Sunday, March 28, 2010

படுகொலைகளுக்காக ஒரு முதல்வர் விசாரிக்கப்படலாமா?

குஜராத் மாநிலத்தின் முதலமைச்
சர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு புல னாய்வு குழு முன் தோன்றி பல்வேறு கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார் என்று செய்தி வெளியாயின. இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் தோற்றுவித்தது. 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்காக 8 ஆண்டுகள் கழித்து அந்த மாநிலத்தின் முதல்வர் விசாரிக்கப்படுகிறார். நேற்று மதியம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட மோடியின் வயது 59. அவர் விசாரிக் கப்படுவதற்கு காரணமாக இருந்த படு கொலைகள் எண்ணிக்கை 70. மக்கள் மீதான படுகொலைகளுக்காக, அதாவது குற்றயியல் வழக்குகளுக்காக ஒரு முதல மைச்சர் முக்கியமாக விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார் என்றால், அதுவும் அவரும், அவரது நிர்வாகமும், அவரது தலைமையிலான மாநில அரசாங்கமும் படுகொலைகளுக்கு உதவி செய்து, ஒத்துழைத்தனர் என்ற குற்றச்சாட்டில்
விசாரிக்கப்படுகிறார் என்றால், அது நரேந்திர மோடியாக மட்டும் தான் இருக் கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகம தாபாத்தில் இருக்கும் ஒரு பகுதியில் நடந்த படுகொலைகளைப் பற்றிய விசா ரணையே அது.
2002ம் ஆண்டில் குல்பர்கா சமூகத்தில் நடந்த பெரும் கலவரத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரே மற்றும் 69 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த முன் னாள் எம்.பி.யின் மனைவியான ஷகியா ஜாப்ரே கொடுத்த புகாரின் பேரில், 8 ஆண்டுகள் இழுத்தடித்து இப்போது குற்றம் சாட்டப்பட்டவர் மோடி முதல் முறையாக விசாரிக்கப்படுகிறார். புகாரில் குறிப்பிட்டுள்ள படி, தனது அதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதிர்கள் என்று மோடி உத்தரவிட்டார் என்பது முக்கியக் குற்றச்சாட்டு. முதல்வர் நாற் காலியில் அமர்ந்திருக்கும் போதே படுகொலைகளுக்காக விசாரிக்கப்படும் முதல் முதல்வர் நரேந்திர மோடி தான் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. ஏற்கனவே மார்ச் 21ம் நாள் விசா ரணைக்கு மறுத்த மோடி, நேற்று விசா ரணையை சந்தித்திருக்கிறார். அவருடன் 62 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதில் மோடி அரசின் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள் அடக்கம். இது ஒரு அர சாங்கத்திற்கு கிடைத்த அவமரியாதை என்கிறார் மோடி. பா.ஜ.க.விற்கு மானம் இருக்குமானால், மோடியை முதல்வர் பொறுப்பிலிருந்து இறக்கி விட்டு விசா ரணைக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்கிறது காங்கிரஸ். பிரபல மதச்சார் பற்றவாதி, மதவெறி எதிர்ப்பு ஆங்கில ஏட்டை நடத்தும் டீஸ்டா செட்டல் வாட் இதை ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று குறிப்பிடுகிறார்.
படுகொலைகளில் மோடியின் நேர டியான பங்கெடுப்புப் பற்றி, ஒரு ஆங்கில ஏடு புலனாய்வு செய்தது. அதை அவர்கள் 2007ம் ஆண்டு அக்டோபர் 25,27 தேதிகளில் வெளியிட்டார்கள். அவர்கள் பதிவு செய்திருந்த நாடாக் களை தேசிய மனிதஉரிமை ஆணை யத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ. அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்டது. குஜராத் உயர்நீதிமன்றமும், இந்தியாவின் உச்சநீதிமன்றமும் அந்த சாட்சியங்களை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள் ளலாம் என்று உத்தரவிட்டது. அதில் உள்ள ஆதாரங்களை பொதுநலன் கருதி, பாதிக்கப்பட்டோருக்காக பணியாற்றும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட புலனாய்வு அம்பலப் படுத்தலில் வெளியாகியுள்ள ஆதாரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. பாபு பஜ்ரங்கி பட்டேல் என்பவர், படுகொலையில் நேரடியாக மோடிக்கு முதன்மைப் பாத் திரம் இருந்தது என்று பேசியிருக்கிறார். மோடியின் கட்டளைகளால், காவல்துறை இயந்திரம் செயல்படாமல் ஆக்கப்பட்டது என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறார். நீதித் துறை குழப்பி விடப்பட்டது என்பதாக கூறுகிறார். நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த படுகொலைகள், கர்னக்கொடூரமான நிகழ்வுகளால் நிரப்பட்டிருந்தது. அதில் கவுசர் பானு என்ற கர்ப்பமாகியிருந்த முஸ்லிம் பெண் மணியின் வயிறு கிழிக்கப்பட்டு, குழந்தை யின் கரு வெட்டப்பட்டதை பாபு பஜ்ரங்கி ஒப்புதல் வாக்குமூலமாக அந்த இதழின் காணொளி நாடாவில் கூறியிருந்தார். அதை நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் பயன்படுத்தக் கூடாது என்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் நிற்கிறது.
அடுத்த சாட்சியாக அரவிந்த் பாண் டியா என்ற அரசு வழக்கறிஞர் தனது வாக்குமூலத்தைத் தருகிறார். அதில் குஜராத் மாநிலத்தின் முழுமையான குற்றயியல் நீதித்துறை கட்டமைப்பும், மோடியால் நேரடியாக உடைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
எம்.எஸ்.பல்கலைக்கழகத்தின் கணக்காயரான திமாந்த் பட் என்பவர், மோடியின் நேரடி பங்கு பற்றி இன்னொரு ஆதாரத்தைக் கூறியுள்ளார். 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இரவு, கோத்ரா விபத்தையொட்டி நடத்தப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் கூட்டத்தில் மோடி கலந்துக் கொண்டது பற்றி விளக்கியுள்ளார்.
கோத்ராவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட் கூறும்போது, வி.எச்.பி.யின் பந்தில் 3 நாள் எடுத்துக் கொண்டு, அதற்குள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யும் படி மோடி உத்தரவிட்டதை அம்பலப்படுத்துகிறார்.
அதேபோல அகமதாபாத் நகர வி.எச்.பி. தலைவரான ராஜேந்திர வியாஸ், கோத்ராவில் எரிக்கப்பட்ட எஸ்6 பெட்டி இருந்த சபர்மதி விரைவு வண்டிக்கு, கரசேவகர்களுக்கு பொறுப்பெடுத்திருந்தது தான் தான் என்றும், அந்த வண்டியில் ஏறிய கர சேவகர்கள் எவ்வளவு மோசமாக நடந்துக் கொண்டார்கள் என்றும் பகிரங்கமாக அந்த காணொளியில் போட்டு உடைக்கிறார்.
நரோடா பாட்டியா பகுதியைச்
சேர்ந்த சுரேஷ் ரிச்சர்டு சாரா என்பவர், படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஒருவர். 2002ம் ஆண்டில் பிப்ரவரி 28ம் நாள், படுகொலைகளையும், பாலியல் வன்புணர்ச்சிகளையும் செய்த கொடுமதியாளர்களை மோடி நேரில் பாட்டியாவில் மாலையில் சந்தித்து, மாலை அணிவித்து நல்ல பணியை முடித்தீர்கள் என பாராட்டினார் என்று சுரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வி.எச்.பி.சேர்ந்த ரமேஷ் தாவே, கோத்ரா நிகழ்வுக்கு முன்பே அதாவது பிப்ரவரி 27க்கு முன்பே வெடிகுண்டுகளும், திரிசூலங்களும் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது என்று அந்த பதிவில் கூறியுள்ளார். வி.எச்.பி. ஜில்லா சஞ்ஜோயக் சபர்கந்தாவான தாவால் பட்டேல், கோத்ரா ரயில் எரிப்புக்கு முன்பே விநியோகிக்கப்பட்ட ஆயுதங்கள் பற்றி விளக்கியுள்ளார். குஜராத் வி.எச்.பி. விபக் பிராமுக்கான அணில் பட்டேல், ஆயுத விநியோகம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்பே நடந்ததாக உறுதி கூறியுள்ளார்.
வி.எச்.பி. யின் தலைமை மெக்சா னாவான திலிப் திரிவேடி, இன்னொரு புறம் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் இந்த ஊடகத்தின் கேமரா முன்னால் சில உண்மைகளை பகிரங்கமாக உடைத்துள்ளார். அதில் குஜராத் மாநிலம் முழுவதும் நடந்த 1,800 கலவரம் சம்மந்தப்பட்ட வழக்குகளை இல்லாமல் செய்தவர் தான் தான் என பெருமையடித்துக் கொண்டார். அதேபோல 1,700 கலவர வழக்குகளை பொய்யான சாட்சிகளை உருவாக்கி தீர்த்து வைத்ததாகவும், அதில் 12 வழக்குகளில் மட்டுமே தண்டனை வாங்கிக் கொடுத்ததாகவும், ஆதார பூர்வமாக கூறியுள்ளார்.
மேற்கண்ட சில உண்மைகளே குஜராத்தில் 2002ம் ஆண்டில் நடந்த கொடுமைகளை எடுத்து வைக்க போதுமானவையாக இருக்கின்றன. இப்போது நரேந்திர மோடி என்ற ஒரு முதலமைச்சர், தனது மாநிலத்திலேயே முன்கூட்டி தயாரிக்கப்பட்ட ஒரு ஆயுதந்தாங்கிய மதவெறித் தாக்குதலை நடத்துவதற்காக, செயற்கையாக ஒரு சூழலை ஏற்படுத்தியதும், திட்டமிட்டு அதையே பயன்படுத்தி மாநிலமெங்கும் மதவெறிக் கலவரத்தையும், படு கொலைகளையும் செய்து,3,000 முஸ்லிம்களை வரை பலிவாங்கியதையும், ஆயிரக்கணக்கான கோடி பெருமான சொத்துக்களை அழித்ததையும் நம்மால் உணரமுடிகிறது. ஆனால் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நரேந்திர மோடி தான் என்பதை நாம் மறக்க முடியாது. இது இந்தியாவின் நாடாளுமன்ற பாதையை கேள்விக் குறியாக்குமா?

Saturday, March 27, 2010

மோதல் சாவுகள் மனிதஉரிமை மீறல்களா?

கடந்த சில காலமாக மனிதஉரிமைகள் பற்றிய விவாதம், உலகெங்கிலும் முக்கிய மான ஒரு விவாதமாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு அரசாங்கமும் மனிதஉரிமை பிரச்சனைகளுக்காக தனியான கவனம் செலுத்தி வருவதை, உலகத்திற்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் அரசாங்கங்களின் மீது மனிதஉரிமை மீறல்கள் செய்வதாக எழுகின்ற குற்றச்சாட்டுகளும் அதிகமாக வந்துக் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் சில பிரச்சனைகள் மீது ஒரு நாட்டின் அரசாங்கம், இன்னொரு நாட்டின் அரசாங்கத்தின் மீது மனிதஉரிமை மீறல் செய்ததாக குற்றம் சாட்டுவது என்பதும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதில் அரசாங்கங்கள் ஒன்றுக்கொன்று, தங்கள் நாட்டில் உள்ள கலகக்காரர்களுக்கு ஆயுத உதவி செய்ததாக இன்னொரு அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்த அர சாங்கமும் இப்படிப்பட்ட குற்றச்சாட் டுகளில் இருந்து தப்பித்து நிற்பதாகத் தெரியவில்லை. அரசாங்கங்கள் தங்கள் தலைமையில் வைத்திருக்கும் ராணுவமும், துணை ராணுவமும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமல் இருப்பதும் இல்லை. அதிலும் முக்கியமாக ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் காவல்துறை செய்கின்ற மனிதஉரிமை மீறல்கள் அதிகமாக பட்டியல் போடப்படுகின்றன. ஏனென்றால் நிராயுதப் பாணியாக இருக்கின்ற பொதுமக்கள் மத்தியில் அன்றாடம் தங்களது சட்ட ஒழுங்கு பாது காப்புப் பணியை ஆற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் காவல்துறை யினர். அப்படிப்பட்ட பொறுப்பில் உள்ள மனிதர்கள் பிழைகள் செய்யும்போது, அத்தகைய தவறுகள் கடுமையாக விமர்சிக்கப்படுவது இயல்பு தான். அதிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி குடிமக்களாக இருக்கும்போது, அத்தகைய குற்றங்கள் புரிபவர்கள் காவல்துறையாக இருந்தாலும், பொதுவாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள்.
மேற்கத்திய நாடுகளில் இப்படிப் பட்ட மனிதஉரிமை மீறல்கள் பெரும் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. தனிமனித உரிமைகள் அங்கு மனித உரிமைகளாக உயர்த்திப்பிடிக்கப் படுகிறது. கீழ்த்திசை நாடுகளில் அதாவது வளரும் நாடுகளில் குறிப்பாக ஏழை நாடுகளில் இத்தகைய மனித உரிமை மீறல்கள், பொதுமக்கள் மீது பாயும்போது அதுவும் ஆயுதந்தாங்கிய அரசாங்கத்தின் காவலர்கள் செயல்களால் பாயும் போது, அழுகுரல் மட்டுமே ஏழைகளின் அடைக்கலமாகயிருக்கிறது.
ஊடகங்களிலும், இன்றைக்கு பெரிய அளவுக்கு ஈர்க்கப்படும் செய்திகள் குறிப்பாக கடத்தல், பாலியல் வன்முறை, காணாமல் போதல், சித்ரவதை, நீதிவிசா ரணையற்ற கொலைகள் ஆகியவையாக இருக்கின்றன. அவையெல்லாம் இந்தி யாவில் இருக்கும் காவல்துறை அதி காரிகளாலும், பாதுகாப்புப் படையாலும் செய்யப்படும் போது அவை பரபரப்பு செய்திகளாக மாறுகின்றன. கடந்த ஒரு மாதக் காலத்திற்குள் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் டைம்ஸ், டைம் ஆகிய பிரபல இதழ்களில் இந்தியாவில் நடக்கும் மோதல் சாவுகள் பற்றி தீவிரமான விவாதம் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1,000 பேர் வரை இந்தியாவில் மோதல் சாவுகளில் காவல் துறையால் கொல்லப்படுகிறார்கள் என்பது அந்த அமெரிக்க ஏடுகளில் குறிப்பு. பயங்கரவாதிகள் தொடங்கி சாதாரண சிறு திருடர்கள் வரை இந்தப் பட்டியலில் கொல்லப்படுகிறார்கள் என்று அந்த ஏடுகள் கூறுகின்றன. அத்தகைய மனித உரிமை மீறல்களை இந்திய காவல்துறையும், ராணுவமும் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அதில் குறைந்த பட்சம் சில வழக்குகளாவது போலி மோதல் சாவுகள் அல்லது போலி துப்பாக்கிச் சண்டை என்பதாக அவர்கள் வருணித்துள்ளார்கள். இந்தியாவில் இருக்கின்ற குறைந்தபட்ச தடவியல் புலனாய்வை வைத்து, இரண்டு புறமும் சோதித்து ஒரு தீர்மானகரமான முடிவுக்கு கொண்டுவரப்பட முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தி யாவின் ஊடகங்கள் காவல்துறை கொடுக் கும் அனைத்து அறிக்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கின்றன என்று அந்த அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. அதுமட்டுமின்றி பயங்கரவாதத்தையும், குற்றங்களையும் கண்டு அச்சப்படக் கூடிய நடுத்தர வர்க்க பார்வையாளர்களில் பலர், இது போன்ற போலி மோதல்
சாவுகளை செய்த காவல்துறையின் நியாயப்படுத்தும் அறிக்கைகளைக் கண்டு அகமகிழ்கிறார்கள் என்பதாகவும் அந்த ஏடுகள் அங்கலாய்த்துள்ளன. அதேநேரத்தில் இந்திய திரைத்துறையும் போலி மோதல் சாவுகளை நடத்துகின்ற, காவல்துறை அதிகாரிகளை சிறப்பு மோதல் சாவு அதிகாரிகள் என்று முடிசூட்டுவதாக எழுதப்பட்டிருப்பது, இங்கும் பொருத்தமாகத் தான் இருக்கிறது. தமிழ் திரைப்படம் ஒன்றில் இதுபோன்ற போலி மோதல் சாவுகளை ஏற்படுத்தும் காவல்துறை அதிகாரியை, ஓகோ என புகழ்ந்து கதாநாயகனாக சித்தரித்தார்கள். அந்தப் பாத்திரத்தில் நடித்ததற்காகவே அந்த கதாநாயகனை அழைத்து ஒரு பெரிய காவல்துறை அதிகாரி, பாராட்டு தெரிவித்தார். இப்படியாக சூழல், மனித உரிமை மீறல்களை செய்வதை உற்சாகப்படுத்துகிறது. காவல்துறை
சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று நம்பக்கூடிய நமது மக்கள் மத்தியில், நீதி விசாரணை இல்லாத மரண தண்டனை வழங்க காவல் அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியை கேட்பதற்கான மனச்சாட்சி எழவில்லை.
தாங்கள் மோதல் சாவுகளில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணையின்றி நடுரோட்டில் சுட்டுக் கொன்றதை நியா யப்படுத்துவதற்காக, அந்த காவல்துறை அதிகாரிகள், தாங்கள் தற்காப்புக்காகத் தான் சுட்டோம் என்று கூறிவருகிறார்கள். ஆனாலும் அத்தகைய மோதல் சாவு கள் ஒரு மாஜிஸ்டிரேட்டால் விசாரிக் கப்பட வேண்டும். மரணம் சம்பவித்த உடனேயே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட வேண்டும். அந்த போஸ்ட்மார்ட்டம் வீடியோ படமாக எடுக்கப்பட வேண்டும். பின்னால் ஒரு நாள் நீதிமன்ற விசாரணைக்கு உதவும் பொருட்டு இத்தனை ஏற்பாடுகளையும் காவல்துறையே செய்ய வேண்டும். மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டல்களைக் கூட, பலநேரம் பின்பற்றாமல் காவல்துறையே அந்த வழக்கின் மீது விசா ரணையை நடத்தி முடித்து வருகிறார்கள். அதற்கு மேலதிகாரிகளின் ஆசீர்வாதமும் கிடைத்து விடுகிறது.
டெல்லி அருகே நொய்டாவில் 2 பேர் இப்படிக் கொல்லப்பட்டதை அமெரிக்க ஏடான டைம் வெளியிட, சத் திஷ்கர் மாநிலம் சிங்கரம் பகுதியில் 19 ஆதிவாசி கிராமத்தவர்கள் கொல்லப் பட்டதை, அமெரிக்க ஏடான டைம்ஸ் வெளியிட்டது. இவற்றை அங் கொன்றும், இங்கொன்றும் நடக்கும் நிகழ்வுகள் என இந்திய அதிகாரிகள் வருணித்தார்கள். 1980களிலும், 1990 களிலும் அன்றாடம் இந்தியாவில் மோதல் சாவுகள் என்பது நிகழ்ந்ததாக அந்த ஏடுகள் வெளிப்படுத்தின. அதன் எண்ணிக்கையை கூறும்போது, கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விவரப்படி 21,000 மோதல் சாவுகள் அந்த பத்தாண்டுகளில் நடந்துள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டு காவல்துறையும் இத் தகைய எண்ணிக்கையை உயர்த்துவதில் குறைவானர்கள் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருப்பவர்கள். தமிழ்நாட்டில் அதற்கென்றே காவல்துறை அதிகாரிகள் ஒரு பாணியை பின்பற்றுகிறார்கள். அந்த ஒரே பாணி கொல்லப்பட்டவர் கையில் ஒரு வீச்சரிவாளையும், ஒரு வெடிகுண்டையும் கொடுத்து விடுகிறது. காவல்துறை பக்கத்தில் 2 அதிகாரிகளை காயக்கட்டுடன், மருத்துவமனையில் சேர்த்து விடுகிறது. இந்த நடைமுறை நேற்றும் கூட நடந்துள்ளது.
தேசிய மனிதஉரிமை ஆணையம், காவல் துறை நடத்தும் ஒவ்வொரு மோதல் சாவுகளையும் கிரிமினல் புல னாய்வு துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை சுட்டுக் கொன்ற அதிகாரி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டல் கொடுத்துள்ளது. தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் வழிகாட்டல்களை நாம் ஏற்றுக்கொள்ளப்போகிறோமா? அல்லது சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவது என்ற பெயரில் துப்பாக்கி வைத்திருப்பவர் எந்த உயிரையும் பறிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்போகிறோமா? இன் றைக்கு விட்டு விட்டால், நாளை வரலாறு இதை பதிவு செய்து பழி கூறாதா? மனிதஉயிர்களை மதிப்பது மனித உரிமைகளின் அடிப்படை தேவை என்பதை எப்போது உணரப் போகிறோம்?

Friday, March 26, 2010

பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா உண்மையில் விரும்புகிறதா?

இந்தியாவில் நடந்த மும்பை பயங் கரவாத தாக்குதல், உலக அரங்கில் பிரபலமான ஒரு தாக்குதல். ஏனென்றால் ஆங்கிலப் படங்களில் தொடர் காட்சிகளாக வருவதுபோல, பயங்கரவாதிகள் தாஜ் ஓட்டலில் மற்றும் மும்பையின் ரயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல்களை, உலகமே காட்சி ஊடகங்களில் கண்டுக் கொண்டிருந்தது. இந்தத் தாக்குதலில் பிடிபட்ட அஜ்மல் கசாப் யார் என்பது பற்றி இன்று வரை குழப்பமான செய்திகளைத் தான் இந்திய மக்கள் கேட்டு வருகிறார்கள். நேபாளத்தில் பிடிபட்டு மும்பையில் கிடைத்தது போல காட்டப்பட்டார் என்று ஒரு செய்தி வந்தது. துப்பாக்கியுடன் கசாப் தாஜ் ஓட்டலுக்குள்ளே இருந்ததை ஊடகங்களில் பார்த்தவர்களும் உண்டு. பிடிபட்ட பின் கசாப், அமெரிக்க உள்நாட்டு புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ.யால், மும்பையில்
விசாரணைக்குள்ளாக்கப்படுகிறார். நீதி மன்றத்தில் பல விஷயங்களை கசாப் ஒப்புக்கொள்கிறார். ஒரு கட்டத்திற்குப் பிறகு அனைத்தையும்
கசாப் மறுக்கிறார். கசாப்பிற்காக வாதம் செய்ய வந்த வழக்கறிஞர் பிரச்சனைக் குள்ளாக்கப்படுகிறார். கடைசியாக அமெரிக்காவில் மும்பைத் தாக்குதலுக்காக டேவிட் ஹெட்லியும், ராணாவும் பிடிபடுகிறார்கள். ஹெட்லி இந்தியாவிற்கு பலமுறை வந்துப் போனவர் என்று அரசுகள் அறிவித்தன. தன்னை விசாரிக்க வந்த அதிகாரிகளில் ஹெட்லியும் இருந்தார் என்று கசாப் கூறினார். இப்போது ஹெட்லியை அமெரிக்கா சென்று விசா ரிக்க, இந்திய அதிகாரிகளுக்கு உரிமை உண்டா? இல்லையா? என்ற விவாதம் நடக்கிறது.
அதிலும் அமெரிக்க நீதித்துறை தலைவர் எரிக் ஹோல்டர், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தொலைபேசியில் பேசியதாக செய்தி வெளியானது. அதில் ஹோல்டர் அமெரிக்காவிற்கு சென்று, இந்திய புல னாய்வுத் துறை அதிகாரிகள் ஹெட்லியை விசாரிக்கலாம் என்று கூறியதாக சிதம்பரம் சொன்னார். அதையொட்டி புதிதாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து புலனாய்வுத் துறைகளையும் ஒருங்கிணைத்த அமைப்பான, தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளிடம், அமெரிக்கா செல்வதற்கும் ஹெட்லியை நீதிவிசாரணைக்கு உட்படுத்துவதற்கும் தேவையான ஆவணங்களை தயார் செய்யும்படி சிதம்பரம் உத்தரவிட்டார்.
அதேநேரத்தில் அமெரிக்க தூதர் திமோதி ரோய்மர், இந்திய விசாரணைக்கு அனுமதிக்க இன்னமும் முடிவுசெய் யவில்லை என்று கூறினார். ஏன் இந்த முரண்பாடு என்று ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உள்துறை அமைச் சர் மீது பாய்ந்தார்கள். லண்டனுக்கு பறந்து சென்றிருந்த அமைச்சர் சிதம்பரம் அங்கிருந்தே அதற்கு பதில் கூறினார். அமெரிக்கர்களின் அறிவிப்புகளில் முரண்பாடுகள் இல்லை என்றார். எதற்காக அமெரிக்கர்கள் அடித்த பல்டியை, சிதம்பரம் சமாளிக்க வேண்டும் என்று ஊடகங்கள் கேட்டன. அதேசமயம் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, அமெரிக்கா ஹெட்லி விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். பிறகு உள்துறை அமைச்சகமும் அனுமதிக்காக ஒரு கடிதம் அனுப்புகிறோம் என்று கூறி யுள்ளனர்.
இந்த நேரத்தில் ஒரு கேள்வி வலுவாக எழுந்துள்ளது. இந்திய காவல்துறையின் பிடியில் இருக்கும் அஜ்மல் கசாபை, இந்திய நாட்டில் நடந்த ஒரு தாக்குதல் பற்றி விசாரணைச் செய்வதற்கு, சம்மந்தமேயில்லாத அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ.க்கு இந்திய அரசு அனுமதிக் கொடுத்தது. எதற்காக அப்படிப்பட்ட அனுமதியை கொடுக்க வேண்டும்? ஆனால் அதேசமயம் இந்திய நாட்டிற்குள் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர் என்று அறியப்பட்ட டேவிட் ஹெட்லி, அமெரிக்க காவல் துறையின் பிடியில் இருக்கும் போது, இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அங்கே
சென்று விசாரிப்பதற்கு இத்தனைத் தூரம் தயக்கங்களையும், தடங்கல்களையும் ஏற்படுத்துவதுள எதனால்? மேற்கண்ட கேள்விகளைக் கேட்காமல் இருந்தோம் என்றால், பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்ற நோக்கத்திலேயே பிழை இருக்கிறது என்று அர்த்தம்.
ஏனென்றால் அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலும், பெண்டகன் ராணுவத் தளத்திலும் பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, அமெரிக்கா அரசு உலக முழுவதிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என அறைகூவி அழைத்தது. அந்த அறைகூவலை சிரமேற்ற இந்திய அரசு, தன்னையும் அத்தகைய உலகு தழுவிய பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தில் இணைத்துக் கொண்டது. இப்போது ஒரு குறிப்பிட்ட பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட் டப்படும் பயங்கரவாதிகளை விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில், அமெரிக்காவும், இந்தியாவும் மாறுபட்ட நிலைகளை எடுப்பதற்கான காரணம் என்ன?
அமெரிக்கா உண்மையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நம்பிக்கைக் கொண்டுள்ளதா? அல்லது அதைப் பயன்படுத்தி தனது ஆயுத வியாபாரத்தை, உலகெங்கிலும் நடத்துவதற்கு ஏற்ற சூழலை, நிரந்த ரமாக உருவாக்க எண்ணுகிறதா? பயங்கர வாதிகள் தொடர்ந்து உலகில் இருந்தால் தான், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து இந்தப் பிராந்தியத்தில் நடந்து வந்தால் தான், அமெரிக்காவின் சாவு வியாபாரிகள் என அழைக்கப்படும் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு தொடர்ந்து வியாபாரமாகும் என்று அமெரிக்கா கருதுகிறதா? அதனாலேயே பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அடிப்படையான விவரங்களை பாதிக்கப்பட்ட நாடுகள் கூட, தெரிந்துக் கொள்ள கூடாது என்று கருதுகிறதா? இத்தனைக் கேள்விகள் எழுகின்ற நேரத்தில் 2005ம் ஆண்டு மத்ரித் பிரகடனம் என்பது நினைவுக்கு வருகிறது.
2005ம் ஆண்டு மார்ச் 8 முதல் 11 வரை மத்ரித் நகரில் நடத்தப்பட்ட ஜன நாயகம், பயங்கரவாதம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அனைத்து நாட்டு உச்சி மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஐ.நா.சபையின் அன்றைய செயலாளர் நாயகம் கோபி அன்னன் கலந்துக் கொண்டார். உயர்மட்ட கூட்டத்தில் மிரட்டல், சவால்கள், மாற்றம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. உயர்மட்ட குழுவின் ஆலோசனைகள் மீதான நடவடிக்கைகள் என்பதை மத்ரித் நிகழ்ச்சி நிரல் என்பதாக அறிவித்தார்கள். அதில் எந்தவொரு மன்னிப்போ, நியாயப்படுத்தலோ காட்டாமல், முழுமையான தீமை என்பதாக பயங்கரவாதம் பார்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் போது, எதிர் பயங்கரவாதம் என்பதே அதற்கான வழியை உருவாக்கி விடக் கூடாது என்று அரசுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பது அனைத்து நாட்டு சமூகத்தின் பொறுப்பு என கூறப்பட்டது. மேற்கண்ட எல்லா அறிவிப்புகளுமே, இன்றைய அமெரிக்காவின் அணுகு முறையில் மீறப்பட்டுள்ளது. ஹெட்லி அமெரிக்க அரசிடம் ஒப்புக் கொண் டதற்காக, அவனது தண்டனை குறைக் கப்படும் என்கிறது அமெரிக்கா. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளாக வடஅமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் கருதப்படுகிறதே தவிர, 1956க்குப் பின்னால் தொடர் தாக்குதல் களைச் சந்திக்கும் இந்தியா அவ்வாறு பட்டியலிடப்படவில்லை.
மத்ரித் பிரகடனத்தில் கூறப்பட்ட, பயங்கரவாதம் என்பது அனைத்து மானுடத்திற்கும் எதிரான ஒரு குற்றம் என்ற கருத்துக் கோப்பை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா செயல்படுவதாக தெரியவில்லை. அந்த பிரகடனத்தை அறி வித்த ஐ.நா.வின் பொதுச் செயலாளர், அரசால் ஏற்படுத்தப்படும் பயங்கரவாதம், பாதிக்கப்படும் அரசுக்கு எதிரான ஒரு மறைமுக ஆக்கிரமிப்பு என்று கூறினார். இங்கே மும்பைத் தாக்குதலை ஒரு மறைமுக ஆக்கிரமிப்பாக நடத்திய அரசப் பயங்கரவாதம், பாகிஸ்தானுடையதா அல்லது அமெரிக்காவினுடையதா என்ற கேள்வி தானாகவே எழுகிறது. எப்படியிருந்தாலும் இன்று அமெரிக்கா அரசை ஒவ்வொரு விஷயத்திலும் சார்ந் திருக்கும் இந்திய அரசு, இந்த உண் மையை விவாதிக்க தயாராயிருக்குமா என் பதே நமது கேள்வி.

Thursday, March 25, 2010

கனுசன்யால் மரணம் எழுப்பும் விவாதம்

நேற்று 82 வயதைக் கடந்த கனுசன்யால் இறுதி அஞ்சலி மேற்குவங் கத்தில் நடந்தது. அதில் ஏராளமான விவசாயிகள் கலந்துக் கொண்டார்கள். அவர்களில் கூர்காலாந்து தனி மாநிலத்திற்காக போராடக் கூடியவர்களும் இருந்தார்கள். விவசாயப் பெண்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதபடியே, கனுசன்யாலை எடுத்துச் சென்ற வாகனத்துடன் ஓடிவந்தார்கள். இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஆழமான பதிவை ஏற்படுத்தியுள்ள அந்த முதியவரின் வரலாறு பல படிப்பினைகளை பதியவைக்கிறது.
43 ஆண்டுகளுக்கு முன்னால் 1967ம் ஆண்டு மார்ச் 25ம் நாள், மேற்குவங்க மாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில், சிலிகுரி வட்டத்தில் இருக்கும் நக்சல்பாரி என்ற கிராமத்தில் ஆயுதக்கல வரத்தில் இறங்கிய விவசாயிகளுக் கும், காவல்துறைக்கும் மோதல் நடந்தது. அந்த விவசாயிகளின் ஆயுதப் பேரெழுச்சியைத் தயார் செய்து, அதற்காக 8 ஆவணங்களை வழிகாட்டும் கருத்தி யலாக வெளியிட்டு தலைமை தாங்கியவர் சா ருமஜும்தார். அவருடன் அந்த வட்டாரத்தில் விவசாயிகள் மத்தியில் முன்னோ டியாக செயல்பட்ட களப்பணியாளர்கள் 2பேர். அந்த 2 தலைவர் களில் ஒருவர் ஜங்கல் சந்தல். இன்னொருவர் கனுசன்யால். மேற்கண்ட ஆயுத எழுச்சி மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணியுடன், வங்காள காங்கிரஸ் நடத்திய ஆட்சிக் காலத்தில் நடந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு உள்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தார். நக்சல்பாரி விவசாய எழுச்சியை, சாரு மஜும்தார் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ளே இருந்து கொண்டே திட்டமிட்டார். டார்ஜிலிங் மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கட்சி, சாருமஜும்தாரின் செல்வாக்கின் கீழ் அன்று இருந்தது. அதனால் புரட்சிகரப் பாதையை தேர்வு செய்த, புரட்சியாளர்கள் சி.பி.எம்.கட்சிக்குள் இருந்து கொண்டே தங்களது தலைமையில் கீழ் உள்ள விவசாய சங்கத்தினரையும், மாணவர் சங்கத்தினரையும் ஈடுபடுத்தி, அத்தகைய ஆயுத எழுச்சியை நடைமுறைப்படுத்த முடிந்தது. ஜோதிபாசுவின் ஏற்பாட்டில், மத்திய அரசின் ஒத்துழைப்பில் கிழக்கு பிராந்திய துப்பாக்கிப்படை என்ற துணை ராணுவத்தைக் கொண்டு வந்து இறக்கி, புரட்சியாளர்களின் கரங்களுக்குள் சென் றுவிட்ட நக்சல்பாரி மற்றும் அண்டைக் கிராமங்களை துப்பாக்கி முனையில் சி.பி.எம். கூட்டணி மீட்டெடுத்தது. அதையொட்டி மூன்று தலைவர் களான சாருமஜும்தார், ஜங்கல் சந்தல், கனுசன் யால் ஆகியோர் பல தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்கள். அதன்பிறகு ஜங்கல் சந்தல் விடுதலையான பிற்பாடு, தனது களப்பணிகளில் பின்வாங்கினார். 1981ல் ஜங்கல் சந்தல் மறைந்தார். ஆனால் விடுதலைக்குப் பிறகு, சாருமஜும்தார் தலைமையில் கனு சன்யால், புரட்சிகர இயக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டார்.
1968ம் ஆண்டு சாரு மஜும்தார் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட அகில இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஒருங்கி ணைப்புக் குழுவில், கனு சன்யாலும் இணைந்துச் செயல்பட்டார். கருத்தியல் வழிகாட்டலுக்கும், புரட்சிகர கம்யூனிஸ்ட் தலைமைத்துவத்திற்கும்
சாருமஜும்தார் தலைமைக் கொடுத்ததால், அவரது தலைமை டார்ஜிலிங் மாவட்டத்திலிருந்து, மேற்கு வங்கத்திற்கும், மேற்கு வங்கத்திலிருந்து இந்தியா முழுமைக்குமாக விரிவடைந்து வளர்ந்தது. அதேசமயம் கனுசன்யால் சிலிகுரி பகுதியில் விவசா யிகள் மத்தியில் ஆழமான பிடிப்புக் கொண்ட முன்னோடித் தலைவராக எழுந்து வந்ததால், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருக்கும் கூர்க்கா இன மக்கள் மத்தியில் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் செல்வாக்குள்ள தலைவராக தொடர்ந்து விளங்கினார். 1968ம் ஆண்டு தொடங்கிய அகில இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு, இந்தியா முழுமைக்கும் ஒரு போராட்ட வேலைத் திட்டத்தை முன்வைத்தது. அதில் அடுத்த அறுவடை நமக்கு என்ற முழக்கம் உயர்த் திப் பிடிக்கப்பட்டது. இத்தகைய விவசாயிகள் சார்ந்த, நிலமற்ற விவசாயிகளின் நிலத் தாகத்தை நிறைவு செய்வதற் கான போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக, பண்ணையார்களின் ஆதிக்கத்தில் இருக்கும் நிலங்களில் பசுமையை உருவாக்குவதற்கு, உழைப்பையும், வியர்வையையும் சிந்திய நிலமற்ற விவசாயிகளின் போர் முழக்கமாக அது மாறியது. இவ்வாறு விவசாயிகளின் அடுத்தக் கட்ட போராட்டத்தை உணர்ந்து ஈடுபடுத்துவதில் கனுசன்யாலுக்கும் நல்லதொரு பங்கு இருந்தது. பீகார் மாநிலத்திலும், ஆந்திர மாநிலத்திலும் அடுத்த அறுவடை நமக்கே என்ற முழக்கத்துடன் திரண்ட நிலமற்ற, ஏழை விவசா யிகள் ஆயிரக்கணக்கில் ஆயுதங்களுடன் அணி திரண்டனர். அப்படி அணிதிரண்டவர்கள் தங்களுக்கு தடையாக இருப்பவர்களாக அந்த வட்டாரத்தின் ஆதிக்கத்தை வைத்திருக்கும் பண்ணை யார்களைக் கருதினார்கள். அதனால் முதலில் அந்த வட்டாரங்களில் திரண்ட விவசாயப் போராளிகள், ஆதிக்கம் செலுத்தும் பண்ணையார்களை அழித்து விட்டு, பிறகு அவர்களது விளை நிலங்களுக்குள் இறங்கி அறுவடையை கைப்பற்றினார்கள். கைப்பற்றப்பட்ட அறுவடையை நிலமற்ற, ஏழை விவசாயிகள் மத்தியில் பிரித்துக் கொடுத்தனர். இவ்வாறு கிராமப்புறங்களில், புரட்சியாளர்கள் தலைமை யிலான கிராமப்புற மக்கள் அதிகாரம் என்பதைப் படைப்பதற் கான, போ ராட்டம் தொடங்கியது.
மேற்கண்ட புரட்சிகர போராட்டங்கள் மாசேதுங்கின் தத்துவ வழிகாட்டலில் எடுத்துச் செல்லப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவும் அதற்கு முழுமையாக இருந்தது. இந்தியாவில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யையும், சீன கம்யூனிஸ்ட் கட்சி அங்கீ கரிக்காமல், மேற்கண்ட புரட்சியாளர்களை அங்கீகரித்தது. அதனால் சி.பி.ஐ., சி.பி.எம். ஆகியோர் திரிவுவாதிகள் என முத்திரைக் குத்தப் பட்டனர். மார்க்சியத்தை திரித்து தேர்தல் பாதைக்கு சென்று விட்டவர்கள் என்று அவர்களை குற்றம் சாட்டினார்கள்.
1969ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் மேற் கூறிய புரட்சியாளர்கள், புதியதொரு கம் யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி னார்கள். லெனினது பிறந்த நாளான அந்த நாளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்று அதற்கு பெயரிட்டார்கள். சாருமஜும்தார் அந்த புதிய கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கனுசன்யால் அந்த கட்சியில் இறங்கி களப் பணியில் ஈடுபட்டார். புதிய கட்சியின் துவக்கத்தை உலகிற்கு அறிவிப்பதற் காக, 1969ம் ஆண்டு மே தினத்தன்று, கொல்கத்தா நகரில் ஒரு மாபெரும் சிவப்புப் பேரணியை, நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்ட அந்த புரட்சியாளர்கள் நடத்தினார்கள். புதிய கட்சி தன்னை தலைமறைவு கட்சியாக அறிவித்துக் கொள்ள திட்டமிட்டிருந் ததால், கட்சியின் பொதுச் செயலாளர் சாரு மஜும்தார் தலைமறை வானார். அத்தகைய சூழலில் கட்சியை பிரம்மாண்டமான மக்கள் கூட்டத்தில் கல்கத் தாவில் அறிவிப்பதற்கு பொருத்தமானவராக கனுசன்யால் தேர்வு செய்யப்பட்டார்.
சி.பி.ஐ. (எம்எல்) கல்கத்தாவில் அந்த மாபெரும் பேரணியில், கனுசன்யாலால் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரில்லாப் போராட்டத்தை, அதிலும் குறிப்பாக வர்க்க எதிரி களை அழித்தொழிக்கும் போராட்டத்தை தொடக்கப் புள்ளியாக அந்த கட்சி ஏற்றுக் கொண்டு செயல்படுத்தியது. காலப்போக்கில் கட்சிக்குள் வளர்ந்த பிளவுகளில், சாருமஜும்தாரின் கொரில்லாப் போராட் டப் பாதையை ஏற்றுக் கொள்ளாத கனுசன்யால் தனியாக வெளியே வந்து தனிக்கட்சியாக செயல் படத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் பல்வேறு நக்சல்பாரி குழுக்களை கனுசன்யால் ஒன்றுதிரட்டி செயல்படுத்த முயன்றார். அதில் 1972ம் ஆண்டு சாருமஜும்தார் மேற்குவங்க சிறையில், அடக்குமுறையின் கீழ் மரணமடைந்த பிற்பாடு, இயக்கத்தில் ஏற்பட்ட தொய்வினால் பல குழுக்கள் வெளியேறினர். அதுபோல தான் 1977க்குப் பின் வெளியேறிய கனு
சன்யால் குழுவினரும் கருதப்பட்டனர். மார்க்சிஸ்ட் கட் ணசியின் இடது கூட்டணியுடன் 90களில், சன்யால் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டார். அதி லும் மனம் வெதும்பி வெளியேறினார். 2003ல் தானே தலைமை தாங்கிய ஒரு எம்.எல். கட்சியை அறிவித்துக் கொண்டார்.
இப்போது கனு
சன்யாலின் மறைவுக்கு சி.பி.ஐ.யும், சி.பி.எம்.மும் அஞ்சலி செலுத்தியு ணள்ளன. அவரை ஒரு மகத்தான கம்யூனிஸ்ட் தலை வராக அறிவித் துள்ளனர். அவரது மரணம் உடல்நிலை மோசமடைந் ததால், தானே உருவாக்கிக் கொண்ட ஒன்று என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் கூர்காலாந்தின் தனி மாநில கோரிக்கைப் போ ராட்டத்தில், கனுசன்யால் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இன்றைக்கு இந்தியாவில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி வரும் மாவோயிஸ்ட் இயக்கம் பல வலுவான முன்னேற்றத்தை காட்டியிருப்பது கூட, கனுசன்யாலால் செரிக்க முடியாத ஒரு செய்தியாக இருக்கக்கூடும். தனது மரணம் வரை அந்த மனிதன் மக்களுக்காகச் சிந்தித்தார். தான் உயிர் வாழும் வரை சன்னியால் போராட்டப் பாதைகளைத் தேடினார். அவரது வாழ்க்கை வருங்கால இளைஞர்களுக்கு, விடுதலைக்கான பாதையைத் தேடவும், அதற்காக தன்னுயிரை அற்பணிக்கவும் தயாராயிருப்பதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை அறிவுறுத்துகிறது.

Wednesday, March 24, 2010

பகத்சிங் நினைவுகளும், சமரசமற்ற போராட்டங்களின் தேவைகளும்

நேற்று மார்ச் 23ம் நாள். மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள். பகத் சிங்குடன், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள். அவர்கள் மீது ஆங்கிலேய அர
சாங்கம் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டியது. ஆங்கிலேயர்களுடைய அடிமை அவையாக இருந்த இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது வெடிகுண்டு வீசினார் என்பது பகத்சிங் மீதான ஒரு குற்றச்சாட்டு. ஆயுதந்தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டார் என்பதும், இந்திய விடுதலைக்காக அப்படிப்பட்ட ஒரு பாதையை தேர்ந்தெடுத்தார் என்பதும் அவர் மீது ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்ட கோபம். அதே நேரத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக என்ற ஒரு முழக்கத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு, மகாத்மா காந்தியின் வழிகாட்டல் இருந்து வந்தது. மகாத்மா என்று அழைக்கப்பட்ட, பிறகு தேசத் தந்தை என்று வருணிக்கப்பட்ட கரம்சந்த் காந்தி, அகிம்சை வழியில் அத்தகைய சுதந் திரப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அறிவித்துச் செயல்பட்டவர். அந்த செயல்பாடுகளில் இருந்து பார்க்கும் போது, ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டத்தை நடத்துவதற்கான செயல்பாடுகளில் இருந்த பகத்சிங்கும் தோழர்களும் பயங்கரவாதிகள் என்று தான் சித்தரிக்கப்படுவார்கள் என்பது புரிய முடிகிறது. அந்த நேரத்தில் காங் கிரஸ் கட்சியின் பெரியதொரு மாநாடு நடப்பதாகயிருந்தது. காந்திஇர்வின் ஒப்பந்தம் போடப்படுவதற்கான சூழல் கணிந்திருந்தது.
நடக்கயிருக்கும் மாநாட்டில் ஒட்டு மொத்த காங்கிரஸ் பிரதிநிதிகள், பகத்சிங் மற்றும் தோழர்களது விடுதலைக்காக தீர்மானத்தை நிறைவேற்றி விட்டால், அதன்பிறகு தனது அகிம்சை வழி தோற் கடிக்கப்பட்டு விடுமே என்று காந்தியார் கருதியிருக்கலாம். அதனால் பகத்சிங் மற்றும் தோழர்களது விடுதலைக்காக, இர்வின் பிரபுவிடம் காந்தி பேச வேண் டும் என்ற மற்றத் தலைவர்களது கோரிக்கையை மகாத்மாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வன்முறைப் பாதை என்ற தவறான பாதையில் செல் பவர்களை ஆதரிக்க முடியாது என்ற கருத்தை காந்தியார் கொண்டிருந்தார்.
அப்போது காந்தியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த ஜவ ஹர்லால் நேரு, பகத்சிங் மற்றும் தோழர்களது விடுதலைக்காக இர்வின் பிரபுவிடம் பேசக் கோரி வேண்டினார். அமைதியாக ராட்டிணத்தை காந்தியார் சுற்றிக் கொண்டிருந்தாராம். உடனடியாக கோபம் மேலோங்க ஜவஹர்லால் நேரு, நமது நாட்டின் மலர்கள் எரிந்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புத்தரைப் போல ராட்டிணத்தை மவுனமாக சுற்றிக் கொண்டிருக்கலாமா என்று கேட்டாராம். இது ஆங்கில ஏடுகளில் அன்றைய காலத்தில் அம்பலப்படுத்தப்பட்ட செய்தி. அதனால் பகத்சிங்கின் நினைவு நாள், 2 செய்திகளை நமக்கு சொல்கிறது. ஒன்று ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்திய நாட்டை காலனியாக அடிமைப்படுத்தி வைத்திருக்கும் காலத்தில், புரட்சியா ளர்களை கொடுமையான முறையில் தூக்கிலிட்டார்கள் என்பது ஆங்கிலே யனின் கொடூரத்தைப் பற்றி பதிவு செய்யப்பட்ட செய்தி. இரண்டாவதாக வாய்ப்பிருந்தும் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக இல்லாமல், ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவான கருத்தை சுதந்திரப் போராட் டத்தின் குரலெழுப்பியவர்களும் செயல்படுத்தினார்கள் என்ற செய்தி. இப்படியாக எதிரிகளையும், துரோகி களையும் அடையாளம் காட்டிய ஒரு நிகழ்வாக பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்பட்ட நிகழ்ச்சி நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
இப்படித் தான் ஒவ்வொரு விடுதலைப் போராட்டத்திலும், எதிரியின் குணமும், துரோகம் இழைத்தவரது பண்பும் அம்பலப்பட்டு நிற்கிறது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த விடுதலைப் போரில், ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. அவ்வாறு துப்பாக்கித் தூக்கிய வாஞ்சிநாதன், தன்னைத் தானே சுட்டுக் கொண்டும் இறந்தார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வாஞ்சிநாதனுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று சமீபத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்திய
சுதந்திரப் போரில் எண்ணற்ற வீரர்கள் இதுபோல, தங்கள் உயிரை துச்சம் என மதித்து தியாகம் செய்துள்ளனர்.
வெள்ளையர்கள் நடத்திய கிழக் கிந்திய கம்பெனியின் கப்பல் போக்கு வரத்தை எதிர்த்து, அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பலத்த அடி கொடுப்பதற்காக, தூத்துக்குடியில் சொந் தமாக கப்பல் ஒன்றை வாங்கி அதை கடலிலே அனுப்பி போட்டிப் போட்டு போராடியவர் வ.உ.சிதம்பரனார். அவரை அதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று அழைத்தார்கள். அதற்காகவே வெள்ளை ஏகாதிபத்தியம், வ.உ.சிக்கு சிறை வாழ்க்கை என்பதை உருவாக்கியது. சிறையில் அடைக்கப்பட்ட கரம்சந்த் காந்தியோ, ஜவஹர்லால் நேருவோ இன்னபிற தலைவர்களோ, புத்தகம் படித்தார்கள்; புதிய புத்தகங்களை எழுதினார்கள். ஆனால் வ.உ.சி மட்டும் ஆங்கிலேயர்களால் சிறைக்குள்ளேயே, செக்கிழுக்க வைக்கப்பட்டார். அவர் தமிழர் என்பதால், சமரசத்திற்கு சரியவில்லை என்பதால், சமரிலே சரியாக நின்றார் என்பதால் அப்படிப்பட்ட தண்டனையை ஆங்கிலேயர்கள் அளித்தார்கள். ஆதிக்கவாதி எப்போதுமே போர்க் களத்தில் நிற்பவர்களில் யார், யார் எப்படிப்பட்ட மனோபலம் உள்ள வர்கள் என்று அறிந்து செயல்படும் ஆற்றல் உள்ளவன். அதனால் தான் வடஇந்திய தலைவர்களுக்கு ஒருநீதி; தமிழின தலைவர்களுக்கு மறுநீதி என அமுலாக்கப்பட்டுள்ளது போலும்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம், வீர பாண்டிய கட்டபொம்மனை எதிர்த்து போராடியது என்பது ஒரு வரலாற்றுப் பதிவு. அந்தப் போராட்டத்தில் கடைசி யாக, வீரபாண்டிய கட்டப்பொம்மனும் ஆங்கிலேயர்களால் கயத்தாறில் தூக்கி லிடப்படுகிறார் என்பது வரலாறு. புரட்சி கரப் பாதையை ஏந்திச் சென்ற மாவீரன் பகத்சிங் எப்படி தூக்கிலிடப்பட்டாரோ, அதேபோல ஆயுதந்தாங்கிய தன்னுடைய படைவரிசை மூலம், வெள்ளையர்களின் படையை எதிர்த்து போர்க்களம் கண்ட கட்டபொம்மனும் தூக்கிலிடப்பட்டார். முன்னவர் வடஇந்தியரானாலும் புரட்சிகரப் பாதையை கையாண்டதால், அவருக்கு பயங்கரவாதி என்ற முத்திரை விழுந்தது; அதற்காகவே அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனாலும் இன்றைய இந்திய அரசு பகத்சிங்கும் மற்றும் தோழர்களும் நினைவை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் படைவரிசையில் தளபதியாகவும், ஒற்றர்படை தலைவராகவும் பணி யாற்றியவர் மாவீரன் சுந்தரலிங்கம். போர்க்களத்தில் நெருக்கடியான கட்டத்தில், ஆங்கிலேயனின் ஆயுதத் தளவாட குவிப்பை, அழிப்பதற்காக தன் உடலில் மட்டுமின்றி, தன் காதலியின் உடலிலும் சேர்த்து வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு, எதிரியின் தளவாட சேமிப்பிற்குள் குதித்து, அனைத்தையும் வெடிவைத்து தகர்த்து தன்னுயிரை, தன் காதலியுடன் இணைந்தே கொடுத்தவர் என்ற வரலாற்றை அவர் பதிவு செய்து சென்றிருக்கிறார். உலக புரட்சிகர வரலாற்றில், அன்னிய ஆக்கிரமிப்பை எதிர்த்து, தன்னைத் தானே மனித வெடி குண்டாக மாற்றிக் கொண்டு தியாகம் செய்து எதிரிக்கு சேதங்களை விளை வித்த முதல் வீரன் அந்த சுந்தரலிங்கம். அவரையும் தமிழ்நாட்டு மண் தான் வரலாற்றில் சந்தித்திருக்கிறது.
இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், தமிழ் இளைஞர்கள் மட்டுமின்றி, தமிழ் யுவதிகளும் தங் களை மனிதவெடிகுண்டுகளாக மாற்றிக் கொண்டு, கரும்புலிகளாக புறப் பட்டிருப்பதால் தான், ஈழப்போரும், வன்னிப்போரும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனாலேயே தமிழீழம் காண ஒரு அரசியல் போராட்டம் உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இதுதான் பகத்சிங் நினைவுநாள் நமக்குக் காட்டும் சமரசமற்ற விடுதலைப் பாதை.

Tuesday, March 23, 2010

கொய்ராலா மறைவால் யாருக்கு இழப்பு?

நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா மரணம் அடைந்தார். இரண்டு நாட்களாக அந்த இழப்பு எப்படிப்பட்ட சமாதான பேச்சு வார்த்தைகளை பலவீனப்படுத்தும் என்பது பற்றி ஊடகங்களும், அரசியல் அவதானிகளும் அலசிவருகிறார்கள். நேபாள காங்கிரஸ் தலைவர் ஜி.பி.கொய் ராலா தனது மகளது இல்லத்தில் மார்ச் 20ம் நாள் சனிக்கிழமை நண்பகல் தாண்டி மரணமடைந்தார். அவர் தனது கடைசி மூச்சுவரை நேபாள அரசியலில் தொடர்பு வைத்திருந்தார். அவரை கவனித்து வந்த மருத்துவர் அர்ஜுன் கார்க்கியிடம், நாட்டு நலனுக்காக ஒற்றுமை யுடன் செயல்படுங்கள் என்றும், எல்லா பிரிவினரையும் இணைத்துக் கொண்டு முன்செல்லுங்கள் என்றும் கூறினாராம். அந்த செய்தி நேபாள நாடு முழுவதும் பரவி வருகிறது. நேபாள அரசியலை ஒரு காலத்தில் இவரது அண்ணனான பீ.பி.கொய்ராலா
செல்வாக்கு செலுத்தினார். அவரது நிழலில் ஜி.பி.கொய்ராலா வளர்ந்தார். அண்ணன் மற்றவர்களை வளர விடாமல், அரசியலை ஆக்கிரமித்தார் என்று பெயர் பெற்றார். தம்பியோ 1990ல் இயக்கத்திற்குப் பிறகு தானாகவே மேலே உயர்ந்த ஒரு அரசியல்வாதி. நடைமுறையில் அனைவரையும் அணைத்துச் செல்ல முற்பட்டவர். தொடர்ந்து வந்த நோபாள ஆட்சிகளில், மாவோயிஸ்ட் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2004ம் ஆண்டு ஜி.பி.கொய்ராலா, மாவோயிஸ்ட் புரட்சியை அடக்க முடியாமல் ராஜினாமா செய்தார். ஜி.பி.கொய்ராலாவின் கனவு என்பது நேபாள நாட்டில் சமாதானத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்டுவது என்பதாக அறியப்பட்டது. நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கு மத்தியில் நேபாள காங்கிரஸ் ஒரு ஒன்றுப்பட்ட அடை யாளத்தை காட்டுமாஎன்ற கேள்வி தான் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. கொய்ராலாவின் மரணம் நேபாள காங் கிரசுக்கு, பிரபலமான தலைமை ஒன்று இல்லாமல் செய்து விட்டது.
நேபாள காங்கிரசுக்கு சரியான தலைமை இல்லாமல் இருப்பது, நேபாளத்தை விட இந்திய அரசை அதிகமான வருத்தத்தில் தள்ளியிருக்கிறது. நேபாள காங்கிர சுக்கு இளம் தலைவர்களை வளர்த்து விடுவ தற்கு ஜி.பி.கொய்ராலாவும் தடையாக இருந்திருக்கிறார் என்ற செய்தி இப்போது தெரிகிறது. அதிகமான அளவில் இளைய தலைமுறை தலைவர்கள் அந்த கட்சிக்கு இருந்தா லும் கூட, அவர்களால் கட்சியின் அரசியலை மற்றும் நேபாள நாட்டை வழிகாட்டிச் செல்ல முடியுமா என்ற கேள் வியை அனைவரும் கேட்கிறார்கள்.
தலைவர்களில், அனைவரையும் அணைத்து போவதற்கு முதிர்ச்சியுள்ள ஒருவர் என்பதாகவும் கூட நம்பப்பட் டது. அவரது மறைவினால் மாவோயிஸ்ட் களுக்கும், நேபாள காங்கிரசுக்கும் இடை யேயுள்ள சமாதானப் பேச்சுவார்த்தை பலவீனப்படும் என்பதாக அரசியல் ஆரூடம் கூறுகிறார்கள். கொய்ராலாவின் மறைவினால் நேபாள காங்கிரசுக்கு இருக்கின்ற அறுதியிடலை விட, ஒன்று பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஜே.என்.கனல் உடன், மாவோயிஸ்ட்கள் இணைந்து ஒரு புதிய அறுதியிடலை ஏற்படுத்தி விடுவார் கள் என்று கூறுவோரும் உண்டு. அதே சமயம் மாவோயிஸ்ட்களுடன் சமரசமாக செல்வதற்கு கொய்ராலாவிற்கு இருந்த முதிர்ச்சி வேறு நேபாள காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. அதனால் சமாதான வழியில் அதிகாரத்தில் பங்கு கொள் வதற்கு மாவோயிஸ்ட்களுக்கு வாய்ப் புக்கள் குறையும் என்றும் சிலர் மதிப்பிடு கிறார்கள்.
அதேசமயம் இந்திய அரசு தனது செல்வாக்கை நேபாள அரசியலில் என்றைக்குமே குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. நேபாளத்தில் மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, நேபாளம் ஒரு இந்து நாடு என்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த மன்னர் ஆட்சியுடன் அப்போது இந்திய அரசு நெருக்கமான தொடர்பை வைத்திருந்தது. மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயக பாதையை நேபாளத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது இந்திய அரசு மன்னர் ஆட்சிக்கு ஆதரவாகவே இருந்தது. முடியாட்சியை மாற்றி, குடியாட்சியைக் கொண்டுவர எடுக்கப்படும் முயற்சியில், புதிய அரசியல் நிர்ணய சபை ஒன்றை அதற்காக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் பெருவாரியான ஆதரவைப் பெற்றது. அத்தகைய கோரிக்கையை முன்வைத்து சமரசமற்றுப் போராடக் கூடிய ஒரே அமைப்பாக நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மட்டுமே இருந்தது. அதனால் பொது மக்களுடைய ஆதரவும் முடியாட்சிக்கு எதிராக, மாவோயிஸ்ட்களுக்கே போய்ச் சேர்ந் தது. மாவோயிஸ்ட்கள் தங்களுடைய பாதையாக ஆயுதப் போராட்டத்தை கையிலெடுத்திருந்தார்கள். அதற்காக கொரிலாப் படைகளைக் கட்டி போரா டினார்கள். கிராமப்புறங்களை விடுதலை செய்து தங்கள் தலைமையில் மக்கள் அதிகாரங்களை அங்கே நிறுவினார்கள். தங்களது கொரிலாப் படைக் குழுக்களை எல்லாம் இணைத்து, மக்கள் விடுதலைப் படை ஒன்றை உருவாக்கினார்கள். அதன் பிறகு ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், தேர்தல் மூலம் மாவோயிஸ்ட்கள் பெரு வாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தனர். இது இந்திய அரசை கடுமையாக யோசிக்க வைத்தது. ஒருபுறத்தில் மாவோயிஸ்ட்களுடன் பேசவும் செய்தது. இன்னொரு புறம் சி.பி.எம். தலைவர் சீத்தாராம் யெச்சுரியை அனுப்பி, மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், இந்திய அரசு துணையாக இருந்தது. மீண்டும் முழு நேபாளமும் மாவோயிஸ்ட்களின் செல்வாக்கிற்குள் சென்றுவிடக் கூடாது என்பதில், இந்திய அரசு கவனமாக இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளைக் காணும்போது, இந்தப் போட்டி விளங்கிக் கொள்ள முடியும். 2006ம் ஆண்டு ஜுன் 16ம் நாள் ஒரு ஏழு கட்சி கூட்டணியை இணைத்துக் கொண்டு, நேபாளம் மாவோயிஸ்ட் கட்சி 12 கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டது. அதையொட்டி மூன்று மாதங்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு ஜனவரி 14ல் 330 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 83 மாவோயிஸ்ட்கள் வெற்றி பெற்று உள்ளே நுழைந்து, ஒரு இடைக்கால சட் டத்தை அமைச்சரவை மூலம் ஒப்புதல் பெற்று, ஆட்சியில் அமர்ந்தார்கள். 2007ம் ஆண்டு மார்ச் 21ல் மாதேசி மக்க ளின் உரிமை மன்றத்திற்கும், மாதேசி ராஷ்டிரிய விடுதலை முன்னணிக்கும் மோதல் நடந்தது. இதில் முதல் அமைப்பு இந்திய அரசின் ஆதரவு என்றும், இரண்டாவது மாவோயிஸ்ட் ஆதரவு என்றும் கூறப்பட்டது. மாதேசி மக்கள் இந்தியா விலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் என்பது அதன் அடிப்படைப் பிரச் சனை. 2007ம் ஆண்டு ஏப்ரல் 1ல் புதிய அரசாங்கம் பொறுப்பெடுத்தது. அதில் 5 மாவோயிஸ்ட் அமைச்சர் கள் மற்றும் ஒரு துணை அமைச்சர் இருந் தார்கள். 2007ம் செப்டம்பர் 18ல் தங்களது கோரிக்கையான விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்ற தேர்தல் முறை யையும், அரசியல் சாசன தேர்தலுக்கு முன்பே, குடியரசாக அறிவிக்க வேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளப்படாததால், மாவோயிஸ்ட் அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள். 2007ம் ஆண்டு டிசம்பர் 31ல் விகிதாச்சார பிரதிநித்துவம் முறை ஒரு பகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டதும், முடியாட்சி ஒழிக்கப்பட்டதும், மீண்டும் ஐந்து மாவோயிஸ்ட்களை அமைச் சர் பொறுப்பெடுக்க ஒத்துழைத்தது. 2008ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் அரசியல்
சாசன தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி 30% வாக்குகள் பெற்று 575 தொகுதி களில், 220ல் வெற்றி பெற்றது. மொத்த உறுப்பினர்களான 601ல் மாவோ யிஸ்ட்களுக்கு கூடுதலாக கிடைத்த 9 நியமனங்களைச் சேர்த்து 229 மாவோ யிஸ்ட்கள் இடம் பெற்றனர்.
இதற்கிடையே சுதந்திரமான தெராய் மாநிலத்தை கோருகின்ற இயக்கமும் தொடங்கியது. 2009ம் ஆண்டு ஒன்றுபட்ட மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து, ஒரு பிரிவு தெராய் பகுதிக்கான கட்சியாக வெளிவந்தது. இன்றுவரை இந்திய அரசுக்கும், நேபாள அரசியலுக்கும் உடன்படாத பகுதிகள் தீர்க்கப்படாவிட்டாலும், நேபாள அரசியலுக்குள் ஒரு ஒன்றுபட்ட முயற்சி என்ற கொய்ராலாவின் கனவு நிறைவு பெறாமலேயே நிற்கிறது. இது வெளிநாட்டுச் சுட்டிகளுக்கு அதிகமாக பலன் தரக்கூடியதா என்ற கேள்வியும் நேபாள மக்களிடம் எழுந்துள்ளது. நேபாள மாவோஸ்ட்கள் எடுத்து வைக்கின்ற புதிய சமாதான செயல்தந்திரங்கள் மட்டுமே, அவர்களது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.

Monday, March 22, 2010

விரும்பவும், வெறுக்கவும் அரசுகள் கட்டளையிடுவதா?

இரண்டு நாட்கள் முன்பு சென்னையில் அணு ஆயுத எதிர்ப்பு இயக்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு கூட்டம், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தது. அதில் பாகிஸ்தானில் நெருக்கடியான காலத்தில் 4 ஆண்டுகள் பிரபல ஆங்கில நாளேட்டிற்காக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் நிரூபமா சுப்பிரமணியன் கலந்து கொண்டு பல்வேறு செய்திகளை பரிமாறிக்கொண்டார். பாகிஸ் தான் அரசு பற்றியும், மக்கள் பற்றியும், அங்கே நிலவும் சூழல் பற்றியும் நமக்கு ஒரு விதமான பார்வையை இந்திய அர
சும், இந்திய ஊடகங்களும் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளன. நேரடியாக சென்னை யைச் சேர்ந்த ஒரு பெண் ஊடகவியலாளர் தனது அனுபவங்களைக் கூறும்போது, இதமாக இருந்தது. இந்தியாபாகிஸ்தான் இடையே உள்ள மக்களுக்கு மத்தியில் அமைதிக்கான ஒரு முயற்சி முடுக்கி விடப்படவேண்டும் என்ற அந்தக் கூட்டத் தின் செய்தி, பல ஆண்டுகளாக இதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை கணக்குப் பார்க்க வைத்தது.
பிரபல ஊடகவியலாளர் குல்தீப் நய்யார் இதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டது, பல்வேறு கேள்விகளை ஏற்கனவே எழுப்பியிருந்தது. 55 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் சீயால்காட் என்ற தனது சொந்த ஊரைவிட்டு தான் வெளியேறி வந்ததாக குல்தீப் நய்யார் கூறுகிறார். ஏற்கனவே இந்தியாவில் இப்போது எதிர்கட்சியின் முக்கியமான தலைவராக இருப்பவரும், ஒரு முறை உள்துறை அமைச்சராக இருந்தவருமான எல்.கே.அத்வானி, இன்றைய பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்தியாவிற்கு கலவர நேரத்தில் வந்தவர் தான். பலபத்தாண்டுகளாக இரண்டு நாடு களுக்குமான நல்லுறவுக்காக பாடுபாட்டு வரும் ஒரு ஊடகவியலாளர் குல்தீப் நய்யார். இந்த துணைக் கண்டத்தில் இருநாடுகளிலும் உள்ள மக்களிலிருந்து, மக்களுக்கு என்ற தொடர்பு ஒரு பொது உணர்வை ஏற்படுத்தி வருகிறது. அரசுகள் சண்டையிட்டுக் கொண்டாலும், மக்களுக் கிடையே இருக்கும் பரிமாற்றம் அரசுகளை நிர்ப்பந்தித்து அமைதியை நோக்கிய காய்களை நகர்த்தி வருகிறது.
இந்த நேரத்தில் துணைக் கண்டமெங் கும் பிரபலமான திரைத்துறை நடிகராக இருக்கும் அமிதாப் பச்சன் தன்னுடைய வலைப் பதிவில் எழுதி உள்ள செய்தி, பரபரப்பாக பேசப்படுகிறது. அவர்கள் ஊடகமும், நமது ஊடகமும், ஒரு ஊடக முன்முயற்சி மூலம் கைகோர்ப்பதற்கான முயற்சிகளை, எல்லை கடந்து செய்ய வேண்டும் என்றும், தங்களுக்குள் புரிதலைக் கொண்டுவருவதற் கான பாலத்தைக் கட்டுவதற்கு, தேவையான பார்வைகளையும், கருத்துகளையும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும் எழுதியுள்ளார். மேலும் கூறும்போது, இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு நாடுகள்; ஆனால் அவற்றி னுடைய பண்பாடும், உணவுகளும், வாழும் பழக்கமும், மொழிகளும் ஒத்து இருக்கும் போது, இரு புறத்திலும் இருப் பவர்களது நம்பிக்கையை உருவாக்கு வதற்கான முயற்சி யை ஊடகங்கள் செய்வது சிறப்பானது என அமிதாப்பச் சன் கூறியிருக்கிறார்.
குல்தீப் நய்யார் 2002ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள், பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான்(விடிகாலை) இதழில், மக்கள் மத்தியில் உள்ள தொடர்பு நிறுத்தப்பட்டது பற்றி எழுதுகிறார். எதற்காக இந்தியாவில் நாளேடு களும், புத்தகங்களும் தடை செய்யப் பட்டன? பயணிகள் எல்லையைத் தாண்டி ஏன் அனுமதிக்கப்படவில்லை? ரயில்கள், பேருந்துகள், விமானங்கள் ஏன் நிறுத்தப் பட்டன? அதையும் தாண்டி இஸ்லாமாபாத் தில் இந்திய காட்சி ஊடகங்கள் காட்டப் படாமல் ஏன் தடுக்கப்பட்டன? இது போன்ற கேள்விகளை குல்தீப் நய்யார் எழுப்புகிறார்.
32 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ் பாய் வெளிநாட்டு அமைச்சராக இருந்த போது, இந்திய, பாகிஸ்தான் எல்லையை மென்மை யாக்குவது என்று குரல் கொடுத்தார். அப்போது தலைமை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் அதை எதிர்த்தார். ஆனால் வாஜ்பாய் பிரதமராக வந்த பிறகு, ஒரு கட்டத்தில் பேருந்து அனுப்பி, சமாதானம் பேசினார். இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்த பிறகு அனைத்தையும் ரத்து செய்தார். தான் வெளிவுறவுத் துறை அமைச்சராக இருந்த போதுதான் வற் புறுத்தி யதை, பிரதமராக வந்த பிறகு தானே மறுத்தார். ஆனாலும் ஆகஸ்டு மாதம் 1415 தேதிகளில், இரு நாடுகளும் பிறந்த நேரத்தில் 2002ம் ஆண்டில் பாகிஸ்தான் எல்லையில் 45,000 பேரும், இந்திய எல்லையில் 20,000 பேரும் கூடி சமாதான முழக்கமிட்டார்கள். இருபுறமும் இருக்கும் மக்கள் மத்தியில் அன்பும், பாசமும் பொங்கி வழிவது நிதர்சனமாக நிரூபிக்கப்பட்டது. பயங்கரவாதி களின் தாக்குதல்களைத் தடுக்க, ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டு மக்களை சந்திப்பதை நிறுத்துவதனால் சாதிக்க முடியுமா?
வெறுப்பதும், பகைமை ஏற்படுத் துவதும் பயங்கரவாதிகளின் குறிக்கோள் தானே? அதையே அரசுகள் செய்தால் அதற்கு என்ன பெயர்? எல்லைகளை மூடுவதால், அடிப்படைவாதிகளின் நோக்கம்தானே நிறைவேறும்? இரு நாடுகளுக்குள்ளும் பகை வளருவது மட்டும்தானே அடிப்படை வாதிகளின் விருப்பம்?
2005ம் ஆண்டு மார்ச் 23ம் நாள் புதுடெல்லியிலிருந்து ஒரு சமாதான பேரணி புறப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள முல்டனுக்கு மே 11ம் நாள் சென்றடைய திட்டமிட்டார்கள். சமா தானம் மற்றும் ஜனநாயகத்திற்கான பாகிஸ்தான் இந்தியா மன்றம் இதை ஏற்பாடு செய்தார்கள். 6 வாரங்களில் இந்த சமாதான பேரணி இலக்கை எட்டியது. இந்தியா, பாகிஸ்தான் நட்புறவு கிளப் என்ற பெயரில் ஒரு குழு 150 பேருடன் இது போன்ற இன்னொரு முயற்சியில் ஈடுபட்டது. இந்திய, பாகிஸ்தான் உறவு களில் மாற்றம் கொண்டு வர இவர் களும் செயல்படுகிறார்கள்.
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் 2006ம் ஆண்டு ஜனவரி 22ம் நாள் மட்டைப் பந்து ஆட்டத்தின் மூலம் 200 இந்தியர்களையும், பாகிஸ்தானி யர்களையும் ஒன்று சேர்த்தார்கள். தோஸ்தி என்ற அமைப்பு அதைச் செய்தது. இப்போது 4 ஆண்டுகள் பாகிஸ் தானிலேயே இருந்து, முக்கிய அரசியல் நெருக்கடிகளை நேரில் கண்டு, ஊடகத்தில் எழுதிய நிரூபமா, இதே செய்தியை பேசுகிறார். சமாதான முயற்சி மேட்டுக்குடி களுக்கு இருந்தாலோ, ஊடக அளவில் இருந்தாலோ போதாது என்கிறார். அது ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும் என்பது அவரது வாதம்.
பாகிஸ்தானில் பிரம்மாண்டமாக நடந்த வழக்கறிஞர் போராட்டத்தில், செய்தி எடுக்கச் சென்ற போது, கிடைத்த அனுபவங்களைக் கூறுகிறார். இந்தி யாவின் சட்டம், இந்திய நீதிமன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை பாகிஸ் தான் வழக்கறிஞர்கள், வாதங்களில் மேற்கோள் காட்டுவதாக கூறுகிறார். தங்கள் போராட்டத்திற்கு இந்திய ஆதரவு வேண்டு மென வழக்கறிஞர்கள் கோரியதையும் குறிப்பிட்டார். இந்திய பொருட்களான டைட்டன் வாட்ச், பிரிட்டானியா பிஸ்கட் போன்றவை, இந்திய தயாரிப்பு என்ற முத்திரை இல்லாமல் அங்கே சந்தையில் அதிகம் விற்கப்படுவதை சுட்டிக்காட்டினார். இந்திய அரசு காஷ்மீர் தவிர்த்த, சீயாச்சல் போன்ற சிறு விஷயங்களிலும், விட்டுக் கொடுக்காமல் இருப்பது பாக்.மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்.
இஸ்லாமாபாத்தில் எங்கு திரும்பினா லும் பயங்கரவாதிகள் இருப்பது போல ஒரு கருத்து இந்தியாவில் உள்ள மக்கள் இடையே பரப்பப்பட்டுள்ளது என்றார். பலூசிஸ்தானில் இந்திய அரசு ஆயுதம் கொடுத்து கலகத்தை ஊக்கு விப்பதாக பாகிஸ்தானில் பெரும் பாலும் நம்புகிறார்கள் என்றார். அது உண்மை யில்லை என்றால், அது பற்றி பகிரங்கமாகப் பேச இந்திய அரசு தயங்குவ தேன் என்று கேட்டார். இந்திய அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் மத்தியில் ஒரு விசித்திரமான ஒப்பந்தம் இருக்கிறது என்றும், அதன் மூலம் ஊடகவியலாளர்கள் அங்கும், இங்கும் இரண்டு நகரங்களுக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற உண்மை யைப் போட்டு உடைத்தார்.
அரசுகள் இரண்டும் ஒருவரையொருவர் விருப்புக் கொள்ளச் சொல்லி மக்களுக்கு கூறுகிறார்கள். மறுநாளே ஒரு வரையொருவர் வெறுக்கச் சொல்லி அதே மக்களுக்கு எடுத்துச் சொல்லுகிறார்கள். இது எத்தகைய வகையைச் சேர்ந்தது என்று நிரூபமா கேள்வி எழுப்பினார். கீறல் விழுந்த இசைத்தட்டு போல, பாகிஸ் தானை வெறுக்கச் சொல்லி பரப்புரை செய்வது, இந்திய மக்களை நச்சுச் சிந்தனைக்கு மட்டுமே இட்டுச் செல்லும் என்பதே இதிலிருந்து கிடைக்கும் நீதி. இருநாட்டு மக்கள் இடையேயும், நேரடி உறவுகளை பலப்படுத்தலாம். அதுவே அரசுகளை நிர்ப்பந்திக்கலாம்.