Thursday, July 7, 2016

சுவாதி படுகொலையும், படிப்பினைகளும்.

சுவாதி  படுகொலையும், படிப்பினைகளும்.
------------------------------------------------------------------
சுவாதி படுகொலையில், இரண்டு மையங்களைச் சுற்றி, விவாதங்கள் சூடேறி வருகின்றன. முதலில் கொலை நடந்த அதிர்ச்சியை ஒட்டுமொத்த சமூகமும் வெளிப்படுத்தியது. தமிழ்சமூகமே ஒரே குரலில், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில், படுகொலையைப்பார்த்துக்கொண்டு இருந்த பொதுசனத்தை திட்டித்தீர்த்தது. குற்றம் செய்தவனை ஒரு படமாவது மொபைலில் யாராவது எடுத்திருக்கக்கூடாதா? இரண்டு மணி நேரம் கொலையான பெண்ணை இப்படியா பிளாட்பாரத்தில் போட்டுவிடுவது? யாருமே காவல்துறைக்கோ, ஆம்புலன்சுக்கோ சொல்லுயிருக க்க்கூடாதா? என்றெல்லாம் எல்லோரும் கோப்ப்பட்டார்கள்.

அதன்பின் ஒரு நடிகர் தனது " சமூக வலைத்தளம்" மூலம் இதை " பார்ப்பனப்பெண் கொலை" என்பதாகவும், முஸ்லீம் இளைஞர் ஒருவரின் பெயரைச்சொல்லி பிரச்னையை " மதச்சாயம" கொடுத்து திசை திருப்பி விட்டார்.உடனே எல்லோரும் அதன் மீது விவாத்த்தை கட்டமைத்தார்கள். அப்படி திசை திருப்பியது தவறு எனக்காணும்போது, அதன் மீது விவாதம் செய்து கொண்டே போனால், அதுவும்கூட, " திசை திருப்பலுக்கு" உரமிடுவதாக் ஆகாதா?  அந்த தேரத்தில் யாரும் அதை நினைத்துப்பார்க்கவில்லை என இருக்கலாம்.அடுத்து அந்த " திசை திருப்பப்பட்ட விவாத்த்தை" வலுப்படுத்த, அடுத்த நடிகர், அதை அடுத்து ஒரு அரசியல்வாதி எனபபுறப்பட்டனர்.

   அந்த நேரத்தில் காவல்துறை, " குற்றம் சாட்டப்படட்டவர"  என ராம்குமாரை அவரது சொந்த ஊரில் கைது செய்தது. உடனே மீண்டும் அவரது " சாதி" என்ற ஒன்று விவாதமானது. பலியானவரோ, குற்றம் சாட்டப்பட்டவரோ " தனி நபர்கள்". அவர்களது சாதி எப்படி விவாதிக்கப்படலாம்? இப்படிக் கேள்வி கேட்பவர்கள் " குரல்" அழுத்தப்பட்டு, சாதி விவாதம் அதிகமாக " சமூக வலைத்தளங்களும்" அதற்கு சோறு போட்டது. எல்லா சாதியிலும், எல்லா மத்த்திலும் " நல்லது" செய்யறவனும் இருப்பான், "கெட்டது" செய்ப்வனும் இருப்பான்."தவறு செய்துவிட்டு, அதை வருந்தி திருந்துபவனும்" இருப்பான். இது வழக்குக்கு, வழக்கு வேறுபடும். அப்படி இருக்கையில் ஒரு ஆண்-பெண் விவகாரத்தில் நடந்த வன்முறையை, கொலையை, "சாதி" என்ற  சம்பந்தமில்லாத "வட்டத்திற்குள்" ஏன் இழுத்துச் செல்கிறீர்கள்? "மதம்" என்ற "வட்டத்திற்குள்" ஏன் கொண்டுசெல்ல முயல்கிறீர்கள்? இந்த கேள்வியை  ஒட்டுமொத்த சமூகமும் எழுந்து "சப்தம்போட்டு" கேட்க வேண்டும். 

       நுங்கம்பாக்கம் ரயில் நிலைய படுகொலையைப் போல ஒரு இரண்டாண்டுகளுக்கு முன்பு,சென்னையிலேயே  "பிராடவே பேருந்து நிறுத்தத்தில் " நடந்தது நினைவிருக்கும். அங்கும் இதேபோல இளம் ஆண், இளம் பெண் பிரச்னை ஆண் அந்தப் பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டு, அந்தப் பெண்ணின் "கழுத்தை" அறுத்திருக்கிறான். அதை அடுத்து தன்னைத்தானே  வெளியே வந்து "கத்தியால்" குத்திக்கொண்டு சாகிறான். இவையெல்லாம் எதைக் காட்டுகிறது?  குறிப்பிட்ட ஆண்கள், தாங்கள் விரும்பியதை, அதாவது விரும்பிய பெண்ணை அடையமுடியாவிட்டால், அந்தப் பெண்ணின் உயிரை எடுப்பது என்ற எண்ணத்தைத் தானே காட்டுகிறது ? அதற்கு என்ன பொருள்? குறிப்பிட்ட பெண் தனது "உடைமை" என்ற எண்ணம் தானே?  இந்த உடைமைச் சிந்தனை எங்கிருந்து வந்தது? இந்த சமூகம் "தனிச் சொத்துரிமைச் சமூகம்" என்பதால் மட்டும்தானா? ஆணுக்கு, பெண் அடிமை என்ற சிந்தனையும் சேர்ந்துதான் இந்த  உடைமை சிந்தனை, "ஆணுக்கு, பெண் உடைமை" என்று வந்திருக்கிறது? இன்றைய "உலகமயமாக்கல்" சூழலில், ஒவ்வொரு இளைஞனும் "உயர் தொழில் நுட்பத்தில்" மூழ்கி விடுகிறான். சமூகத்துடன் அவனது "தொடர்புகள்" அந்நியமாகிக் கொண்டே போகிறது. சொந்தமக்களுடன், சொந்த கிராமத்துடன், சுற்றுச் சூழலுடன் அவனது நெருக்கங்கள் விலகி, "லாபம்" "பணம்" என்ற பேராசை வளர்ந்து, முழுக்க, முழுக்க, "உயர் தொழில் நுட்பம்" சார்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். அதில் அவனது "ஆணாதிக்க, பெண்களை உடைமையாக" நினைக்கின்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இது ஒரு "பாலினப் பிரச்னை" 

     "பாலினப் பிரச்னை", எப்போதுமே "பாலியல் பிரச்னையை" தனக்கு கீழே வைத்துக் கொள்ளும். நாம் பல நேரங்களில், "பாலியல் பிரச்னை" [பற்றி அதிகம் விவாதிக்கிறோம். பாலியல் வன்முறைகள், பெண்கள் மீதான வன்முறைகள் போன்றவை தொடர்ந்து "விவாதப் பொருளாக" ஆகின்றது. ஆனால் அதற்கு அடிப்படையாக, அல்லது தலைமை தங்குவதாக இந்தப் "பாலினப் பிரச்சனை" இருக்கிறது.பெண்களை இரண்டாம் தரக்குடிகளாக பார்க்கும் பார்வை அது. பெண் பாலினத்தை அடிமையாக, அல்லது, பொருளாக, அல்லது பண்டமாக, மொத்தத்தில்,"உடைமையாகப்" பார்க்கும் "பார்வை" இருக்கிறது.  இதுதான் இத்தகைய "வன்முறைகளுக்கு" வித்திடுகிறது. 

      அடுத்து வருவது, அமைதியாக, அல்லது "மவுனமாக" பார்வையாளர்களாக ஆகிவிட்ட நமது சமூகம். அத்தகைய வன்முறை நடக்கும் போது, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டுமல்ல, "பிராடவே" பேருந்து நிலையத்திலும், சனம் "மவுனமாக" பார்வையாளர்ர்களாக, "சவமாக" இருந்துள்ளனர். இந்த சனத்தை  
  என்ன சொல்ல?    "பாதகம் செய்வோரைக் கண்டால், பயம் கொள்ளல் ஆகாது" என்று பாரதியாரின் வரிகளை, கடற்கரையில், எதிர்ப்பு கொடுத்தவர்கள்," பதாகை யில்" எழுதியிருந்தனர். 

      இதையேதான் பி.யு.சி.எல். தனது சென்னை மாவட்ட குழுவின் கூட்டத்திலும், விவாதித்தது. எல்லா விதமான விவாதங்களும், "இப்படி நடந்திருக்குமா?", "அப்படி நடந்திருக்குமா?" என்ற விவாதங்கள் எல்லாமே, "சாதி, மதம்" என்ற விவாதங்கள் எல்லாமே, கடைசியில் "பாலினப் 

Tuesday, July 5, 2016

சாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேரா’ -: பாகம் 2 செவ்வாய், 5 ஜூலை 2016

சாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேரா’ - டி.எஸ்.எஸ்.மணி: பாகம் 2

செவ்வாய், 5 ஜூலை 2016

டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல்பாரி உட்பட 40 கிராமங்கள் இருக்கும் சிலிகுரி வட்டத்தில், சிலிகுரி நகரில், மஹானந்த பரா சாலையில் தனது வீடான 25ஆம் எண் வீட்டில் அமர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 8 கட்டுரைகளை சாரு மஜூம்தார் எழுதுகிறார். அந்தக் கட்டுரைகள் மார்க்சிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதக் கொள்கைகளை முறியடிக்கும் தன்மை தேவை. அவற்றில், ‘இந்தியச் சமூகம் ஒரு அரைக் காலனி, அரை நிலப்பிரபுத்துவத்தன்மை கொண்டது’ என நிரூபிக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியோ, இது ஒரு சுதந்திர நாடு என்றது. அடுத்து இந்தியாவை ஆளும் முதலாளிகளை தரகு முதலாளிகள் என்று விவரிக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியோ, அவர்கள் சுதந்திரமான முதலாளிகள் என்றது. இந்தியா, அரசியல் சுதந்திரம் பெற்ற நாடு. பொருளாதார சுதந்திரத்தைப்பெற போராட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. சாரு மஜும்தாரோ, இந்தியா ஒரு அரைக்காலனி நாடு என்று எழுதுகிறார். இங்கு, மாவோ வழியில் விவசாயப் புரட்சிமூலம் ஆயுதம் தாங்கிய போராட்டம் செய்யவேண்டும் என்று, சாரு அந்த கட்டுரைகளில் எழுதுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியோ, ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கான சூழல் இப்போது இல்லை. ஆகவே, தேர்தல்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றது. மாவோ கூறிய, ‘ஐக்கிய முன்னணி, விவசாயிகள், தொழிலாளர்களைக் கொண்ட ஆயுதப் போராட்டத்துக்கான ஒன்று’ என்று சாரு எழுதுகிறார். மாவோ கூறியபடிதான் தேர்தலில் முதலாளித்துவ கட்சியுடன் ஐக்கிய முன்னணி என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை எதிர்த்து புரட்சிகர மாற்று தத்துவார்த்த நிலைப்பாடுகளை முன்வைத்ததுதான் சாருவின் எட்டுக் கட்டுரைகள். அவைதான் நக்சல்பாரி எழுச்சிக்கு முதுகெலும்பாக அமைந்தன.
1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் திட்டமிட்டபடி, டார்ஜிலிங் மாவட்டக் கட்சியின் மாணவரணி, தோட்டத் தொழிலாளர் அணி, விவசாயிகள் அணி என புரட்சிகர நடவடிக்கைக்கு திரட்டிய தோழர் சாரு மஜூம்தார், வட்டாரத்தின் விவசாய முன்னோடிகளான ஆதிவாசிகள் சமூகத்தைச் சேர்ந்த தோழர் கணுசனயால், ஐங்கல சந்தால் ஆகிய தலைவர்களுடன் இணைந்து அந்த ஆயுதப் பேரெழுச்சியை ஏற்படுத்தினார். அது அங்கிருந்த பெரும் பண்ணையார்களைக் குறிவைத்து, அவர்களது வீடுகளில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி, அவர்களது நிலங்களை மீட்டெடுக்கும் போராட்டமாக அமைந்தது. விவசாயிகளின் ஆயுதப் போராட்டமாக எழுந்தது. இந்திய விவசாயிகள் ஆயுதப் போராட்டத்துக்கு தயாராகத்தான் இருக்கிறார்கள்! என்பதை உலகுக்கு மெய்ப்பித்தது.
உடனடியாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரபூர்வமான ஏடான ‘பெய்ஜிங் ரெவியூ’-வில், நக்சல்பாரியில் வசந்தத்தின் இடிமுழக்கம் என்று கட்டுரை வெளியிட்டு, ‘இந்தியாவில் உள்ள திரிபுவாத கம்யூனிஸ்ட்டுகளை எதிர்த்து, சாரு மஜூம்தார் தலைமையில், நக்சல்பாரியில் ஆயுதப் புரட்சி தொடங்கியது’ என்று பாராட்டி எழுதியது. இதுவே, இந்திய துணைக்கண்டம் எங்கும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு செய்தியாக மாறியது. அனைவருக்கும், சாரு மஜூம்தார் என்ற மையப்புள்ளி அடையாளம் தெரிந்தது. அனைத்து புரட்சிகர சக்திகளும், தோழர் சாரு மஜூம்தாரை நோக்கி ஈர்க்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டு, நிலங்கள் ஏழை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட நக்சல்பாரி கிராமத்தை சுற்றிவளைக்க, அன்றைய மாநில உள்துறை அமைச்சர் ஜோதிபாசு, கிழக்கத்திய எல்லை துப்பாக்கிப் படையை வரவழைத்து, நக்சல்பாரி கிராமத்தில் முதல் பலியாக தோழர் பாபுலால் பிஸ்வகர்மாவை சுட்டுக் கொன்றது. விடுதலைப் பகுதியையும் அரசின் ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவந்தது.
கேரளாவில் வயநாடு, புலப்பள்ளி, தலைச்சேரி காவல் நிலையங்களைத் தாக்கி, ஆயுதங்களை மீட்டு, தோழர்கள் குன்னிக்கல் நாராயணன், அவரது மனைவி தோழர் மந்தாகினி நாராயணன், அவர்களின் மகள் அஜிதா ஆகியோர் பீடித் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, காட்டுக்குள் சென்று ஆயுதப் போராட்டத்துக்கான ஒரு முன்னுதாரணத்தைப் படைக்கிறார்கள். அதேபோல ஆந்திராவில், தோழர் தரிமள நாகிரெட்டி (அப்போது அனந்தப்பூர் சட்டமன்ற உறுப்பினராகி இருந்தார். குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டியின் சகலர்), தோழர் சந்திர புல்லாரெட்டி ஆகியோர் இருந்தனர். மேற்கு வங்கத்தில் மின்வாரியத் தொழிலாளர் சங்கத் தலைவர் அஜித் சென் இருந்தார். இவர்கள் எல்லோருமே வெவ்வேறு கருத்து உள்ளவர்கள். ஆனால், அனைவரும் இந்தியாவுக்கு ஆயுதப்புரட்சி அவசியம் என்ற கருத்தில் உடன்பாடு கொண்டவர்கள்.
அனைவரையும் தோழர் சாரு மஜூம்தார் அழைத்து, ‘அனைத்திந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு’ (ஏ.ஐ.சி.சி.சி.ஆர்.) என்று 1968இல் கூட்டுகிறார். அதில் குன்னிக்கல் நாராயணன் குழுவினர், நேரடியாக காவல் துறையையும், ராணுவத்தையும் தாக்கும் கொரில்லா போராட்டம் என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பே பிரதான முரண்பாடு என்றும் முன்வைக்கிறார்கள். நாகிரெட்டி குழுவினர், தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தேர்தலில் பங்குகொள்வது எனவும், மீதி இடங்களில் ஆயுதப் போராட்டம் என்றும் முன்வைக்கிறார்கள். அஜித் சென் குழுவினர், தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கி போர் என்று முன்வைக்கிறார்கள். ஆனால், தோழர் சாரு மஜூம்தார் முன்வைத்த ‘கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான விவசாயிகளின் ஆயுதப் போராட்டம்’ என்றும், ‘தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும்’ என்றும், ‘நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான முரண்பாடே பிரதான முரண்பாடு’ என்பதும்தான், அந்தக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஏ.ஐ.சி.சி.சி.ஆர். ‘அடுத்த அறுவடை நமக்கே’ என்ற முழக்கத்தை முன்வைக்கிறது. எல்லா மாநிலங்களிலும் விவசாயிகளைத் திரட்டி, ஆயுதபாணியாக்கி, அறுவடையைக் கைப்பற்றுகிறார்கள். அவ்வாறு செய்யும்போது, விவசாயிகள் தாங்களாகவே தங்களுக்கு எதிரான வர்க்க எதிரிகளின் நிலங்களில் அறுவடையை பலாத்காரமாக மீட்டெடுக்க முனையும்போது, தாக்க வருவான் என்ற எதிர்பார்ப்பில், பெரும் நிலவுடைமைவாதிகளை அழித்தொழித்துவிட்டு, அறுவடையைக் கைப்பற்றுகிறார்கள். இது, விவசாயிகள் தாங்களாகவே தங்களது எதிரியை ‘நிர்மூலமாக்க’ எடுத்த செயல்தந்திரம். இதன்மூலம்தான், வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பது என்ற செயல்தந்திரம் அறியப்பட்டது. அதுவே, புரட்சியாளர்களின் அடுத்தகட்ட செயல்பட்டு தந்திரமாக ஆனது.
1969ஆம் ஆண்டு, லெனின் பிறந்தநாளான ஏப்ரல் 22 அன்று, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உதயமாகிறது. தோழர் சாரு மஜூம்தார் அதன் முதல் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் தோற்றத்தை. கல்கத்தா நகரின் ஒரு மாபெரும் வித்தியாசமான கொரில்லா முறையில் அணிதிரட்டி, பேரணிமூலம் பொதுமேடைக்குவந்து, தோழர் கானுசன்யால் மூலம் அறிவிக்கிறார்கள். தோழர் சாரு மஜூம்தார் அப்போதே தலைமறைவாகிவிடுகிறார். கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு, கல்கத்தாவில் ஒரு திருமண விழாவுக்கிடையே மாடியில் ரகசியமாகக் கூடி தனது கொள்கைகளை, செயல் தந்திரத்தை, ‘வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் கொரில்லா போரே தொடக்கப் போர்!’ என்ற வழியை அறிவிக்கிறது. அழித்தொழிப்புப் போர் எங்கணும் தொடங்குகிறது. அதன்மூலம், மக்களுக்கு நம்பிக்கையை வரவழைத்து, மக்கள் திரள் போராட்டங்களை நடத்தும்படி அதில் தோழர் சாரு மஜூம்தார் எழுதுகிறார். அந்த விவரங்களை சவுகரியமாக பிற்காலத்தில் சிலர் மறந்துவிடுகிறார்கள்-மறைத்தும்விடுகிறார்கள்.
நிலங்களைக் கைப்பற்றி, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பிரித்துக்கொடுக்க, கிராமங்களில் புரட்சிகரக் கமிட்டியை ஏற்படுத்த சாரு பணிக்கிறார். கிராமப்புற முன்னோடிகளைக்கொண்ட தொண்டர் படைகளை நிர்வகிக்கச் சொல்லி கட்டளையிடுகிறார். அத்தனையையும் மறைத்துவிட்டு சாருவை விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனாலும் இந்திய ஆளும்வர்க்கமும் நாடும் நடுங்குகிறது. அவர்களும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களை அழித்தொழிப்பு செய்ய முனைகிறார்கள். கேரளாவில் தோழர் வர்கீஸ், ஆந்திராவில் சிறீகாகுளம் விடுதலைப்பகுதிக்கு வித்திட்ட தோழர்கள் சத்தியநாராயணா, ஆதிபத்திய கைலாஸா, சுப்பாராவ் பணிக்கிரஹி, எம்.எல்.நாராயணா, பஞ்சதரி கிருஷ்ணமூர்த்தி, நிர்மலா கிருஷ்ணமூர்த்தி, பஞ்சாபில் புஜாசிங், தமிழ்நாட்டில் தோழர் எல்.அப்பு, மேற்குவங்கத்தில் சரோஜ் தத்தா, காஷ்மீர் புரட்சியாளர்கள் என கைது செய்தபின் சுட்டுக் கொன்றது. சுற்றிவளைத்து தாக்குதலில் விடுதலைப் பகுதிகளை அழித்தது. 1972இல் ஜூலை மாதம் கல்கத்தா நகரில், ஒரு தங்குமிடத்திலிருந்த தோழர் சாரு மஜூம்தாரை, காட்டிக் கொடுத்ததால் கைதுசெய்து, சிறையிலடைத்து அவருக்குத் தேவையான உயிர்வாழ் மருந்துகளைக் கொடுக்காமல் ஜூலை 28ஆம் நாள் அவரது மரணத்துக்கு அரசு காரணமானது. அந்த நாள், இன்றுவரை தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எத்தனை படிப்பினைகளைத் தந்தாலும், நக்சல்பாரி புரட்சிகர எழுச்சி என்பது இந்திய விவசாயிகளின் வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாகத் திகழ்கிறது.

Sunday, July 3, 2016

minnambalam: சாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேரா’ -

சாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேரா’ - டி.எஸ்.எஸ்.மணி

திங்கள், 4 ஜூலை 2016

(படம்: சாரு மஜூம்தார்)
2016ஆம் ஆண்டு, மார்ச் மாதம் நக்சல்பாரி புரட்சியின் 50ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. இந்தியப் புரட்சி வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்றது நக்சல்பாரி எழுச்சி. அதன் சிற்பி தோழர் சாருமஜூம்தாரின் பங்களிப்பை அவரை வெறுப்பவர்களும், விமர்சிப்பவர்களும்கூட ஒப்புக்கொள்கிறார்கள். நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராக 1967, 1968, 1969, 1970, 1971ஆம் ஆண்டுகளில், சிபிஎம் கட்சியின் சார்பாக மேற்குவங்கத்தில் குறிப்பாக, கல்கத்தாவில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி, நக்சல்பாரி புரட்சியாளர்களைக் கொலைசெய்த கவுதம் தேப்கூட ஒரு கட்டத்தில், சாருமஜூம்தாரை ‘இந்தியாவின் சே குவேரா’ என்று வர்ணித்ததாக ‘தி வீக்’ ஆங்கில வார ஏட்டில் கூறியுள்ளார்.
தனது கல்லூரிக் காலங்களில், சிபிஎம் கட்சியின் மாணவர் அணியான எஸ்எஃப்ஐ தலைவராக இருந்த கவுதம் தேப், நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராக அன்றைய காலகட்டத்தில் வெடிகுண்டுகளைத் தயாரித்ததாகவும், கல்லூரி மாடியிலிருந்து குண்டுகளை வீசியதையும், கத்திக் குத்துக்கு உள்ளானதையும் கூறியுள்ளார். ஆனால் அன்றைய 1968, 1969, 1970, 1971ஆம் ஆண்டுகளில், கல்கத்தா நகரில் உள்ள கல்லூரிகள் நக்சல்பாரி கோட்டையாக இருந்த உண்மையைக் கூறவில்லை. அன்றைய தெற்கு கல்கத்தா மாநிலக் கல்லூரி, மத்திய மருத்துவக் கல்லூரி, ஜதாவப்பூர் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்விச் சாலைகளை வரிசையாகக் கொண்டிருந்தது. அந்தக் கல்லூரிகளில் எல்லாம் நக்சல்பாரி புரட்சிகரச் சிந்தனைகளை ஏந்திய மாணவர்களும், மாணவிகளும் நிறைந்திருந்தனர். அப்போது, மேற்குவங்கத்தை ஆண்டுவந்த சிபிஎம் உள்ளடங்கிய பங்களா காங்கிரஸ் கூட்டணியில், 1967இல் ஜோதிபாசு உள்துறை அமைச்சராக இருந்தார். அவர் நக்சல்பாரி புரட்சியாளர்களை அடக்க, மத்திய சிறப்புக் காவல்படையை கொண்டுவந்து கல்கத்தா நகர வீதிகளை வங்காள இளைஞர்களின் இரத்தத்தால் நனைத்தார். அன்று, தெற்கு கல்கத்தாவின் ஒவ்வொரு கல்லூரியையும் தங்கள் வசம் வைத்திருந்த நக்சல்பாரி புரட்சிகரச் சிந்தனையுள்ள மாணவர்கள், ‘மொலோடோவ் காக்டைல்’ என்ற பெட்ரோல் குண்டுவகைகளை, சாலையில் வரும் ராணுவத்துக்கு எதிராக எறிந்தனர். ஒரு பெரும் போர்க் காட்சியை ஏற்படுத்திக் காட்டினர். துணை ராணுவம் பயந்து ஓடியது.
உதாரணமாக, துர்காபூர் பிராந்திய பொறியியல் கல்லூரி விடுதி (ஆர்.ஈ.சி). தோழர் வினோத் மிஸ்ரா அதே கல்லூரி விடுதியில் படித்துவிட்டு, அங்கேயே தலைமறைவுப் பணிகளில் ஈடுபட்டுவந்த காலம். கல்லூரி விடுதிக்கு வந்திருந்த தோழர் வினோத் மிஸ்ரா முன்னிலையிலேயே, காட்டிக்கொடுத்த எஸ்எஃப்ஐ மாணவர்களைக் கொண்டுவந்து, புரட்சிகர மாணவர்கள் நையப் புடைக்கிறார்கள். இந்தச் சம்பவத்தை, எங்களுடன் தமிழ்நாட்டில் தலைமறைவுப் பணிகளில் முழுநேரமாக சென்னை தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றிய எனது நண்பரும், நெல்லை மாவட்டத்துக்காரருமான வினோத் மிஸ்ராவின் வகுப்புத் தோழனான ரவிச்சந்திரன் சொல்லக் கேட்டுள்ளேன். அதற்குப்பிறகு, ரவிச்சந்திரன் சென்னை ஐ.ஐ.டி-யில் தனது விஞ்ஞானி படிப்பை முடித்துவிட்டு, கான்பூர் ஐ.ஐ.டி-யில் போய்ச் சேர்ந்தார். இந்தளவுக்கு கல்கத்தா வீதிகள் புரட்சிகர மாணவர்களின் எழுச்சியில் இருந்தபோது, ‘தேசப்பிரதி’ என்ற நக்சல்பாரி கட்சியின் அதிகாரபூர்வ வார ஏட்டில், அதன் ஆசிரியர் சரோஜ் தத்தா ஒவ்வொரு வாரமும், கடைசிப் பக்கத்தில் தீட்டிய கட்டுரைகள் மாணவர்கள் மத்தியில் பெரும் தீயை உருவாக்கின. அப்படி அந்தக் கட்டுரைகளில் என்ன இருந்தது?
கரம்சந்த் காந்தி, இந்திய சுதந்திரத்துக்கு ஆங்கிலேயருடன் சேர்ந்து எப்படி துரோகமிழைத்தார் என்பதும், 1857ஆம் ஆண்டு நடந்த ‘சிப்பாய் கலகம்’ என்று அழைக்கப்பட்ட ‘முதல் சுதந்திரப் போர்’ என்று கார்ல் மார்க்ஸால் வர்ணிக்கப்பட்ட போரில், ஆங்கிலேயரை எதிர்த்து மங்கல் பாண்டே தலைமை எடுத்தார் என்பதும் இருந்தன. காந்தியாரின் சிலைகளை அகற்றிவிட்டு, மங்கல் பாண்டேக்கு சிலையை நிறுவுங்கள் என்று சரோஜ் தத்தா தீட்டிய கட்டுரைகள் எடுத்துரைத்தன. மாணவர்களும் உடனடியாக செயல்களில் இறங்கினார்கள். கல்கத்தா நகரம் மட்டுமல்ல; இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாணவர்கள் அந்தப் பணியை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்பட்டனர். ஆந்திராவில் ஒவ்வொரு கல்லூரியும் பல்கலைக்கழகமும் வாரங்கல் பிராந்திய பொறியியல் கல்லூரி (ஆர்.ஈ.சி.), ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகம் என ஒவ்வொன்றும் நக்சல்பாரிகள் கோட்டைகளாக மாறின. தமிழ்நாட்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சி.ஐ.டி.பொறியியல் கல்லூரி, நெல்லை மாவட்டத்தின் அனைத்து கலைக்கல்லூரிகள், சென்னை சட்டக் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி என எல்லாமே நக்சல்பாரி புரட்சிகர மாணவர்களின் கோட்டைகளாக அல்லது செல்வாக்கு மண்டலங்களாக உருவானது. எல்லா கல்லூரிகளிலும், மாணவர்கள் கல்கத்தாவிலிருந்து வந்த ‘லிபரேஷன்’ என்ற புரட்சிகர கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில ஏடான ‘விடுதலை’ யை வாங்கிப்படித்து அதில், ‘தேசப்பிரதி’ ஏட்டில் வெளியான தோழர் சரோஜ் தத்தாவின் வங்காளக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு அந்தந்த மாநிலங்களில் பண்பாட்டுப் புரட்சியை நடத்தும்பொருட்டு, காந்தியாரின் சிலைகளை அகற்றத் தொடங்கினர்.
தோழர் சரோஜ் தத்தாவின் அத்தகைய ஆழம்பொதிந்த வரலாற்று உள்ளடக்கங்களைக் கொண்ட வீர வரிகள், இந்திய துணைக்கண்டமெங்கும் பெரும் காட்டுத்தீயை ஏற்படுத்தியதால்தான் சரோஜ் தாத்தாவை கைது செய்தபோது, வங்காள காவல்துறை அவரை அதிகாலையில் கல்கத்தா கடற்கரையோரம் நிறுத்திவைத்து சுட்டுக் கொன்றது. அதை நேரில்பார்த்த சாட்சியாக, வங்க பிரபல திரைப்பட நடிகர் இப்தா (இந்தியன் புபிள்ஸ் தியேட்டர் அசோசியேசன்) வின் தலைவர் உத்பல் தத், வெளியேவந்து கூறியதால் அது உலகுக்குத் தெரிந்தது. இவ்வாறு புரட்சிகர எழுத்துகளுக்கு தூக்கு தண்டனை கொடுத்தவர்கள்தான் இந்த ஆட்சியாளர்கள். எண்ணிப்பார்த்தால், இதே நிலைதான் இன்றைக்கு ஈழத் தமிழனுக்கும் அவர்களது விடுதலைக்கான போராளிகளுக்கும் என்பது புரியும்.
மேலேகூறியுள்ள பொறியியல் கல்லூரிகளில் ஏன், நக்சல்பாரி கருத்துகள் செல்வாக்குச் செலுத்தின? பொறியியல் கல்லூரி மாணவர்கள், இந்தியாவை தொழில்மயமான நாடாக சொந்தக் கால்களில் நிற்கவைக்க தங்களது படிப்பு உதவும் என நம்பியிருந்தனர். ஒரு நிலவுடைமைச் சமுதாயத்தில் அது எப்படி சாத்தியமாகும்? பண்ணையார்களையும், பண்ணை அடிமைகளையும் கொண்ட கிராமங்கள் நிறைந்த இந்திய துணைக் கண்டத்தில், உற்பத்திக்கான ஆலைகள் நிறைந்த சூழலை உருவாக்க முடியுமா? இந்த நாட்டை ஆள்வோர் அதற்குச் சம்மதிப்பார்களா? ஆளும் அவர்கள் யார்? இந்தியாவின் ஆளும்வர்க்கம், இந்த நாட்டை கொள்ளையடிக்கும் அந்நிய நாட்டு ஏகாதிபத்தியவாதிகளிடம் அடிமைகளாக சார்ந்து நிற்கிறார்களே? நிலவுகிற நிலவுடைமை அமைப்புமுறையும், அந்நிய ஏகாதிபத்தியவாதிகளாலும்,. அவர்களைச் சார்ந்துவாழும் இந்திய முதலாளிகளாலும் பாதுகாக்கப்படுகிறதே? அத்தகைய நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்தெறியாமல், அந்நிய ஏகாதிபத்தியவாதிகளை இந்த நாட்டைவிட்டு விரட்ட முடியாதே? அதன்பிறகுதான் இந்தியாவை சொந்த நாட்டு மூலதனத்தைக்கொண்டு சொந்த நாட்டு முதலாளிகள், ஆலைகளைக்கட்டி உற்பத்திசார்ந்த பொருளாதாரத்தை வளர்க்க முடியும்? அப்படியானால், அதற்கு ஆணிவேராக இருக்கும் நிலவுடைமை உறவுகளை அறுத்தெறிய வேண்டுமே? விவசாயப் புரட்சியால் மட்டும்தானே அது சாத்தியம்? சீனா அத்தகைய புரட்சியை நடத்தி வெற்றிகண்டதால்தானே தொழிலில் முன்னேறி வருகிறது? அந்த வழிதானே இந்தியாவும் எடுக்க வேண்டும்? அதற்கு ஒரேவழி நக்சல்பாரி வழி புரட்சிதானே? இப்படியாக, தாங்கள் படிக்கும் கல்விக்கு ஒப்ப சிந்தித்ததால், பொறியியல் கல்வி படிப்போர் அதிகமாக இதில் ஈர்க்கப்பட்டனர். அத்தகைய கல்லூரிகளும், அதன் விடுதிகளும், புரட்சியாளர்களின் கோட்டைகளாக மாறின.
இத்தகைய சிந்தனையை செயல்வடிவில் கொடுத்தவர்தான் சாரு மஜூம்தார். அதனால்தான், சாரு மஜூம்தாரின் புரட்சிகர கருத்துகள் நெருப்புபோல மாணவர்கள் மத்தியில், இந்திய துணைக் கண்டமெங்கும் பரவியது. அவர் எப்படி இத்தகைய கருத்துகளை உருவாக்கினார்? ஆங்கிலேயன் ஆட்சிக் காலத்தில், 1920இன் காலங்களில் இந்தியாவில் உருவான பொதுவுடைமை கட்சி, புரட்சியை நடத்தி நாட்டை தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கரங்களில் கொண்டுவர பாடுபட்டது. ஆள்வோரின் அடக்குமுறைகளுக்கு உள்ளானது. இந்திய சுதந்திரத்துக்குப்பிறகு, மீண்டும் கம்யூனிஸ்டுகள் போராட்டங்களையும், ஆயுதப் புரட்சியையும் நடத்த முனைந்தனர். கட்சி தடை செய்யப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பில் புரட்சியை முன்னெடுக்க முனைந்தது. 1962ஆம் ஆண்டு இந்திய-சீனப் போர் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல பெரும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேற்குவங்கத்தில், டார்ஜிலிங் மாவட்ட கட்சி செயலாளர் தோழர் சாரு மஜூம்தாரும் கைதானார். விடுதலையானவுடன் நேராக கட்சி அலுவலகத்துக்கு வந்த சாரு, அங்கிருந்த அகில இந்தியச் செயலாளர் எஸ்.ஏ.டாங்கேயின் படத்தை இழுத்து கீழேபோட்டு, ‘இனி, நான்தான் கம்யூனிஸ்ட் கட்சி’ என்று கூறியதாகச் சொல்வார்கள். அந்தளவுக்கு கட்சியில் இருந்த புரட்சியாளர்களுக்கு, தலைமைசெய்த துரோகத்தின்மீது கோபம்.
அந்த நேரத்தில் தமிழ்நாட்டில், கோவை மாவட்டத்தில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த தோழர் அப்பு, ‘மார்க்சிய புரட்சியாளர்கள்’ என்ற பெயரில், தோழர் ராமுண்ணியுடன் சேர்ந்து ‘தீக்கதிர்’ என்ற ஏட்டை கொண்டுவருகிறார். பிற்காலத்தில் அப்பு, தமிழ்நாட்டு நக்சல்பாரி தலைவராகவும், ராமுண்ணி கேரள நக்சல்பாரித் தலைவராகவும் ஆனார்கள் என்பது வரலாறு. அதன்பிறகு பி.டி.ரணதிவே, ஜோதிபாசு, ஈ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி, சுந்தரய்யா போன்ற தலைவர்கள் எல்லாமே இணைந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு வெளியேறி, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)’ எனத் தொடங்கினர். மக்கள் ஜனநாயகப் புரட்சிதான் தங்கள் பாதை என்று அறிவித்தனர்.
அதை நம்பிய புரட்சிகரத் தோழர்களான சாரு மஜூம்தார், அப்பு, ராமுண்ணி போன்றோர் அந்தக் கட்சியில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். தீக்கதிர் ஏட்டையும் அந்த கட்சிக்குக் கொடுத்துவிட்டனர். அந்த மார்க்சிஸ்ட் கட்சியும், 1967இல் தேர்தலில் பங்குகொள்ள முதன்மை கொடுத்தது. மேற்குவங்கத்தில், வங்காள காங்கிரஸ் உடன் சேர்ந்து ஐக்கிய முன்னணியைக் கட்டியது. தேர்தலில் வென்றது. இதுதான், மாசேதுங் கூறிய புரட்சிக்கான ஐக்கிய முன்னணி என்றது. கடுப்பாகிவிட்டார் தோழர் சாரு மஜூம்தார். இனி, இவர்களை நம்பியும் பயனில்லை. இன்னமும் புரட்சிக்கான சூழல் உருவாகவில்லை என மார்க்சிஸ்ட் கட்சி கூறியதால், புரட்சிகர சூழல் நிலவுவதை நிரூபிக்க தோழர் சாரு மஜூம்தார் எத்தனித்தார்.
- தொடரும்
கட்டுரையாளர்:
(படம்: டி.எஸ்.எஸ்.மணி)
டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க
பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தந்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துனராக உள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.