கடவுளாக ராமர்பிரான் வழிபடப்பட்டார். வழிபடப்படுகிறார். வழிபடப்படலாம். ஆனால் அவரை சாதாரண மனிதராக மாற்றுவது என்பது எவ்வளவு கடினம்?. அதை சாதித்து காட்டுபவரை, மாற்று மதக்காரர் என்று கூறுவார்களா? அல்லது அப்படி கடவுளை மனிதராக சித்தரிப்பவரை, மத விரோத ஓவியர் என்று காழ்ப்புணர்வை அவர் மீது கொட்டுவார்களா? அல்லது மத நம்பிக்கைகளை உடைக்கும் தீவிவாதி என்று சட்டத்தின் முன் நிறுத்துவார்களா? அல்லது நாத்திகராக இருப்பதனால்தான், கடவுள் ராமரை, கோடிக்கணக்கான இந்து மத உணர்வுள்ள மக்களின் தெய்வத்தை பழித்துவிட்டார் என்று தூற்றுவார்களா? என்று நமக்கு பெரும் சந்தேகம் எழும்பியுள்ளது. ஏன் என்றால் கடவுள் ராமராக இந்து மத உணர்வாளர்கள் பார்க்கின்ற ஒருவரை, வட இந்திய அரசன் என்றும், தென்னிந்திய அரசனான ராவணனை போரில் சந்தித்து, அந்த போர் கதையை ராமாயணமாக ஆக்கிவிட்டார்கள் என்றும், அது ஒரு காவியமல்ல, அது ஒரு புராணம் அல்ல, வெறும் வரலாறுதான் என்றும் இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த ஜவஹர்லால் நேரு, தனது மகளுக்கு எழுதிய கடிதங்கள் என்ற நூலில் எழுதியுள்ளார்.நேருவை இவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றும் தூற்றினர்.
பாரதிகூட இவர்களது காவியங்களை, புராணங்கள் புரட்டு எனக்கண்டோம், ஆனால் அதில் நல்ல பல கவிதை கண்டோம் என்று கூறினான். அப்படி கூறப்பட்ட கருத்துக்களை எல்லாம் தாண்டி, இந்த மதவாதிகள் ராமரை ஒரு கடவுளாக, அவதாரப்புருஷனாக, அவதரித்த இறைவனாக வர்ணித்துக்கொண்டு வழிபட்டார்களே? அதை வழிபாட்டு உரிமை அவர்களுக்கு உண்டு என்பதால் அவர்கள் மனங்கள் புண்படக்கூடாது என்று பார்த்தோமே? அத்தகைய சகிப்புத்தன்மை இந்துத்துவாவாதிகளுக்கு இல்லையே? அவர்கள் தாங்கள் கடவுளாக கும்பிடும் ஒருவரை, மனிதன் என்று கூறியவர்களை ஏற்க மறுத்தார்களே? இப்போது அடுத்த மத நம்பிக்கைகளுக்கு போட்டி போடுவதற்காக , தங்கள் கடவுளை மனிதனாக மாற்ற தயாராக இருக்கிறார்களே? இவர்கள் யார் என்று மக்களும், நாடும் அடையாளம் கண்டுகொள்ளவேண்டாமா?
இப்போது கடவுள் ராமர் பிறந்த இடம் எது என்று ஒரு உயர்நீதிமன்றமே தீர்ப்பு கூறிவிட்டதே? அதை அழகாக ஒரு ஆங்கில இதழில், அந்தாரா தேவ் சென் என்ற எழுத்தாளர் கட்டுரையாக எழுதியிருக்கிறாரே? அதில் நல்லாதான் கிண்டல் அடிக்கிறார் அவர். கடவுள் ராமரை மனிதனாக ஆக்கிவிட்டார்கள். குழந்தையாக ராமர் பிறந்த இடம் கண்டுபிடித்துவிட்டார்கள். அடுத்து குழந்தை ஏசு போல, குழந்தை ராமரை கொண்டாடவேண்டும். அதற்கு மாயாவதி அரசு ஒரு ரேஷன் அட்டை வழங்கிவிடும். அதற்கு நமது தலைமை அமைச்சர் தொடங்கிவைத்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அந்த ராமர் உத்தர பிரதேசவாசியாக ஆகிவிடுவார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஒரு புதிய பிரபல பிரமுகர் என்று ராமரை அழைக்கத்தொடங்கிவிடுவார்கள்.
அந்த குழந்தை ராமரின் பெயரில்தான், அதன் வழிவந்தவர்கள் ஒரு மசூதியை உடைத்தார்கள் போல இருக்கிறது. ஆயிரக்கானவர்கள் அதற்காக கொல்லப்பட்டார்கள் போலிருக்கிறது. குழந்தை ராமர் இத்தனைக்கும் காரணமாக ஆகிவிட்டாரே? பெரியவர் ஆனபின் ராமர் இதையெல்லாம் அனுமதிக்கவில்லை என்றுதானே இவர்கள் கூறுகிறார்கள். குழந்தை ராமர் இப்படி ஒரு வன்முறை நடந்த இடத்திலேயா பிறந்தார்? ராமர் பிறந்த இடத்தில் எப்படி அவர் வயது வந்தபின் திருமணம் செய்த சீதாபிராட்டியாரின் சமையலறை வந்தது? அதாவது எப்படி சீதையின் சிலையும் அந்த இடத்தில் வைக்கப்பட்டது? என்பதை கட்டுரையாளர் இப்படி கேட்கிறார்.
ஒரே நேரத்தில் ராமர் குழந்தையாகவும், வளர்ந்த ஒரு ஆணாகவும், இருந்திருக்க முடியுமா? ஒரே காலத்தில் பல இடங்களில் வாழ்ந்திருக்க முடியுமா? எல்லாமே முடியும், அவர் ஒரு கடவுளாக இருந்தால். ஆனால் அவர்தான் இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஒரு மனிதனாக ஆக்கப்பட்டு விட்டாரே? என்று கட்டுரையாளர் வினவுகிறார். இது ஒரு ஆபத்தான முன்னுதாரமான தீர்ப்பு என்கிறார் அந்தாரா.
சமீபத்தில் மும்பை நீதிமன்றத்தில் வந்த ஒரு வழக்கில், கடவுளின் கணக்கிற்கு பங்கு சந்தையில் இடமில்லை எனத்தீர்ப்பு கூறியது.ஆனால் அதற்காக வாதாடிய வழக்கறிஞர் எல்லா கடவுள்களுக்கும் பான் அட்டை என்று சொல்லக்கூடிய வருமான வரி செலுத்த ஏதுவான பதிவு அட்டைகள் இருப்பதாகவும், அந்த கடவுள்கள் ஏற்கனவே பங்கு சந்தையில் பங்காளிகளாக இருப்பதாகவும் கூறினார். அந்த அளவுக்கு மனிதர்கள் கடவுள்களை வைத்து வணிகம் செய்யும் காலம் இது. இதில் எந்த அளவுக்கு அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு மாறுபட்டது என்பது நமக்கு புரியவில்லை. சட்டரீதியான மனிதனாக கடவுள் ஆகிவிட்டால், அவரும் நீதி வழங்கலுக்கு உட்பட்டே ஆகவேண்டும். இப்படியாக நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நீதிமன்ற தீர்ப்பால் ராமர் தனது, கடவுள் பலத்தை அதாவது மனிதர்களை உருவாக்கும் பலத்தை இழந்துவிட்டார் என்று இந்த கட்டுரையாளர் கிண்டலடிக்கிறார்.
துளசிதாசர் பதினாறாவது நூற்றாண்டில் கூறியிருந்தபடி, ராமர் பல்வேறு வழிகளில் பிறந்துள்ளார் என்றும், அதனால் பல பத்து லட்சம் ராமாயணங்கள் இருக்கின்றன என்றும் கூறிய சொற்கள், இன்றுடன் இந்த வார நீதிமன்ற தீர்ப்புடன் முடிவுக்கு வந்துவிட்டது, அவர் அதன்மூலம் சிறைப்படுத்தப்பட்டுவிட்டார் என்று நமது தேவ் சென் எழுதியிருக்கிறார். இந்த தீர்ப்பு இந்துத்துவாவாதிகளுக்கு அவர்கள் அங்கே இருந்த மசூதியை உடைத்தது நியாயம்தான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் என்றும் கட்டுரையாளர் வருந்துகிறார். குழந்தை ராமரால் பாவமிந்த நாட்டில் ஒரு அமைதி தவழ்வதை ஏற்படுத்தமுடியாது என்பதால், ஆள்வோர்தான் அதை ஏற்படுத்த வேண்டும் என்று கட்டுரையாளர் முடிக்கிறார். அவரது புரிதல், எதோ ஆளும் கூட்டம் அப்படியொரு அமைதி தீர்வுக்கு விரும்புவதாக இருக்கிறது என்பதை நாம் வருத்தத்தோடு பார்க்க வேண்டிஉள்ளது.
அதேபோல, பிரபல வரலாற்று ஆய்வாளர் ரொமில்லா தாபர், இந்த தீர்ப்பு வரலாற்றை அவமானப்படுத்திவிட்டது என்றும், அதை மத நம்பிக்கைகளை வைத்து நிரப்ப முயற்ச்சித்துள்ளது என்றும் சென்னையிருந்து வெளிவரும் ஒரு பிரபல ஆங்கில நாளிதழில் எழுதியுள்ளார். இது ஒரு அரசியல் தீர்ப்பு என்றும், இதையே இந்திய அரசு பல ஆண்டுகள் முன்பே எடுத்திருக்கலாம் என்றும் எழுதுகிறார் ஒரு முழு கடவுள் அல்லது அரை கடவுள் பிறந்த இடம் என்று அந்த சிறிய இடத்தை அடையாளம் காண்பதும், அதை கொண்டாடுவதற்காக அந்த இடத்தில் ராமர் கோவில் ஒன்றை கட்டவேண்டும் என்றும் இந்த தீர்ப்பு கூறுகிறது என்று அதை வியாக்கியானம் செய்கிறார் அவர்.
இந்திய தொல்லியல்துறையின் ஆய்வு எனபதை மற்ற தொல்லியல் ஆய்வுகள் மறுத்துள்ள போதிலும் அதை ஆதாரமாக இந்த நீதிமன்றம் எடுத்துக்கொண்டுள்ளது என்கிறார் தாப்பர். ஒரு தொழில் சம்பந்தப்பட்ட விசயத்தில், குறிப்பிட்ட தொழிலில் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் கடுமையான வேறுபாடுகள் இருக்குமானால், அதை கவனமாக பரிசீலிக்காமல், ஏதாவது ஒரு குழுவின் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதுதான் தொல்லியல்துறையின் ஆய்வு என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி அந்த வரலாற்று ஆய்வாளரிடமிருந்து எழுப்பட்டுள்ளது.
ஒரு நீதியரசர் தான் வரலாற்று ஆய்வாளர் அல்ல என்றும், வரலாறும், தொல்லியலும் இந்த தீர்ப்பு எழுதுவதற்கு தேவையில்லையெனவும் கூறியுள்ளதை ரொமில்லா கேள்விக்கு உள்ளாக்குகிறார். ஆனால் இந்த இடத்தின் வரலாறு என்பதுதான், அங்கே யாருக்கு இடம் சொந்தம் என்ற கேள்வியையே எழுப்பியுள்ளது என்றும், அங்கே ஒரு கும்பல் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு மசூதியை அரசியல் காரணங்களுக்காக இடித்தார்கள் என்றும், அதற்கு ஒரு சிறு அளவில்கூட இந்த தீர்ப்பில் கண்டனம் தெரிவிக்கப்படவில்லை என்றும் ரொமில்லா தாப்பர் எழுதுகிறார்.
அதுவே தொடர்ந்து இதுபோன்ற வழிபாட்டு தளங்களை இடிப்பதை உற்சாகப்படுத்தாதா என்பது அவரது கேள்வி. இன்றைய அரசியல் தேவைகளுக்காக, நாம் கடந்த காலங்களை மாற்றிவிட முடியாது என்கிறார் அவர். சட்டம் என்பது சாட்சிகளின் அடிப்படையில் முடிவேடுக்கவேண்டுமே ஒழிய, நம்பிக்கைகளின் அடிபப்டையில் முடிவெடுக்க கூடாது என்பதே அவரது வாதம்.
நீதிமன்றங்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் செயல்படும் நிறுவனங்களாக ஆகிவிட்டது என்றால், பிறகு இந்த நாட்டிற்கு எதற்கு ஒரு அரசியல் சட்டமும், அதை அடிப்படையாக கொண்டு நீதிமன்றமும் என்ற கேள்வி எல்லா இந்திய குடிமக்கள் மத்தியிலும் எழும்போதுதான் இதற்க்கான ஒரு உணமையான தீர்வு மக்கள் மன்றம் மூலம் எழமுடியும். அதுவே இந்த நாட்டில் இயங்கும் நீதியற்ற நிறுவங்களை அகற்ற உதவ முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment