இன்று காலை சிவகங்கை மாவட்ட ஓரியூர் தேவாலயத்தில் வெள்ளிவிழாவில் "சாதி மோதல்" என்று செய்தி வந்தது. உள்ளபடியே ஏழு மாதங்களுக்கு முன்பு, "குரு படிப்பு" முடித்த மாணவனான " ஓடைக்கால் அந்தோணிராஜ்" குரு பட்டம் கொடுக்கப்படாமல் தடுக்கப்பட்டது, சாதி உணர்வால் தானே என்ற சர்ச்சை எழுந்தது. அந்த அந்தோணிராஜ் சமூகமான தேவேந்திர குல வேளாளர்கள் எனும் தலித் கிருத்துவர்கள் இது பற்றி ஆயர் வகையராக்களிடம் பேசி, பேசி சோர்ந்து விட்டனர். இன்று தேவாலய வெள்ளிவிழா.
அதற்கு பூசை வைக்க ஆயர் சூசை மாணிக்கம் வந்தார். அவர் உடையார் சமூகத்தை சேர்ந்தவர். அதே சமூக கிருத்துவர்கள்தான் சாதி தடையை ஏற்படுத்துகிறவர்கள். இன்று பதினேழு ஆயர்களில், ஏழு ஆயர்கள் மதுரை பேராயர் உட்பட வந்திருந்தார்கள். பத்து மணிக்கு பூசை தொடங்கும்போது, தலித் கிருத்துவர்கள், எழுந்து எங்கள் பிரச்சனையை முடித்து விட்டு பூசை நடத்துங்கள் என்றனர். ஆண்களும், பெண்களும் தலித் கிருத்துவர்கள் எழுந்தது கண்டு, வெறி பிடித்த உடையார் வாலிபர்கள் சிலர் தேவேந்திர சமூக மாணிக்கம் என்ற அஞ்சல் துறை பணியாளரை மேடையிலேயே .தாக்கினர். மாணிக்கம் இப்போது அரசு மருத்துவனையில் திருவாடனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேவாலயத்திற்குள் பத்து மணி முதல் பன்னிரண்டு மணி வரை இந்த மோதல் நடந்தது. பல பொருட்கள், ரேடியோ செட் உட்பட உடைந்தது. ஒரு வாரம் முன்பு தேவகோட்டையில் "தலித் கிருத்துவ எழுச்சி மாநாடு" நடந்தது. முன்னூறு பேர்வரை பங்கு கொண்டனர். இது நல்ல எழுச்சி என்று மக்கள் பேசுகிறார்கள். குரு அந்தோணிராஜ் சிறப்புரை நிகழ்த்தினார். அவரது "உழைக்கும் மக்கள் உரிமை இயக்கம்" இந்த உரிமை குரலை எழுப்புவதில் முதன்மையாக நின்றது.
அந்த இயக்கத்தை சேர்ந்த ஆறாவயல் கருப்பையா கூறும்போது, இன்று காலை வெள்ளிவிழா நிகழ்வுக்கு தேவாலயத்திற்குள் சென்று அமர்ந்திருந்த கிருத்துவ தேவேந்திரர்கள், "ஏழு மாதமாக் பேசி முடிக்காத பிரச்சனையை முதலில் பேசி முடியுங்கள். பிறகு பூசை நடத்தலாம்" என்றுதான் கூறினார்கள்.என்றார். முன்வரிசையில் அமர்ந்திருந்த தலித் பெண் ஆர்வலர் சந்தானமேரி, எங்கள் ஓடைக்கால் அந்தோணிராஜ் ஏன் குரு பட்டம் தரப்படாமல் மறுக்கப்படுகிறான் என்று நாங்களும் ஏழு மாதங்களாக பேச்சுவார்த்தை மூலம் கேட்டு வருகிறோம், எந்த முடிவும் வரவில்லை என்றார்.
இதேபோல ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேவேந்திரா பையனுக்கு குரு பட்டத்திற்கு படித்து முடித்த பின்பும், குரு பட்டம் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை வந்தது என்றார். அந்த வட்டாரத்தில் உடையார் சமூகம் தான் அதிகமாக கதோலிக் கிருத்துவர்களாக உள்ளனர். அந்த சமூகத்தை சேர்ந்த "ஆயர்" இப்போது உள்ளார். அவர்தான் தங்களுக்கு எதிராக இருப்பதாக தலித் மக்கள் குற்றம் சொல்கின்றனர். மதுரை பேராயர் விழாவிற்கு வந்திருந்தார். அவர் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர் என்று தலித் கிருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஏற்கனவே அந்த தேவகோட்டை வட்டாரத்தில் இன்றைய நிகழ்வில் தலித்களால் குற்றம் சாட்டப்படும் உடையார் சமூகம், தொடர்ந்து கள்ளர் சமூகத்தார் தங்களையும் அடக்குவதாக குற்றம் சாட்டி வருவது வாடிக்கை. தேவகோட்டையில் திமுக இளைஞர் தலைவரான உடையார் சமூகத்தை சேர்ந்த ரூசோ, படுகொலை நடந்த போது, அதை எதிர்த்து உடையார் சமூகத்துடன் கைகோர்த்து தேவேந்திரா சமூக மக்களும், ஆதி திராவிட சமூக மக்களும் இனைந்து செயல்பட்டனர். ஆனால இன்று உடையர சமூகத்தில் உள்ள பெரூம்பான்மையினர் தலித்களுடன் நல்லுறவில் இருந்தாலும், சில ஆதிக்க மனோபாவம் உள்ளவர்கள் மட்டும் தேவேந்திர சமூகத்தின் மீது வழமையான "சாதி இந்து" மனோபாவத்துடன் பார்க்கிறார்கள். அப்படி எழுந்தான் இந்த பிரச்சனையும்.இந்த மோதலுக்கு பின் திருவாடனையில் உள்ள கள்ளர், மறவர் வகுப்பினரை அந்த ஆதிக்கவாதிகள் அணுகியதாகவும், அவர்கள் "இது உங்கள் தேவாலயத்திற்குள் உள்ள பிரச்சனை. நாங்கள் வரமுடியாது" என்று கூறி விட்டனர் என்றும், அவர்களும் இறங்கியிருந்தால் டைல்த்களுக்கும், சாதி இந்துக்களுக்கும் என்று பிரச்சனையை திசை திருப்பி இருப்பார்கள் என்றும் நம்மிடம் பேசிய கத்தோலிக்க பாதிரியார் கூறினார்.
சர்ச்சைக்கு உள்ளான குரு படிப்பு மாணவன் அந்தோணிராஜ் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு "புதிய சட்டை, வேட்டி" கூட நண்பர்கள் உதவியுடன்தான் பெற முடிந்தவ்ர்.அவர் கேட்கிறார்,"என்னிடம் என்ன குறை உள்ளது என்று கூறுங்கள்.நானா ஏன் குரு பொறுப்புக்கு தகுதி இல்லாதவனாக ஆகிறேன்". இந்த கேள்விக்கு யார் பதில் சொல்வது? "சாதி" என்ற கொடிய நோய் கத்தோலிக்க திருச்சபைக்குள் ஆட்டி படைக்கிறது என்று ஒப்புக் கொள்ள எத்தனை பேர் தயார்?
No comments:
Post a Comment