இலங்கையில் அதிபர் மைதிரிபாலா சிறிசேனா இன்று "நாடாளுமன்ற கலைப்பை" அறிவிக்கிறார், ஆகஸ்டில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த இருக்கிறார்கள்.அப்படியானால் "சிங்களர்கள்,தமிழர்கள்" என அனைவரின் வாக்குகளும் வேண்டும் என்று என்னவேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட பார்வை சிங்கள அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக மைதிரிபாலா சிறிசெனாவிற்கு இருப்பதாகத் தெரியவில்லை.ஏன் என்றால்,மைதிரிபாலா சிறிசேனா, முதலில் சிங்களத் தலைவரான " ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான,கட்சியுடன்"கூட்டணி வைத்துக் கொண்டு, "அதிபர் தேர்தலை"சந்தித்தார்.ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கே, மஹிந்த ராஜபக்சேவை எதிர்த்து அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டு "தோல்வி"கண்டவர்.
மஹிந்த ராஜபக்சே ரணிலை வெல்லும்போது, அவர் "சிறிலங்கா சுதந்திரக் கட்சி"யின் வேட்பாளர்.அதே "சிறிலங்கா சுதந்திரக் கட்சி"யை சேர்ந்தவர்தான், மைதிரிபாலா சிறிசெனாவும், சந்திரிகா குமாரதுங்காவும். .மகிந்தாவை வேட்பாளராக முதலில் நிறுத்தியதே,சந்திரிகா குமாரதுங்காதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, மகிந்தா தனது சகோதரர்களான கோத்தபாயே,பசில் ஆகியோருடன் சேர்ந்துகொண்டு, ஆட்சியை தங்களது குடும்ப சொத்தாக மாற்றி, "சிறிலங்கா சுதந்திரக் கட்சியை" கைப்பற்றிவிட்டார்.ஓரங்கட்டப்பட்ட சந்திரிகா,அரசியலில் பல ஆண்டுகள் அமைதியாக ஆனார். அவருக்கு இந்திய அரசின் "மென்மையான நட்பு" உண்டு.ஆட்சிக்கு வந்த மகிந்தா "சீன அரசுடன்" நெருக்க உறவை வைத்துக் கொண்டு தங்களது பெருமையை தென்னிலங்கையின் சிங்களவர் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். .
இலங்கை அரசின் தலைமை "சீன அரசுடன்"நல்லுறவு வைத்துக்கொள்வது என்பது இலங்கையின் வரலாற்றில் "புதிய ஒரு செய்தியல்ல". ஏன் என்றால் சந்திரிகாவின் "தாயாரான திருமதி பண்டாரநாயகா" சீன அரசுடன் நல்லுறவு கொண்டிருந்தார்.மேற்கத்திய நாடுகளுக்குத்தான் "சிங்கள அரசு" நெருக்கமின்றியே இருந்துவந்தது.அதனால் மகிந்தா எடுத்த நிலைப்பாடு தென்னிலங்கை சிங்களவர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதும் புதிய எதிர்பாராத செய்தியல்ல.மஹிந்தா தனது "மேற்கத்திய எதிர்ப்பு" என்ற முழக்கத்தை வைத்துக் கொண்டே தென்னிலங்கையிலும்,உலக அரங்கிலும் தனது "பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரிலான தமிழின எதிர்ப்பை" நியாயப்படுத்த முடிந்தது.அதுவே ஐ.நா.மனித உரிமை கழகத்தில்,அமெரிக்கா கொண்டுவந்த "இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை" என்பதை "மேற்கு நாடுகளுக்கு எதிரான சீனா,ரஷிய,கியூபா,பாகிஸ்தான்" போன்றவற்றின் ஆதரவை பெற முடிந்தது.
ஆகவே மகிந்தா எதிர்ப்பில் அரசியல் நடத்தும் "ரணில் விக்கிரமசிங்கேவிற்கு , அமெரிக்கா அதரவு" கொடுப்பதும் ஆச்சரியமான செய்தியல்ல.உலக சமூகத்தில் தனிமைப்படுத்தி இலங்கையை கொண்டுவந்தது மகிந்தா குடும்ப ஆட்சியால்தான் என்ற உணர்வே, சிங்களர் மத்தியில், சிறிசேனா மகிந்தா அமைச்சரவையிலிருந்து வெளியே வந்து, "ரணிலுடன் சேர்ந்துகொண்டு அதிபர் தேர்தலில் மகிந்தாவை தோற்கடித்ததை" செயலாக்கியது.ஆனால் அதே "சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சந்திரிகாவும்" சேர்ந்துகொண்டு, ரணில் பேசும் "அதிபர் அதிகாரத்தை குறைத்து, பிரதமர் அதிகாரத்தை அதிகப்படுத்தும்" தந்திரத்தை,மைதிரிபாலவை ஏற்கச் செய்துவிட்டார்கள். அதுவே "மகிந்தாவின் அதிகாரக் குவிததலை" இறக்கி "அமெரிக்காவும், இந்திய அரசும் பேசும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை"நிறுவ உதவும் என்றும், அதனால் மகிந்தா மீண்டும் வர இயலாது என்றும் வாஷிங்கடனும், டில்லியும் "மனப்பால்" குடித்தன.
ஆனால் மகிந்தாவிற்கு ஆதரவாக "சிங்கள தேசம் என்ற இன உணர்வு" வேலை செய்கிறது. அது எப்போதுமே "தமிழர் தேசத்தை" கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பேருக்கு வேண்டுமானால் "பசப்பு"காட்டலாம்.அப்படிப்பட்ட "சிங்களம்" "சிறிலங்கா சுதந்திரக்கட்சியில்" பெரிய அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. இரு தேசங்கள் இருக்கின்றன என்பதையும், "இரு தேசிய இன உணர்வுகள்தான் மக்கள் மத்தியில் இருக்கிறது" என்ற உண்மை நிலைமையையும் காணத்தவறியவர்களால் இந்த "சிக்கலான இடமாற்ற அரசியலை"புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் சிங்கள அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படி, "மைத்திரிபால சிறிசேனா இன்று மகிந்தாவுடன்"சமரசத்திற்கு வந்து,"சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்" தான் "தனிமைப்பட்டுவிடக் கூடாது"என்பதற்காக ஒரு புதிய ஏற்பாட்டுக்கு வந்துவிட்டார்.அதுதான் "ரணிலை கைவிட்டுவிட்டு, மகிந்தாவுடன் இணைந்துகொள்வது".
இப்போது நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டார்.தேர்தலை அறிவித்து விட்டார்.மகிந்தாவுடன் சமரசம் செய்துகொண்டு, "மைதிரிபாலா அதிபராகவும், வருகிற தேர்தல மூலம் மகிந்தா பிரதமாராகவும்"ஆட்சியில் அமரப்போகிரார்கள்.அதனால் சிங்களத்தை பொறுத்தவரை, "தமிழர்களின் வாக்குகள், அதிபர் தேர்தலுக்கு தேவை", ஆனால் "நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையில்லை". இப்போது புரிகிறதா? தமிழன் அங்குள்ள "தேர்தல் முறையில்கூட " சிங்களவனுடன் சேர்ந்துவாழ முடியாது.