Tuesday, September 7, 2010
பஞ்சம் துரத்துமா? துரத்தப்படுமா?
பீகார் மாநிலத்தில் நடந்த காவலர் கடத்தல்கொலைவிடுவிப்பு என்ற மாவோயிஸ்டுகளுக்கும், அரசாங்கத்திற்கும் நடந்த கயிறு இழுக்கும் போட்டியில், கடைசியில் வென்றது மாவோயிஸ்டுகள் என்பதாக ஆகிவிட்டது. அதற்குப்பின்னால் இருக்கும் உண்மைகள் வேறுவிதமாக உள்ளன. வெளியிலிருந்து பார்க்கும் யாருக்குமே மாவோயிஸ்டுகளுக்கு பலத்தச் செல்வாக்கு இருப்பதையும், அரசாங்கத்தால் அவர்களுக்கு எதிராக சாதிக்க முடியவில்லை என்பதையும் காட்டப்படுகிறது. ஆகஸ்ட் 29ம் தேதி மாவோயிஸ்டுகள் ஒரு துப்பாக்கிச் சண்டையில் 7 பீகார் ராணுவ காவல்படை என்ற மத்திய இணை ராணுப்படையினரை கொன்றுவிட்டு, 4 காவலர்களை தூக்கிச்சென்றனர். அபய்யாதவ், ரூபேஷ்குமார் சின்கா, ஈஷான்கான் மற்றும் லூகாஸ்டிட்டே ஆகிய கடத்தப்பட்ட காவல் அதிகாரிகளில், லூகாஸ்டிட்டேயை கொன்றுவிட்டனர். அதன்பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கதறல் காட்சி ஊடகங்களில் காட்டப்பட்டது. அதுவே மாவோயிஸ்டுகளுக்கு ஆதராவாகயிருந்த மக்கள் மத்தியிலும் எதிரொலித்தது. அந்த பிரதிபலிப்பு மாவோயிஸ்டுகளின் படைக்குள்ளும் பாதித்தது என்று ஒரு ஆங்கில அச்சு ஊடகம் வர்ணிக்கிறது. காவலர் ஒருவரின் கொலையையொட்டி, மாவோயிஸ்டுகள் மத்தியில் பிளவு ஏற்பட்டதாகவும், கருத்து மோதல் கருவி மோதலாக மாறியதாகவும் அந்த ஏடு வர்ணித்துள்ளது. கொல்லப்பட்ட லூகாஸ்டெட்டி ஒரு கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பழங்குடியினர் என்றும், அதனால் மாவோயிஸ்டு பழங்குடி படைத் தளபதி பிர்பல்முர்மூ அதை எதிர்த்தார் என்றும் அந்த செய்தி கூறியது. அதற்கு பதிலாக கடத்தப்பட்டுள்ள மற்ற 3 காவலர்களையும் கொன்றுவிட முர்மூ கூறியதாகவும், அதை அந்த பகுதியின் மாவோயிஸ்டுப் படைத் தளபதி அரவிந்த் யாதவ் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது. மாறாக அரவிந்த் யாதவ் என்ற மாவோயிஸ்டு தளபதி அபய் யாதவ் என்ற பிடிப்பட்ட காவலர் உயிரை காப்பாற்றி, விடுதலை செய்ய விரும்பினார் என்றும் அதில் எழுதியுள்ளது. அதையொட்டி கடந்த ஞாயிறு இரவில் காட்டிற்குள் 2 குழுவினருக்கும் மத்தியில், துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கண்டச் செய்தியில் உண்மை இருக்கிறதோ, இல்லையோ ஓரிசா, சத்திஸ்கர், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் தளபதிகளும், போர் வீரர்களும், பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து வளர்ந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். அதேசமயம் பீகார் மாநிலத்திலிருக்கும் மாவோயிஸ்டு தளபதிகள் யாதவர் சமூகத்தையும், கோயரிஸ் சமூகத்தையும் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதாவது வடக்கு பீகாரிலும், சீமாஞ்சல் பகுதியிலும், மத்திய மகத் மற்றும் கைமூர்சோனேபத்ரா பகுதியிலும் அவர்களது செல்வாக்கு விரிந்துள்ளது. அது உத்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு உள்வரை நீண்டு செல்லும் செல்வாக்காகும். ஏற்கனவே மாவோயிஸ்டு படை வரிசையில், பீகார் மாநிலத்தில் 2வது கட்ட தளபதிகளில் யாதவர்களும், பிற பிற்படுத்தப்பட்டோரும் அதிகமாக இருக்கிறார்கள் என்று திபங்கர் பட்டாச்சாரியா கூறியிருந்தார். அதேபோல யாதவர் வாக்குவங்கியை குறிவைத்து, லாலுவும், நிதீஷ்குமாரும் மாவோயிஸ்டுகள் மீது ஒரு மென்மையான அணுகுமுறையை வைத்திருப்பதாக சுவாமிஅக்னிவேஷûம் கூறியிருந்தார். அத்தகைய சூழலில், பீகார் அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் கடத்தப்பட்ட காவலர்களை விடுதலைச் செய்வதில், தடை ஏற்படுத்துவது போல அந்த காடுகளின் எல்லைகளில் முற்றுகையிட்டிருந்தனர். இதனிடையே கடத்தப்பட்ட காவல் அதிகாரி அபய் யாதவின் மனைவியை, அவர்களது கிராமத்தில் சந்தித்த மாவோயிஸ்டுத் தலைவர், ராக்கி கட்டிக்கொண்டு சகோதரரானதும், கடத்தப்பட்ட காவலர்களை விடுதலை செய்வோம் என பேட்டிக் கொடுத்ததும் காட்சி ஊடகங்களில் காட்டப்பட்டன. அதுவே கிராமப்புற மக்கள் மீது, செல்வாக்கு கொண்டவர்கள் யார் என்பதை தெளிவுப்படுத்தியது. கஜ்ராசானன் காடுகளின் எல்லையில் லக்கோ கிராமத்தின் அருகே, பெங்குசராய் மாவட்டத்தில் அரசப்படைகளின் கண்களில் பொடிகளைத் தூவிவிட்டு, மாவோயிஸ்டுகள் கடத்தப்பட்ட காவலர்களை விடுதலைச் செய்தனர். மேற்கண்ட நிகழ்ச்சி மாவோயிஸ்டுகள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியதாகவும், அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்தை ஏற்படுத்தியது. வருகிற சட்டமன்ற தேர்தலில், நவம்பர் மாதத்தில் பீகாரில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மண்டலங்களில், வாக்குகளை பெறுவதற்கு லாலுவும், நிதீஷûம் போட்டிப் போட்டுக் கொண்டிருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. அந்த வட்டாரத்தில் குறிப்பாக சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து, சென்னைக்கு வந்திருந்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர். பினாயக்சென், தனது உரையில் சில செய்திகளை கூறினார். தாங்கள் எந்த விதமான வன்முறையையும் ஆதரிக்கவில்லை என்று கூறிய அந்த மனித உரிமை ஆர்வலர், பொதுச் சொத்துக்கள் மீதான உரிமைகளை பறிப்பதுதான், இன்று உள்ள உணவு பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றார். அதேசமயம் ஒரு புறத்தில் தானியங்களை குவித்து வைத்தலும், இன்னொரு புறத்தில் பஞ்சத்தின் விளிம்பிலிருத்தலும் இந்திய சூழலாகயிருக்கிறது என்கிறார் பினாயக்சென். இந்தியாவில் இருக்கின்ற குழந்தைகளில் பாதிப்பேர் சத்துணவின்றி இருக்கின்றனர் என்று அந்த மருத்துவர் கூறினார். ஐதராபாத்திலுள்ள தேசிய சத்துணவு கண்காணிப்பு மையத்தின் சார்பாக எடுக்கப்பட்ட ஆய்வில், பாடிமாஸ் இன்டக்ஸ் என்ற உடல் எடை அறிகுறி மூலம், குறிப்பாக நிலைமை கண்காணிக்கப்படுகிறது என்று விளக்கினார். 18.5%க்கு கீழ் 37% ஆண்களும், 39% பெண்களும் இருக்கிறார்கள் என்ற கண்டுபிடிப்பை சுட்டிக் காண்பித்தார். அதுவே நாட்டின் கணிசமான மக்கள் தொகை, போதுமான உணவின்றி தவிப்பதை இது வெளிப்படுத்துகிறது. இந்த நாட்டில் உள்ள பழங்குடி மக்களில் 50%ம், தலித் மக்களில் 60%ம் போதுமான உணவு கிடைக்கப்படாமல், வறுமையில் உழல்கின்றனர் என்று மருத்துவர் பினாயக்சென் கூறினார். அதாவது பஞ்சம் நம்முடன் இணைந்து வந்து கொண்டிருக்கிறது என்றார். பட்டினியின் விளிம்பிற்கு செல்லும் இந்தியாவில், உணவுக் கிடங்கில் இருக்கும் தானியங்களை, வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக விநியோகிக்க கூறிய, உச்சநீதிமன்ற உத்தரவை, தலைமை அமைச்சர் எதிர்த்து பேசியிருப்பது இங்கே நடைமுறையாக இருக்கிறது. அரசாங்க கொள்கைகளில், உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என்று மன்மோகன் மிரட்டுகிறார். அதனால் பஞ்சம் நம்மை துரத்துகிறதா? அல்லது பஞ்சத்தை நாம் துரத்தப்போகிறோமா என்பதே கேள்வி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment