இந்திய துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு முற்போக்கான கோரிக்கைகள் முதன்மையாக எழுப்பப்பட்ட வரலாறு உண்டு. தந்தை பெரியார் காலந்தொட்டு, மொழி ஆதிக்கத்திற்கு எதிராக, வகுப்பு வாரி உரிமைக்கு ஆதரவாக, பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்காக, மாநில சுயாட்சி கோரிக்கைக்காக, தலித் மக்களின் நில உரிமைக்காக, மீனவ மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்காக என்று பல்வேறு நியாயமான பிரச்சனைகளும் தமிழ்நாட்டிலிருந்து எழுப்பப்பட்ட வரலாறு இருக்கிறது. அந்த பாணியில் இப்போது பெண்கள் பெயரில் நிலப்பட்டாக்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, பெண்கள் முன்னணி என்ற அமைப்பு எழுப்பியுள்ளது. இது நிலவும் ஆணாதிக்க சமூகத்தில், பெண்களை அதிகார மேம்படுத்தல் செய்வதற்காக எழுப்பப்படும் கோரிக்கை.
பெண்களை அரசியல் மயப்படுத்துவது என்பதன் மூலம், அரசியல் அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பை ஏற்படுத்துவது, மற்றும் மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக, பெண்களே பெண்களுக்காக ஏற்படுத்திக் கொண்ட பெண்கள் அமைப்புத் தான் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்து மாநிலமெங்கும் பெண்கள் பேரணியை நடத்தயிருக்கிறார்கள்.
மனிதகுல வரலாற்றில் புராதன காலம் என்பதாக ஒன்றை வரையறைச் செய்கிறார்கள். வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற சித்தாந்த அடித்தளத்தை எழுதிய காரல் மார்ஸும், மார்க்சியவாதிகளும் அதை புராதன பொதுவுடைமை சமுதாய அமைப்பு என்று அழைக்கிறார்கள். அதாவது மனிதன் வேட்டையாடும் காலத்தில் வாழ்ந்து வந்த வரலாற்றை அவ்வாறு தொகுத்துள்ளார்கள். காடுகளிலும், மலைகளிலும் பழங்குடி மக்களாக, இன்றைக்கு நாம் காணும் அறிவியல் வளர்ச்சிகள் உருவாகாத ஒரு காலகட்டத்தில், விலங்குகளை வேட்டையாடும் குழுக்களாகவும், பழங்களையும், இயற்கை வாய்ப்புகளையும் பயன்படுத்தும் பழங்குடிகளாகவும் மனிதர்கள் வாழ்ந்ததை அதில் விவரிக்கிறார்கள். அதையே ராகுல சாகிர்த்தியன் என்ற எழுத்தாளர், ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற புத்தகமாக எழுதியுள்ளார். அதில் காணப்படும் விவரங்களிலிருந்து, புராதன பொதுவுடைமை சமுதாய அமைப்பில், பெண்களுடைய தலைமை ஒவ்வொரு வேட்டையாடும் குழுவிற்கும் கட்டாயமாக தேவைப்பட்டது என்ற புரிதலுக்கு நாம் வரமுடியும்.
அன்றைய கட்டத்தில் விலங்குகளை எதிர்த்தும், இயற்கையின் பாதிப்புகளை எதிர்த்தும் மனிதன் வாழ்வதற்கு தனது வேட்டையாடும் குழுவின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை, முதன்மையாக இருந்தது என்று தெரிகிறது. அதற்காக தங்களுடைய குழுவின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு, பெண்ணான தாயை குழுவின் தலைமை பொறுப்பில் வைத்து, மானுட உற்பத்தியை அதிகப்படுத்தினார்கள் என்பதையும் அறிய முடிகிறது. வேட்டையில் கிடைக்கின்ற பலன்களையும், தங்களுக்குள் தேவைக்கேற்றப்படி பிரித்துக் கொண்டார்கள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. அதன் மூலம் மட்டுமே தங்களது குழுவின் ஒற்றுமையை சாதித்தார்கள் என்று அறியமுடிகிறது. அதன் பிறகே புதிய நவீன கருவிகள் வருகையும், நிலம் சார்ந்த விவசாய உற்பத்தியின் கண்டுபிடித்தலும், தனிச்சொத்துரிமையை கொண்டு வந்தது என்ற புரிதலுக்கு நாம் வர முடிகிறது. அப்போது தான் ஆண்களது தலைமை அல்லது அதிகாரம் மானுடக் கூட்டத்தில், நிறுவப்படுகிறது என்பதையும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு நாம் பார்க்கும் உலகில் எல்லாவுடைமைகளும், எல்லா இயக்கங்களும் ஆண்களின் தலைமையில் தான் செயல்படுகிறது என்பதை காண்கின்றோம். சொத்துக்கள் அனைத்துமே ஆண்களின் பெயரில் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதை பார்க்கின்றோம். குடும்பங்களுக்கு தலைவர்களாக ஆண்களை மட்டுமே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. ஆண் இல்லாமல் பெண் தலைமையில் இருக்கின்ற குடும்பங்களுக்குக் கூட, குடும்ப அட்டைகள் வழங்கும் போதும், வழங்கப்பட்ட குடும்ப அட்டைகளை அங்கீகரிக்கும் போதும், அரசு அதிகாரிகளுக்கு இணக்கமில்லாமல் இருப்பதையும் நேரில் அனுபவிக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு சூழலில், பெண்கள் பெயரில் நிலங்களை பட்டா போட்டுக் கொடுங்கள் என்பதாக ஒரு கோரிக்கை எழுப்பப்படுகிறது.
நிலமும், வீடும் பெண்களின் அடிப்படை உரிமை என்றும், மறுக்கப்பட்ட இந்த உரிமைகளை பெறுவதற்காக கோரிக்கை வைக்கிறோம் என்பதும் அவர்களது குரலாக இருக்கிறது. வீடு இல்லாத பெண்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை பெண்கள் பெயரில் வழங்க வேண்டும் என்கிறார்கள். அதை விளக்கும் போது பெண்கள் மட்டுமே பொறுப்பேற்றிருக்கும் குடும்பங்கள், தனித்து வாழும் பெண்கள், சீற்றம் அல்லது அசாதாரண சூழலினால் வீடு இழந்தோர், திருநங்கையர் மற்றும் தனித்தோ குடும்பமாகவோ வாழும் மாற்றுத் திறனாளிகள் ஆகிய பெண்களுக்கு அவர்கள் பெயரிலேயே வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது தான் அதன் விளக்கம். அதேபோல விவசாயம் சார்ந்த பெண்களுக்க அவர்கள் பெயரிலேயே விவசாய நிலங்களை அல்லது விவசாயம் செய்வதற்கான நிலங்களை பட்டாவாக போட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்கின்றனர். அப்படி நிலம் வழங்கும் போது, பாசனத்திற்கான நீராதாரத்திற்கும், இடு பொருள்களுக்கு தேவையான நிதி ஆதாராத்திற்கும் அரசே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயம் இந்த நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உணவு உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகின்ற அரசு, பெண்கள் கைகளில் விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும் போது தான், அத்தகைய பாதுகாப்பு ஏற்படும் என்ற அவர்களது வாதம் ஏற்புடையதாக இருக்கிறது. விவசாயம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது ஒரு பண்பாட்டு நிகழ்வாக நமது நாட்டில் நிலைத்து வருகிறது என்று ஆக்கப்பூர்வமான ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். நிலம் அன்னியமாதல் என்ற நிகழ்வுக்குப் பிறகு தான், பண்பாட்டுச் சீரழிவு துரிதப்படத் தொடங்கியது என்ற அவர்களது வாதமும் இயல்பான நிலைமையை எடுத்துச் சொல்கிறது. அதனால் பண்பாட்டு அடையாளங்களை நிலைத்து நிற்கச் செய்ய வேண்டும் என்றால், பெண்கள் கைகளில் நிலங்களைக் கொடுங்கள் என்று வாதிடுகிறார்கள். இப்போது தமிழக அரசு கொடுத்து வருகின்ற சிறிதளவு இலவச நிலப்பட்டாக்களும், கூட்டுப்பட்டா முறையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இணைத்துக் கொடுக்கப்படுகிறது. அதை பெண்கள் பெயரிலேயே பதிவு செய்து கொடுப்பது எளிதாகயிருக்கும் என்றும் கூறுகிறார்கள். அதன் மூலம் நிலம் சம்மந்தப்பட்டு ஆண்கள் மத்தியில் எழுகின்ற வன்முறைகள் குறையும் என்பதும் ஒரு வாதம்.
ஐ.நா.சபையின் விளக்கப்படி 50% இருக்கும் பெண்கள் உலகமெங்கிலும் 70% உழைப்பை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் கைகளில் 1% கூட சொத்துரிமை இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் இப்போது பெண்கள் மத்தியிலிருந்து எழுகின்ற முழக்கமான, பெண்கள் பெயரில் நிலப்பட்டா வழங்கு என்பது பொருத்தமான, புரட்சிகரமான முழக்கமாக இருக்கிறது. அதேசமயம் இந்திய அரசியலில் நாடாளுமன்ற அரசியல் தான் முதன்மை வகித்து வரும் வேளையில், அரசியல் கட்சிகள் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளன. அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையாக ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இங்கே பெரும்பான்மை அரசியல் என்ற ஒன்று நிலவி வரும் சூழலில், சாதியால், மதத்தால், பாலினத்தால் அதுவே அரசியல் கட்சிகளிலும் எதிரொலிக்கிறது. அதனால் தான் சுதந்திரமான பெண்கள் இயக்கங்கள் அரசியல் அரங்கில் தோன்றி, வளர வேண்டிய தேவை, கட்டாயமான ஒன்றாக ஆகிவிட்டது. இதுவே மலர்ந்து ஒரு பெண் தலைமை சமுதாய அமைப்பை ஏற்படுத்துவதற்கு வித்திடுமா என்ற தொலைநோக்கு பார்வையும் தவறல்ல என்று தான் நமக்குப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment