Tuesday, August 31, 2010
கச்சத்தீவை திரும்பப்பெற இந்திய அரசு உண்மையில் முயற்சிக்கிறதா?
நேற்று மக்களவையில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்கள் ஒரே கோரிக்கையை எழுப்பினர். கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்காக மக்களவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது இந்திய அரசால் இலங்கை அரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட, கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிற்கு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை. வரலாற்றில் இல்லாத அளவிற்கு, தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., இடது சாரிகள் ஆகிய எதிரெதிர் கூட்டணிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக விரிவாக பேசியுள்ளனர். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே கோரிக்கையை பேசுவது என்பதும், அதுவும் தமிழ்நாடு பற்றிய கோரிக்கையை எழுப்புவது என்பதும், குறிப்பாக இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக, தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு முக்கியத் தீவை, தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாமலேயே, டெல்லியிலேயே முடிவு செய்து தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட ஒரு தீவை, மீண்டும் இலங்கையிடமிருந்து பெற்றுக் கொள்வது என்ற கோரிக்கை நமது மக்களவையில் இந்த அளவிற்கு எழுவது என்பது ஆச்சரியமான ஒன்றே. கச்சத்தீவை மீண்டும் பெறுவதற்கான கோரிக்கையை தி.மு.க. மக்களவை கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு ஆவேசமாக மக்களவையில் பேசினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரீசிலனை செய்து, மறுஒப்பந்தம் போட்டு திரும்பப் பெற வேண்டும் என்று பாலு அப்போது பேசினார். அ.தி.மு.க.வின் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை, தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலைச் செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததனால்தான் தொடர்கிறது என்று பேசினார். அதையடுத்து பேசிய ம.தி.மு.க. உறுப்பினர் கணேசமூர்த்தி பேசும் போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவது, இந்திய இரையாண்மையையே கேள்விக் குறியாக்குகிறது என்றார். தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக இந்திய அரசு ஏற்கவில்லையா என்று கேட்டார். இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்பே தமிழகத்துடன் கச்சத்தீவு இணைந்திருந்தது என்றும், தமிழகம் இந்தியாவுடன் சேர்ந்த பிறகுதான் கச்சத்தீவை இழந்தோம் என்றும் கூறினார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், கச்சத்தீவை தாரைவார்த்த பிறகுதான் என்று இடது சாரிகளும் பேசினார்கள். மேற்கண்ட தமிழக எம்.பி.க்கள் பேசிய பேச்சுக்கள், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைக்காகவும், வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காகவும் என்று மட்டுமே எண்ணிவிட முடியாது. எனென்றால் இதற்கு பதில் பேசிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மேற்கண்ட கோரிக்கையை, இலங்கை சென்றிருக்கும் வெளிவிவகாரத்துறை செயலாளர் நிரூபமாராவ், இலங்கை அரசிடம் பேசுவார் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் இலங்கை சென்று எந்தெந்த கோரிக்கைகளை நிரூபமாராவ் இலங்கை அரசிடம் பேச வேண்டுமென்பதை, நேற்றைய நாடாளுமன்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பிறகு மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று பொருளா? அப்படியிருக்க முடியாது. ஏற்கனவே கடந்த 4 வாரங்களாக, மத்திய அரசு தனது சிறப்புத் தூதரை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் என்ற செய்தியை, ஆட்சியாளர்கள் நமக்கு சொல்லிவருகிறார்கள். இரண்டு நாடுகளுக்கு மத்தியில், அதாவது இரண்டு அரசுகளுக்கு மத்தியில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்பே, அதற்கான திட்டமிடலும், பேச வேண்டிய நிகழ்ச்சிநிரலும் தயாரிக்கப்பட்டு, இரண்டு அரசுகளுக்கும் மத்தியில் பரிமாறப்படும். அதையொட்டியே அடுத்த நாட்டிற்குச் செல்லும் ஒரு நாட்டின் பிரதிநிதி, தனது பேச்சுவார்த்தையை நடத்துவார். திடீரென்று புதிதாக ஏதாவது விபத்துகளோ, தாக்குதல்களோ நடத்தப்பட்டு அதைப்பற்றிய விவரங்களும் கூடுதலாக பேசப்படும் என்று கடைசி நேரத்தில் ஒரு அரசு முடிவு செய்யலாம். ஆனால் அப்படிப்பட்ட எந்த ஒரு புதிய விபத்தும் நடக்காத சூழலில், கச்சத்தீவைப் பற்றி மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட காரணத்தினால் மட்டுமே, பேச்சுவார்த்தையில் அதையும் சேர்த்து சிறப்பு தூதர் பேசுவாரா? திடீரென சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் போது, வெளிவிவகாரத்துறை அமைச்சர் கச்சத்தீவு பற்றிய விவகாரத்தையும், இலங்கை போய்ச் சேர்ந்திருக்கும் நிரூபமாராவ் பேசுவார் என்று எப்படிக் கூற முடியும்? இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பெரியதொரு விஷயத்தை, மத்திய அமைச்சரவையின் குறிப்பாக தலைமை அமைச்சரின் முடிவு எடுக்கப்படாமல், மக்களவையில் வெளிவிவகாரத்துறை அமைச்சரால் வாக்குறுதி கொடுக்க முடியுமா? அதாவது எஸ்.எம்.கிருஷ்ணாவின் பதில் என்பது, தமிழக எம்.பி.க்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம், கச்சத்தீவு சர்ச்சையை எழுப்பியதனால் கூறப்பட்டது அல்ல. மாறாக ஏற்கனவே மத்திய அரசால் முடிவுச் செய்யப்பட்டு, இலங்கை அரசிடம் சில நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துவதற்காக பேச வேண்டிய சில விஷயங்களில், கச்சத்தீவு பிரச்சனையும் ஒன்றாகயிருக்கிறது. அப்படி இலங்கை அரசை, இந்திய அரசு குறைந்தபட்சம் நிர்பந்தம் செய்வதற்கு ஏற்பட்டுள்ள தேவைகள் என்ன? தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும், தமிழக மீனவர்கள் மத்தியிலும், புலம்பெயர்ந்த உலகத் தமிழர்கள் மத்தியிலும், டெல்லி ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்ததனால் அதைச் சரிக்கட்ட டெல்லி செய்கின்ற தந்திரமா? தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வரப்போகின்ற காலம் என்பதனால், இங்குள்ள மக்களின் அதிருப்தியை சரிச் செய்வதற்கான முயற்சியா? கூட்டணிக்குள் இருக்கின்ற தி.மு.க.விற்கும், காங்கிரசிற்கும் இடையேயுள்ள இடைவெளியை நிரப்புவதற்கான செயல்பாடா? மேற்கண்ட அனைத்து காரணங்களையும்விட, இலங்கை அரசு இந்திய அரசின் உதவிகளை வாங்கிக்கொண்டு, சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிக்க அனுமதித்துவிட்டது என்பதனால் தான். அத்தகைய நிலையில் தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இந்திய அரசின் மூலம், அமெரிக்கா தடுப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் சிறப்பு தூதராக நிரூபமாராவ் அனுப்பப்பட்டுள்ளார். அவர் அப்போது பேசப்போகின்ற விஷயங்களையும், சில நாட்களுக்கு முன்னால் சென்னை வந்தபோது, தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறியிருக்கிறார். அதையொட்டியே மத்திய அரசின் ஏற்பாட்டிலேயே, மக்களவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம், கச்சத்தீவுப் பற்றி எழுப்பப்பட்டுள்ளது. அதனால்தான் கிருஷ்ணாவால் உடனடியாக பதில் கூற முடிந்திருக்கிறது. அப்படியானால் இந்த முறை கச்சத்தீவு பற்றி பேசப்போவதும் உண்மையான பேச்சு அல்ல என்று தெரிகிறது. இரண்டு அரசுகளுக்கும் மத்தியில் பேசப்படும் பேரத்திற்கு, கச்சத்தீவு இந்த முறையும் ஒரு பலிகடா ஆகுமா என்பதே கேள்வி.
Monday, August 30, 2010
காவி பயங்கரவாதம் பற்றிய பேச்சு--ஒரு செயல் தந்திரமா?
இந்திய அரசியல் வாதிகள் இப்போதெல்லாம், மேற்கத்திய நாடுகளின் அரசியல் தலைவர்கள் போல தங்களது பேச்சுகளின் மூலம், ஊடகங்கள் மத்தியில் புயலைக் கிளப்புவதற்கு கற்றுக்கொண்டு விட்டனர். ஆகஸ்டு 25ம் நாள் காஷ்மீர் பகுதியின் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட, மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், காவி பயங்கரவாதம் பற்றி பேசியிருக்கிறார். சமீபகாலங்களில் பல வெடிகுண்டு தாக்குதல்கள் காவி பயங்கரவாதத்தால் செய்யப்பட்டன என்பதாக அம்பலமாகியிருக்கிறது என்பதை கூறியிருக்கிறார். அத்தகைய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள மத்திய அரசு மற்றும் மாநில அரசு மட்டங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதும் உள்துறை அமைச்சரின் ஒரு ஆலோசனை. மேற்கண்ட கருத்துகளை ஜம்முகாஷ்மீர் பகுதியில் நடந்த காவல்துறை அதிகாரிகளின் மூன்று நாள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் பேசியிருந்தார். சிதம்பரம் காஷ்மீர் செல்லும்போது, அந்த வட்டாரத்தில் காவல்துறையினுடைய அராஜகங்களை எதிர்த்து பொதுமக்களின் எழுச்சி நடந்துகொண்டிருந்தது. ஆகவே அவற்றை கெடுவாய்ப்பான நிகழ்வுகள் என்று சிதம்பரம் வர்ணித்தார். எதிர்பாளர்களை தான் சந்திக்க முயல்வாதாகவும், மக்களுடைய உரிமைகளையும், அந்தஸ்த்தையும் மீட்டுக் கொடுக்க உறுதியளிப்பதாகவும், அதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்த முயல்வதாகவும், அவ்வாறு தொடங்கும் பேச்சுவார்த்தை ஒரு தீர்வை கொடுக்கும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். கல்லெறிகள், தடியடிகள், கண்ணீர்புகை வீச்சு, துப்பாக்கி சூடு ஆகியவை உயிர் பலிகளை ஏற்படுத்துகின்றன என்றும், அதுவே மேலும் கல்லெறிகளை தூண்டிவிடுகின்றன என்றும் அப்போது கூறினார். அமர்நாத் யாத்திரைக்கு சென்ற ஆண்டு 292000 பேர் சென்றார்கள் என்று, இந்த ஆண்டு 457,324 பேர் சென்றிருப்பதாகவும், ஜம்முகாஷ்மீருக்கு சென்ற ஆண்டு வருகைபுரிந்த 355,960 பயணிகள் எண்ணிக்கை, இந்த ஆண்டு 516,970 என்று கூடியிருப்பதையும் சுட்டிகாட்டினார். மேற்கண்ட மத்திய அமைச்சரின் புள்ளி விவரங்கள், காஷ்மீர் பகுதி மக்கள் முதிர்ச்சியை படம் பிடித்து காட்டியது. அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பது, காஷ்மீர் வாழ் மூஸ்லீம்களின் நல்லிணக்க மனோபாவத்தை காட்டுகிறது. அதே சமயம் தங்களுடைய சுயாட்சி உரிமைக்காக அவர்கள் ஆயுதம் தாங்கிய மத்திய அரசப்படையை எதிர்த்து நிற்கிறார்கள் என்பதையும் புரியவைக்கிறது. காஷ்மீர் மக்கள் மீது மத்திய அரசப்படைகள் நடத்திவரும் அடக்குமுறைகளை மறக்கடிக்கவைப்பதற்காக, காவி பயங்கரவாதத்தை பற்றி அங்கேபோய் சிதம்பரம் பேசினாரா என்பது தெரியவில்லை. காவி பயங்கரவாதம் தனது திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதல்களை நடத்திய இடத்திலெல்லாம், மூஸ்லீம்கள் அத்தகைய தாக்குதல்களை நடத்தியதாக வெளிகாட்டுவதற்காகவே செய்திருக்கிறார்கள் என்பதும் அம்பலமாகியுள்ளது. காஷ்மீர் பிரச்சனையை மனதில் கொண்டு, மூஸ்லீம்கள் அவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டதாக கருதும் வண்ணம், காவி பயங்கரவாதம் தனது சதிகளை திட்டமிட்டு செய்துள்ளது என்பது தெரிகிறது. ஆகவே காஷ்மீர் சென்று காவி பயங்கரவாதத்தை எதிர்த்து, பேசுவதன் மூலம் அங்குள்ள பேராளிகளையும், அரசியல் உரிமை கோருவோரையும், ஈர்த்துவிடலாம் என்று உள்துறை அமைச்சர் நம்பியிருக்கலாம். காஷ்மீர் தேசிய இனத்தின் சுயநிர்ணய போராட்டத்தை, ஒரு மதம் சார்ந்த பிரச்சனையாக மாற்றுவதன் மூலம் அல்லது சித்தரிப்பதன் மூலம் அல்லது புரியவைப்பதன் மூலம், அந்த போராட்டம் அடிப்படையில் இழிவுபடுத்தப்படுகிறது. அத்தகைய வேலையை வெளிப்படையாக காவி பயங்கரவாதம் செய்து கொண்டிருந்தாலும், அதை குறை கூறும் இன்றைய மத்திய அரசும் அத்தகைய வண்ணத்தை பூச எண்ணியே, இத்தகைய கருத்துகளை காஷ்மீர் சென்று கக்குகிறாரோ என்ற ஐயம் உருவாகிறது. சிதம்பரத்தின் குற்றச்சாட்டுகளை உடனடியாக எதிரொலித்தவர் குஜராத் மாநிலத்தின் முதல்வர் நரேந்திரமோடி. காவி பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பண்பாட்டையே மத்திய அரசு அசிங்கபடுத்திவிட்டது என்றும், பயங்கரவாதத்திற்கு எந்த வண்ணமும் கிடையாது என்றும், வாக்கு வங்கிகளை அடைவதற்காக காவியுடன் பயங்கரவாதத்தை இணைத்து பேசியதாகவும், இந்திய தேசிய கொடியில் இருக்கின்ற வண்ணங்களில் ஒன்று காவி நிறம் என்றும், அதுவே இந்தியாவிலிருக்கும் துறவிகளும், இந்து கோயில்களும் பயன்படுத்துகின்ற வண்ணம் என்றும் கூறி ஒரு பெரும் பிரச்சனையை மோடி உருவாக்கிவிட்டார். அதற்காக பிரதமரிடமிருந்து மன்னிப்பும் கோரினார். அதேசமயம் பா.ஜ.க.வின் தேசிய உதவி தலைவர் கல்ராஜ்மிஷ்ரா, சிதம்பரத்தை குற்றம்சாட்டினார். இந்திய பண்பாட்டையும் இழிவுபடுத்தியதாக அவரும் கோரினார். மூஸ்லீம்களை தங்கள் பக்கம் இழுக்க சிதம்பரம், காவி பயங்கரவாதம் பற்றி பேசியதாக அவர் குற்றம்சாட்டினார். அதே சமயம் ராஷ்டிரிய ஜனதா தளமும், லோக் ஜனசக்தி கட்சியும், ஆர்.எஸ்.எஸ்.சை தடைசெய்ய வேண்டும் என்று கோரினர். ஜம்முகாஷ்மீர் பகுதிக்கு சுயாட்சி கொடுப்பது என்ற மத்திய அரசின் அணுகுமுறையையும், பா.ஜ.க. குறை கூறியது. தங்கள் அடிமடியில் கைவைக்கும் போது, பா.ஜ.க. இந்த கண்டுபிடிப்பை கூறுகிறது. அதாவது பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது என்பது தான் அந்த கண்டுபிடிப்பு. நேற்றுவரை இஸ்லாமிய பயங்கரவாதம் என்று, அமெரிக்கா தொடங்கி, பா.ஜ.க. வரை கூறிவந்த முத்திரைக் குத்தல் இப்போது தங்களையே தாக்குவதால், அறிவு வந்திருக்கிறது போலும். அதேபோல சிவப்பு பயங்கரவாதம் என்று வண்ண முத்திரைக் குத்துவதில், இவர்கள் யாருமே சளைத்தவர்கள் அல்ல என்பதும் கவனிக்கப்படவேண்டும். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு, இந்துத்துவா பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியது. மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக இருந்த பி.ராமன், அப்போதே மேற்கண்ட மாலேகான் குண்டுவெடிப்பில் சில இந்துக்களின் தொடர்பை சந்தேகித்து எழுதியிருந்தார். ஒவ்வொரு குண்டுவெடிப்பையும் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்இதெய்பா விற்கும், வங்காள தேசத்திலுள்ள ஹுஜி அமைப்பிற்கும் தொடர்புபடுத்தி பார்க்க கூடாது என்று அப்போதே எழுதியிருந்தார். இந்துதுவா சக்திகள் அப்பாவி இந்திய மூஸ்லீம்களை தாக்குவதற்காக முயலலாம் என்றும், ராணுவத்தில் உள்ள சில இந்துத்துவா சக்திகள் அவ்வாறு ஈடுபடலாம் என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக பதிளடிகொடுக்க, நம் நாட்டு மூஸ்லீம்களை தாக்குவது என்பதை நமது நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்திலேயே ஆதரிப்போரும் உண்டு என்பது பி.ராமனின் கருத்து. ஐதரபாத்தில் உள்ள மெகா மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலும், சம்ஜோதா விரைவு ரயில்வண்டியில் நடத்தப்பட்ட தாக்குதலும், மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட இந்துத்துவாவாதிகள் என்று இந்திய புலனாய்வுத் துறை கண்டுபிடித்தது. ஆனால் அவர்களை காப்பாற்ற, மேற்கண்ட தாக்குதல்கள் பாகிஸ்தானில் உள்ள ஜிகாதி அமைப்பினரால் நடத்தப்பட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை ஏன் கூறுகிறது என்பது கண்காணிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சிக்கலான விஷயத்தை, மேலும் சிக்கலாக்குவதற்கும், வாக்கு வங்கிகளை உருவாக்குவதற்கும், உரிமை போராட்டங்களை திசை திருப்புவதற்கும், ஆள்வோர் செயல் தந்திரங்களாக பயன்படுத்துகிறார்களா என்று மக்கள் மன்றம் தான் முடிவு செய்யவேண்டும்.
Friday, August 27, 2010
ராகுல் காந்தியின் புதிய வேடம்
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திடீரென ஒரிசா மாநிலம் நியாம்கிரி மலைகளுக்கு பயணம் செய்துள்ளார். அங்கேதான் ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம், பாக்ஸைட் சுரங்கம் தோண்டுவதற்கான முதல்கட்ட அனுமதியை பெற்று, அந்த மலைத் தொடரை அழித்து வந்தது. அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான பழம்குடியினர் தங்கள் பாரம்பரிய மலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப் பட்டவர்களில் மிகச் சிலருக்கு குடியிருப்புகள் அங்கேயே கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கான எந்தவொரு வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பதற்றத்தில் இருக்கின்றனர். நியாம்கிரி மலைத் தொடரை தங்களுடைய கடவுளாக அந்த பழங்குடியினர் பூஜை செய்து வருகின்றனர். தங்கள் கடவுளையே வயிற்றில் குத்தி, உடைக்கிறார்களே என்று, வேதாந்தா நிறுவனம் மீது ஆத்திரம் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட வேதாந்தாவிற்கு, சென்றவாரம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனஇலகா அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பாக்ஸைட் சுரங்கம் தோண்டுவதற்கும், அலுமினியம் சுத்திகரிப்பு ஆலையை நடத்துவற்கும் கொடுக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் அனுமதியை மறுத்து அறிவித்தார். அதுவே, நாடு தழுவிய விவாதமாக மாறியது.நியாம்கிரி மலைத் தொடர் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள், தவிர்க்க முடியாமல் தங்கள் பாதுகாப்பிற்கு மாவோயிஸ்டுகளை நாடி சென்றிருந்தனர். இதை, அறிந்த மத்திய அரசின் தந்திரமாக, பழங்குடி மக்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருந்தது. இத்தகைய சூழலில் தான், ராகுல்காந்தி தாடி வைத்த புதிய தோற்றத்துடன், நியாம்கிரி மலைகளுக்கு பயணம் செய்துள்ளார். மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு சுரங்கம் மற்றும் சுத்தகரிப்பு ஆலை அனுமதி மறுப்பை அறிவித்து இரண்டே நாட்களில், ராகுல் காந்தியும் பயணம் அந்த மலையை நோக்கி நடத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை, புதிய அவதாரத்துடன் ராகுல்காந்தி திறந்து வைத்துள்ளார் என்று ஒரு ஆங்கில ஏடு எழுதியுள்ளது.2004ம் ஆண்டு புதிய ஆட்சியை ஐ.மு.கூ. தொடங்கியபோது, ராகுல் காந்தி டெல்லியில் நமது ஆட்களின் ஆட்சி இனி நடைபெறும் என்று கூறினார். அதை இப்போது செய்துள்ளதாக கூறிக்கொள்கிறார். தலித்துகள் மற்றும் பின்தங்கிய மக்களின் குரல் கேட்கப்படுவதுதான் வளர்ச்சி என்று ராகுல் இப்போது புதிய விளக்கம் கூறியிருக்கிறார். லாஞ்சிகார் என்ற பகுதிக்கு ராகுல் சென்றுள்ளார். அங்கு வசிக்கும் டோங்கிரியா கோன்ட்ஸ் என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.உங்கள் சிப்பாயாக நான் வேலை செய்வேன் என்று அந்த பழங்குடியின மக்களிடம் ராகுல் கூறிய, தலைப்புச் செய்தியாக வெளிவருகிறது. ஒரிசா மாநிலத்தின் காலஹண்டி மாவட்டத்தின் ஜகன்நாத்பூர் என்ற ஊரில் நடந்த கூட்டத்தில் வந்திருந்த பழங்குடியின மக்களைப் பார்த்து, உங்களுக்காக டெல்லியில் இருந்து கொண்டு பணியாற்றுவேன் என்று கூறியிருக்கிறார். என் உதவி வேண்டும் போது அழையுங்கள் என்று புதிய அவதாரம் எடுத்த கடவுள் போல கூறியிருக்கிறார். வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக போராடிவரும் அந்த பழங்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றிதான், வேதாந்தா நிறுவனத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதும் என்று பழங்குடி மக்களின் பாராட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அங்கே சென்றபோது, அவர்களுக்காக போராடுவதாக தான் கூறியுள்ளதை நினைவுபடுத்தியுள்ளார். அந்த வட்டாரத்தில் பாரம்பரியமாக, மலைகளின் இயற்கை சூழலை சார்ந்து வாழ்ந்து வரும், டோங்கரியா கோண்ட்ஸ், மற்றும் குட்டியா கோண்ட்ஸ் என்ற இரண்டு பழங்குடியின மக்களது வாழ்நிலையை காப்பாற்ற தாங்கள் முயற்சியில் ஈடுபடுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். ஏழைகளை விரட்டுவதன் மூலம் பழங்குடி மக்களின் வளர்ச்சியை எட்டமுடியாது என்றும், ஏழைமக்களிடம் காது கொடுத்து கேட்பதன் மூலம் தான், வளர்ச்சியை எட்டமுடியும் என்றும் புதிய வியாக்கியானம் பேசியிருக்கிறார். பழங்குடி மக்களின் குரல்கள் நசுக்கப்படுகின்ற என்றும், அவை டெல்லியில் கேட்கின்றன என்றும் கூறியுள்ளார்.கடந்த 10 ஆண்டுகளாக அந்த வட்டாரத்தின் பழங்குடியின மக்களின் வாக்கு வங்கி காங்கிரஸ் கரங்களிலிருந்து மாறி, பாரதீய ஜனதா தளம் என்ற நவீன் பட்நாயக் கட்சிக்கு மாறியிருக்கிறது. அந்த பழங்குடியின மக்களின் வாக்கு வங்கியை, இளைஞர் ராகுல் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வருவதற்காக இவ்வாறு அரும்பாடு படுகிறார் என்று கூறப்படுகிறது.நியாம்கிரி மலை வட்டாரத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேதாந்தா நிறுவனம் ஒரிசா மாநிலத்தில் அந்த அலுமினியம் சுத்திகரிப்பு ஆலைக்காக 540 லட்சம் டாலர்களை மூலதனமாக போட்டுள்ளது. அதனால் தனது திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் எண்ணமே அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இல்லை. ஒரிசா அரசாங்கம் அவர்களுக்கு மாற்றுயிடம் ஏற்பாடு செய்யுமா? என்ற கேள்வியும் நிற்கிறது.ஸ்டெர்லைட்டின் நிறுவனமான வேதாந்தா ஒரு கார்ப்பரேட் என்று அழைக்கப்படும் பெரும் வணிகக் குழுமம். அது இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. ஒரிசா மாநிலத்தில் வன பாதுகாப்பு சட்டம், வன உரிமை சட்டம், கிராம சபை விதிகள் ஆகியவற்றை உடைத்து தன்னுடைய சுரங்கத்தையும், ஆலைப் பணியையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல் கட்டத்தில் அதற்கு கொடுத்த சுற்றுச்சூழல் அனுமதி, முந்தைய ஐ.மு.கூ. ஆட்சியில்தான் மத்திய சுற்றுசூழல் மற்றும் வன இலாகாவால் கொடுக்கப் பட்டுள்ளது. ஆகவே, அனுமதி கொடுத்து ஆதிவாசிகளை அழிக்க வைத்த அதே காங்கிரஸ் கட்சி, இப்போது எதற்காக இரண்டாவது கட்டத்தில் அனுமதி மறுக்கிறது? கார்ப்பரேட் என்று அழைக்கப்படும் பெருவணிக குழுமங்களின் நலன்களுக்காக நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சி, இந்த குறிப்பிட்ட வேதாந்தா நிறுவனத்தின் செயல்பாட்டை மட்டும் ஏன் தடுக்கிறது? நாடெங்கிலும் வெளிநாட்டு பெருவணிகக் குழுமங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, வரிசையாக கையெழுத்திட்ட காங்கிரஸ் அரசாங்கம், இந்த இடத்தில் மட்டும் பெருவணிகக் குழுமமான ஸ்டெர்லைட்டின் வேதாந்தாவை எதிர்ப்பதற்கு ஆதரவு கொடுப்பது ஏன்?மேற்கண்ட கேள்விகள் எழும்போது, அரசியல் தளத்தில் அதற்கான பதில்கள் எல்லாம் வாக்கு வங்கி அரசியல் என்பதாக மட்டும் புரியப்படுகிறது. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நவீன் பட்நாயக் கட்சியான பாரதிய ஜனதா தளத்தை எதிர்ப்பதற்காக, ஒரிசா மாநிலத்தில் இந்த அரசியல் நாடகம் நடத்தப்படுகிறது என்று கூறுகிறார்கள். அதே போல, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளுகின்ற பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி இதே போன்ற பழங்குடி மக்களின் நலன் பற்றி பேசவும் தயாராக இருக்கிறது என்கிறார்கள். இதே நிலைமைதான் பா.ஜ.க. தளத்தில் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்று வரும், சிபுசோரனின் ஜார்க்கண்ட் விடுதலை முண்ணனியையும் எதிர்த்து, காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பழங்குடி மக்கள் நலன் பற்றி அக்கறை காட்டும் என்றும் விளக்குகிறார்கள். இதே நிலைப்பாட்டில் தான், மேற்கு வங்கத்தில் இடது சாரிகளின் ஆட்சிக்கெதிராக, மம்தா கட்சியின் ஆதரவுடன் பழங்குடி மக்கள் பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கட்சி பேசத் தயாராக இருக்கிறது என்பதாகவும் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரிசா மாநிலத்தில் காசியாபூரில், டாடா ஆலைக்கெதிராக திரண்ட ஆதிவாசிகளை சுட்டுக் கொன்ற போது, 8 லட்சம் ஆதிவாசிகள் பேரணியாக புறப்பட்டார்கள். அப்போது அங்கே நேரில் சென்று துப்பாக்கி சூட்டில் இறந்த பழங்குடி மக்களுக்கு இழப்பீடு தொகையை சோனியா காந்தி வழங்கினார். இவ்வாறாக இந்தியாவின் இதயப் பகுதியில் வாழ்ந்து பழங்குடி மக்கள் பிரச்சனையில், மாற்றுக் கட்சி ஆட்சிகளுக்கெதிராக காங்கிரஸ் கட்சி காய் நகர்த்தி வருகிறது.அப்படியானால், பச்சை வேட்டை என்ற பெயரில் வெள்ளை உடையணிந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஏன் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவேன் என்ற பெயரில், பழங்குடி மக்களை வேட்டையாடி வருகிறார்? அத்தகைய பச்சை வேட்டைக்கும், இப்போது ராகுல் காந்தி மூலம் பழங்குடி மக்களுக்கு கொடுக்கப்படும் இனிப்பிற்கும் என்ன முரண்பாடு? ஒன்று கேரட் கொடுப்பது என்றும், மற்றது குச்சியால் அடிப்பது என்றும் எடுத்துக் கொள்ளலாமா? அரசு இயந்திரத்தை பாதுகாக்கும் எண்ணத்தில், சிதம்பரம் தூண்டிவிடும் பச்சை வேட்டை, தேர்தல் அரசியலில் வெற்றி பெற ராகுல் கொடுக்கின்ற மிட்டாய்களுக்கு எதிரானதா?இந்திரா காந்தி ஆட்சியில், பிருந்தன்வாலே பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியால் ஒரு கட்டம் வளர்க்கப்பட்டு, பிறகு ராணுவத்தின் நீல நட்சத்திர நடவடிக்கையால் அழிக்கப்பட வில்லையா? இந்திரா காலத்தில் புலிகள் உள்பட, ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும், ஆயுதமும் கொடுத்து விட்டு, ராஜிவ் காலத்தில் இந்திய அமைதிப் படையை அனுப்பி அவர்களை கொன்று விட்டு, சோனியா காலத்தில் ஈழத் தமிழ் இனத்தையே அழிப்பதற்கும் துணியவில்லையா? ஆகவே, இப்போது, ராகுல் காந்தி காட்டுகின்ற பச்சைக் கொடி என்பது அடிப்படையில் பழங்குடி மக்களுடைய நலன்களை பாதுகாக்க அல்ல. மாறாக பன்னாட்டு மூலதன நிறுவனங்களையும், பெருவணிகக் குழுமங்களையும் பாதுகாக்க புதிய, புதிய வேடங்களை போட்டுக் கொண்டு வருகிறார்கள். இத்தகைய புரிதல் வரலாற்றை உற்று நோக்குவோருக்கு வரத்தானே செய்யும்?
Thursday, August 26, 2010
ஒருவார நாடகம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளது
கடந்த ஒரு வாரமாக இந்திய நாடாளுமன்றம் முக்கியமான எதிர்காலப் பிரச்சனைக்காக, ஒரு மாபெரும் விவாதத்தை அதிக சச்சரவு இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறது. அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா2010 மிக முக்கியமான, ஆழமாக விவாதிக்க வேண்டிய, அவசரப்படக்கூடாத, ஒரு பிரச்சனை என்று எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங், நாடாளுமன்றத்தின் தனது உரையில் தெரிவித்தது உண்மை என்றால், அவர் உட்பட, அவரது கட்சி உட்பட இந்த ஒருவார கால விவகாரத்தை எப்படி நடத்தினார்கள் என்ற கேள்வி எழுகிறது. மேலும் காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு, மாவோயிஸ்ட் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவிக்கும் உள்துறை அமைச்சர் ஆகியோர், அவற்றைவிட முக்கியமான அணுஉலை விபத்து இழப்பீடு மசோதாவை நிறைவேற்ற அவசரம் காட்டுவது ஏன் என்ற கேள்வியையும் அப்போது ஜஸ்வந்த் சிங் எழுப்பியுள்ளார். இத்தகைய கேள்வி பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் போதுமான அளவுக்கு எழுப்பப்படவில்லை என்றாலும், இனியாவது விவாதிக்கப்பட வேண்டும் என்பதே நமது அவா.
வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வரயிருக்கிறார். அதற்கு முன்பே மேற்கண்ட மசோதாவை சட்டமாக்க மத்திய ஐ.மு.கூ. அரசு அவசரப்படுகிறது என்பது ஜஸ்வந்த் சிங்கின் குற்றச்சாட்டு. அதேசமயம் அமெரிக்காவில் கையசைவிற்கு ஏற்றார்போல் செயல்படுவதற்கு, இந்த சட்ட முன்வரைவை அவசரமாக அமுல்படுத்தாதீர்கள் என்றும் ஜஸ்வந்த் கூறினார். மேற்கூறிய அவரது கூற்றுக்கள் அனைத்தும் உண்மையா? ஒபாமா வருகைக்கு முன்பே இழப்பீடு சட்டத்தை உருவாக்கி அவரது காலடியில் வைக்க வேண்டும் என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ.விற்கு மட்டும் இருக்கின்ற விசுவாசமா? பா.ஜ.க.விற்கும் அமெரிக்காவுடன் அப்படிப்பட்ட ஒரு கள்ளஉறவு இல்லையா?
மேலே காணும் கேள்விகளுக்கு பதில் தேட, கடந்த ஒருவார காலமாக நாடாளுமன்றத்தில், சம்மந்தப்பட்ட சட்டமுன்வரைவு மீது நடந்த விவாதங்களும், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களும், ஊடகங்கள் அம்பலப்படுத்திய செய்திகளும், அதையொட்டி பெரிய கட்சிகள் நிலை தடுமாறி எடுத்த நிலைப்பாடுகளும் நமக்கு உதவிகரமாக இருக்கும். அதன் அடிப்படையில் நடந்தது நாடகமா அல்லது உண்மையா என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.
அதேபோல எதிர்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுவதாக, இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் கொடுத்த விளக்கங்களும், ஆழமாக கவனிக்கப்பட வேண்டும். இந்தியாவின் நலன்களை மேற்கண்ட இழப்பீடு மசோதா சமரசம் செய்யாது என்பது மன்மோகனது கூற்று. அணுஉலைகளை இயக்கும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் கூறினார். அணுசக்தி பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் வாரியத்தை பலப்படுத்துவோம் என்றும் கூறினார். அதில் ஆளும் கட்சி எதிர்கட்சியின் கருத்தையே கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதனால் எதிர்ப்பேயில்லாமல் அந்த மசோதாவை நிறைவேற்றித் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ஜஸ்வந்த் சிங் தனது கவலைகளை தெரிவிக்கும் போது, சிறிய அமெரிக்க சந்தைக்காக, பெரிய இந்திய சந்தையை அடிபணியச் செய்யக்கூடாது என்றார். அதேசமயம் ‘அண்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லையும், பிறகு ‘இன்டன்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லையும், தந்திரமாக வரைவு நகலில் அரசாங்கம் திணித்துள்ளது என்று குற்றம்சாட்டினார். அதாவது வரைவு நகலின் 17வது திருத்தத்தில், அ பிரிவிற்கும், ஆ பிரிவிற்கும் இடையில் உள்ள இணைப்பாக அந்த அன்ட் என்ற ஆங்கிலச் சொல் வருவதன் மூலம், ஆ பிரிவில் வெளிநாட்டு விநியோகத்தர்களை பொறுப்பாக்கும் செயல் கட்டுப்படுத்தப்படும் என்பதே எதிர்கட்சிகளின் விமர்சனம். அதேபோல இ பிரிவில் சேர்க்கப்பட்ட, உள்நோக்கம் என்ற இன்டன்ட் எனும் ஆங்கில வார்த்தை, முழுமையாக வெளிநாட்டு விநியோகத்தர்களை பொறுப்பேற்க நிரூபிக்க முடியாமல் போகக்கூடிய வார்த்தை என்பது தான் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த இரண்டையும் எடுத்து விடுகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறிய பிற்பாடு, மசோதாவிற்கு பா.ஜ.க. ஆதரவு அறிவித்தது. அதையொட்டியே மக்களவையில் மசோதா நிறைவேறியது.
மேற்கண்ட சர்ச்சைகளும், விவாதங்களும் உண்மையாகவே நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமா? உதாரணமாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிலைக்குழு, பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியது. பா.ஜ.க.வால் குற்றம்சாட்டப்பட்ட அன்ட் என்ற ஆங்கிலச் சொல், அந்த நிலைக்குழுவின் கடைசி அமர்வில், அதாவது நாடாளுமன்றம் முன்னால் மசோதாவின் வரைவு நகலை முன்வைப்பதற்கு முன்பு நடந்த கடைசி அமர்வில் வைக்கப்பட்ட ஆவணத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை அந்த நிலைக்குழுக் கூட்டத்திலேயே, இடதுசாரி உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அந்த எதிர்ப்பை பா.ஜ.க. உறுப்பினர்கள் உட்பட, அனைத்து நிலைக்குழு உறுப்பினர்களும், மறுத்து விட்டு அன்ட் என்ற ஆங்கிலச் சொல்லை, ஆவணத்தில் அனுமதித்திருக்கிறார்கள். அப்படியானால் விவரம் தெரிந்தே, பா.ஜ.க. பிரதிநிதிகள், காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கொண்டு, நிலைக்குழு முன்னால் வைக்கப்பட்ட நகலை நிபந்தனையற்று ஆதரிக்க வேண்டும் என்ற கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்று, அனுமதித்திருக்கிறார்கள் என்பது அதில் அம்பலமாகிறது. அப்படியானால் அதையும் சுட்டிக்காட்டி, ஜஸ்வந்த் சிங் நாடாளுமன்றத்தில் குறை சொல்வது என்பது ஒரு நாடகமே என்பது புரிகிறது.
மேற்கண்ட நாடகத்தை நடத்துவதற்கு பா.ஜ.க.விற்கு என்ன அவசியம் வந்தது? அது சொராபுதீன் போலி துப்பாக்கிசூட்டு மரணத்தில், நரேந்திர மோடியை நிரபராதி ஆக்குவதற்கு ஆட்சியாளர்களின் உதவியுடன் சி.பி.ஐ. மூலம் கொடுத்த அறிவிப்பு மட்டும் காரணமா? அதையும் தாண்டி ஏதாவது அனைத்து நாட்டு காரணங்கள் இருக்கிறதா?
மக்களவையில் பெரும் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்ட அணுஉலை விபத்து இழப்பீடு மசோதாவினால், உடனடியாக பயன்பெறப் போவதும், அதேபோல அப்படியொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு நிர்ப்பந்தித்ததும், அமெரிக்கா மற்றும் அணு எரிபொருள் விநியோகிக்கும் நாடுகள் என்ற உண்மையை யாரும் மறுப்பதற்கில்லை. அவ்வாறு அமெரிக்க நலனை பேணுவதற்காக ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஐ.மு.கூ. செயல்படுகிறது என்ற ஜஸ்வந்த் சிங்கின் விமர்சனம் எந்த அளவிற்கு சரியானதோ, அதேபோல தொடக்கத்திலிருந்தே நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பதற்காக தயாராகயிருந்த பா.ஜ.க.வும் செயல்படுகிறது என்ற உண்மை இப்போது தெளிவாகத் தெரிகிறது.
நிலைக்குழுவில் பா.ஜ.க.வால் ஏற்கப்பட்ட அன்ட் என்ற ஆங்கிலச் சொல்லைப் பற்றிய விவரங்களை, சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு விரிவாக அம்பலப்படுத்தியப் பிற்பாடு, அதையே மேற்கோளாகக் கொண்டு அருண் ஜெட்லியும், சுஷ்மா சுவராஜும் மறுநாள் மற்ற பா.ஜ.க. தலைவர்களுடன் விவாதித்து, அதை எதிர்த்தார்கள் என்ற செய்தி ஊடகங்களில் அம்பலமானது. அது கூடுதலான சான்றாக இருக்கிறது. இதன் மூலம் நடந்தவையெல்லாம் நாடகம் தான் என்பதும் தெரிகிறது.
மேற்கண்ட மசோதாவை ஆகஸ்ட் மாதம் 2ம் வார தொடக்கத்திலேயே கொண்டு வந்து உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு எண்ணியது. அதுவும் அமெரிக்காவின் விருப்பம் தான் என்பது தெரிகிறது. பொதுமக்கள் மத்தியில் விவாதத்திற்கு செல்லாமலேயே, மசோதாவின் நகலை அவசரமாக நிறைவேற்றுவது என்பது அமெரிக்காவின் திட்டம். ஏற்கனவே அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம், இடதுசாரிகளின் முயற்சியாலும், ஊடகங்களின் ஒத்துழைப்பாலும் நாடு தழுவிய விவாதமாக மாறி, அணு அறிவியலாளர்களும் தங்களது எதிர்ப்பை அந்த ஒப்பந்தத்திற்கு தெரிவித்ததையொட்டி ஏற்பட்ட தாமதம் ஒரு படிப்பினையாக அமெரிக்காவால் உணரப்பட்டது. ஆகவே மேற்கண்ட இழப்பீடு மசோதா பற்றிய விமர்சன, விவாதங்களை பெரிய அளவில் அச்சு ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் வரவிடாமல் தடுத்த பங்கும் அமெரிக்காவையே சாரும். அதேபோல இந்திய தொழில் முதலாளிகளின் அமைப்புகள் இரண்டும், மசோதா பற்றிய விவாதத்தில் இறங்கி, வெளிநாட்டு விநியோகத்தர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது, ஒரு அனைத்து நாட்டு திட்டமிடல் என்பது தெரிகிறது. ஒருவார கால நாடாளுமன்ற நாடகம் மக்கள் மத்தியில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாததால், நாடக ஏற்பாட்டாளர்களுக்கு அது வெற்றியைத் தந்துள்ளது.
Wednesday, August 25, 2010
அந்நியர், தனியார் கைகளில் தேசப்பாதுகாப்பு போய்விடுமா?
ஆகஸ்ட் 25ம் நாள் நாடாளுமன்றத்தின் மக்களவையில், அணுஉலை விபத்து இழப்பீடு சட்ட முன்வரைவு விவாதத்திற்காக வைக்கப்பட்டது. எத்தகைய விவாதம் எழுந்தாலும், எப்படியாவது முன்வைக்கப்பட்ட சட்ட முன்வரைவை நிறைவேற்றி விட வேண்டும் என்ற துடிப்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியாளர்களிடம் தென்படுகிறது. அதற்காக ஒருபுறத்தில் பிரச்சனைகளை கிளப்பும் பா.ஜ.க.வுடனும், மறுபுறத்தில் இடதுசாரிகளுடனும் தனிநபர் பேச்சுவார்த்தைகளை ஆட்சியாளர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சுரியுடனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் து.ராஜாவுடனும், தலைமை அமைச்சர் அலுவலகத்திலிருக்கும் மாநிலங்களவை அமைச்சர் பிருத்திவிராஜ் சவான், அரசாங்க அணுகுமுறை பற்றிய பேச்சுவார்த்தையை நடத்தினார். அணுஉலைகளுக்கு எரிபொருட்களை விற்பனைச் செய்கின்ற அந்நிய விநியோகத்தர்கள் நலன்களையும், உள்நாட்டு தனியார் சக்திகளின் நலன்களையும் பாதுகாப்பதற்காக, ஏற்கனவே எழுதப்பட்ட வரைவு நகலை நீர்த்துப்போக வைக்கும் திருத்தங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது இடதுசாரிகளின் தொடர் குற்றச்சாட்டாக இருக்கிறது. இழப்பீடு தொகைக்கான எல்லையை ரூ.500 கோடியிலிருந்து, ரூ.1500 கோடிக்கு உயர்த்தி இருக்கிறோம் என்ற செய்தியையே தொடர்ந்து பிருத்திவிராஜ் சவான் கூறி வந்தார். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவரான யெச்சுரியின் வாதப்படி, ரூ.1500 கோடியிலிருந்து இழப்பீடு தொகை எல்லையை, ரூ.10,000 கோடிக்கு உயர்த்த வேண்டும் என்ற தங்களது ஆலோசனையை ஆட்சியாளர்கள் கேட்கவில்லை என்பதே. இழப்பீடு தொகையின் மீதான எண்ணிக்கை வாதம் ஒரு பெரும் தடங்கலாக ஆள்வோர் நினைக்கவில்லை.
அதேசமயம் திருத்தம் 17ல் உள்ள ஆ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள, உள்நோக்கத்துடன் என்ற சொல்லாடல் நீக்கப்பட வேண்டும் என்பதாக இடதுசாரிகள் வைக்கின்ற வாதத்தை ஆட்சியாளர்கள் செவிமடுக்க தயாராயிருக்கிறார்கள். அதே பிரச்சனையை எழுப்பியுள்ள பா.ஜ.க.வின் கருத்தையும் ஏற்கத் தயார் என அறிவித்தார்கள். தனியார் துறைக்கு அணுஉலைகளை தாரை வார்ப்பதற்காக கடைசி மூன்று சேர்க்கைகளை, கடைசி நேரத்தில் அதாவது ஆகஸ்ட் 20ம் நாள் தலைமை அமைச்சரும், மத்திய அமைச்சகமும் இணைத்து விட்டன என்ற பிரச்சனை இடதுசாரிகளால் ஒப்புக்கொள்ளப்படவில்லை. அதாவது அரசாங்கத்தாலோ, அரசாங்கத்தின் நிறுவனங்களாலோ இயக்கப்படாமல், இயங்கி வரும் அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவைகளுக்காக இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவிப்பாணை கொடுக்குமானால், அத்தகைய நிகழ்வுகளிலும் முழு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்ற சேர்க்கையைத் தான் இடதுசாரிகள் அவ்வாறு கேள்விக் கேட்கிறார்கள். அதற்கு பதிலளித்த பிருத்திவிராஜ் சவான், அத்தகைய விளக்கம் தவறானது என்று மட்டும் கூறி தப்புவதற்கு முயன்றிருக்கிறார்.
என்.பி.சி.ஐ. என்ற இந்திய அணுசக்தி வாரியம், அனைத்து நாட்டு ஆய்வுக்குள் அடங்காது என்பதால், அரசாங்கமும் அதனால் ஏற்படும் பாதிப்பிற்கு இழப்பீடு தொகையை எழுதவில்லை என்றால், அத்தகைய அணுஉலைகளுக்கு பரிசோதனைக்கான காப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதையும் கூட இடதுசாரிகள் வலியுறுத்துகிறார்கள். அதேசமயம் சி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் துணை இழப்பீடு ஒப்பந்தத்தில், இந்திய அரசு இணையக் கூடாது என்ற கருத்தை இ.க.க. தலைவர் து.ராஜா, வலியுறுத்தியுள்ளார்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வடிவத்திலேயே இந்த இழப்பீடு சட்டமுன்வரைவை ஏற்க முடியாது என்று இடதுசாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிறகு அதன் மீது கருத்துக்கள் கூறுவதாகவும் கூறினர். அதேபோல தெலுங்கு தேசம் கட்சியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். தேவையான மாற்றங்களை முன்வைக்கப்பட்ட மசோதாவில் கொண்டு வரவில்லை என்றால் தாங்கள் அதை ஏற்கமாட்டோம் என்று தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் அறிவித்தார்.
திடீரென இந்தியாவிலிருக்கும் அணுசக்தி தொழிலதிபர்களிடமிருந்தும் மேற்கண்ட மசோதாவிற்கு எதிர்ப்புக் கிளம்பியது. தலைமை அமைச்சருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், இந்திய வணிகம் மற்றும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு இதுபற்றி ஒரு கடிதத்தை, அதன் தலைவர் ராஜன் பார்த்தி மிட்டல் பெயரில் அனுப்பியது. அதில் 17வது திருத்தத்திலுள்ள ஆ பிரிவில் பிரச்சனையைக் கிளப்பியிருந்தார்கள். அதேபோல இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின் பொது இயக்குநர் சந்திரஜித் பேனர்ஜியும், அதே போன்ற பிரச்சனையை அமைச்சர் பிருத்திவிராஜ் சவானுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். மிட்டல் தனது கடிதத்தில் அணுஉலைக்கு எரிபொருள் விநியோகிக்கும் யாரையும் விபத்து இழப்பீட்டிற்கு பொறுப்பெடுக்க வைத்தால், அது குறிப்பாக எதிர்காலத்தில் இந்திய தொழிலதிபர்களை பாதிக்கும் என்று எதிர்ச்சால் ஒன்றை ஓட்டியுள்ளார். இப்போது இந்தியாவிற்குள் இருக்கும் 17 அணுஉலை நிறுவனங்களை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் குறைபாட்டிற்காக விநியோகத்தரிடம் இழப்பீடு பெறுவதை, அனைத்து நாட்டளவில் ஏற்றுக் கொண்டபடி, விநியோகித்த கருவியை அளித்த 12 மாதங்களிலிருந்து, 24 மாதங்களுக்குள் என்ற வரையறையை தாண்டினால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அணுஉலை தொழில்நுட்பங்களை தொடர்ந்து பெறமுடியாது என்ற மிரட்டல் அம்சத்தையும் தனது கடிதத்தில் மிட்டல் கூறியுள்ளார்.
அதேசமயம் 17வது திருத்தத்தில் அமுலாக்குவதற்கான சாத்தியப்பாடோ, நியாயமோ இல்லை என்கிறார் அவர். விநியோகத்தர் அல்லது சேவை செய்வோர் தங்கள் விநியோகக் காலம் தாண்டி பொறுப்பெடுக்க வைத்தால், அதாவது திட்டத்தின் 60 வயதுடன் மேலும் 20 ஆண்டுகளைச் சேர்த்து காலம் நீட்டிக்கப்படுமானால், எதிர்காலத்தில் தங்களது பங்களிப்பு இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். விநியோகத்தர் பட்டியலில், கருவிகள் கொடுத்தோர், சேவை ஈடுபடுவோர் என்ற வகையில் சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களையும் இணைத்து 300 நிறுவனங்களை இழப்பீடு பொறுப்பெடுக்கும் பட்டியலில் வருமானால், அது நடைமுறை சாத்தியமல்ல என்றும் தனியார் அணுஉலை எரிபொருள் வர்த்தகர்கள் சார்பாக தெரிவித்துள்ளார். அதற்காக 17வது திருத்தத்திலுள்ள ஆ பிரிவையே நீக்க வேண்டும் என்பது அவரது வாதம். காப்பீடு திட்டம் ஒன்று இல்லாமல், வெளிநாட்டு விநியோகத்தர்களும் பங்குக் கொள்ளமாட்டார்கள் என்பது அவரது வாதம்.
பா.ஜ.க. உதவியில்லாமல் மேற்கண்ட சட்டமுன்வரைவை, சட்டமாக்க முடியாது என்பதில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இந்த சட்டத்தால் அதிகமான நலனை பெறுபவர் என்று வருணிக்கப்படும் அமெரிக்காவும் இந்த இரு இந்திய பெரும் கட்சிகளை நம்பியே உள்ளது. இந்த நேரத்தில் பா.ஜ.க.வின் ஜஸ்வந்த் சிங், கொண்டு வந்த திருத்தங்களை ஏற்க ஆட்சியாளர்கள் சம்மதித்தனர். ஒபாமா வருகைக்கு முன்பு அவசரமாக இந்த மசோதாவை கொண்டு வந்ததாக குற்றம்சாட்டிய பா.ஜ.க., அமெரிக்காவை திருப்திப்படுத்த இதை கொண்டுவராதீர்கள் என்று கூறி, ஒரு போலியான அமெரிக்க எதிர்ப்பை மக்களவையில் பதிவு செய்தது. அதேசமயம் தங்கள் திருத்தங்கள் ஏற்கப்பட்டால், சட்டமாவதை ஆதரிப்போம் என்ற உள்கருத்தையும் கூறிவிட்டது.
இவ்வாறு ஒரு சட்டம் இந்திய மக்களின் மீது குறிப்பாக வரிசெலுத்துவோர் மீது ஏற்றப்படுகிறது. அதேசமயம் அந்நிய நாட்டு அணு எரிபொருள் முதலாளிகள் மற்றும் இந்திய நாட்டு முதலாளிகள் ஆகியோரை குளிர்வித்து, நாட்டின் பாதுகாப்பு அம்சத்தையே தனியார் கைகளில் கொடுப்பதற்கு வழிவகை செய்கிறது. இத்தகைய செய்திகளை நாட்டுப்பற்றுடன் ஊடகங்களும், பொதுமக்களும் புரிந்துக் கொள்ளப்போவது எந்த நாள் என்பது தான் இப்போது தொடங்கியிருக்கும் கணக்கு.
Tuesday, August 24, 2010
பழங்குடி நலனை அழிக்கும் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு?
ஆகஸ்ட் 23ம் நாள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகா, ஒரிசா மாநிலத்தில் பாக்சைட் என்ற தாதுப்பொருளை தோண்டி எடுக்கும் சுரங்கத்தை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. வேதாந்தா நிறுவனம் வனஉரிமை சட்டத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தையும் உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறியிருப்பதாகவும், அதனால் தான் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் அறிவித்துள்ளது. யார் இந்த வேதாந்தா நிறுவனம் என்று கேட்டால், இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம் என்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதன் அதிபர் அல்லது முதலாளி யார் என்று வினவினால், அனில் அகர்வால் என்ற வடநாட்டு இந்தியர் என்ற செய்தியும் வெளிவருகிறது. குறிப்பாக வேதாந்தா நிறுவனம் பற்றி புரிய வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் தூத்துக்குடி நகரில் கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை முழுமையாக கெடுத்து வருவதற்கு பெயர் பெற்ற ஸ்டெர்லைட் நிறுவனம் தான் என்று தெரிய வருகிறது.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைத் திட்டம் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டப்பட்ட காலத்திலிருந்தே கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராசன் கைது செய்யப்பட்டார். ரூ.746 கோடியை வரி செலுத்தாமல் ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். உண்மைகளை மறைத்து, ஏமாற்று வேலை செய்து வரிகட்டுவதிலிருந்து தப்பி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். 1962ம் ஆண்டின் சுங்கவரிச் சட்டப்படி பிரிவு 135(1)(டி) ஆகியவற்றில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் மூலம் பெரும் பணக்கார கம்பெனி என்று அறியப்பட்ட ஸ்டெர்லைட் கள்ளத்தனமான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது பகிரங்கமானது.
அடுத்து அதே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஏற்றுமதி செய்த சரக்குகளில் கள்ளத்தனமாக, கணக்கில் வராத சரக்குகளை அனுப்பியது கையும், களவுமாக பிடிப்பட்டது. கலால் வரி அதிகாரிகள், தாமிர கழிவுகளில் இருக்கும் தங்கத்தையும், வெள்ளியையும் பிரிப்பதற்காக என்ற பெயரில் வெளிநாட்டிற்கு கப்பல் மூலம் ஸ்டெர்லைட் ஆலை ஏற்றுமதி செய்த போது, அதில் கணக்கில் காட்டப்படாத விலையுயர்ந்த தாதுப்பொருட்களான பிளாட்டினமும், பல்லடியமும் இருந்தன என்பதை கண்டுபிடித்தார்கள். தூத்துக்குடிமதுரை சாலையில் இதுபோல 36 கண்டெய்னர்கள் தாமிர கழிவுகளை ஏற்றிச் செல்லும் போது பிடிபட்டன. அதிலிருந்த ஆவணங்கள், தாமிரக் கழிவுகள் தங்கத்தையும், வெள்ளியையும் கொண்டிருப்பதாகவும், அவற்றை பிரித்தெடுக்க வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதற்காக சென்னை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் கூறின. ஆனால் அதில் ரூ.18 கோடி மதிக்கத்தக்க விலையுயர்ந்த பிளாட்டினம் மற்றும் பல்லடியம் இருந்தது பிடிப்பட்டுள்ளது. கடந்தகால தாமிர கழிவுகள் ஏற்றுமதியில் பலநூறு கோடி ரூபாய்கள் வரிகட்டாமல் முழுங்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இப்போது ஸ்டெர்லைட் ஆலையின் தாய் மற்றும் தந்தை நிறுவனமான வேதாந்தா சிக்கல்களை சந்திக்கிறது. வடஇந்தியாவில் மதிப்புமிக்க தாதுப்பொருட்களின் சுரங்கங்களை உருவாக்கி, அதன் மூலம் தனது தொழிலை நடத்தி வருவது தான், வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம். தாமிர சுரங்கங்களை வெட்டி, அந்த கனிமப்பொருளை தோண்டியெடுத்து, அதை உருக்க ஆலையை உருவாக்கியது தான் வேதாந்தா. தாமிர உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் கடுமையாகக் கெட்டு விடும் என்பதனால், மஹாராஷ்டிரா மாநிலத்தில் காலூன்ற முடியாமல் விரட்டப்பட்ட நிலையில் தான் தமிழ்நாட்டை குப்பைத்தொட்டி என்ற கருத்தில் கொண்டு, தூத்துக்குடி நகரில் வந்திறங்கியது இந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை.
அடிக்கல் நாட்டப்பட்ட போதே கடுமையான எதிர்ப்பை ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் எதிர்கொண்டது. அதன்பிறகு மீனவர் இயக்கங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தொழிற்சங்கவாதிகளும், அரசியல்வாதிகளும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பெரும் போராட்டங்களை நடத்தினர். போராட்ட முன்னோடிகளை பல்வேறு வழிகளில் நீர்த்துப்போக வைத்த இந்த ஆலை தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்திக் கொண்டு, சுற்றுச்சூழலை கடலிலும், நிலத்தடி நீரிலும், காற்றிலும் கெடுத்துக் கொண்டு வருகிறது. பின்தங்கிய மக்களுக்கு பல வளர்ச்சித் திட்டங்களை, தானே உருவாக்கிய அரசுசாரா நிறுவனங்கள் மூலம் அளித்து, தனக்கு எதிரான போராட்டங்களையும், நீர்த்துப் போக செய்து வருகிறது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சட்டவிதிகளையே மீறியதற்காக பிடிபட்டு, அம்பலமாகி நிற்கிறது.
தூத்துக்குடியைப் போலவே, ஒரிசாவிலும் தனது விதிமீறல், சட்டமீறல் ஆகியவற்றால் இப்போது மாட்டிக்கொண்டுள்ளது. ரூ.50,000 கோடி வரை ஒரிசா மாநிலத்தில் மூலதனமிட திட்டமிட்டு, நியாம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் தனது பாக்சைட் சுரங்கத்தையும், சுத்திகரிப்பு ஆலையையும் நடத்தி வருகிறது. இந்த நியாம்கிரி மலைத்தொடர் அதிகமான அளவில் பாக்சைட் தாதுப்பொருளைக் கொண்டது. அந்த மலைகளை உடைத்து, நடு வயிற்றில் குத்தியதுப் போல வேதாந்தாவின் ஆலை அமைந்துள்ளது. வெண்புகையை கக்கி வரும் அந்த ஆலை, பசுமையான மலைப்பகுதியில் ஒரு பெரும் சொட்டையை ஏற்படுத்திய நிலையில், 100 கி.மீ.க்கு மேல் தனது விரிவாக்கத்தை செய்து வருகிறது. சுரங்கத்திலிருந்து வெட்டப்பட்ட மண் மலைப்போல் குவிந்துள்ளது. நியாம்கிரி மலையின் முக்கியப் பகுதியிலிருந்து பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டாலும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேலை கிடைக்கவில்லை என்பதாக அந்த பழங்குடி மக்கள் அலறுகிறார்கள். காடும், மலையும் தான் தங்களது பாரம்பரிய வாழ்வாதாரம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சமீபத்தில் அமைச்சகத்திற்கு முன்வைத்த அறிக்கையில் என்.சி.சக்சேனா, நியாம்கிரி மலையில் சுரங்கம் தோண்டுவதை அனுமதித்தால், 2 முக்கிய பழங்குடி இனத்தவர் அதனால் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்று கூறியுள்ளார். சத்திஷ்கரிலிருந்தும், மஹராஷ்டிராவிலிருந்தும் கொண்டு வரப்படும் தாதுப்பொருட்களை வைத்து அங்கே சுத்திகரிப்பாலை நடக்கிறது. ஒரிசா மாநிலத்தில் உள்ள காலஹண்டி மாவட்டத்தில் இருக்கும் லாஞ்சிகார் பகுதியில் இந்த வேதாந்தாவின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலை இருக்கிறது. அந்த மலைப்பகுதி குண்டியா கோந்த் என்ற பழங்குடி மற்றும் டோங்கோரியா என்ற பழங்குடி இனத்தவரின் பாரம்பரிய இருப்பிடம். வனஉரிமை சட்டத்தின் கீழும், கிராம சபை சட்டத்தின் கீழும் வனவாசிகளுக்கான உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதால் அவற்றை மீறி, இந்த வேதாந்தாவின் அதாவது ஸ்டெர்லைட்டின் பாக்சைட் சுரங்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகாவின் குற்றச்சாட்டு.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு 3 உறுப்பினர் குழு, அந்த வட்டாரத்தில் நேரடியாக இறங்கி ஆய்வு அறிக்கையை பிப்ரவரி 25ம் நாள் முன்வைத்துள்ளது. அதில் சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையத்தின் சார்பாக சட்ட நிபுணர் உஷா ராமநாதன், டேஹ்ராடன்னை சேர்ந்த வன உயிர்கள் பாதுகாப்பு முன்னாள் கூடுதல் இயக்குநர் வினோத் ரிஷி, புவனேஸ்வரிலுள்ள சுற்றுசூழல் வன அமைச்சகத்தின் வன பாதுகாப்பு தலைமை அதிகாரி ஜே.கே.திவாரி ஆகியோர் அத்தகைய ஆய்வை நடத்தி, தங்கள் பரிந்துரைகளை அமைச்சகம் முன் வைத்துள்ளனர். அதில் டோங்கிரியா கோண்ட் என்ற பழங்குடி மக்கள், மேற்கண்ட திட்டத்தால் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு, கோபம் கொந்தளிக்க எழுச்சி பெற்றுள்ளனர் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்க்கை வன உயிர்கள் சம்மந்தப்பட்டதாகவும், மருந்தாகப் பயன்படும் தாவரங்கள், பழங்கள், வேர்கள் ஆகியவை சம்மந்தப்பட்டதாகவும் இருப்பது அறியப்பட்டது. அவை அனைத்துமே வேதாந்தா திட்டத்தால் பாதிக்கப்படுகிறது. டோங்கார் என்று அழைக்கப்படும் அவர்களது கடவுளான நியாமராஜா, வேதாந்தாவால் தோண்டப்பட்டும், வெடிக்கப்பட்டும் சிதறுவதை அந்த பழங்குடி மக்கள் தாங்கத் தயாராக இல்லை. மேற்கண்ட பாதிப்புகள் அந்த போர்க்குணம் மிக்க பழங்குடி மக்களை, மாவோயிஸ்ட்கள் பக்கம் தள்ளி விடுகிறது என்ற உண்மையையும் மத்திய அரசு கவனிக்காமல் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் தான், வேதாந்தா என்ற அந்த பணக்காரத் திமிர் பிடித்த கம்பெனியின் சட்ட விரோத, விதி மீறல் செயல்களுக்கு ஒரு தடை போடப்பட்டுள்ளது. இந்த தடையை தொடர்வதற்கு மத்திய அரசிற்கும், அரசியல்வாதிகளுக்கும் மனஉறுதி தொடருமா என்பது கேள்விக்குறியே.
Monday, August 23, 2010
அமெரிக்க சரணடைவை விமர்சிக்கும் விஞ்ஞானிகள்.
நாடாளுமன்றத்தின் முன்னால் வைக்கப்பட்டுள்ள, அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா2010, நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம் எந்த அளவிற்கு இந்தியாவின் தலைமை அமைச்சரை அமெரிக்க நலன்விரும்பி என்று அம்பலப்படுத்தியதோ, அதைவிட அதிகமான அளவில் மேற்கண்ட மசோதா அவரது நாட்டுப்பற்றையும், அவர் தலையிலான மத்திய அரசின் தன்மையையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. அமெரிக்க நட்பு சக்தியான தலைமை அமைச்சர் ஆகஸ்ட் 20ம் நாள் அந்த இழப்பீடு மசோதாவிற்கு ஒப்புதல் கொடுப்பதற்காக, மத்திய அமைச்சரவை கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் என்பதாக ஊடகங்கள் சித்தரிக்கத் தொடங்கியுள்ளன. 2008ம் ஆண்டு செப்டம்பர் 10ம் நாள் இந்திய நாடாளுமன்றத்தை கலந்துக் கொள்ளாமல், அமெரிக்காவிடம் இருந்து 10,000 மெகா வாட் மதிப்புள்ள லேசான நீர் உலைகளை இந்தியா விலைக்கு வாங்கிக் கொள்ளும் என்று, அமெரிக்க அரசுத் துறைச்செயலாளரிடம் இந்திய வெளிவிவகாரத் துறை செயலாளர் மூலம் ஒரு கடிதத்தை, மன்மோகன் சிங் வாக்குறுதியாகக் கொடுத்தார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. புதிதாக வரவிருக்கின்ற சட்டம், விலை அதிகம் உள்ள அதே நேரத்தில் சோதிக்கப்படாத லேசான நீர் உலைகளை பெரும் விலைக்கு இந்தியாவிற்கு, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டு அணுசக்தி தொழிற்சாலைகள் விற்பதற்கு வழிவகை செய்யும் என்பதான குற்றச் சாட்டு எழுந்துள்ளது. நமது தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், அமெரிக்காவுடன் நிறுத்திக் கொள்ளாமல், பிரான்ஸ் நாட்டிற்கும் இந்திய நாட்டின் மக்களை அடகுவைக்க வாக்குறுதிக் கொடுத்துள்ளார் என்பதே அந்த குற்றச் சாட்டு. பிரான்ஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசியிடம், மன்மோகன் அதுபற்றி வாக்குறுதி கொடுத்துள்ளார். அணுசக்தி விநியோகத்தர்கள் குழுவின் நிபந்தனைகளை இந்திய அரசிற்கு இணங்குமாறு கொண்டு வர உதவிச் செய்ததற்கு பிரதிபலனாக, இந்திய அரசு பிரான்ஸ் நாட்டு அணுஉலைகளை விலைக்கு வாங்கிக் கொள்ளும் என்பதாக அந்த வாக்குறுதி விளக்கப்படுகிறது. அணுஉலையில் விபத்து ஏற்படும் போது, அதற்கான பொறுப்பை எந்த வகையிலும் வெளிநாட்டு எரிபொருள் விநியோகத்தர் மீது சுமத்தாத ஒரு இழப்பீடு சட்டத்தை இந்தியா உருவாக்காமல், வெளிநாடுகள் அணுசக்தி வணிகத்தில் இந்தியாவுடன் ஈடுபட தயங்குவார்கள் என்பது தான் நமது தலைமை அமைச்சரின் வாதமாகயிருக்கிறது. ஏற்கனவே சர்ச்சைக்குரிய இழப்பீடு மசோதாவில் இருக்கின்ற சட்டத் திருத்தம் 17ல் உள்ள “அ”, “ஆ”, “இ” பிரிவுகளில் உள்ள கருத்துக்களை இணைத்தும், குழப்பியும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிலைக்குழு செய்த தந்திரங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. இப்போது இதேபோல மத்திய அமைச்சரவை கடைசி நேரத்தில் சேர்த்திருக்க கூடிய, திருத்தப்பட்ட பிரிவுகள் பிரச்சனையை உருவாக்கியுள்ளன. அதாவது பிரிவு 2 (1) என்பதில், ஒரு அணுஉலை நிறுவனர் என்ற இயக்குனர் பொறுப்பில் மத்திய அரசோ அல்லது எந்த அதிகாரமோ அல்லது அதனால் நிறுவப்பட்ட கார்ப்பரேஷனோ அல்லது அரசாங்க கம்பெனியோ, யாருக்கு 1962ன் சட்டமான அணுசக்தி சட்டம், அந்த அணுஉலையை இயக்குவதற்காக ஒப்புதல் கொடுத்துள்ளதோ, என்பதாக விளக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மத்திய அமைச்சரவை 3 (அ) என்று ஒரு பிரிவை புதிதாக சேர்த்துள்ளது. அதில் இந்த சட்டம் மத்திய அரசு செந்தமாகவோ அல்லது அதன் கட்டுப்பாட்டுக்கு கீழோ, தன்னாலோ அல்லது ஒரு அதிகாரத்தாலோ அல்லது தான் நிறுவிய கார்ப்பரேஷனாலோ, அல்லது அரசாங்க கம்பெனியாலோ நிறுவப்பட்ட அணுஉலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அரசாங்க கம்பெனி என்றால் அதில் மத்திய அரசின் பங்குத் தொகையாக 51%க்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மத்திய அமைச்சரவை பிரிவு 7 (1)ன் கடைசியில், மத்திய அரசாங்கம் தன்னால் இயக்கப்படாத ஒரு அணுசக்தி நிலையத்திற்கு முழுமையான இழப்பீட்டு தொகையை ஒரு அறிவிப்பாணை மூலம், பொது நலனுக்கு தேவை என்று அது கருதும் பட்சத்தில் கொடுக்கலாம் என்று எழுதியுள்ளது. மேற்கண்ட பிரிவுகள் 2 (1), 3 (அ) மற்றும் 7 (1)ல் உள்ள கூடுதல் விளக்கம் ஆகியவை கடைசி நேரத்தில் தலைமை அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சரவை மட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றே என்பதாக, இந்திய அரசாங்கத்தின் அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன் எழுதுகிறார். அதாவது மேற்கண்ட புதிய சேர்த்தல்கள் எல்லாமே தனியார் துறையின் கட்டுப்பாட்டில், தனியார் துறையால் ஒரு கட்டத்திற்கு பிறகு சொந்தமாக நிறுவப்படும் அணுசக்தி உலைகளை மனதில் வைத்து எழுதப்பட்டது என்பது தெரிகிறது. 1962ல் அணுசக்தி சட்டத்தில் தங்கள் விரும்பக்கூடிய திருத்தங்களை கொண்டு வந்த பிறகு, அப்படிப்பட்ட ஒரு கட்டத்தை உருவாக்குவார்கள் என்பதும் புரிகிறது. இது பற்றிய விழிப்புணர்வு இதுவரை எழுப்பப்படாதது விந்தையாகயிருக்கிறது. விஞ்ஞானி கோபாலகிருஷ்ணனின் விளக்கங்களும் கேள்விகளும் புதிய செய்திகளை, நடக்கின்ற சர்ச்சையில் சேர்த்துள்ளன. அமெரிக்காவுடனும், பிரான்சுடனும், மற்ற அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகளுடனும், இந்திய அரசு இன்றைக்கு செய்து வரும் ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஆக்கத்திற்கான அணுசக்தி உற்பத்திக்கு அத்தகைய அந்நிய நாடுகளிலிருந்து யுரேனியத்தை பெருமளவில் வாங்கவிருக்கிறது. அதன் மூலம் இந்தியாவிற்கு தேவையான மின்சாரத்தை 2035ம் ஆண்டில் 40,000 மெகா வாட் வரை பெற்றுவிடலாம் என்று மத்திய அரசு கூறுகிறது. அதற்காக எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு பெரும் தொகையை இந்திய மக்களின் வரிப் பணத்திலிருந்து செலவழிக்க திட்டமிடுகிறது. ஆனால் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணனின் கூற்றுப்படி இந்தியா தோரியம் மூலம் அணுஉலைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளிலேயே முதல் நாடாக இருக்கிறது. 2040ம் ஆண்டிற்குள் தோரியம் அடிப்படையிலான அணுஉலைகளை முறையாக செயல்படுத்த வைக்க முடியும் என்கிறார் அவர். அதற்காக கேரளத்து கடற்கரையோரம் இருக்கின்ற தோரியம் கலந்த மணலை பயன்படுத்தலாம் என்கிறார். இன்னும் 10 ஆண்டுகளில் 1000 மெகா வாட் தருகின்ற கனநீர் உலைகளை இந்தியா உருவாக்கிவிட முடியும் என்றும் கூறியுள்ளார். 220 மெ.வா. உலைகளில் தொடங்கிய நாம் 700 மெ.வா. உலைகள் செய்ய வளர்ந்துள்ளோம். விரைவில் 1000 மெ.வா. உலைகளை உருவாக்க முடியும். இப்போது 1650 மெ.வா. பிரான்சு உலைகளை இறக்குமதிச் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இது தற்போது வளர்ந்து வரும் தோரியம் சார்ந்த இந்தியாவின் சொந்த உலைகளை வளர்ப்பதை உடைத்துவிடும். அதிக விலையுள்ள அமெரிக்க மற்றும் பிரான்சு உலைகளை இறக்குமதிச் செய்வதன் மூலம், இந்திய நாட்டு சொந்த தயாரிப்பு உலைகள் விரையமாகும். அமெரிக்க தயாரிப்பான ஏ பி 1000 போன்ற இன்னமும் உருவாக்கப்படாத, சோதிக்கப்படாத உலைகளை இந்தியா வாங்க முற்படுவது சரியல்ல. அவற்றை உருவாக்க அமெரிக்க தொழிற்சாலைகளுக்கும் காலம் அதிகம் பிடிக்கும். மேற்கண்ட விஞ்ஞானி கோபாலகிருஷ்ணனின் வாதங்களும், ஒரு செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன. அதாவது அணுசக்தியை ஆதரிக்கும் நாட்டுப்பற்றுக் கொண்ட இந்தியர்கள் கூட, மத்திய அமைச்சரவையின் அந்நிய சார்பு அணு விளைச்சலை ஏற்க மாட்டார்கள் என்பதே. இப்போது இந்திய ஆட்சியாளர்கள் யாருக்காக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
Sunday, August 22, 2010
அமெரிக்காவிற்கும், இந்திய மக்களுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மன்மோகன் அரசு.
தடுக்கி, தடுக்கி விழுந்துக் கொண்டிருக்கிறது அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா 2010. நாடாளுமன்றத்தின் முன்னால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் நிலைக்குழுவால் முன்வைக்கப்பட்ட, அந்த மசோதா ஒவ்வொரு நாளும் மாற்றங்களுக்கு உள்ளாகி, மாட்டிக்கொண்டு முழிக்கிறது. ஆப்பரேட்டர் என்று அழைக்கப்படுகின்ற இந்திய அரசின் நிறுவனம், ஒரு அணுஉலையில் விபத்து ஏற்படும் பட்சத்தில் அதன் பாதிப்புகளுக்கு முழுமையான இழப்பீட்டையும் தானே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக இந்த மசோதா முதலில் எழுதப்பட்டது அது வரி செலுத்தும் இந்திய மக்கள் மீதே சுமையை ஏற்படுத்தும் என்ற விமர்சனம் எழுந்தது. அதேபோல ஒவ்வொரு அணுஉலைக்கும் எரிபொருள் வழங்கும் வெளி நாட்டு தனியார் நிறுவனமோ, வெளிநாட்டு அரசாங்கமோ, நடக்கும் விபத்திற்கு தான் காரணமாக இருந்தாலும் கூட, தன் கையில் இருந்து இழப்பீடு தொகையை வழங்கவேண்டிய அவசியமில்லை என்ற பொருளில் அது எழுதப்பட்டிருந்தது. இவ்வாறு சப்ளையர் என்று சொல்லப்படும் எரிபொருள் விநியோகத்தர் அணுஉலை விபத்திற்கு காரணமாக இருந்துவிட்டு, இழப்பீடு தொகை பொறுப்பெடுப்பதிலிருந்து தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடாது என்ற விமர்சனம் பெரிதாக எழுந்தது. அத்தகைய விமர்சனத்தை முறியடிக்க பா.ஜ.க. உடன் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டது. நிலைக்குழு முன் வைத்த நகலில் 17வது திருத்தத்தில் இருந்த “அ” பிரிவிற்கும், “ஆ” பிரிவிற்கும் மத்தியில் ஒரு இணைப்பு, அண்டு என்ற ஆங்கிலச் சொல்லால் எழுதப்பட்டது விவாதமானது. அதை ஊடகங்கள் அம்பலப்படுத்தின. அதாவது இந்திய அரசின் நிறுவனமான அணுஉலை இயக்குநர், வெளிநாட்டு விநியோகத்தரிடம் இழப்பீடு கேட்கலாம் என்ற “ஆ” பிரிவில் உள்ள செய்தியை, “அ” பிரிவில் உள்ள “சம்மந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடன் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தம் அணுஉலை இயக்குநரால் செய்யப்பட்டிருந்தால்” என்ற நிபந்தனைக்கு உள்ளடங்கி போகச் செய்துவிடும். ஆகவே வெளிநாட்டு விநியோகத்தரிடம் இழப்பீடு பெறுவது என்பது முடக்கப்பட்டுவிடும். மேற்கண்ட கருத்தை இரு பிரிவுகளையும் இணைக்கும் “அண்டு” கொடுக்கிறது என ஊடகங்கள் அம்பலப்படுத்த, அதையே பா.ஜ.க. வும் எதிரொலிக்க உடனடியாக அமைச்சரவை அந்த “அண்டு” என்ற சொல்லை நீக்கி, மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. இந்த விவாதம் வந்த போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மாநிலங்களவை அமைச்சர் பிருதிவிராஜ் சவான், இந்த மசோதா குறிப்பிட்ட நாட்டில் நலனுக்கான உருவாக்கப்பட்டது அல்ல என்று அமெரிக்க நலனைக் குறிப்பிட்டு கூறினார். “அண்டு” என்ற சொல்லை நீக்கிவிட்டதால், பழைய நிலைக்கு மசோதா வந்துவிட்டது என்றார். ஆனால் “அண்டு” என்ற சொல், நிலைக்குழுவில் இடதுசாரி உறுப்பினரால் மறுக்கப்பட்ட போது, அதை ஆதரித்து பா.ஜ.க. உட்பட நிலைக்குழு முழுமையும் ஏற்றுக்கொண்டது என்ற பழைய நிகழ்ச்சியை நாம் சௌகரியமாக மறந்துவிடலாம். ஆனால் அமெரிக்கா சென்ற போது மன்மோகன் கொடுத்த வாக்குறுதிப்படி, இந்தியா சி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகின்ற துணை இழப்பீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். அந்த ஒப்பந்தம் எழுத்துப் பூர்வமான பரஸ்பர ஆவணத்தை அணுஉலை இயக்குநரும், வெளிநாட்டு விநியோகத்தரும் செய்து கொண்டால் மட்டுமே, விநியோகத்தர் பொறுப்பேற்க முடியும் என்று உள்ளது. அதையொட்டியே நிலைக்குழு தடுமாறியுள்ளது என்பது புரிகிறது. இப்போது புதிதாக இன்னொரு பிரச்சனை எழுந்துள்ளது. கடந்த சனிக் கிழமை 18 திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. அதில் ஒன்று இழப்பீடு மசோதாவில், உள்நோக்கத்தோடு என்ற சொல்லை சேர்த்தது. அதாவது திருத்தம் 17ன் “ஆ” பிரிவையும், “இ” பிரிவையும் இணைத்து அதன் மூலம் “ஆ” பிரிவிலுள்ள வெளிநாட்டு விநியோகத்தரை பொறுப்பேர்க்க வைக்கும் விதத்தை இல்லாமல் செய்வது என்ற மற்றொரு பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது 17வது திருத்தத்தின்படி, அதன் 6வது அம்சத்தில் கூறியுள்ள அணுஉலை விபத்து நடக்கும் பட்சத்தில், அதற்கான இழப்பீட்டை அணுஉலை இயக்குனரான இந்திய அரசின் நிறுவனம் முதலில் கொடுத்துவிட வேண்டும். அதன் பிறகு அந்த விபத்து வெளிநாட்டு விநியோகத்தர் கொடுத்த பொருள்களினாலோ, குறைபாடுகள் கொண்ட கருவிகளினாலோ, தரம்குறைந்த சேவையினாலோ அல்லது வெளிநாட்டு விநியோகத்தரின் ஊழியர்களாலோ ஏற்பட்டிருந்தால், அவர்களிடம் இழப்பீட்டுத் தொகையை இயக்குநர் பெறலாம் என்று தனது “ஆ” பிரிவில் எழுதியுள்ளது. இப்போது “ ஒரு நபர் உள்நோக்கத்துடன் விபத்தை ஏற்படுத்தியிருந்தால் ” என்ற சொற்கள் அந்த திருத்தத்தின் “இ” பிரிவில் இருந்தது. அதை “ஒரு நபர் என்று விநியோகத்தரை குறித்தச் சொல்லை, தனி நபர் என்று மாற்றி” “இ” பிரிவில் சேர்த்திருப்பது பிரச்சனையை எழுப்பியுள்ளது. இது மீண்டும் வெளிநாட்டு விநியோகத்தரை தப்பிக்க வைப்பதற்காக செய்யப்படுகின்ற சொல்லாடல் என்பது அம்பலமாகியுள்ளது. விபத்து ஏற்படுத்த உள் நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதாக வெளிநாட்டு விநியோகத்தர் மீது நிரூபிக்க, இந்திய இயக்குனரால் இயலாமல் போகும். அப்போதும் வெளிநாட்டு விநியோகத்தரான, அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாட்டு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் தப்பிக்க வழியுண்டு. மேற்கண்ட சர்ச்சைகள் நமக்கு சில செய்திகளை உறுதிப்படுத்துகின்றன. அதாவது இந்திய நாடாளுமன்றத்திற்கும், மத்திய அமைச்சரவைக்கும் தெரியாமலேயே, இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம் 123 ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. அதை முழுமைப்படுத்துவதற்கு முன்பே, அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த இடதுசாரிகள், அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கூட்டணியை விட்டு வெளியே வந்து அதை அம்பலப்படுத்தினர். இப்போது அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தாலும், என்.எஸ்.ஜி. என்று அழைக்கப்படுகின்ற அணு எரிபொருள் விநியோகிக்கும் நாடுகளின் நிர்ப்பந்தத்தாலும், அணுஉலை விபத்து இழப்பீடு சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இந்திய அரசிற்கு வந்துவிட்டது. அதனால் தவிர்க்க முடியாமல் நாடாளுமன்றத்தை நாடுகிறார்கள். அதில்தான் இத்தனை சர்ச்சைகளும் உருவாகியுள்ளது. பா.ஜ.க.வையும், லாலு, முலாயம், மயாவதி ஆகியோரையும் இணங்கவைத்து இந்த அடிமை மசோதாவை ஐ.மு.கூ. ஆட்சி நாடாளுமன்ற ஒப்புதலுடன் சட்டமாக்கிவிடலாம். ஆனாலும் அந்நியநாட்டு சக்திகளின் நிர்ப்பந்தம் ஒருபுறமும், இந்திய மக்களின் நாட்டுப்பற்று இன்னொரு புறமும் நெருக்கும் போது, மன்மோகன் அரசு சிக்கித் தவிப்பது நமக்குப் புரிகிறது.
Thursday, August 19, 2010
நாட்டுப்பற்றை ஏலமிட்ட ஆளும்வர்க்க கூட்டாளிகள்
நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குள்ளான பிரச்சனைகளில் ஒன்று, அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா. சிறிய எதிர்கட்சிகள் ஒரே குரலில் ஆளும் கூட்டணியையும், முக்கிய எதிர்கட்சியையும் எதிர்த்து குற்றம் சாட்டினார்கள். மக்களவையின் கடந்த அமர்வில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களித்த பெரியகட்சி பா.ஜ.க. ஆனால் அதே அணுசக்தி ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் நோக்கத்தோடு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்காகவும், என்.எஸ்.ஜி. என்று சொல்லக்கூடிய அணுசக்தி எரிபொருள் விநியோகிக்கும் நாடுகள் கொடுக்கும் நிர்ப்பந்தத்தாலும், ஒரு அணுஉலை விபத்து இழப்பீடு சட்டத்தை உருவாக்கவும், அதிலும் மேற்கண்ட அந்நிய சக்திகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும், செய்யும் வகையில் இந்தியாவின் ஆளும் கட்சி எடுக்கும் முயற்சிகளில், பெரிய எதிர்கட்சி அதற்கு ஆதரவு கரம் கொடுக்கின்ற நிகழ்வு சிலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது பா.ஜ.க. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் இழப்பீடு மசோதாவை ஆதரித்துள்ள நிலையில், அதை நாடாளுமன்றத்திலுள்ள சிறிய கட்சிகள் இடதுசாரிகள் உட்பட எதிர்த்து குரல் எழுப்பியுள்ளனர்.
எதிர்ப்பு குரல் மட்டும் எழுப்புவதுடன் நிறுத்தாமல், காங்கிரஸ் பா.ஜ.க. மத்தியில் நடத்தப்பட்ட ரகசிய உடன்பாடு, கள்ள உறவு ஆகியவை பற்றியும் குற்றம் சாட்டியுள்ளனர். இதை பா.ஜ.க. ஆதரவு என்று கருதப்பட்ட ஊடகங்களும் கூட, கேள்வியாக எழுப்பியுள்ளது. அதாவது இன்று பிரபலமாகியிருக்கும் சொராப்தின் போலி துப்பாக்கிச் சூடு வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த மோடியின் நண்பனான முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதையொட்டி, முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டப்படவில்லை என்பதே இவர்களது குற்றச்சாட்டு. பிரபலமாகியுள்ள அந்த சட்டவிரோத படுகொலையில், அன்றைய உள்துறை அமைச்சர் உட்பட, குஜராத் மாநிலத்தின் பெரிய காவல்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி உச்சநீதிமன்றம் வரை அம்பலமாகிவிட்டது. அப்படியிருக்கையில் அந்த மாநிலத்தின் முதல்வருக்கு அத்தகைய சட்டவிரோத படுகொலையில் இருக்கின்ற சம்மந்தமும், அதன் பிறகு அதை மறைத்ததில் உள்ள பங்கும் சர்ச்சைக்கு இடமின்றி வெள்ளிடை மலையாக வெளியே தெரிகிறது. ஆனால் திடீரென குஜராத் ஏடுகளில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அந்த வழக்கை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரி, குறிப்பிட்ட வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்பு இல்லை என்பதாக அறிவித்தது தான் அந்த ஏடுகளின் செய்தி. அதுவே நாடாளுமன்ற உறுப்பினர்களை குரலெழுப்ப செய்துள்ளது.
அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில், சொராபுதின் வழக்கும், நரேந்திர மோடிக்கு நல்லவர் என்ற சான்றிதழும் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதையொட்டி பா.ஜ.க. இழப்பீடு மசோதா நிலைக்குழுவால் நாடாளுமன்றம் முன்பு வரைவு நகலை வைக்கும் போது, அதை ஏற்றுக் கொண்டுள்ளது என்ற செய்தி இடதுசாரிகள் உட்பட சிறிய கட்சிகளை குற்றம்சாட்டும் நிலைக்கு நிர்ப்பந்தித்துள்ளது. மோடியை குற்றம் சாட்டாமல் காங்கிரஸ் பாதுகாத்துள்ளதால், மேற்கண்ட மசோதாவை பா.ஜ.க. ஆதரிக்கிறது என்பதே அந்த குற்றச்சாட்டு. அதை பா.ஜ.க. ஆதரவு பேசி வந்த ஊடகங்களும், செய்தி என்ற பெயரில் அம்பலபடுத்தினர். அதேபோல ஒரு தமிழ் ஏடு ஒரு மரத்துப் பறவைகள் என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டி, காங்கிரசையும், பா.ஜ.க.வையும் குற்றம் சாட்டியிருந்தது.
பா.ஜ.க. மத்திய அரசில் ஆட்சி செலுத்தி வந்த காலத்தில், அமெரிக்காவுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் வர்த்தக உறவை வலுப்படுத்துவதற்காக, மேலை நாடுகளின் நிர்ப்பந்தங்களுக்கு கீழ்ப்படிந்த செய்திகள் நினைவு கூறப்பட வேண்டும். அதேபோல இந்தியாவின் துணை பிரதமராக இருந்த போது எல்.கே.அத்வானி, அமெரிக்கா சென்று அங்குள்ள வர்த்தக சபையில் உரையாற்றி, அதிகமான மூலதனத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து இறக்குமதி செய்வதற்காக உரையாற்றியதையும் நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாட்டுப்பற்றுப் பற்றி பேசி வரும் அதே வேளையில், பா.ஜ.க. அமெரிக்க சார்பாகவும், மேற்கத்திய நாடுகளின் பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் சார்பாகவும் கொள்கைகளை கொண்டிருக்கிறது என்பதும் புதிய செய்தி அல்ல. ஏகாதிபத்திய உலகமயமாக்கலை ஆதரிக்கின்ற ஒரு ஆளும்வர்க்க கட்சியாகத் தான் பா.ஜ.க. திகழ்ந்து வருகிறது. ஆகவே நெருக்கடி வரும் போது, இந்தியா ஆளும்வர்க்க கட்சிகளின் அதிகமான பாரம்பரியம் கொண்ட காங்கிரசுடன் இணைந்து, பா.ஜ.க. நிலைப்பாடு எடுக்கும் என்பதும் அதிர்ச்சி தரும் செய்தியல்ல.
காங்கிரஸ்பா.ஜ.க. கூட்டு சேர்ந்து அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்குள்ளாவதும், அணுஉலை எரிபொருள் விநியோகிக்கும் நாடுகளின் நிபந்தனைகளுக்கு உள்ளாவதும் அதிசயமான நிகழ்வு அல்ல. அதற்கு சொராபுதின் வழக்கு என்று ஒன்று தேவையும் இல்லை. ஆனாலும் இரண்டு மாதங்களில் இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வருகைக்கு முன்பே, பாதையை சுத்தம் செய்து வைப்பதற்காக இத்தகைய இழப்பீடு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இந்திய ஆளும்வர்க்க கட்சிகளுக்கு தேவையாகயிருக்கிறது. அத்தகைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சி.பி.ஐ. மூலம் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வாங்கிக் கொடுப்பது என்பதை ஒரு பேரமாக பா.ஜ.க. பெற்றுள்ளது அதன் கெட்டிக்காரத் தனம்.
இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி ஒரு அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா, நிலைக்குழு முன்வைத்த மாற்றங்களுக்கான பரிந்துரைகளோடு நாடாளுமன்றம் முன்பு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஆலையில் விபத்து நடந்து மூன்று மாதத்திற்குள் இழப்பீடு கோருபவர்க்கு, இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். விபத்து நடந்து 15 நாட்களுக்குள் இழப்பீடு பெற்றுத் தருவதற்கான ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். இயற்கை பேராபத்துகளாலும், பயங்கரவாதிகளாலும் அணுஉலை விபத்து ஏற்படுமானால் அரசாங்கமே அனைத்து இழப்பீட்டையும் தர வேண்டும். மின்சக்தி பயன்படுத்துவோரிடம் யூனிட்டிற்கு 4 பைசா என்ற வீதத்தில் உருவாக்கப்படும் நிதி ஒரு அணுசக்தி விபத்து இழப்பீட்டு வைப்புத் தொகையாக இருக்கும். அது தொலைநோக்கில் அரசாங்கத்தின் சுமையை குறைக்கும். இப்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றம் அணுசக்தி எரிபொருள் விநியோகம் செய்யும் அந்நிய சக்திகளை, இழப்பீடு சுமையை சுமப்பதிலிருந்து தப்பிக்க வைக்கிறது. அணுசக்தி நிறுவனங்களின் அதிகபட்ச இழப்பீட்டு நிதியை, ரூ.500 கோடியிலிருந்து, ரூ.1500 கோடியாக உயர்த்தியுள்ளது.
இழப்புகளுக்கு ஏற்றார்போல் இழப்பீடு தொகையை கொடுக்கும் பொறுப்பிலிருந்து அந்நிய நாட்டு அணுசக்தி எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்களை நீக்கியுள்ளது என்பது தான், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான ஒன்றாக மேற்கண்ட மசோதாவில் அமைந்துள்ளது. அணுசக்தி விநியோக அந்நிய நிறுவனம் தனது அலட்சியத்தால், அல்லது அதன் அணுஉலை தன்மையால், குறிப்பிட்ட விபத்திற்கு காரணமாகயிருந்தாலும், அத்தகைய சக்திகளை பொறுப்பேற்கச் செய்ய முடியாது என்ற மசோதாவின் அம்சம், நாட்டுப்பற்றுக்கு எதிரான அம்சமாக உள்ளது.
மசோதாவின் 17வது பிரிவு, ஒப்பந்தத்தில் எழுத்துப் பூர்வமாக இருந்தாலோ, அந்நிய விநியோகத்தரோ, அவரது ஊழியரோ செய்த அலட்சியத்தால் விபத்து நேர்ந்தாலோ, வேண்டுமென்றே எந்த நபரும் அத்தகைய விபத்தை ஏற்படுத்தியிருந்தாலோ, அப்போது தான் அணுஉலையை இயக்கும் நிறுவனம் முழுமையாக இழப்பீட்டுக்குப் பொறுப்பெடுக்க முடியும். 17பி என்ற துணைப்பிரிவில் தரம் குறைந்த பொருட்களை விநியோகித்ததற்காக அல்லது தரம் குறைந்த சேவையை செய்தததற்காக என்ற அம்சங்கள் இயக்குநர் நிறுவனத்திற்கும், விநியோகத்தர் நிறுவனத்திற்கும் எழுத்து பூர்வமான ஒப்பந்தமாக ஏற்பட்டிருந்தால் என்ற செய்தி வருகிறது. அதற்கு அமெரிக்க அணுசக்தி எரிபொருள் ஆலைகளின் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி மாற்றங்கள் செய்யப்பட்ட திருத்தங்களுடன் கூடிய மசோதா இப்போது வைக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.சி என்று அழைக்கப்படுகின்ற துணை இழப்பீடுகளுக்கான ஒப்பந்தம் என்ற அமெரிக்க நலனுக்கான ஒப்பந்த அடிப்படையில் இப்போது மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் அமெரிக்க விநியோக நிறுவனத்தை எதிர்த்து, அமெரிக்க நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. தென்கொரியாவிலும், ஹங்கேரியிலும் அணுஉலை இயக்குனரான உள்நாட்டு நிறுவனம், எரிபொருள் விநியோகிக்கும் அந்நிய நாட்டு நிறுவனத்தின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்திற்கு, அந்த விநியோகத்தரை பொறுப்பாக்க முடியும். ஆனால் அது இப்போது இந்தியாவில் மறுக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட பச்சையான சரணடைவு ஒப்பந்தத்தை, அந்நிய நாடுகளுக்கு சாதகமாக உருவாக்குவதில், நாடாளுமன்றத்தின் பெரிய ஆளும் கட்சியும், பெரிய எதிர்கட்சியும் கைகோர்த்திருப்பது பகிரங்கமாக ஒரு உண்மையை தெளிவுப்படுத்துகிறது. அதாவது இந்திய நாடாளுமன்றத்தில் ஆளும் வர்க்கக் கட்சிகள் தான், ஆளும் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் நடமாடுகின்றன. அத்தகைய ஆளும்வர்க்க கட்சிகள் இந்திய இறையாண்மையை நாட்டுப்பற்றுடன் பாதுகாப்பதற்கு பதிலாக, நாட்டையே அந்நிய நாட்டு சக்திகளுக்கு ஏலம் விட தயங்குவதில்லை. இந்த உண்மையை நாட்டுப்பற்றுள்ளோர் விழிப்புணர்வுடன் எதிர்ப்பார்களா என்பது தான் இன்றைய கேள்வி.
Tuesday, August 17, 2010
அணுவிபத்து இழப்பீடு அகிலம் தழுவியது
இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால் அணுசக்தி விபத்து இழப்பீடு மசோதா இன்று நாடாளுமன்ற நிலைக்குழுவால் முன்வைக்கப்பட இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்குள் காலெடுத்து வைப்பதற்கு முன்பே அதாவது அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்கு முன்பே, இந்த மசோதாவை அதாவது சட்ட முன்வரைவை சட்டமாக்கி விட வேண்டும் என்று மத்திய அரசு துடிக்கிறது. இதற்கான நிலைக்குழுவின் தலைவர் சுப்பிராமி ரெட்டி, இழப்பீடு தொகை அதிகப்படுத்தப்படும் என்றும், மசோதாவில் குறிப்பிட்டுள்ள படி அணுசக்தி எரிபொருள் விநியோகத்தர்கள் பங்கும் இழப்பீட்டில் இருக்கும் என்றும், அதனால் எதிர்கட்சிகள் சட்ட முன்வரைவை ஏற்றுக் கொள்வார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அணுஉலைகளின் மூலம் மின்உற்பத்தி செய்வதை அதிகப்படுத்துவது என்ற இந்திய அரசின் திட்டத்தையொட்டியே, இத்தகைய சட்டத்தின் அவசியம் எழுந்துள்ளது. 2020ம் ஆண்டிற்குள் இப்போதிருக்கும் 4,100 மெகாவாட் அணுசக்தி மூலம் மின்சாரம் என்பதை 20,000 மெகாவாட்டிற்கு உயர்த்துவது என்பது மத்திய அரசின் திட்டம். அதேபோல 2035ம் ஆண்டிற்குள் 40,000 மெகாவாட் மின்உற்பத்தியை செய்வது என்பது மத்திய அரசின் குறிக்கோள். மேற்கண்ட திட்டமிடல் இந்திய மக்களின் எதிர்கால அத்தியாவசிய தேவைக்கான மின்உற்பத்திக்காகவா? அல்லது இந்தியாவிற்குள் வந்திறங்கும் கார்ப்பரேட்டுகள் என்ற பெருவணிக குழுமங்களின் வணிகத் தேவைக்காகவா? இது தான் இன்று எழுப்பப்பட வேண்டிய சர்ச்சை. ஏனென்றால் மின் உற்பத்தியை செய்வதற்கு ஏற்கனவே இருக்கின்ற நீர் வழி மின்சக்தி, அனல்மின் நிலையங்கள், மரபுசாரா மின்உற்பத்தி முறைகளான காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம், நாப்தா வழி மின்சாரம் ஆகிய அனைத்தாலும் நிரப்ப முடியாத மின்தேவையை, அணுசக்தி மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இந்திய அரசுக்கு ஏன் எழுந்தது? இதுவும் கூட பதில் கொடுக்கப்படாத கேள்வியாக இருக்கிறது. நம் நாட்டில் அரசாங்கம் முன்வைக்கின்ற பொருளாதார திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரிக்கின்ற ஒரு போக்கு ஊடகங்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் மத்தியில் இருக்கிறது. நாட்டு மக்களில் பெரும்பான்மையினரின் அத்தியாவசியத் தேவைகளை, அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக தேவைப்படுகின்ற மின் உற்பத்தி மிகவும் குறைவானதே. அதேசமயம் பாரம்பரியமிக்க பழங்குடி மக்களின் கனிம வளங்களை களவு செய்யும் கார்ப்பரேட்டுகளின் பசி வெறியை நிரப்புவதற்காக மின்உற்பத்தி என்ற குறிக்கோளை மத்திய அரசு, தனது பொருளாதார திட்டமாக முன்வைக்கும் போது, அது மக்களுக்கானது அல்ல என்ற உண்மையை உரத்துச் சொல்வதற்கு நாட்டுப்பற்று தேவைப்படுகிறது. விவாதிக்கப்படுகின்ற சர்ச்சை, அணுவிபத்து ஏற்படுமானால் அதன் பாதிப்பு எல்லையில் அடங்காது என்பதால், அது இழப்பீடு தொகை மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற கருத்து உலகெங்கும் உலவுகிறது. 1956ம் ஆண்டு விபத்துகளின் வாய்ப்புகளை கணக்கிலெடுத்து, தேசிய அணுசக்தி காப்பீடு நிதி ஒன்று இங்கிலாந்து நாட்டில் ஏற்படுத்தபட்டது. எப்போது வணிகரீதியான அணுசக்தி உலைகள் உருவாக்கப்பட்டதோ, அப்போதே அதனால் ஏற்படும் விபத்துகளுக்கான வாய்ப்புகள் பற்றியும், அதனால் பாதிக்கப்படும் மூன்றாவது சக்திகளுக்கு இழப்பீடு செலுத்துவது என்பது பற்றியும், விவாதம் தொடங்கியது. செர்னோபில் நகரில் நடந்த அணுஉலை விபத்திற்கு பிறகு இது தீவிரமாக கணக்கிலெடுக்கப்பட்டது. 1963ம் ஆண்டு அனைத்து நாட்டு அணுசக்தி கழகத்தின், வீயன்னா மாநாடு, அணுவிபத்திற்கு இழப்பீடு என்பதன் மீது தீர்மானம் கொண்டு வந்தது. அது 1977ல் தான் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 1960ம் ஆண்டு அணுசக்தி துறையில் மூன்றாவது தரப்பிற்கு இழப்பீடு பற்றி பாரிஸ் மாநாடு ஒன்று ஓ.ஈ.சி.டி.யால் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் 1968ல் தான் நடைமுறைக்கு வந்தது. அதற்கு 1963ம் ஆண்டு நடந்த பிரசல்ஸ் கூடுதல் மாநாடும் அணிசேர்த்தது. பாரிஸ் மாநாட்டில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்திருந்தன. ஆனாலும் அயர்லாந்து, ஆஸ்திரியா, லக்ஸம்பர்க், ஸ்விச்சர்லாந்து ஆகியவை கலந்து கொள்ளவில்லை. பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை மேற்கண்ட இரு மாநாடுகளிலும் கலந்து கொண்டன. கிரீஸ், போர்ச்சுக்கல், துருக்கி ஆகியவை பாரிஸ் மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டன. 1988ல் அவற்றின் அடிப்படையில் கூட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இயக்குபவர் செலுத்தும் இழப்பீடு முழுமையானது. காலத்தால் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். அணுவிபத்து பாதிப்பு என்பது சொத்துக்களையும், சுகாதாரத்தையும், உயிரிழப்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். கூட்டு ஒப்பந்தம் அனைத்து நாட்டு அணுசக்தி பொருட்களின் போக்குவரத்து விதி பற்றிய முரண்பாடுகளை கையாளக் கூடியதாக இருக்கும். அது 1992ல் இருந்து நடைமுறைக்கு வந்தது. 1997ல் வீயன்னா மாநாட்டு தீர்மானங்களுக்கு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பாரிஸ் தீர்மானங்களும், அதனுடன் இணைந்த பிரசல்ஸ் தீர்மானங்களும் 1964, 1982 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்களுடன் செழுமைப்படுத்தப்பட்டன. 1997ல் 80 நாடுகள் இணைந்து வீயன்னா தீர்மானங்களுக்கு திருத்தம் கொண்டுவர முக்கிய நடவடிக்கை எடுத்தன. அதில் தான் இயக்குநர் செலுத்த வேண்டிய இழப்பீடு தொகை அதிகரிக்கப்பட்டது. அது 2003ல் அமுலுக்கு வந்தது. அனைத்து நாட்டு அணுசக்தி இழப்பீடு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத, அதேசமயம் அணுசக்தியை பயன்படுத்தும் நாடுகளாக ஜப்பான், சீனா, இந்தியா போன்றவை இருக்கின்றன. சில நாடுகள் ஒன்றோ அல்லது இரண்டோ அனைத்து நாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவையாக உள்ளன. அவை தங்கள் நாட்டிலும் அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டங்களைக் கொண்டுள்ளன. சில நாடுகள் அனைத்து நாட்டு ஒப்பந்தங்களில் சேராமலேயே தங்கள் நாட்டில் அதற்கான சட்டங்களை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா, கனடா, ஜப்பான், தென்கொரியா ஆகியவை அந்த வகையைச் சாரும். சீனா அனைத்து நாட்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாமல், தன் நாட்டிலும் சட்டம் கொண்டுவராமல் இருக்கிறது. பிரைஸ் ஆண்டர்சன் சட்டம் என்ற உலகத்தின் முதல் அணுஇழப்பீடு விதி 1957 முதல் அணுசக்தி விபத்திற்கு இழப்பீடு என்ற விசயத்தை கொண்டு வந்தது. அமெரிக்க அணுசக்தி காப்பீடு என்ற நிதி மூலதனமிடும் காப்பீடு நிறுவனங்களை இணைத்ததாக இருக்கிறது. அணுவிபத்து ஏற்படாத நேரத்திலும், அணுகசிவின் ஆபத்திற்கு இழப்பீடு கோர அங்கே வழி இருக்கிறது. நமது நாட்டிலோ அணுகசிவின் ஆபத்தால், கதிர்வீச்சு பாதிப்புகள் சுற்றுச்சூழலை பாதகமான தாக்கங்களுக்கு உள்ளாக்கும் என்ற உண்மையைக் கூட, அணு அறிவியலாளர்கள் அறிவிப்பதில்லை. அதேநேரம் மறுப்பதுமில்லை. பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு அணுஉலைக்கும் 910 லட்சம் ஈரோக்கள் பாதுகாப்பு நிதியாக வைத்திருக்க வேண்டும். சுவிச்சர்லாந்து நாட்டில் இயக்குநர்கள் 6,000 லட்சம் ஈரோக்களை காப்பீட்டிற்கு ஒதுக்க வேண்டும். அதுவே 11,000 லட்சம் ஈரோக்களாக உயர்த்தப்பட திட்டமுள்ளது. பின்லாந்து 2004ம் ஆண்டின் கூட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. 2005ம் ஆண்டு அதை சட்டமாக்கி 7,000 லட்சம் ஈரோக்களை காப்பீடாக அறிவித்துள்ளது. ஸ்வீடன் நாடு 2004 கூட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. செக் குடியரசு வீயன்னா தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள முனைகிறது. கனடாவில் அனைத்து நாட்டு ஒப்பந்தங்களின் வழியிலேயே அணுசக்தி இழப்பீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 1976ம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு அணுஉலைக்கு 750 லட்சம் கனடிய டாலர்களை காப்பீடு தொகையாக குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் நாடு 1995ல் உள்நாட்டு இழப்பீடு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சீனா அனைத்து நாட்டு இழப்பீடு ஒப்பந்தங்களில் கையெழுத்திடா விட்டாலும், அனைத்து நாட்டு காப்பீடு நிதி திரட்டும் கட்டமைப்பில் தீவிர உறுப்பினராக செயல்படுகிறது. இத்தகைய சூழலில் தான் இந்திய அரசு அணுவிபத்து இழப்பீடு சட்டமுன்வரைவை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறது. ஆகவே மீண்டும் இந்திய மக்கள் மீது, அவர்களது வரிகளின் மீது சுமையை ஏற்றி மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களையும், பாதிப்புகளையும் இழப்பீடு செய்வதற்கான முயற்சியை மத்திய அரசு தொடராமல், அணுசக்தி எரிபொருள் விநியோகம் செய்யும் சக்திகளையும், விபத்திற்கு காரணமான அந்நிய சக்திகளையும் கூட பொறுப்பேற்க வைக்குமானால், அது தான் உண்மையான நாட்டுப்பற்றாக அடிப்படையில் இருக்க முடியும்.
Monday, August 16, 2010
சுதந்திரப்போரில் முஸ்லிம்கள் பங்கும், காஷ்மீர் சுயாட்சியும்
64வது சுதந்திர தினம் நிறைவுற்றது. அது மகிழ்ச்சியை அள்ளித்தந்ததா? மனவேதனையை கணக்குப்பார்க்க சொன்னதா? இதுபோன்ற கேள்விகளை எழுப்புவதற்கு முன்னால், டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொடியேற்றி வைத்த தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் ஆற்றிய உரை சில செய்திகளை சொல்லிச் சென்றது. மாவோயிஸ்ட்களையும், காஷ்மீர் பிரிவினைவாதிகளையும், பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அத்தகைய பிரச்சனைகளை பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்பதாகவும் மன்மோகன் தனது உரையில் கூறியுள்ளார். மேற்கண்ட பிரச்சனைகளை அணுகுவதில் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்பதாக நாம் நம்புகிறோம். அப்படியானால் இதுவரை எடுத்த நிலைப்பாடு என்ன?
மாவோயிஸ்ட்களை கையாளுவதற்கு பச்சை வேட்டையை மத்திய அரசு நேற்றுவரை தனது நிலைப்பாடாக எடுத்திருந்தது. அதை முழுமையாக மாற்றி விட்டார்கள் என்று சொல்வதற்கான ஆதாரம் எதுவுமில்லை. பாகிஸ்தான் விவகாரத்திலும், காஷ்மீர் பிரச்சனையிலும் மோதல் நிலைப்பாட்டைத் தான் இதுவரை மத்திய அரசு செயல்படுத்தி வந்தது. அதன் விளைவாக இந்திய துணைக் கண்டத்திற்குள் இருக்கின்ற மக்களிடையே மதரீதியான பகையுணர்வை மற்றும் பிளவை ஏற்படுத்த அது வழி வகுத்தது. அப்படிப்பட்ட நோக்கத்துடன் தான் மத்திய அரசு மேற்கண்ட நிலைப்பாடுகளை எடுத்ததா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த நேரத்தில் 64வது சுதந்திர தினத்தையொட்டியாவது நாம் இந்திய மக்களுக்குள் இருக்கின்ற ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். அதற்கான வரலாற்று சான்றுகளை வெளியே கொண்டுவர வேண்டும்.
இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் மக்களின் பங்கு கணிசமாக இருந்தது என்ற உண்மையை, அனைத்து சமூக மக்கள் மத்தியிலும் கொண்டு செல்லும் போது தான் சமூக நல்லிணக்கம் என்ற எண்ணம் மேலோங்க முடியும். முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்து வளர்ந்து வந்த புரட்சியாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் ஆங்கிலேயனின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. டிடு மீர் நடத்திய கலகம், மௌலானா அபுல்கலாம் ஆசாத், ஹக்கிம் அஜ்மல் கான், ரபி அகமது கிட்வாய், முகமது அஷ்பாக், உல்லாகான் ஆகியோர் ஆங்கிலேயர்கள் எதிர்த்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட முக்கிய பிரமுகர்கள். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார்கான் தனது 95 ஆண்டு வாழ்க்கையில், 45 ஆண்டுகளை ஆங்கிலேயனை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வேள்விக்காக சிறையில் கழித்தவர். போபாலை சேர்ந்த பரகத்துல்லா, கத்தார் கட்சி என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தோற்றத்தை ஏற்படுத்திய நிறுவனர்களின் ஒருவர். இந்த கத்தார் கட்சி இந்தியாவில் வெள்ளைக்காரனுக்கு எதிராக புரட்சியை நடத்துவதற்காக, கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை தோற்றுவிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து புரட்சியாளர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. அப்படி அனுப்பப்பட்டவர்கள் மார்க்சிய பயங்கரவாதிகள் என்பதாகக் கூட ஆங்கிலேய அரசாங்கத்தால் முத்திரைக் குத்தப்பட்டனர். அவ்வாறு இந்தியாவிலுள்ள பல பெரு நகரங்களில் வந்திறங்கிய புரட்சியாளர்கள் பலரும் ஆங்கிலேய அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டில் தலைமறைவு புரட்சிகர வாழ்க்கையிலிருந்து கத்தார் கட்சியை நடத்தியதில் ஒருவரான சையத் ரகுமத்ஷா என்ற இந்தியர் 1915ம் ஆண்டு புரட்சிகர எழுச்சியில் தூக்கிலிடப்பட்டார். மலேசியாவிலும், பர்மாவிலும் சையத் முஸ்தபா உசையினுடன் இணைந்து இந்திய ஆயுத கிளர்ச்சிக்காக பணிகள் செய்து வந்த உத்திரபிரதேசத்தின் ஃபசியாபாத்தை சேர்ந்த அலி அகமது சித்திக் 1917ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் 1942ம் ஆண்டு ஈடுபட்ட வைக்கம் அப்துல் காதர் என்ற கேரளத்தைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரர் தூக்கிலிடப்பட்டார். காந்தியின் தொடர் பயணங்களுக்கு நிதி கொடுத்து உதவிய தொழிலதிபர் உமர் சுபானி என்பவரும் முஸ்லிம் சமூகத்திலிருந்து வந்த பிரமுகர் தான்.
ஹஸ்ரத் மஹால், அஸ்காரி பேகம், பீ அம்மா போன்ற முஸ்லிம் பெண்கள் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்தவர்கள். தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையில் முதல் சுதந்திர போர் முழக்கம் செய்தவர் திப்பு சுல்தான் தான் என்ற செய்தியை இப்போது வரலாறு ஒப்புக்கொள்கிறது. ஆங்கிலேயனுடைய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் மேட்டுக்குடி குடும்பங்களைச் சேர்ந்த பல அறிவுஜீவிகள் முழுமையாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காக, வெள்ளையனால் குறி வைத்துத் தாக்கப்பட்டார்கள். உருது கவிஞர் மிர்ஸா காலிப் 1797ம் ஆண்டு முதல் 1869ம் ஆண்டு வரை, இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர். பிற்காலத்தில் பாகிஸ்தான் என்ற நாட்டை பிரிப்பதற்காக குரல் கொடுத்தார் என்று இன்று சிலரால் குற்றம் சாட்டப்படும் ஜின்னா கூட 1930ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து சுதந்திரத்திற்கான போராட்டங்களில் ஈடுபட்டவர் தான். அதேபோல டாக்டர் சர்அல்லமா முகமது இக்பால் என்ற பிரபல கவிஞர் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக போராடியவர். இப்படியாக முஸ்லிம்களின் பங்களிப்பு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்களது உடலையும், உயிரையும் தியாகம் செய்யும் அளவிற்கு இருந்திருக்கிறது என்ற செய்தி முறையாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதை முஸ்லிம் அமைப்புகள் மட்டுமே வெளியே கொண்டு வருவது என்ற நிலை மாறி, மற்ற சமூகத்தினரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் நோக்கோடு இந்த உண்மைகளை பரப்ப வேண்டும்.
தீவிரவாதத்தையும், இஸ்லாத்தையும் இணைத்து பரப்பக்கூடிய சக்திகள் இந்திய மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுகின்றன. ஆகவே மேற்கண்ட விவரங்கள் பதிவு செய்யப்படுவது தேவையாக இருக்கிறது. அடுத்து காஷ்மீர் பிரச்சனையை முன்வைத்து இங்கே மதரீதியான விவாதங்கள் செய்யப்படுகின்றன. இது எந்த வகையிலும் எதார்த்தங்களுக்கு பொருத்தமானது அல்ல. ஏனென்றால் காஷ்மீர் பிரச்சனை என்பதே மதங்களை கடந்த ஒரு தேசிய இனத்தின் பிரச்சனையாகும்.
சமீபத்தில் சென்னையில் ஒரு கல்லூரியில் நடந்த கருத்தரங்கில், துப்பாக்கிகளுடன் மோதும் கற்கள் என்ற தலைப்பில் காஷ்மீர் பற்றிய உண்மைகள் பரிமாறப்பட்டன. காஷ்மீர் பகுதியின் சமூக, பண்பாட்டு, மத ரீதியான உண்மை நிலவரங்கள் படிக்கப்பட வேண்டும். காஷ்மீரை இந்து மன்னன் ஆண்டு வந்தான் என்றும், அவன் இந்திய அரசிடம் நிபந்தனைகளின் அடிப்படையில் காஷ்மீரத்தை இணைத்தான் என்பதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் காஷ்மீர் பகுதிக்கு இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு370ன் கீழ் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அது சரியா, தவறா என்று இந்தியாவில் விவாதிக்கப்படுவதும் நாம் கேள்விப்படும் செய்தி. உண்மையில் இந்திய நாடாளுமன்றத்தின் சட்டங்கள் காஷ்மீரத்திற்குள் செல்லுபடியாகாது என்ற நிலைமை தொடக்கத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. 1958ல் காஷ்மீரத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தலைமைக்கு பிரதமர் என்ற பெயரை அளித்திருந்தார்கள். காலப்போக்கில் இந்தியாவின் அரசப்படைகள் காஷ்மீரத்தில் பல பத்தாண்டுகளாக ஆக்கிரமிப்பாளர் போல செயல்படத் தொடரும் போது, தானாகவே அதுவும் ஒரு இந்தியாவிற்கு உட்பட்ட மாநிலம் போலவும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் முதலமைச்சர் என்பதாகவும் வழங்கப்படத் தொடங்கியது. ஒப்பந்தத்தின் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளும் கூட, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல ஆகிவிட்டதை நாம் காணமுடிகிறது. காஷ்மீரத்தில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் ஏழை விவசாயிகள் என்பதையும், பண்டிட்டுகள் என்ற இந்து மதத்தினர் அங்கேயிருக்கும் பண்ணையார்கள் என்பதையும், இங்குள்ள மக்களுக்கு இதுவரை யாரும் புரியவைக்கவில்லை. அங்கே ஆண்டு வந்த இந்து மன்னரை எதிர்த்து, மக்கள் கலகம் செய்து வந்தனர் என்ற செய்தியையும் கூறியவரில்லை. நிபந்தனைகளுடன் இந்தியாவுடன் இணைக்கப்படும் போது, கையெழுத்திடப்பட்ட ஆவணத்தில் காஷ்மீர் சுயநிர்ணய உரிமைப்பற்றி எழுதப்பட்டிருந்தது என்பதையும் நமக்கு வெளிப்படுத்துவாரில்லை. ஐ.நா.சபை காஷ்மீரின் சுய நிர்ணய உரிமைப்பற்றி 18 முறை தீர்மானங்கள் போட்டிருக்கிறது. 1965ம் ஆண்டில் தாஷ்கண்டிலும், பிறகு சிம்லா ஒப்பந்தத்திலும் காஷ்மீர் சுயநிர்ணயம் பற்றிய ஒப்பந்தங்கள், இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் மத்தியில் போடப்பட்டன. அதனால் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையும் அல்ல. இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையிலான பரஸ்பர பிரச்சனையும் அல்ல. அது அøøத்து நாட்டு மத்தியில் சென்று விட்ட பிரச்சனையாக இருக்கிறது. இத்தகைய உண்மைகளை சென்னை வந்திருந்த காஷ்மீரி மாணவர் காலித் வசிம் கூறிய பிறகு தான் தெளிவாக விளங்க முடிகிறது. இங்கே காஷ்மீர் பிரச்சனையை ஒரு முஸ்லிம் பிரச்சனையாக பார்க்கின்ற மோசமான ஒரு மதச்சார்பு பரப்புரை பலரையும் பாதித்திருக்கிறது.
ஈழத்தில் இன அழிப்பை தங்கள் வாழ்நாள் காலத்திலேயே அறிந்து துடித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தமிழனும், காஷ்மீர் பிரச்சனையை அதன் வரலாறு, பூகோள அமைப்பு, சமூக வாழ்நிலை ஆகியவற்றுடன் கவனித்து ஒரு தேசியஇனத்தின் நெருக்கடி என்பதாக உணர்வது தான் உண்மைக்கு கொடுக்கப்படும் மரியாதை.
Saturday, August 14, 2010
போர் நிறுத்தம்: ஜன்னல் வழியா? கதவு வழியா?
ஆங்கில காட்சி ஊடகங்களில் இந்தியாவின் இதயப் பகுதியில் நடந்து வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதற்கான சூடான விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அத்தகைய விவாதங்களில் அமைதி வழியில் தீர்வு காண துடிக்கின்ற சுவாமி அக்னிவேஷ் பங்குக் கொள்கிறார். அதேசமயம் புரட்சிகர கவிஞர் என்று ஆந்திராவில் அறியப்பட்ட வரவராவ் கலந்து கொள்கிறார். அது தவிர பிரபல ஆங்கில ஊடகங்களின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துக் கூறினர். அவர்களது விவாதம் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த மம்தா பானர்ஜி கலந்து கொண்ட மாபெரும் பொதுக் கூட்டம் பற்றி திரும்பியது. அந்த கூட்டத்தில் மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட செயல், இந்திய நாடாளுமன்றத்தையே குலுக்கி வருகிறது என்பதும் காட்சி ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.
ஆசாத் படுகொலைக்கு விசாரணை வேண்டுமென்று, மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கேட்க, அதை பா.ஜ.க.வும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் மறுக்க அதுவே தீவிர விவாதமாக நாடாளுமன்றத்தில் ஆகியிருக்கிறது. அதுபற்றி மம்தாவிடம் பேசி தீர்க்க மூத்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அனுப்பி வைக்கப்படும் அளவிற்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ஒரு பிளவுபட்ட கருத்தை அது ஏற்படுத்தி விட்டது. இத்தகை சூழலில் பிரபல ஆங்கில வார ஏடு ஒன்றும், பிரபல ஆங்கில காட்சி ஊடகம் ஒன்றும் மாவோயிஸ்ட் பகுதி என்று இப்போது அழைக்கப்படுகின்ற இந்தியாவின் இதயமான பகுதிக்குள் முதன்முறையாக ஊடகங்கள் வாயிலாக ஒரு ஆய்வு நடத்தியுள்ளார்கள். அந்த ஆய்வில் கிடைத்திருக்கும் பதில்களாக அவர்கள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் சரியானது தானா என்ற கருத்தை விட, அப்படியொரு ஆய்வு இந்திய நாட்டில் எப்படிப்பட்ட விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் முக்கியமான செய்தி.
அவர்கள் எடுத்துள்ள புள்ளி விவரங்களில் நக்சல்பாரிகளாக மாறிய மக்கள் ஏழைகளாகவும், ஒடுக்கப்படுபவர்களாகவும் இருப்பவர்கள் தான் 26% இருக்கிறார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல நக்சல்பாரி ஊழியர்களில் 12% இளம் ஆதிவாசிகள் என்றும், 13% அண்டை பகுதிகளில் இருந்து வந்த ஆதிவாசிகள் என்றும், 19% ஆதிவாசிகள் அல்லாதவர்கள் என்றும் ஒரு கணக்கும் வெளியிடப்பட்டுள்ளது. நக்சல்பாரி இயக்கம் அந்த வட்டாரத்தில் வளர்வதற்கு காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, வட்டார வளர்ச்சியின்மையே காரணம் என 21%ம், சமூக ஏற்றத்தாழ்வு காரணம் என்போர் 7% என்றும், உதவிகள் கிடைக்காமல் தவிக்க விடப்பட்ட மனநிலை தான் காரணம் என்போர் 6% என்றும், மத்திய மாநில அரசுகளின் தோல்விகள் தான் காரணம் என்று சொல்பவர்கள் 5% என்றும் புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வட்டார மக்கள் மத்தியில் நக்சல்பாரி இயக்கத்தின் மீது அனுதாபம் கொண்டவர்கள் 10% என்றும், சிறிய அளவு அனுதாபம் உள்ளவர்கள் 37% என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டில் அகில இந்திய அளவில் நக்சல்பாரி இயக்கத்தின் செல்வாக்கிற்கு உட்பட்ட மாவட்டங்கள் 54 இருந்தன என்றும், தற்போது 2010ம் ஆண்டில் 85 மாவட்டங்கள் அவர்களது செல்வாக்கில் இருக்கின்றன என்றும் அந்த ஆய்வு மதிப்பீடு கூறியுள்ளது. அந்த வட்டார மக்கள் மத்தியில் 44% மக்கள் 5 ஆண்டுகளாக நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்றும், 34% மக்கள் 5 ஆண்டுகளுக்குள் கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்றும், 22% கடந்த ஆண்டு தான் கேள்விப்பட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
அதேபோல நக்சல்பாரிகள் அதிகாரத்தை நிறுவியிருக்கிறார்கள் என்று 31% மக்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் 17% மக்கள் நக்சல்பாரிகள் அதிகாரத்தை இழந்திருப்பதாகவும், 19% மக்கள் அரசு அதிகாரத்திற்கும், நக்சல்பாரிகளின் அதிகாரத்திற்கும் வேறுபாடு இல்லை என்றும் ஆய்வில் கூறியிருக்கிறார்கள். அரசாங்கம் வட்டாரத்தின் முழுமையான கட்டுப்பாட்டை கையில் வைத்திருப்பதாக 49% மக்கள் கூறியிருக்கிறார்கள். பகுதி அளவில் தான் அரசாங்க கட்டுப்பாடு இருப்பதாகவும், மீதி நக்சல்பாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், 13% மக்கள் கூறியிருக்கிறார்கள். இரவு நேரங்களில் நக்சல்பாரிகளின் அதிகாரம் தான் கோலோச்சுவதாக 8% மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். 2% மக்கள் மட்டும் முழுமையான அதிகாரம் நக்சல்பாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
பாபுராவ் வாடே என்ற கிராம தலைவர் தன்னைப் போன்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், எந்த நேரமும் யாரும் தன்னைப் போன்றவர்களை தாக்கி விட்டு சென்று விட முடியும் என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் கோண்டுவாகி கிராமத்தின் சமூக தலைவர், தங்களை 2 அரசாங்கங்கள் ஆள்வதாகவும், 1 காலை நேரத்தில் அதிகார பூர்வமாக ஆள்கிறது என்றும், இன்னொன்று இரவில் ஆள்வதாகவும், தாங்கள் அவை இரண்டிற்கும் மத்தியில் வாழும் கலையை கற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேபோல அட்வே காண்டு என்ற ஒரு விவசாயி ஒரு கத்திரியின் 2 கூர்மிகு பகுதிக்கும் மத்தியில் உள்ள தாள் போல தாங்கள் வாழ்வதாக கூறியுள்ளார்.
நக்சல்பாரிகள் ஏழைகளுக்கான நியாயங்களை, துப்பாக்கி முனையில் பெற விரும்புவதாகவும், அரசாங்கத்தை தூக்கியெறிய விரும்புவதாகவும், வன்முறை மூலம் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவதாகவும் அங்குள்ள எளிய உழைக்கும் மக்கள் கூறியிருக்கிறார்கள். மத்திய அரசு தோட்டாக்களால் பேசும் போது மட்டுமே கவனிக்கிறது என்பதனால், ஆயுத போராட்டம் நியாயப்படுத்தப்படுகிறது என்றும் கூட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
நக்சல்பாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் காடுகளை வணிகர்களுக்காகவும், கார்ப்பரேட்டுகளுக்காகவும் காலி செய்து கொடுக்க அரசு முயல்வதாக அந்த ஏழை மக்கள் தெரிவித்துள்ளனர். நக்சல்பாரிகள் மக்களது பிரச்சனைகளை கையிலெடுக்கிறார்கள் என்றாலும் அவர்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தக்கூடாது என்று கணிசமான மக்கள் கூறியுள்ளார்கள். தெலுங்கானாவில் உள்ள ஆதிவாசிகள் பகுதிகளில் மாவோயிஸ்ட்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. குறிப்பாக வாரங்கள், கரிம்நகர், நிஜாமாபாத், கம்மம், அடிலாபாத் ஆகிய தெலுங்கான பிராந்திய மாவட்டங்களில் அந்த செல்வாக்கு தெரிகிறது என்றும் கட்டுரையாளர் கூறியுள்ளார். தெலுங்கான பகுதியில் நகர்மயமாதல் அதிகரிக்கும் போது கிராமப்புறங்கள் சிவப்பு சிந்தனையின் கீழ் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன. மஞ்சேரியல் என்ற பகுதியில் மக்கள் நக்சல்பாரிகளை தீவிரவாதிகளாக பார்க்கவில்லை. மாறாக நாட்டுப்பற்றாளர்களாக காண்கிறார்கள்.
காட்சி ஊடக விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சுவாமி அக்னிவேஷ், ஆசாத் படுகொலை பற்றி கண்டனம் தெரிவித்தார். தன் மூலம் ஆசாத் பேச்சு வார்த்தைக்கான உணர்வு பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டதையும் கூறினார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத்திற்கும் மத்தியில் பேச்சுவார்த்தைக்காக தான் எடுத்த முயற்சிகளை விவரித்தார். இப்போதும் போர் நிறுத்தம் செய்ய ஜன்னல் திறந்திருக்கிறது என்றார். ஆனால் அது ஜன்னல் அளவு அல்ல என்றும், கதவே திறந்திருக்கிறது என்றும் வாதாடிய ஆங்கில ஏட்டின் ஆசிரியர் கூறினார்.
64வது சுதந்திர தினத்தில் கால் வைக்கின்ற நாம், மாற்று அரசாங்கத்தையும், புரட்சிகர ஆயுத படையையும், கையில் வைத்திருக்கின்ற மாவோயிஸ்ட்களுடன், போர் நிறுத்தம் அறிவிப்பதற்கு இது தான் நன்னாளாக இருக்கும் என்ற உணர்வை எழுப்புவோம்.
ஆசாத் படுகொலைக்கு விசாரணை வேண்டுமென்று, மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கேட்க, அதை பா.ஜ.க.வும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் மறுக்க அதுவே தீவிர விவாதமாக நாடாளுமன்றத்தில் ஆகியிருக்கிறது. அதுபற்றி மம்தாவிடம் பேசி தீர்க்க மூத்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அனுப்பி வைக்கப்படும் அளவிற்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ஒரு பிளவுபட்ட கருத்தை அது ஏற்படுத்தி விட்டது. இத்தகை சூழலில் பிரபல ஆங்கில வார ஏடு ஒன்றும், பிரபல ஆங்கில காட்சி ஊடகம் ஒன்றும் மாவோயிஸ்ட் பகுதி என்று இப்போது அழைக்கப்படுகின்ற இந்தியாவின் இதயமான பகுதிக்குள் முதன்முறையாக ஊடகங்கள் வாயிலாக ஒரு ஆய்வு நடத்தியுள்ளார்கள். அந்த ஆய்வில் கிடைத்திருக்கும் பதில்களாக அவர்கள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் சரியானது தானா என்ற கருத்தை விட, அப்படியொரு ஆய்வு இந்திய நாட்டில் எப்படிப்பட்ட விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் முக்கியமான செய்தி.
அவர்கள் எடுத்துள்ள புள்ளி விவரங்களில் நக்சல்பாரிகளாக மாறிய மக்கள் ஏழைகளாகவும், ஒடுக்கப்படுபவர்களாகவும் இருப்பவர்கள் தான் 26% இருக்கிறார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல நக்சல்பாரி ஊழியர்களில் 12% இளம் ஆதிவாசிகள் என்றும், 13% அண்டை பகுதிகளில் இருந்து வந்த ஆதிவாசிகள் என்றும், 19% ஆதிவாசிகள் அல்லாதவர்கள் என்றும் ஒரு கணக்கும் வெளியிடப்பட்டுள்ளது. நக்சல்பாரி இயக்கம் அந்த வட்டாரத்தில் வளர்வதற்கு காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, வட்டார வளர்ச்சியின்மையே காரணம் என 21%ம், சமூக ஏற்றத்தாழ்வு காரணம் என்போர் 7% என்றும், உதவிகள் கிடைக்காமல் தவிக்க விடப்பட்ட மனநிலை தான் காரணம் என்போர் 6% என்றும், மத்திய மாநில அரசுகளின் தோல்விகள் தான் காரணம் என்று சொல்பவர்கள் 5% என்றும் புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வட்டார மக்கள் மத்தியில் நக்சல்பாரி இயக்கத்தின் மீது அனுதாபம் கொண்டவர்கள் 10% என்றும், சிறிய அளவு அனுதாபம் உள்ளவர்கள் 37% என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டில் அகில இந்திய அளவில் நக்சல்பாரி இயக்கத்தின் செல்வாக்கிற்கு உட்பட்ட மாவட்டங்கள் 54 இருந்தன என்றும், தற்போது 2010ம் ஆண்டில் 85 மாவட்டங்கள் அவர்களது செல்வாக்கில் இருக்கின்றன என்றும் அந்த ஆய்வு மதிப்பீடு கூறியுள்ளது. அந்த வட்டார மக்கள் மத்தியில் 44% மக்கள் 5 ஆண்டுகளாக நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்றும், 34% மக்கள் 5 ஆண்டுகளுக்குள் கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்றும், 22% கடந்த ஆண்டு தான் கேள்விப்பட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
அதேபோல நக்சல்பாரிகள் அதிகாரத்தை நிறுவியிருக்கிறார்கள் என்று 31% மக்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் 17% மக்கள் நக்சல்பாரிகள் அதிகாரத்தை இழந்திருப்பதாகவும், 19% மக்கள் அரசு அதிகாரத்திற்கும், நக்சல்பாரிகளின் அதிகாரத்திற்கும் வேறுபாடு இல்லை என்றும் ஆய்வில் கூறியிருக்கிறார்கள். அரசாங்கம் வட்டாரத்தின் முழுமையான கட்டுப்பாட்டை கையில் வைத்திருப்பதாக 49% மக்கள் கூறியிருக்கிறார்கள். பகுதி அளவில் தான் அரசாங்க கட்டுப்பாடு இருப்பதாகவும், மீதி நக்சல்பாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், 13% மக்கள் கூறியிருக்கிறார்கள். இரவு நேரங்களில் நக்சல்பாரிகளின் அதிகாரம் தான் கோலோச்சுவதாக 8% மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். 2% மக்கள் மட்டும் முழுமையான அதிகாரம் நக்சல்பாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
பாபுராவ் வாடே என்ற கிராம தலைவர் தன்னைப் போன்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், எந்த நேரமும் யாரும் தன்னைப் போன்றவர்களை தாக்கி விட்டு சென்று விட முடியும் என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் கோண்டுவாகி கிராமத்தின் சமூக தலைவர், தங்களை 2 அரசாங்கங்கள் ஆள்வதாகவும், 1 காலை நேரத்தில் அதிகார பூர்வமாக ஆள்கிறது என்றும், இன்னொன்று இரவில் ஆள்வதாகவும், தாங்கள் அவை இரண்டிற்கும் மத்தியில் வாழும் கலையை கற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேபோல அட்வே காண்டு என்ற ஒரு விவசாயி ஒரு கத்திரியின் 2 கூர்மிகு பகுதிக்கும் மத்தியில் உள்ள தாள் போல தாங்கள் வாழ்வதாக கூறியுள்ளார்.
நக்சல்பாரிகள் ஏழைகளுக்கான நியாயங்களை, துப்பாக்கி முனையில் பெற விரும்புவதாகவும், அரசாங்கத்தை தூக்கியெறிய விரும்புவதாகவும், வன்முறை மூலம் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவதாகவும் அங்குள்ள எளிய உழைக்கும் மக்கள் கூறியிருக்கிறார்கள். மத்திய அரசு தோட்டாக்களால் பேசும் போது மட்டுமே கவனிக்கிறது என்பதனால், ஆயுத போராட்டம் நியாயப்படுத்தப்படுகிறது என்றும் கூட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
நக்சல்பாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் காடுகளை வணிகர்களுக்காகவும், கார்ப்பரேட்டுகளுக்காகவும் காலி செய்து கொடுக்க அரசு முயல்வதாக அந்த ஏழை மக்கள் தெரிவித்துள்ளனர். நக்சல்பாரிகள் மக்களது பிரச்சனைகளை கையிலெடுக்கிறார்கள் என்றாலும் அவர்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தக்கூடாது என்று கணிசமான மக்கள் கூறியுள்ளார்கள். தெலுங்கானாவில் உள்ள ஆதிவாசிகள் பகுதிகளில் மாவோயிஸ்ட்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. குறிப்பாக வாரங்கள், கரிம்நகர், நிஜாமாபாத், கம்மம், அடிலாபாத் ஆகிய தெலுங்கான பிராந்திய மாவட்டங்களில் அந்த செல்வாக்கு தெரிகிறது என்றும் கட்டுரையாளர் கூறியுள்ளார். தெலுங்கான பகுதியில் நகர்மயமாதல் அதிகரிக்கும் போது கிராமப்புறங்கள் சிவப்பு சிந்தனையின் கீழ் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன. மஞ்சேரியல் என்ற பகுதியில் மக்கள் நக்சல்பாரிகளை தீவிரவாதிகளாக பார்க்கவில்லை. மாறாக நாட்டுப்பற்றாளர்களாக காண்கிறார்கள்.
காட்சி ஊடக விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சுவாமி அக்னிவேஷ், ஆசாத் படுகொலை பற்றி கண்டனம் தெரிவித்தார். தன் மூலம் ஆசாத் பேச்சு வார்த்தைக்கான உணர்வு பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டதையும் கூறினார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத்திற்கும் மத்தியில் பேச்சுவார்த்தைக்காக தான் எடுத்த முயற்சிகளை விவரித்தார். இப்போதும் போர் நிறுத்தம் செய்ய ஜன்னல் திறந்திருக்கிறது என்றார். ஆனால் அது ஜன்னல் அளவு அல்ல என்றும், கதவே திறந்திருக்கிறது என்றும் வாதாடிய ஆங்கில ஏட்டின் ஆசிரியர் கூறினார்.
64வது சுதந்திர தினத்தில் கால் வைக்கின்ற நாம், மாற்று அரசாங்கத்தையும், புரட்சிகர ஆயுத படையையும், கையில் வைத்திருக்கின்ற மாவோயிஸ்ட்களுடன், போர் நிறுத்தம் அறிவிப்பதற்கு இது தான் நன்னாளாக இருக்கும் என்ற உணர்வை எழுப்புவோம்.
Friday, August 13, 2010
சீனச் செல்வாக்கில் இலங்கை மூழ்கியதா?
இன்றைய இலங்கைத் தீவின் சூழ்நிலை வித்தியாசமாக மாறியிருக்கிறது. தென்னிலங்கையிலும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் சிங்கள தேசிய சின்னம் பொருந்திய இலங்கை அரசின் கொடியைத் தவிர, அந்நிய நாட்டு செல்வாக்கு என்று சொல்லப்போனால், அது சீன அரசின் மற்றும் இந்திய அரசின் செல்வாக்கையே குறிக்கும் என்ற நிலை இருக்கிறது. 2009ம் ஆண்டு மே 17ல் 4வது வன்னிப்போரின் இறுதிப்பகுதியை சந்தித்தப் பின், இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த சூழலில் இந்த மாற்றம் படிப்படியாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தவிர எங்கும் இந்திய அரசின் கொடியை காண்பது அரிதாக இருக்கிறது. அதேசமயம் தலைநகர் கொழும்பிலும், மற்றும் கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டகிளப்பு துறைமுகம் உட்பட வன்னிப்பகுதியில் நந்திக்கடல் உட்பட, தமிழர்கள் ஆண்டுவந்த மண்ணில் எங்கு நோக்கினும் சீன அரசின் கொடிகள் பறக்கின்றன. இத்தகைய மாற்றம் எந்த வகையிலும் தமிழர்களுக்கோ அல்லது இந்தியாவிற்கோ ஆரோக்கியமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்கு பயன்படக்கூடிய மாற்றமல்ல.
இந்தியா, சீனா இரண்டு நாடுகளையுமே சமதூரத்தில் வைத்து, தாங்கள் உதவிகளைப் பெற்று வருவதாக கூறிக் கொண்டிருக்கும் ராஜபக்சே அரசாங்கம் செயலில் அதுபோல நடந்துக் கொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது. சமீபத்தில் இந்தியாவில் தலைநகரான டெல்லிக்கு வருகை புரிந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இந்திய அரசுடன் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார் என்பதை இந்திய அரசு பெருமையாக பார்க்கலாம். ஆனால் டெல்லியிலிருந்து திரும்பிய கையோடு அவர் சீன உதவி பிரதமர் சேங் டெஜியாங் உடன் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு முக்கிய ஒப்பந்தங்களை முடிவு செய்தார் என்பது தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் ஒரு கசப்பான உண்மையாக அமைந்தது.
அந்த சந்திப்பிற்கு கொழும்பு வந்திருந்த சேங் டெஜியாங், 30 உறுப்பினர்கள் கொண்ட சீனக் குழுவை அழைத்து வந்திருந்தார். அந்த குழுவினர் பொருளாதாரம், வர்த்தகம், மூலதனம் ஆகிய துறைகளில் இலங்கை அரசுடன் பேசுவதற்காக வந்திருந்த உயர்மட்ட பிரதிநிதிகள். அவர்கள் இலங்கை துணை பிரதமரான ஜெயரத்னேவுடன் உள்கட்டுமான மூலதனங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் ஆகியவற்றிற்கான புதிய 6 ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார்கள். அதேசமயம் அம்பாந் தோட்டத்தில் சீனா கட்டி வரும் துறைமுக வளர்ச்சித் திட்டத்தின் 2வது கட்டம் பற்றியும் பேசி திட்டமிட்டுக் கொண்டுள்ளார்கள்.
இலங்கைத் தீவின் உள்கட்டுமான வளர்ச்சிக்காக இந்திய அரசு 8,000 லட்சம் அமெரிக்க டாலர்களை கடனாக கொடுக்க வாக்குக் கொடுத்த போது, சீனா 304 லட்சம் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக இலங்கைக்கு வழங்கியது. இது 2006ம் ஆண்டிலிருந்து நடந்து வருகின்ற நிகழ்வு. சீனாவின் பங்கிற்கு தலைநகர் கொழும்பிலுள்ள கட்டுநாயகா விமான நிலையத்திலிருந்து வருகின்ற பாதையான கட்டுநாயகா எக்ஸ்பிரஸ்வே என்று சொல்லப்படும் பெரிய பாதையை கட்டிக்கொடுத்தது. அதேபோல நோரோச்சோலை நிலக்கரி மின்திட்டம் மற்றும் நிகழ் கலைக்கான மையம் ஆகியவற்றை சீனா கட்டிக் கொடுக்கிறது. அதாவது தலைநகர் கொழும்பில் இருக்கின்ற டவுன் ஹால் அருகே இருக்கும் மாபெரும் பூங்காவிற்கு எதிரே அத்தகைய நிகழ்கலை மையம் கட்டப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்திய அரசின் உதவியில் மத்தாராகொழும்பு ரயில்வே பாதை கட்டப்பட்டு வருகிறது. தமிழர்களின் வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணத்தில் இருக்கும் காங்கேசன் துறைமுகத்தையும், இந்திய அரசு கட்டிக் கொடுக்கிறது. அதேபோல பழுதடைந்துள்ள பலாலி விமான நிலையத்தையும் இந்திய அரசு ஒழுங்குப்படுத்திக் கொடுக்கிறது. சீனா இலங்கைக்கு கொடுத்த கடனான 340 லட்சம் டாலர் தொகையை கணக்கிடும் போது, இந்திய அரசு இலங்கைக்கு எதிர்காலத்தில் கொடுக்கவுள்ள 180 லட்சம் அமெரிக்க டாலர் என்பது பாதியளவு கூட வராத நிலையில் தான் உள்ளது. 2 நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு கிடைக்கின்ற மூலனதமும், இலங்கையின் மீது 2 நாடுகளுக்கும் இருக்கின்ற அக்கறையும் புதிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்தியாவின் தென்பகுதியில், இந்திய அரசின் செல்வாக்கின் கீழ் நீண்டகாலமாக இருந்து வந்த இலங்கைத் தீவு புதிதாக இப்போது சீனாவின் அதிக அக்கறைக்கு உள்ளாகிறது என்ற செய்தி, டெல்லியை சிறிது நிலைகுலையச் செய்துள்ளது.
இலங்கை அரசு சீனாவிற்கு ஒரு முழுமையான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதில் ஹாங்காங்கில் இருக்கின்ற கான்க்ளோ மேரேட் ஹுய்சென் மூலதன லிமிடெட் என்ற வர்த்தக நிறுவனம் 280 டாலர்களை மூலதனமிட்டு, தலைநகர் கொழும்பிலுள்ள முக்கிய துறைமுகத்திலிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மிரிகாமா என்ற இடத்தில் ஒரு பொருளாதார மண்டலத்தை உருவாக்கப்போகிறது. மேற்கத்திய நாடுகள் ஐ.நா.வில் இலங்கை அரசை போர்க்குற்றங்களுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும் தனிமைப்படுத்திய போது, தங்களுக்கு உதவியது சீன அரசு என்பதாக இலங்கை அரசு கருதுகிறது. இதுபோன்ற போட்டி பொருளாதார முதலீடுகளை, சீன அரசு எத்தியோப்பியா, சாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் செய்து வருகிறது.
இலங்கையில் சீனா இறக்கும் மூலதனங்களில் முக்கியமாக அம்பந்தோட்டா துறைமுகம் கருதப்படுகிறது. அதேபோல நோரோச்சோலை அனல்மின் நிலையத்தை கட்டிக் கொடுப்பதில், 20 ஆண்டுகளில் திருப்பி அடைக்கக்கூடிய 8,910 லட்சம் டாலர்களை சீனா கடனாக 2% வட்டிக்கு இலங்கைக்கு அளித்துள்ளது. அம்பந்தோட்டா துறைமுகத்திற்காக சீனாவின் எக்ஸிம் வங்கி 3,600 லட்சம் டாலரை முதல் கட்டமாக செலவழித்துள்ளது. இலங்கைத் தீவு மத்திய கிழக்கு நாடுகளுக்கும், தூரக்கிழக்கு நாடுகளுக்கும் மையத்தில் இருப்பதனால் அது தொலைநோக்கு போர்த்தந்திர பாணியில் தங்களுக்கு உதவும் என்று சீன அரசு எண்ணுகிறது.
சீனா, இந்தியா தவிர பாகிஸ்தானுடனும் இலங்கை அரசு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வருகிறது. அதில் இந்தியா 4,150 பொருட்களுக்கும், பாகிஸ்தான் 206 பொருட்களுக்கும் பரிமாற்ற உத்தரவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசுடன் இருக்கின்ற நல்லுறவை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை அரசு சில அரசியல் அணுகுமுறைகளை மேற்கொள்கிறது. இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சரான காமினி பீரிஸ் கூறும்போது, சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையேயுள்ள உறவு வர்த்தக ரீதியானது என்றும், தங்களுக்குள் இருக்கும் கூட்டுறவைக் கண்டு வேறு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். குறிப்பாக அம்பந்தோட்டா துறைமுகம் முழுமையாக வர்த்தக ரீதியாகவும், போட்டி தன்மையற்றதாகவும் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். அந்த துறைமுகத்தில் முதல் கப்பல் நவம்பர் 19ம் நாள் வருகை தரும் என்பதாகவும் அறிவித்துள்ளார். தலைநகர் கொழும்பிலிருந்து தென்னிலங்கை பகுதிகளுக்கு செல்லுகின்ற முக்கிய சாலைகளையும் சீனா கட்டிக்கொடுக்கிறது என்று அமைச்சர் கூறியுள்ளார். அதேபோல தமிழர்களின் வடக்குப் பகுதியில் மேலும் 9 பெரிய சாலைகளை சீனா அமைத்துக் கொடுக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.
மேற்கண்ட இரு பெரும் நாட்டு அரசுகளின் போட்டிகள், இலங்கைத் தீவிற்குள் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கி வரும் அதே வேளையில், ராஜபக்சே அரசு தமிழர்கள் பகுதியான வடக்கிலும், கிழக்கிலும் பாரம்பரிய தமிழர் அடையாளங்களை அழிப்பதையும், தங்களது சிங்கள பௌத்த அடையாளங்களை அறுதியிடுவதிலும் உறுதியாக இருக்கிறது. வடக்கு மாகாணத்திலிருந்து சில இடங்களில் இடம் பெயர்ந்து செல்லும் சிங்கள ராணுவத்தினர், தங்கள் பழைய முகாம்களில் புத்தர் கோயில்களை விட்டுச் செல்கின்றனர். அதேபோல வடக்கு பகுதியில் எடுக்கப்படுவதாக காட்டப்படும் சிறிய புத்தர் சிலைகளை பயன்படுத்தி, இலங்கையினர் அனைத்து பகுதிகளிலும் இருந்ததான ஒரு வரலாற்றுத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். அதன் விளைவே சொர்ணவாகினி என்ற சிங்கள தனியார் காட்சி ஊடகத்தில் வடக்கில் பௌத்தம் என்ற ஒரு நிகழ்ச்சியை, அரசின் உதவியோடு ஏற்பாடு செய்துள்ளனர்.
மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்துமே, இந்தியாவின் இருத்தலுக்கும், இயங்குதலுக்கும் சவாலாக அமைந்துள்ளது என்பதை டெல்லி உணர்ந்துக் கொண்டால் போதாது. டெல்லியை நம்பி அரசியல் நடத்தும் தென்னிந்திய அரசியல்வாதிகளும், அதிகார சக்திகளும் உணரவேண்டும். தங்களுக்கு சாதகமானது தமிழர்களின் அடையாளமும், அறுதியிடலும் மட்டுமே என்பதை அவர்கள் உணர்வார்களா?
Wednesday, August 11, 2010
பா.ஜ.க.வுடன் இடதுசாரிகள் சேர்ந்தது எதனால்? யாருக்காக?
கொல்கத்தா அருகே ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த பொதுக்கூட்டம் கட்சி சார்பற்றது என்பதாக அறிவிக்கப்பட்டது. அதை அரசியல் சார்பற்றது என்பதாக ஊடகங்கள் விளக்கின. அரசியல் என்பதை தேர்தலில் போட்டியிடும் வேலையாக மட்டும் கருதிக்கொண்டிருக்கும் ஒரு சிந்தனைப் போக்கின் விளைவே அவ்வாறான சித்தரிப்பு. தேர்தல் அரசியல் தவிர, சமூகப் பிரச்சனைகள், பொருளாதார கோரிக்கைகள், அரசியல் உரிமைகள் போன்ற அனைத்துமே அரசியல் தான் என்ற செய்தி இன்னமும் நமது நாட்டில் பிரபலமாக புரியப்படவில்லை. சாதாரண பொது மக்களுக்கு மட்டுமின்றி, அறிவுஜீவிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏன் ஊடங்களுக்கும் கூட இன்னமும் அரசியல் என்பதற்கான பரந்த பொருளை உட்கொள்வதில் சிரமம் இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்குள் உள்ள அரசியல், கட்சி அரசியல் என்பதாக அழைக்கப்பட வேண்டும். அப்படிப் பார்க்கும் போது கட்சி சார்பற்ற அரசியல் என்று ஒன்று சமூகத்தில் நிலவிவரும் உண்மையை புரிந்துகொள்ள வேண்டிவரும். அப்படிப்பட்ட ஒரு கட்சிச் சார்பற்ற அரசியல் மேடை தான் கொல்கத்தா அருகே அமைக்கப்பட்டது. அந்த மேடையில் முக்கியமாக மத்திய ரயில்வே அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேனர்ஜி அமர்ந்திருந்தார். இந்திய மக்கள் அனைவருக்கும் கடந்த 30 ஆண்டுகளாக பிரபலமாக அறிமுகமான பெண் சமூக ஆர்வலர், மேதா பட்கர் அமர்ந்திருந்தார். நர்மதா நதிக்கு குறுக்கே அணைக்கட்டும் முயற்சி, 2 லட்சம் ஆதிவாசி மக்களை தங்களது பாரம்பரிய பசுமை நிலத்தை விட்டு இடம்பெயரச்செய்யும் என்பதனால், 25 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்கி வருபவர் மேதா பட்கர். அவர் வழிநடத்தும் தேசிய மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு, பல்வேறு விதமான அரசியல் உரிமைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக போராடி வருகிறது. ஆகவே அவரை அரசியலற்றவர் என்று கூறிவிட முடியாது. ஆனால் அவர் இந்திய நாடாளுமன்றப் பாதையில் போட்டியிடும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர். ஆகவே அவரை கட்சிச் சார்பற்றவர் என்று அழைக்கலாம். அதே போல அந்த மேடையில் அமர்ந்திருந்த சுவாமி அக்னிவேஷ் ஒரு சமூக ஆர்வலர். அவர் கொத்தடிமைத் தனத்தை எதிர்த்து 30 ஆண்டுகளாக போராடி வருபவர். கொத்தடிமைகளை விடுதலை செய்யும் இயக்கம் ஒன்றை நடத்திவருபவர். அப்படிப்பட்ட அவரது தொடர் சமூகப் பணிகளை கணக்கில் கொண்டு, மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். கட்சிகள் ஆக்கிரமித்துள்ள மாநிலங்களவையில், இது போன்ற கட்சிச் சார்பற்ற பிரதிநிதிகளும் அவ்வபோது தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அவரும் கூட கட்சிச் சார்பற்ற ஒரு பிரமுகர். அதேசமயம் அடிப்படை மக்களின் அரசியல் உரிமைக்காக போராடி வருபவர். ஆகவே அவர்களெல்லாம் அரசியல் அற்றவர்கள் அல்ல. அதேசமயம் கட்சிச் சார்பற்றவர்கள். அதனால் அந்த மேடை கட்சி சார்பற்ற மேடையாக அர்த்தப்படுத்தப்பட வேண்டும். அந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அணிதிரட்டப்பட்ட மக்களும், கட்சி சார்பற்றவர்கள். மம்தா பானர்ஜி தவிர அவரது கட்சியை சேர்ந்த எந்த ஒரு அமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ, தலைமை பொறுப்பாளர்களோ அந்த மேடையில் அமரவில்லை. அதனால் மம்தாவின் கட்சியும் தங்கள் கட்சித் தொண்டர்களை, அந்த கூட்டத்திற்கு கொடியுடன் கூட்டிவரவில்லை. லால்கர் என்று அழைக்கப்படும் மேற்கு மிதினாபூர் மாவட்டத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் அந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஒரு மாதம் முன்பே மேதா பட்கரும், சுவாமி அக்னிவேஷும் லால்கர் நோக்கி அணிவகுப்போம் என்பதாக அறிவித்து அணிதிரட்டி வந்தனர். மேற்குவங்க மாநிலத்தை ஆளும் மார்சிஸ்ட் கட்சி அத்தகைய அணிதிரட்டலுக்கு அனுமதிக்காத ஒரு சூழ்நிலையில், மம்தா பானர்ஜியும் அந்த நிகழ்ச்சிக்கு இணைக்கப்பட்டார். காவல்துறையின் அராஜகத்திற்கு எதிரான மக்கள் குழு என்ற ஆதிவாசி மக்களை ஆயிரக்கணக்கில் அணிதிரட்டி வரும் மக்கள் அமைப்பு ஒன்று மேற்கு மிதினாபூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. அதன் தலைவர்களாக இருக்கின்ற மகதோக்களை, மேற்கு வங்க அரசு வேட்டையாடி வருகிறது. அவர்களை கைது செய்யவும், சிறைப்பிடிக்கவும் எளிதான முறையாக, மாவோயிஸ்டுகள் என்ற முத்திரையை குத்திவிடுகிறார்கள். அதனால் மக்கள் திரள் அமைப்பின் தலைவர்களாக இருக்கும் மகதோக்கள் இதன் மூலம் வன்முறையாளர்களாக அரசாங்கத்தின் நல்லாசியுடன் சித்தரிக்கப்பட்டார்கள். அப்படி சித்தரிக்கப்பட்ட ஒரு மகதோ, மம்தாவுடன் அந்த மேடையில் தோன்றினார் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை ஆதரிக்கும் கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மேற்கண்ட பொதுக்கூட்டம் பற்றிய காரசாரமான விவாதத்தை பா.ஜ.க. கிளப்பியது. அதை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரித்தது. இவ்வாறாக நாடாளுமன்றத்தின் பாதையில் பயணம் செய்யும் கட்சிகளில், எதிரெதிர் துருவங்களை சேர்ந்த கட்சிகள் மாவோயிஸ்டுகளை எதிர்ப்பது என்ற பெயரில் மம்தாவிற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். மேற்கண்ட கூட்டத்தில் மாவோயிஸ்டு கட்சியின் முக்கிய தலைவரான ஆசாத் என்ற செருகுரி ராஜ்குமார், கைது செய்யப்பட்ட பிறகு அராஜகமாக கொலைச் செய்யப்பட்டார் என்ற செய்தியும் கண்டத்திற்குள்ளானது. இதுவரை இத்தகைய கண்டனக் குரலை எழுப்பிவந்த சுவாமி அக்னிவேஷ், மேதா பட்கர் ஆகியோருடன் இந்த முறை மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டார். இது சிலருக்கு செரிக்கமுடியாத செய்தியாக அமைந்துவிட்டது. மாவோயிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான கிஷன்ஜி, ஆசாத் படுகொலைப் பற்றி விசாரணை கேட்காத பா.ஜ.க. மற்றும் சி.பி.எம். கட்சிகளை சாடியுள்ளார். மத்திய அரசின் சதித்திட்டத்தால் ஆசாத் படுகொலை செய்யப்பட்ட பிறகும், தங்கள் மாவோயிஸ்டு கட்சியின் தலைமை பேச்சுவார்த்தை பற்றி முறையாக சிந்திப்பதாக கிஷன்ஜி கூறியுள்ளார். மத்திய அரசு பச்சைவேட்டையை நிறுத்தி, வன்முறையை கைவிடுமானால், தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற அணுகுமுறையை புரட்சியாளர்கள் முன்வைக்கிறார்கள். மேதா பட்கரையும், சுவாமி அக்னிவேஷையும் அதற்கான இயக்கத்தை எடுக்குமாறு கிஷன்ஜி கோரியுள்ளார். இப்போது கட்சி சார்பற்ற அரசியல் மக்கள் மத்தியில் எடுபடத் தொடங்குவதால், கட்சி அரசியல்வாதிகளுக்கு கிலி பிடிக்கத் தொடங்கிவிட்டது. கட்சி அரசியல் அனைத்துமே மக்கள் விரோதமாக செல்லும் காரணத்தினால், கட்சி சார்பற்ற அரசியல் மக்களுக்காக வேர்விட தொடங்கியிருக்கிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது. 63வது சுதந்திரத் தினத்தை இந்த நாடு சந்திக்கயிருக்கும் நேரத்தில், கட்சிகளின் அரசியல் பன்னாட்டு நிறுவனங்களின் மற்றும் கார்பரேட்டுகளின் நலனுக்காக செல்வதும், அதனாலேயே கட்சி சார்பற்ற அரசியல் மக்கள் நலனுக்காக எழுவதும் குறிப்பாக கவனிக்கப்படவேண்டியிருக்கிறது. சுதந்திரம் என்பதை வாயால் பேசுவது கட்சி அரசியலா? சுதந்திரம் என்பதை உண்மையில் நேசிப்பது கட்சி சார்பற்ற அரசியலா? இத்தகைய விவாதம் எழுந்துள்ளது. அதனால் தான் கட்சிகளுக்குள் உள்ள வலது துருவமும், இடது துருவமும் இணைகிறதா என்பதே நமது கேள்வி.
Monday, August 9, 2010
இங்கிலாந்தின் சாவு வியாபாரிகளுக்கு லாபம்: இந்திய மக்களுக்கு பட்டை நாமம்
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் அதிபர் டேவிட் கேமரானுடைய வர்த்தக குழுவினர், தங்கள் இந்திய வருகையின் போது ஏற்படுத்திய வர்த்தக ஒப்பந்தங்கள் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. டேவிட் கேமரானுடன் இங்கிலாந்து நாட்டின் 6 மூத்த அமைச்சர்களும், 50 வணிக தலைவர்களும், 2 ஆயுத உற்பத்தி செய்யும் சாவு வியாபார நிர்வாகிகளும் வந்திருந்தார்கள். கேமரானுடைய வருகைக்கு முன்பு இங்கிலாந்து வெளிவிவகாரத் துறையும், பாதுகாப்புத் துறையும் இந்தியாவுடன் ஆயுத வியாபார ஒப்பந்தங்களுக்கு எதிராக இருந்தனர். அணுகுண்டு தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவுடன் எப்படி ஆயுத வர்த்தக பரிமாற்றம் செய்வது என்பதான விவாதம் இங்கிலாந்தில் இருந்தது. அதனால் அதிகமான அளவில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொள்ளலாம் என்ற லாப வெறி கொண்ட தனியார் ஆயுத உற்பத்தியாளர்கள் இங்கிலாந்தின் ஆட்சியை செல்வாக்கு செலுத்தினர். அதையொட்டி இரு நாடுகளும் தனியார் துறை நிறுவனங்களுக்கிடையில், பெரும் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். இங்கிலாந்தின் பி.ஏ.இ. மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் என்ற 2 ஆயுத வியாபார நிறுவனங்களுடன், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதையொட்டி 57 ஹாக் பயிற்சி விமானங்கள் இந்தியாவிற்கு கொடுக்கப்படும். முந்தைய ஒப்பந்தத்தில் 66 ஹாக் விமானங்கள் கொடுக்கப்பட்டன. இப்போது பி.ஏ.இ. நிறுவனத்திற்கு 5000 லட்சம் பௌண்டு என்ற இங்கிலாந்து நாணயமும், ரோல்ஸ் ராய்ஸ் என்ற இங்கிலாந்து நிறுவனத்திற்கு 2000 லட்சம் பௌண்டும், ஆக மொத்தம் 7000 லட்சம் பௌண்டு மதிப்புள்ள ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த ஒப்பந்தம் தங்களுடைய புதிய வணிக ரீதியான வெளிநாட்டு கொள்கைகயை நடைமுறைப்படுத்தியதால் கிடைத்தது என்று கேமரான் பெருமைப்பட்டுக் கொண்டார். இந்தியாவை இந்த பிராந்தியத்தில் ஏற்றுமதிக்கும், மூலதனமிடவும் முக்கியமான பொருளாதார பங்காளியாக, இங்கிலாந்து அரசாங்கம் காண்கிறது என்றும் வருகை புரிந்தவர்கள் அப்போது கூறினார்கள். உலகத்தை முழுக்க தங்கள் கதவடிக்கு கொண்டுவரும் தன்மையுள்ள இந்தியா தங்களுடைய எதிர்கால பங்காளியாக இருக்கும் என்று அப்போது கேமரான் எழுதினார். தனது வருகை இங்கிலாந்து நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கம் கொண்டது என்றும் கூறினார். இங்கிலாந்தில் இருக்கின்ற இந்திய நிறுவனங்களில் 90,000 பேர் இதுவரை வேலை செய்வதாக இந்திய பிரதமர் கூறியதையொட்டி, இந்தியாவில் இங்கிலாந்து நிறுவனங்களுடைய நடவடிக்கையால் மேலும் பலருக்கு வேலை கிடைக்கும் என்று அப்போது கேமரான் கூறினார். இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோருக்கு எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கைக் கொடுத்தார். தனது வருகை வர்த்தக பயணமாக இருந்தாலும், வேலை தேடும் பயணமாக இருப்பதையே தான் விரும்புவதாகவும் அப்போது கூறினார். 2006ம் ஆண்டு ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவராக இருந்த கேமரான் இந்தியா வந்திருந்தார். அப்போது இங்கிலாந்தை தொழிலாளர் கட்சி ஆட்சி செய்தது. பழமைவாத கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும் தலைவராக அப்போது அவர் வருகை புரிந்தார். இங்கிலாந்தின் வாகன உற்பத்திக்கும், எஃகு உற்பத்திக்கும் இந்திய முதலாளிகள் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டிய கேமரான், வங்கி, காப்பீடு, பாதுகாப்பு உற்பத்தி, சட்டபூர்வமான சேவைகளில் வர்த்தக தடைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறியுள்ளார். இப்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின் மூலம் ரூ.5,110 கோடிக்கான ஹாக் ஜெட் ஒப்பந்தம் ஒரு மாபெரும் வெற்றி என்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் தனியார் சாவு வியாபாரியான பி.ஏ.இ.க்கு ரூ.3,600 கோடியும், ரோல்ஸ் ராய்ஸ்க்கு ரூ.1,500 கோடியும் கிடைக்கும். இத்தகைய பல கோடி ரூபாய்க்கான ஆயுத விற்பனையை இந்தியாவிற்கு, இங்கிலாந்தின் ஆயுத நிறுவனங்கள் அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பு தான், ஆப்பிரிக்காவின் பாலைவனங்களை விட அதிகமான ஏழ்மையை இந்தியா சந்திக்கிறது என்ற உண்மையை இங்கிலாந்து மக்கள் கேள்விப்பட்டார்கள். ஆகவே அவர்களுக்கே கூட இது அதிர்ச்சி தரும் ஒப்பந்தம். இந்திய பெரும்பான்மை மக்களுக்கு உணவு பாதுகாப்பும், குடிநீரும், அடிப்படை சுகாதார தேவையும் கிடைக்காத சூழலில், அதிக செலவில் பெரும் ஆயுதங்கள் வாங்குவதற்கான தேவை எங்கே வந்தது என்ற கேள்வியை இங்கிலாந்து ஊடகங்களும் கேட்கின்றன. இத்தகைய ஒப்பந்தம் கொலைகள் செய்வதற்கான கருவிகளை விற்கக்கூடிய கொடூரமான நடைமுறையை முகமூடி போட்டு மறைக்கவும், ஒப்புக்கொள்ள வைக்கவும், அவை வேலைகளை உருவாக்கும் என்றும், நல்ல வர்த்தகத்தை கொடுக்கிறது என்றும் அரசாங்கமும், ஊடகங்களும் கூறுவதாக விமர்சனங்கள் அந்த நாட்டில் எழுந்துள்ளன. ஆனால் இவற்றால் பாதிக்கப்படும் இந்திய நாட்டிலோ, ஊடகங்கள் வாயிலாகவோ, எதிர்க்கட்சிகள் மூலமாகவோ எந்தவொரு கடுமையான விமர்சனங்களும் மக்கள் மன்றத்திற்கு வரவில்லை. இப்போது இந்தியா உலகத்திலேயே தனது பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை பத்தாவது பெரிய பட்ஜெட்டாக உருவாக்கியுள்ளது. இது ஆண்டுதோறும் சீன நாடு செலவழிக்கும் தொகையில் 40% வருகிறது. உலகிலேயே இந்தியா தான் அதிகமான அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு என்று ஸ்டாக் ஹோம் சமாதான ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 2000மாவது ஆண்டுக்குப் பிறகு இந்தியா தனது ஆயுத இறக்குமதியை 240% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பாதுகாப்பு துறைக்கான செலவை 34% உயர்த்தியுள்ளது. இந்தியாவிலிருக்கும் அதிகாரம் படைத்த மேட்டுக்குடி பணக்காரர்களுடைய விருப்பங்களையும், தேவைகளையும் இத்தகைய சாவு வியாபார வர்த்தகம் செய்யும் போது, 80 கோடி இந்தியர்கள் ஒரு நாளுக்கு ரூ.80 வருவாயில், ஆப்பிரிக்க பாலைவனங்களை விட 2 மடங்கு ஏழ்மையில் இருக்கிறார்கள் என்று இங்கிலாந்தின் ஊடகங்களே அம்பலப்படுத்தியுள்ளன. இந்திய அரசு பின்பற்றக்கூடிய நவீன தாராளவாத பொருளாதார திட்டத்தின் விளைவு தான் இத்தகைய சீரழிவு என்பதையும் அவர்கள் கூறுகின்றனர். ஒரு நாட்டின் தெருவில் நடமாடும் சாதாரண மக்கள் தான், அந்த நாட்டின் உண்மையான அடையாளம். அப்படியிருக்கையில் இந்திய நாட்டின் அடையாளம் என்பது ஏழ்மையில் உழலும் மக்கள் தான். அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு ராணுவ முறையில் ஆயுத சேகரிப்பை ஏற்படுத்துவது மற்றும் விளையாட்டுப் போட்டிக்கு கண்டபடி செலவழிப்பது மற்றும் சேர்க்கைக் கோள் திட்டங்களுக்கு பணத்தைக் கொட்டுவது ஆகியவை யாருக்கு நன்மை பயக்கும்? மேற்கண்ட சர்ச்சைகளை உலகத்தின் மௌனமான சாட்சியங்கள் விவாதித்து வருகின்றன. இந்திய நாட்டில் இருக்கின்ற பொதுமக்களும், முன்னோடிகளும், ஆர்வலர்களும், எதிர்கட்சிகளும், இன்னமும் போதுமான அளவிற்கு இத்தகைய பற்றி எரியும் நெருப்பான பிரச்சனையை விவாதிக்காமல் இருப்பது ஏன்? சொரணையற்ற ஒரு வாழ்க்கை இங்கிருக்கும் அறிவுஜீவிகளுக்கு தேவைதானா? நாடாளுமன்றத்தில் இப்போது எழுப்பப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாட்டிலுள்ள ஊழல் விவாதம், உதவாக்கரை வேலைகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிச் செலவழிப்பதை தட்டிக்கேட்குமா? தடுத்து நிறுத்துமா?
Sunday, August 8, 2010
நாகசாகி நாள் : இழப்பீட்டை நிராகரிக்க ஒரு இழப்பீடு மசோதா
1945ம் ஆண்டு ஆகஸ்டு 9ம் நாள் அந்த கொடூரம் நடந்தது. அதாவது 2ம் உலகப் போரில் இறுதி நேரத்தில் அமெரிக்கா, ஜப்பான் நாட்டிலுள்ள நாகசாகி நகரின் மீது அன்று அணுகுண்டை வீசியது. ஹிரோஷிமா நகரின் மீது குட்டிப் பையன் என்ற ஒரு அணுகுண்டை வீசிய 3ம் நாள், நாகசாகி நகரின் மீது, "தடி மனிதன்" என்ற பெயர் கொண்ட அணுகுண்டை நாகசாகி மீது வீசியது. நாகசாகி நகரில் 80,000 பேர் வரை இந்த அணுகுண்டு தாக்குதலில் மரணமடைந்தார்கள். நாகசாகி நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 6வது நாள் அதாவது ஆகஸ்டு 15ம் நாள் ஜப்பான் அரசு, எதிர்தரப்பிடம் சரணடைந்தது. பசிபிக் போர் என்று அழைக்கப்பட்ட 2வது உலகப் போர் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 2ம் நாள் முடிவடைந்தது. ஜப்பான் சரணடைவுக்கான கையெழுத்தை அந்த நாளில் போட்டது. அதனுடன் சேர்ந்த ஜெர்மனி மே 7ம் நாள் ஐரோப்பாவில் போரை நிறுத்தி சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அணு ஆயுதங்களை அனைத்து நாடுகளும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதிலிருந்து ஜப்பான் முன்வைத்து வருகிறது. உலகம் முழுவதும் அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நாடாக கடந்த காலங்களில் அறியப்பட்ட இந்திய அரசு, இப்போது இந்திய நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஒரு மசோதாவை சட்டமாக்குவதற்காக முன்வைத்துள்ளது. சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஒப்பந்தம் என்று கூறப்போனால், 123 அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை கூறலாம். அதாவது இந்தியாவில் இருக்கின்ற அணுசக்தி உற்பத்தியை, ஆக்கத்திற்கான அணுசக்தி என்றும், அழிவிற்கான அணுசக்தி என்றும் பிரிக்கலாம் என்பதாகவும், பிரித்து அதில் ஆக்கத்திற்கான அணுசக்தியை அதிகமாக உற்பத்தி செய்வதற்காக அமெரிக்கா உதவி செய்யும் பொருட்டு உருவாக்கப்படும் ஒப்பந்தம் என்பதாகவும் அது சொல்லப்படுகிறது. உண்மையிலேயே உலகில் இருக்கின்ற எந்த நாட்டிலும் ஆக்கத்திற்கான அணுசக்தி என்பதையும், அழிவிற்கான அணுசக்தி என்பதையும் பிரிக்க முடியுமா? ஆக்கத்திற்கான அணுசக்தி என்பது நாட்டின் தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான அணுசக்தி என்பதாக விளக்கப்படுகிறது. அழிவிற்கான அணுசக்தி என்பது அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான அணுசக்தி என்பதாக விவரிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை இயங்கி வருகின்ற மின்சார உற்பத்திக்கான அணு உலைகள் என்பவை என்ன செய்து கொண்டிருக் கின்றன? மும்பையில் இருக்கும் தாராப்பூர் அணுசக்தி நிலையம் பற்றிய பல்வேறு சர்ச்சைகள் தொடரத்தான் செய்கின்றன. அதே போல சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில் இருக்கின்ற அணுசக்தி நிலையம் பல்வேறு விவாதங்களால் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருக்கின்ற கெய்கா அணுசக்தி நிலையம் தொடங்கப்படுவதற்கு முன்பே அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது கர்நாடக அரசு இருதரப்பு கருத்துக்களையும் விவாதிப்பதற்கான ஒரு பெரிய அளவிலான கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. அதன் பிறகு வழக்கமாக அரசுகள் செய்வது போல, அந்த கெய்கா அணுசக்தி நிலையத்தை கொண்டு வந்தது.இத்தகைய விவாதங்கள் ஏற்கனவே இருந்து வரும் போது, 23 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளத்தில் ஒரு அணுஉலையை ரஷ்யாவின் உதவியுடன் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அப்போதுதான் ரஷ்ய நாட்டில் இருக்கின்ற செர்னோபில் என்ற நகரத்தில் இருந்த அணுஉலை வெடித்து, அதனால் லட்சக்கணக்கான மக்களின் மரணத்தையும், பாதிப்பையும் இந்த உலகம் அதிர்ச்சியுடன் சந்தித்தது. செர்னோபில் நகரத்திலும், சுற்றுவட்டாரத்திலும் இருக்கும் புல், பூண்டுகள், செடி, கொடிகள் போன்ற தாவரங்களும் அதனால் பாதிக்கப்பட்டன. மாடுகள் கறக்கின்ற பாலிலும் அணுக்கதிர்வீச்சு பாதித்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இத்தகைய ஆபத்து வாய்ந்த அணுஉலைகளை, நமது மாநிலத்தில் கொண்டு வந்து இறக்குவதற்கு ரஷ்ய அரசுடன் சேர்ந்து கொண்டு இந்திய அரசும் கைகோர்த்தது. கடலோரத்தில் நிறுவப் படுகின்ற அணுஉலைகளின் கதிர்வீச்சுக்கள் கசிந்து, கடலில் உள்ள மீன்களைப் பாதிக்கும் என்றும், நச்சுத் தன்மை கொண்ட மீன்களை பிடித்து உணவுக்காக தொழில் செய்ய முடியாது என்று உணர்ந்த மீனவ மக்கள், இதை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். ஏற்கனவே கல்பாக்கம் நகரிலுள்ள அணுஉலைகளின் கதிர்வீச்சுக்கள், அருகாமை யிலுள்ள கடலில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. அதனால் மீன்களுக்கும், மீனவர் களுக்கும் பாதிப்பு இருக்கிறது என அவர்களும் போராடி வருகிறார்கள். இந்த நிலையில்தான் கூடங்குளம் அணுஉலைகள் வந்து இறங்கியுள்ளன.கல்பாக்கத்தில் மின் உற்பத்திக்கான அணுஉலைகள் இயங்கத் தொடங்கியதும், அணுவைப் பிளந்து வெளிவரும் சக்திகளில் புளூடோனியம் என்பதை அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட அழிவிற்கான அணுகுண்டு தயாரிப்பிற்கு, ஆக்கத்திற்கான என்று சொல்லப்படும் அணு உலைகள் பயன்படுகின்றன என்று அணு கதிர்வீச்சு எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதை அணுசக்தி துறை மறுத்து வந்தது. கல்பாக்கம் அணு உலையிலும் இதே போல பி.ஆர்.பி. என்ற துறையில் புளூடோனியம் சேமிக்கப்பட்டு, அணுகுண்டு தயாரிப்பிற்கு ஏற்பாடு நடப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டையும், 20 ஆண்டுகளுக்கு முன்னால் அணுசக்தி துறை மறுத்தது. ஆனால் அதுவே இப்போது அம்பலமாகி யுள்ளது. சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் தலைமை அமைச்சர், ஒரு அணுவிசை நீர்மூழ்கி கப்பலை தொடங்கி வைத்தார். உடனடியாக கல்பாக்கத்திலுள்ள அணு விஞ்ஞானிகள், தாங்கள் தான் அதற்கான அணுவிசையை, ரகசியமாக தயாரித்துக் கொடுத்தோம் என்று பெருமை தேடிக் கொண்டனர். இத்தகைய நிலையில் ஆக்கத்திற்கான அணுசக்தியை பிரித்து நிறுத்துவது என்ற அமெரிக்காவின் தந்திரமான செயலை, ஆதரிக்கும் இந்திய அரசின் நிலைப்பாடும் கேள்விக் குறியாகியுள்ளது. சென்னையில் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு நாளன்று, அணு உலைகளை எதிர்க்காமல், அணு ஆயுதங்களை மட்டும் எதிர்ப்பது என்ற சில அறிவுஜீவிகளின் அரங்கு கூட்டமும் கூட, அம்பலப்பட்டுப் போனது. இந்நேரத்தில்தான் இந்திய நாடாளுமன்றத்தில் முன்பு வைக்கப்பட்டுள்ள அணுசக்தி விபத்தை இழப்பீடு மசோதா 2010 என்பது பற்றிய விவாதம் எழுகிறது. இதே போன்ற விபத்து பாதுகாப்பு சட்டங்கள், அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கின்றன. அவை தருகின்ற இழப்பீடு தொகையை விட, இந்திய அரசு முன்வைத்துள்ள மசோதாவிலுள்ள இழப்பீடு தொகை 23 மடங்கு குறைவாக இருக்கிறது. அணுஉலைகள் இயல்பாக இயங்கும் போதே, அதாவது விபத்து ஒன்று நடைபெறாத போதே, அணுக்கதிர்வீச்சு நடக்கத்தான் செய்யும். அந்த கதிர்வீச்சால் பாதிக்கப்படும் மக்களுக்கு அமெரிக்காவில் உள்ள சட்டத்தில் இழப்பீடு தொகை கொடுக்கப்படும். ஆனால் இந்திய மசோதாவில் விபத்து நடைபெறாத காலத்தில் நடக்கும் அணுக்கதிர்வீச்சு பாதிப்புகளுக்கு இழப்பீடு கேட்க முடியாது. அணுகதிர்வீச்சின் விளைவுகளாக தைராய்டு, புற்றுநோய், மல்டிபிள் மைலமோ போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இல்லை என்றோ, ஆமாம் என்றோ அணுசக்தி துறை இங்கே கூற மறுக்கிறது. கதிர்வீச்சால் ஏற்படும் புற்றுநோய் அடையாளம் காணப்பட 10 ஆண்டுகள் காலம் பிடிக்கும். ஆனால் இழப்பீட்டிற்கான இந்திய மசோதாவில், 10 ஆண்டுகளுக்குள் இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்காவிட்டால், இழப்பீடு கிடைக்காது என்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் மூலம் இழப்பீட்டை நிராகரிக்கின்ற ஒரு இழப்பீடு மசோதாதான் இந்திய நாடாளுமன்றம் முன்னால் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இது ஒரு கேலிக் கூத்தாக இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)