உலைகளை ஆக்கத்திற்கான அணுசக்தியை உருவாக்குவது என்ற பெயரில் தொடங்குவதற்கு பல்வேறு யுரேனிய விநியோக நாடுகளை இந்திய அரசு நாடியது. சமீபத்தில் கூட கனடாவிற்குச் சென்ற நமது தலைமை அமைச்சர், எரிபொருளை எங்களை நம்பித் தாருங்கள் என்றும், அதைத் தாங்கள் அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தமாட்டோம் என்றும் வாக்குறுதி கூறி ஒப்பந்தத்தை உருவாக்கி விட்டு ஊர் வந்து சேர்ந்தார்.
அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்த நாட்டில் இருக்கும் அல்லது உற்பத்தியாகும் அணுசக்தியை, ஆக்கத்திற்கான அணுசக்தி, அழிவிற்கான அணுசக்தி என்பதாக இரண்டாக பிரித்து, அதில் முதல்வகை அணுசக்தியை உருவாக்குவதற்குத் தான் போடப்பட்டது என்பதாக அமெரிக்க அரசும், இந்திய அரசும் மாறி, மாறி கடந்த சில ஆண்டுகளாக சத்தியம் செய்து வருகிறார்கள். ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வரும் அணுஉலைகள், மின்சார உற்பத்திக்கான அதாவது ஆக்கத்திற்கான அணுசக்தியை உருவாக்குவதாகத் தான் இந்திய அரசால் சொல்லப்பட்டு வருகிறது.
ஆனாலும் இந்தியாவில் அணுகுண்டு தயாரிப்பதற்கான அடிப்படையான சக்திகளை, மேற்கண்ட ஆக்கத்திற்கான அணுஉலைகள் மூலமாக ரகசியமாக தயார் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு அணுசக்தி எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. உதாரணமாக சென்னைக்கு அருகேயுள்ள கல்பாக்கம் அணுஉலை மின்சாரத்தை உருவாக்குவதற்கு மட்டுமே நிறுவப்படுவதாக தொடர்ந்து கூறப்படுகிறது. ஆனாலும் அதற்குள் ரகசியமாக அணுகுண்டு தயாரிப்புப் பணி நடந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் அணுவிசையால் இயக்கப்படும் நீரிமூழ்கி கப்பலை முதன் முதலாக இந்தியா தயாரித்து, பிரதமர் மன்மோகனால் தொடங்கப்பட்டது. அப்போது பெருமையாக அணு அறிவியலாளர்கள், இதற்கான அணுசக்தியை தாங்கள் கல்பாக்கத்தில் ரகசியமாக தயார் செய்தோம் என்று அறிவித்தார்கள். இவ்வாறாக ஆக்கத்திற்கான அணுஉலைகளுக்கும், அழிவிற்கான அணுஆயுத உற்பத்திக்கும் ஒரு உள்ளார்ந்த தொடர்பு இருக்கிறது என்பது புரியப்பட வேண்டும். ஆகவே அமெரிக்காவினுடைய மொழியில் இரண்டு வகையான அணுசக்திகளையும் பிரித்து நிறுத்துகிறோம் என்று கூறுவது எப்படி உண்மையாக இருக்க முடியும்? ஆக்கத்திற்கான அணுசக்திக்கு உதவி செய்யும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய அணுசக்தி நாடுகள் தங்களது கண்காணிப்பை, அந்த அணுஉலைகளின் மீது நடத்திக் கொள்ள மேற்கண்ட ஒப்பந்தங்கள் அனுமதிக்கின்றன. அதன் மூலம் இந்தியாவின் அணுஆயுத தயாரிப்பு என்ற பாதுகாப்பு ரகசியங்கள், அந்நிய நாட்டாரால் கண்காணிக்கப்பட வாய்ப்பு உண்டு என்பதை பலரும் கூறி விட்டார்கள். இது நாட்டுப்பற்றுக்கு எதிரான நடவடிக்கை என்பதாக மட்டும் தான் காணப்பட முடியும்.
மேற்கண்ட ஒப்பந்தங்கள் பல நிபந்தனைகளுடன் இந்திய அணுஉலைகளை கண்காணிக்க, கட்டளையிட, தண்டிக்க அந்நிய நாடுகளுக்கு இடம் கொடுக்கிறது. இது போதாதென்று இப்போது புதிதாக கொண்டுவரப்படும் இழப்பீடு மசோதா, ஒரு மாபெரும் நிர்ப்பந்தத்தை இந்திய மக்கள் மீது சுமத்துகிறது. இந்திய அணுஉலைகளுக்கு எரிபொருளை விநியோகம் செய்ய மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், ஒரு அணுவிபத்து ஏற்படும் பட்சத்தில் அதன் பாதிப்புகளுக்கு இழப்பீடு கொடுத்து மக்களை திருப்திப்படுத்த சட்டரீதியான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்ய வேண்டும் என்று அந்த அந்நிய நாடுகள் வற்புறுத்தியுள்ளன. அதற்காகவே இப்படியொரு மசோதா சட்டமாவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அணுசக்தி விபத்து இழப்பீடு மசோதா 2010 என்பது 2009ம் ஆண்டு நவம்பர் 20ம் நாள் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஒரு அணுவிபத்து ஏற்படுமானால், விபத்தின் பாதிப்புகள் கணக்கிடப்பட வேண்டும். உயிர்பலி உட்பட, சொத்தழிப்புகளும் கணக்கிடப்பட வேண்டும். அத்தகைய பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வெளிநாட்டிலிருந்து எரிபொருளை விநியோகம் செய்து குறிப்பிட்ட ஆலைக்கு உதவி செய்யும் அந்நிய நாட்டு தனியார் நிறுவனத்தை, இயக்கும் நிறுவனம் என்று இந்த மசோதாவில் அழைக்கிறார்கள். அத்தகைய இயக்கும் நிறுவனத்திற்கு, அதிக சுமையை கொடுத்து விடாமல் இழப்பீடு பற்றிய வரையறைகள் மசோதாவில் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய இயக்கும் நிறுவனத்துடன் இணைந்து ஆலையை நடத்தும் அணுசக்தி வாரியம் என்ற இந்திய அரசாங்கத்தின் என்.பி.சி.யும், இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற அரசு சார் நிறுவனமும், இழப்பீடு தொகையின் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக இந்த மசோதா கூறுகிறது.
கொடுக்கப்பட வேண்டிய இழப்பீடு தொகை 4,500 லட்சம் டாலர்கள் என்பதாக எழுதப்பட்டுள்ளது. அதாவது போபல் விபத்தின் பாதிக்கப்பட்டோருக்கு அரசு அறிவித்துள்ள 4,700 லட்சம் டாலர் என்ற தொகையை விட குறைவான அளவே, அணுசக்தி விபத்து நடந்தால் இழப்பீடாக கொடுக்கப்படும். போபால் விபத்து ஒரு அணுசக்தி விபத்து அல்ல. அப்படியிருந்தும் அதற்கு அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு, பாதிப்புகளை ஈடுகட்ட போதுமானது அல்ல என்ற விமர்சனம் ஏற்கனவே இருக்கிறது. அத்தகைய சூடுபட்டுக் கொண்ட ஒரு அரசு, வர இருக்கின்ற அணுஉலை ஆபத்துகளுக்கான இழப்பீட்டை மிகவும் குறைவாக குறைப்பது என்பது பெரும் குற்றமாகும்.
இந்திய அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு உயிர் வாழ்வதற்கான உரிமை என்று இருப்பதை சட்டை செய்யாத மசோதாவாக இது இருக்கிறது. அதிகபட்ச இழப்பீடு தொகையாக ரூ.2,087 கோடி என்று இந்த மசோதாவில் குறிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமெரிக்காவில் இருக்கின்ற சட்டப்படி அணுஉலை விபத்திற்கான இழப்பீடு தொகை ரூ.50,000 கோடி என்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்திய அரசு இந்திய மக்களின் உயிர்களை குறைந்த மதிப்பில் விற்றுவிட தயாராயிருப்பது தெரிகிறது.
எப்போதுமே ஒரு அணுவிபத்தில் இயக்கும் நிறுவனம் தான் முக்கிய பொறுப்பு எடுக்க வேண்டும். அமெரிக்க சட்டப்படி எரிபொருள் விநியோகிப்பவர் உட்பட, தவறான கட்டுமானம், தவறான வரைபடம், தவறான இயக்குபவர் ஆகிய அனைவருமே சங்கிலிப் பிணைப்புப் போல இழப்பீட்டுக்கு பொறுப்பெடுக்க வேண்டும். ஆனால் தயாராகியுள்ள இந்திய மசோதா பெரும்பான்மை இழப்பீட்டை, இந்திய அரசின் நிறுவனங்கள் பொறுப்பெடுக்க வேண்டும் என கூறுகிறது. அதன் மூலம் வரி செலுத்தும் இந்திய மக்கள் மீதே இழப்பீடு சுமையை திணிக்கிறது. சட்டப்படி பேரழிவை ஏற்படுத்தும் இயக்கும் நிறுவனத்தை பாதுகாத்து விடுகிறது. அடுத்து பாதிக்கப்பட்டோர் 10 ஆண்டுகளுக்குள் இழப்பீடு கோர வேண்டும் என்று கூறுகிறது. வழமையாக அணுசக்தி விபத்து என்பது பல தலைமுறைகளையும் பாதிக்கக்கூடிய ஒன்று. ஆகவே பாதிக்கப்படும் இந்திய மக்களை பழிவாங்கும் போக்கும் இந்த மசோதாவிலிருக்கிறது.
அந்நிய தனியார் நிறுவனங்களின் உள்நுழைவை இந்த மசோதா சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வைக்கிறது. அதுவே இந்திய இறையாண்மைக்கு ஆபத்தையும், ஊழல் அதிகரிப்பையும் ஏற்படுத்தும். அணுவிபத்து எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், அதன் இழப்பீடு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட குறைவான அளவே இருக்கும் என்ற மசோதாவின் குறிக்கோள், பாதிக்கப்படும் இந்திய மக்களுக்கு எதிரானது. இயக்கும் நிறுவனமான அந்நிய தனியார் நிறுவனத்திற்கு அதிகபட்சம் ரூ.500 கோடி தான் இழப்பீட்டு அபராதம் என்ற கருத்து, இந்திய மக்களின் வரிப்பணத்தின் மீது அந்நிய தனியார் இயக்குநரை வாழ விடுவதற்கான ஏற்பாடு என்பதில் மாற்றமில்லை. இவ்வாறு முழுமையாக இறையாண்மைக்கு எதிராகவும், நாட்டுப்பற்றுக்கு எதிராகவும் ஒரு மசோதா சட்டமாகப்போகிறது. நமது நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாட்டுப்பற்றுக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment