Thursday, April 8, 2010

அரசால் அலட்சியப்படுத்தப்பட்டது யார்?

இந்திய அரசின் துணை ராணுவமான மத்திய சிறப்பு காவல்படை வீரர்கள் 75 பேருக்கு மேல், மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் மரணமடைந்தார்கள் என்ற செய்தி, இந்திய துணைக் கண்டத்தையே நிலை குலைய வைத்தது. உடனடியாக கருத்து சொன்ன மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், எங்கேயோ தவறு நடந்திருக்கிறது என்று முதலில் கூறினார். பிறகு மாவோயிஸ்ட்கள் பற்றி நாம் இதுவரை அலட்சியமாக இருந்தது தவறு என்று கூறியிருக்கிறார். மத்திய அரசு அலட்சியமாகயிருந்திருக்கிறது என்பது அமைச்சரின் வாக்குமூலம். ஆனால் எந்த விஷயத்தில், யாரைப் பற்றி அரசு அலட்சியமாக இருந்தது என்பது ஆராயப்பட வேண்டிய கேள்வி. மாவோயிஸ்ட்கள் பற்றி அலட்சியமாக இருந்து விட்டோம் என்பது உள்துறை அமைச்சரின் கூற்று. ஆனால் கடந்த ஓராண்டாக, புதிய மத்திய அரசாங்கத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்த பிறகு, புதிதாக உள்துறை அமைச்சகப் பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து, மாவோயிஸ்ட்கள் பற்றி கண்டித்தும், எச்சரித்தும், இறங்கிப் பேசியும், பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், வன்முறையைக் கைவிடச்சொல்லியும், ப.சிதம்பரம் அறிக்கைகள் கொடுத்து வருகிறார். இவ்வாறு தனது அமைச்சகப் பணிகளில் முக்கிய பகுதியை, ஓராண்டு முழுக்க நக்சலைட்டுகளைப் பற்றிய செய்திகளை சேகரிப்பதும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விவாதங்களை செய்து வந்ததும், அதையொட்டி அறிக்கைகளை வெளியிட்டதும் அலட்சியப்படுத்திய முறைகள் என்பது நமக்கு இப்போது தான் புரிகிறது. அதேசமயம் பலவீனமான திட்டமிடுதலை, அரசுதரப்பு வைத்திருந்ததினால் தான், மாவோயிஸ்ட்களின் இத்தனை பெரிய தாக்குதல் நடத்தப்பட முடிந்தது என்று சில ஊடகங்கள் விளக்கமளித்துள்ளன.
மேற்கண்ட தாக்குதல் நடத்தப்பட்ட இடம் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள, தண்டேவாடா என்ற பகுதி. இந்த பகுதி காடுகளையும், மலைகளையும் கொண்ட பகுதி. மத்திய சிறப்பு காவல்படையினர் தங்களது புதிய தலைமையாக வந்திறங்கிய டி.ஐ.ஜி.யின் கட்டளைக்கு பணிந்து, வட்டாரத்திலிருக்கும் காவல்துறைக்கே அறிவிக்காமல் அங்கே இறங்கி முகாமிட்டு, தேடுதல் பணியை தொடங்கியிருக்கிறார்கள் என்பதாக செய்திகள் வருகின்றன. அதேசமயம் துணை ராணுவப் படையினரின் ஒவ்வொரு நடவடிக்கையும், மாவோயிஸ்ட்கள் முகர்ந்து வந்திருக்கிறார்கள் என்றும் இப்போது கூறுகிறார்கள். ஒரு மலைமுகட்டில் இருந்து தங்களுடைய தாக்குதலை மாவோயிஸ்ட்கள் தொடுத்தார்கள் என்பதாகவும் விளக்குகிறார்கள். அந்த மலைப்பகுதிக்குள் மாட்டிக் கொண்ட சி.ஆர்.பி.எப்., தானியங்கி துப்பாக்கிகள் மூலம் தொடர்ந்து சுட்டுக்கொண்டிருந்த மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு முன்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை என்பது விளங்குகிறது. தப்பிச் செல்வதற்கான பகுதிகளைக் கூட கண்ணிவெடிகள் மூலமாக, புரட்சியாளர்கள் தகர்த்து விட்டார்கள் என்பதாக கூறுகிறார்கள். இது உளவுத்துறையின் தோல்வியா? பயிற்சி முறையின் தோல்வியா? தயாரிப்புத் திட்டத்தின் தோல்வியா? இதுபோன்ற கேள்விகளை ஆட்சியாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். பதட்டத்தின் காரணமாக, நிலைகுலைந்த நிலையில், விமானப்படை மூலம் மாவோயிஸ்ட்கள் மீது தாக்குதல் நடத்துவது பற்றி மீண்டும் பரிசீலிக்கப் போகிறோம் என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் மீது ஒரு போர் திணிக்கப்பட்டுள்ளது என்பதாகவும் விளக்குகிறார். ஜனநாயகத்தை பாதுகாக்க தற்போதைக்கு நமது நரம்புகளை கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாக இருக்க வேண்டும் என்பதாகவும் அவர் விளக்குகிறார்.
இப்படி முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகளை வெளியிடுவதற்கு உள்நாட்டுப் பாதுகாப்பை சிரமேற்றுள்ள ஒரு மத்திய அமைச்சரால் முடிகிறது. அதேசமயம் போலி மருந்துகளையும், காலாவதியான மருந்துகளையும் விநியோகம் செய்கின்ற நபர்கள் பயன்படுத்தும் நிறுவனங்களில், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் இருப்பதாக வருகின்ற செய்திகளும், அவரை நிலைகுலையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர், தங்கள் மீது ஒரு போர் திணிக்கப்பட்டதாக உணர்ந்திருப்பது எதற்கான அடித்தளம் என்று தெரியவில்லை.
குறிப்பிட்ட சத்திஸ்கர் மாநிலம், இந்தியாவின் இதய பகுதியான மலைவாழ் மக்கள் அதாவது பழங்குடி மக்கள் வாழக் கூடிய, கனிம வளங்கள் நிறைந்த பகுதி என்பதும், அதனாலேயே அந்த பகுதியின் மீது போர் தொடுத்து, கனிம வளங்களை பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும் எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியது நினைவுக்கு வருகிறது.
சத்திஸ்கர் மாநிலத்தின் டி.ஜி.பி.யாக இருக்கும் விஷ்வ ரஞ்சன் என்ற அதிகாரியிடம் ஊடகவியலாளர்கள், பல சந்திப்புகளில் அனுபவம் பெற்றிருக்கிறார்கள். சாதாரணமான இந்திய குடிமக்கள் தவறாக வழிகாட்டப்படுகிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அந்த சாதாரண இந்திய குடிமக்களின் வரிப்பணத்தில் தான், இந்த டி.ஜி.பி.யின் தலைமையிலான காவலர்களும், இவர்களால் இயக்கப்படும் கூலிப்படையான சல்வா ஜுடும் என்ற கும்பலும், சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி வருத்தப்பட வேண்டியிருக்கிறது. சல்வா ஜுடும் என்ற கூலிப்படை அப்பாவி கிராமத்தவர்கள் மீது நடத்தி வரும் சூறையாடல், பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலைகள் ஆகியவற்றிற்கு, மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவழிக்க இந்த மேலதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது. சல்வா ஜுடும் மட்டுமல்ல, உயர்காவல் அதிகாரியே கூட, மேற்கண்ட தண்டேவாடா மாவட்டத்தில் பாலியல் வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்கு உள்ளானார் என்ற செய்தியும், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் டி.ஜி.பி.யால் எடுக்கப்படவில்லை என்ற விவரமும் அதிர்ச்சியைத் தருகிறது. இப்படிப்பட்ட மேலதிகாரிகளின் கீழ் பணிபுரியும் காவலர்கள், எந்தவகை மனஉறுதியை பெற்றவர்களாக இருப்பார்கள் என்பது கேட்கப்பட வேண்டும். மக்கள் மீது அநீதிகள் நடத்தப்படும் போதெல்லாம், காவல்துறையின் அத்துமீறல்கள் அரங்கேறும் போதெல்லாம், மேலிருந்து உத்தரவு வந்தது என்று கூறத்தான் அந்த காவலர்களுக்குத் தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு காவல் உயர் அதிகாரியின் தலைமையில் தான் அங்கே சல்வா ஜுடும் என்ற கூலிப்படை அட்டூழியங்கள் அப்பாவி ஆதிவாசிகள் மீது நடத்தப்படுகிறது. அதை எதிர்த்து கேள்வி கேட்ட காந்தியவாதி ஹிமன்சு குமாரின் ஆசிரமம் உடைக்கப்பட்டது. அதை எதிர்த்த அவரது பாதயாத்திரை தடுக்கப்பட்டது. நியாயம் கேட்க வந்த மேதாபட்கர் தலைமையிலான பெண்கள் குழு மீது, அழுகிய முட்டைகள் வீசப்பட்டன. இவையெல்லாமே தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அப்பாவி ஆதிவாசிகளுக்கு ஆதரவாக வந்த ஜனநாயக சக்திகளுக்கு ஏற்பட்ட இடர்கள். இதுபற்றி ப.சிதம்பரத்திற்கு எதுவுமே தெரியவில்லையா? அங்கே சல்வா ஜுடும் நடத்திய வன்கொடுமைகள் பற்றி, நடத்தப்படயிருந்த பொதுவிசாரணையில், கலந்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்த ப.சிதம்பரம், கலந்து கொள்ளாமல் பின்வாங்கியது எதனால்?
சல்வா ஜுடும் என்ற கூலிப்படையுடன் மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இணைந்து செயல்படுவதை பி.யூ.சி.எல். அம்பலப்படுத்தி வருகிறதே? சத்திஸ்கர் மாநிலத்தை ஆளுகின்ற பா.ஜ.க. அரசு அத்தகைய வன்முறைக்கு காவடி தூக்கி வருகிறதே? இவையெல்லாம் அந்த அரசியல் அமைப்புகளை எதிர்த்து அரசியல் செய்வதாக கூறும் காங்கிரஸ் கட்சியின் உள்துறை அமைச்சருக்கு தெரியாதா? தெரியாவிட்டாலும், சத்திஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான காங்கிரஸ்காரர் அஜித் ஜோகி, சல்வா ஜுடும் பற்றி கடுமையாக கண்டித்து வருகிறாரே? அந்த கண்டிப்பு மத்திய காங்கிரஸ் தலைமையில் இருந்து எதிரொலிக்கவில்லையே? அதன் காரணம் என்ன?
பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு இந்திய கனிமவள செல்வத்தை கொள்ளையடிக்க, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசு, எப்படி தட்டிக்கேட்க முடியும்? மாவோயிஸ்ட்கள் பெயரைச் சொல்லி, கனிம வளங்களை பாரம்பரியமாக காத்து வருகின்ற அப்பாவி ஆதிவாசி மக்கள் மீது போர் தொடுப்பதைத் தவிர வேறெதை அவர்கள் செய்யப் போகிறார்கள்? அதனால் சிதம்பரமும், மத்திய அரசும் அலட்சியப்படுத்தியது மாவோயிஸ்ட்களை அல்ல. இந்திய மக்களைத் தான்.

Wednesday, April 7, 2010

சரணடைந்த புலிகளை சுட்டவர்கள், உலகம் முன் மண்டியிடுவார்களா?

இலங்கைத் தீவு தேர்தலை எதிர்கொண் டிருக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் தமிழர்களுக்கு எதிரான இனவாதப் போரை நடத்திய ராஜபக்சே அரசாங்கம் செய்த மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் பட்டியலிடப் படுகின்றன. ஈழத்தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி, தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியிலும், இந்திய வம்சாவழி தமிழர்களான மலையக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் தமிழின உணர்வு மேலொங்கும் நிலையை, வன்னிப் போர் ஏற்படுத்தி விட்டது. அதுமட்டுமின்றி இந்த மூன்று பிரிவு தமிழர்களின் ரத்த உறவுகள், உலகெங்கும் பரவிக்கிடக்கி றார்கள். அவர்கள் நடந்து முடிந்த வன்னிப் போர் பற்றி, கடுமையான கண்டனத்தை ராஜபக்சே அரசாங் கத்தின் மீது கொண்டிருக்கி றார்கள். பயங்கரவாதத்தை எதிர்த்த போரை நடத்துகிறோம் என்று சொல்லி சிங்கள பெரும்பான்மை மக்களை, போருக்கு எதிராக குரல் எழுப்பவிடாமல், ராஜபக்சே அர சாங்கம் தந்திரமாக இதுவரை தடுக்க முடிந்தது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான இனவாதப் போரை நடத்திய ராஜபக்சே அரசாங்கம், நாட்டை இன ரீதியாக நிரந்தரமான பிளவுக்கு இட்டுச் செல்கிறது என்று நாட்டுப்பற்று உள்ள சிங்கள மக்கள் அப்போதே எண்ணினார்கள். அவர்களது எண்ணிக்கை பெரும்பான்மை சிங்களர்களை தாக்கம் செலுத்தவில்லை.
ஆனாலும் வன்னிப்போரில் சிங்கள ராணுவம் கொடூரமான கொலைகளை செய்தது என்ற செய்தி மெல்ல, மெல்ல வெளியானது. நிராயுதபாணியான அப்பாவி மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்ற செய்திகளும் ஒவ்வொன்றாக வெளிவந்தன. இது பயங்கரவாத எதிர்ப்பு போர் என்ற பெயரில் சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சே பெற்றிருந்த செல்வாக்கை சிறிது, சிறிதாக குறைத்தது. படக்காட்சிகளும், காணொளி களும், ராணுவத்தின் அட்டூழியங்களை பகிரங்கமாக அம்பலப்படுத்தின. இதுவே உலக சமூகத்தின் உணர்வுகளை தட்டி எழுப்பியது போலவே, சிங்கள ஜனநாயக சக்திகள் மத்தியிலும், ராஜபக்சே ராணுவத்தின் மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தியது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் ராணுவத்திற்கு தலைமை தாங்கிய பொன்சேகா, அரசாங்கத்திற்கு எதிராக அப்ரூவரானார். அதுவும் அரசாங்கத்தை தலைமை தாங்கிய ராஜபக்சேயிக்கு எதிராகவே, அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்படிப்பட்ட பொன்சேகா கொடுத்த ஒரு செய்தி, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை கிளப்பியது.
வன்னிப்போரின் உச்சக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான போராளிகளாக இருந்த ஆண்களையும், பெண்களையும் ராஜபக்சே குடும்பத்தினர் கொடுத்த கட்டளையின் கீழ், வட்டார ராணுவத் தளபதிகள் சுட்டுக் கொன்றார்கள் என்ற செய்தியை, அன்றைக்கு ராணுவத்திற்கு தலைமையேற்றிருந்த சரத்பொன்சேகா கூறினார். அதையே மகிந்தா அரசாங்கம் மாபெரும் துரோகம் என்பதாக பொன்சேகாவுக்கு எதிராக குற்றம் சாட்டியது. போரின் இறுதிக்கட்டத்தில் முக்கியமான புலிப்படை தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் என்ற முக்கிய தளபதிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சரணடையப் போகிறார்கள் என்ற செய்தியை தனக்கு அரசாங்கம் கொடுக்கவில்லை என்று பொன்சேகா கூறினார்.
அதே சமயம் சரணடைவு பற்றி விடுதலைப் புலி தலைவர்களுக்கும், நார்வே நாட்டு அரசாங்கத்திற்கும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளுக்கும், மகிந்தாவின் தம்பியும், நியமன நாடாளுமன்ற உறுப்பினரும், அதிபரின் ஆலேசகருமான பசில் ராஜபக்சேவிற்கும் இடையில் மட்டும்தான் பரிமாற்றம் இருந்தது என்பதை அப்போது அவர் தெரிவித்தார். சரணடைந்த புலிப்படை தலைவர்களை, உலக போர் விதிகளுக்கு எதிராக, போர் குற்றம் புரிந்த நிலையில், சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றது என்ற அந்தக் கொடிய வன்செயலை பின் னால் தான் தெரிந்து கொண்டேன் என்பதாக பொன் சேகா கூறினார்.
பொன்சேகாவின் கூற்றுப்படி மேற்படி சரணடைதல் என்ற செய்தியை பசில் ராஜபக்சே, மகிந்தாவின் இன்னொரு தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்சேவிற்கு தெரிவித்திருக் கிறார். கோத்தபாய ராஜபக்சே அந்த செய்தியை, ராணுவத்தின் 58வது பிரிவின் தளபதியாக இருக்கும் பிரிகேடியர் சாவேந்திர சில்வா என்ற கொடியவனுக்கு கூறியிருக் கிறார். கூறியது மட்டுமல்லாமல் சரணடையக் கூடிய முயற்சிகளில் எந்தவொரு விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் அனுமதிக்க கூடாது என்றும், அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும் என்றும், கோத்தபாய ராஜபக்சே, பிரிகேடியர் சாவேந்திர சில்வாவிடம் கட்டளை யிட்டுள்ளார். மேற்கண்ட செய்தியை தாமதமாகப் பெற்ற நிலையில், அதிபர் தேர்தலில் மகிந்தாவிற்கு எதிராக போட்டி யிடும் போது, சரத்பொன்சேகா ஊடகங் களுக்கு வெளிப்படுத்தினார்.
மேற்கண்ட நிகழ்வு உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் நடந்ததில்லை. ஏனென்றால் உலகப் போருக்குப் பிறகு, ஜெனீவா ஒப்பந்தம் என்ற போர் விதிகள் பற்றிய ஒரு ஒப்பந்தம் நாடுகளுக்குள் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் ஆயுதம் தாங்கிய இரண்டு படைகள் போரில் ஈடுபடும் போது, யாராவது ஆயுதங்களை கீழேப் போட்டு விட்டு, சரணடைவு என்பதாக வருவார் களானால் அவர்களை எந்தத் துன்புறுத்தலும் செய்யாமல், அனுமதிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. போரில் சரணடைந்த வீரர்களை, போர்க் கைதிகள் என்பதாக எந்த ஒரு அரசாங்கமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். போர்க் கைதிகளை சுயமரியாதை யுடன், அனைத்துவித உதவிகளும் செய்து நடத்த வேண்டும். மேற்கண்ட விதிகள் ஜெனீவா ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தெரிந்த ஒரு செய்தி.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்துவதாக ராஜபக்சே அரசாங்கம் அறிவித்து இருந்தது. அமெரிக்காவில் நியூயார்க் நகரின் மீதும், வாஷிங்டனில் பென்டகன் என்ற அமெரிக்க ராணுவ தலைமையகம் மீதும், கடுமையான விமானத் தாக்குதலை அல்கொய்தாவினர் நடத்திய பிற்பாடு, உலகம் எங்கிலும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பரப்புரையை, திட்ட மிடுதலை, ஒருங்கிணைப்பை அமெரிக்க அரசாங்கம் செய்தது. அப்படிப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு போரை தானும் நடத்துவதாக மகிந்தா அரசாங்கம் அறிவித்த போது, மேற்கத்திய நாடுகள் அதை நம்பி இனவாத போரின் சாராம்சத்தை உணராமல் இருந்தனர். அதே சமயம் ராஜபக்சே அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த அண்டை நாட்டு அரசாங்கங்கள், அதையே காரண மாக்கி ராஜபக்சேயின் இனவாத போருக்கு உதவிகள் செய்தனர். அதனாலேயே அந்த இனவாத போர், தமிழின அழிப்பு போராக மாறியது.
வன்னிப்போர் முடிவுக்கு பிறகு, பொன்சேகா சாட்சியம் கொடுத்தப் பிற்பாடு உலக சமூகத்திற்கு மேலே குறிப்பிட்ட போர்க்குற்றம் அம்பலத்திற்கு வந்தது. குறிப்பாக சரணடைந்த புலிப்படை போராளி களை சுட்டுக் கொன்ற கோழைத்தனமான, ராஜபக்சே குடும்பத்தின் அத்துமீறல் வெளியே தெரிந்தது. அதுதான் உலக அரங்கில், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மத்தியில் இன்றைக்கு பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியா நாடுகளின் அரசாங்கங்களை, ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக கணக்குப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை ஏற்க வைத்துள்ளது.
மே 17ந் தேதி நள்ளிரவில் நடந்த அந்த சரணடைவில், விடுதலைப் புலிகளின் அரசியல் அணி தலைவரான பாலசிங்கம் நடேசன், விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் தலைமையான சீவரத்தினம் புலித்தேவன் மற்றும் விடுதலைப்புலியின் மூத்த தளபதியான ரமேஷ் ஆகியோர் முக்கியமாக தலைமை வகித்தனர். அவர்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்ட அரசத்தலைவரின் சகோதரர் களின் கொடூரச்செயல் இப்போது பயங்கர வாதி யார் என்பதை உலக அரங்கில் தோலுரித்துக் காட்டியுள்ளது.
பயங்கரவாதிகள் என்று முத்திரையால் விடுதலைப்புலிகள் இயக்கத்தை, பல நாட்டு அரசாங்கங்கள் தனிமைப்படுத்த முடிந்தது. அதே சமயம் பகிரங்கமாக, உலக நாடுகளுக்கும், ஐ.நா.சபைத் தலைவர் களுக்கும் அறிவித்துவிட்டு அவர்கள் மூலம் சரணடைந்த புலிப்படைத்தலைவர்களை படுகொலை செய்ததன் மூலம், உண்மையான பயங்கரவாதி என்பதாக ராஜபக்சே அரசாங்கம் இந்த உலகத்தின் முன்னால், குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. ஆகவே புலிப்படைத்தலைவர்களின் குறிப்பிட்ட சரணடைவு என்பது ஒரு அரசியல் போராட்டத்தின் வீச்சை, தொடங்க வைப்பதற்கு காரணமாக ஆகியுள்ளது. ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் மரணத்திற்கு தயாராக இறங்குவது போலவே, சரணடைவு என்ற அரசியல் நிகழ்ச்சியின் மூலம், உலக அரங்கில் எதிரியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடிந்திருக்கிறது என்பதுதான் விடுதலைப்புலிகளின் வெற்றியாக அமைந்திருக்கிறது. இதைக் கணக்கில் கொண்டு, ராஜபக்சே கூட்டத்திற்கு எதிராக தங்களது வாக்குகளை, இலங்கை மக்கள் பதிவு செய்வார்களா என்று உலகம் கேட்கிறது.

Tuesday, April 6, 2010

இலங்கையின் தேர்தல் முறை இந்திய முறையிலிருந்து வேறுபட்டதா?

வருகிற ஏப்ரல் 8ம் நாள் இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு எதிராக இந்தப் பொதுத் தேர்தலில் அதிபர் தேர்தலின் முடிவைப் போல, மகிந்தா கூட்டணி மகத்தான வெற்றியை பெறவும் முடியாது; பெற்றதாக தவறான கணக்கை காட்டவும் முடியாது. ஏனென்றால் இது நாடு தழுவிய அளவில், அந்ததந்த பகுதி பிரதிநிதிகளை உள்ளூர் மக்கள் தேர்வு செய்கின்ற தேர்தல். அதிலும் ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகள் வரை வழங்கலாம். முதலில் தாங்கள் வாக்களிக்க விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு முத்திரையிட வேண்டும். அடுத்து அதிக பட்சம் தங்கள் விருப்புவாக்குகள் (Preferential Votes) மூன்றை பதிவு செய்யலாம். ஒரு வாக்காளர் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று விருப்பு வாக்குகளையும் பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தினால், அவரது வாக்கு மொத்தமாகச் செல்லாததாக ஆகிவிடும். இதை விகிதாச்சார தேர்தல் முறை (Proportionate Electoral) என்று அழைக்கிறார்கள். இத்தகைய விகிதாச்சார தேர்தல் முறை என்பது, இந்தியாவில் இருப்பது போன்ற தேர்தல் முறையல்ல. இங்கே ஒவ்வொரு தொகுதிக்கும் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்களில் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்று வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும். அதையொட்டி தங்களது வாக்கை அந்த நபருக்கு மட்டும் அளிக்க வேண்டும். இதுதான் இந்தியாவில் நடைமுறையிலுள்ள வாக்குப்பதிவு முறை. ஆனால் இலங்கைத் தீவில் அப்படிப்பட்ட முறை இல்லை. ஆனால் இந்திய தேர்தலை அரசியல் கட்சிகள் ஆக்கிரமித்துள்ளன. வேட்பாளர்கள் அனைவரும் அல்லது அதிகப் பெரும்பான்மையானோர் ஏதாவது ஒரு கட்சியின் சார்பாக தேர்தலுக்கு நிறுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட சின்னம் ஒன்றைக் கொடுத்துவிடுகிறது. அங்கீகரிக்கப்படாத, அதே சமயம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சிகளும் இந்தியாவில் தேர்தலில் நிற்கின்றன. அவர்களுக்கு சுயேட்சைகளுக்கு கொடுக்கின்ற சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கொடுத்து விடுகின்றனர். அது தவிரவும் சுயேட்சை வேட்பாளர்களும் நிற்கிறார்கள். அவர்களுக்கும் ஏதாவது ஒரு சின்னம் வழங்கப்படுகிறது. எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமோ, அந்த வேட்பாளரின் சின்னத்திற்கு வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இதில் பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களில் நிற்கும் வேட்பாளர்களுக்கே வாக்குகள் விழுகின்றன. அதன் மூலம் கட்சிகள்தான் முக்கியமானவை என்பதாக நடைமுறையில் வந்து விடுகிறது. வேட்பாளர்தான் முக்கியமானவர் என்பது போல, ஒரு தோற்றத்தை இங்குள்ள தேர்தல் முறை காட்டுகிறது. ஆனால் தேர்தல் ஆணைய விதிகட்கு உட்பட்டுப் பார்க்கும் போது, கட்சிகள்தான் முக்கியமானவை என்பதாக நடைமுறையில் வந்து விடுகிறது. ஒரு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர், சுயேட்சையாகவோ அல்லது தனது மனசாட்சிப்படியோ நாடாளு மன்றத்திலும், சட்டமன்றங்களிலும் இயங்க முடியாது. கட்சியின் கொறடா கூறுகின்ற உத்தரவின்படிதான் நடந்து கொள்ள முடியும்.
ஆனால் இலங்கைத் தீவில் இருக்கின்ற விகிதாச்சார முறை என்ற தேர்தல் முறையில், கட்சிகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. அங்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள் உண்டு. கூட்டமைப்பு என்ற பெயரிலும் தேர்தல் சின்னங்களைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள். சுயேட்சைகள் சிலர் இருந்தாலும், தங்களுக்குள் ஒரு கூட்டணியை கட்டிக் கொண்டு அதற்கான தேர்தல் சின்னத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும், எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ, அதைவிட கூடுதலான வேட்பாளர்களை தங்கள் பட்டியலில் நிறுத்தும் போதுதான் அவர்களுக்கான தேர்தல் சின்னம் வழங்கப்படும். உதாரணமாக யாழ்பாணம் மாவட்டத்திலிருந்து 9 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால், 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை போட்டியிடும் கட்சி அல்லது கூட்டணி நிறுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கான சின்னம் வழங்கப்படும். இது தன் விருப்பத்திற்கு ஒரு தனிமனிதர் வேட்பாளராக நிற்பதை தவிர்த்து விடும். வாக்காளர்கள் தங்கள் வாக்கை கட்சிகளுக்கே அதாவது கட்சிகளின் சின்னங்களுக்கே அளிக்கிறார்கள். தங்கள் வாக்கை பதிவு செய்த பிற்பாடு, அங்குள்ள வாக்காளர்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு வாக்காளர் 3 விருப்பு வாக்குகள் வரை கூடுதலாக அளிக்கலாம். அந்த வகையில் தாங்கள் விரும்பும் வேட்பாளர் நிற்கின்ற சின்னத்தில் தங்களது விருப்பு வாக்குகளை அளிக்கிறார்கள்.
முதல் சுற்றில் நேரிடையாக வாக்காளர்கள் பதிவு செய்த கட்சிகளுக்கான வாக்குகள் எண்ணப்படும். 2வது, 3வது, 4வது சுற்றுகளில் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, அவையும் கூட கட்சியின் கணக்கில், ஒவ்வொரு கட்சி சின்னத்திலும் நிற்கின்ற வேட்பாளர்களின் வரிசைப்படி எண்ணப்படும். பதிவாகும் மொத்த வாக்குகளில் ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ எத்தனை விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளன என்பதை வைத்து, அந்த கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு எத்தனை உறுப்பினர்கள் என்பது முடிவு செய்யப்படும். பிறகு அந்த கட்சியின் அல்லது கூட்டணியின் சின்னத்தில் வென்ற வேட்பாளர்களில், அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் வரிசைப் படுத்தப்பட்டு, அதையொட்டி தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். இந்த முறையில் சிறிய கட்சிகள் அல்லது கூட்டணிகள், குறிப்பிட்ட செல்வாக்கை தங்கள் பகுதியில் மட்டும் அல்லது தங்கள் பிரிவில் மட்டும் பெற்றுள்ள பிரதிநிதிகள்கூட வெற்றி பெற்று, நாடாளுமன்றம் செல்ல வாய்ப்புண்டு.
இந்திய தேர்தல்களில் நடப்பது போல, பதிவான வாக்குகளில் 20% அல்லது 30% வாங்கிய வேட்பாளர்கள் வெற்றி பெற்று, அவரை விட ஒரு வாக்கு குறைவாக வாங்கியவர் கூட, தோல்வியடையும் வாய்ப்பு அங்கே இல்லை. விகிதாச்சார தேர்தல் முறையில், நாடெங்கிலும் உள்ள பல தொகுதிகளிலும் சிதறலாக ஆனால் குறைவாக வாக்குகள் பெற்ற சின்னம் கொண்ட கட்சி அல்லது கூட்டணி கூட, ஒரு சில பிரதிநிதிகளை நாடாளு மன்றத்திற்கு அனுப்ப முடியும். அது ஒப்பீட்டளவில் சற்று விரிவான பிரதிநிதித்து வத்தை தேர்ந் தெடுப்பதற்கு இருக்கின்ற தேர்தல்முறை. அதனால்தான் இந்தியாவில் இருக்கும் விளிம்பின மக்கள் இயக்கங்க ளிலிருந்து வருகின்ற ஓரங்கட்டப் பட்ட பிரதிநிதிகள் கூட, தங்களது பிரதிநதித்து வத்தை உறுதி செய்ய, நிகழும் தேர்தல் முறையை மாற்றி, விகிதாச்சார தேர்தல் முறையை கொண்டு வரவேண்டும் என்ற கருத்தை ஆழமாக முன்வைக்கிறார்கள்.
அந்தளவிற்கு விகிதாச்சார தேர்தல் முறை என்பது நிலவும் இந்திய தேர்தல் முறையைக் காட்டிலும், சற்று முன்னேறிய அளவிலான பிரதிநிதித்துவத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்முறையாக இருக்கிறது. விகிதாச்சார தேர்தல் முறையில், ஒரு உறுப்பினர் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, கட்சி மாறினாலோ, அதே கட்சியைச் சேர்ந்த அவருக்கு அடுத்த விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை அவரிடத்தில் நியமனம் செய்ய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது. இதனால் இடைத் தேர்தல் என்பது இலங்கைத் தீவில் தவிர்க்கப்படுகிறது.
இலங்கைத் தீவில் தற்போது நடக்க இருக்கும் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் சிறுபான்மை மக்களான ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக தமிழர்கள் ஆகியோர் தங்களது பகுதி களிலிருந்து, பிரதிநிதிகளை அனுப்ப வாய்ப்பு கிட்டியுள்ளது. சிறுபான்மை தமிழர்கள் மத்தியில் செல்வாக்குடன் அதிபர் தேர்தலை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது தோன்றியுள்ளதும், அதனால் தமிழர் வாக்குகள் உடைபடும் அபாயம் இருப்பதும் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. இது தவிர இடது சாரிகள் கூட்டணி ஒன்றும் தமிழர் பகுதியில் நிற்பதனால், தமிழர் வாக்குகள் மேலும் உடைக்கப்படலாம் என்று ஆளும் கூட்டணி எண்ணுகிறது. அதன் மூலம் ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கின்ற, டக்ளஸ் தேவானந்தன் தலைமையிலுள்ள ஈ.பி.டி.பி.யும், சித்தார்த்தன் தலைமையிலான பிளாட் அமைப்பும், பிள்ளையான் தலைமையிலான அமைப்பும் சில நாடாளுமன்ற உறுப்பினர் களையாவது அனுப்பி வைக்கும் சூழ்நிலை ஏற்படாதா என்று ஆட்சியாளர்கள் நப்பாசைகொண்டு அலைகிறார்கள். கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற முஸ்லிம் கட்சியுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிக்கப்படாத ஒரு தோழமையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதனால் ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம் வாக்குகள் ஒரே அணியில் விழுவதற்கும் வாய்ப்புள்ளது.
ஆனால் அதிபருக்கான பொதுத் தேர்தல் முடிந்து சில மாதங்களே உள்ள நிலையில், தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் அனைவரும் அல்லது அதிகப் பெரும் பான்மையான தமிழர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து அதிபர் தேர்தலுக்கு வாக்களித்த நிலைமை எண்ணிப் பார்க்கப்பட வேண்டி யிருக்கிறது. அதனால் அந்த நம்பிக்கையை உடைப்ப தற்கோ, சிதறடிப்பதற்கோ, தேவையான நேரமோ, வாய்ப்புக்களோ குறைவாக இருக்கிறது. அதனால் நல்லதோ, கெட்டதோ தமிழர் வாக்குகள் பெரிதும் சிதறாமல் ஒரு கூட்டணியை நோக்கித்தான் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் விருப்பு வாக்குகள் படி, மக்கள் விரும்பும் வேறு சில வேட்பாளர்களும் வெற்றி பெறலாம். அதே போல கொழும்பிலும், மலையகப் பகுதியிலும் ஆளும் கட்சிக்கு எதிரான வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதே போல தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மத்தியிலும் எதிர்க் கட்சி அணிக்கு உள்ள செல்வாக்கு, பல பிரதிநிதிகளை வெற்றி பெற வைக்கும் எனத் தெரிகிறது. ஆகவே மகிந்தா குழுவினருக்கு இந்தப் பொதுத் தேர்தல், ஒரு சவாலாகத்தான் அமைந்துள்ளது.

Monday, April 5, 2010

பெரியாரையும், அம்பேத்கரையும் மதவாதிகள் பயன்படுத்தமுடியுமா?

சமீப நாட்களில் தமிழ் நாட்டு அரசியலில், மாநில அரசாங்கம் அறி வித்த சில திட்டங்களை எதிர்த்து பா.ஜ.க. கட்சியின் மாநில தலைமையிலிருந்து கடுமையான கண்டன அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அவற்றில் தாங்கள் இதுவரை விலகியே நிற் கும் தத்துவங்களை மேற்கோள் காட் டுகிறார்கள். தங்கள் கொள்கைக்கு எதிரானதாக அவர்கள் நேற்றுவரை அடையாளப்படுத்திக்கொண்ட பெரியார் சிந்தனைகள் மற்றும் அம்பேத்கர் கருத்துக்களை, இன்றைய அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். முதலில் அவர்கள் தொடுத்த தாக்குதல், பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென் னரசின் கருத்துக்கள் மீது. அதாவது அந்த அமைச்சர் சமச்சீர் கல்வி பற்றி பேசி இருக்கிறார். அப்படி பேசும்போது அதற்கான புதிய பாடப் புத்தகங்கள் வெளி கொண்டுவருவதைக் குறிப்பிட்டுள்ளார். அந்த புத்தகங்களில் பெரியாரின் கருத்துக்களை வெளியிடுகிறோம் என்று பெருமையாக அறிவித்துள்ளார். வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து பெரியார் கூறிய கருத்துக்களை அவற்றில் கொண்டு வருகிறோம் என்று கல்வி அமைச்சர் கூறிய செய்திதான், பா.ஜ.க.வை கண்டிக் கத் தூண்டியிருக்கிறது.
சமச்சீர் பாடத் திட்டத்தில் மதத்தை இழிவு படுத்துவதாக பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ் ணன் கொந்தளித்துள்ளார். சாதி வேறு பாடுகளைத்தான் வர்ணாசிரம தர்மம் என்று அழைக்கிறார்கள். சாதிகள் பிற் போக்கானவை என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். அதேபோல சாதிகள் இல்லாத சமூதாயத்தைப் படைபோம் என்று அரசியல்வாதிகள் தொடங்கி அறிவுஜிவிகள் வரை கூறு கிறார்கள். சாதி வேறுபாடுகள் சமூகத்தின் இழிவு என ஆராய்ச்சியாளர்கள் எழுதுகிறார்கள். ஆகவே வர்ணாசிரம தர்மத்தை எதிர்ப்பதோ, வேரோடு அழிக்க பாடுபடுவதோ, சாதிகளற்ற சமூதாயத்தை ஏற்படுத்துவதற்காக உள்ள படிக்கட்டுகள் தான். அப்படிப்பட்ட நல்ல கருத்துக் களை, சமூதாயத்திற்கான முன் னேற்றக் கருத்துக்களை பள்ளிக் கல்வி அமைச்சர் கூறினார் என்றால் அதை எந்தொரு அரசியல் கட்சியும் எப்படி எதிர்க்க முடியும்? ஆனால் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எதிர்க்கின்றார்.
சாதி வேறுபாடு என்ற வர்ணாசிரம தத்துவத்தை வேரோடு அழிக்க பெரியார் சிந்தித்தார் என்பது நல்ல செய்தி என்பதாகத்தான் நாடு ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ் நாட்டு மக்களும் பெரியாரை சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு ஆகிய கொள்கைகளிலிருந்துதான் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பெரியார் கருத்துக்களில் உள்ள கடவுள் மறுப்பு, நாத்திகம் ஆகிய கொள்கைளில் ஈர்க்கப்பட்ட மக்களைவிட, சாதி மறுப்பு மற்றும் சாதி ஒழிப்பு கருத்துக்களில் ஈர்க் கப்பட்டவர்களின் எண்ணிக்கை எப் போதுமே அதிகம். அப்படிப்பட்ட சமூக முன்னேற்றத்திற்கான கருத்துக்களை பெரியார், தமிழக மக்களுக்கு தந்துள்ளார். அவற்றை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என்பதுதான் ஆரோக்கியமாக இருக்கமுடியும். ஆனால் அதை பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்க்கிறார்.
வர்ணாசிரம தர்மத்தை ஒழிப்பது என்பது இந்து மதத்தை ஒழிப்பது என்று பொருள்படும் என ராதாகிருஷ்ணன் ஒரு விளக்க உரை தருகிறார். அப்படியா னால் பொதுமக்களை சாதியரீதியாக பிளவுபடுத்தவதும், அதில் சில சாதிகளை இழிவு படுத்துவதும் ஒரு மதத்தின் கொள் கைகள் என்பதாக வியாக்கியானம் செய்யும் பொன்.ராதாகிருஷ்ணன், இதன் மூலம் அந்த மதத்தை மிகவும் இழிவாக கருதுகிறார் என்பதாக எடுத்துக் கொள்ளலாமா? அடுத்து பெரியாரை ஒரு மதச்சார்பற்றவாதி அல்ல என்றும், அவர் நாத்திக கருத்துக்களை பரப்புரை செய்பவர் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதச்சார்பற்ற அரசு ஒரு மதத்தை அழிப்பதாக கூறிய ஒருவரை எப்படி அங்கீகரிக்கலாம் என்பது அவரது வாதம். மதச்சார்பற்ற அரசு என்றால் என்ன என்று இந்த பா.ஜ.க. தலைவர் புரிந்து கொண்டாரா என்பது நமக்கு புரிய வில்லை.
மதச்சார்பற்ற என்ற சொல் இந்தியா வின் அரசியல் சட்டத்தில் பொறிக்க பட்டுள்ளது. இந்திய அரசின் தன்மைப் பற்றி குறிப்பிடும்போது, அது மதச்சார் பற்ற அரசு என்பதாகத்தான் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன் பொருளே, அனைத்து மதங்களிலிருந்தும், மத நம்பிக்கை களிலிருந்தும், மத வழிபாடுகளிலிருந்தும் தூர விலகி நிற்பதே ஒரு அரசின் கொள்கை என்பதே. மதச்சார்பின்மையை அதன் சரியான பொருளில் புரிந்து கொள்ளாமல், அதையே மதநல்லிணக்கம் என்று வழங் கப்படும் ஒரு பொருளை, இவர் புரிந்து கொண்டிருப்பாரோ என்று நாம் அச்சப் பட வேண்டியிருக்கிறது. இதே போல 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில், பெரும்பான்மை மத வெறிச்சக்திகளால் தொடர் படுகொலைகள் சிறுபான்மை மதத்தினர் மீது நடத்தப்பட்ட நேரத்தில், சென்னை தியாகராயநகரில் ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தை ஒரு முஸ்லிம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் என்று அழைக்கப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி என்பவர் பேசினார், அங்கு மதச்சார்பற்ற நிலைப்பாடு பற்றி எடுத்துக் கூறப்பட்ட கருத்துக்களை அவர் எதிர்த்துப் பேசினார். மதச்சார்பற்ற என்றால் எந்த மதமும் வேண்டாம் என்று அர்த்தம் அல்ல என்றும், எல்லா மதமும் வேண்டும் என்று அர்த்தம் என்பதாக, ஒரு புதிய விளக்கத்தை அளித்தார். இந்தப் புரிதலில்தான் மதவாத சக்திகள் இந்தியாவில் நடமாடிக் கொண்டிருக்கின்றன என்பதாக நாம் புரிய வேண்டியிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை எதிர்க்க முடியாததால், அதில் உள்ள மதச்சார்பற்ற என்ற சொல்லை பொருள் மாற்றி விளக்குகிறார்கள் என்பதாகவும் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இவர்களது உண்மைப் பெயர்களுக்கு புதிய ஆர்ப்பாட்டப் பெயர்கள் அலங்கரிக்கப்படுவது போல, இந்த நாட்டின் மதச்சார்பற்ற தன்மை யையும், தங்கள் விருப்பத்திற்கு விளங்கிக் கொள்ளவும், விளக்கிக் கொள்ளவும் செய்கிறார்கள்.
பெரியாரின் சாதி ஒழிப்பு என்ற வர்னாசிரம ஒழிப்பு என்பது தீண்டாமை மற்றும் காணாமை ஆகிய முறைகளால் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் பல பிரிவுகள் முன்னேற வழிவகுத்துள்ளது. அதனால் மட்டுமே மதவாத அமைப்பாக இருக்கின்ற அரசியல் கட்சியில், ஆதிக்க சாதிகள் மட்டுமே தலைமையேற்ற இடத்தில் மாற்றங்கள் உருவாகி, மேற்கண்ட ஒடுக்கப்பட்ட பிரிவு களிலிருந்து வந்தவர்களும் பொறுப்புக்கு வருவதற் கான வாய்ப்புக்கள் உருவானது. அப்படிப் பட்ட பெரியாரின் கருத்துக்களைத்தான், பள்ளிக் கல்வி அமைச்சர் சமச்சீர் கல்வியில் கொண்டு வருகிறோம் எனக் கூறியுள்ளார்.
அடுத்து இதே தலைவர் அம்பேத்கரை மேற்கோள் காட்டி, தமிழக முதல்வரின் அறிக்கைக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார். தலித் கிருத்துவர்களுக்கு தலித் பட்டியலில் இடம் கொடுக்க வேண்டும் என்ற முதல்வரின் கடிதத்திற்கு இவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்து மதத்தில் சாதிகள் இருப்பதை அதில் ஒப்புக் கொண்டுள்ளார். கிருத்துவ மதத்தில் சாதிகள் இல்லை என்று புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார். இந்தியா முழுவதும் இருக்கின்ற கிருத்துவ திருச்சபைகள் அனைத்தும் இணைந்து, தலித் கிருத்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக குரலெழுப்பி வருவது, ஏனோ இவருக்கு தெரியவில்லை. இந்தியாவில் இருக்கும் கிருத்துவ மதத்தில், சாதிகள் அப்படியே இருக்கின்றன என்பதும், தலித் கிருத்துவர்கள் தீண் டாமைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதும், அனைவராலும் ஒப்புக் கொள் ளப்பட்ட உண்மை.
ஆதிக்க சாதிகளின் அதிகாரப் பறிப்பு, கிருத்துவ தேவலாயங்களுக் குள்ளேயும் நடந்து வருகின்ற ஒரு செயல்தான் என்பது இந்தத் தலைவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் கூட கட்சி அரசியல் காரணங்களுக்காக, மதவாதத்தை தூண்டிவிட்டாவது அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியத்திற்காக, இது போன்ற கண்டனங்களை அவர் எழுப்பி யிருக்கலாம். அதற்காக அம்பேத்கரை துணைக்கு அழைக்கிறார். இந்தியாவில் இருக்கின்ற மதத்தில் நிலவும் சாதி ஒடுக் கலை நீக்க, தாழ்த்தப்பட்டோருக்கு அம்பேத்கர் தனி ஒதுக்கீடுகளை முன் வைத்தார் என்று ஒரு வாதத்தை முன் வைக்கிறார். அதையும் குறிப்பிடும் போது தலித் மக்களால் வெறுக்கப்படும், ஹரிசன் என்ற சொல்லை பயன்படுத்துகிறார். இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமை கொடுமைக்கு முடிவு கிடைக்காத காரணத்தால், அந்த மதத்தையே விட்டுவிட்டு வெளியேறி, புத்த மதத்திற்கு மாறிச் சென்றவர் அம்பேத்கர். அதுமட்டுமின்றி தன்னைப்போலவே மதம் மாற தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்தவர் அம்பேத்கர் என்ற செய்தியும் இந்தத் தலைவருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியவில்லை. உண்மையில் இந்து மதத்தில் இருக்கின்ற தலித் மக்கள் மீது கரிசனை இருக்குமானால், இந்து தலித்துகள் மற்றும் கிருத்துவ தலித்துகள் அனைவருக்கும் சேர்த்து இடஒதுக்கீட்டின் விழுக்காட்டு அளவை அதிகப்படுத்த வேண்டும் என்று இந்த அரசியல்வாதி குரல்கொடுத்திருக்க வேண்டும். மாறாக தங்கள் மதவாத வெறுப்புகளை உமிழ்வதற்கு, பெரியா ரையும், அம்பேத்கரையும் பயன்படுத்த முயற்சித்தால், தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாறத் தயாராக இல்லை என்பதை நாம் உறுதிபடக் கூற வேண்டியிருக்கிறது.

Sunday, April 4, 2010

குடிசைவாசிகளும், சாலையோர வாசிகளும் நமது மக்களே!

இரண்டு நாட்களாக இந்தியத் துணைக் கண்டம் எங்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப் பட்டுள்ளது. இந்தியாவின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் குடியரசு தலைவர், மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் குடியாக பதிவு செய்யப்பட்டார். அதேபோல இரண்டாவது குடிமகனாக, தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் பதிவு செய்யப்பட்டுள்ளார். அவர்களது பதிவுகளைக் கூட ஒரு விழாவாக ஆக்கி, இந்திய அரசு அகமகிழ்ந்து கொள்கிறது. மன்மோகன் சிங் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பதை, சாதாரணமாக எண்ணிக்கை ரீதியான புள்ளி விவரமாகக் காணாமல், அதுவே நாட்டின் வளர்ச்சித் திட்டங் களுக்கு அடிக்கோலாக அமை யக்கூடியது என்று கூறியுள்ளார். இது வரை இந்தியாவில் அரசாங் கத்தால் அறிவிக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாமே, அவை நிறு வப்படும் பகுதிகளின் மக்களிடம் கலந்தாலோசிக்காமல், அந்த மக் களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொள்ளாமல், வளர்ச்சித் திட்டத்தின் கட்டாயத்தைக் கருதி பாரம்பரியமாக அந்த வட்டாரத்தில் வாழ்கின்ற மக்கள் தொகையினரை, இடம்பெயர்த்தலுக்கு உள்ளாக்கும் நிலமையைத் தான் உருவாக்கியிருக்கிறது. மேற்கண்ட நிர்ப்பந்தமான இடம்பெயர்தலுக்கு, பல்வேறு உதாரணங்களை நாடெங் கும் காட்ட முடியும். அதில் 2,00,000 ஆதிவாசி மக்களை கட்டாயமாக இடம்பெயரச் செய்யும், சர்தார் சரோவர் அணைக்கட்டு என்ற மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள, நர்மதா நதிக்கு குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டு என்ற வளர்ச்சித் திட்டம், பத்தாண்டுகளுக்கு மேலாக மக்களால் எதிர்க்கப்படுகிறது. மேதா பட்கர் தலைமையிலான அந்த நர்மதா இயக்கம், மாற்று இடத்தை, மறு வாழ்வு திட்டத்தை அளிக்காமல் இருக்கும் இந்திய அரசை கேள்விக் கேட்கிறது. இதுபோன்ற கட்டாய இடம்பெயர்தல்கள், இந்தியா எங்கும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் வந்திறங்கியுள்ளன. அவற்றினால் மரபு ரீதியாக தாங்கள் வாழ்ந்து வரும் வயல் வெளிகளையும், மலைகளையும், வனங்களையும், கடற்கரைகளையும் விட்டு மக்கள் வெளியேற்ற கட்டாயப் படுத்தப்படுவார்களானல், அவர்கள் தங்களது மறுவாழ்வுக்கு என்ன செய் வார்கள் என்ற கேள்வி நாடெங்கும் எழுந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சனைகள் தான் முக்கியமாக நமது மக்கள் மத்தியில் அலை பாய்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையில் வளர்ச்சித் திட்டங்களுடன் இணைத்து சுட்டிக்காட்டியுள்ள தலைமை அமைச்சரின் பார்வை, மக்களுக்கு சாதகமாக இனியாவது அரசாங்கம் வளர்ச்சித் திட்டங்களை மாற்றியமைப்பார்களா என்ற நப்பாசையை நமக்குக் கிளப்பி யுள்ளது.
அதேசமயம் தொடங்கியுள்ள இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி, கருத்துக் கூறியுள்ள நமது தமிழக முதல்வர், சாலையோரம் வசிப்பவர்களும், அரவாணிகள் என்ற திருநங்கைகளும் அதில் சேர்க்கப்பட வேண்டும் என்பதாக அறிவித்துள்ளார். இது மேலும் ஒரு ஆறுதலான அணுகுமுறையாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. சாலையோரம் வசிப்பவர்கள் என்ற பெயர், உள்ளபடியே நகரங்களில் வீடுகள் அற்றவர்கள் என்பதாக பொருள்படும். அதேபோல திருநங்கைகளும் கூட, இந்த சமுதாய அமைப்பில் அடிப்படை அலகுகளாக இருக்கின்ற குடும்பங்களில் இணைத்துக் கொள்ளப்படாமல், வெளியே அனுப்பப்பட்ட அரவானிகள் என்ப தாகவும் நம்மால் புரிந்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட இரண்டு பிரிவினரையும், அவர்களும் மனிதர்கள் தான் என்ற அடிப்படை உணர்வோடு, அவர்களும் இந்த நாட்டு குடிமக்கள் தான் என்ற குடியுரிமை சிந்தனையோடு, அவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்ற முதல்வரது கோரிக்கை, நல்லதொரு அணுகுமுறை.
தலைமை அமைச்சரின் உரைகள், மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை உரைக் கல்லாக வைத்து பார்க்கப்பட வேண்டும் என்று நாம் கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் மாநாடுகளிலும், விழாக்களிலும் அரசியல் தலைவர்களும், தலைமை அமைச்சர் கூட, பல்வேறு முன்னேறிய கருத்துக்களை கூறக்கூடும். அதேசமயம் மத்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் இருந்து வெளியே வருகின்ற வளர்ச்சித் திட்டங்கள், மக்களை கணக்கிலெடுக்காமல், அவர்களது மறுவாழ்வுக்கு திட்ட மிடாமல், முடிந்த அளவில் அவர்களது வாழ்க்கைத் தேவையை வளப்படுத்தும் எண்ணத்தைக் கொள்ளாமல் உரு வாக்கப்படுகின்றன என்பதே கிடைத் திருக்கும் அனுபவம்.
அதேபோல சாலையோரவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற சரியான கருத்தை முன்வைக்கும்போது, அத்தகைய சாலையோர வாசிகள் உருவாகி வரும் புறச்சூழலை நாம் எப்படி சந்திக்கப்போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. குடியிருப்பதற்கு குடிசை கூட இல்லாத நிலையிலுள்ளவர்கள் தான், சாலையோர வாசிகள். அத்தகைய சாலையோர வாசிகள், கடந்த 30 ஆண்டுகளுக்குள் நகரை நோக்கி நகர்ந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். வீடற்ற இந்த கூலி மக்கள், அன்றாடம் வேலைக்குச் செல்கிறார்கள்.
சென்னை நகரின் அடிப்படையான பணிகளைச் செய்வதில் இவர்களும் பங்களிப்புச் செலுத்துகிறார்கள். அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்
சென்னை நகர சாலையோரவாசிகளாக வாழ வந்த குடும்பங்களில், பிறந்து வளர்ந்த இளைஞர்கள் கல்லூரி படிப்பு வரை படித்து, வேலைக்குச் செல்வதையும் காண முடிகிறது. இன்றுவரை இப்படிப்பட்டவர்களுக்கு வீடு கொடுக்க முடியாத ஒரு நிலை, ஆரோக்கியமான சூழ்நிலை அல்ல. வீடற்றவர்கள் என்பதால் இவர்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் என ஆகிவிடக் கூடாது என்பது சரியான சிந்தனை. அதேநேரம் வீடற்றவர்களாக இப்படியொரு பிரிவினரை வைத்திருப்பது எப்படி ஆரோக்கியமான சூழலாக இருக்கும்?
வீடு இருந்தும் தொடர்ந்து இருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்ட மக்கள் பலரும், நகரங்களில் வாழ்ந்து வருகி றார்கள். அவர்கள் குடிசைவாசிகள் என்பதாக அழைக்கப்படுகிறார்கள். குடிசைகள் இல்லாத நகரங்களை உருவாக்குவோம் என்பது, இன் றைய நாகரீகமான ஒரு முழக்கம். நகர்மயமாதலில் தோற்றுவிட்ட பகுதிதான் குடிசைகள் என்பதாக ஒரு கருத்து இருக்கிறது. திட்டமிடப்படாத நகரம் என்பதாக குடிசை பகுதிகள் அழைக்கப்படுகின்றன. அவை திட்ட மிடப்படாத பகுதிகள் மட்டுமல்ல. அவை கண்ணுக்குத் தெரியாத பகுதிகளாக நகரங்களில் இருக்க வேண்டும் என்று ஆள்வோர் விரும்புகிறார்கள்.
டெல்லியில் நடைபெறப் போகின்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக, அந்த நகரம் விமர்சையாக தயாராகி வருகிறது. அதில் ஒன்று டெல்லியில் இருக்கும் குடிசைப் பகுதிகளை, அந்த விளையாட்டுப் போட்டிக் காலத்தில் கண்களில் காட்டாமல் மறைப்பது என்பதாக திட்டமிடுகிறார்களாம். மும்பையிலும் இதேபோல குடிசைப் பகுதிகளை, சுற்றுலா வருகின்ற வெளிநாட்டுப் பயணிகளுக்கு கண்களுக்குத் தெரியாமல் மறைக்க முயலும் திட்டம் ஒன்று இருக்கிறது.
நகரங்களில் திடீரென்ற குடிசைப் பகுதிகள் தோன்றுவதற்கான அடிப் படைக் காரணங்கள் களையப்படாமல், குடிசைப் பகுதிகளை நீக்குவது அல்லது மாற்றியமைப்பது அல்லது இனி வருங்காலங்களில் இல்லாமல் செய்வது என்பது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் இணைந்தே எழுகிறது. எப்படியோ இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பாவது ஆட்சியாளர்கள் மத்தியில், மக்களின் பல்வேறு பிரிவினர்கள் பற்றி சிந்திக்க வைத்திருக்கிறதே என்பதாக நாம் இப்போது ஆறுதல் கொள்கிறோம்.

Saturday, April 3, 2010

தலித் கிருத்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதா?

நேற்று இந்திய தலைமை அமைச் சருக்கு தமிழக முதல்வர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். வழக்கமாக தமிழக முதல்வரின் கடிதம், தமிழ்நாட்டின் தேவைகளைப் பற்றியதாக இருக்கும். காவிரி நீர் தீர்ப்பாணையம், முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உயர்த்துவது, பாலாற்றில் கட்டப்படும் தடுப்பணை, போன்ற தமிழ்நாட்டின் தேவைகள் பற்றி, வழமையாக தமிழக முதல்வர் இந்தியத் தலைமை அமைச் சருக்கு கடிதங்கள் எழுதுவதுண்டு. சில நேரங்களில் ஈழப்பிரச்சனை சம்மந்தமாகவும், ஒரு கட்டத்தில் வன் னிப்போரில் பொதுமக்களை அழிப்பது சம்மந்தமாகவும், தமிழ் நாட்டில் வாழும் ஈழ அகதிகள் குறித் தும், தமிழக முதல்வர் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கிற்கு கடிதங்கள் எழுதியதுண்டு. ஆனால் இந்தியா தழுவிய ஒரு முக்கிய சமூகப் பிரச்சனையின் மீது, அதிலும் குறிப்பாக தலித் மக்களின் ஒரு சாராரது அடிப்படையான உரிமை குறித்து இப்போது கடிதம் எழுதியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களாக இந்திய துணைக் கண்டத்தில் ஒடுக்கப்பட்டு கிடக்கின்ற தலித் மக்கள் சொல்லொ ணாக் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் மீது தீண் டாமை என்ற அடக்கு முறையும், அவமதிப்பு முறையும் பாய்கிறது. அப்படிப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, மதவேறுபாடின்றி
சாதிய ரீதியான ஒடுக்குமுறையை மட்டுமே கணக்கிலெடுத்து இடஒதுக் கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது சரியான ஒரு கோரிக்கை. இன்றைய சமூகத்தில் அது ஒரு முற்போக்கான கோரிக்கையும் கூட. கிராமப்புறங்களில் குறிப்பாக நடத்தப்படுகின்ற அடக்குமுறைகளில், ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று கவனிப்பதை விட, எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பது தான் கவனிக்கப்படுகிறது.
சாதியை வைத்து மட்டுமே ஒருவர் கிராமப்புறங்களில் மரியாதை பெற முடிகிறது. ஒருவருடைய வாழும் இடத்தைக் கூட, கிராமப்புறங்களில் சாதி தான் தீர்மானிக்கிறது. மதம் மாறியதால் மட்டுமே எந்தவொரு சாதிக்காரரும், தன்னுடைய கிராமத் தில் மாற்றுச் சாதியினர் வாழும் தெருவிற்குள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. வாழும் இடம், பழகும் மக்கள், உறவுக் காரர்கள், ரத்த உறவுகள், மணம் முடிப்போர் இப்படியாக அனைத் துமே சாதியரீதியாக மட்டுமே தீர் மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இருக்கின்ற அல்லது மாறுகின்ற மதத்தை வைத்து ஒரு மனிதருக்கு வழங்கப்பட வேண்டிய ஒதுக்கீடுகளை முடிவு செய்யாமல், அவர் அழுத்தப்பட்டுள்ள சாதியை வைத்து மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்ற இந்த கோரிக்கை மிகவும் நியாயமான ஒன்று.
முதல்வர் மேற்கோள் காட்டுகின்ற 1950ம் ஆண்டுக்கான தாழ்த்தப் பட்டோர் சட்டம், 1956ம் ஆண்டுக் கான தாழ்த்தப்பட்டோர் சீரமைப்புச்
சட்டம், 1976ம் ஆண்டுக்கான எஸ்.சி, எஸ்.டி. சட்டத்திருத்தம் ஆகியவை ஒருவர் இந்துவாயிருந்தாலும், சீக்கியர் என்றாலும், புத்தமதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எந்த மதத் தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்றால் அவரை தாழ்த்தப்பட்டவர் என்றே கருத வேண்டும் என்பது பொருத்தமாக இருக்கிறது.
இந்து மதத்தில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களை, பட்டியல் இனத்தவர் என்பதாக வரையறை செய்து, அவர்களுக்கான தனிச்சலு கைகளை அல்லது உரிமைகளை அரசியல் சட்டத்திலேயே அடிப்படை உரிமையாக இணைத்தார்கள். 1950ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் சட்டத்தில் மூன்றாவது பாராவில் 56ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது என்றும், அதில் சீக்கிய மதத்தைச்
சேர்ந்த தாழ்த்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது என்பதையும் சுட் டிக்காட்டுகிறார். அதுமட்டுமின்றி 1990ம் ஆண்டு புத்தமதத்தை ஏற்றுக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களையும், இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந் தார்கள். உண்மை விவரங்கள் இப்படியிருக்கையில், கிருத்துவ மதத்திற்கு மாறிச் சென்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக் காமலேயே இருக்கிறது.
முதல்வர் எழுதிய கடிதத்தில் நாடாளுமன்றச் சட்டப்பிரிவுகள் 341(2) மற்றும் 342(2) ஆகியவற்றின் கீழ் பிரதமரே நேரடியாக தலையிட்டு, இதற்கான தீர்வைக் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். மேற்கண்ட கோரிக்கை தொடர்ந்து இருக்கின்ற ஒன்று தான் என்றாலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது என்பதை அந்த கடிதத்தில் முதல்வர் பகிர்ந்து கொள்கிறார். இத்தகைய கடிதத்தின் தேவை நிலவுகின்ற சாதிய ரீதியான சமூகச் சூழலாலும், நடை முறையில் உள்ள கிருத்துவ திருச்சபைகளின் குரல்களாலும் இன்றைக்கு மீண்டும் வெளிவந்திருக்கலாம். ஆனால் இத்தகைய கோரிக்கைக்கான அடிப்படை சமூகச் சூழல் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் இருக்கும் கிராமங் களில் இந்து மத நம்பிக்கை கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள், தங்கள் விருப்ப தெய்வங்களை வழிபட, கோவில்களுக்கு செல்வதில் கூட, பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதுதான் சிவகங்கை மாவட்டத்தில், தேவகோட்டை வட்டத்தில் கண்டதேவி கிராமத்தில் உள்ள
சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலையத்தில், தேர்வடம் பிடிக்க தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வந்தும் கூட, ஆதிக்கவாதிகளின் தடையை முழுமையாக அரசு நிர்வாகத்தாலும், காவல் துறையாலும் உடைக்க முடியவில்லை. அதேபோல கோவில்பட்டி மாரியம்மன் கோவி லில் தாழ்த்தப்பட்டோருக்கான மண்டகப்படி இதுவரை ஆதிக்கச் சாதியினரால் கொடுக்கப்படவில்லை. கோவையில் மலைக்கோவிலான வேலாயுதன் பாளையத்தில், தாழ்த் தப்பட்டோர் சுதந்திரமாக வழிபாடு செய்ய முடியவில்லை. காஞ்சி மாவட்டத்தில் கூத்தரம்பாக்கம் கிராமத்தில், கோவிலுக்கான வரி செலுத்தியும் கூட, தாழ்த்தப்பட்டோர் தெருவிற்கு சாமி பல்லக்கு வருவதற்கு ஆதிக்கச் சாதியினர் இன்னமும் அனுமதிக்கவில்லை. இப்படியாக நேரடியான சாதிய அடக்குமுறையை தலித் மக்களின் மீது கட்டவிழ்த்து விடும்போது, அவர்கள் சுதந்திர மான வழிபாட்டிற்காக மதம் மாறுகிறார் கள்.
அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையம், தனித் தொகுதிகளாக அறிவித்தும் கூட, தலித் பிரதிநிதிகள் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு கிராமத்திலும், கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி கிராமங்களிலும் ஊராட்சித் தலைவர்களாக சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்படுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. உத்தபுரத்தில் தீண்டாமைச் சுவர் பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படவில்லை. சொந்த மதத்தைச் சேர்ந்த ஆதிக்க
சாதிக்காரர்களால் அவதிப்படுவதினால், அவமானப்படுத்தப்படுவதினால், விரக்தியடையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறி செல்கின்றனர். அவ்வாறு கிருத்துவ மதத்திற்கு சென் றவர்களுக்குக் கூட, சாதி முத்திரை அழிக்கப்படவில்லை. கிருத்துவ மதத்திற்கு உள்ளேயும், தனிவழிபாட்டு தலம், தனி சுடுகாடு போன்றவற்றால் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இருக்கும் கிருத்துவ மதப்பிரிவுகள், சாதி அடையாளத்தை உடைக்காமல் பாதுகாத்து வரு வது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. அப்படியிருக்கையில் மத அடையாளத்தைக் காரணம் காட்டி, அவர்களுக்கு சாதி அடையாளத்தால் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பறிப்பது எந்த விதத்திலும் நியாய மில்லை.
இந்திய அரசியல் சட்டத்தில் யார் வேண்டுமானாலும், எந்த மதத்திற்கும் விரும்பினால் மாறிச் செல்லலாம் என்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய தனிநபர் உரிமையே அவர்களுக்கான சாதிவழி சட்ட உரிமைகளை தடுப்பதற்காக பயன் படுத்தப்படலாமா? செங்கல்பட்டில் பஞ்சமி நில போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தலித் இளைஞர்கள், ஜாண் தாமஸிற்கும், ஏழுமலைக்கும் காவல்துறையின் தோட்டாக்கள் வேறுபாடு பார்த்ததா? தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தில், உடைக்கப்பட்ட வீடுகளில் மாட சாமிக்கும், அந்தோணி சாமிக்கும் வேறுபாடு காட்டமுடியுமா? இந்து மதத்தில் இருந்தால் தான் தாழ்த் தப்பட்டோருக்கான இடஒதுக் கீடு கிடைக்கும் என்றால், அது மறைமுக மாக சலுகை கொடுத்து குறிப்பிட்ட மதத்தில், மக்களை தக்கவைத்துக் கொள்ளும் போக்கு என கருதப்பட முடியாதா? இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது உண்மையானால், மதத்தை அளவுகோலாக்கி, சாதி ஒடுக்கலுக்கு எதிராக வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப்படலாமா? மேற்கண்ட கேள்விகள் முதல்வரின் கடிதத்திற்கு ஆதரவாக கூடுதலாகவே எழுகின்றன. மத்திய அரசு தலித் கிருத்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும்வரை, தமிழ்நாடு அரசு அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், இடைக்கால நிவாரணம் போல
சேர்க்கக்கூடாதா? இவையெல்லாம் விவாதங்களின் மத்தியில் வந்தி ருக்கின்ற வினாக்களாக இருக்கின் றன.

Friday, April 2, 2010

இடதுசாரிகள் கலாச்சார காவலர்களாக மாறுகிறார்களா?

சமீபத்தில் கேரளாவில் நடந்து வரும் பல்வேறு பிரச்சனைகள், நாட்டையே ஈர்க்கும் தன்மையுள்ளதாக இருக்கிறது. அவற்றில் பெரிய இடதுசாரி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளேயே இருக்கும் இருபெரும் அரசியல் சக்திகளுக்குள் நடக்கும் மோதல், அதில் ஒரு குழுவினரால் நடத்தப்படும் ஒரு காட்சி ஊடகம், இன்னொரு குழுவிற்கு ஆதரவாக செய்தி வெளியிடும் மற்றொரு காட்சி ஊடகம், பண்பாட்டுத் தளத்தில் பிரபல கவிஞர்களுடன் மோதல், பிரபல எழுத்தாளரை குற்றம்சாட்டும் தலைவர், மதுபோதையை அதிகமாக பயன்படுத்துவதாக ஊடகங்கள் கொடுத்த விமர்சனம் ஆகியவற்றின் மூலம் கேரளா சமீப வாரத்தில் அதிகமாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக சமீபத்தில் கேரளாவிற்கு வந்த பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசுவதற்கு மறுத்து விட்டதாக ஒரு மலையாள இதழ் எழுதியிருக்கிறது. அருந்ததிராய் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண். பல பிரபல பெண்களைப் போலவே, அவரும் கேரளாவை விட்டு வெளியே வந்த பிற்பாடு தான் பிரபலமடைந்திருக்கிறார். அங்கேயுள்ள ஊடகவியலாளர்களை, தன் முகத்தைப் பார்த்து பேசுவதற்குப் பதில், மார்பை பார்க்கிறார்கள் என்பதாக விமர்சித்ததாக ஒரு ஏடு எழுதியுள்ளது. அவர் அப்படி பகிரங்கமாக விமர்சித்தது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இத்தகைய விஷயத்தில் கேரளா ஒரு ஆரோக்கியமற்ற சூழலை தக்க வைத்திருக்கிறது என்பதாகவும் கூறப்படுகிறது. பாலியல் முதிர்ச்சியை அந்த மாநிலத்தின் மக்கள் எப்போது பெறப்போகிறார்கள். இவ்வாறான கேள்விகளை கேரளாவின் பிரபல மலையான எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சகாரியா கூறியுள்ளதாக, மலையாள வார இதழான கலாகோமதியில் எழுதியிருக்கிறார்கள்.
இதுவரை கேரள முதல்வரான வி.எஸ்.அச்சுதானந்தத்தின் குழுவினருக்கும், கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராய் விஜயன் குழுவினருக்கும் இடையே உள்ள மோதல் தான் அரசியல் ரீதியாக பிரபலமாக வெடித்துக் கொண்டிருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த சில மோதல்கள் அரசியல், சமூகம், பண்பாடு ஆகிய தளங்களிலும் எதிரொலிக்கிறது.
சமீபத்தில் ராஜ்மோகன் உன்னிதான் என்ற ஒரு காங்கிரஸ் தலைவர் வீட்டை உடைத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளே புகுந்து, அந்த தலைவர் ஒரு பெண்ணுடன் இருந்ததை கையும், களவுமாக பிடித்துள்ளனர். இதை எழுத்தாளர் சகாரியா கலாச்சாரக் காவலர்களின் வேலை என்பதாக விமர்சித்தார். அதற்காகவே சகாரியா கலந்துக் கொண்ட ஒரு இலக்கிய விழாவில், பையனூரில் அவர் வாலிபர் சங்கத்தினரால் தாக்கப்பட்டார். இதுபற்றி சகாரியா கொடுத்த நேர்காணலில், அத்தகைய செயல்பாட்டை கேரளாவில் தான் காண்பதாக விமர்சித்திருக்கிறார். டெல்லியில் தான் வாழ்ந்ததாகவும், சென்னையில் வாழ்ந்ததாகவும் எங்குமே இப்படியொரு பாலியல் பசியைத் தான் பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மற்றவர்களுடைய விவகாரங்களுக்குள் தலையை நீட்டி, பிரச்சனையை உருவாக்குவதை தான் கேரளாவில் தான் கண்டுள்ளதாக அந்த பிரபல எழுத்தாளர் கூறுகிறார். ஊடகங்களிலும், அறிவு ஜீவிகள் மத்தியிலும், காவல்துறையிலும், அரசியல் கட்சிகளிலும் கூட இப்படிப்பட்ட பாலியல் வக்கிரங்கள் இருப்பதாக சகாரியா குற்றம்சாட்டி, அதற்கான காரணங்களை மதவழி பின்னணிகளாக எடுத்துக் கூறியுள்ளார். அதற்கு இரண்டு உலகப் போர்களை நடத்திய ஐரோப்பா, நவீன தன்மைக்கு வந்துவிட்டதாகவும், ஆனால் பின்தங்கிய நிலையிலுள்ள மத அமைப்புகள் கேரளாவில் தெளிவு பெறவில்லை என்றும் அவர் கூறுகிறார். ஸ்ரீநாரயண குரு இதுபோன்ற உறவுகளில் ஒரு தாராளப் பார்வைக் கொண்டிருந்தார் என்றும், அதற்குப் பிறகு வந்த இடதுசாரிகளும் பாலியல் பற்றிய வரட்டுத்தனத்தை கொண்டிருக்கவில்லை என்றும், அவையெல்லமே தனிநபர் சுதந்திரம், கருத்தியல் சுதந்திரம் மற்றும் சமூக மாற்றம் பற்றிய தன்மைத்தவை என்றும் அவர் கூறினார்.
அத்தகைய கடந்த காலம் இப்போது மாறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தொலைநோக்குப் பார்வையில்லாத புதிய தலைவர்களால் பிரச்சனைகள் வருவதாக எடுத்துச் சொன்னார். அதற்கு இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு காரணம் என்றும் குற்றம் சாட்டினார். ஆண், பெண் உறவுகளை பொறாமையுடனும், வக்கிரத்துடனும் காண்பதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று கடுமையாக விமர்ச்சித்திருந்தார். பையனூரில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் தான் பேசியதற்காக, வாலிபர் சங்கத்தினர் தன்னிடம் உரசியதையும், அதையே பின்னர் பினராய் விஜயன் தனக்கெதிராக விமர்சித்ததையும் சகாரியா கடுமையாக சுட்டிக்காட்டியிருந்தார்.
அரசியலும், மதமும் அங்கே கழிசடையாகப் போய்விட்டது என்றும், சாதியம் வளர்கிறது என்றும், நாராயணகுருவாலும், கம்யூனிஸ்ட்களாலும் தூக்கியெறியப்பட்ட பழக்கங்கள் மீண்டும் தலையெடுத்துள்ளன என்பதாகவும் அந்த எழுத்தாளர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக அருந்ததிராய் பேசுவதாக குறிப்பிடும் பினராய் விஜயன், அவரை ஏகாதிபத்திய கைக்கூலி என்று கூறும் அளவுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் கடந்த நிதியாண்டில் கேரளா அதிகமான அளவுக்கு மதுவை பயன்படுத்தியுள்ளது என்பதாக அங்கிருந்து வெளிவரும் பிரபல ஏடு ஒன்று கூறியுள்ளது. அதாவது ரூ.5,500 கோடிக்கு மது விற்பனையை அவர்கள் கணக்கிடுகிறார்கள். சென்ற நிதி ஆண்டான 200809 ஆண்டின் ரூ.4,631 கோடிக்கு மதுவிற்பனை இருந்தது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதும் அவர்களது புள்ளிவிவரம். இதைவைத்து கேரள மாநிலத்தை அவர்கள் மதிப்பீடு செய்தார்கள் என்றால், ரூ.14,000 கோடி ரூபாய்க்கு மது விற்பனை மூலம் ஈட்டியுள்ளதாக காட்டும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வைத்து, நாம் எந்தவிதத்தில் மதிப்பீடு செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் பி.பி.சி. தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ள புள்ளி விவரங்கள் மறுக்கப்பட முடியாதவை. இந்தியாவில் இருக்கின்ற குடிகாரர்களிலேயே, அதிகமாக குடிப்பது கேரளாவில் தான் என்பதாக ஒரு புள்ளிவிவரத்தை அது கொடுத்துள்ளது. தந்தை குடிக்கும்போது, இணைந்து குடித்து வளர்ந்த மகனைப் பற்றிய கதையை அது கூறுகிறது. பெரும் குடிகாரனாக மாறியவர், கல்வியிழந்து, வேலையிழந்து, மறுவாழ்வு இல்லங்களுக்கு 32வயதிலேயே எடுத்துச் செல்லப்பட்டதையும், போதைத் தேவைகளுக்காக தெருவில் பிச்சைக்காரன் போல் நடமாடியதையும் அந்த ஊடகம் ஒரு கதையாக எடுத்துக் கூறியுள்ளது. மது அருந்துவது கேரளாவில் இருக்கும் ஒரு நோய் என்பதாக அது சுட்டிக்காட்டுகிறது. பலர் மனநிலை காப்பகங்களில் போய்ச் சேர்ந்துள்ளதையும் எடுத்துச் சொல்லுகிறது. கேரளாவில் ரம், பிரான்டி ஆகியவற்றிற்கு தான் அதிக கிராக்கி இருக்கிறது என்பதாகவும் குறிப்பிடுகிறது. மாநில மதுவாரியம் 7 நாட்களும் செயல்படும் 337 மதுக்கடைகளை வைத்திருப்பதாக அந்த அறிக்கைக் கூறுகிறது. ஒவ்வொரு கடையிலும், 80,000 பேர் வாடிக்கையாளர்கள் என்பதாகவும் கணக்கிடுகிறது. 3கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தில் ரூ.4,500 கோடிக்கு இந்த நிதியாண்டில் மது விற்பனை எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த புள்ளிவிவரம் அடுக்குகிறது.
மது அருந்துபவர்களுக்கு அல்லது பழக்கமானவர்களுக்கு போதுமான உணவு கிடைக்குமானால், அது அவர்கள் உடலைப் பாதிக்காது என்று விளக்கம் கூறி, அப்படிப்பட்ட சூழல் பெருவாரியான மக்களுக்கு அங்கு கிடைக்கவில்லை என்பதனால், அவர்கள் மூழ்கி வருவதாகவும் அந்த செய்தி கூறியுள்ளது. போதையினால் மட்டுமே சென்ற ஆண்டு சாலை மரணத்தில் 4,000 பேர் இறந்ததாகவும் எடுத்துக் காட்டுகிறது. மது போதையிலிருந்து தெளிவுக்குக் கொண்டுவர ஒரு சிறப்பு மருத்துவமனை உருவாக்கும் திட்டம் இருப்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. குடிப்பது கூட ஒரு சமூகப் பிரச்சனைத் தான் என்பதாக அந்த செய்தி எடுத்துச் சொல்கிறது. மதுவிலக்கு அறிவித்தால் அதுவே குடிவிற்பவர்களையும், குடிப்பவர்களையும் ரகசியமாக செயல்படும்படி ஆக்கிவிடும் என்றும் வாதம் செய்கிறார்கள்.
மது எனும் செயற்கைப் போதை ஏறுவதற்கு முன்பே, ஆணாதிக்கம் மற்றும் கலாச்சாரக் காவலர்கள் எனும் இயற்கை போதை ஏறியிருப்பதற்கான சூழல் அங்கே கோரமுகத்தைக் காட்டினால், எங்கேதான் அதன் அடிப்படை முகத்தை காட்டாமல் இருக்கிறது என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.