Wednesday, March 3, 2010

வரலாற்றில் உருவாக்கப்பட்ட சாதியம், மறுதலிக்கப்படுகிறதா?

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கடை சியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வுரை வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக அம்பேத்கர் நோக்கில் சாதிகளுடைய தோற்றம் பற்றி விரி வாகக் கூறப்பட்டது. அம்பேத்கர்
சாதியத்தை அழிப்போம் என்று எழு திய நூல் ஆழமான அடித்தளத்தை முன்வைக்கிறது. சாதியம் ஒரு நோய் என்று ஏற்கப்பட்டாலும், அது இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. மேற்படி கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் சிவசுப்பிரமணியன் சிலவற்றை கோடிட்டு காட்டுகிறார். 1946ம் ஆண்டு இந்தியாவில் சாதிஅதன் செயல்பாடு தோற்றம் என்ற நூலை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹட்டன் எழுதியதையும் மேற்கோள் காட்டினார். இதுவரை 5000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் இந்தியாவில் உள்ள சாதிகள் பற்றி வெளியாகியுள்ளன. சமூகக் கொள்கைகளின் அடிப்படையில்
சாதிகளை ஆய்வு செய்யும் தன்மையுள்ள நூல்களை மட்டும், இவற்றில் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் மற்ற நூல்கள் ஒவ்வொரு சாதியையும், வானம் வரை உயர்த்தி எழுதப்பட்ட நூல்களாக இருக்கின்றன. உதாரணமாக தமிழ்நாட்டில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள் என்பது வரலாறு. தங்கள் சாதியை மன்னர் பரம்பரை என்று
சொல்லிக் கொள்ள, ஒவ்வொரு சாதிக் காரர்களும் விரும்புகிறார்கள். இதுதான் பெருமைக்குரியது என்றும் நம்புகிறார்கள். அதனால் சேர, சோழ, பாண்டிய மன்னர்களாக தங்கள் சாதியை சேர்ந்த வர்கள்தான் ஆண்டார்கள் என்று சொல் லிக் கொள்வதில் அத்தனை விருப்பம். அத்தனை வேகம். அதன் விளைவாக ஒரு
சாதியைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் தனக்கு நெருக்கமான பேச்சாளரிடம், நிதி கொடுத்து தங்கள் சாதியின் வரலாறு பற்றி ஆய்வு செய்யச் சொன்னாராம். அவரும் மூவேந்தர்களும் தங்கள் சாதிதான் என்று ஆய்வுக் கட்டுரைகளை எழுதி விட்டாராம். அந்த குறிப்பிட்ட சாதியை எதிர்த்து தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்த விரும்பிய இன்னொரு
சாதியின் திடீர் பணக்காரர் ஒருவர், தங்கள்
சாதியின் படித்த ஒருவரை அழைத்து வந்து, லட்சங்கள் செலவழிக்க தயார் என்றும், தங்கள் சாதிதான் மூவேந்தர்களாக ஆண்டு வந்தவர்கள் என்பதாக ஒரு வரலாற்று ஆய்வை எழுதச் சொல்லிப் பணித்தாராம். இப்படித்தான் இங்கே சாதிப் பெருமை பீற்றிக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட பொய்யான அல்லது போலியான அல்லது மாயையான தோற்றத்தை உருவாக்க எண்ணுபவர்கள், வேதங்களையும், உபநிசத்துக்களையும், ஆதாரமாகக் காட்டி, தங்கள் சாதியின் தோற்றம் மிகவும் பழமையானது என்றும் வாதாடுகிறார்கள். வாக்கு வங்கி அரசியலில் சாதிகளின் பங்களிப்பு, பகிரங்கமாக வெளிப்படுகிறது. அதைப் பயன்படுத்தி இன்றைய அரசியல் அதிகாரத்தில் மேலே வருபவர்கள், அத்தகைய ருசியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்பு நிலை மக்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். தமிழகத்து அரசியலில் ஒவ்வொரு மாவட்டத்திலும், செல் வாக்குப் பெற்ற சாதியினர் மட்டுமே எல்லாக் கட்சிகளிலும், பொறுப்புக்கு வரமுடியும். அதைப் போல அந்த மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்ற சாதியின் பிரதிநிதிகள்தான், நாடாளுமன்றம், சட்ட மன்றம் ஆகியவற்றிற்கான தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கமுடியும். முற்போக்கு பேசுகின்ற கட்சிகளானாலும், சாதி மறுப்பு கொள்கைகளை பேசுகின்ற கட்சிகளானாலும், மாவட்ட கட்சியின் தலைமைக்கான தேர்தல் வரும்போதும், சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் வரும்போதும், தங்கள் கட்சியில் உள்ள குறிப்பிட்ட பகுதிச் செல்வாக்குக் கொண்ட சாதியின் அடையாளத்துடன் கூடிய நபர்களையே நியமனம் செய்கிறார்கள். ஓரங்கட்டப்பட்டு வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை, மேற்கண்ட பொறுப்புகளுக்கு நியமிக்காத போக்கே இருந்து வந்தது. விளிம்பு நிலைப் பட்டியலில் இருந்து வந்த தலித் சமூகம், தங்கள் சுயமரியாதைக்காக லட்சக்கணக்கில் தெருவில் இறங்கி போராட வந்தபோது, அவர்களது சமூக இயக்கம் பிரதான நீரோட்டமாக இருக்கின்ற சமூக, அரசியல் நீரோட்டத்தில் அறுதியிடத் தொடங்கியது. அதுவே பெரிய கட்சிகளை சிந்திக்க வைத்தது. அதன் விளைவாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அத்தகைய சமூகத்தைச்
சேர்ந்த பிரதிநிதிகளை இணைச் செயலாளர் களாகவும், துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கத் தொடங்கினர்.
இந்தியாவில் இருக்கின்ற சாதிகள், நிலவும் நிலவுடைமை உற்பத்தி உறவுகளுடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. ஆகவே அத்தகைய நிலவு டமை உறவுகளை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மை மதமும், சாதிப் பிரிவினைகளுக்கு முழுமையாக இடம் கொடுக்கிறது. சாதிகளை முறைப் படுத்த வருணம் என்பது தொடக்கக் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்திற்குள் பல்வேறு வருணங்கள் இருக்கலாம் என்ற ஒரு பண்டைக்காலம் இருந்து வந்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில், பழங்கால கல்வெட்டு ஒன்று உள்ளது. அது குடவோலை முறை தேர்தல் பற்றி பறை சாற்றும் ஒரு ஆதாரமான கல்வெட்டு. ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப் படுவதற்காக போட்டிப் போடுவதற்கு தகுதியுள்ள நபர்கள் பற்றி அதில் எழுதப்பட்டுள்ளது. 4 வகை வேதங்களை கற்றவர்களும், நிலத்தை சொத்தாக வைத்திருப்பவரும் மட்டுமே ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிபந்தனை அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவே குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் மட்டுமே, அரசியல் அதிகாரத்தில் அமரமுடியும் என்ற சூழல், தொடக்க கால தேர்தல் முறையிலேயே அடிப்படையாக இருந்திருப்பது அம்பலமாகிறது. அந்த அளவிற்கு ஆழமாக நாம் நடந்து வந்த அல்லது கடந்து வந்த வரலாறு என்பது சாதிகளையும் குறிப்பாக ஆதிக்கசாதியின் அரசியல் அதிகாரப் பிடிப்பையும் கொண்டதாகத் தான் இருந்திருக்கிறது என்பது இங்கே வெளிப்படுகிறது.
உழைக்கும் வர்க்கமாக அறியப்படும் சா திகள் கீழே அழுத்தப்பட்டுள்ளன. ஆதிக்க சாதிகள் தான் நிலவுடமைகளை கைப்பற்றி வைத்திருந்ததாக வரலாறே கூறுகிறது. அதனால் மன்னர்களாக இருந்தவர்கள் மதிக்கப்படவேண்டியவர்கள் அல்ல. உழைக்கும் வர்க்க சாதிகளை அடக்கி, ஒடுக்கி, சுரண்டிக் கொழுத்தவர்களே மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால் தங்கள் சாதிதான் மன்னர்களாக இருந்தவர்கள் என்று பீற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உழைக்கும் வர்க்க சாதியினருக்குத் தேவையில்லை. ஆனால் 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பதாக எண்ணும் இடைப்பட்ட சாதியினர், தங்களுடைய விருப்ப ஆய்வில், மன்னர் பாரம்பரியமாக சித்தரித்துக் கொள்கிறார்கள். உழைக்கும் வர்க்கமாக இருக்கும் பாரம்பரியம்தான் சிறந்தது என்ற பண்பு இங்கே பரப்பப் படவில்லை. மாறாக மன்னர் வழி என்பது மதிக்கத்தக்கது என்ற புரிதல் இன்னமும் தூசு தட்டப்படாமல் இருக்கிறது.
சாதியத்தின் தோற்றக்காலங்களில் இருந்த சாதிகளுக்கு இடையிலான இடைவெளி, இடைக்காலங்களில் மோதல்களாக மாறி, புதிய சமன்பாடுகள் ஏற்பட்டுவிட்டன. தமிழகம் சாதி மறுப்பு திருமணங்கள் பலவற்றை சந்தித்து விட்டது. பரப்புரை அளவிலாவது சாதி மறுப்பு என்பது இங்கே பகிரங்கமாக செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் வடஇந்திய மாநிலங்களிலோ, சாதிப் பாகுபாடு இன்று வரை பகிரங்கமான அறிவிப்பாகவும், ஒவ்வொரு
சாதியும் தனித்தனியாக செயல்படுவது நடைமுறையாகவும் இருந்து வருகிறது. தமிழகம் அந்த விதத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்களை, குறைந்த பட்சம் சாதி மறுப்பு விசயத்திலாவது, உள் நீரோட்ட சிந்தனையாகக் கொண்டுள்ளது. ஆகவே இன்று கிளப்பப்படும் சாதி அடையாளங்கள், ஒன்று அடக் கப்பட்டவரின் அறுதியிடலுக்காகவோ, அல்லது ஆதிக்க சாதிகளில் இருக்கின்ற தனி நபர்களின் நலன்களுக்காகவோ மட்டும்தான் வெளிவருகிறது. காலப் போக்கில் கண்டிப்பாக உதிர்ந்து விடும் என்ற இந்த சாதி அடையாளங்கள், அனைத்து மக்கள் அதிகாரத்தின் மூலம் வெளித்தள்ளப்படுவது உறுதி.

Tuesday, March 2, 2010

தமிழ்வழிக் கல்விக்கு தாராளமாக உதவலாமே!

இரண்டு நாட்கள் முன்பு தலைநகர் சென்னையில், சிறுபான்மை சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த தமிழ்வழிக் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் ஒரு பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள். ஏற்கனவே இதுபோல ஒரு ஆர்ப்பாட் டப் பேரணியையும் சமீபத்தில் நடத்தி யிருந்தார்கள். தமிழ் நாடெங்கும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்த ஆசிரியர்கள் சென்னை வந்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலும் பெண் ஆசிரியைகளாக இருந்தார்கள். கிறித்துவ மதத்தின் பள்ளிகளில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகளும் அந்தப் போராட் டத்தில் கலந்து கொள்ள, தமிழ்நாட்டின் பல்வேறு முனைகளிலிருந்தும் வந்திருந் தார்கள். கத்தோலிக்க குருமார்களும், புரொட்டஸ்டன்ட் சாமியார்களும் பள்ளி களில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள ஆர்வத்தோடு வந்திருந்தார்கள். இது தவிர கிறித்துவ திருச்சபைகளின் ஆயர்கள் சிலரும், இந்தப் போராட்டத்தை வாழ்த்திப் பேச வந்திருந்தார்கள். அதேபோல முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், முன்னோடிகளும் இதில் கலந்து கொண்டார்கள். கிறித் துவ, முஸ்லிம் உடைகளுடன் போராட்டத் தில் கலந்து கொண்டவர்கள், இது சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் தான் என்பதை பறைசாற்றினார்கள். அவர்களுடைய பிரச்சனை தொடர்ந்து குரல் கொடுத்தும், தங்களது நியாயமான கோரிக்கை அரசால் கவனிக்கப்பட வில் லையே என்பதாக இருந்தது.
சுயநிதிப் பள்ளிகள் என்று அழைக் கப்படும் கல்விச் சாலைகள் மத்தியில் இந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மெலிந்து இருப்பதை காணமுடிந்தது. ஒரு காலத்தில் பள்ளிக்கூடங்களை நடத்தும் தனியார்கள் தர்மகர்த்தா உணர்வோடு, கல்விச் சேவை செய்து வந்தனர். அப்போது தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருக்கின்ற ஏதாவது ஒரு கல்விச் சாலைக்கு, அந்த வட்டாரம் முழுவதும் மாணவர்களை அனுப்பி வைப்பார்கள். கல்விக் கட்டணமும் பெரிய அளவுக்கு சுமையாக இருக்காது. கல்விச் சேவை செய்கின்ற வள்ளலாக அன்று சிலர் நாட்டுப்புற மாவட்டங்களில் கருதப்பட்டார்கள். அந்தக் காலம் மலையேறி விட்டது. அதன் பிறகு வணி கம் செய்வதற்காக இந்த நாட்டிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் தங்கள் மதப் பரப்புரையை செய்து வந்த போது, தேவாலயங்களை ஏற்படுத்தினார்கள். அப்போது அவர்கள் செய்த முக்கியமான காரியமே, கல்வி நிறுவனங்களை உருவாக்கி, சாதி, மத பேதமின்றி கல்விக் கொடுக்க முயற்சித்தது தான். உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்களை ஒட்டியே, தேவாலயங்கள் கூட எழுந்தன.
தாங்கள் நிறுவிய கல்வி நிலையங்களில் பொறுப்புதாரர்களாக மட்டும் இல்லாமல், ஆசிரியர்களாகவும், ஆசிரியைகளாகவும், திருச்சபையின் குருமாரும், குமரிகளும் பணியாற்றத் தொடங்கினார்கள். அப்படி பணியாற்றியவர்கள் சிந்தனைகளில் வருமானம் என்பது முதன்மையாக இடம் பெறவில்லை. தாங்கள் நம்பு கின்ற ஆண்டவனுக்காக தங்களை அர்ப்பணிக்க வந்த அந்தத் துறவிகள், கல்விக்காகவும் தங்களை அர்ப்பணிக்கத் தொடங்கினார்கள். அதனால் அத்தகைய கிறித்துவப் பள்ளிகளில் கல்வி மற்றும் கற்பிக்கும் முறை ஆகியவை சிறந்து விளங்கின. தமிழ் நாடெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவதொரு கிறித்துவப் பள்ளி அதிகமான மாணவர்களை அறிவார்ந்த ரீதியில் தயார் செய்து அளித் தது என்பதை யாரும் மறக்க முடியாது. அதிகாரத்திலும், அரசியலிலும் பெரும் பொறுப்புக்கு சென்றுள்ள பல பெரிய மனிதர்களும், தாங்கள் சிறு வயதில் பள்ளிக்கூடப் படிப்பை, கிறித் துவப்பள்ளியில் படித்தோம் என்று பெருமைபடக் கூறுவார்கள். அந்த அளவிற்கு பெயர் பெற்ற வரலாற்றைக் கொண்ட கிறித்துவ பள்ளிகளில் இருந்து தான், இப்போது இந்த சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்திற்கு வந்திருந்தார்கள்.
ஏன் இந்த மாற்றம் நிகழ்ந்தது? எப்போதிலிருந்து இந்த பள்ளிகள் பாதிப்புக்குள்ளாகின? முதன்மைப் பள்ளிகளாக இருந்த இது போன்ற பள்ளிகள் இன்று சிறுபான்மைப் பள்ளிகள் என்ற பெயருடன் போராட் டத்திற்கு தள்ளப்பட்டது எத னால்?
இந்தியாவின் கல்விக் கொள்கையில் சுயநிதி கல்விச் சாலைகள் என்ற ஒரு கருத்துக் கோப்பு, ராஜிவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட, புதிய கல்விக் கொள்கையையொட்டி அமுலுக்கு வந்தது. அதற்கு முன்பே சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என உருவாகி வந்த கிறித்துவ, முஸ்லிம், மொழிச் சிறுபான்மை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தனி சிறப்புச் சலுகைகள் மத்திய அரசாங் கத்தால் வழங்கப்பட்டன. அதன் பிறகு சிறுபான்மை சுயநிதி பள்ளிகள் என்ற பெயரில், கல்விச் சேவையை நடை முறைப்படுத்த பல பள்ளிகள் தோன்றின. இதில் நேரடியாக திருச்சபையின் அல்லது முஸ்லிம் கல்வி அமைப்புகளின் மேற்பார்வையில் இருக்கும் பள்ளிகள் தவிர, தனியார் நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களும் அடக்கம். அதிலும் தமிழ் வழிக் கல்வியை போதிக்கின்ற பள்ளிக்கூடங்கள் உருவாகின. தமிழ் வழிக் கல்வியை நடத்தும் பள்ளிக்கூட நிர்வாகங்கள், மாணவர்களிடமிருந்து அதற்கான கல்விக் கட்டணத்தை வசூலிக் கக் கூடாது என்ற அணுகு முறையையும், தமிழக அரசின் கொள்கையாக மேற்கண்ட கல்வி நிறுவனங்கள் பின்பற்றி வரு கின்றன.
1991ம் ஆண்டு தமிழக அரசாங் கம் இதுபோன்ற சிறுபான்மை சுய நிதி தமிழ் வழி பள்ளிகளுக்கு ஒரு உத்தரவை அமூல்படுத்தத் தொடங்கியது. அதாவது இத்தகைய சுயநிதிப் பள்ளிகள் ஆசிரியர்களின் சம்பளத்தை, அர
சாங்க உதவியிலிருந்து பெற முடியாது என்பது தான் அந்த உத்தரவு. அதாவது 1991ம் ஆண்டிற்குப் பிறகு தொடங் கிய சிறுபான்மை சுயநிதி தமிழ்வழி பள்ளிகளுக்கு மட்டுமே, மேற்கண்ட உத்தரவு பொருந்தும். அதாவது 91ம் ஆண்டிற்கு முன்னால் தொடங்கிய பள்ளி களுக்குப் பொருந்தாது. அப்போதி லிருந்தே கிடைக்காத இந்த அரசு உதவியை கோரி, இந்த ஆசிரியர்கள் போராடுகிறார்கள்.
1999ம் ஆண்டு தமிழக அரசு ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந் தது. அது சட்டப்பிரிவு 14ஏ. அரசு உதவித்தொகையை இத்தகைய புதிய பள்ளிகளுக்கும், புதிய வகுப்புகளுக்கும், புதிய கல்வி முறைகளுக்கும் மறுப்பது தான் இந்தச் சட்டத்திருத்தம். 199192ல் தொடங்கிய பள்ளிகளுக்கு என்பதாக அந்தச் சட்டத்திருத்தம் எழுதப் பட்டுள்ளது. இது தனியார் பள்ளி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட
சட்டத்திருத்தம். அதன் விளக்கத்தில் தனியார் பள்ளி என்பது சிறுபான்மை பள்ளியையும் சேர்த்த அடக்கம் என்பதாக எழுதப்பட்டுள்ளது. மேற்கண்ட
சட்டத்திருத்தத்தை ரத்துச் செய்து, தமிழக அரசின் நிதி உதவி தங்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது தான் அந்த ஆசிரியர்களின் கோரிக்கை.
ஆனால் இத்தகைய தமிழ்வழிக் கல்வியில் கட்டணத் தொல்லையும் இன்றி, இலவசமாக படிக்க வரும் எளிய குடும்பத்தின் இளைய தலைமுறை, படித்து முடித்ததும் வெளியே வந்து எத்தகைய பணிக்குச் செல்ல முடியும் என்பதே நமது கேள்வி. நாடெங்கிலும் ஆங்கில பயிற்று மொழியில் உள்ள கல்வி முறை ஆதிக்கம் செலுத்தும் போது, தமிழ் வழிக் கல்வி என்பது குறைவானது என்ற மனப்பான்மை நிலவி வருகிறது. அத்தகைய சூழலில் தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவ, மாணவிகளுக்கு எதிர்காலம் என்ன?
போராடும் தமிழ் வழிக் கல்வி ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களுக்காக நியாயமான கோரிக்கையை இணைத் துக் கொண்டால் தான், நாடும், அரசாங் கமும் அவர்களை கவனிக்க முடியும். தமிழ் வழிக் கல்வி பயின்று வெளியே வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கும் போது மட்டுமே, அவர்களது எதிர்காலம் ஒளிமயமாகும்.
சமீபத்தில் தமிழகத்தின் உயர்கல்வி அமைச்சர், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படும் என்று அறிவித்த முற்போக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத் தகைய தாய் மொழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படும் பொறியியல் கல்லூரி களுக்கு, செல்கின்ற மாணவர்கள் பள்ளிக் கல்வியிலேயே தாய்மொழிக் கல்வியை கற்றிருந்தால் தான், அது பயனுள்ளதாக அமையும். ஆகவே தமிழ் வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படும் பள்ளிக்கூடங்களை வலுப்படுத்துவது தமிழக அரசின் கொள்கையாக வளர வேண்டும். அதுமட்டுமின்றி தமிழ் வழிக் கல்வி படித்தவர்களுக்கு, தமிழக அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பை, தமிழ்நாடு அரசு செய்யும் போது, பள்ளிகளிலும், உயர்கல்வியிலும், தொழிற்கல்வியிலும் தமிழ் வழிக் கல்வி என்பது அதிகமான மாணவர் சேர்க்கையை எதிர்கொள்ளும். அதுவே தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வளமையுள்ளதாகவும், படைப்பாற்றல் கொண்டதாகவும் உருவாக்கும். அத்த கைய அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து வெளிவந்தால், தமிழ்த் தாய் மகிழ்ச்சி அடைவார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Monday, March 1, 2010

தேசிய அறிவியல் நாள் துண்டாடப்படுகிறதா?

நேற்று தேசிய அறிவியல் நாள் என்பதாக கொண்டாடப்பட்டது. அறிவியலுக்காக ஒரு நாளை நிர்ணயித்து அதைக் கொண் டாடும் அளவுக்கு இந்தியா முன்னேறியிருக்கிறதே என்று நாம் வியக்கலாம். மத்திய அரசின் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் பூமி அறிவியல் என்ற ஒரு அமைச்சகம் இருக்கிறது. அதன் மாநிலங்களவை அமைச் சர் பிரித்விராஜ் சவான் நேற்றைய முன்தினம், தொழில்நுட்ப மாளி கையில் ஒரு விழாவை நடத்தி அதில் பலருக்கும் விருது வழங்கினார். 2009ம் ஆண்டிற் கான விருதில், கடந்த 5 ஆண்டுகளாக அறிவியல் தொழில் நுட் பத்தில் சிறப்பாக பங்களிப்பு செலுத்தியவர்களுக்கு அத்தகைய விருதுகள் வழங்கப்பட்டன. தமிழில் செயற்கைக் கோள், பூமி, கடல், செவ்வாய், சூரியன் என்ற தலைப்புகளில் பிரபல அறிவியல் புத்தகங்களை எழுதியவரும், அணுசக்தி என்ற ஏட்டில் தொடர் கட்டுரைகளை வரைந்தவருமான சென்னையைச் சேர்ந்த என்.ராம துரைக்கு, தேசிய விருதாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதே போல ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த டி.டி.ஓழாவிற்கும் 23 புத்தகங்கள் எழுதியதற்காக விருது வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு அறிவியலை எடுத்துச் சென்றதற்காக மணிப் பூரைச் சேர்ந்த தக்கேலம்பம் ரோபிந்தரசிங் என்பவருக்கும் விருது வழங்கப்பட்டது. இது போல வழங்கப்பட்ட விருதுகள் எல்லாம் அறிவியலை மக்களிடம் எடுத்துச் செல்ல உதவியவர்கள் என்பதாக பாராட்டுக்களைப் பெற்றவர்கள்.
புதுடெல்லியில் உயர்
சக்தி பொருள்கள் ஆராய்ச்சி சோதனைச் சாலையில் நடத்தப் பட்ட தேசிய அறிவியல் நாள் விழாவில், அறிவியல் என் பது உலகம் முழுமைக்கும் பொருத் தமானது என்றும், தொடர்ந்து பொருத்தமானதாக இருக்கும் என்றும், அறிவியல் சில நேரங்களில் பிரச்சினைகளை உருவாக்குகிறது என்றும், ஆனாலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அறிவியல் மட்டுமே ஒரே வழி என்றும், டி.ஆர்.டி.ஓ. தலைவர் டாக்டர் பி.எஸ். கோயல் கூறினார். இத்த கைய அறிவியலாளர்களின் கூற்றுக்கள் உற்று நோக்கப்பட வேண்டும். இந்திய அர
சாங்கத்தில் பணிபுரிகின்ற அறிவியலாளர்களில் மாறு பட்ட கருத்துக்களை சிலர் கூறிவந்தாலும், முக்கியமான பிரச்சினைகளில் வேறுபாடுகள் தோற்றமளித்தாலும், அறிவிய லாளர்களின் கூற்றுக்கள் ஆழமா கவே கவனிக்கப் படுகின்றன.
அறிவியல் வளர்ச்சியும், தொழில் நுட்ப வளர்ச்சியும் நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்பு களின் மூலம் வளர்ந்து வரும் ஒரு புறச்சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். அறிவியல் வளர்ச்சிகள் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயன்படும் அளவுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். அந்த எண்ணத்தில்தான் இதற்கான தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் மூலதனம் வளர்ந்து விட்ட இன்றைய காலத்தில், ஏகபோக மூல தனமும், பன்னாட்டு மூலதனக் குவிதல் களும், அதிகார வர்க்க மூலதனமும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மேலான பங்கை செலுத்தத் தொடங்கினால், அப்படிப்பட்ட சக்திகளின் கரங்களில் அறிவியல் வளர்ச்சிகள் போய் சிக்கிக் கொள்கின்றன. அதுபோன்ற சூழல்களில் அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளை, தனியார்கள் தங்களுடைய நிறுவனத்தின் லாபங்களை அதிகரிக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இது பொருளாதார கட்டமைப்பில் ஒரு தவிர்க்க முடியாத விதியாக மாறிவிட்டது. அதிலும் உலகப் பொருளாதாரம், உலகமய மாக்கல் என்ற கொள்கையின் வழியில் இழுத்துச் செல்லப் படும் போது, அவற்றின் அணுகுமுறை அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் பயன் படுத்தி தங்களுடைய நிறுவனத்தின் லாபப் பங்குகளை அதிகரிக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதாவது ஒரு நல்வாழ்வு அரசுக்கு இருக்க வேண்டிய, பொதுமக்கள் பற்றிய அக்கறையோ, நாட்டு முன்னேற் றத்தைப் பற்றிய கவனமோ, வருங்கால தலைமுறைக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களோ, செல்வாக்கு செலுத்துவதற்கு பதில், தனியார் லாப நோக்க கண்ணோட்டங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது எந்த வகையிலும் நாட்டிற்கோ, மக்களுக்கோ பயன்படக்கூடிய அணுகுமுறை அல்ல.
இதைத்தான் சமூக அறி வியலாளர்கள், அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கு எதிராக அறிவியலைப் பயன்படுத்துவது என்று அழைக்கிறார்கள். அது எப்படி முடியும்? அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கு எதிராக அறிவியலைப் பயன்படுத்த முடியுமா? நம் கண் முன்னால் இந்திய துணைக் கண்டத்தில் நடந்து வருகின்ற, அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிகளையும், அவை இயங்கி வரும் இயற்கை மூலாதாரங் களையும், பொதுமக்களின் வாழ்க்கையையும், எவ்வாறு பாதிக்கின்றன என்று சமூக ஆய்வுப் பார்வையோடு காண வேண்டியிருக்கிறது.
விவசாயத்தில் இருந்து வந்த பாரம்பரிய விதைகளையும், மரபுசார் உரங்களையும் மறுத்து புதிய வீரிய விதைகளையும்,ரசா யன உரங்களையும் அறிமுகப் படுத்தி அதன் மூலம் இயற்கை விவசாயத்தில் இயங்கி வந்த விதிகளை உடைத்தெறிந்து, நவீன விவசாயம் படைக்க 1965ம் ஆண்டு எடுத்த முயற்சி களின் பாதிப்பு இன்றும் கூட நிலவி வருகிறது. மேற்கண்ட முயற்சிக்கு பசுமைப்புரட்சி என்று ஆள்வோர் பெயரிட்டனர். இத்தகைய முயற்சி அமெரிக் காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதாக அறியப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில், ஒரு சோதனைச் சாலையில் தயார் செய்யப்பட்ட வீரிய விதைகளை, இந்திய விவசாயச் சந்தையில் விற்பனை செய்தார்கள். அதன் மூலம் விதைகளின் எண் ணிக்கையை அதிகரித்தும், உற்பத்தியின் அளவை கூட்டி யும் சாதனை செய்ததாக அறிவித்தார்கள். ஆனால் அவை எல்லாமே இந்த நாட்டு விவ சாயத்தின் முதுகெலும்பான பாரம்பரிய விதைகளை குழி தோண்டிப் புதைக்க மட்டும் தான் பயன்பட்டது. இதுதான் அறிவியல் ரீதியான அணுகு முறைக்கு எதிராக, அறிவியல் வளர்ச்சியை அல்லது புதிய கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்துவது என்று பொருள்.
அதே போல பாரம்பரிய மாக நமது நாட்டின் கடலோ ரங்களில் கிடைத்து வந்த இறால் உற்பத்தியை வளர்ப்பு தற்கு பதில், புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி செயற்கை இறால் பண்ணைகளை அர
சாங்கம் அமைத்துக் கொடுத் தது. அத்தகைய புதிய செயற்கை இறால் பண்ணைகள், மண்வளத் தையும், நீர் வளத்தையும் கெடுத்தது மட்டுமின்றி, கடல்நீரில் கழிவுகளைக் கொட்டி அதன் மூலம் ஒட்டு மொத்த மீன்வளத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தின. சில ஆண்டுகள் மண்வளத்தை மற்றும் நிலத்தடிநீர் வளத்தை அழித்த பிறகு, சம்பந்தப்பட்ட பண்ணை முதலாளிகள், அந்த இடத்தை பயன்படாத நிலமாக விட்டு விட்டு, இடம் மாறிச் சென்று விடுகின்றன. இதுவும் கூட அறிவியல் தொழில் நுட்பத்தை, தனிநபர் லாபங்களுக்காக பயன் படுத்தும் போது, ஒட்டு மொத்த சமூகத்தின் நலன் என்பது கீழே தள்ளப்பட்டு, நாட்டு முன் னேற்றம் தடைப்படுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை, அறிவியல் அணுகு முறைகளுக்கு எதிராகப் பயன்படுத்துவது என்ற பட்டியலில்தான் இதுவும் சேர்க் கப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை யும், மீனவர் வாழ்வுரிமை பாதுகாக்கப்படுவதையும், பவளப்பாறைகள் பாதுகாக்கப் பட வேண்டி யதையும், பல்லுயிர் தன்மைகள் காக்கப்படு வதையும், வலியுறுத்தும் ஐ.நா.வளர்ச்சித் திட்டம் மற்றும் சுற் றுசூழல் ஆய்வு ஆகியவை, அர சியல்வாதிகளின் சேது கால்வாய் திட்டம் போன்ற வலியுறுத்தல் களால் கேள்விக்குறியாகின்றன.
கடலோர ஒழுங்குபடுத்தல் திட்டம் என்ற மீனவர் மேலாண் மையை உறுதிப்படுத்தும் திட்டத்தைக் கூட, கடலோர மேலாண் மைத் திட்டம் போன்ற தனியார் நலன்களுக்காகத் தாரைவார்க்க, அதிகார வர்க்கம் முயல்கிறது. மரபணு மாற்று விதைகளையும், உணவு களையும் கொண்டு வந்து இறக்கும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் லாபத்திற்காக, மறு உற்பத்திக்கு உதவக் கூடிய பாரம்பரிய விதை களும், உணவுகளும் மறுக்கப் படுகின்றன.
தேசிய அறிவியல் நாளில், மக்களுக்கு பயன்படும் அறி வியல் மற்றும் தொழில் நுட் பத்தை மட்டுமே வலியுறுத்தும் கோரிக்கைகளை, முதன்மைப் படுத்துவதே நாட்டு முன்னேற்றத் திற்கு வழிவகுக்கும்.

Saturday, February 27, 2010

பாலியல் குற்றச்சாட்டில் பிரபலம் பலியாகலாமா?

உ.ரா.வரதராசன் இப்போது விவா தத்திற்கு உள்ளாகியிருக்கிறார். தோழர் வரதராசனின் மரணத்தின் மூலம் அந்த விவாதம் பெரிதாகியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கொடுத்த விளக்க அறிக்கையினால், மேலும் விவாதங் கள் உருவாகியுள்ளன. வரதராசனின் மனைவி கூறியதாக ஊடகத்தில் வந்த குற்றச்சாட்டுகள் ஒருபுறம். இழப்பு ஏற்பட்டவுடன் கட்சியை குறை கூறவேண்டுமா என்ற கேள்வி மறுபுறம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், ஒரு கடுமையான விமர்சனத்தைக் கொடுத்துள்ளார். வரத ராசன் சமூக விரோத செயல்களிலோ, வர்க்க விரோத செயல்களிலோ ஈடு படவில்லை என்றும், கம்யூனிச இயக்கத்தில் மிக நீண்ட காலம் பயிற்சி பெற்றவர் என்றும், 50 ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிஸ்ட் கட்சிகாக்காவும், சாதாரண மக்களுக் காகவும் பாடுபட்டவர் என்றும், அத்தகைய தலைவர் மீது நடவ டிக்கை எடுக்கும் முன் 100 முறை யோசித்திருக்க வேண்டும் என்றும் தா.பாண்டியன் கூறியுள்ளார். தவறு செய்திருந்தால் அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் மூலம், அதைத் திருத்தச் செய்வதாக இருந்திருக்க வேண்டும் என்றும் மாறாக உயிரைப் பறிப்பதாக இருந்திருக்கக் கூடாது என்றும் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார். இந்த மரணம் கம்யூனிச இயக்கத்திற்குள் மிக நீண்ட காலத்திற்கு விவாதத்தை எழுப்பிக் கொண்டே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பொதுவாக மக்களுக்கு மேற்கண்ட நிகழ்ச்சியாலும் அதுபற்றிய விமர்சனத்தாலும் பல்வேறு கேள்விகள் எழத்தான் செய்யும். ஒரு மனிதர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு பாலியல் தொந்தரவு சம்பந்தப்பட்டது. அது பிரபல தலைவர் மீது சாட்டப்படும் போது மட்டும்தான் 100 முறை யோசித்திருக்க வேண்டுமா? சாதாரண மனிதர்கள் மீது இதே போல குற்றச் சாட்டு கூறப்பட்டால், உடனடியாக முடிவு செய்தல் தவறில்லை என்று கூறுவதா? இப்படியும் கூட கேள்விகள் எழுகின்றன. நடந்த மரணம் ஒரு தற்கொலையாக இருந் தாலும், அது ஒரு விபத்து. அந்த விபத்திற்கு காரணமானது ஒழுங்கு நடவடிக்கைதான் என்பதாக புரிந்து கொண்டால் அது முழுமையாகுமா?
பிரகாஷ்காரத்தின் விளக்கம், கட்சிக் குள் இந்தக் குற்றச்சாட்டு எடுத்துச் செல்லப்பட்ட முறைகளைப் பற்றி விவரிக்கிறது. அதற்கு ஆதாரமாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர் கூறிய புகார் சுட்டிக் காட்டப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு புகார் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப் படவில்லை என்ற செய்திகளும் வருகிறது. இதில் கட்சிக்குள் அதிகார மோதல் என்பதுதான் இந்த அளவுக்கு பிரச்சினையை இழுத்துக் கொண்டு சென்றுள்ளது என்றும் கூறுகிறார்கள். உ.ரா.வரதராசன் கட்சிக்குள் எப்படிப்பட்ட பதவிகளை தமிழ்நாட்டில் வகித்து வந்தார் என்பதும், டெல்லிக்கு எத்தகைய பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டார் என்பதும், அதுவே அவரிடம் மாறு பட்ட கருத்துள்ளவர்களுக்கு மோதலை ஏற்படுத்தியதா? என்பதும் அந்தக் கட்சிக்குள் உள்விவகாரம். அது முக்கிய காரணம் என்று யாரும் கருதமுடியாது. ஒரு காரியம் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்குமானால் இதுபோன்ற உள்கட்சி மோதல், அதிகார முரண்பாடு ஆகியவை அத்தகைய காரணத்தை தூண்டி விடவோ, துரிதப்படுத்தவோ ஒரு குறிப்பிட்ட பங்களிப்பை செலுத்தியிருக்கலாம். தேர்தல் அரசியலைச் சார்ந்தும் அதிகாரப் பகிர்வை நோக்கியும் செல்லுகின்ற ஒரு அரசியல் இயக்கத்திற்குள், இயக்கத்தின் கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும் அல்லது பலவீனப்படுத்துவதற்கும் இது போன்ற முரண்பாடுகள் எழுவது இயற்கையே. ஒரு நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பில், குடும்ப வாழ்க்கையில் அனைத்து விதமான சிந்தனைப் போக்குகளாலும் தாக்கம் செலுத்தப்படும் ஒவ்வொரு தோழரின் அணுகுமுறையும், பிறரால் பல்வேறு விவாதத்திற்கு உள்ளாக்கப்படுவது என்பது நிகழவே செய்கிறது. முதலாளித்துவக் கட்சிகளின் செயல்பாடுகளையும், சிந்தனைப் போக்குகளையும் முழுமையாக வேறுபடுத்தி மாற்றுச் செயல்பாடு, மாற்றுச் சிந்தனைப் போக்கு ஆகியவற்றை செயல்படுத்து பவர்களாக, தோழர்கள் இயங்கி வந்தால் அதுவேறு. ஆனால் நடை முறையில் மாறுபட்ட செயல்பாடு இல்லாத தோழர்கள் மத்தியில், இன்றைய உலகின் வணிகத் தனமான முதலாளித்துவ சிந்தனைப் போக்குகள் செல்வாக்கு செலுத்தாமல் இருக்குமா?
அப்படி பல்வேறு விதமான வெளிச்சிந்தனைகள், கட்சிக்குள் தாக்கம் செலுத்தும் போது, ஒரு கட்சி தலைமை நிதானமாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் ஆய்வு செய்ய வேண்டாமா? என்ற கேள்வி எழலாம். அது நியாயமான கேள்விதான் என்றாலும் இங்கே பிரச்சினைக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிட்ட குற்றச்சாட்டோ, அதை முழுமையாக ஆய்வு செய்யாமல் இருந்ததோ, அவசரமாக முடிவு செய்ததோ அல்ல என்பதை நாம் உணரவேண்டும். இதே போலத்தான் செங்கல்பட்டில் சி.ஐ.டி.யூ.என்ற மார்க்சிஸ்ட் கட்சி யின் தொழிற்சங்க மையத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்த தோழர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கு விவாதிக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் மணல் கொள்ளையை எதிர்த்து போராடினார் என்பதற்காக அப்போது தனிமைப் படுத்தப்பட்டதாக கருத்து எழுந்தது. மணல் கொள்ளையை எதிர்ப்பதற்கு மனமில்லாத சக்திகள், அந்த கொலை வழக்கில் குளிர் காய்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதுபோன்ற பிரச்சனையாக வரதரா சன் விவகாரத்தை பார்க்க முடியாது. ஏனென்றால் இது பாலியல் தொந்தரவு என்ற குற்றச்சாட்டு.
பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி சமூகத்தில் நிலவுகின்ற கருத்துக்கள் அதே போல பெண்ணிய அமைப்புகள் சமரசமற்று பார்க்க வேண்டிய நிலைப்பாடுகள், பொதுவுடமைக் கட்சி அத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கையாளக் கூடிய அணுகுமுறை ஆகிய அனைத்தும் இந்த விவகாரத்தில் சம்பந்தப் படுகின்றன. மேற்கண்ட குறிப்பிட்ட வழக்கில், புகார் கூறியதாக கூறப்படுபவர் நேரடியாக விசாரிக்கப்பட்டாரா? என்ற விவகாரமும் சேர்ந்து எழுந்துள்ளது. எந்த பொறுப்பிலிருந்தாலும், கறாரான நடவடிக்கையை ஒரு கட்சி தலைமை எடுப்பது என்பது சரியாகத்தானே இருக்கும் என்ற பார் வையை குறை சொல்ல இயலாது. இப்போது ஏற்பட்டுள்ள இழப்பின் பளுவை யொட்டி, கறாரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தவறு என்று கூறுவதும், தவறாகப் போய்விடும்.
குற்றம் சாட்டப்பட்ட தோழரும், அந்த புகாரைக் கையாண்ட தோழர் களும், தோழியர்களும் பாலி யல் உறவுகள் பற்றியும், பாலினப் பார்வைகள் பற்றியும் எத்தகைய கருத்துக்களை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த பிரச்சினைக்கான அடித்தளம். சமுதாயத்தில் நிலவுகின்ற பண்பாட்டுப் பிரச்சினைகள் மீதான பார்வையும், கட்சித் தோழர்கள் கொண்டுள்ள கருத்துக்களும் விவாதிக் கப்படவேண்டும். பல்வேறு விதமான இருதரப்பு விவரங்கள், ஆதாரங்கள், சாட்சிகள் ஆகியவற்றைத் தாண்டி, எத்தகையப் பார்வையில் இந்தப் பிரச்சினைகள் பார்க்கப்படுகின்றன என்பது இந்த விவகாரத்தில் முக்கிய மானது. ஒரு ஆண் மேலாதிக்க சமுதாய அமைப்பில், கட்சிக்கு வெளி யேயும், உள்ளேயும் இருக்கின்ற ஆண்கள் எத்தனை பேர் நிலவும் சமுதாய அமைப்பின் ஆதிக்க மனோ பாவங்களிலிருந்து தங்களை விலக்கி நிறுத்திக் கொள்வதில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பது ஒரு அடிப்படையான கேள்வி.
பெண்ணியச் சிந்தனை, பெண் ணுரிமை ஆகியவற்றைப் பற்றி ஒரே விதமான கருத்துக் கோப்பு கட்சிக்குள்ளோ, தோழர்களுக்கு இடை யேயோ, நிலவிக் கொண்டிருக்கிறதா? என்பதும் கேட்கப்படவேண்டும். வரதராசன் தனது மரணத்தைத் தழுவிய நிகழ்வு எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. அதே சமயம் ஆண், பெண் உறவுகளில், பாலின நீதி கொண்ட உலகப் பார் வையை எவ்வாறு உருவாக்கப் போகிறோம் அல்லது விளங்கிக் கொள்ளப் போகிறோம் என்ற ஆழமான விவாதத்தை நம்மிடையே அந்த மரணம் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Friday, February 26, 2010

மியான்மர் எனும் பர்மாவிற்கு ஜனநாயகம் திரும்புமா?

உலகில் மாபெரும் ஜனநாயக நாடு என்று அறியப்படும் இந்தியாவிற்கு அருகே அது ஒரு சிறிய நாடு. அன்றைக்கு அதற்குப் பெயர் பர்மா. இன்றைக்கு அதற்குப் பெயர் மியான்மர். ஐ.நா.வரை இப்போது அந்த சிறிய நாடு பிரபலமடைந்து விட்டது. அமெரிக்கா கூட அந்த நாட்டைப் பற்றிக் கவலைப்படுகிறது. அதிபர் ஒபாமா அதிகமாக கவலைப்படுவதாகக் கூறினார். அண்டை நாடான இந்தியா கவலைப்பட்டதா என்று நமக்கு இது வரை தெரியவில்லை. மியான்மர் நாடு பிரபலமடைந்தது, அதன் சாதனை களுக்காக அல்ல. அந்த நாட்டில் நடக்கும் ராணுவ ஆட்சியாளர்களால், அந்த நாட்டின் ஜனநாயகம் வேதனைப் படுகிறது என்பதனால். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகப் பாதை அந்த நாட்டிலும் இருந்தது. ஆனால் அங்கு மட்டும் மக்களால் வாக்களிக்கப்பட்டு வெற்றி அடைபவர்கள், நாடாளுமன்றம்
சென்று பதவி ஏற்பதற்கு பதில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். அதில் தான் அந்த நாடு பிரபலமடைந்துள்ளது. நாடாளுமன்றப் பாதையைப் போற்றிப் புகழும் இந்தியத் திருநாட்டின், ஆட்சி யாளர்கள் கண்டு கொண்டார்களா என்பது இந்தியக் குடிமக்களுக்கு இன்னமும் விளங்கவில்லை.
ராணுவத்திற்குள் இருந்து மியான்மர் நாட்டில், ஜனநாயக சிந்தனையுள்ள அதிகாரிகளும் வெளியே வந்திருக்கிறார் கள். அதற்கு உதாரணமாகத் தான் டின்ஓ என்ற தலைவர் இருக்கிறார். அவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி. அவருக்கு ராணுவ ஆட்சியாளர்களுடன் முரண்பாடு உருவானது. அதன் விளைவாக ராணுவ ஆட்சியாளர்களை விமர்சித்து விட்டு வெளியே வந்தார். வெளியே வந்தவர் 1988ம் ஆண்டு தேசிய ஜனநாயக லீக் என்ற கட்சியைத் தொடங்கினார். ஆங்சான் சூ கியூ என்ற பெண் தலைவருடன்
சேர்ந்து அந்த கட்சியை டின்ஓ தொடங் கினார். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட
சூ கியூ வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நோபல் சமாதான பரிசு அளிக் கப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து ஜனநாயக ஆதரவாளர்கள் 21,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்ற வாரம் சனிக்கிழமை டின்ஓ என்ற அந்த வயதான தலைவர் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். மியான்மர் நாட்டின் மனித உரிமைகள் நிலைமை பற்றி நேரடியாக மதிப்பீடு செய்ய, கடந்த திங்கட்கிழமை ஐ.நா.சபையிலிருந்து சிறப்புத் தூதர் ஒருவர், மியான்மர் நாட்டிற்கு வருகை தந்தார். அதை முன்னிட்டோ அல்லது வேறு காரணத்திற்கோ அதற்கு இரண்டு நாள் முன்பு டின்ஓ விடுதலை செய்யப்பட்டார். சூ கியூ உட்பட எதிர்கட்சித் தலைவர்களை சந்திக்க ஐ.நா.வில் சிறப்புத் தூதர் முயற்சி செய்தார். இப்படித்தான் அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் நடப்பு இருக்கிறது. இது எந்த வகையிலும் இந்தியாவிற்கு தெற்கே உள்ள இலங்கை நாட்டின் அதிபர் ஆட்சியிலிருந்து மாறுபட்டு தெரியவில்லை.
7 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்த வயதான தலைவர் டின்ஓ, தான் விடுதலையானவுடன் தனது கட்சி ஆதரவாளர்களுடன் யங்கோன் நகரில், விவாதித்தார். அவரது விடுதலை என்பது மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை என்பதாக எடுத்துக் கொள்ளப்பட முடியாது. அதுதான் மியான்மர் ஆட்சியின் நிலைமை. பின் எதற்காக டின்ஓ விடுதலை செய்யப்பட்டார்?
இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், தாய்லாந்திலும் புலம் பெயர்ந்த மியான்மர் நாட்டு குடிமக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மீண்டும் தங்கள் நாட்டில் ஒரு ஜனநாயக ஆட்சி அதிகாரத்தை, நிறுவுவதற்காக அந்த புலம் பெயர்ந்த பர்மாக்காரர்கள் முயன்று வருகிறார்கள். தான் ஒரு ராணுவ ஆட்சியின் தலைவர் என்பதால், ராணுவ தளபதி தான் ஷ்வே என்ற அதிபர், தேசிய சபைக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்பதாக அறிவித்துள்ளார். இதுவரை அதற்கான தேதிகள் அறிவிக்கப்படாவிட்டாலும், ஒரு ராணுவ ஆட்சித் தலைமை, தனது நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்போகி றோம் என அறிவித்துள்ளது. தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிக்கொண்டிருக் கும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் நாட்டில் ஜனநாயக பூர்வமான ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கும் போது, ராணுவத் தலைமையை கையில் வைத்திருக்கும் அதிபர் மகிந்த ராஜபக்சே, தானாகவே ஒரு அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை செய்ததைப் போலவே, மியான்மர் நாட்டின் ராணுவத் தலைமையும் நடந்து கொள்கிறது. இரண்டு நாட்டு ஆட்சியாளர்களுக்கும், அண்டை நாடான இந்த பெரிய ஜனநாயக நாட்டின் ஆட்சியாளர்கள் ஆலோ
சனை கொடுத்தார்களா என்பது நமக்குத் தெரியாது.
மியான்மர் நாட்டு ராணுவத்தலைவர் தான் ஷ்வே, தனது நாட்டில் தேர்தல் என்பது சுதந்திரமாக, நியாயமாக நடக்கும் என்று முன்கூட்டியே அறிவித்துள்ளார். அதிருப்தியாளர்கள் கூற்றுப்படி, அந்த ராணுவத்தலைமை குறைந்த பட்சம், ஐ.நா.விற்கும், அனைத்து நாட்டு சமூகத்திற்கும், தான் ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவதாக காட்டிக் கொள்ள அப்படிக் கூறியிருக்கலாம். ஆனால் அனைத்து நாட்டு சமூகத்திற்கும், ஐ.நா.விற்கும் வளைந்து கொடுக்க மகிந்த ராஜபக்சே, இலங்கையில் முயன்றதாக நமக்கு தகவல்கள் இல்லை.
ஜனநாயக ரீதியான தேர்தல்களை மியான்மர் நாட்டில் நடத்த வேண்டும் என் றால், எதிர்க்கட்சி என்று பெயரளவுக்காவது ஒன்று இருக்க வேண்டும். ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் நடத்தப்பட்டு விடக்கூடாது. ஆனால் தேர்தலில் மட்டும் ஒரு பெயரளவு எதிர்க்கட்சி போட்டிப் போடவேண்டும். இது மியான்மர் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இந்த பணியை செய்ய டின்ஓ தயாராக இருப்பார் என்று தெரிகிறது. அதே சமயம் இன்னொரு அபிப்ராயமும் அந்த நாட்டிற்குள் விவாதிக்கப்படுகிறது. ஐ.நா.சபையின் சிறப்புத் தூதர் தாமஸ் ஓஜியா குயின்டானா வருகையின் போது, மியான்மர் நாட்டில் நிலவுகின்ற மனித உரிமை நிலைமைகள் பற்றி பதிவு செய்யும் போது, ஜனநாயகம் பற்றி சில சொற்களை அனுமதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்காக டின்ஓவை விடுதலை செய்திருக்கலாம். அந்த நேரத்தில் டின்ஓ பேசுகின்ற ஜனநாயகக் குரலை எல்லாம் அரசு தரப்பு பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். ஐ.நா.தூதர் திரும்பிச் சென்று ஐ.நா. அலுவலகத்தில் தனது அறிக்கையை கொடுத்த பிற்பாடு, பதிவு செய்யப்பட்ட டின்ஓவின் கலகக் கருத்துக்களைக் காரணங்காட்டி, மீண்டும் டின்ஓ கைது செய்யப்படலாம்.
மேற்கண்ட சந்தேகங்கள் அந்த நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கு எழுகிறது. பழம் பெரும் எதிர்க்கட்சித் தலைவரான 87 வயதுள்ள டின்ஓவை விடுதலை செய்வதன் மூலம், ராணுவ ஆட்சியாளர்களுக்கு வெளிநாட்டு உதவி என்ற பெயரில் நிறைய நிதி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் அந்த வயதில் அந்த தலைவர் மக்களைத் திரட்ட முடியாதவராக இருக்கிறார். மியான்மரில் உள்ள ஜனநாயக இயக்கத் திற்கும், தான் எப்படி தேர்தலை எதிர் கொள்ளப்போகிறோம் என்பதில் மாறு பட்ட கருத்துக்கள் அவர்களிடையே நிலவுகின்றன. இதுதான் இலங்கையிலும் எதிர்க்கட்சிகளை உடைப்பதில் ஆளுங் கட்சிக்கு வெற்றித் தேடித்தந்தது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளைக் கண்டு மயக்கமடைவோரும் உண்டு. தேசிய ஜனநாயக லீக் போட்டியிடுமானால், ஐ.நா.வின் மேற்பார்வை வேண்டும் என்று கருதுவோரும் உண்டு. தேசிய சபையில் பிரதிநிதித்துவம் பெறுவது என்ற குறைந்தபட்ச தேவையாவது நிறை வேறும் என எதிர்பார்ப்பதும் உண்டு. அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மூலமாக குரல் எழுப்பி, அனைத்து நாட்டு சமூகத்திற்கும், ஐ.நா.விற்கும் செய்தி கூறமுடியும் என்று எண்ணுவோரும் உண்டு. ராணுவ ஆட்சியாளர்கள் தாங்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய இந்த தேர்தலை, ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த இருக்கிறார்கள் என்ற கருத்து பொதுவாக இருக்கிறது.
இப்படி ஒரு சிறிய நாட்டு நசுக்கப் படும் ஜனநாயக குரல்களுக்காக, பெரிய நாடு இந்தியா செவிமடுக்காதது ஏன்? என்ற கேள்வியை இந்திய மக்கள் எழுப்புவதில்லை. இலங்கையில் பயங் கரவாதத்திற்கு எதிரான போர் என்று காரணம் கூறி தப்பித்து வந்த நமது மத்திய அரசு, மியான்மர் நாட்டு விவகாரத்திற்கு என்ன பதில் கூறுவார்கள் என்று தெரிய வில்லை.

Thursday, February 25, 2010

மனித உரிமை போராளிகளும், மாவோயிஸ்ட்களும்!

மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட்டால், பேச்சு வார்த்தை நடத்தலாம் என்கிறார் உள்துறை அமைச்சர். 72 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கத் தயார் என்று மாவோயிஸ்ட் தலைவர் ஒருவர் கூறுகிறார். இடையில் அவ்வப்போது மத்திய உள்துறை அமைச்சர், வன்முறை செய்யும் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகப் பேசுகின்ற மனித உரிமை ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், சமூக ஆர்வலர் களும் தங்கள் ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறிவருகிறார். உள்துறை அமைச்சரின் தாக்குதல் இலக்கு முக்கியமாக மனித உரிமை ஆர்வலர்கள் மீது தான் இருக்கிறது. அப்படிப்பட்ட பட்டியலில் இருக்கின்ற மனித உரிமை ஆர்வலர்கள், காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் தங்கள் பக்கத்து வாதங்களை முன்னெடுத்து வைக்கிறார் கள். அப்படி அவர்கள் தங்கள் கருத்துக்க ளைக் கூறும்போது, தெளிவாக தாங்கள் அனைத்து வன்முறைகளுக்கும் எதிராக இருக்கிறோம் என்பதை மறுக்காமல் பதிவு செய்கிறார்கள். சமீபத்தில் அவ்வாறு பதிவு செய்த டாக்டர் பினாயக் சென், தனது காட்சி ஊடக நேர்காணலில் வன்முறை எந்த வடிவத்தில் நிகழ்ந்தாலும், அது சாதாரண மக்களின் அமைதியான வாழ்நி லையை பாதிக்கிறது என்பதை எடுத்துச் சொன்னார்.
அதே போல மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற பி.யூ.சி.எல். அமைப்பின் பொதுச் செயலாளர், ஒரு காட்சி ஊடகத்தில் கூறும்போது, தங்கள் அமைப்பு அனைத்து வகையான வன்முறைக்கும் எதிரானது என்று கூறியுள்ளார். ஆனாலும் கூட 72 நாள் போர் நிறுத்த அறிவிப்புக்கு தயார் எனக் கூறிய மாவோயிஸ்ட் தலைவர் கிஷன் ஜி, அரசாங்கத்துடன் நடத்த இருக்கும் பேச்சு வார்த்தைக்கு, இடை ஏற்பாட்டாளராக மனித உரிமை ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அரசு தரப்பு ஒரு புறமும், மாவோயிஸ்ட் தரப்பு மறுபுறமும் நவீன ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, மோதல்களையும், துப்பாக்கிச் சூடுகளையும், உயிர்பலிகளை யும் ஏற்படுத்தி வரும் வேளையில் வன்முறையை அங்கீகரிக்காத மனித உரிமை போராளிகளை, இரு தரப்புமே குறி வைத்துப் பேசுவது நிகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட மனித உரிமை முன்னோடி அமைப்பான, பி.யூ.சி.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அமைப்பாளர்கள், இந்த தீவிரமான சச்சரவு பற்றி கூடி விவாதித்திருக்கிறார்கள்.
கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில், பெங்களூரில் கூடிய தங்களது தேசிய கவுன்சில் கூட்டத்தில், இந்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், சத்திஸ்கர் மாநிலத்திலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் நடந்து வரும் அரசாங்க கெடுபிடிகளையும், சல்வாஜூடும் என்ற கூலிப்படையை ஏவி விடும் காவல் துறையின் நடவடிக்கைகளையும்,
சாதாரண ஜனநாயக சக்திகளும், காந்தியவாதிகளும் ஆதிவாசி மக்களை பாது காப்பதற்காக குறைந்தபட்ச அறவழிப் போராட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலை இருப்பதையும், விரிவாகவும், விளக்கமாகவும் அலசினார்கள்.
இதே போல ஏற்கனவே பிரபல பெண் எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், நடந்து வரும் சத்திஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் வன்முறைகளும், அரசாங் கம் ஆதிவாசி மக்கள் பகுதிகளின் மீது நடத்தும் போர் என்று கூறியிருந்தார். அதற்காக அருந்ததிராயைக் கூட, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தயங்காமல் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவு தருபவர் என்பது போல முத்திரைக் குத்தியிருந்தார். பன்னாட்டு மூலதன நிறுவனங்களுடன், இந்திய அரசு செய்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அந்தப் பிராந்தியத்தின் காடுகளையும், மலைகளையும் ஆதிவாசிகளின் கரங்க ளிலிருந்து பறிப்பதற்காக திட்டமிடுகின்றன என்று அருந்ததிராய் கூறியிருந்தார். அதற்காகவே ஒரு போர் நடத்த மத்திய அரசு தயார் செய்கிறது என்றும் கூட குற்றம் சாட்டியிருந்தார். இத்தகைய அம்பலப்படுத்தலுக்காகவே எழுத்தாளர் அருந்ததிராய் போன்ற மனித உரிமை ஆர்வலர்களை, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வம்புக்கு இழுப்பது போல, அவ்வப்போது பேசி வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் சத்திஸ்கர் மாநிலத்திலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் முதன்மையாக செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பான, மக்கள் சிவில் உரிமைக்கழகம் அந்த மாநிலத்தின் பொறுப்பாளர்களுடன், அகில இந்திய அளவிலான தேசிய செயற்குழு உறுப் பினர்களையும் அமர வைத்து, விவா தித்து இதற்கெல்லாம் விடை தேட முயற்சித்தது. இந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, இதே பி.யூ.சி.எல். அமைப்பின் அகில இந்திய மாநாட்டை, ஜார்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சியில் கூட்டியிருந்தார்கள். அதிலும் மாவோயிஸ்ட்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையிலான போர் பற்றியும், பாதிக்கப்படும் ஆதிவாசி மக்களின் அவலம் பற்றியும், அதில் அமைதி ஏற்படுத்துவதற்கான பி.யூ.சி.எல். அமைப்பின் முயற்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அந்த அகில இந்திய மாநாட்டை நடத்திக் காட்டிய, ஜார்கண்ட் மாநில பி.யூ.சி.எல். தலைவர் சுப்ரத்தோ பட்டாசார்ஜீ சமீபத்தில் மரணம் அடைந்தார். அத்தகைய சூழலில்தான் இப்போது அவர்கள் தேசிய கவுன்சிலில் கூடினார்கள்.
ஜார்கண்ட் மாநில பி.யூ.சி.எல். போல் அல்லாமல், சத்திஸ்கர் மாநிலத்தில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆளுகின்ற மாநில அரசாங்கத்தால் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கின்ற சிபுசோரன், ஆதிவாசிகள் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். அதே சமயம் அவர் சில தொகுதிகளில் மாவோயிஸ்ட்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். அங்கே நடந்த ஒரு ஊராட்சி ஒன்றிய அதிகாரியை, மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று, கைதாகி உள்ள அப்பாவி ஆதிவாசிகளை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த போது, சமீபத்தில் அந்த கோரிக்கையை ஏற்று மாநில முதல்வர் சிபுசோரன், அப்பாவி ஆதிவாசி களை விடுதலை செய்தார். அதே போல மாவோயிஸ்டுகளும் தாங்கள் பணயக் கைதியாக பிடித்து வைத்த, பி.டி.ஓ.வை விடுதலை செய்தார்கள். இத்தகைய செயல்பாடு ஜார்கண்ட் மாநிலத்தில் சாத்தியமாக இருக்கிறது. ஆனால் சத்திஸ்கர் மாநிலத்தில் நிலைமை அப்படியில்லை என்பதுதான், மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் தேசிய செயற்குழுவில் ஏற்பட்ட புரிதலாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர், ராணுவ மயமாக்கும் ஒரு தந்திரத்தை பெரி யளவில் முயற்சிக்கிறாரா என்ற கேள்வி கூட அங்கே எழும்பியுள்ளது.
பச்சை வேட்டை என்ற பெயரில் ஒவ்வொரு வாரமும், சல்வாஜூடும் என்ற கூலிப்படையை ஏவி விட்டு 30லிருந்து 40 வரை பொதுமக்களை, குறிப்பாக ஆதிவாசிகளை கொலை செய்யக்கூடிய, ஒரு கொலை வெறித் தாண்டவம் சத் திஸ்கர் மாநிலத்தில் நடந்து வருகிறது என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது. தெற்கு சத்திஸ்கரில் உள்ள பாஸ்டர் பகுதியில், அந்த வட்டாரத்தையும், சல்வாஜூடும் அமைப்பையும், மாநிலத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.க.வின் தோழமை அமைப்பாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்ற செய்தி, பி.யூ.சி.எல். தேசிய கவுன் சிலையே அதிர வைத்தது. எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல், ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு 15,000 எஸ்.பி.ஓ.க்கள் என்ற சிறப்பு காவல் படை அங்கே இறக்கிவிடப்பட்டுள்ளது.
உண்மை அறியும் குழாமாக அந்த வட்டாரத்திற்கு சென்ற மனித உரிமை ஆர்வலர்களை ஆயுதம் தாங்கிய 500 பேர் கொண்ட கூலிப்படை சுற்றி வளைத்துக் கொண்டு, முட்டைகளால் தாக்கியது. அந்த தாக்குதலில் மேதாபட்கர் உட்பட அடிபட்டார்கள். இத்தகைய தொடர் தாக்குதல்களால் 643 கிராமங்களைச் சேர்ந்த, 60,000 ஏழை மக்கள், ஊர்களை காலி செய்து கொண்டு இடம் பெயர்ந்துள்ளனர். துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 70,000 கிராம மக்கள் இடம் பெயர்ந்த அகதிகளாக அங்கே இருக்கிறார்கள். எஸ்.ஆர்.எம்., டாட்டா, புஷ் கம்பெனி ஆகிய முதலாளிகள் உள்ளே நுழைவதற்காக, ஆர்.எஸ்.எஸ்.ம், சல்வாஜூடுமும் இணைந்து வேலை செய்கிறார்கள்.
கிராமங்களில் மக்களின் வீடுகள் எல்லாம் எரிக்கப்பட்டு, விளைச்சல் நிலங்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டு, கால்நடைகள் கடத்தப்பட்டு, வெறும் கைகளுடன் உள்நாட்டு அகதிகளாக மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். மாவோயிஸ்ட்களுடனோ, அல்லது அரசு படைகளுடனோ மட்டும் தான் ஒருவர் உயிர் வாழ முடியும் என்ற நிலைமை நிலவுகிறது. எதிர்ப்பு குரல்கள் நெறிக்கப்படுகின்றன. காந்திய வாதி ஹிமன்ஷýகுமார் நடத்திய பாத யாத்திரை தடுக்கப்பட்டது. பிப்.6,7 தேதிகளில் நடத்தப்பட இருந்த பொது விசாரணைக்கு வர ஒப்புக் கொண்டிருந்த மத்திய அமைச்சர் சிதம்பரம், வராமல் புறக்கணித்தார். அரசாங்க நிதியுதவியுடன் இயங்கி வந்த வனவாசி சேத்னா ஆசிரமமும் கூட உடைக்கப்பட்டது. மார்ச் மாதம் 6ம் நாள் நடக்க இருக்கும் சத்திஸ்கர் மாநில பி.யூ.சி.எல். மாநாட்டையும் குலைக்க, பா.ஜ.க. அரசு சதி செய்கிறது.
இப்படிப்பட்ட பின்னணியில்தான் இப்போது மத்திய உள்துறை அமைச்சர், மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தைப் பற்றி சிலாகித்து வருகிறார். மனித உரிமை அமைப்பை அங்கீகரித்து, மத்திய அரசு அந்த வட்டாரத்திற்கு அமைதி திரும்ப ஏற்பாடு செய்யுமா? செய்யாதா? என்ற கேள்வி முதன்மையாக நிற்கிறது.

Wednesday, February 24, 2010

தெலுங்கானா மாநிலம் ஒரு அடிப்படை உரிமை

தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தீவிரமாக வலுவடைந்து வருகிறது. அந்தப் பகுதியிலிருந்து வருகின்ற செய்திகள் புதிய எழுச்சியை படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. அதாவது தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வரும் சந்திரசேகராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், பா.ஜ.க.வும், அவ்வப்போது தெலுங்கு தேசம் கட்சியும், தெலுங்கானா பகுதியிலுள்ள காங்கிரஸ் தலைவர்களும், இப்போது தெலுங்கானா மக்கள் மத்தியில் ஆழமான பிடிப்புடன் அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக அது ஒரு மக்கள் பிரச்சினையாக மாறிவிட்டது. இன்னமும் சொல்லப்போனால், ஹைதராபாத்திலிருக்கும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கைகளுக்கு அந்தப் போராட்டம் சென்று விட்டது. தேர்தல் கட்சிகள் யாரையும் இப்போது அந்த மக்கள் நம்பத் தயாராக இல்லை. நடிகர் விஜயசாந்திக்கு தெலுங்கானாவை ஆதரித்ததற்காக இருந்த ஆதரவு கூட, அவர் டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்த பிறகு இல்லாமல் போய் விட்டது. உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டத்தின் திசை வழியை தீர்மானிப்பதால், போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்வதால், தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிரான சக்திகள், குறிப்பாக மாநிலத்தை ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி தனது தாக்குதலை உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதே செலுத்த முயல்கிறது. அதன் ஒரு அறிகுறி தான் அந்த மாணவர்கள் மத்தியில் மாவோயிஸ்ட் தூண்டுதல் இருப்பதாக அவர்கள் சாட்டி வரும் குற்றச்சாட்டு.
இந்த குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தால் ஏற்கப் படாமல், பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிகளை மானபங்கம் செய்ததாக, துணை ராணுவத்தினர் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், ராணுவமே பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையும் ஆந்திர அரசாங்கம் எதிர்த்து உச்சநீதிமன்ற மேல் முறையீட்டுக்குச் சென்று, தற்காலிகமாக ராணுவம் பல்கலைக்கழகத்திற்குள் இருக்கலாம் என்ற இடைக்கால உத்தரவைப் பெற்றது. அதையும் கூட அடுத்து வந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியது. ஆந்திர அரசாங்கத்திடம் மாவோயிஸ்ட் தூண்டுதல் பற்றி ஆதாரம் கொண்டு வா என்று கேட்டுள்ளது.
உள்ளபடியே உஸ்மானியா பல்கலைக்கழக மாண வர்கள் மத்தியில் மாவோயிஸ்ட் சிந்தனை இருக்கிறதா அல்லது இருந்ததா அல்லது அவர்கள் அதை நோக்கி ஈர்க்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று ஆராய்வோமானால், இந்தக் குற்றச்சாட்டின் ஆழமற்ற போக்கு புரியும். ஏனென்றால் நக்சல் பாரி இயக்கம் தொடங்கிய 1967ம் ஆண்டில் தொடங்கி, ஆந்திர மாநிலத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே, மாவோ சிந்தனைகள் மாணவர்கள் மத்தியில் வெள்ளம் என புரண் டோடியது என்பது உண்மை தான். அதில் உஸ்மானியா பல்கலைக்கழகம் தப்பவில்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்த பல்வேறு பிரிவு நக்சல் பாரி இயக்கங்களில், ஒவ்வொரு பிரிவின் மாணவர் அமைப்பும் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாகவே செயல்பட்டு வந்தன. புரட்சிகர மாணவர் சங்கம் என்ற மக்கள் போர் குழுவினரின் மாணவர் அமைப்பு தங்களது பரப்புரையை வழமையாகவே செய்து வந்தது. அதைவிட முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கம் என்ற பீ.டி.எஸ்.யு என்ற மாணவர் பிரிவு, சந்திரபுல்லா ரெட்டி தலைமையிலான நக்சல் பாரி பிரிவினுடைய மாணவர் அமைப்பாக, அதிக வலுவுடன் செயல்பட்டு வந்தது. அதனால் அப்படிப் பட்ட சிந்தனை உள்ளவர்கள் அந்த வளாகத்திற்கு புதிய வர்கள் அல்ல. அந்த வளாகத்தின் கட்டிடங்களில் உள்ள செங்கல்கள் கூட, மாவோ சிந்தனைகளை உரைத்துக் கொண்டேயிருக்கும். அப்படியிருந்தும் அமைதியாக இருந்த உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களை, இப்போது உசுப்பி விட்டிருப்பது யார் என்று பார்க்க வேண்டும்.
தனித் தெலுங்கானாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்த டி.ஆர்.எஸ். கட்சியை, இந்தியாவின் ஆட்சியாளர்கள் மாறி,மாறி ஏமாற்றிய பிறகு, அவர் பட்டினிப் போராட்டம் அறிவித்தார். அவரை வற்புறுத்தி போராட்டத்தை ஆட்சியாளர்கள் நிறுத்திய காரணத் தினால், உஸ்மானியா மாணவர்கள் அவருக்கு எதிராகவே போராட புறப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் தனித் தெலுங்கானா அமைக்கப்படும் என்று முதலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு பின்வாங்கியதால் உஸ்மானியா மாணவர்கள் உசுப்பி விடப்பட்டுள்ளனர். இதற்கு மாவோயிஸ்ட்கள் காரணம் என்று சொன்னால், கேழ்வரகில் நெய் வடியுது என்று சொன்னால், கேக் கறவன் புத்தி எங்க போச்சு என்பதாக கிராமத்தில் சொல் வார்கள் என்பது தான் நினைவுக்கு வரும்.
இப்போது தெலுங்கானா பகுதியின் 9 மாவட் டங்களும் முழுமையாக மக்கள் எழுச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எல்லாக் கிராமங்களிலும் அன்றாடம் தனித் தெலுங்கானா கோரிக்கைக்காக, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புரட்சிக் கலைஞர் கத்தார், தனது பாடல்கள் மூலம் தெலுங்கானா தனி மாநிலத்திற்கான கோரிக்கையை முதலில் பரப்பினார். இப்போது ஒவ்வொரு தெலுங்கானா கிராமத்திலும், பல கத்தார்கள் உருவாகி விட்டனர். கத்தார் அணிந்திருக்கும் உடையான வேட்டியும், தோளில் போட்டிருக்கும் கருத்த போர்வையும், ஆதிவாசிகளின் உடை. அதேபோல உடையணிந்து இளைஞர்களும், மாணவர்களும், கிராமம், கிராமமாக புதிய பாடல்களை கத்தார் பாணியில் எழுதி, கத்தார் பாணியிலேயே பாடி, ஆடத் தொடங்கி விட்டனர். இதுவே கிராமங்கள் வரை வேர் போல ஆழமாகச் சென்றிருக்கின்ற எழுச்சியை காட்டுகிறது. தவிர தெலுங்கானா கிராம நிலங்களை, ஆந்திரா பகுதி கம்மா பண்ணையார்கள் விலைக்கு வாங்கி, கார்ப்ப ரேட்டுகளுக்கு விற்று வருகிறார்கள். அதனால் தான் தெலுங்கானா மக்கள் நிலமற்ற, வறியவர்களாக ஆகியிருக்கிறார்கள். அதனால் கார்பரேட்டுகளுக்கு எதிரான, ஏழை விவசாயி களுடைய போராட்டமாகவும், தெலுங்கானா போராட்டம் மாறியிருக்கிறது.
சமீபத்திய தெலுங்கானா போராட்டம் 3 மாதங் களுக்குள், மாணவர்களிடையே கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் விளைவாக இதுவரை 285 மாணவர்கள் தங்களது உயிரை நெருப்பிட்டு மாய்த்துக் கொண்டுள்ளனர் என்ற கணக்கை அங்கே உள்ள பி.யூ.சி.எல். கொடுக்கிறது. ஹைதராபாத் தலை நகரில் இருக்கின்ற அரசாங்க அலுவலகங்களில், 90% பணியாளர்கள் தெலுங்கானா அல்லாத ஆந்திராவை சேர்ந்தவர்கள். தனித் தெலுங்கானா கிடைக்காமல், அந்த வட்டார மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை. அதனால் தான் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். உயிர்பலி செய்து கொள்கிறார்கள். போராட்டத்தை கொண்டு செல்கிறார்கள்.
வரலாற்றுப் புள்ளிவிவரங்கள் இதற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றன. 1953ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, மொழி வாரி மாநிலங்கள் அமைப்பதற்காக, ஒரு மாநில புனரமைப்பு ஆணையத்தை நிறுவினார். அதற்கு நீதியரசர் பசல் அலியை தலைவராக நியமித்தார். அந்த ஆணையத்தை, 1954ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த கோபிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையிட்டார். அந்த ஆணையம் தெலுங்கானா பகுதியை, ஆந்திராவுடன் இணைக்கக் கூடாது என்று கூறியது. தெலுங்கு பேசும் விரிந்த ஆந்திராவை, ஆந்திரா பகுதி மக்கள் விரும்பினாலும், தெலுங்கானா பகுதி மக்கள் இன்னமும் அதை ஏற்கவில்லை என்று ஆணையம் எழுதியது. தெலுங்கான பகுதி பொருளாதாரத்தில் வளர்ச்சியற்று இருக்கிறது என்றும் கூறியது. அதனால் தெலுங்கானாவில் இருக்கும் வளங்களையும் இணைத் தால் ஆந்திரப் பகுதியினர் தங்கள் நலனுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று பசல் அலி எழுதினார். அரசாங்க வேலைகளிலும், கல்வியிலும் ஆந்திரப் பகுதி யினர் அதிக லாபம் பெற்று விடுவர் என்பது போன்ற விவரங்களை, ஆணைய அறிக்கை 382வது பாராவில் பசல் அலி எழுதியிருக்கிறார்.
மாநில புனரமைப்பு ஆணைய அறிக்கையின் 386வது பாராவில், ஹைதராபாத் மாநிலம் என்று அழைக்கப் பட்ட பகுதியை, தெலுங்கானா மாநிலம் என்று தனி மாநிலமாக அறிவிக்கலாம் என முடித்துள்ளார். 1961ன் பொதுத் தேர்தலில் ஹைதராபாத் மாநில மக்கள் மூன்றில் இரண்டு பங்கு, ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவாக வாக்களித்தால் ஒன்றுபடுத்தலாம் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு கட்டாயமாக சேர்க்கப்பட்ட ஒன்றுபட்ட ஆந்திராவில், தனித்தெலுங்கானாவிற்காக 1969ம் ஆண்டே மாணவர்கள் போராட்டம் எழுந்தது. 362 உறுப்பினர்களை பலி கொண்டது. இந்த உயிர் பலிகள் தொடர வேண்டுமா? தெலுங்கானா வட்டார மக்களது வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டுமா? இப்படி கேள்விகளை அருகே இருக்கும் நாமாவது எழுப்பக் கூடாதா?