Monday, August 1, 2011

வாஷிங்க்டன்னை அசைத்த சென்னை தீர்மானம்.

ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்பது தமிழர்கள் மத்தியில் மிக சாதாரணமாக உலகெங்கும் அறிந்த, அறிவிக்கப்பட்ட பழைய செய்தி. இப்போதுதான் அது தமிழர்களையும் தாண்டி, உலக சமூகத்தில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலும், அனைத்து நாடுகள் மத்தியிலும், அனைத்து ஊடகங்கள் மத்தியிலும் சென்றடைந்துள்ளது. ஒரு சிறிய தீவில் உள்ள சிறுபான்மை தேசிய இனம் மீது, பெரும்பான்மை தேசிய இனத்தை சேர்ந்த ஒரு " அடாவடி குண்டர் படை" தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதும், நிலங்களை ஆக்கிரமிப்பதும், பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதும், சிறுபான்மை தேசிய இனத்திற்கு வேலை வாய்ப்புகளை மறுப்பதும், பகிரங்கமாக இன ஒடுக்கலை தொடர்வதும் செய்யும்போது, அதற்கு பதில் கொடுக்க, சிறுபான்மை தேசிய இனத்தின் இளைஞர்கள் "ஆயுதம்" தாங்கிய போர் மூலம் தங்களது "விடுதலையை" சாதித்துக்கொள்ள எழுவது, உலகம் முழுவதும் நடக்கின்ற ஒரு நிகழ்வுதான். அதுதான் இலங்கை தீவில் வாழும் "ஈழத்தமிழர்" விடுதலைப் போராட்டத்திலும் நிகழ்ந்தது. அந்த "விடுதலைப் போரை" உலக விதிகளின் படி நடத்தாமல், " மனித உரிமை மீறல்களையும், போர் குற்றங்களையும்" இழைத்ததுதான் ராஜபக்சே கும்பல் செய்த குற்றம். "இன ஒடுக்களில்" இருந்து "இன அழிப்புக்கு" பரிணாம வளர்ச்சி பெற்ற ராஜபக்சே கும்பல் இத்தகைய "போர் குற்றங்களை" மிக சாதரணமாக இழைக்கத் தலைப்பட்டார். அதனால்தான் இத்தகைய "உலக சமூகத்தின்" கண்டித்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை இனமான " தமிழினத்தின்" மீது நடத்தப்பட்ட வன்முறைகளும், ஒடுக்குதல்களும், அறுபது ஆண்டுகளாக நடந்து வந்த போதும், அதை உலக சமூகத்தின் மத்தியில் தொடர்ந்து பல "தமிழ் அறிஞர்களும், ஈழதேசத்தின் மனித உரிமை ஆர்வலர்களும்" எடுத்துசென்ற போதும், உலகம் அதற்காக செவி சாய்த்ததாக தெரியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை அரசுடன் அதாவது இலங்கை சிங்கள அரசுடன் ஒரு உரசல் வந்த காலத்தில், இலங்கை சிங்கள அரசை தன் பக்கம் சாய வைப்பதற்காக, அன்றைய இந்திய அரசை ஆண்டுவந்த இந்திரா காந்தி, ஒரு "ஈழத்தமிழருக்கு" செவ்வி கொடுத்து, "தமிழீழம்" மலர்வதற்கான பரப்புரைக்கு உதவுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார். அதையொட்டி நடந்த இலங்கை இனக் கலவரத்தில் தமிழர்கள் அதிகமாக படுகொலை செய்யப்படுவதை,காரணமாக வைத்து, "ஈழத் தமிழர் இளைஞர்களுக்கு" ஆயுதப் பயிற்சி கொடுத்து, ஆயுதங்களும் அளித்த இந்திரா காந்தி, "ஈழத் தமிழர்கள்" மீதான அடக்குமுறைகளையோ, "தமிழின விடுதலை" என்ற செய்தியை , உலக சமூகம் மத்தியில் கவனமாக கொண்டுசெல்லவில்லை.அதுதான் இந்திராகாந்தி செய்த "தந்திரம்"


இவாறு தொடர்ந்து "ஈழத் தமிழர்" இனம் ஏமாற்றப் பட்டு வந்தது. அந்த நேரத்திலும் உண்மையாக ஈழத் தமிழருக்காக அவர்களது போர்படையான "விடுதலைப் புலிகளுக்காக" .ஆயுத உதவியும், நிதி உதவியும், பாதுகாப்பும், ஆறுதல்களும், ஆக்கபூர்வமான மன உறுதியும் கொடுத்து யார் என்று பார்த்தால், அது அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மட்டுமே என்பது புரிய முடியும். அந்த எம்.ஜி.ஆர். இன் வாரிசாக தமிழக அரசியலில் இறங்கியுள்ள செல்வி.ஜெயலலிதா, ஈழத் தமிழர்களின் உரிமை சம்பந்தப்பட்ட விசயங்களில், கருணாநிதி எடுத்த முடிவுகளுக்கு எதிராக தனது காய்களை நகர்த்தினார். ஈழத் தமிழர்களின் போர்ப்படையாக உண்மையில் வெற்றி பெற்று திகழ்ந்த "விடுதலைப் புலிகளின்" படைக்கு எதிராகவே கருணாநிதி தனது ஒவ்வொரு செயல்களையும் செய்து வந்தார் என்பது கண்கூடு. அதற்கு போதுமான அளவு :மத்திய உளவு நிறுவனமான" டில்லியில் இருந்து இயக்கப்படும் "ரா" அமைப்பின் ஆலோசனைகளும், ஆதரவும் இருந்து வந்தது. " கம்பும் உடையாமல், குதிரைக்கும் நோகாமல்" தனது வண்டி ஒட்டுதலை கருணாநிதி செய்துவந்தார்.அதாவது "ஈழத் தமிழருக்கு ஆதரவு கொடுப்பது போல ஒருபுறம் காட்டுவதும், டில்லிக்கு சொன்னபடி கேட்பதும்" என்பதாக தனது அரசியல் பாதையை அமைத்துக்கொண்டார். "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்ற பழமொழிக்கு பொருத்தமானவராக கருணாநிதி இருந்துவந்தார்.


இப்போது இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகு, புதிய ஒரு நிலைமையை "தமிழக சட்டப்பேரவை" ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய ஒரு சூழலை ஏற்படுத்தியவர் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா.அதாவது "நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை" காலத்தில், அதிமுக தலைவர் செல்வி.ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வாக," தமிழீழம் விடுதலை"பெறவேண்டும் என்று கூறியிருந்தார். அது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அடியாழம் வரை சென்றடைந்தது என்றாலும், அந்த தேர்தல் "ஈழத் தமிழர் பிரச்னையை" நிபந்தனையாக கொள்ளவில்லை என்பதும், அத்தகைய தந்திரத்தில் கருணாநிதி தற்காலிகமாக வென்றுவிட்டார்" என்பதும் அன்றைய நடப்புகள். ஆனால் நிலைமை அப்படியே இருந்துவிடவில்லை. சட்டமன்ற தேர்தல் வந்தது. அந்த நேரத்தில் "ராஜபக்சேவின் போர்குற்றங்களை உலகறியச்செய்யும்" காரியங்கள் நிறைவேறி வந்தன. சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. ஐ.நா. பொதுச்செயலாளர் ஏற்படுத்தியிருந்த "நிபுணர் குழு" தனது அறிககையை வெளியிட்டது. அதில் "ராஜபக்சே கும்பல் போர்குற்றங்கள் புரிந்ததை" பட்டியலிட்டிருந்தது. அதை படித்த இன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அன்றே அதற்கான " அனைத்து நாட்டளவு விசாரணை" நடத்தப்படவேண்டும் என்று அறிவித்தார்.

அத்தகைய அறிவிப்பு உலகத் தமிழர் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தியது.. ஏன் என்றால் அதுவரை செல்வி.ஜெயலலிதா பற்றி,,அவர் "ஈழத் தமிழருக்கு எதிரானவர் என்றும், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானவர்" என்றும் திமுக தரப்பு "பொய்யுரைகளை" எங்கணும் விதைத்து இருந்தது. இதேபோலத்தான் எம்ஜீஆரை திமுக தரப்பு," மலையாளி" என்று பரப்புரை செய்து அவரை "தமிழர் விரோதி" எனச் சித்தரித்து வந்தது. இது வழமையாக கருணாநிதி செய்துவரும் தந்திரம். மற்றவர்களை அதாவது தனக்கு எதிராக அரசியல் அரங்கில் "வெற்றி பெற்றவர்களை" எல்லாம் "தமிழர் விரோதிகள்" என்று முத்திரை குத்தி ஒரு "அக்மார்க்" பதிவை செய்த்குவிடுவார் கருணாநிதி. அதன்மூலம் "தமிழர்களுக்கு தான் மட்டுமே" தலைவர் என்பதாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறார். எம்.ஜிஆர் விடுதலைப் புலிகளுக்கு செய்த உதவிகள் மூலம் அந்த மாயத்தோற்றம் ஈழத் த்யமிழர்கள் மத்தியில் உடைந்துவிட்டது.


இப்போது மீண்டும் ஜெயலிதா எதிர்ப்பு என்பதிலும் "தமிழர்" அடையாளத்தை திசை திருப்பி விடும் கருணாநிதியின் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றிருந்தது.அந்த நேரத்தில்தான் இந்த ஜெயலலிதா அறிவிப்பு தேர்தல் நடந்த பிற்பாடு எவ்ளிவன்தது. அதைப்பற்றி கூறும்போது கவிஞர் காசி அனந்தன் " வாக்கெடுப்புக்கு பிறகு ஜெயலலிதா ராஜபக்சே கும்ப்பலை போற்குற்றங்களுகாக அனைத்து நாடளவில் விசாரணை" செய்யவேண்டும் எனக் கூறுவது சிறப்பானது என்றார். அதை அடுத்து சேனல் நாலு வெளிப்படுத்திய " இலங்கையில் கொலைக்களம் " என்ற ஆவணப்படம் ஆளும் அதிமுக தலைமை உட்பட உலகத் தமிழர்களை உலுக்கி விட்டது. அதன் விளைவாக, வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளன்று, ஜெயா டி.வி.காண நேர்காணலில், அதிமுக தலைவி ஒரு செய்தியை சொல்லியிருந்தார். அதாவது "போர்க்குற்றவாளி ராஜபக்சேவை அனைத்து நாட்டு விசாரணைக்கு" உட்படுத்தவேண்டும்" என்பதே அந்த கோரிக்கை. அந்த முழக்கம் டில்லியில் அதிகாரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையையும், தலைமை அமைச்சர் அலுவலகத்தையும் அதிகமாக தாக்கம் செலுத்தியது.

இந்தியா இலங்கை போரில், "தமிழர் இன அழிப்பில்" முக்கிய பங்கு வகித்தது என்பது உலகம் அறிந்த ஒரு செய்தியாக இருக்கிறது. அதிலும் போர்குற்றங்கள் செய்த ராஜபக்சேவிற்கு எதிராக உலக நாடுகள், "ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்" பிரச்னையை எழுப்பிய போது, இந்திய ரசுதான் மகிந்தாவை பிணையில் எடுத்தது என்பதும் உலகறிந்த உணமையாக இருக்கிறது. அப்படி சூழலில், தமிழகத்தில் வெற்றி பெற்ற செல்வி.ஜெயலலிதா, எம்ஜீஆர் எப்படி டில்லியின் காய் நகர்த்தலுக்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முடிவுகளை செய்தாரோ அதே போல, ஜெயலலிதாவும், டில்லி தனது வலியுறுத்தல்களை எழுப்பும்போதே, ஈழத் தமிழருக்கு ஆதரவான காரியங்களை செய்யத் தொடங்கினார். வாக்கெடுப்பு நடந்த உடனேயும்,, வாக்கு எண்ணிக்கை முடிந்த உடனேயும் தமிழக முதல்வராக பொறுப்பெடுக்க இருந்த செல்வி.ஜெயலலிதா, தனக்கே உரிய முறையில் "ராஜபக்சே கும்பலுக்கு எதிராக அனைஹ்து நாட்டு விசாரணை" நடத்த வலியுறுத்தியதை டில்லி ரசிக்க வில்லை. விரும்பவில்லை. அதை சட்டமன்ற தீர்மானமாக நிறைவேற்ற கூடாதே என்று பல முயற்சிகள் மூலம் டில்லி "தடைகளை" ஏற்படுத்தியது.

அனைத்தயும் கேள்விப்பட்ட ஜெயலலிதா தனது நிலைப்பாட்டில்,உறுதியாக இருந்துகொண்டே, "தமிழினத்திற்கு" ஆதரவான ஒரு தீர்மானத்தை மன்றத்தில் கொணர முடிவு செய்தார். ஆனால் அதை உணர்ந்துகொண்டால் டில்லி அதை தடுக்க பல வேலைகளை செய்யும் என்று அவருக்கு தெரியும். ஆகவே "ஆளுநர் உரையில்கூட" அத்தகைய தீர்மானம் வருவதற்கான சுவடை காட்டவில்லை. அது பல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு வியப்பாகவும், கோபமாகவும் மாறியது. சிலர் கொந்தளித்தார்கள். சிலர் தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் போது அது பற்றி பேசத் தலைப்பட்டனர். ஆனால் செல்வி.ஜெயலலிதா ஒரு காரியத்தை எடுத்தால் தான் இணங்கும்வரை அதிலிருந்து மாறமாட்டார் என்ற உண்மை அவர்களுக்கு புரியவில்லை. மற்ற அரசியல்வாதிகளைப் போல அவரையும் நினைத்து அவர்கள் உரலை இடித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென ஆளும் கட்சியின் தோழமைக் கட்சிகளே வியக்கும் வண்ணம், ஒருநாள் காலை ஒன்பது மணிக்கு தங்கள் இருக்கைகளில் "முதல்வர் முன்மொழியும் தனித் தீர்மானமாக "இலங்கையின் போர்குற்றங்களை ஐ.நா. சபை விசாரிக்க மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், அதற்காக பொருளாதார் தடைமூலம் நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும்" ஒரு அறிக்கை வைக்கப்பட்டுள்ளது கண்டு உள்ளப்ப்பேருவகை கொண்டனர். அந்த தீர்மானம் ஏகமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல எல்லோருடைய அதிர்ச்சிக்கு மறுநாளே, இன்னொரு தீர்மானம் வந்தது. அது" கச்சத்தீவு மீட்டெடுப்பு" தீர்மானம். இப்படி டில்லியின் அதிர்ச்சிக்கு வழிவகுக்கும் இரண்டு தீர்மானங்களையும் தனகளது கூட்டணி கட்சிகளுக்கே சொல்லாமல் திடீரென கொண்டுவந்து அனைத்து உறுப்பினர்களின் பேருவகையுடன் நிறைவேற்றிய செல்வி.ஜெயலலிதா அதன்மூலம் தான்" தமிழர்களுக்காக நிற்கும் உணமையான தமிழச்சி" என்று நிரூபித்து விட்டார்.


மேற்கண்ட தீர்மானம் உலகத்தமிழர் மத்தியில் அவரது மரியாதையை உயர்த்தியது. நாடு கடந்த தமிழீழ அரசாங்க தலைமை அமைச்சர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நியு யார்க்கில் இருந்து அளித்த தனது அறிக்கையில், செல்வி.ஜெயலலிதாதான் தனைகளுக்கு "தமிழீழம்" பெற்றுத்தர ஒரே நம்பிக்கை என்று கூறும் அளவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.இதுவே அமெரிக்க அரசாங்கத்தை ஆட்டியது. அதனால்தான் இந்தியாவிற்கு வருகை புரியும்போது, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னை வருவதும், முதல்வரை சந்திப்பதும் நிகழ்ந்தன.அப்போதும், ஹிலாரி ஜெயலலிதாவிடம் "இந்திய அரசு தெற்கு ஆசியாவில் நடக்கும் விவகாரங்களுக்கு தலைமை ஏற்கவேண்டும்" என்று கூற,, முதல்வரோ "நீங்கள் இலங்கை போர்குற்றங்களை விசாரிக்க அனைத்து நாட்டு நிர்ப்பந்தத்தை" ஏற்படுத்துங்கள் என்று பதில் கூறினார்.

அதவே அடுத்த இரண்டாவது நாள், அமெரிக்க நாடாளுமன்றம் முன் வைப்பதற்காக " இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க அதன்மூலம் போர்குற்ற விசாரணையை ஏற்படுத்த" ஒரு தீர்மானம் முக்கிய குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க முயற்சி, முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானத்தின் எதிரொலிதான் எண்பதை உலக சமூகம் புரியத்தொடங்கி விட்டது. இப்போது உலகத் தமிழர்கள் மத்தியில் ஜெயலலிதாதான் "தனகளுகான ஒரே நம்பிக்கை" எனபது நிற்கிறது. இதன்மூலம் "சென்னை தீர்மானம் வாஷிங்க்டனை நிர்ப்பந்த்தித்துள்ளது" என்பதும் வெள்ளிடை மலையாக புரிந்துவிட்டது.

3 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.

ராஜ நடராஜன் said...

முந்தைய பதிவின் பின்னூட்டமிட்டுவிட்டு இந்த பதிவைப் படித்தேன்.கருணாநிதியின் முந்தைய ஈழத்தமிழர்களின் நிலை பற்றி நீங்கள் ஓரப்பார்வை பார்ப்பதாகவே படுகிறது.இலங்கை சென்ற இந்திய ராணுவ த்லைமையை வரவேற்க கூட செல்லாத முதல் மந்திரியாகத்தான் கருணாநிதி இருந்தார்.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்பா பாடும் பாடகனாகத்தான் கருணாநிதி இருந்தார்.திசை திரும்பிப் போன காலங்கள் ஸ்பெக்டரம் வெளி வராத காலகட்டங்களும் 2 மணி நேர உண்ணாவிரதமும்,மழை நின்று விட்டது தூவானம் விடவில்லையென்ற வசனகர்த்தாவாக மாறியதும்,குரல் கொடுக்காதே ராஜபக்சே அடிப்பான் என்ற கிழட்டு பயந்தாங்கொள்ளித்தன காலங்கள் எனலாம். அதே போல் ஜெயலலிதாவும் புதிதாய் பிறந்த மகாத்மியே இப்போது.விடுதலைப்புலிகள் காலத்து ஜெயலலிதா ஊரறிந்த உண்மை.தானே படுத்துகிட்ட தி.மு.க யானையை குழி தோண்டி புதைக்க உபயோகிக்கும் கருவியாய் ஈழமாக தீர்மானங்களா அல்லது மனித அவலங்களைக் கண்டு மனம் திருந்திய புது மனுசியாக தமிழீழத்தைப் பெறுவதற்கான தூண்டுகோலாக சரித்திரத்தில் மாறுவாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தற்போதைய நிலையில் தமிழக அகதிகளைக் கண்டுக்காத கருணாநிதியை விட ஓய்வூதியம் அவர்களுக்கும் சேரும் என்ற ஜெயலலிதாவின் நல்லெண்ணங்களை வரவேற்கிறேன்.

ராஜ நடராஜன் said...

முந்தைய பதிவின் பின்னூட்டம் உங்கள் பதிவில் இணையவில்லையென நினைக்கின்றேன்.காரணம் வேர்ட் வெரிபிகேசனை வைத்துள்ளதைக் கவனிக்க தவறி விட்டேன்.சொல்லிய வார்த்தைகளை மீண்டுமொரு முறை கோர்க்க இயலவில்லை.

நான் முன்பே ஒரு முறை வேர்ட் வெரிபிகேசனை நீக்குங்கள் என்று சொல்லியிருந்தேன்.உங்கள் தளத்தில் லாக் இன் செய்த அக்கவுண்டில்
Design...> Settings...> Comments...> Show word verification for comments? என்பது Yes என்பதை No என்ற வட்டத்தில் க்ளிக் செய்து Save Settings என்ற பட்டனை அழுத்தினால் போதும்.இனிமேல் பின்னுட்டமிடுபவர்களுக்கு எளிதாக இருக்கும்.நன்றி.

Post a Comment