குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா சி.பி.ஐ. வழக்கில், போலி துப்பாக்கிச் சண்டையில் ஷோராபுதின் என்பவரை 2005ம் ஆண்டு அகமதாபாத்தில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அது இந்திய அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமித்ஷா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வலதுகரமானவர். அதனால் பா.ஜ.க. இது ஒரு அரசியல் சதி என்று கூற பிரதமர் மன்மோகன்சிங் அதை மறுக்க என்பதாக விவாதம் நீண்டு செல்கிறது.
இப்போது காவல்துறையின் முன்னாள் உதவி கண்காணிப்பாளர் எம்.கே. அமீன் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறியிருக்கிறார். அதனால் அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு போலி துப்பாக்கி சூட்டை திட்டமிட்டு செய்த இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. ஷோராபுதின் மட்டுமின்றி அவரது மனைவி கவுசர்பீயும் கொலை செய்யப்பட்டார்கள் என்பது தான் அந்த வழக்கு.
2005 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் ஷோராபுதின் ஷேக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடனடியாக காவல்துறை அவரை பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத குழுவான லக்ஷர்இகொய்பா அமைப்பைச் சேர்ந்தவரென்று முத்திரை குத்திவிட்டது. அவர் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்வதற்காக வந்து இறங்கினர் என்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதவெறி படுகொலைகளில் 3,000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு பலி வாங்கத்தான் நரேந்திர மோடியை குறி வைத்து ஷோராபுதீன் வந்திறங்கியதாக அப்போது காவல் துறை கூறியது.
அதாவது, 2002ல் நடந்த முஸ்லீம்கள் மீதான படுகொலைகளுக்கு தங்கள் முதல்வர் மோடிதான் காரணமென அவர்களே ஒப்புக்கொள்வது போல அது இருந்தது.
2007 ஆம் ஆண்டு மார்ச் 23ம் நாள் உச்சநீதி மன்றத்தில் குஜராத் அரசு ஷோராபுதீன் மற்றும் கவுசர்பீ கொலைகளை ஒப்புக் கொண்டது. ஷோராபுதினின் அப்பாவி மனைவியான கவுசர்பீ கொல்லப்பட்டு, தடயங்களை மறைக்க அவரது உடல் எரிக்கப்பட்டது என்று குஜராத் அரசே ஒப்புக் கொண்டது. தங்கள் மாநில உயர் காவல் துறை அதிகாரிகள் அத்தகைய குற்றத்தில் ஈடுபட்டதாக அப்போது குஜராத் அரசு கூறியது. அதுவே, ஷோராபுதீனின் சகேதரரான ருபாவுதீன் உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கை போட்டு கவுசர்பீயின் இருப்பிடம் தெரியவில்லையென்று கேட்டதையொட்டி, இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் தலையிட்ட காரணத்தால் நிகழ்ந்தது.
அதனால் தான் குஜராத் மாநில அரசாங்கம் இத்தனை உண்மைகளையும் ஒப்புக் கொண்டது.
ஊடகவியலாளர் பிரசாந்த்தயாள் 2006 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த வழக்கு பற்றிய செய்திகளை வெளிக்கொண்டு வந்தார். அதில் ஷோராபுதீன் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு குண்டர் என்றும் அங்குள்ள மார்பிள் வியாபாரிகளுக்கும் பணக்கார கட்டுமான முதலாளிகளுக்கும் மிரட்டல் விடுபவராக இருந்தார் என்றும், அதையொட்டி ஷோராபுதீனை கொலை செய்வதற்கு ரூ. 2 கோடி கொடுக்க வந்த பணக்காரர்கள் தயாராக இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்த நேரத்தில் ராஜஸ்தானிலும் பா.ஜ.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஷோராபுதீனையும் அவரது மனைவியையும் மகாராஷ்டிரா மாநில எல்லையில் காவல் துறையினர் கைது செய்தனர்.
அகமதாபாத் அருகே பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்று சித்ரவதை செய்தனர்.
ஷோராபுதீன் சுட்டுக் கொன்றுவிட்டு அதை வெளியே சொல்லி விடுவாரோ என்று கவுசர்பீயை சுட்டுக் கொன்றுள்ளனர்.
தடையங்களை மறைக்க அவரது உடலை எரித்துள்ளனர். இவர்கள் இருவருடனும் கைது செய்யப்பட்ட துளசி பிரஜாபதி என்பவரை காவல் துறை ஒற்றர் என்பதற்காக விட்டுவிட்டனர்.
இந்த போலி துப்பாக்கி சூடு அம்பலத்திற்கு வந்ததும், அந்த துளசியையும் காவல்துறை போட்டுத் தள்ளிவிட்டது. இந்த வழக்கை விசாரித்து உயர் காவல் துறை அதிகாரி கீதா ஜோரி இந்த உண்மைகளை வெளியே கொண்டுவந்தார்.
மூத்த காவல்துறை அதிகாரியான கீதாஜோரி போலி துப்பாக்கி சூடு பற்றி கொடுத்த புலனாய்வு அறிக்கையை தன் முன் வைக்குமாறு குஜராத் அரசை உச்ச நீதி மன்றம் கேட்டுக் கொண்டது.
அதற்கிடையில், இந்த போலி துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளான டி.ஐ.ஜி.வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், இருவரும் குஜராத் அரசால் கைது செய்யப்பட்டனர்.
அதே சமயம் பா.ஜ.க. தலைவர்களான ஒம்மத்தூர், உள்துறை அளமச்சர் அமீத்ஷா மற்றும் முதல்வர் மோடி ஆகியோர் இந்த சதி திட்டத்திற்கு பொறுப்பாளர்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினார். குஜராத் அரசால் கைது செய்யப்பட்ட டி.ஐ.ஜி. வன்சாரா, மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மிகவும் நெருக்கமானவர். அதே போல 2004 ஆம் ஆண்டு இளம் கல்லூரி மாணவியான இஷராத் ஷேக்கும், மூன்று ஆண்களும் பிடித்துக் கொல்லப்பட்ட வழக்கும் அம்பலமானது. அவர்களையும் டி.ஐ.ஜி. வன்சாரா, மோடியை கொலை செய்ய வந்தவர்கள் என்று போலியான குற்றத்தை சாட்டி, அறிவிக்கப்பட்ட போலி துப்பாக்கி சூட்டில் கொலை செய்துள்ளார். அது 2009 ஆகஸ்ட் மாதம் அகமதாபாத் பெருநகர நீதி மன்றத்தில் அம்பலமானது.
ஷோராபுதீன் வழக்கை புலனாய்வு செய்த கீதாஷோரியை, மாநில ஆட்சியாளர்கள் எந்தக் காரணமும் கூறாமல் புலனாய்விலிருந்து நீக்கியிருந்தார்கள். அவரது ஆய்வில் மாநில அரசாங்கத்தையும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார். அதேசமயம், அந்த போலி துப்பாக்கிச்சூட்டு விசாரணையை உடைத்து விட அமித்ஷா முயற்சி எடுத்தார். அதையொட்டியே கீதாஷோரியிடமிருந்து விசாரணை ஆவணங்கள் பறிக்கப்பட்டன. தனது அதிகாரத்தை மீறி அமித்ஷா புலனாய்வுதுறையின் கூடுதல் டி.ஜி.பியான ரெய்காரிடம் ஆதாரங்களையும், சாட்சிகள் பட்டியலையும் சட்ட விரோதமாக கேட்டிருந்தார். ஒரு முதல் தகவல் அறிக்கையைக் கூட பதிவு செய்யக் கூடாதென அமித்ஷா, கீதாஷோரியிடம் வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தார். அதனால்தான் இந்த வழக்கை விட்டு ஷோரியை நீக்கியது பற்றி நீதிமன்றம் காரணம் கேட்டிருந்தது. நேரடியாக காவல்துறை ஐ.ஜி. கீதாஷோரியின் அறிக்கையை உச்சநீதி மன்றம் முன் வைக்க கோரியது. மீண்டும் கீதாஷோரியையே அந்த வழக்கை நடத்தச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதையொட்டி தான் சி.பி.ஐ. இந்த வழக்கை துரிதப்படுத்தியது. ஆனால் இன்று வரை மோடி தலைமையிலான குஜராத் அரசங்கமும், பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமையும் சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராகவே தங்களது கருத்துக்களையும், முயற்சிகளையும் செய்து வருகிறார்கள்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி 12ம் நாள் தான் உச்சநீதி மன்றம் சி.பி.ஐ. கையில் 2005ஆம் ஆண்டின் ஷோராபுதீன் துப்பாக்கி சூடு வழக்கை கொடுத்தது.
அதையொட்டி 2002 ஆம் ஆண்டு நடந்த முஸ்லீம் மக்கன் மீதான மதவெறி கலவரம் பற்றிய சிறப்பு புலனாய்வில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் வெறியைத் தூண்டும் உரைவிச்சுகளும், ஆய்வில் சேர்க்கப்பட்டன.
இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கும் இந்த வழக்கு விசாரணைகளும், அதையொட்டிய புலனாய்வும், கைதுகளும் சில கேள்விகளை எழுப்பியுள்ளன.
குஜராத் ஆட்சியாளர்களின் மதவெறிசார்பு படுகொலைகளையும், சதிகளையும் அம்பலப்படுத்தியிருப்பவர்களும், அரசு சாட்சியாக மாறியவர்களும், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான், அவர்களுக்கு இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மதசார்பற்ற என்ற கொள்கையின் பொருள் விலங்கியிருந்தாலும் அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு என் விளங்கவில்லை?
மதச்சார்பற்ற என்ற கொள்கை அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் போது, அதே அரசியல் சட்டத்தால் நடத்தப்படும் தேர்தல்கள் மூலம், அதற்கு எதிரான கொள்கை உள்ளவர்கள் அதிகாரத்திற்கு வர முடியுமா? தேர்தலில் வெற்றி பெற்றதனால் அப்படிப்பட்டவர்கள் மதச்சார்பற்ற கொள்கையை கொண்ட அரசியல் சட்டத்தின்படி நடப்போம் என்ற உறுதிமொழி ஏற்க முடியுமா?
உறுதி மொழி எடுத்த பிறகும் அதை மீறி மதவெறியை நடைமுறைப்படுத்த முடியுமா? இத்தகைய கேள்விகள் பொது மக்கள் மத்தியில் எழ வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment