Thursday, October 20, 2011

மாற்றத்திற்கான செய்தியாளர்கள் பட்டினி போரில் சுவையானவை...

நடந்து வரும் கோயம்பேடு மூவர் உயிர் காக்கும் தொடர் பட்டினி போரில் 28 ஆம் நாள் அதை நடத்திய மாற்றத்திற்கான செய்தியாளர்கள், அழைத்ததன் பேரில் வந்தவர்கள் பல சுவையான செய்திகளை விட்டு சென்றனர்.காலையில் 11 மணிக்கு தோழர் ஆர்.நல்லகான்னு, பேராசிரியர் சரஸ்வதி போன்றோர் வந்துவிட,ஒரு ஆர்ப்பாட்டத்தை முன் வாசலில் சாலையை ஒட்டி நடத்த ஏற்பாட்டாளர் ஜீவசகாப்தன் ஏற்பாடு செய்தார். ஆர்ப்பாட்டத்தை தோழர் நல்லகண்ணு தலைமை ஏற்று நடத்தினார்.அதை அடுத்து செங்கொடி படத்திற்கு மாலை அனுவித்து, பேரா.சரஸ்வதி அந்த படம் அருகே "குத்துவிளக்கு" ஏற்றிவைத்தார். அப்போது மக்கள் மன்றம் மஹேஷ், ஜெசி ஆகியோர் உடன் இறந்தனர் அவர்களுடன் மக்கள் மன்றத்தை சேர்ந்த பாலு, நாத்திகன், மகேந்திரவர்மா ஆகியோரும் வந்திருந்தனர்.

தொடர் பட்டினி போர் ஏற்பாட்டாளர்களான செல்வராஜ், ராஜ்குமார் பழனிசாமி ஆகியோரும் வந்துவிட்டனர். ஊடகவியலாளர்களான எழில், உமா, ரெஜி, சீ தமிழ் செய்தி ஆசிரியர் ஜெயக்குமார், மார்க்சிய பெரியாரிய கட்சியின் தமிழேந்தி, உழைக்கும் பத்திர்கையாளர் சங்க தலைவர் சகாயராஜ், டாக்டர் ரவீந்திரநாத், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோரும் வந்திருந்தனர். தோழர் நல்லகண்ணு தலைமை உரை நிகழ்த்தினார். அதில் சிறைக்குள் அவர் இருந்த காலத்திய நிலையையும், மரண தண்டனை கைதிகள் நிலையையும்,பாலன் போன்றோர் மீது பொய்வழக்கு போடப்பட்ட நிலையையும், எடுத்து சொன்னார். 1999 ஆம் ஆண்டே சோனியா காந்தி அன்றைய தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தை சுட்டி காட்டினார்.

அதில் தன் கணவன் இறந்ததால் தாங்கள் படும் துயரை இப்போது ராஜீவ் கொலையில் மரணதண்டனையை எதிர்கொள்ளும் "நால்வரும்" மரணம் அடைவதன் மூலம் அவர்களது குடும்பங்களும் அடையக்கூடாது என்று எழுதியுள்ளதை நல்லகண்ணு சுட்டி பேசினார். தானும் தனது குழந்தைகளும் அதை விரும்பவில்லை என்று சோனியா எழுதியிருந்தார். நளினியின் பெண் குழந்தை ஒன்று இருப்பதால் நளினிக்கு மரண தண்டனை என்பதை தாங்கள் விரும்பவேயில்லை என்று சோனியா எழுதியிருந்ததையும் படித்து காண்பித்தார்.தோழர் நல்லகண்ணுவின் முழு உரையை மறுநாள் "ஜனசக்தி" ஏடு அப்படியே பதிப்பித்துள்ளது. அடுத்து பேரா.சரஸ்வதி பட்டினி போரை துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்தினார். அதில் ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றமே தடா வழக்குக்கு அது பொருந்தாது என்றும், தனி நபர் மீதான பழிவாங்கும் கொலைதான் அது என்றும், கூறியுள்ளதை சுட்டி காட்டி, தடாவில் எடுக்கப்பட்ட சித்திரவதை மூலமான வாக்குமூலங்களை வைத்து கொடுக்கப்பட்ட தீர்ப்பு எப்படி பொருந்தும் என்று கேள்வி எழுப்பினார்.

அடுத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் சகாயம் பேசினார். அவரும் தங்கள் சங்கத்தின் முழு ஆதரவையும் மூன்று தமிழர் உயிர் காக்க தருகிறோம் என்றார். அவர் பணியாற்றும் தமிழன் தொலைக்காட்சியினரும் வ்ந்திருந்து படப்பிடிப்பு நடத்தினர்.அதேபோல மக்கள் டி.வி., இமயம் டி.வி. ஆகியோரும் வந்திருந்து படம் எடுத்து வெளியிட்டனர். அடுத்து பேசிய டி.எஸ்.எஸ்.மணி, செப்டம்பர் கடைசியில் வெளிவந்த "ஓபன்" என்ற் ஆங்கில வார ஏட்டில் வந்துள்ள கட்டுரைகளை சுட்டி காட்டி பேசினார். அதில் ராஜீவ் கொலையை விசாரிக்க ஜெயின் ஆணையத்தால் கூறப்பட்ட சீ.பி.அய். ஏற்படுத்திய எம்.டி.எம்.சீ. என்ற பல்முனை கட்டுப்பாடு கண்காணிப்பு ஆணையம் இன்னமும் தனது விசாரணையை நடத்தி கொண்டு இருக்கிறது என்ற உண்மையை போட்டு உடைத்தார். ராஜீவ் கொலை விசாரணையே இன்னமும் முடிவடையாத நிலையில் எப்படி மூவருக்கு தூக்கு போடலாம் என்ற கேள்வியை முன்வைத்தார்.

தமிழ் ஊடகங்களில் வராத அத்தகைய செய்திகளை அந்த ஆங்கில ஏடு வெளியிட்டுள்ளதை சுட்டி காட்டி, விசாரணையில் சித்திரவதை செய்ததை விசாரணை அதிகாரி மோகன்ராஜ் ஒப்புக்கொண்டுள்ளதையும், அதை மறுத்து,புத்தகத்தில் பொய் எழுதிய கார்திகேயனையும் மோகன்ராஜ் அமபலப்படுத்தியுள்ளதையும் அந்த ஏடு வெளியிட்டிருந்தது. ராஜீவ் கொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை என்று ஒரு "ரா" அதிகாரி சொன்னதையும், கொலை நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட "காணொளியை" எம்.கே.நாராயணன் மறைத்து விட்டதையும் விசாரணை தலைமை அதிகாரி ரகோத்தமன் சொன்னதை அந்த ஆங்கில ஏடு அம்பலப்படுத்தி இருந்தது. அதை அவர் சுட்டி காட்டினார்.


செய்தியாளர் நிகழ்ச்சிக்கு "நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ" ஏட்டின் தலைமை செய்தி ஆசிரியர் பாபு ஜெயக்குமார் வந்திருந்தார். தமிழ்நியுஸ் நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் ராஜன் வந்து கலந்துகொண்டு பேசினார்.தேசியதலைவர் அய்யா பிரபாகரனுக்கு இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு முன்னாள் பிரதமரை கொலை செய்தால் அது தங்கள் இயக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரியாதா?அபப்டி செய்வாரா? என்று பகுத்தறிவு கேள்வி ஒன்றை எடுத்து வைத்தார். மதியம் சிறிது நேரம் மின்வெட்டு அமைதியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் நாத்திகன் தனது செங்கொடி பற்றிய பாடலை பாடினார்.வந்திருந்தவர்கள் உள்ளே வைத்திருக்கும் ஓவியர்களின் கைவண்ணத்தில் வரையப்பட்ட "தூக்கு தண்டனை எதிர்ப்பு ஓவியங்களை" கண்டு உளம் நெகிழ்ந்தனர்.


மாலை வரும் முன்பே சீ.பி.அய்.யின் சீ.மகேந்திரன் வந்தார். அவருடன் திருமலை வந்தார்.விடுதலை சிறுத்தைகள் தலைவர்தொல்.திருமாவளவன் வந்தார்.அவருடன் வன்னிய அரசு உட்பட பல சிறுத்தைகள் வந்தனர். இயக்குனர் கவுதமன், இதழியல் மற்றும் திரைப்பட இயக்குனர் ரேவதி, ஜென்னி, சதீஷ், உயிர்மை துணை ஆசிரியர் அமர், பெ.தி.க. அண்ணாமலை, டி.லட்சுமணன், கணேசன், ஆகியோரும் வந்திருந்தனர். மகேந்திரன் பேசும்போது "சீ.பி.அய். கட்சியும் ஒரு நாள் முழுவதும் இந்த பட்டினி போரை நடத்த முடிவு செய்துள்ளது" என்றார். அதேபோல திருமாவளவன் பேசும்போதும், விடுதலை சிறுத்தைகளும் ஒரு நாள் முழுவதும் இந்த பட்டினி போரை நடத்தும் என்றார். இடத்தை தந்து உதவும் முன்னாள் திருச்சி எம்.எல்.ஏ. கே.சொந்தரராஜன் பேசினார்.


அவரது பேச்சில் ஒரு செய்தியை கூறினார்.தனது உறவுக்காரர் ஒருவர் நீதியரசராக இருந்தவர் கூறிய செடிதியை கூறினார். அவர் "வழக்கு திட்டமிட்டு சதி செய்து மாற்றி அமைக்கப்பட்டது" என்று ஆதாரத்துடன் கூறியதை கூறினார். அதாவது ராஜீவ் கொலை வழக்கை நடத்திய நீதியரசர் சித்திக் சரிவர மாட்டார் என அவரை கார்த்திகேயன் மாற்றினார். நவநீதனை நீதியரசராக போட்டனர். அவரும் 26 பேருக்கு தூக்கு போடவேண்டுமா? என்று கேட்டபோது, நீங்கள் ஒரு பெண் தட்டச்சு உதவியாளரை மானபங்கம் செய்ததாக கூறி உள்ளே தள்ளிவிடுவோம் என மிரட்டி கார்த்திகேயன் தீர்ப்பு எழுத வைத்தார் என்று அமபலப்படுத்தினார். அதன்பிறகு பேசிய தியாகு பல வெளிநாட்டு விசயங்களை கூறி அதிகநேரம் பேசினார்.

தமிழா, தமிழா பாண்டியன் எப்படி தமிழ் ஊடகங்கள் ஈழத்தமிழருக்கு எதிராக செயலப்டுகின்றன என்று விளக்கினார். பெண்ணிய எழுத்தாளர் ஓவியா பேசினார். அவர் டில்லியில் ஒரு கருத்தரங்கில் பேசிய சிங்கள பெண்,தங்களுக்கு மட்டுமான நாடாக இலங்கையை விளக்கி பேசியதை சுட்டி காட்டினார். இன்னமும் சிங்களர்கள் அங்குள்ள தமிழர்களை தங்கள் குடிகளாக ஏற்றுக் கொள்ளவில்லை எனபதை சுட்டி காட்டினார். அதிலிருந்தே "தமிழீழம் மட்டுமே" தீர்வு எனபதை புரிய முடிந்தது. இடையில் மாலை நேரத்தில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்வாசலில் நின்று நடத்த ஜீவசாக்ப்தன் ஏற்பாடு செய்தார். அது திருமாவளவன் தலைமையில் சிறிது நேரம் முழக்கங்களாக நடத்தப்பட்டது.அதன்பிறகு பேசிய அ.மார்க்ஸ், வாய்ப்பை பயன்படுத்தி பல பழைய செய்திகளை கூறி ஜெயலலிதாவை நிறைய திட்டி பேசினார்.அவருக்கு அரசுக்கு எதிராக ஒரு புரட்சியை நடத்திய திருப்தி கிடைத்திருக்கும். அதன்பிறகு விடுதலை ராஜேந்திரன் வழக்கம் போல முறையான சில வாதங்கள் மூலம் மரண தண்டனை யாருக்கும் இருக்க கூடாது என்று வலியுறுத்தினார்.நியாயமாகவே தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தை பர்ராட்டினார். அதன்பிறகு நிறைவாக திருமாவளவன் பேசினார்.தமிழீழத்தை ஆதரிப்பவர்கள் மத்தியிலும், விடுதலை புலிகளை ஆதரிப்பவர்கள் மத்தியிலும் இருக்கின்ற முரண்பாடுகளை எதற்காக வெளியே சொல்லி நம்மை நாமே பலவீனப்படுத்த வேண்டும் என வினவினார்.

அவர் கூறியதில் ஆளுநர் ரோசையாவை சந்தித்தபோது, சட்டமன்ற தீர்மானத்தை ஏன் நீங்கள் அமைச்சரவை தீர்மானம் போல எடுத்து கொண்டு மரண தண்டனையை ரத்து செய்ய கூடாது என கேட்டதையும், அதற்கு ஆளுநர் முதல்வர் அப்படி தனக்கு எழுதினால் தான் "கவனிப்பதாக" கூறியதையும் எடுத்து சொன்னார். அது புதிய தெம்பை ஏற்படுத்தியது.ஊடகங்கள் ஒற்றுமையை ஏற்படுத்த உதவ வேண்டும் என்றார் அவர்.மொத்தத்தில் இளம் செய்தியாளர்களின் ஏற்பாடு சிறப்பாக நிறைவுற்றது.

No comments:

Post a Comment