Sunday, June 17, 2012

நில அபகரிப்புக்கு எதிராக : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


நில அபகரிப்புக்கு எதிரான தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழி போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் தேசமெங்கும், கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைத்தீவில், தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரத்து நிற்கின்ற சிறிலங்கா இராணுவத்தினர், தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை திட்டமிட்ட வகையில் அபகரித்து வருகின்றமை, சமீபத்திய காலங்களில் தீவிரமடைந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள், இத்தகைய நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கஙை நடாத்த இருப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, தமிழர் வாழும் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்களை, சமாந்திரமாக முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் மீதான, இனவாதிகளின் அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னாரில் இடம்பெற்றிருந்த சாத்விகவழியிலான போராட்டத்திற்கு வலுவூட்ட தமிழர்கள் வாழும் தேசமெங்கும், தோழமையோடு சர்வத வழிபாட்டு விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் தொடர்சியாக தமிழர் தாயகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நில அபகரிப்பு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு சமாந்திரமாக, இப்போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்கின்றது.

தமிழர் வாழும் தேசம் யாவும், நமது புதிய போர்களம் என்ற அடிப்படையில், உலகந்தழுவியரீதியில், தாயக மக்களுக்கு எமது தோழமையுணர்வினைத் தெரிவிப்பதோடு, தாயகத் தமிழர்களின் போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்ல, உலகத் தமிழர்களின் போராட்டங்கள் வழிகோலுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment