Friday, January 27, 2012

அன்றைய ராதாவும், இன்றைய ராதாவும்.

அய்.எஸ்.ஆர்.ஒ. வின் எஸ். பான்ட் ஊழல் இப்போது நாட்டை சுற்றி வரும்போது, அந்த புயலில் அடிக்கப்படும் மாதவன் நாயர் வகையாறாக்கள் கிளப்பும் கேள்விகள் நன்றாகத்தான் இருக்கின்றன. இன்றைய அய்.எஸ்.ஆர்.ஒ.வின் தலைவர் ராதாகிருஷ்ணன், அன்று 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிக பிரிவான ஆன்றிக்ஸ் சார்பாக தனியார் அமிப்பான தேவாஸ் உடன் ஒப்பந்தத்தை போடுவதில் உடன் இருந்தவர்தான் என்று இப்போது அம்பலப்படுத்துகிறார்கள். 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகுதான் அவர் புரண்டு, தங்களுக்கு எதிராக இப்படி ஒரு முடிவை எடுக்க காரணமாக இருக்கிறார் என்கின்றனர்.


இதுவே அனைத்து அதிகாரிகளும் சேர்ந்துதான் இந்திய திருநாட்டை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கிறது. இந்த அதிகாரிகளுக்கு தனி சுதந்திரத்தை தந்திருப்பது நாட்டின் தலைமை அமைச்சர் அலுவலகம். நாட்டின் மிக முக்கியமான ரகசியங்கள் என்ற பெயரில் இந்த அய்.எஸ்.ஆர்.ஒ.வின் செயல்பாடுகளை எந்த மத்திய அமைச்சரவைக்கோ, அல்லது நாடாளுமன்றத்திற்கோ, அல்லது ஊடகங்களுக்கோ, அல்லது நாட்டு மக்களுக்கோ தெரியவிடாமல், ரகசியமாக வைத்துக் கொள்ள இந்த நிறுவனத்திற்கு அதிகாரத்தை நமது சட்டம் கொடுத்துள்ளது. அதனாலேயே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளையும், அதன் நிதி போககுவரத்து கணக்குகளையும், வெளியே தெரியாமல் அதாவது மத்திய அமைச்சரவைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ, தெரியவிடாமல், தலைமை அமைச்சர் அலுவலகமே பார்த்துக் கொள்ளும் என்பதுதான் அதில் உள்ள விதிமுறை. இந்த அளவுக்கு முக்கியமான ஒரு விஷயம் அது என்றால் அதில் தவறுகள் நடக்கும் பொது, அது எனக்கு தெரியாது என்று கூறுகின்ற ஒரு பிரதமரை நாம் வைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பது இப்போது அம்பலமாகிறது.

இந்த கூத்தை ஒரு மாதவன் நாயர் மேல் மட்டுமே நடவடிக்கை எடுத்து முடித்துவிடாமல், எப்படி இதன் பொறுப்பை நாட்டின் பிரதமர் மீது கேள்வியாக எழுப்பபோகிறோம்?

அய்.எஸ்.ஆர்.ஒ. வேண்டாமே?

மாதவன் நாயர் போன்ற ஊழல் சக்திகள்தான் அந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் "அறிவியலாளர்கள்" என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பது இப்போது கண்கூடாக தெரிந்துவிட்டது. இந்த ஊழல் நாயர் இப்போது இருக்கும் அந்த நிறுவன தலைவரான ராதாகிருஷ்ணனை குற்றம் சுமத்துகிறார். தன்னை போட்டுக் கொடுத்து, தங்கள் மேல் அரசு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தவர் என்று அவர் இவரை குறை சொல்கிறார். இந்த ஆதிக்கவாதிகள் எப்போதுமே தங்களுக்குள் கள்ள கூட்டணி வைத்துக் கொள்பவர்கள். ஆனால் எப்போது தங்களை விட அதிகாரம் படைத்த அரசாங்கத்தால் ஒரு நடவடிக்கை தங்களுக்கு எதிராக வந்துவிட்டது என்றால், பயந்துபோய், அதற்கு இன்னொரு பலவீனமான சக்தியை குறை சொல்லி விடுவார்கள்.அரசாங்கத்தை அப்போதும் முழுமையாக எதிர்க்க மாட்டார்கள். ஏன் என்றால் இவர்கள் கொள்ளை அடிக்க ஏற்பாடு செய்து கொடுத்ததே அந்த அரசாங்கம்தானே?

இப்போது மாதவன் நாயர், ராதாகிருஷ்ணன் மீது பாய்கிறார். ராதாகிருஷ்ணன் நல்லவர் போல என்று நாம் நினைத்தால், இல்லை என்று மாதவன் நாயரே சான்று கூறுகிறார். தாங்கள் நடத்தும் அதாவது ஒய்வு பெற்ற அய்.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் நடத்தும் தனியார் நிறுவனமான "தேவாஸ்" உடன் செய்துகொண்ட அன்றிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் இருந்தவர் என்பதே அந்த குற்றச்சாட்டு.நாட்டு துரோக ஒப்பந்தம் செய்தபோது முதலில் இருந்தவர்தான் இந்த ராதாகிருஷ்ணனும் என்று மாதவன் நாயர் போட்டு கொடுத்து விட்டார். அப்படியானால் அந்த ஆன்றிக்ஸ்-தேவா ஒப்பந்தம் என்பது ஒரு கூட்டு சதிதானோ என்று நாம் புரிந்து கொள்ள உதவிகரமாக உள்ளது. ஆன்றிக்ஸ் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிக பிரிவின் பெயர். அந்த வணிக பிரிவு, ஒரு தனியாரான பெங்களூருவில் உள்ள தேவாஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும்போதுதான் இந்த நட்டங்களும், சிக்கல்களும் அம்பலமாகி உள்ளன.


இப்போது மாதவன் நாயர் என்பவரை ராதாகிருஷ்ணன் என்ற இன்னொரு நாயர் போட்டு கொடுத்து விட்டார் என்பதே செய்தி. அப்படியானால் இந்த நாயர்களும், மேனன்களும், எல்லோரையும் அடிமப்படுத்துவார்கள் என்பதும், அவர்களுக்குள் சண்டை வந்தால் ஒழிய அவர்களை வீழ்த்த முடியாது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.எப்படியோ இந்திய துணைக் கண்டத்தை இவர்கள் டில்லியில் இருந்து கொண்டு ஆண்டு வரும் போக்கினால், முதலில் "தமிழன்" பலிகடா ஆனான். இப்போது அவர்களுக்குள்ளே குடுமி பிடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.இன்று தினமணியில் ஒரு தலையங்கம். அதில் மேற்கு வங்கத்தில் ஊழலில் பிடிபட்ட ராணுவ அதிகாரிகளின் சலுகைகள், சம்பளம் உட்பட அனைத்தும் பறிக்கப்பட்டன என்றும் ஆனால் இந்த நாயர்களுக்கு இனி அரசாங்க பதவி கிடையாது என்று கூறியதற்கே கொதிக்கிரார்களே என்றும் எழுதியுள்ளார்கள்.


இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ன என்றால், இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவன கணக்குகள் எங்கும் வெளிப்படையாக இருக்க கூடாது என்றும் அது இறையாண்மையின் ரகசியம் என்றும் சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தை பபயன்படுத்தி கொண்டுதான் இந்த அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ரகசிய புதிய கண்டுபிடிப்புகளை தனியார் பெயருக்கு வாங்குவதும், அதையே அந்நிய நாட்டிற்கு பெரும் தொகைக்கு விற்பதற்கும் முடிந்துள்ளது. அதாவது "நாட்டு துரோகம்" என்ற குற்றப் பிரிவின் கீழ் இவர்கள் கைது செய்யப்படவேண்டும். இந்த விண்வெளி ஆராய்ச்சி நமது நாட்டிற்கு தேவையா? நாட்டில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் வறுமை இருக்கும்போது, பல ஆயிரம் கொடிகளை "விண்வெளி ஆராய்ச்சி" என்ற பெயரில் விரயம் செய்தால் நாடு வல்லரசு ஆகிவிடும் என்பது உண்மையா?


ஐரோப்பாவின் பல நாடுகள், உதாரணமாக டச்சு நாடுகள் எல்லாம் தங்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி தேவை இல்லை என்று ஒத்துக்கி விட்டார்கள். அவர்கள் தேவைப்பட்டால் பெரும் பணக்கார நாடுகளில் இருந்து வாங்கி கொள்கிறார்கள். அதுபோல தங்களுக்கு செயற்கை கொள் மூலம் தேவைப்படும் புள்ளி விவரங்களை இந்திய அரசும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து காசு கொடுத்து வாங்கி கொள்ளலாமே? எதற்காக அதற்கு தனி துறை என்றும் அதற்கு பல்லாயிரம் கோடி பணம் என்றும், அதை வெளியே தெரியாமல் செலவு செய்யவேண்டும் என்றும் சட்டம் போட்டு நாட்டின் இறையாண்மைக்கு இதுபோன்ற "அதிகார வர்க்க தரகு முதலாளிகளை" பதவியில் வைத்து அவர்கள் மூலமே நாட்டின் அரசு நட்டம் அடைவதும், அவர்கள் மூலமே நாட்டு ரகசியங்களை அன்னியருக்கு விற்கும் "துரோகத்தை" செய்வதும் நடைபெறுகிறது? ஆகவே பட்டினிகள் நிறைந்திருக்கும் நம் நாட்டிற்கு "விண்வெளி ஆராய்ச்சி" தேவையில்லை என்ற முழக்கத்தை நாம் முன்வைக்கலாம். வல்லரசாக ஆய்கொண்டிருக்கிறோம் என்ற மாயையை விடுத்து, நல்லரசாக் ஆக வழிபார்க்க சொல்லுவோம்.

Thursday, January 26, 2012

நீதியரசர்கள் ஒட்டுமொத்த பார்வையையும் பெற்றால்தான் நல்லதோ?

தமிழ்நாட்டில் செவிலியர்களுக்குள் மோதல் என்பதாக ஒரு நீதிமன்ற அறிவிப்பு புது பிரச்னையை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே கல்வி வணிகமான ஒரு நாட்டில், ஏற்கனவே சுகாதார துறையில் தனியார் மருத்துவ கல்லூரிகளையும், தனியார் மருத்துவ மனைகளையும், கட்டவிழ்த்து விட்டு எங்கும் தனியார், எதிலும தனியார் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ள நாட்டில், இப்போது தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்களா? அரசு பயிற்சி பள்ளிகளில் கற்ற செவிலியர்களா? யார் சிறந்தவர்கள்? என்றும், யாருக்கு அரசு பணிகளில் இடம் கொடுக்க வேண்டும் என்றும் ஒரு புதிய சர்ச்சையை நீதிமன்றமும், அரசாங்கமும் சேர்ந்து ஏற்படுத்தி உள்ளது.அதாவது அரசு பயிற்சி பள்ளிகளில் கற்று வெளியே வந்துள்ளவர்களை, முக்கியமாக பணிக்கு எடுத்து, அரசு மருத்துவமனைகள் நடந்து வரும் வேளையில், தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளும், அரசின் அங்கீகாரம் பெற்றுத்தானே இயங்கி வருகின்றன? அவற்றில் படித்து முடித்து வெளியே வரும் எங்களுக்கு ஏன் அந்த தகுதி இல்லையா? என்று கேள்வி கேட்க அந்த வேலையில்லா திண்டாட்டத்தால் அவதியுறும் தனியார் பயிற்சி பள்ளிகளின் செவிலியர்கள் தொடங்கினர்.

அதன் தொடர்ச்சியாக அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் கோரிக்கையை முன்வைத்து, போராட்டங்கள் நடத்தினர். அதுபோன்ற போராட்டங்களை சென்ற ஆட்சி சந்தித்தது. அதன்பிறகு அவர்கள் உயர்நீதிமன்றம் சென்றார்கள். அங்கே சுகுணா உட்பட நீதியரசர்கள் தனியார் பயிற்சி பள்ளி செவிலியர்களையும் அரசு பணிகளில் அமர்த்தும்படி தீர்ப்பு கூறினர். அதை அரசு அமுல்செய்யாத நிலையில், அரசின் நடவடிக்கைகளுக்கு அதாவது அரசு பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்களுக்கு மட்டுமே பணி என்ற நிலைக்கு, உச்சநீதிமன்றம் ஒரு தடையை அறிவித்துள்ளது. அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்த உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. அதை ஒட்டி தமிழக அரசும் தனியார் பயிற்சி பள்ளிகளில் பயின்ற செவிலியர்களை அரசு பணிகளில் சேர்க்க ஒரு அரசாணையை அறிவித்தது.

இதுகண்டு அதிர்ச்சி அடைந்த அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்று செவிலியர்களாக வெளியே வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு செவிலியர் பணியிடங்களில் தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்கள் நிரப்பப்பட்டுவிட்டால், அதுவே அரசு பயிற்சி பள்ளிகளில் படித்து வெளியே வரும் தங்களுக்கு அரசு பணியிடங்கள் கிடைக்காமல் போவதற்கான காரணமாக ஆகிவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதன்விளைவாகவே, இன்று அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களும், அரசு பயிற்சி பள்ளிகளில் படித்துவரும் செவிலியர் மாணவ, மனைவிகளும், தெருவில் இறங்கி போராட முன்வந்துள்ளதை காட்டுகிறது.. அதைகண்டு துணுக்குற்று தாங்கள் நீதிமன்றம் சென்று வாங்கி வந்த வேலை வாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ,அந்த தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர் மாணவ, மாணவிகளின் சங்கத்தார் அரசு பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்கள் மீது கோப்பப்படுவதும், அவர்களது போராட்டத்தை கொச்ச்சைப்படுத்துவதும், ஊடகங்களுக்கு வேண்டுமானால் "தீனி" யாக இருக்கலாம். ஆனால் அதுவே இருயதரப்பு செவிலியர்களுக்கும் "வாழ்க்கை உத்திரவாதமாக" இருக்காது. தனியார்துறை படித்தவர்களை, "தகுதி" குறைந்தவர்கள் என்று அரசுத்துறை பயின்றோர் சொல்வதும், பதிலுக்கு அவர்கள் இவர்களை போராடாதீர்கள் என்றும், நீதிமன்றம் செல்லுங்கள் என்றும் கூறுவதும், ஜனநாயக நாட்டில் ஈடுபடக்கூடியது அல்ல.

இரு தரப்பினரும் தங்களது வாழ்க்கை தேவைக்காக பணி தேடி பயில வந்தவர்கள்.இருவருமே வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்து வருபவர்கள். இருவருக்குமே செவிலியர் பணிகள் வேண்டும்.இரு தரப்புமே இந்தியாவிற்கு எப்படிப்பட்ட பொருளாதார திட்டமிடல் வேண்டும் என்று சிந்திப்பதை விடுத்து தங்கள், தங்கள் வேலை வாய்ப்புகளுக்கு மற்றவர்களால் பாதிப்பு வருமோ என்று எண்ணியே கோபப்படுகிறார்கள். இந்திய நாட்டில் முக்கிய துறை இந்த சுகாதாரத்துறை. தமிழ்நாட்டில் அந்த துறை பெறும் அளவில் முன்னேறி இருக்கிறது. அதை நேற்று டாக்டர் பினாயக் சென் அவர்களே கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது ஏன் தமிழக அரசு இந்த பிரச்சனையை சரியாக கையாள முடியவில்லை? ஏன் நீதிமன்றம் இந்த பிரச்சனைக்கு முழுமையான தீர்வை தராமல் இருபிரிவினரையும் "கோர்த்து" விட்டுள்ளது?.ஏன் அந்த தீர்ப்பை சரியாக அமுல்படுத்த தங்கள் யதார்த்தத்தை மனதில் வைத்து அரசுத்துறை பயின்ற மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் சுகாதாரத்துறை அணுகுமுறையை எடுக்கவில்லை?

இந்தியாவில் தனியார் துறை என்பதே "லாபம்" தேடும் நோக்கோடு உருவானதுதானே? இது நீதிமன்றத்திற்கு ஏன் தெரியவில்லை? சேவைத்துறை என்பது அரசு கைகளில் இருக்கும்வரை அது சேவை மனோபாவத்துடன் செயல்பட்டு வரும்.அதுவே தனியார் கைகளில் செல்லும்போது, சேவையை "வணிகமாக்கும்" லாப நோக்கோடுதானே செயலப்டும்? லாப நோக்கோடு செயல்படும் தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு துறையில் அதேபோல பயின்று வெளிவரும் மாணவ, மாணவிகளின் அளவுக்கு சேவை மனோபாவ அனுபவங்கள் கிடைக்க வாய்ப்பு குறைவுதானே? இந்த உண்மையை ஒப்புக்கொள்ளத்தானே செய்யவேண்டும்? அப்படி இருக்கும்போது, அரசு துறை பயின்ற மாணவ, மாணவிகள் பணி தேடி போராட வருவதையும் நியாயம் என்று ஏன் நீதிமன்றம் பார்க்கவில்லை? இந்த பிரச்சனையின் முழு உணமைகளை நீதியரசர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று கூறமுடியும் அல்லவா?

நாட்டில் எங்கும் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. சுகாதார துறையில் இன்னமும் ஏகப்பட்ட செவிலியர்களும், மருத்துவர்களும் தேவைப்படுகிறார்கள். இப்போது பன்னிரண்டு லட்சம் செவிலியர்கள் நாடெங்கும் இருப்பதாகவும், இருபத்திநாலு லட்சம் செவிலியர்கள் மொத்தம் தேவைப்படுவதாகவும் ஒரு கணக்கு கூறுகிறது.அப்படியானால் அரசு மற்றும் தனியார் நிறுவன கல்வி நிலையங்களில் படித்து வெளிவரும் அனைவருக்கும் வேலை கொடுக்க அரசால் முடியும். பின் எதற்காக இந்த "தடை போக்கு"? அரசு மருத்துவமனையில் இருக்கின்ற ஒரு ஐ.சி.யு. என்ற அறையில், அதாவது அவசர சிகிச்சை பிரிவு என்ற இடத்தில் ஒரு நோயாளிக்கு அதாவது ஒரு கட்டிலுக்கு ஒரு செவிலியர் எந்நேரமும் இருக்க வேண்டும். அதாவது மூன்று ஷிப்டுகளிலும் நோயாளியை கவனிக்க செவிலியர் ஒருவர் இருக்க வேண்டும்.ஆனால் அந்த அறைக்கு முழுவதும் சேர்த்தே ஒரே செவிலியர் மட்டுமே இருக்கிறார் என்ற உண்மை இருக்கிறது. ஆகவே செவிலியர் எண்ணிக்கை அரசு மருத்துவ மனைகளில் அதிகப்படுத்தப்பட் வேண்டியது கட்டாயம்.அப்போது இரு பிரிவு செவிலியர்களுக்கும் பணி உத்திரவாதம் கிடைக்கும்.


அரசு மருத்துவமநிகளில் பணியாற்றும் மருத்துவர்கள்தான், தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் பணியை செய்கிறார்கள். ஏன் தனியார் மருத்துவமனைகள் தங்களை போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்த மருத்துவர்களை தங்கள் மருத்துவமனைகளில் அமர்த்தி கொள்வதில்லை? அவர்கள் திறமை குறைந்தவர்கள் என்று அந்த தனியாரே நினைக்கிறார்களா? தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயில மாணவர்கள் முப்பது லட்சமும், நாற்பது லட்ச்சமும் கட்டாய நன்கொடை கொடுத்து படிக்கிறார்களே? அவர்கள் எந்த நோக்கத்தில் மருத்துவ தொழிலில் ஈடுபடுவார்கள்? லாபம் சம்பாதிக்கும் நோக்கிலா? சேவை செய்யும் நோக்கிலா? இதே கணக்கு செவிலியர் பயிர்ச்ச்சிக்கும் பொருந்தும் அல்லவா? ஆனாலும் வேலையில்லா திண்டாட்ட நாட்டில், வேலை தேடிவரும் தனியார் பயிற்சி மாணவர்களுக்கும் வேலை உத்திரவாதம் வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.


ஆகவே அரசு பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு பணி எப்படி கட்டாயமாக உண்டு என்பதை சுகாதாரத்துறை கூறவேண்டும்.இந்த விசயத்தில் நீதியரசர்களுக்கு விவாதத்தில் உள்ள வழக்கில் வாதம் செய்யபப்டும் வேலை வேண்டும் என்பது மட்டுமே புரிகிறது. அவர்கள் முழு சமூக கண்கொண்டு பார்க்க பயிற்சி பெறவேண்டும். ஏன் இப்படி கூறவேண்டி வந்துள்ளது? இதேபோல "மக்கள் நல பணியாளர்கள்" விசயத்திலும் அதே நீதியரசர் சுகுணா, ஒரு தீர்ப்பை கூறினார். மக்கள் நல பணியாளர்களுக்கு பணி கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த தீர்ப்பை கொடுக்கும்போது சில வாதங்களை அவர் முன்வைத்துள்ளார். அதாவது அரசு தரப்பு வாதத்திற்கு பதில் என்ற பெயரில், வேலை வாய்ப்பு அலுவலக விதிகளில், மக்கள் நல பணியாளர்களை அதன்மூலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறப்படவில்லை என்பது சுகுணாவின் வாதம். எப்போது வேலைவாய்ப்பு துறை விதிகள் உருவாகின? எப்போது மக்கள் நல பணியாளர்கள் என்ற வேலைப்பிரிவு உருவானது? இப்படி ஒப்பிட்டு பேசலாமா? சரி. வாதத்திற்கு அது சரி என்று வைத்துகொண்டாலும், வேலை வாய்ப்பு அலுவலக விதிகளில் மக்கள் நல பணியாளர்களை எடுக்க கூடாது என்று எங்காவது கூறப்பட்டுள்ளதா? அப்படி இருக்க ஏன் இந்த நீதியரசர் சொதப்புகிறார்?

அடுத்து இட ஒதுக்கீடு மக்கள் நல பணியாளர்கள் விசயத்தில் பின்பற்றப்படவில்லை என்ற வாதம். கிராமத்தில் மக்கள் நல பணியாளர்களாக வேலை செய்பவர்கள் அனைவரும் அடிமட்டத்து மக்கள்தான் என்றும், அதனால் தனியாக இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் இந்த நீதியரசர் சுகுணா கூறியுள்ளார். இது அதிகப்பிரசங்கி தனமாக் உள்ளது. நகர்புறத்தில், மேட்டுக்குடி சமூகத்தில் வளர்க்கப்பட்ட சில நீதியரசர்களுக்கு கிராம சூழல் தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்கு இட ஒத்துக்கீடு என்பது தங்களுக்கு இல்லாத ஒன்று என்பதுதான் தெரியும். கிராமப்புற இட ஒதுக்கீட்டில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரிவுகளாக இருக்கிறது எனபதும் அதில் பிறபடுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு நிரப்பப்பட்டாலும், தாழ்த்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு வழமையாக நிரப்பப்படுவது இல்லை என்பதும் இந்த நீதியரசர்களுக்கு, அவர்களின் வளர்ப்பு காரணமாக தெரிந்திருக்க நியாயம் இல்ல. ஆகவே அப்படி தீர்ப்பில் "தவறான" வாதங்களையும் முன்வைத்து விடுகிறார்கள். அதனால்தான் இந்த நீதியரசர்களுக்கு முழுமைப்பார்வை தேவை என்ற எண்ணம் நமக்கு வருகிறது.

Wednesday, January 25, 2012

ஊழல் நாயர் மாட்டிக்கிட்டாரா?

மாதவன் நாயர் என்ற பெயர் ஒரு பெத்த பேரு. அய்.எஸ்.ஆர்.ஒ. என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.அதுதான் அவ்வப்போது செயற்கைகோள்களை வானத்திற்கு அனுப்பும். நமது சிறி ஹரிகோட்டாவில் இருந்து அப்படி வானத்திற்கு செயற்கை கோள்களை அனுப்பும்போதெல்லாம் நாம் பூரித்து போவோம்.அதாவது இந்தியா வல்லரசாகி வருகிறது என்று நமக்கு அரசியல்வாதிகளும், ஊடகவியலாலகளும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.நாமும் வயிறு பசித்தாலும் பராவாயில்லை, இந்தியா வல்லரசானால் போதும் என்று மகிழ்ச்சியாகவே இருந்து வருகிறோம்.அப்படி செயற்கை கொள் விடும்போதெல்லாம், அந்த வட்டாரத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு போக கூடாது என்று அதிகாரிகள் கட்டுப்பாடு விதிப்பார்கள். அதாவது கட்டாயமாக அந்த பத்து நாட்கள் அந்த வட்டார மீனவர்கள் பட்டினிதான். இப்படியாக நாம் வல்லரசாக ஆகிவரும் போது, அந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பெறும் ஊழலில் சிக்கி கொண்டார்கள்.


இந்திய நாட்டின் முகத்தையே மாற்றி ஊழல் முகமாக ஆகிய கார்பொறேட்களை விட, இந்த அரசு அதிகார வர்க்க முதலாளிகள் செய்த ஊழல் அளவு கடந்து சென்று விட்டது. அதாவது இரண்டு தலைமுறை அலைவரிசை ஊழல் செய்த நட்டத்தை விட, ஆதர்ஷ் ஊழல் மஹாராஷ்ற்றாவில் செய்த நட்டத்தை விட, காமன்வெல்த் விளையாட்டு செய்த ஊழலை விட, இந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செய்த ஊழல் பெறும் ஊழலாக கணக்கு காட்டியது. அதாவது இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரிகள் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.தேவா என்று அதற்கு பெயர். அது பெங்களூருவில் இருக்கிறது. அதற்கு இந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது "புதிய" கண்டுபிடிப்புகளை விற்று விட்டது. அதாவது இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஆராய்ச்சி செய்து உருவாக்கிய கண்டுபிடிப்பை, ஒரு தனியார் நிறுவனத்திற்கு "பகிரங்க ஏலம்" அறிவிக்காமல் விற்று விட்டது. அதுவும் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த நிறுவனத்தில் அப்படி ஒரு ஊழல் நடைபெற்றது.

ஆன்றிக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வணிக பிரிவுடன், இந்த ஒய்வு பெற்ற விஞ்ஞானிகளின் தனியார் நிறுவனமான தேவாஸ் என்ற கொள்ளை லாப அமைப்பு போட்டுக் கொண்ட ஒப்பந்தம்தான் ஆன்றிக்ஸ்- தேவா ஒப்பந்தம். விற்றவர்கள் அய்.எஸ்.ஆர்.ஒ. வின் மூத்த அதிகாரிகள். வாங்கியவர்கள் அதே அய்.எஸ்.ஆர்.ஒ.வின் பழைய மூத்த அதிகாரிகள். பழைய அய்.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் எப்படி இப்படி ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கலாம்? யாருக்கும் தெரியாத புதிய கண்டுபிடிப்பை அய்.எஸ்.ஆர்.ஒ. உருவாக்கியிருப்பதை பழைய ஒய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே எப்படி தெரிந்து கொள்ளலாம்? அது நாட்டின் ரஹசியம் இல்லையா? அதை பகிரங்க ஏலத்திற்கு விடாமல் எப்படி அந்த நிறுவன அதிகாரிகள் தங்கள் மூத்த அதிகர்ரிகளின் தனியார் நிறுவனத்திற்கு மட்டும் தெரியப்படுத்தலாம்? அதை வாங்கிய அந்த தனியார் நிறுவனமான தேவா நிறுவனம் எப்படி அதை பல்லாயிரம் கொடி ரூபாய்க்கு அந்நிய நாட்டு கார்பொறேட்களுக்கு விற்கலாம்? இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்திய தலைமை அமைச்சரின் நேரடி பார்வையின் கீழ் இருப்பதால், எப்படி அந்த வியாபார ஒப்பந்தத்தை நமது பிரதமரும் அனுமதிக்கலாம்? இத்தனை கேள்விகள் வரும்போது, அந்த வணிக ஒப்பந்தத்தால் நாட்டிற்கு "இரண்டு லட்சம் கோடி" நட்டம் என்ற கணக்கை "பொது கணக்கு குழு" கொடுத்தது.


அதற்கு பிரதமர் மன்மோகன் தனக்கு இதுபற்றி தெரியவில்லை என்று எளிதாக கூறிவிட்டார். இப்போது அந்த ஒப்பந்தத்தின் கதாநாயகன் "மாதவன் நாயருக்கும், மூன்று அதிகாரிகளுக்கும்" எதிராக ஒரு ஓலை வந்துள்ளது. அதை எதிர்த்து அந்த விஞ்ஞானிகள் பெங்களூருவில் மாதவன் நாயர் வீட்டில் கூடி சதி ஆலோசனை நடத்தி உள்ளனர். எப்படி எங்களை அரசு பதவிகள் எதற்கும் எடுக்க கூடாது என்று முடிவை அறிவிக்கலாம்? என்பதே இப்போது அந்த நாயரின் கேள்வி. அவரை நட்டு துரோகம் என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்காததால் இப்படி கேட்கிறாரா? இந்த மாதவன் நாயர்தான் தனது செயற்கை கோளை"காலஹஸ்தி" கோவிலில் மாதிரி என்று கொண்டு சென்று வைத்து பூசை செய்தவர். அதாவது அறிவியலில் நம்பிக்கை இல்லாமல் "கல் சாமியிடம் போய் கும்பிட்டு விழுந்தவர். அந்த குறிப்பிட்ட செயற்கை கோலும் தோல்வி அடைந்து விட்டது. இப்போது போய் அந்த சாமியிடம் கேட்க வேண்டியதுதானே?

Tuesday, January 24, 2012

மொழிப்போர் தியாகிகள் நாளில் உண்மையான சூளுரை.

இந்தி எதிர்ப்பு தியாகிகள் எனப்படுபவர்கள் தமிழ்நாட்டில் "தாய் மொழி தமிழுக்காக" போராடியவர்கள்.தாய் மொழி தமிழை கற்க விடாமல், மாற்று மொழி இந்தியை தமிழ்நாட்டு மக்கள் மீது திணிப்பது என்ற ஒரு தந்திரத்தை மத்திய அரசு எடுத்தபோது, அதை எதிர்த்து வீறு கொண்டெழுந்த போராட்ட வரலாற்றில்தான், தமிழ்நாட்டு அரசியலில் "திராவிட" கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. தந்தை பெரியார் தொடங்கி வைத்த அந்த போராட்டம் இன்று வரை உயிர் பெற்று நிற்கிறது. அதனால்தான் இன்றும் நாளைய சனவரி இருபத்தைந்தாம் நாளை திமுக, அதிமுக, மதிமுக, நாம் தமிழர், ஆகிய கட்சிகளும் "மொழிப்போர் தியாகிகள் நாளாக ", " வீரவணக்க நாளாக ", மொழிப்போர் ஈகிகள் நாளாக" அறிவித்துள்ளனர்.

முதல் கட்ட மொழிப்போர் 1938 முதல் 1940 வரையும், இரண்டாம் கட்ட மொழிப்போர் 1943 முதல் 1950 வரையிலும் , மூன்றாம் கட்ட மொழிப்போர் 1950 முதல் 1961 வரையிலும், நான்காவது கட்ட மொழிப்போர் 1963 முதல் 1965 வரையிலும் தமிழ்நாட்டில் நடந்தது. அதற்குப்பின் இன்றுவரை அந்த மொழிப்போர் நிகழ்வுகளில், தனித் தானே தியாகம் செய்த தமிழின உணர்வாளர்களின் நினைவாகவும், காவல்துறை துப்பாக்கி சூட்டில் தியாகியான தமிழின உணர்வாளர்களின் நினைவாகவும், நாம் அந்த நாளை தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கிறோம். இந்த நேரத்தில் ஒரு வாக்குறுதியை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவின் முன்னால் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு ஒரு வாக்குறுதியை தமிழ்மக்களுக்கு தந்தார். அதில் தமிழ் பேசும் மக்களும், இந்தி பேசாத மாநிலத்தின் மக்களும், தாங்களாகவே முன்வந்து, இந்தி மொழியை ஏற்கும்வரை மத்திய அரசு இந்தியை திணிக்காது என்று ஒரு வாக்குறுதியை தந்தார். அந்த வாக்குறுதி "காற்றில்" பறக்க விடப்பட்டது என்பது வேறு ஒரு செய்தி. ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் தலைமை அமைச்சர் கூறியுள்ள வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டாமா என்ற கேள்வியை நாம கேட்கவேண்டும்.


அது என்ன மன்மோகன் கொடுத்த வாக்குறுதி? 2004 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பின் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக ஒரு "குறைந்த பட்ச வேலை திட்டம்" முன்வைக்கப்பட்டது. அதில் தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குவதற்கு ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதாவது "அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில்" உள்ள அனைத்து மொழிகளையும் "இந்தியாவின் அட்சி மொழியாக" ஆக்குவதற்கான ஒரு ஆய்வு குழுவை நியமிப்போம் என்று கூறியிருந்தார். அதை மன்மோகன்சிங் 2004 ஆம் ஆண்டு மே ௨௭ ஆம் நாள் வெளியிட்டார்.அதன்படி,டாக்டர் சித்தகாந்த் மகாபத்ரா குழுவை நியமித்தார். அந்த குழுவும் தனது ஆலோசனைகளை மன்மோகன்சிங்கிடம் கொடுத்து விட்டது. அந்த குழு தனது ஆலோசனைகளை கொடுத்து நான்கு ஆன்டுகள் ஆகியும் மத்திய அரசு அந்த அறிவுரைகளை கிடப்பில் ஒட்டு விட்டு சும்மா இருக்கிறது. அதை இப்போது மொழிப்போர் தியாகிகள் நாள் கடைப்பிடிக்கும் திமுக வும் தனது கூட்டணி தலைவர்களிடம் கேட்கவில்லை. ஆகவே இந்த நாளில் நாம் உரத்த குரலில் அந்த சித்தகாந்த் மகாபத்ரா குழு அறிக்கையை வெளியிடு என்று மத்திய அரசை கேட்கவேண்டும். அதுவே இந்த நாளின் "கோரிக்கையாக" எழ வேண்டும். அதுவே "தமிழ்மொழியாயும்" இந்திய அட்சி ம்கொழி ஆக்குவதற்கு இட்டு செல்லும். அது மட்டுமே மொழிப்போர் தியாகிகளின் கனவை நனவாக்க ஒரே வழி.

Friday, January 20, 2012

பெருமை தேடுவது சிறுமைதானே.

ஒரு மனிதர் தனது பொங்கல் விழாவில் சொன்னாராம். தான்தான் தமிழ்நாட்டில் ஆட்சியை மாற்றியவர் என்று கூறினாராம். முதலில் ஒரு தனி மனிதர் ஆட்சியை மாற்ற முடியுமா? அடுத்து அப்படி மாற்ற ஒரு தனி மனிதர் காரணம் என்றால் அவர் "பெரியார்"போல, "அண்ணா" போல, குறைந்த பட்சம் "அண்ணா ஹசாரே"போல அதிக நாட்கள் மக்கள் மத்தியில் அதற்கான பணிகளில் ஈடுபட்டவராக இருக்க வேண்டும். அப்படி ஈடுபட்டவர்கள் கூட தானே வாய் திறந்து அப்படி சொல்லமாட்டார்கள். மக்கள்தான் ஆட்சியை மாற்றும் மந்திரக்கோலை கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்.அதனால் அத்தகைய பெரிய மனிதர்கள் கூட, மக்களை திசை வழிப்படுத்தினார்கள் என்றுதான் நாமே கூறுவோம் . .

உண்மை அப்படி இருக்கையில் ஒரு தனி மனிதர் தன்னைத்தானே ஒரு ஆட்சி மாற்றத்திற்கு காரணமானவர் என்று பீற்றிக் கொண்டால், ஒன்று அவருக்கு மன நிலை எப்படி இருக்கிறது என்ற கேள்வியும் எழும். இந்த குறிப்பிட்ட மனிதர் "நிழல் மனிதர்" என்றும் ஊடகங்களால் அழைக்கப்பட்டவர்.இவர் யாருக்கு நிழல் என்பதில் சிலருக்கு குழப்பம் இருக்கலாம்.ஆனால் அவர் யாருக்கும்நிழல் அல்ல என்பதும், அவரது சித்து விளையாட்டுக்கள் எல்லாமே இப்போது சமீபத்தில் அம்பலமாகி அவரும், அவரது குடும்பத்தாரும் நிலையில்லா நிலைக்கு வந்ததும் யாவரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர் ஏன் தன்னை இப்படி ஒருபெரும் வேலையை செய்த திறமைசாலி போல காட்டிக் கொள்கிரார்? "கேழ் விறகில நெய் வடியுதுன்னா, கேட்கறவன் புத்தி எங்க போச்சு" என்று கிராமத்தில் கூறுவார்கள்.

இந்த நாட்டில் இதுபோல பல காரியங்கள் நடக்கும் பொது, இதே போல பல பேர் தாங்கள்தான் அந்த மாற்றங்களுக்கு காரணம் என்று பீற்றி கொல்வது நடக்கிறது. .இந்த "புளுகுன்னி" வேலையை செய்யும் சிலர் "தொண்டு நிறுவன" இயக்குனர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அதனால் பலன் உண்டு. ஏமாறும் நிதி நிறுவனங்கள் அவர்களுக்கு அந்த கூற்றை நம்பி பணம் கொடுப்பார்கள். சிலர் இதுபோன்ற "பெருமைகளை" கூறி தனகளது "தொழிலை"நடத்துவார்கள். எடு எப்படியோ, இதுபோன்று பெருமை தேடுபவர்கள் செய்யும் அல்லது சொல்லும் செய்திகள் எப்படியானாலும் "சிறுமை"தானே.

Wednesday, January 18, 2012

எஸ்.எம். கிருஷ்ணா தமிழக மீனவர்களின் நிலைமையை புரிந்து கொண்டாரா?

கிருஷ்ணா கொழும்பு சென்றார். தமிழர்களுக்கு அதிகார பகிர்வு பற்றி பேசினார். அதிசயமாக ராஜபக்சே ஒப்புக் கொண்டார். பதின்மூன்றாம் சட்ட திருத்தம் பற்றி வாய் கிழிய பேசினார்கள். அது என்னடா? பதின்மூன்றாம் சட்ட திருத்தம்? ராஜீவ் காந்தியும், ஜெயவர்தனேயும் பேசி, தமிழர்கள் அல்லாத அந்தஇரண்டு மண்டைகளாலும் தமிழருக்கென்று ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டதே, அந்த ஒப்பந்தத்தில் உள்ள "வடக்கு-கிழக்கு" ஒன்றுபட்ட பிரதேசமாக இருக்க, அதை "தமிழர் தாயகம்" என்று அழைக்க கூட, சக்தியில்லாத பதின்மூன்றாம் சட்ட திருத்தம் என்ன தீர்வு? கேட்கிறவன் எல்லாம் கிறுக்கனா?

ராஜபக்சே நடத்தும் ராஜாங்கத்தில், ஒவ்வொரு பிராந்தியத்தின் கவுன்சில் அதிகாரத்தின் கீழும், "நிலமும், காவல்துறையும்" வராது என்ற சட்டம் எப்படி சுயாட்சி பற்றி பேசும்? வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள குடியேற்றம் திருப்ப பெறப்படும் என்று ராஜபக்சே கூறினாரா? அல்லது கிருஷ்ணா அதுபற்றி கேட்டாரா? அப்புறம் எப்படி தமிழருக்கான அதிகாரப்பகிர்வு பற்றி பேச முடியும்? சிங்கள ராணுவம் வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேற்றப்படும் என்று சிங்கள அரசத்தலைவர் கூறினாரா? அல்லது கிருஷ்ணா அதுபற்றி பேசினாரா? அப்புறம் எப்படி தமிழர்கள் பற்றி பேச முடியும்? இவர்கள் வேறு எதையோ மறைக்க இந்த அதிகாரபகிர்வு என்ற "போலி முகமூடியை" போட்டு கொள்கிறார்கள்.

அதாவது "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்" ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அங்கீகாரம் பெற்று விடும் போல உலக சூழல் மாறி வருகிறது. அய்.நா. சபையின் அணித உரிமை கவுன்சிலில் அதன் பிரதிநிதிகள் அமர்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் நடந்த " காமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள்" மாநாட்டில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்க வெளிவிவகார அமைச்ச்சர்" அமர்கிறார். அதே மாநாட்டில் ராஜபக்சேவும் இலங்கை சார்பாக அமர்கிறார். அப்படியானால் சிறிது, சிறிதாக இரண்டு நாடுகளுக்கும் இலங்கைக்குள் பிரதிநிதித்துவம் கொடுக்க உலக சமூகம் தயார் ஆகிவிட்டது என்று பொருளா? . இத்தகைய செயல்பாடுகள்தான் இலங்கை சிங்களர்களை அசைத்ததோ இல்லையோ, டில்லியை அசைத்துள்ளதாக தெரிகிறது. அரசியல் போராட்டத்தில் புலிகளும், ஈழத்தமிஹ்ரகளும் வென்று வருகிறார்களே? அதை உடைக்க வேண்டுமே என்று டில்லிகருதி கிருஷ்ணாவை அனுப்பியுள்ளதா?


இந்த வல்லாதிக்க சக்திகளின் எந்த செயலும், உலக தமிழர்களை இனியும் சற்று கூட பின்வாங்க செய்யாது. தமிஹீழம் மட்டுமே ஒரே தீர்வு எனப்தை உரத்த குரலில் கூவி கொண்டே இருப்போம். அய்.நா. தலையீடு வந்துதமிழீழம் கிடைத்து விடக் கூடாது என்று டில்லி அக்கறையாக இருப்பது தெரிகிறது. அடுத்து "இந்து மகா சமுத்திரத்தில்" சரவதேச எல்லையை கடலில் தாண்ட கூடாது என்று பேசியிருக்கிறார்கள். கிருஷ்ணாவிற்கோ, டில்லிக்கோ, மீனவர்கள் என்றால் என்னென்று தெரியுமா? இந்திய- இலங்கை இடையே கடலில் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரியுமா? அங்குள்ள நிலைமை தெரியுமா? அதில் விசைப்படுகுகள் எவ்வளவு தூரம் தாண்டி மட்டுமே மீன் பிடிக்க முடியும் என்பது தெரியுமா?கட்ச தீவு எவ்வளவு தூரத்தில் இந்திய எல்லையில் இருந்து இருக்கிறது என்று தெரியுமா? கட்ச தீவு ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை இலங்கை அரசு இப்போது மறுத்து பேசுகிறது என்று தெரியுமா? இதெல்லாம் தெரியாமல் இந்த ஆள் எப்படி மீனவர்களை பற்றி பேசலாம்?