Wednesday, January 20, 2010

அரசியல் போரும், உளவியல் போரும்!

இலங்கைத்தீவில் அரசத்தலைவர் பதவிக்கான தேர்தல் வருவதற்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன. அதாவது ஜனவரி 26ம் நாள் அதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் முக்கியமாக ஆளும் கட்சி கூட்டணியின் மகிந்த ராஜபக்சே நிற்கிறார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பொன்சேகா நிற்கிறார். தேர்தல் பரப்புரை சூடுபிடித்து வருகிறது. இருபுறமும் நடக்கும் பரப்புரையில் நடந்து முடிந்த இனவாத போர்பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வன்னிப்போரில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் அம்பலமாகியுள்ளன. வேட்பாளர் மகிந்தாவின் சகோதரர் ஆணைப்படி களத்தில் நின்ற ராணுவ தளபதி, செய்த கொடுமைகள் தெரியவந்துள்ளன. சரண் அடைந்த விடுதலைப்புலியின் சில தலைவர்கள் உட்பட ஆயிரம் போராளிகளை கண்டபடி சுட்டுக் கொன்ற நிகழ்வு விவாதிக்கப்படுகிறது. கோத்தபாய ராஜபக்சேயின் கட்டளைக்கு பணிந்து, படுகொலை செய்த ராணுவ தளபதியைப் பற்றி எழுதக்கூடாது என ஊடகங்களுக்கு தடை வந்துள்ளது. ஆளுங்கட்சியை ஆதரிக்கும் நிபந்தனையை ஏற்றுக்கொண்டதால், கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் வெளிப்படையாக தெரிகிறது.
சமரசத்தை ஏற்காததால் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, அகதிகள் முகாமிலேயே அடைந்திருந்து மரணம் அடைந்த நிகழ்வும் கூட நடந்துள்ளது. வன்னிப்போரில் ஈடுபடுத்தப்பட்ட சிங்கள வீரர்கள், இளம்வயதிலேயே பலியாக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி தெரியவந்துள்ளது. 30,000 சிங்கள வீரர்கள் வன்னிப்போரில் பலியாகியுள்ளனர். 36,000 சிங்கள ராணுவ வீரர்கள், கை, கால்களை இழந்து பாதிக்கப்பட்டனர். இந்த செய்திகளை வேட்பாளர் பொன்சேகா இப்போது கூறுகிறார். இதுவும் கூட சிங்களப் பெரும்பான்மை மக்களிடையே சிக்கலை உருவாக்கும். சர்ச்சையை எழுப்பிவிடும்.
தமிழர் பகுதிகளான வடக்கிலும், கிழக்கிலும் இரண்டு வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களை இறக்கி விட்டுள்ளனர். வேட்பாளர் மகிந்தா, அமைச்சராக இருக்கின்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தத்தைச் சார்ந்து, வடக்கு மாகாணத்தின் தமிழர் வாக்குகளை அடைய துடிக்கிறார். கிழக்கு மாகாணத்தில், மாகாண சபை முதல்வர் பிள்ளையானைச் சார்ந்து, தனது தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொள்கிறார்.
வேட்பாளர் பொன்சேகாவோ, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாக தனது வாக்கு சேகரித்தலை முக்கியத்துவப்படுத்துகிறார். தமிழர்களின் உடனடித் தேவைகளாக இருக்கின்ற மீள்குடியேற்றம், முள்வேலி முகாம்களிலிருந்து விடுதலை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு வளையங்களை நீக்கி சிங்கள ராணுவத்தை பின்வாங்க செய்தல், போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள், மனித உரிமை மீறல்கள் செய்தவர்கள் மீதான நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டுள்ள முன்னால் போராளிகளை விடுதலை செய்தல், அதிபர் ஆட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வருதல், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது பற்றி விவாதித்தல், கடத்தப்பட்ட தமிழர்களை விடுவித்தல், அதில் கொல்லப்பட்டவர் குடும்பத்திற்கு உதவி அளித்தல் போன்ற அடிப்படையான கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற கணிசமான தமிழ் பேசும் முஸ்லிம்களின் வாக்குகளை வென்றெடுக்க முஸ்லிம் கட்சி, பொன்சேகாவிற்கு ஆதரவாக இறங்கியுள்ளது. மட்டக்களப்பு மேயராக இருக்கும் தமிழ் பெண் கூட, ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும் பொன்சேகாவிற்கு ஆதரவாக பரப்புரையில் இறங்கியுள்ளார். இது போல கொழும்பு நகரில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற, ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் மனோகணேசன் மூலமாக, தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பொன்சேகாவிற்கு ஆதரவான பரப்புரை வாக்குகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
இதே போல மலையக தமிழ் மக்கள் மத்தியிலும், இருபக்கமும் உள்ள போட்டி வேகமடைந்துள்ளது. மகிந்தாவிற்கு ஆதரவாக ஆறுமுக தொண்டைமான் தலைமையிலான சிலோன் தொழிலாளர் காங்கிரசும், மறைந்த சந்திரசேகரனின் கட்சியான மலையக மக்களின் முன்னணியும் இறங்கி பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு எதிராக பொன்சேகாவிற்கு ஆதரவாக, மனோகணேசனின் கட்சியினர் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில், கிராமப்புறங்களில் பயங்கரவாதத்தை ஒழித்த வீரராக மகிந்தா தன்னை காட்டிக் கொண்டு, வாக்குகளை சேகரிக்கிறார். அதில் அவருக்கு ஆதரவாக நிலைமை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படி விழக்கூடிய வாக்குகளையும் கூட, சமீபத்திய பொன்சேகாவின் அறிவிப்புகள் நிலைகுலைய செய்து விட்டன. அதாவது வன்னிப்போரில் தேவையில்லாமல் சிங்கள இளைஞர்கள் பல பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டதை பொன்சேகா கூறிவிட்டார். அதற்கும் மேலாக கை, கால்களை இழந்த இளம் சிங்கள வீரர்கள் பற்றியும் எடுத்துரைத்து விட்டார். இதுவே சிங்கள கிராமங்களை புதிதாக பாதிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு சிங்கள கிராமத்திலும், போருக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் இறந்து விட்டால், அவர்களது வீட்டை சுற்றி பௌத்த மத சடங்குகள் படி, வெள்ளைத் துணியைக் கட்டுவார்கள். அப்படி வெள்ளைத்துணி கட்டப்பட்ட வீடுகள் ஒவ்வொரு கிராமத்திலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. ஆகவே போரின் பாதிப்பை உணர்ந்திருந்த சிங்கள கிராமப்புற விவசாய குடிமக்கள், தங்கள் வாக்குகளை யாருக்கு அளிப்பார்கள் என்பதே கேள்விக்குறியாகும்.
மேற்கண்ட இரண்டு பெரும் வேட்பாளர் களுக்கிடையில், போர்க்குற்றங் களுக்கு காரணமான இந்த இரண்டு பேரும் வேண்டாம் என்று கூறிக்கொண்டு, சிங்கள இடது முன்னணி தலைவர் டாக்டர் விக்கிரமபாகு கருணா ரத்னேயும், சிவாஜி லிங்கம் எம்.பி.யும் வாக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தென்னிலங்கையில், வட இலங்கையில் செய்தது போல, இரண்டு பேரும் சேர்ந்து வாக்கு சேகரிக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் போராட்டம், ஆதிக்க வாதிகளுக்குள் நடந்து வரும் போது, அந்நிய சக்திகளும் இதில் புதிய வகையில் பங்களிப்பு செலுத்துகின்றன.
இலங்கை அரசியலில் தொடர்ந்து தலையீடு செய்வதன் மூலம், தங்கள் நலன்களை விரிவுபடுத்திக்கொள்ளும், அல்லது வலுப்படுத்திக் கொள்ளும் அந்நிய சக்திகள், இந்த இரு பெரும் வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு தரலாம் என அலைந்து திரிகிறார்கள். இவர்கள் தங்களது ஆதரவை நேரடியாக செலுத்துவதில்லை. மாறாக உளவியல் ரீதியாக பரப்புரை செய்து, உலக அரங்கில் தமிழர் மத்தியில் கருத்துப் போக்கை உருவாக்கி, தங்களது விருப்பத்தை சாதித்துக் கொள்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஊடகங்கள் மூலம் தங்களது கருத்தை இந்த அந்நிய சக்திகள் பரப்பி வருகிறார்கள். உதாரணமாக திரிகோணமலை என்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டத்தைப்பற்றி ஒரு செய்தியை அச்சு ஊடகங்களில் பரப்பி இருக்கிறார்கள். அதாவது தமிழ்மக்கள் இருபெரும் வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இழந்து, தேர்தலை புறக்கணிப்பார்கள் என்று திரிகோணமலை மாவட்ட மக்கள் பற்றி ஒரு தவறான அல்லது பொய்யான கருத்தை பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் தமிழ் மக்களது வாக்குகளை சிதறடித்தால், மகிந்தாவை வெற்றிபெற வைக்கலாம் என்ற மனப்பாலை சிலர் குடிக்கிறார்கள். ஆனால் திரிகோணமலை மக்கள் எப்போதுமே ரனில்விக்கிரமசிங்கே மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள். விலைவாசி உயர்வை அவரது கூட்டணி கட்டுப்படுத்தும் என்று எண்ணுபவர்கள். கூடுதலாக தமிழர் தேசிய கூட்டமைப்பு பரப்புரையை ஏற்பவர்கள். இதனால் அவர்களது வாக்குகளும், சிந்தாமல், சிதறாமல், மாற்றத்தை கொண்டு வருவதற்காகவே இருக்கிறது என்பது தெளிவு.
அரசியல் போரை இலங்கை தீவுக்குள் கட்சிகள் நடத்தினால், அனைத்துலக சமூகத்தில் உளவியல் போரை நடத்தி திசைதிருப்பும் வேலையையும், தமிழர் வாக்குகளை பிளவு படுத்தும் வேலையையும் செய்கின்ற அந்நிய சக்திகளை, உலகத் தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்வார்களா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

Tuesday, January 19, 2010

விசாரணைக் கைதிகளை சிறையிலடைக்க சட்டம் சொல்கிறதா?

இந்தியாவின் மத்திய சட்டஅமைச்சர் நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாடு தழுவிய 1500 சிறைகளில் இருக்கின்ற, விசாரணைக் கைதிகளான 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை விரைவில் விடுதலை செய்வோம் என்பதுதான் அந்த அறிவிப்பு. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிமன்றத்தில் விசாரணைக்குப்பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை பெற்றார் எனும் போது, தண்டணைக் காலத்தை கழிக்க சிறையில் அடைக்கப்படுவார் என்பதுதான் நீதித்துறை யைப்பற்றியும், சிறைச்சாலையைப்பற்றியும் இருக்கின்ற அடிப்படை புரிதல். இந்த புரிதல் சரிதான். இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிமன்ற விசாரணைக்கு முன்னமேயே சிறையில் அடைக்கப்பட்டால் என்ன அர்த்தம்? இதற்கு பதில் சொல்ல எந்த ஒரு சட்டப் புத்தகமும் இடம் கொடுக்கவில்லை. இதற்கான பதிலை எந்த நீதியரசரும் விளக்கவில்லை. இதை நியாயப்படுத்த எந்த வழக்கறிஞரும் தயாராயில்லை. ஆனால் இதை காவல் துறை அதிகாரிகள் அமுலாக்கி வருகிறார்கள். அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்து, மாஜிஸ்திரேட்டுகள் என்ற நீதித்துறையின் குற்றியியல் நீதியரசர்கள் சம்பந்தப்பட்டவர் களை சிறைக்கு அனுப்பி வருகிறார்கள். மேற்கண்ட நடைமுறை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது. ஒருவர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டவுடன், அவரை கைது செய்வதும், மாஜிஸ்திரேட் முன்கொண்டு நிறுத்தி சிறைக்கு அனுப்புவதும் தங்களுடைய வேலை என்பதாக காவல்துறை அதிகாரிகள் நம்புகிறார்கள். காவல்துறை அதிகாரிகள் ஒருவரை கைது செய்து தன்முன்னே கொண்டு நிறுத்தினால், உடனடியாக அவரை சிறைக்கு அனுப்ப வேண்டியது தனது கடமை என்று மாஜிதிரேட்டுகள் நம்புகிறார்கள்.
மேற்கண்ட இவர்களது நம்பிக்கை எல்லாம் சரியானது என்றால், இப்போது 2 லட்சம் வரை இருக்கின்ற விசாரணைக் கைதிகளை விடுதலை செய்வோம் என்று சட்ட அமைச்சர் கூறக்கூடாது. சட்ட அமைச்சர் இப்படி கூறுவது மட்டும்தான் சட்டத்தைப்பற்றிய சரியான விளக்கம் என்றால், இன்று வரை விசாரணைக் கைதிகளை சிறையில் அடைத்து வைத்திருந்தது தவறு என்பதாக ஆகிறது.
மேற்கண்ட 2 செயல்களில் ஒன்றுதான் சரியாக இருக்கும். மற்றது தவறாக இருக்கும். 16ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை ஒரு வழக்கு உலுக்கியது. வழக்கம் போன்ற வழக்காக அது வந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக அமர்ந்திருந்த வெங்கடச்செல்லையா இந்த வழக்கில் மற்ற 2 நீதியரசர்களுடன் சேர்ந்து ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அந்த வழக்கு ஜோகிந்தர்குமார் என்பவருக்கும் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்திற்கும் மத்தியிலானது என்பதான ஒன்று. 1994ம் ஆண்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இது அரசியல் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு.
விசாரணைக்காக 28 வயது கொண்ட ஜோகிந்தர்குமார் என்ற சட்டம் படித்து, வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட ஒருவர் ஜனவரி 7ம் நாள் காசியாபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னால் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். அதை அவரது சகோதரர் முதலமைச்சருக்கு தந்தியாக அனுப்புகிறார். பிறகு அந்த இளைஞர் சட்ட விரோத காவலில் வைக்கப்படுகின்றார். அவரது விடுதலைக்காக மனு போடப்படுகிறது. ஜனவரி 11ம் நாள் உத்தரபிரதேசத்திலுள்ள காசியாபாத் காவல்நிலையத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது. 14ம் நாள் நேரில் சம்பந்தப்பட்டவரை ஆஜர்படுத்த கோருகிறது. சட்ட விரோத காவலில் வைக்கவில்லை என்றும், விசாரணைக்காக பல இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறுகிறது. எதற்காக 5 நாட்கள் அப்படி வைத்திருக்க வேண்டும் என்று விசாரித்து விளக்கமளிக்குமாறு மாவட்ட நீதிமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த பிரச்சனையையொட்டி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மனித உரிமைகள் பிரச்சனை இருப்பதாக குறிப்பிட்டது. தனிமனித உரிமைகளுக்கும், கடமைகளுக்கும் மத்தியில் சீரான பார்வை தேவை என அதில் கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் குற்றங்கள் ஒடுக்கப்படவேண்டும் என்பது சமூக தேவையாக இருக்கிறது. இன்னொரு புறம் சட்டம் அதிகாரத்தால் பறக்கவிடப்படக்கூடாது என்பதும் சமூக தேவையாக இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்வது ஆபத்தாக முடியும். சுதந்திரமான ஒரு சமூகத்தின் நலன் என்பது அதிகாரிகள், காவல்துறை ஆகியோர் நடத்தும் இழிவு படுத்தல், ஒடுக்குமுறை களிலிருந்து தனிநபரை பாதுகாப்பதில் அடங்கியிருக்கிறது என்று அந்த தீர்ப்பு கூறியிருந்தது.
ஒரு நாட்டின் நாகரீகம் என்பது, குற்றயியல் சட்டங்களை அமுல்படுத்து வதற்கு பெருவாரியாக எத்தகைய முறைகள் கையாளப்படுகின்றன என்பதை பொருத்தே அமைந்துள்ளது என்று அந்த தீர்ப்பு கூறுகிறது. நந்தினி சத்பதிக்கும், பி.எல்.டானிக்குமான வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய அந்த பெஞ்ச் கீழ்கண்டவாறு கூறியது. சட்ட அமுலாக்கத்தின் தேவையை ஒரு புறமும், அமுலாக்க அமைப்பின் கைகளில் அநீதியாகவும், ஒடுக்கப்படும் நிலையிலும் இருக்கும் குடிமக்களை பாதுகாப்பது இன்னொரு புறமுமாக, சமன்படுத்தி பார்க்க வேண்டும். இதற்கான தராசு ஒரு புறமே இதுவரை சாய்ந்து இருக்கிறது. ஒரு புறம் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கான சமூக நலனும், மறுபுறம் குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட உரிமைகளும் என்பதாக உள்ள மோதலை காணவேண்டும்.
தேசிய காவல் ஆணையம் தனது 3வது அறிக்கையை காவல்துறையில் ஊழல் நடப்பதற்கான தலையாய காரணமே, கைது செய்வதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்தான் என்று கூறுகிறது. இதையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுகிறது. 60% கைதுகள் தேவையற்றவை அல்லது நியாயமற்றவை என்பதும் அந்த அறிக்கையிலிருந்து காட்டப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நியாயமற்ற காவல்துறையின் நடவடிக்கை களால், சிறைச்சாலையின் செலவு 43.2% அதிகமாகியுள்ளது. பெருவாரியான கைதுகள் சிறிய வழக்குகளுக்காக செய்யப்படுகின்றன. தொடர்ந்து ஒருவரை சிறையில் வைத்திருப் பது பாரமரிப்பு செலவுகளை விரைய மாக்குகிறது. கடைசியாக கைதே தேவையில்லை என்று முடிவாகக் கூடிய வழக்குகள் இதில் அதிகமாக உள்ளன.
மேற்கண்ட உச்சநீதிமன்ற சுட்டிக்காட்டல்கள் 16 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் புரியப்படுகிறதா? ஆங்கிலே யன் ஆட்சியில் அடிமட்டம் வரை வெளி நாட்டு அதிகாரிகள் இருந்த போது, அவர் களுக்கு அடையாளம் தெரியாத இந்தியர் களை விசாரணைக்காக கூட, சிறையில் வைத்து வழக்கு நடத்தவேண்டிய பழக்கம் இருந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகும், ஒவ்வொரு குடிமகனுக்கும் முகவரியும், அடையாள அட்டையும் இருக்கும் போது, எதற்காக அவர்களை விசாரணைக் காலத்திலும் சிறையில் வைத்திருக்க வேண்டும்? இது பச்சையான காலனி ஆதிக்க நடைமுறையின்றி, வேறென்ன?
நீதியரசர்கள் வெங்கடாசெல்லையா, மோகன், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோருடைய அந்த பெஞ்ச், மேற்கண்ட வழக்கின் தீர்ப்பில் சில வழிகாட்டல்கள் கொடுத்துள்ளனர்.
காவலில் ஒருவரை தொடர்ந்து வைத்திருக்க சில காரணங்கள் இருக்க வேண்டும். அவர் தன்னை அடையாளம் காட்ட மறுத்தாலோ, குறிப்பிட்ட குற்றத்தை மீண்டும் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும் என்றோ, கைதானவரை பாதுகாப்பதற்கோ, விசாரணையில் அவரிடம் சாட்சியம் எடுப்பதற்கோ, நீதிமன்றத்திற்கு அவர் ஆஜராகாமல் இருந்தாலோ, சமன் வழங்கப் படலாம் என்ற ஆங்கிலேய நீதிமன்றத்தின் பரிந்துரையை அதில் சுட்டிக் காட்டியிருக் கிறார்கள்.
காவல்துறை அதிகாரி நீதிமன்றத்திற்கு வரக்கோரி சம்பந்தப்பட்டவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பலாம். மேற்கண்ட அறிவுரைகளை ஏற்றிருந்தால், மத்திய அரசு சிறைசாலையில் கும்பல், கும்பலாக விசாரணைக் கைதிகள் குவிந்து கிடக்கும் நிலைமையை தவிர்த்திருக்கலாம். இத்தகை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதாவது மத்திய அரசுக்கு, மனித உரிமை பார்வை வந்ததே என்று நாம் மகிழ்ச்சியடையலாம். வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படவேண்டிய அவசியமோ, காவலில் வைக்கப்பட வேண்டிய தேவையோ இல்லை என்பதை இனிமேலாவது அதிகாரிகள் மட்டத்தில் உணர்ந்து கொள்வார்களா என்று உரத்த குரலில் நாம் கேட்க விரும்புகிறோம்.

Monday, January 18, 2010

மம்தா கெடு பலன் தருமா?

மாவோயிஸ்டுகளுக்கு மம்தா பேனர்ஜி ஒருவாரம் கெடுவிதித்தார். அதே நேரத்தில் காவல்துறையினர் அவரது கெடுவிற்கு கேடு விளைவிக்கின்றனர்.மேற்கு வங்கத்தில் ஜர்க்ராம் பகுதிக்கு சென்ற மத்திய அமைச்சர் மம்தா பேனர்ஜி, கூப்பிய கரங்களுடன், வன்முறையை கைவிடுங்கள் என்று மாவோயிஸ்டுகளிடம் அறைகூவல் விடுத்தாராம். மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் லால்கர், பேல்பகாரி, பின்பூர், சல்போனி மற்றும் பகுதிகளில் நடந்து வரும் வன்முறைகளை நிறுத்தி அமைதி கொண்டு வரவேண்டும் என மம்தா கேட்டுக் கொண்டார். ஒரு பேரணியில் இத்தகைய அறைகூவலை விடுத்திருக்கிறார். லால்கரிலிருந்து 40 கி.மீ. தூரத்திலுள்ள ஜார்க்ரம் நகராட்சி மைதானத்தில் 50 நிமிடம் உரையாற்றிய மம்தா இப்படி பேசியிருக்கிறார். கண்ணி வெடிகள் வைக்காமல், முக்கிய நீரோட்டத்திற்கு வாருங்கள் என அழைத்திருக்கிறார். தேவைப்பட்டால், மத்திய அரசிடம் தான் எடுத்துச் சொல்லி, அந்த வட்டார மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வைப்பேன் என்று கூறியிருக்கிறார். லால்கர் பகுதியிலிருந்து கூட்டுப் படைகளைக் கூட திரும்ப பெறவைப்பேன் என்பது அவரது வாக்கு.
மாவோயிஸ்டுகள் விரும்பினால், பேச்சுவார்த்தைக்கு தான் பாலமாக இருப்பேன் என்கிறார் மம்தா. தன்னை தீண்டத்தகாதவராக பார்த்தார்களானால் வேறு ஒரு சமரசப் பேச்சாளரை தேர்வு செய்யுங்கள் என்றும் இறங்கி பேசியிருக்கிறார். பேச்சு வார்த்தை என்பதுதான் முக்கியம் என்பதாக விளக்குகிறார். தான் காவல்துறை அராஜ கத்தை எதிர்க்கும் மக்கள் கமிட்டியை தொடங்கும் நேரத்தில் அதனுடன் ஒத்துழைத்ததாக மம்தா ஒப்புக் கொண்டார். ஆனால் அவர்கள் வன்முறையில் ஈடுபடும் பொழுது, அவர்களிடமிருந்து பின்வாங்கிவிட்டதாகவும் எடுத்துச் சொன்னார். அந்த கமிட்டியை இப்போது தலைமை தாங்கும் அசிட்மகதோ கூறும்போது, கூட்டுப்படைகள் திரும்பப் பெறப்பட்டால் பேச்சு வார்த்தை தொடங்கலாம் என்றும், தங்கள் தலைவர் சத்ரதார் மகதோவை இழிவுபடுத்திய மம்தாவை தாங்கள் நம்பத்தயாராயில்லை என்றும் கூறினார்.
மேற்கண்ட கூற்றுக்களில் உண்மை என்ன இருக்கிறது என்பதை அறிய வேண்டுமானால், மேற்கு வங்கத்துடன் நிற்காமல், அருகாமையிலுள்ள ஒரிசாவையும் நாம் உற்று நோக்கவேண்டும். ஒரிசாவின் கிழக்கு பகுதியில், கோராபட் மாவட்டத்தில் நாராயணபட்னா என்ற இடத்தில் 2 ஆதிவாசிகளை காவல்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பலர் காயமடைந் தார்கள். நூற்றுக்குமேற்பட்ட ஆதிவாசிகள் கண்டபடி கைது செய்யப்பட்டார்கள். அதில் 12 குழந்தைகளும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் மீது சதி, கலவரம், ராஜதுரோகம், அரசுக்கு எதிராக போர் தொடுத்தல் ஆகிய வழக்குகளை காவல்துறையும், துணை ராணுவமும் பதிவு செய்திருக்கின்றன. சாசிமுலியா ஆதிவாசி சங்கம் என்ற ஆதிவாசிகளுடைய உரிமைகளுக்காக போராடக்கூடிய மக்கள் திறள் அமைப்பின் செயல்பாட்டாளர்களை விரட்டி, விரட்டி தேடுவது என்றும், கைது செய்வது என்றும் அடக்குமுறையை காவல்துறை கட்டவிழ்த்துள்ளது.
இத்தகைய அடக்குமுறைகளின் விளைவாக ஜனநாயக உரிமைகளுக்காக போராடக்கூடிய மக்கள் திரள் அமைப்புகளில் உள்ள ஆதிவாசிகள், சுற்றிவரை இருக்கும் காடுகளில் அடைக்கலம் தேடி ஓடுகிறார்கள். அந்த காடுகள் ஏற்கனவே மாவோயிஸ்டுகளின் தங்குமிடங்களாக இருந்து வருகின்றன. இவ்வாறு கோரப்பட் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளே கருதுகிறார்கள். காவல்துறை தங்களது நடவடிக்கைகளின் மூலம், சாதாரண ஆதிவாசிகளை மாவோயிஸ்டுகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இதில் புரியப்படும் நீதியாகும்.
மேற்கண்ட நிகழ்வுகள் நாராயண பாட்னாவில் மட்டுமல்லாமல் ஒரிசா மாநிலத்தில் இருக்கும் ஆதிவாசிகள் பகுதிகளில் அடங்கிய கிராமங்களிலும், நகரங்களிலும் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி சத்திஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதுவேதான் நடந்து வருகிறது. ஆதிவாசிகளுக்கு எதிரான காவல்துறையின் அட்டூழியங்கள், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தரும் எரிபொருளாக பயன்படுகிறது. இந்திய சமுதாயத்தில் ஆதிவாசிகள் தான் மிகவும் விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்கள். ஆதிவாசிகளில் 49.5%, அரசாங்க மதிப்பீட்டின் படி வறுமையின் எல்லைக் கோட்டுக் கீழே இருக்கிறார்கள். 76.2% எழுத்தறிவில்லா நிலையில் இருக்கிறார்கள். 30% மருத்துவர்கள் அல்லது மருத்துவ மனைகள் தொடர்பின்றியே வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தொழிற்சாலைகளில் கூட, வேலைக்கு சேர்க்கப்படாத நிலமையில், அந்த ஆதிவாசிகள் தங்கள் பாரம்பரிய நிலங்களை மட்டுமே நம்பி வாழ்வதால், அவற்றை தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள்.
அமைதியான கிளர்ச்சிகள் மற்றும் ஜனநாயக முறையீடுகள் ஆகியவை தங்களுடைய பிரச்சனைகளை வெளிப்படுத்த இயலாமல் தோற்றுவிட்டன என்று உணர்கிறார்கள். அதன் விளைவாக இந்திய ஜனநாயகத்தில் ஆதிவாசிகள் அந்நியப்படுத்தப்பட்டு கிடக்கிறார்கள். இத்தகைய கோபத்திலும், அந்நியமாதலிலும் உள்ள ஆதிவாசிகள், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாளர்களாகவும், புதிய வரவுகளாகவும் ஆகிவிடுகிறார்கள்.
இந்திய மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அரசை தூக்கி ஏறிந்து, சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று நம்புகிறார்கள். வன்முறையில் நம்பிக்கையில்லாத ஆதிவாசிகள் கூட வேறுவழியில்லாமல் காவல்துறையின் நிர்ப்பந்தத்தினால் மாவோயிஸ்டுகளுடன் சென்று நிற்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலும் ஆதிவாசிகள், வெகுமக்கள் அரசியலில் ஈடுபடுவதையே விரும்புகிறார்கள். ஒருபுறம் காவல்துறையின் தள்ளிவிடுதலும், மறுபுறம் மாவோயிஸ்டுகளின் அரவணைப்பும், ஆதிவாசிகளை திக்குமுக்காட செய்கிறது. ஆதிவாசிகளை கடுமையாக சுரண்டிவரும் மற்றும் சித்ரவதை செய்து வரும் பண்ணையார்கள், காவலர்கள் , கந்துவெட்டிக்காரர்கள் ஆகியோரைத்தான் மாவோயிஸ்டுகள் இலக்காக்கி தாக்கி வருகிறார்கள். ஆதிவாசிகளின் இதுபோன்ற சமூக பொருளாதார பாதிப்புகளுக்கு, அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க தவறிய நேரத்தில், மாவோயிஸ்டுகளின் இந்த செயல்பாடு செல்வாக்கை ஏற்படுத்துகிறது.
ராணுவ ரீதியாக மாவோயிஸ்டுகளை அழித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று அரசு நம்புகிறது. அதற்காக 80,000 ராணுவத்தை ஏற்கனவே இறக்கிவிட்டுள்ளது. மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஒரிசா மாநிலங்களின் காடுகளில் மேலும் 20,000 ராணுவத்தை இப்போது இறக்கப்போகிறது. இந்த வட்டாரத்தில் 20 லட்சம் மக்கள் வாழுகிறார்கள். அவர்களில் பாதிபேர் ஆதிவாசிகள். வெளியே இருக்கும் அதிகாரிகள் ராணுவ வெற்றியை எதிர்பார்த்தாலும், களத்திலிருக்கும் அதிகாரிகள் எந்த நம்பிக்கையும் கொண்டு இருக்கவில்லை. அரசிடம் இருந்து ஆதிவாசிகள் அந்நியமாகி நிற்பது ஏற்கெனவே ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டது. சாசிமுலியா ஆதிவாசி சங்கம் நாராயணபாட்னா பகுதியை கைப்பற்றி விடும் என்று கூறிவருகிறார்கள்.
நாராயணபாட்னா பகுதியல் ஆதிவாசி சங்கத்தினர் 800 ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுப்பதில், வெற்றி பெற்றிருக்கிறார்கள். தனியார் சுரங்க கம்பெனிகள், சாராய முதலாளிகள், நிலத்திருடர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் இணைந்து ஆதிவாசி சங்கங்களை எதிர்த்து கொரப்பட், மல்கங்கிரி மாவட்டங்களில் தங்கள் ஆதரவு குழுக்களை உருவாக்குகிறார்கள். ஒரிசா மாநிலத்தில் இந்தியாவில் கிடைக்கும் பாக்ஸைட் தாதுப்பொருள் 70% கிடைக்கிறது. உலகிலேயே இந்தியாதான் 6 வது பெரிய பாக்ஸைட் கையிருப்பு கொண்ட நாடு. இந்தியாவில் கிடைக்கும் குரோம் தாதுவும், நிக்கலும் 90%, நிலக்கரியில் 24%ம் இங்கே கிடைக்கிறது. பன்னாட்டு மூலதன கம்பெனிகள் அவற்றை கொள்ளையடிக்க இறங்கிக் கொண்டிருக்கின்றன. அமைதிக்குழு என்ற பெயரில் ஆதிவாசிகளிடமிருந்து நிலங்களை கொள்ளையடிக்க மேற்கண்ட சக்திகள் முயற்சிக்கின்றன.
ஆதிவாசிகளையும், மாவோயிஸ்டுகளையும் சமமாகவே பாவிக்கக்கூடிய காவல்துறை மற்றும் துணை ராணுவத்தின் இத்தகைய அணுகுமுறைகள் ஆபத்தில் கொண்டு போய் முடிக்கப்போகிறது. அதாவது இந்தியாவின் ஆதிவாசிகள் வாழும் இதயப்பகுதியில் ஒரு பெரும் ரத்த வெள்ளத்தை பார்க்கும் நிலை உருவாகும். மேற்கண்டவாறு ஒரிசா சென்று ஆய்வு செய்த ஊடகவியலாளர் சுதா கூறியிருக்கிறார். ஒரு புறம் மம்தாவின் கெடுவும், மறுபுறம் காவல்துறையின் சுடுதலும் எங்கே அவர்களை நிறுத்தப்போகிறது என்பதுதான் இப்போது கேள்வி.

Sunday, January 17, 2010

நீதியரசர் தினகரன் மீது பாய்வது நீதியா?

நீதியரசர் பி.டி. தினகரன் கர்நாடகா மாநிலத்தின் தலைமை நீதியசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் மீது நிலம் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு என்பதாக ஒரு பிரச்சனையை சென்னை உயர்நீதிமன்றத்தின் சில வழக்கறிஞர்கள் கிளப்பினார்கள். சம்பந்தப்பட்ட நிலம் என்பது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற தலித் மக்கள் வாழுகின்ற குடியிருப்பின் அருகே இருக்கும் நிலம். இந்த நிலம் குற்றம் சாட்டப்பட்டவர் சொத்தாக இருக்கிறது என்ற செய்தியை, பிரச்சனை எழும்பியவுடன், குறிப்பிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி செய்தார். அதன்பிறகு இந்த பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம் மூலமாக தீவிரமாக கையிலெடுத்தார்கள். அவர்கள் அதற்கான போராட்டத்திலும் இறங்கினார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் இதற்கான போராட்டங்களை முன்னெடுத்தார்கள். தலித் மக்களுக்கு நீதியரசர் பொறுப்பிலிருக்கும் நிலங்களை பறித்து விநியோகம் செய்ய வேண்டும் என்பதாக கோரிக்கை வைத்தார்கள்.
சம்பந்தப்பட்ட நீதியரசர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனால், அதே சமூகத்தைச் சேர்ந்த பல தலைவர்களிடமிருந்து, நீதியரசருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. இந்த நேரத்தில் தமிழக அரசின் அணுகு முறை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருக்கும் கணிப்புக்கு எதிராக வெளிப்பட்டது. அதனால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சித்தலைவரும் தனது கருத்தை அல்லது மதிப்பீட்டை மாற்றிக் கொண்டது போல் செய்தி வெளியானது.
குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய நிலம் என்பது தான் நீதியசராக பொறுப்பெடுப்பதற்கு, முன்னமேயே வாங்கிய சொத்து என்பதாக நீதியரசரிடமிருந்து பதில் வந்தது. தமிழக அரசும் அதே அணுகுமுறையை மேற் கொண்டது. ஆனாலும் பிரச்சனையை கையில் எடுத்தவர்கள், அதை விடுவதாக இல்லை.
இந்த பிரச்சனை எழுப்பப்பட்ட நேரம் இப்போது முக்கிய விவாதத்திற்கு வந்திருக்கிறது. நீதியரசர் தினகரனை உச்சநீதிமன்றத்திற்கு ஒரு நீதியரசராக எடுப்பதற்கான ஆலோசனைப் பட்டியல் வெளியிடப்பட்ட நேரத்தில் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. நீதியரசர் தினகரன் மீது 12 குற்றங்கள் செய்ததாக, எதிர்தரப்பு சுட்டிக்காட்டுகிறது. அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, மாநிலங்களவையை சேர்ந்த 75 உறுப்பினர்களின் கையெழுத்துக்களைப் பெற்று, அதன் மூலம் மாநிலங்களவை தலைவர் அன்சாரியிடம், நீதியரசர் தினகரன் மீது உரிமைப்பிரச்சனை எழுப்பவேண்டும் என்பதாக புகார் கொடுத்திருந்தார்கள். அதற்கு எதிராக 100 தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் கையெழுத்திட்டு, தினகரன் மீதான குற்றச்சாட்டு என்பது சாதி ஆதிக்க உணர்வுடன் எழுப்பப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில், தெரிந்த வருமான எல்லைகளைத்தாண்டி, சொத்து சேர்த்ததாக ஒரு குற்றச்சாட்டு. தனது மனைவி மற்றும் மகள்கள் பெயரில் வீட்டு வசதி வாரியத்தில் 5 வீடுகளை சட்ட விரோதமாக பெற்றதாக இன்னொரு குற்றச்சாட்டு. பினாமி பெயர்களில் சொத்துக்களை மாற்றிக் கொண்டதாக ஒரு குற்றச்சாட்டு. விவசாய நிலங்களை சட்டப்பூர்வமான உச்ச வரம்பு எல்லையை மீறி வைத்திருப்பதாக இன்னொரு குற்றச்சாட்டு. தலித் மற்றும் ஏழை மக்களது வாழ்வாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட பொதுச் சொத்தையும், அரசாங்க சொத்தையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதாக மற்றொரு குற்றச்சாட்டு. தலித் மற்றும் ஏழைகளின் மனித உரிமைகளை மீறியதாக இன்னொரு குற்றச்சாட்டு. அதிகாரபூர்வமான விசாரணை நடந்து வரும் போது, சாட்சியங்களை உடைத்ததாக ஒரு குற்றச்சாட்டு. தனது நீதி பரிபாலன அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நேர்மையற்ற உத்தரவுகளை தனக்கு வேண்டிய மற்றும் நேரடியான நலன்களில் அறிவித்ததாக ஒரு குற்றச்சாட்டு இப்படியாக பட்டியல் போடப்பட்ட குற்றச்சாட்டுகள் 55 பக்கம் கொண்ட நோட்டீசாக, தற்போது உச்சநீதிமன்றத்தில் நிற்கிறது.
மாநிலங்களவைத் தலைவர் அன்சாரியிடம் குற்றச்சாட்டுக்களை கையெழுத்திட்டு கொடுத்தவர்களில் பல்வேறு எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் வேடிக்கையான செய்தி என்னவென்றால், இடதுசாரிகளும், மற்றும் பா.ஜ.க.வினரும் அந்த கையெழுத்திட்ட உறுப்பினர் பட்டியலில், தினகரன் மீது பாய்ந்துள்ளார்கள். இந்த 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை வாங்கிய அன்சாரி, இப்போது அதை உச்சநீதிமன்றத்தில் வைத்திருக்கிறார்.
இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின்படி, உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள், நாடாளுமன்றத்தில் உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மட்டுமே பொறுப்பிலிருந்து நீக்கப்படமுடியும். இந்த பிரச்சனையில் அவைத்தலைவர் அன்சாரி உச்சநீதிமன்றத்தால் நடத்தப்படவேண்டிய நேரடி விசாரணையின் மூலம் தான், உண்மைகளை கொண்டு வரமுடியும் என்ற நோக்கத்தில், மேற்படி பிரச்சனையை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றுள்ளார்.
உச்சநீதிமன்றம் இப்போது நீதியரசர் பி.எஸ்.சிற்புகார் தலைமையில் 3 நீதியரசர்களைக் கொண்ட ஒரு பெஞ்சிடம் இந்த வழக்கை கொடுத்துள்ளது. அந்தப்பட்டியலில் நீதியரசர் ஏ.ஆர்.தவே, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதியரசரும் பிரபல சட்ட வல்லுநருமான பி.பி.ராவ் ஆகிய மூவர் கொண்ட கமிட்டியை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்து அதன் கையில் நேற்று இந்த வழக்கை கொடுத்துள்ளார். இது இப்போது நீதியரசர்களுக்கு மத்தியிலும் புதியதொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரான கே.ஜி.பாலகிருஷ்ணன், பி.டி.தினகரனை நியாயப்படுத்தி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்திற்கு நீதியரசராக உயரும் நேரத்தில் மட்டும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவது ஏன் என்பதுதான் அவரது ஆழமான கேள்வி.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசராக தினகரன் எடுக்கப்பட்டபோது, ஒரு சிறிய குற்றச்சாட்டு கூட, அவருக்கு எதிராக எழவில்லை. அதே போல 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகா மாநிலத்தில் உயர்நீதிமன்றத்திற்கான, தலைமை நீதியரசராக அவர் அறிவிக்கப்படும் போது, எந்த ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது எழுப்பப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர்கள் குழுவால், உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக எடுக்கப்பட முன்வைக்கப்படும் நீதியரசர்கள் பட்டியலில் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்ட பிறகுதான், தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை. மேற்கண்ட கருத்துக்களை கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இது உள்ளபடியே கவனிக்கவேண்டிய ஒரு செய்தியாக இருக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள், ஏதாவதொரு மாநிலத்தின் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதியரசராக உயர்த்தப்படவேண்டுமானால், அந்த நேரத்தில் ஏற்கனவே அதே மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தலைமை நீதியரசராக எங்காவது இருந்தால், பின்னவருக்கு வாய்ப்பில்லை என்ற பழக்கம் இருக்கிறது. அதனால் தினகரன் உச்சநீதிமன்றத்திற்கு நீதியரசராக உயர்த்தப்படும் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படும் போது, அதிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதியரசர் இப்ராஹிம் கலிபுல்லா, ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இப்போது தினகரன் உச்சநீதிமன்றம் செல்லும் பரிந்துரை தடுக்கப்பட்ட நிலையில், அவர் கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக தக்கவைக்கப்படுகிறார். அதனால் இப்ராஹிம் கலிபுல்லாவின் உயர்வுக்கான பரிந்துரையும் கூட, அப்படியே நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் தலித் சமூகம் மட்டுமல்ல, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நீதியரசரும், தனது நியாயமான உயர்வு கிடைக்காமல் தடுக்கப்படுகிறார். இத்தகைய செயல்களுக்குப் பின்னால், இந்தியாவின் புற்றுநோயான சாதி ஆதிக்க சதிகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் எழுப்பியிருக்கும் கேள்விக்கு விடைகாணவேண்டியது அனைவரின் கடமையாகும். ஏன் ஒருவர் உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்படும் நேரத்தில் மட்டும் குற்றம் சாட்டப்படுகிறார் என்பதே அந்தக் கேள்வி. நிலவும் சாதி, சனாதன சமூதாய அமைப்பில், சம்பந்தப்பட்டவர் எந்த சமூகத்திலிருந்து வருகிறார் என்பதும், அவருக்கு எதிராக கிளப்பப்படும் குற்றச்சாட்டுகள் எந்த சமூகத்தவரிடமிருந்து வருகிறது என்பதும் ஒரு முக்கியமான சமுதாயக் கேள்வி. இத்தகைய கேள்வியை கேட்காமலும், விடை காணாமலும் நாம் சரித்திரத்தின் இந்தப்பகுதியிலிருந்து தப்பித்துச் செல்லமுடியாது.

Saturday, January 16, 2010

கிரகணங்கள் எனும் அற்புதங்களும் அறியாமைகளும்

சூரிய, சந்திர கிரகணங்கள் எனும் வானியல் அரிய நிகழ்வுகள் ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்திற்கு வியப்பையும் வினாக்களையும் ஏற்படுத்தி வருவனவாகும். பூமி உட்பட அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவ்வாறு சூரியன் என்றும் நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்ற பூமி எனும் கோளினை சுற்றி வருவது சந்திரன் என்னும் துணைக்கோள். இவ்வாறு பூமியை சுற்றி வரும் சந்திரன், ஒரு கட்டத்தில் சூரியன் இருக்கும் பக்கத்திலும் இன்னொரு கட்டத்தில் சூர்யனுக்கு நேர் எதிர்பக்கத்திலும் வருகிறது. இந்த இயக்கப்போக்கில், சந்திரன், பூமியிலிருந்து பார்க்கையில் சூரியன் இருக்கும் பக்கத்தில் வரும்போது, அதாவது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வரும்போது அமாவாசை என்கிறோம். சந்திரன், சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் வரும்போது அதாவது பூமி, சூர்யனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் இருப்பதாக அமையும் போது பௌர்ணமி என்கிறோம்.
சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசையில் தான் வரும். அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியனை நோக்கியுள்ள சந்திரனின் ஒரு பகுதியில் சூரிய ஒளிபடுகிறது. அந்தப் பகுதிக்கு எதிர்ப்பக்கமுள்ள பகுதி தான் பூமியை நோக்கி இருக்கிறது. அது சூரிய ஒளியின்றி இருட்டாக இருப்பதால், பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சந்திரன் தெரிவதில்லை. இதுதான் அமாவாசை. இத்தகைய அமாவாசைகளுள் சிலவற்றில், பூமியிலிருந்து பார்க்கையில், சூரியனும் சந்திரனும் ஒரே பக்கத்தில் வருவதோடு சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் இதே வரிசையில் ஒரே நேர்கோட்டிலும் குறிப்பிட்ட காலத்திற்கு வருகின்றன. இவ்வாறு நேர்கோட்டில் வருவதால் சூரியனின் தோற்றம் சந்திரனால் முழுக்கவும் மறைக்கப்படுகிறது. இது தான் சூரிய கிரகணம். இவ்வாறு நேர்கோட்டில் வருவது எந்த அளவிற்கு துல்லியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு கிரகணம் முழுமையானதாக இருக்கும். துல்லியத்தன்மை குறைவால் கிரகணம் பகுதியளவு கிரகணமாக அமைந்து விடுகிறது.
சந்திர கிரகணம் எப்போதும் பௌர்ணமியில் தான் வரும். அதாவது பூமியைச் சுற்றிவரும் சந்திரன், சூரியன் இருக்கும் பக்கத்திற்கு நேர் எதிர்பக்கத்திற்கு வரும் போது முழு சந்திரனும் பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். இதுதான் பௌர்ணமி. இத்தகைய பௌர்ணமிகளுள் சிலவற்றில் பூமிக்கு ஒரு பக்கம் சூரியனும் அதற்கு நேர் எதிர்பக்கத்தில் சந்திரனும், வருவதோடு, சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை இதே வரிசையில் ஒரே நேர்கோட்டிலும் குறிப்பிட்ட காலத்திற்கு வருகின்றன. இது தான் சந்திர கிரகணம். இதிலும் நேர்கோட்டில் வருவதன் துல்லியத்தன்மையைப் பொருத்தே கிரகணம் முழுமையானதாகவோ, பகுதியளவானதாகவோ அமைகிறது. பகுதியளவான சந்திர கிரகணம் ஆண்டுக்கு 2 நிகழும்.
பார்த்து ரசிப்பதற்கு அழகானது என்றால் ஒவ்வொரு சூரியோதயமும், சூரிய அஸ்தமனமும், சந்திரோதயமும் சந்திர அஸ்தமனமும் அழகானவை தான், ரசிக்கத்தக்கவை தான். ஆனால் அவை தினமும் நிகழ்வதால், பழகப் பழக பாலும் புளிக்கும் எனும் சொல்லடை சுட்டுவது போல் சாதாரண நிகழ்வுகள் ஆகிவிடுகின்றன. ஆனால் துல்லியமான கிரகணங்களின் நிகழ்வுகள் அரியவை என்பதாலும், அதாவது பகுதியளவான கிரகணங்களைப் போல ஆண்டுக்கு 2 முறை நிகழ்ந்திடாமல், பல ஆண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது நூற்றாண்டுக்கு ஒரு முறையோ அல்லது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறையோ ஏற்படுகின்றன என்பதாலும் அவற்றின் துல்லியத்தன்மை அவற்றுக்கு அளிக்கும் அழகினாலும் கிரகணங்களைப் பார்ப்பதற்கான மனிதர்களின் ஆர்வம் பெரிதாக இருக்கிறது.
இதே காரணங்கள் தான், அதாவது அரிய தன்மையும் அழகும் தான், சிலர் அல்லது பலரின் அச்சத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. பூமிப்பந்தில் செயல்படுகின்ற அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம் சூரியன் தான் என்பதைப் புரிந்து கொண்டிருக்கவில்லை என்றாலும் அபாயத்தை விளைக்கின்ற, அச்சமூட்டும் இரவின் இருட்டைப் போக்கி ஒளி கொடுத்து பகலை உருவாக்கி மனிதர்களின் அனைத்து இயக்கங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் உதவுவதால் சூரியன் மீது ஒருவித நன்றியுணர்வு ஆதிகாலத்து மனிதர்களிடமே தோன்றி விட்டது. இந்த நன்றியுணர்வு தான், வழக்கத்திற்கு மாறான முறையில் திடீரென சூரியன் மறைக்கப்படும் நிகழ்வானது சூரியனுக்கு நேரிடும் ஏதோ கெடுதல் என்றும் இதனால் மனிதர்களுக்கும் ஏதாவது கெடுதல் நேரிடும் என்றும் தோன்றிய அச்ச உணர்வுக்கு அடிப்படையாய் அமைந்தள்ளது. எப்பொழுதுமே, தர்க்கபூர்வமான அல்லது தர்க்கபூர்வமற்ற அச்சங்கள் மீதே தங்கள் கோட்டையை கட்டி வரும் மதங்கள் இந்த அச்சத்தையும் பயன்படுத்தி கட்டுக்கதைகள் இட்டுக்கட்டி சடங்குகளையெல்லாம் உருவாக்கி விட்டனர். உண்மையில் கிரகணங்களால் மனிதர்களுக்கு தனித்தன்மை கொண்ட நன்மையுமில்லை, தீமையுமில்லை. அமாவாசை, பௌர்ணமியால் எவ்வளவு நன்மை தீமையோ அதைப்போன்ற, நன்மை தீமைகள் தான் கிரகணங்களினாலும் ஏற்படக்கூடும்.
கிரகணங்களின் போது பூமியைப் பொருத்து சூரியன், சந்திரன் ஆகியவற்றின் இருப்பிட நிலைகளால், பூமியின் மீது இவற்றினால் ஏற்படும் ஈர்ப்பு விசையின் அளவு சிறு அளவுக்கு மாறுபாடு அடையலாம். இந்த மாறுபாடு காற்று மண்டலத்தின் இயக்கத்திலும் கடல் அலைகளின் இயக்கத்திலும் ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துகின்றனவா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் திரளுக்கு வியப்பையளிக்கும் கிரகணங்கள், விஞ்ஞானிகளுக்கு விடைகளைத் தேடி நிற்கும் வினாக்களைக் கொண்டதாக இருக்கின்றன.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் பௌர்ணமி, அமாவாசை, கிரகணங்கள் வரும் காலத்தை கணிசமான அளவு துல்லியமாக கணிக்கும் திறன் உடையோர் இருந்திருக்கின்றனர். இது நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய கணித, விஞ்ஞான வளர்ச்சி. ஆனால் அதே நேரத்தில் கிரகணம் என்பது சூரியனையும், சந்திரனையும் பாம்பு விழுங்கும் நிகழ்ச்சி என்று கூறிய வேடிக்கையும் இங்கே நிகழ்ந்தது என்பது மிக அரிய முரண்நகையே. இப்போது 10 வயது குழந்தைகள் கூட இந்த பாம்புக்கதையை நம்ப மாட்டார்கள். இப்போதும் பாம்புக் கதையை நம்பவில்லையென்றாலும் அதை ஒட்டி இருக்கும் வேறு தவறான நம்பிக்கைகளை கொண்டிருப்போரும் சிலர் இருக்கின்றனர்.
இந்தியாவில் பலர், கிரகணத்தையொட்டி சமைத்தல், சாப்பிடுதல், திறந்தவெளியில் திரிதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகின்றனர். இவற்றுக்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. திறந்தவெளியைத் தவிர்த்து அறைக்குள் அடைந்து கிடப்பது எவ்விதத்திலும் பயனற்றது. ஏனெனில், பலவீனமானது என்று சொல்லப்பட்டாலும் ஈர்ப்புவிசை அனைத்தும் தழுவியது, நீக்கமற நிறைந்திருப்பது. பாதிப்பை ஏற்படுத்துமெனில் பாதாளத்திற்குள் பதுங்கியிருப்பினும் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியே தீரும். ஆக, வீட்டிற்குள் முடங்கிவிடுவது என்பது பூனை கண்ணை மூடிக்கொள்ளும் செயலைப் போன்றதேயாகும். இப்போதைய காலம் விஞ்ஞான காலம். தொழில்நுட்பக் காலம் என்றெல்லாம் சொல்லுகிறோம். 21ம் நூற்றாண்டு என்று சொல்லுகிறோம். இப்பொழுதும் இத்தகைய விஞ்ஞானத்திற்கு முரணான கருத்துக்கள் சமூகத்தைப் பீடித்திருப்பது அனுமதிக்கக்கூடியதா? மதக்கருத்துகள் பலவும் கடந்த நூற்றாண்டில் மக்கள் மனங்களிலிருந்து வெளியேறிவிட்டதைப் பார்த்தோம். அப்படி மதக்கருத்துக்களை வெளியேற்றியது விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தான். மிச்சமிருக்கிற தவறான புரிதல்களையும் கருத்துக்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான உணர்ச்சிகளையும் விட்டு விடுதலையாகும் போது மானுடத்தின் வளர்ச்சி வேகம் மேலும் அதிகமாகுமல்லவா? விஞ்ஞானத்திற்கு முரணான இந்த கருத்துகளை எதிர்த்து பகுத்தறிவாளர்கள் சிலர் விஞ்ஞான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உண்ணும் விரதம், நடத்தியுள்ளனர். அப்படிப்பட்ட நிலை ஏற்படச் செய்வதற்காக, விஞ்ஞானக் கருத்துகளை சக மனிதர்களிடம் கொண்டு செல்லும் பணியை விரைவுபடுத்துவோம். அப்படியாயின், இந்த சூரிய கிரகணம் மானுடத்திற்கு நன்மை செய்திருக்கிறது என்று ஆகிவிடும்.

Thursday, January 14, 2010

தமிழர் திருநாள், உழவர் விடுதலை நாளாக மலருமா?

இன்று தைப்பொங்கல். அதாவது தமிழர்கள் வாழும் நிலங்களில் அறுவடைத் திருநாள். உழவர்களின் திருநாளான இந்த பொங்கல் விழாவை, பாரம்பரியமாக தமிழர்கள் திருநாள் என்று அழைக்கிறோம். மறுநாள் உழவுத்தொழிலுக்கு உதவிகரமாக இருந்த மாடுகளுக்கு நன்றி சொல்லும் முகத்தோடு, மாட்டுப் பொங்கல் என்றும் கொண்டாடுகிறோம். பழமைப் பழக்கங்களில் ஊறிப் போயிருக்கும் நமது மக்கள், அறுவடைத் திருநாளை கொண்டாடும் எண்ணத்தில், தங்களுக்கு அள்ளிக் கொடுத்த சக்திக்கு நன்றி சொல்லும் விதத்தில், இயற்கையைத் தொழுவது என்று சூரியனை வழிபடுகிறார்கள். அதற்காகவே கதிரவனின் கதிர்களுக்கு எதிரே வெளியிடத்தில் பொங்கல் பானையை வைத்து, பொங்கி மகிழ்கிறார்கள். இது உழைக்கும் விவசாயியின் நன்றி காட்டும் பாணி. உழைப்பை செலுத்தியவர்கள், உழைப்பை மதிக்கின்ற முறை. இதில் எந்த மதத்திற்கும் நேரிடையாக சம்பந்தமில்லை. உழவர் பெருமக்கள் வழிபடும் சூரிய ஒளி இயற்கைச் சக்தியாக மட்டுமே காணப்பட வேண்டும்.
மதங்கள் மனிதர்களின் வாழ்க்கைக்கு நெறி காட்ட என்று கூறிக்கொண்டு, மானுடத்தின் நம்பிக்கைகளை நிறுவனமயமாக்கி, ஆளுக்கொரு மதத்தை அவனியில் படைத்து விட்டார்கள். ஒவ்வொரு மதமும் தன்னுடைய நிறுவனத்தை நிலைக்கச் செய்வதற்காக, பல்வேறு கதைகளை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விடவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றன. அப்படி கட்டவிழ்த்து விடப்படும் கதைகள் அனைத்தும், கடவுளர்களின் வாழ்க்கையைச் சுற்றி பிணைந்து வரையப்பட்டுள்ளன. அப்படி எழுதப்பட்டப் புராணங்கள் கற்பனைக் கதைகளாக இருக்கின்றன. அதனால்தான் பாரதியார், புராணங்கள் அனைத்தும் புரட்டெனக் கண்டோம்; ஆனால் அதில் நல்ல பல கவிதை கண்டோம் என்று கூறினார்.
இந்தியாவில் நாம் சந்திக்கும் பண்டிகைகளில், ஒவ்வொரு பண்டிகையும் ஏதாவது ஒரு கற்பனைக் கதையை, அதாவது புராணக்கதையை, அல்லது கடவுளின் கதையை அல்லது கடவுளுக்கு வேண்டியவர் கதையை சார்ந்து கொண்டாடப்படும். ஆனால் பொங்கல் திருவிழா மட்டும்தான், உழைப்பை அடிப்படையாகக் கொண்டு, கொண்டாடப்படும் பண்டிகை. இந்தக் கருத்தை இந்த ஆண்டு பொங்கல் விழா மேடையில், திரைப்பட இயக்குநர் ஜனநாதன் எடுத்துக் கூறினார். அப்படிப் பார்க்கப்போனால், மதம் சார்ந்த பண்டிகையாக இல்லாமல், உழைப்பு சார்ந்த பண்டிகையாக இந்த அறுவடைத் திருநாள் அடையாளம் காணப்படுகிறது.
இதைக்கூட புரிந்து கொள்ளாத சிலர் இது ஒரு மதத்தின் விழா என்பதாக எண்ணிக் கொண்டு, தள்ளி நிற்கிறார்கள். அவர்களது பார்வை மதவாதப் பார்வை யிலிருந்து எழுகிறது. மதங்களைத் தாண்டி, இயற்கை யை வேண்டும் மனிதனின் அணுகு முறை யை புரிந்து கொள்ளும் பக்குவம் இன்னமும் இங்கே வரத் தயங்குகிறது. அதனால்தான் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்களும், சிறுபான்மை மதத்தினரும் இந்த உழைப்பின் திருவிழாவை ஒரு மதத்தின் பண்டிகையாக சுருக்கிப்பார்க்கிறார்கள். ஆனாலும் கூட பெருவாரியான மக்களுக்கு இது தமிழர் திருநாளாக, மதங்கள் தாண்டிய, சாதிகள் மீறிய ஒரு நல்விழா நாளாக அடையாளம் காண முடிகிறது.
உழவர் திருநாளை, தமிழர் திருநாள் என்று அழைக்கிறோம். அதாவது தமிழர் என்றால் உழவர் என்று பொருள் என்பது தான் அதில் பதிந்து இருக்கும் உண்மைச் செய்தி. தமிழர்கள் விடுதலைப்பற்றியும், தமிழினத்தின் மேம்பாடு பற்றியும், தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றியும், தாய்மொழியின் சிறப்பு பற்றியும் பல்வேறு விதமான விவாதங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் அவற்றை அடைவதற்கான அடிப்படை என்ன என்று விவாதிப்பதில்லை. தமிழர்களுக்கான ஒரே விழாவாக, இந்த பொங்கல் திருநாள்தான் இருக்கின்றது என்பதால், இதை தமிழர் திருநாள் என்பதாக அழைக்கிறோம். அதுவும் உழவர்களின் உழைப்பை சார்ந்து, விளைந்து உள்ள அறுவடைத் திருநாளை, தமிழர் திருநாள் என்று அழைக்கிறோம்.
தமிழர்கள் விலங்கிடப் பட்டிருக்கிறார்கள். அவர்களது விலங்குகளாக சாதிக்கட்டுமானம், மத வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம், வர்க்க வேறுபாடுகள், ஆகியவற்றை அறிஞர்கள் அடையாளம் காண்கிறார்கள். தந்தை பெரியார் தமிழர்கள் எதற்கெல்லாம் அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதை, பிட்டுப்பிட்டு வைத்துள்ளார். அத்தகைய தமிழினத்தை இத்தகைய தடங்கல்களிலிருந்து அல்லது விலங்குகளிலிருந்து விடுவிக்க வேண்டுமானால், எத்தகைய அடித்தளத்தில் அந்த இனம் நிற்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதலுக்கு உதவும் விதத்தில்தான், தமிழர் திருநாள் என்று இந்த உழவர் திருநாளை அழைக்கின்றோம்.
உழவர்களின் அடிப்படை தளம் பற்றிய புரிதல் இப்போது தேவைப்படுகிறது. உழவர்கள் முழுமையாக உழவுத்தொழிலை சார்ந்து வாழ்பவர்கள். உழவுத் தொழில் ஊருக்கே சோறு போட்டாலும், மண்ணைச் சார்ந்து நிற்கும் தொழில். மண்ணில் உழவருக்கு இருக்கின்ற உறவு என்பதுதான் அங்கே தீர்மானகரமான பாத்திரத்தை வகுக்கிறது. இதை நில உறவுகள் என்றும் அழைக்கலாம். நிலத்துடன் மனிதனுக்குள்ள அதாவது உழவனுக்குள்ள உறவுகளை இது குறிக்கிறது. இந்த இடத்தில் தமிழனை, உழவனாக புரிந்து கொண்டு, இத்தகைய செய்தியை அணுக வேண்டும்.
நிலத்துடன் மனிதருக்குள்ள உறவுகளை பல வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று பண்ணையாருக்கும், நிலத்திற்கும் இருக்கின்ற உறவு. நிலத்தில் இறங்கி உழவு செய்யாமல், தண்ணீர் விலகாமல், பாத்திக் கட்டாமல், களைப் பறிக்காமல், உரம் போட தனது கரங்களை வழங்காமல், தானியங்களை அறுவடை செய்யாமல், களத்து மேட்டில் கட்டிப்போடாமல், நிலத்துடன் இருக்கும் சொத்துடைமையை மட்டுமே வைத்திருக்கும் மனிதர்கள் பண்ணையார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் வரப்பின்மேல் நின்று கொண்டு விவசாயத்தை பார்ப்பவர்கள். இவர்களைத்தான் அண்ணா, நிலம் ஆளும் முதலாளிகள் என்று அழைக்கிறார். இவர்களை எந்த விதத்தில் உழவர்கள் என்ற பட்டியலில் சேர்ப்பார்கள் என்பது புரியவில்லை.
வேறொரு வகையான நில உறவு, உழைக்கும் விவசாயிகளுக்கும், விளை நிலங்களுக்கும் உள்ள உறவு. அத்தகைய உறவு தங்கள் சொந்த நிலங்களில், தங்கள் குடும்பத்தினர் உழைக்க, மீதம் தேவையான உழைப்பை வெளியிலிருந்து வாங்கிக் கொள்கின்ற உறவு. இதை பணக்கார விவசாயிகளின் நில உறவு என்று அழைக்கிறார்கள். அடுத்த வகை உறவு என்பது, தங்கள் நிலங்களில் தங்கள் குடும்பத்தவர் உழைப்பை மட்டுமே முழுமையாக, அல்லது பெருவாரியாக சார்ந்திருக்கின்ற பிரிவினர். இவர்களை நடுத்தர விவசாயிகள் என்பதாக அழைக்கிறார்கள். அடுத்து இருப்பது ஏழை விவசாயிகளும், நிலமற்ற விவசாயிகளும். இவர்கள் தங்களுக்கென்று மிகச்சிறிய அளவு நிலத்தை வைத்திருப்பவர்களாகவோ, அல்லது நிலமற்ற கூலி உழவர்களாகவோ இருக்கிறார்கள்.
மேற்கண்ட நிலமற்ற, ஏழை விவசாயிகள் தங்களது உழைப்பு சக்தியை கூலிக்கு விற்றோ, அல்லது குத்தகைக்கு உழைத்தோ அல்லது பண்ணை யடிமையாக வாழ்ந்தோ, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் உழவுத் தொழிலின் முதுகெலும்புகள். இவர்கள் இல்லாமல் விவசாயப் பொருளாதாரம் இல்லை. அப்படிப்பட்ட உழவர் பெருங்குடி மக்களுக்கு, தமிழகத்தில் உள்ள விளைநிலங்கள் சொந்தமாக இல்லை. இதுதான் உண்மையான இடர்பாடு. இந்த உழவர் பெருங்குடி மக்கள், சாதி, மதம், பெண்ணடிமை, வர்க்க வேற்றுமை ஆகியவற்றால் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த உழவர்களின் கரங்களில், உழவு நிலங்களும், உழுபடைக் கருவிகளும் வருகின்ற நாள் எந்நாளோ, அதுதான் அவர்களின் விடுதலை திருநாள்.
உழவர் திருநாள் இப்படித்தான் விடுதலை திருநாளாக, தன்னை அறுதியிட்டுக் கொள்ள முடியும். அந்த விடுதலைத் திருநாள் ஒரு உழவர் புரட்சியின் மூலம் தான், சாத்தியமாகும். அதாவது உழவர் புரட்சி மட்டுமே, தமிழர் விடுதலையை சாத்தியமாக்கும். அதுவே தமிழர் திருநாளாக மலரும்.

Wednesday, January 13, 2010

பிலிப்பைன்ஸ் நாட்டு மார்க்கோஸ் வழியில் செல்கிறாரா ராஜபக்சே?

1965 முதல் 1986 வரை பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபராக இருந்த பெர்டினான்டு இமானுவேல் எட்ரலின் மார்க்கோஸ் வரலாறு ஒரு படிப்பினையாக இருக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. மார்க்கோஸ் ஒரு வழக்கறிஞராக இருந்தார். பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக 1949 முதல் 1959 வரை இருந்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் செனட் உறுப்பினராக 1959 லிருந்து 1965 வரை இருந்தார். 1963ம் ஆண்டு செனட் தலைவரானார். அவர் தன்னைப்பற்றி பெருமையாக கூறிக்கொண்டவர். வடக்கு லூசான் பகுதியில் ஆங் மகார்லிகா என்ற கொரில்லா படையின் தலைவராக, 2ம் உலக யுத்த காலத்தில் இருந்ததாக அவர் கூறிக்கொள்வார். அவரது நிர்வாகம் கடுமையான சர்வாதிகார, ஊழல், லஞ்சம், அரசியல் ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றால் நிரம்பி வழிந்தது. தனது ஆட்சி காலத்தில் அவர் மிகப்பெரும் தனிப்பட்ட செல்வாக்கைப் பெற்றிருந்தார். 1983ம் ஆண்டு ஜுனியர் பெனிக்னோ, அகினோ என்ற எதிர் கட்சி அரசியல் தலைவரை படுகொலை செய்த வழக்கில் அவரது ஆட்சி குற்றவாளியாக்கப்பட்டது. அதையொட்டி ஒரு அதிபர் தேர்தல் நடந்தது. அதுவே 1986ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் அதிகாரத்திற்கான புரட்சி நடப்பதற்கு ஒரு கிரியா ஊக்கியாக இருந்தது. அதுவே அதிகாரத்திலிருந்து இவரை கீழே இறக்கியது. உடனடியாக இவர் ஹவாய் தீவில் அடைக்கலம் தேடி ஓடினார். மார்க்கோசும், அவரது மனைவி இமல்டா மார்க்கோசும் பல லட்சம் கோடி டாலர் பெருமான பொதுப்பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள் என்று பின்னால் தெரிந்தது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, மற்ற நாடுகளில் பல்வேறு போலி பெயர்களில் இயங்கிய வர்த்தக குழுமங்களில் தான் ஆட்சியிலிருந்த 20 ஆண்டுகளிலும் சுருட்டிய பணத்தை போட்டு வைத்திருந்தார்கள் என்று அம்பலமானது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இப்போது அதிபர் தேர்தலை சந்திக்கிறார். அவரும், அவரது குடும்பத்தாரும் அதிகமான அளவில் பொதுப்பணத்தை கொள்ளை யடித்து விட்டார்கள் என்று இப்போது குற்றம் சாட்டப்படுகிறது. நேற்றைய பிலிப்பைன்ஸ், நாளைய இலங்கையாக இருக்குமா என்பதும், மார்க்கோஸ் சந்தித்த சூழலை, மகிந்த ராஜபக்சேவும் சந்திப்பாரா என்பதும் இப்போது விவாதிக்கப்படுகிறது.
தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, அதிபர் மார்க்கோஸ் படைபலம் திரட்டினார். பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகள் மூலமாக, சாதாரண குடிமக்கள் செய்ய வேண்டிய உள்கட்டுமான பணிகள், பொருளாதார திட்டமிடல், திட்டங்களை அமுல்படுத்தல் ஆகியவற்றையும், தொழிற்சாலை பகுதிகளை திட்டமிடல் மற்றும் வளர்ச்சிப் பணிகளையும் செய்து வந்தார். தனது அமைச்சரவையை மற்றும் அதிகாரிகளை நியமிப்பதில் உயர் தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வி கற்ற மேட்டுக்குடிகளை நியமித்து வந்தார். வியட்நாம் போர் நடக்கும் போது, 1965ல், தென் வியட்நாமிற்கு 10,450 பிலிப்பைன் நாட்டு போர் வீரர்களை, மார்க்கோஸ் நிர்வாகம் அனுப்பி வைத்தது. 1969ல் 2வது முறையும் மார்க்கோஸ் வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சிக்கு வந்தார். அப்போது தனது தனி நபர் செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். அனைத்து சட்ட ரீதியான அதிகாரங்களையும், உள்கட்டுமான கட்டுப்பாடுகளையும் மார்க்கோஸ் தனது கையில் வைத்திருந்தார். முழு பிலிப்பைன்ஸ் நாடும் அவரை சுற்றியே எதிர்பார்ப்பிலிருந்தது. வணிக அங்காடி களிலும், பள்ளிக்கூடங்களிலும் கூட, நாடு தழுவிய அளவில் அதிபர் மார்க்கோசுடைய பெரிய படங்கள் தொங்க வேண்டும். இல்லாவிடில் அந்த கடைகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் இழுத்து மூடப்படும். இப்படிப்பட்ட ஒரு தனி நபர் புகழ் பாடுதலை மார்க்கோஸ் உருவாக்கியிருந்தார். 1986ம் ஆண்டு ஆட்சியை விட்டு, கீழே இறக்கப்படும் வரை, மார்க்கோஸ் தனது புகழ் பாடுதலை நிறுத்தவில்லை. அவரது 2வது கட்ட ஆட்சிகாலத்தில் பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்தது. நாட்டில் குற்றங்கள் கூடிக்கொண்டே இருந்தன. கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஆயுதம் தாங்கிய புரட்சிகரப் போராட்டம் எழுச்சி பெற்றிருந்தது. பணவீக்கம் அதிகரித்து வந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பீசோ என்ற பணத்தின் மதிப்பு குறைந்து வந்தது. ஊடகங்கள் மார்க்கோஸ் அரசியலில் நுழைந்த காலத்திலிருந்து, சேர்த்து குவித்த கோடிக்கணக்கான சொத்துக்களைப்பற்றி கணக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். பல்வேறு இடங்களில் தனது பணத்தை மூலதனமாக மார்க்கோஸ் போட்டிருந்தார் என்பதும் வெளியாகிக் கொண்டிருந்தது. இடது சாரி இயக்க போராட்டங்களால், பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லா பிராந்தியங்களிலும் ஒரு குழப்பமான சூழல் இருந்தது. எண்ணை உற்பத்தி செய்யும் அரபு நாடுகள், இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியை கண்டித்து, அமெரிக்க ஆதரவான பிலிப்பைன்ஸ் அரசை எதிர்ப்பதற்காக, எண்ணை உற்பத்தியை நிறுத்தி விட்டார்கள். இயற்கை பேரழிவுகளும் நாட்டின் உள்கட்டுமானம், விவசாய உற்பத்தி மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை அழித்தது. உள்நாட்டு, வெளிநாட்டு லாப நோக்க சக்திகளின் விளைவாக அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை உயர்வு கூடிக் கொண்டே இருந்தது. 1960ன் கடைசி ஆண்டுகளிலும், 1970ன் தொடக்க காலத்திலும் மாணவர் இயக்கங்கள், அரசுக்கு எதிராக பல்வேறு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பெரும் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தியது. 1970ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள், 50,000 மாணவர்களும், தொழிலாளர்களும், அதிபரின் மாளிகையை முற்றுகையிட்டு நெருப்பிட்டனர்.
ராணுவம் அவர்களை விரட்ட, துப்பாக்கி சண்டை நேரடியாக நடந்தது. 4 பேர் பலியானார்கள். இருபுறமும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் பல்கலைகழகத்தில் பயிலும் 18,000 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மற்ற பள்ளிகளிலும், பாலி டெக்னிக் மற்றும் பல்கலைக்கழகங்களிலும், இடது சாரி இயக்கங்களின் செல்வாக்கில் மாணவர் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன.
1972ம் ஆண்டு செப்டம் 21ம் நாள், மார்க்கோஸ் ராணுவ சட்டத்தை அறிவித்தார். அதன் மூலம் ஊடக சுதந்திரத்தை தடை செய்தார். சிவில் உரிமை அமைப்புகள் செயல்படவிடாமல் தடுக்கப்பட்டன. ஊடக நிறுவனங்கள் கட்டாயமாக மூடப்பட்டன. எதிர்கட்சி தலைவர்களை கைது செய்ய உத்தரவுகள் பறந்தன. பல எதிர்கட்சி தலைவர்கள் தலைமறைவானார்கள். அதிபர் ஆட்சி முறை 1973ல் மாற்றப்பட்டு, நாடாளுமன்ற ஆட்சி முறையாக ஆனது. அதிலும் மார்க்கோஸே பிரதமராக ஆகிவிட்டார். ஒரு புதிய சமூகத்தை தோற்றுவிக்க, ராணுவ சட்டம் அதன் தொடக்கம் என்று மார்க்கோஸ் விளக்கம் அளித்தார். இமால்டோ மார்க்கஸ் அதிகமான அளவுக்கு வைரங்களையும், வைடூரியங் களையும் சேர்த்திருந்தார் என்பது வெளியே தெரிந்தது. தொடக்கத்தில் ராணுவ சட்டம் வரவேற்கப்பட்டது. பிறகுதான் மக்கள் மத்தியில் எதிர்ப்பு தொடங்கியது. மார்க்கோசின் சுயசர்வாதிகார ஆட்சிமுறையை, எப்படித்தான் பிலிப்பைன்ஸ் மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ என்று, உலக சமூகம் ஆச்சரியப்பட்டது. தங்களது சுதந்திரத்தை அழிப்பவனை எதிர்த்து மக்கள் எழவில்லையா என்று உலகம் கேட்டது. அமெரிக்க அதிகாரிகள் பிலிப்பைன்ஸ் நாட்டைப் பற்றி வர்ணிக்கும் போது, 4 கோடி கோழைகளும், ஒரு பிசாசின் மகனும் இருக்கும் நாடு என்பதாக கூறினார்கள்.
மேற்கண்ட ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ராஜபக்சேயின் ஆட்சிமுறையையும், இலங்கைத் தீவின் மக்கள் நிலையையும் நினைவுக்கு கொண்டு வந்தால், அதற்கு நாம் பொறுப்பல்ல.
பிலிப்பைன்சில் ஆயிரக்கணக்கான காட்டு மிரண்டித்தனமான மனிதர்கள், ராணுவத்தில் மார்க்கோஸ் ஆட்சியில் இருந்தார்கள். ஆயுதப்படையின் முக்கிய தளபதிகள்தான் 1972 முதல் 1981 வரை ராணுவ சட்டத்தின் நிர்வாகிகளாக கோலோச்சினார்கள். பிலிப்பைன்சின் அன்றைய 3 முக்கிய நிர்வாகிகள், இன்று நமக்கு மகிந்தாவையும், பசிலையும், கோத்தபாயாவையும் நினைவு படுத்துகிறார்கள். 1981ல் மார்க்கோஸ் ஆட்சியை பாராட்டிய அமெரிக்க துணை ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், மார்க்கோசின் ஜனநாயக கொள்கைகளை பகிரங்கமாக பாராட்டிவிட்டு, மார்க்கோஸ் தனிமைப்பட விடமாட்டோம் என்று சூளுரைத்தார். அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனுக்கு, மார்க்கோஸ் கோடிக்கணக்காக நிதி கொடுத்ததாகவும் கூறுவார்கள். 1986ல் தேர்தலில் கொலை செய்யப்பட்ட அகினோவின் மனைவி கோரசான், சுதந்திர தேர்தலுக்கான தேசிய இயக்கம் சார்பாக 8 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனாலும் அரசாங்க பட்டியல் 16 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மார்க்கோஸ் வென்றதாக காட்டியது. தேர்தல் தில்லு முல்லு அம்பலமானது. மக்கள் போர் வெடித்தது. 1983 ஆகஸ்டில் அகினோ படுகொலை செய்யப்பட்டார். மக்கள் எழுச்சி பலமடங்கானது. மார்க்கோஸ் அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவுக்கு ஓடினார். 1989ல் ஹோனலாலுவில் உடல் நலக்குறைவால் இறந்து போனார். அவரது மறைத்து வைக்கப்பட்ட சொத்துக்கள் எல்லாம் மக்களால், தேடி எடுக்கப்பட்டது.
மேற்கண்ட நிலைமைதான் ஜனவரி 26ம் நாள், இலங்கை அதிபர் தேர்தலுக்கு பிறகு மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்கு வரும் என்ற விவாதம் இப்போது எங்கெனும் தொடங்கியுள்ளது. சர்வாதிகாரிகள் விரட்டப்படுவார்கள் என்பது சரித்திரமாகட்டும்.