சமீப நாட்களில் நாடாளுமன்றத்தில் எதிரி சொத்து மசோதா என்று ஒரு சட்டமுன்வரைவு விவாதத்திற்காக வைக்கப்பட இருந்தது. பிறகு அதன்மேல் கடுமையான அதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் இருப்பதை உணர்ந்த ஆட்சியாளர்கள் அதை நிறுத்தி வைத்தனர். ஊடகங்களில் வந்த இந்த செய்தி சிலரை புருவம் உயர வைத்தது. சிலரை புதிரில் தள்ளியது. சிலருக்கு விளங்கவில்லை என்பதால் அலட்சியப்படுத்த உதவியது. எதிரி சொத்து என்றால் என்ன என்ற கேள்வி நமக்குள் எழவேண்டும். எதிரி சொத்துக்களின் பாதுகாவலன் என்ற பெயரில் நமது இந்திய அரசாங்கத்தில் ஒரு துறை இருக்கிறது. இந்தியாவில் வாழ்ந்து வந்து, பிறகு பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் சென்ற குடிமக்கள், யாரெல்லாம் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு இந்தியாவில் சொத்து இருக்குமானால், அந்த சொத்துக்களை பாதுகாக்க மத்திய அரசின் துறை உதவ வேண்டும் என்பதே. அதுதான் இந்த மேற்குறிப்பிட்ட எதிரி சொத்து பாதுகாப்பு துறையின் வேலை. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நாடாக ஆங்கிலேயனின் ஆதிக்கத்திற்கு கீழ் இருந்தன. அப்போது சில தலைவர்களின் பிரிந்து செல்லும் கோரிக்கையை, ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொண்டதால், இரு நாடுகளும் பிரிக்கப்பட்டன. அப்படி பிரிப்பதை எதிர்த்தும், ஆதரித்தும் சமூக மோதல்கள் ஏற்ப்பட்டன. இரண்டு புறத்திலும் அதிகமான அளவில் உயிர்சேதங்களும், பொருள்சேதங்களும் ஏற்பட்டன. அந்த மோதல்கள் மதமோதல்களாக வெடித்ததால், பாகிஸ்தான் பகுதியில் இருந்த இந்துக்கள் பாதுகாப்பு இன்றி இந்திய பகுதிக்குள் ஓடி வந்தனர். அதில் லால்கிஷன் அத்வானி முதல், குல்தீப்நாயர் வரை கணக்கிடலாம். அதேபோல இந்திய பகுதியில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் பலரும் பாகிஸ்தான் பகுதிக்கு ஓடினர். அதில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பல பணக்கார முஸ்லிம்களை குறிப்பிடலாம். அப்படி ஓடியவர்கள் தங்கள் சொத்துக்களை தூக்கிக்கொண்டோ, விற்றுவிட்டோ ஓடமுடியாது. அவர்களில் பலர் உயிரை காப்பற்றுவதர்க்காக ஓடியவர்கள். அவர்கள் தங்கள் சொத்துக்களை யாரவது உறவினர் வசமோ, அலது நண்பர்கள் வசமோ, ஒப்படைத்துவிட்டுத்தான் ஓடியிருக்கமுடியும். அப்படித்தான் ஓடியிருக்கிறார்கள். அவர்களது சொத்துக்களை பராமரிப்பது சம்பந்தமாகத்தான் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.
அதேபோல காஷ்மீர் பிரச்சனையும் இப்போது இதில் இழுக்கப்படுகிறது. காஷ்மீர் பகுதி ஆங்கிலேயன் ஆட்சியில் சுதந்திரமாக ஒரு இந்து மன்னர் தலைமையிலான ஆட்சியின் கீழ் இருந்தது அதை இந்தியாவுடன் சேர்ப்பதா, அல்லது பாகிஸ்தானுடன் சேர்ப்பதா என்ற இரு நாடுகளின் விருப்பங்களைத்தாண்டி, காஷ்மீர் மக்கள் தனியான சுயாட்சியை விரும்பினார்கள் என்பது வரலாறு. ஆனாலும் அன்று எழுந்த புதிய சூழ்நிலையில், நிபந்தனைகளுடன் இந்தியாவில் காஷ்மீர் இணைக்கப்பட்டது. அப்போது அங்கே இருந்த காஷ்மீர் மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு பகுதி காஷ்மீர் பாகிஸ்தானுடன் சென்று விட்டது. ஒரு பகுதி இந்தியாவுடன் இருக்கிறது. பாகிஸ்தானுடன் சென்று விட்ட பகுதியை காஷ்மீரிகள், ஆசாத்காஷ்மீர் என்று அழைக்கிறார்கள். அதையே இந்திய அரசு, பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கிறது. அதேபோல இந்திய பகுதி காஷ்மீரத்தை இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பாகிஸ்தானில் அழைக்கிறார்கள். அப்படியானால் இந்தியாவிற்கோ, பாகிஸ்தானுக்கோ முழு காஷ்மீரமும் சொந்தமாக இன்றுவரை இருக்கவில்லை என்பது புரியப்படவேண்டும். சாதாரணமாக இந்திய காஷ்மீரத்தில் இருப்பவர்களின் சொந்தங்கள், பாகிஸ்தான் காஷ்மீரத்தில் இருப்பார்கள். அவர்கள் அங்கேயும், இங்கேயும் போய்வருவர். அது இன்றும் நடக்கிறது. அப்படியானால் அந்தப்பக்கம் உள்ளவருக்கு இந்தப்பக்கமும், இந்தப்பக்கம் உள்ளவருக்கு அந்தப்பக்கமும் சொத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அதுவும் தானாகவே புரியப்படவேண்டும். இந்தநிலைதான் இந்தியா பக்கம் இருக்கும் பஞ்சாபிற்கும், பாகிஸ்தான் பக்கம் இருக்கும் பஞ்சாபிற்கும் இருக்கும் என்பதும் விளங்கப்படவேண்டும். சிந்திஇன மக்கள் இருபுறமும் வாழ்கிறார்கள். அகவே அவர்கள் மத்தியிலும் இதுபோன்ற சொத்து பிரச்சனை இருக்கும். இந்த சொத்து பிரச்னையை எப்படி பார்ப்பது என்பதே இப்போது பிரச்சனை.
இவ்வாறு வரலாற்று காரணங்களால் மக்களது சொத்துக்கள் பிரச்சனையாகுமானால், அதை அரசாங்கங்கள் எப்படி பார்க்கவேண்டும்? ஒரு நாட்டு குடிமகனுக்கு, அண்டை நாட்டில் சொத்து இருப்பது இந்த இந்திய--பாகிஸ்தான் விசயத்தில், மக்களது குற்றம் அல்ல. இந்த இரு நாடுகளும் திடீரென பிரிந்தால் அதற்கு மக்கள் என்ன செய்வார்கள்?அவர்களது சொத்துக்கு எப்படி பாதுகாப்பு இல்லாமல் போகலாம்? இரண்டு நாடுகளுமே சொத்துரிமையை அடிப்படை உரிமையாக கொண்ட நாடுகள். அப்படியானால் குடிமக்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது அரசாங்கங்களின் பொறுப்பு அல்லவா? ஆனால் இப்போது அதுவே மத ரீதியாக பார்க்கப்படுகிறது என்றால் எவ்வளவு ஆபத்தானது? பாகிஸ்தானை விட்டுவிடுங்கள்; அதுதான் ஒரு மதச்சார்பு அரசு. இந்தியாதான் மதச்சார்பற்ற நாடு ஆயிற்றே? இங்கே மதம் எப்படி சொத்து விசயத்தில் குறுக்கே வரலாம்? இப்போதுவந்துள்ளது என்பதுதான் இதில் உள்ள சிக்கலே. 1965 இல் நடந்த இந்திய-பாக் போருக்கு பிறகு, இந்த எதிரி சொத்து சட்டம் 1968 இல் அமுல்படுத்தப்பட்டது. எதற்காக இதை எதிரி சொத்து என்று அழைக்கிறார்கள் என்பது நமக்கு புரியவில்லை. பாகிஸ்தான் அரசையே எதிரி அரசு என்று இந்திய அரசு அழைக்க தயாராயில்லை. அப்படி இருக்கும் போது, மக்களது சொத்துக்களை எதிரி சொத்து என்று அழைப்பது எந்த வகையில் நியாயம் என்பதை இந்திய அரசியல்வாதிகளோ, அல்லது ஊடகங்களோ அல்லது இந்திய மக்களோ கேட்டதாக நமக்கு தெரியவில்லை. அடுத்தநாட்டு குடிமக்களின் சொத்து என்று சொல்வதற்கு பதில், எதிரி சொத்து என்று தொடர்ந்து அழைபபார்களானால் அவர்களது பார்வையிலேயே குறை இருக்கிறது என்று பொருள்படாதா?
மேற்கண்ட சட்டம் ஒரு எதிரி சொத்துக்கு, ஒரு பாதுகாவலனை மற்றும் உதவிக்கு ஒன்றோ அல்லது மேற்பட்ட துணை அல்லது உதவி பதுகாவலர்களையோ நியமிக்கும் பொறுப்பை மத்திய அரசிடம் கொடுத்துள்ளது. அது இந்திய பாதுகாப்பு சட்டம்-1962 மற்றும் 1971 இன் கீழ் அனுமதிக்கப்படுகிறது. 1947 க்கு முன்னால், அந்த குடிமக்கள் ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்தவர்கள் என்பதுமட்டுமே நிபந்தனை.1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில், அதை பாதுகாவலராக நியமிக்கப்பட்டவர் கைகளில், இந்திய அரசு ஒப்படைத்தது. அதில் எல்லா அசையா சொத்துக்களும், வங்கி இருப்புகளும், பிராமிசரி நோட்டுக்கள், சந்தைப்பங்குகள், வணிகங்கள் அனைத்தும் சேர்க்கப்படும். இந்திய குடிமக்கள் யாரும் இந்த அறிவிக்கப்பட்ட எதிரி சொத்துக்களில், வாங்க, விற்க, எடுக்க என்று எந்தவகையிலும் அனுமதிக்கப்படமாட்டார்கள். மும்பையில் இதற்க்கான அலுவலகம் செயல்படும். அதன் கிளை கொல்கத்தாவில் செயல்படும். இந்த சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டு வர இப்போது நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி முயன்றது. அதற்குத்தான் பா.ஜ.க. விடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இடதுசாரிகளும், லாலு கட்சியும், முலாயம் கட்சியும், பா.ஜ.க.விற்கு எதிர்ப்பு கொடுத்தனர். அதையொட்டியே அந்த சட்டத்திருத்த முயற்சி தள்ளிவைக்கப்பட்டது. இந்த திருத்தங்களை , ப.சிதம்பரத்தின் உள்துறைதான் கொண்டுவந்தது. அதற்கு எதிரி சொத்துக்கள் சட்ட திருத்தங்கள்- 2010 என்று பெயர். அதை கொண்டுவரவிடாமல் பா.ஜ.க. முயன்றபோது, காங்கிரசு கட்சி அதற்கு ஏன் பணிந்தது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கவேண்டும். அந்த சட்டத்தில் உள்ள விசயங்கள், எந்த ஒரு தனி மனிதனையோ, அல்லது சொத்தின் சொந்தக்காரனையோ, அல்லது அதன் வாரிசுதாரரையோ, பாதிக்க கூடாது என்பதே திருத்தமாக கொடுக்கப்பட இருந்தது. நீதிமன்றமோ, அதற்க்கான அதிகாரமோதான் அதை தீர்மானிக்கவேண்டும் என்றும் அந்த திருத்தம் இருந்தது. அதைத்தான் பா.ஜ.க. எதிர்த்தது . இது மதம் சார்ந்த எதிர்ப்பு என்பதால், உடனடியாக ஒரு அவசரச்சட்டம் கொண்டுவரலாமா என்று திட்டமிடப்பட்டது. அதையும் கடைசி நேரத்தில், பிரதமரும், நிதி அமைச்சரும் தடுத்துவிட்டனர். அதை சட்டமாக ஆக்குவதற்கு, அவசரச்சட்டம் தடையாக இருக்கும் என்று காரணமும் கூறியுள்ளனர். எது எப்படி இருந்தாலும், உலக மக்கள் மீதான, அல்லது அன்றைய ஒன்றுபட்ட இந்திய மக்கள்மீதான, அல்லது உண்மையில் சொத்தின் சொந்தக்கார மக்கள் மீதான ஒரு உரிமை விசயத்தில் மதம் பெயரிலும், கட்சிகள் பெயரிலும் அரசியல்வாதிகள் அனாவசியமாக தலையிட்டு விளையாடுகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. நாமாவது அந்த சட்டத்தை இனியாவது எதிரி சட்டம் என்று அழைக்கக்கூடாது என்று குரல் கொடுப்போமா? .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment