Wednesday, June 30, 2010

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து தாக்குதலா?

ஒரு வாரமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வருகின்ற செய்திகள் எதுவுமே ஆரோக்கியமாக இல்லை. காட்சி ஊடகங்களுக்கு சுடச் சுட செய்திகள் கிடைக்கின்றன என்பது தவிர, வன்முறையற்ற எந்த ஒரு செய்தியும் அங்கிருந்து வரவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள சோப்பூர் என்ற நகரில் ஒரு இளைஞர் மத்திய சிறப்பு காவல்படையின் தோட்டக்களுக்கு பலியானார். அதையொட்டி அந்த நகரின் அருகே இருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் சோப்பூர் நகரை நோக்கி கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினர். இதற்கிடையில் மத்திய சிறப்பு காவல்படை ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ள பகுதிகளில், அந்த குறிப்பிட்ட நேரத்தில் யார் வெளியே வந்தாலும் உடனடியாக சுட்டுக் கொல்வார்கள் என்பது இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் பழக்கம். ஆனால் ஹூரியத் மாநாடு என்று சொல்லப்படும், தேர்தல் போட்டியிடாமல் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்காக போராடக்கூடிய மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு, இந்த ஊரடங்கை எதிர்த்து தெருவுக்கு வந்து போராட மக்களை அறைகூவியிருந்தது. அதையொட்டியே மக்கள் ஆயிரக்கணக்கில் தெருவுக்கு வந்தார்கள் என்பது அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. ஊர்வலமாக வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டவுடன் துணை ராணுவப்படையினர் ஷாகார் சினிமா கொட்டகை அருகே, ஊர்வலத்தைப் பார்த்து பகிரங்கமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதையொட்டியே எதிர்ப்பாளர்கள் கலக்கமடைந்து கலவரமாக வெடித்துள்ளது.
இதே போல 20 ஆண்டுகளுக்கு முன்னால் அஸ்ஸாம் மாநிலத்தில், வங்காளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து மாணவர்கள் ஆசு என்ற மாணவர் அமைப்பின் மூலம் அணி திரண்டு போராடினார்கள். அப்போது அங்கே அனுப்பப்பட்ட துணை ராணுவப்படை ஊரடங்கு உத்தரவு ஒன்றை அறிவித்திருந்தது. அதை எதிர்த்து அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பு என்று கூறப்படும் ஆசு அமைப்பினர், மக்கள் ஊரடங்கு என்ற எதிர்முழக்கத்தை முன்வைத்தனர். வயோதிகர்கள் முதற்கொண்டு குழந்தைகள் வரை, தெருவுக்கு வந்து அமைதியான வழியில் ஊர்வலமாக சென்றனர். அதிர்ச்சியடைந்த துணை ராணுவத்தினரோ, பின்வாங்கிக் கொண்டனர். அதுவும் கூட ஒரு தேசிய இனத்தின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் தான். அதிலும் பெரும்பான்மை மக்கள் தான் திரண்டு தங்களுடைய நிலத்தை காப்பாற்ற தெருவுக்கு வந்தார்கள்.
அதே போல காஷ்மீரிலும் பெரும்பான்மை மக்கள் தங்களுடைய நிலத்தை காப்பாற்றுவதற்காக, ஆக்கிரமிப்பு போல வந்திருக்கும் துணை ராணுவப்படையை எதிர்த்து ஊரடங்கை மறுத்து தெருவுக்கு வந்துள்ளனர். ஆனால் காஷ்மீர் பிரச்சினை இந்திய ஆட்சியாளர்களுக்கு கவுரப் பிரச்சினையாக வும், அண்டை நாடான பாகிஸ்தானுடன் பகைத்துக் கொள்வதற்கான துருப்புச் சீட்டாகவும், டெல்லி மனோபாவத்தில் விட்டுக் கொடுக்க முடியாத பிரச்சினையாகவும் இருக்கிறது. அதனால் தானோ என்னவோ, டெல்லியின் விரல் அசைப்பு, துணை ராணுவப்படையில் பகை முகம் காட்டும் நிலைக்கு தொடர்ந்து தள்ளி வருகிறது. ஹூரியத் மாநாடு அறிவித்தவுடன் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் தெருவுக்கு வருகிறார்கள் என்றால், பொதுமக்களுடைய உணர்வுகளை அந்த அமைப்புதான் சரியாக பிரதிபலிக்கிறது என்று அர்த்தம்.
தேர்தல் மூலம் காஷ்மீரில் முதலமைச்சராக இருக்கும் உமர் அப்துல்லாவோ, மத்திய காங்கிரஸ் தலைமையோ கொண்டுள்ள மக்கள் செல்வாக்கை விட, ஹூரியத் மாநாடு மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பது இதன் மூலம் தெரிகிறது. ஹூரியத் மாநாடு அமைப்பினர் ஆயுதம் தாங்கி போராடுபவர்கள் அல்ல. ஆனாலும் காஷ்மீரின் சுய நிர்ணய உரிமைக்காக அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். அவர்கள் பின்னால் மக்கள் நிற்பதால், காஷ்மீர் மக்களும் சுய நிர்ணய உரிமையை வேண்டி நிற்கிறார்கள் என்பது புலனாகிறது.
காஷ்மீர் மாநிலத்தின் சட்டத்தையும், நாடளுமன்ற விவகாரத்தையும் கவனிக்கின்ற அமைச்சர் அலி முகமது சாகர், ஞாயிற்றுக் கிழமை நடந்த வன்முறைகளை வித்தியாசமாக வர்ணிக்கிறார். மத்திய சிறப்பு காவல் படையினர் சரியான தலைமைக் கட்டளை இல்லாமல், கட்டுப்பாட்டை இழந்து போய்விட்டனர் என்று அந்த முக்கிய அமைச்சர் கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காஷ்மீருக்கு வருகை தந்து, மத்திய சிறப்பு காவல் படையை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார். மீண்டும் சிதம்பரத்தின் அமைச்சரவையின் கீழே உள்ள அரசப்படைகளின் கட்டுப்பாடின்மை அம்பலமாகியுள்ளது. 4 மாதங்களுக்கு முன்னால் காஷ்மீர் சென்ற ப.சிதம்பரம், காவல்துறை கைகளில் சட்ட ஒழுங்கு கொடுக்கப்பட்டு, துணை ராணுவம் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது புதிய ஊடக பேட்டியில், ஹூரியத் மாநாட்டிற்கும், மத்திய உள்துறைக்கும் உள்ள பேச்சுவார்த்தைப் பற்றி சில செய்திகளை அம்பலப்படுத்துகிறார். அமைதியான வழியில் தூதரகப் பேச்சு என்ற பெயரில் ப.சிதம்பரம் அழைத்த பேச்சு வார்த்தைப்பற்றி கூறுகிறார். அத்தகைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஹூரியத் மாநாடு அமைப்பினர், பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொண்டுதான் செயல்படுகிறார்கள் என்று உமர் அப்துல்லா ஒருபுறம் முத்திரைக் குத்தினாலும், இன்னொரு புறம் பாகிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடைய முயற்சிக்குப் பிறகு, காஷ்மீர் பேச்சு வார்த்தையும் பலன் தரும் என்று கூறுகிறார். தற்போது உள்துறை அமைச்சருடன் ஹூரியத் மாநாடு அமைப்பினர் பேச்சு வார்த்தை தொடர்கிறார்களா என்ற கேள்விக்கு மௌனம் சாதிக்கிறார். மத்திய அரசின் பேச்சு வார்த்தை அணுகுமுறைப் பற்றியும், அதற்கு வருகின்ற தடங்கல்கள் பற்றியும் இருக்கும் ரகசியங்களை அரசியலிலிருந்து ஓய்வு பெற்றப்பின் எழுதுவேன் என்கிறார். அதே சமயம் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, காஷ்மீர் காவல்துறைதான் முன்னால் நிற்கவேண்டும் என்றும், துணை ராணுவம் பின்னால்தான் நிற்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு எதிரான செயல்பாடுகள்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்து வருகின்றன.
சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கிலானி இதுபற்றி பேசினார். அவர் நாடாளுமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலையானவர். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அறிவுஜீவி. அவர் இந்தியாவில் மக்கள் எப்படி சிந்திக்கவேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானித்து, அதற்கு தகுந்தாற்போல் செய்திகளை திருப்பி விடும் ஊடகங்களின் காலம் இது என்று கூறுகிறார். காஷ்மீரில் ஜம்மு பகுதி இந்து மதச்சார்பான மக்கள் அதிகம் வாழும் பகுதி. அங்கே அரசாங்கம் கிராம பாதுகாப்பு குழுக்களை கட்டியுள்ளது. அவர்கள் ராணுவத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்களில் யாரையாவது காஷ்மீர் போராளிகள் தாக்கி விட்டால், உடனடியாக இந்து மக்களை போராளிகள் தாக்கி விட்டார்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அதன் மூலம் சுய நிர்ணய உரிமைக்கான இயக்கத்தை, இந்து மக்கள் எதிர்ப்பு இயக்கம் போல சித்தரித்து விடுகிறார்கள் என்று கூறினார். அந்த கிராம பாதுகாப்பு குழுக்களிலும் முக்கியமாக முன்னாள் ராணுவத்தினர் இருக்கிறார்கள். அவர்களை அரசு ஆயுதம் தாங்கியவர்களாக மாற்றி விடுகிறது. காஷ்மீரில் இறங்கி இருக்கும் அரச படையில் 99% கவனமாக இந்துக்களாக இணைக்கப் பட்டுள்ளனர். 40 ஆண்டுகள் அமைதி வழி போராட்டத்தின் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான இயக்கம் நடந்தது. மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்ததாதனால், இளைஞர்கள் எல்லா நாட்டிலும் நடப்பது போல, ஆயுதம் தாங்கிய வழியை தேர்வு செய்தார்கள். தங்களது குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகியவற்றை விட்டு விட்டு, காடுகளுக்கு சென்று கொரில்லா போராளிகளாக மாறியுள்ளார்கள் என்று பேராசிரியர் அப்போது கூறினார். தங்கள் மக்கள் மதிப்புடன் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்காக, போராளி ஆணும், பெண்ணும் தங்கள் உயிரைக் கொடுக்க தயாராக இறங்கியிருக்கிறார்கள் என்று அப்போது கூறினார். இந்தியாவில் நீதித்துறை உட்பட அனைத்து நிறுவப்பட்ட அதிகார நிறுவனங்களும் உடைந்து போனப்பிறகு, ஜனநாயக மதிப்பீடுகளை எங்கிருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்று சூடாகவே அப்போது பேராசிரியர் சென்னைவாசிகளைப் பார்த்து, கேள்வி கேட்டார். நீதி கிடைக்காமல் அமைதி எப்படி வரும் என்று வினவினார். சுடுகாட்டில் நிலவும் அமைதிதான் இவர்களது எதிர்பார்ப்பா என்று கேட்டார்.
2005ம் ஆண்டிலிருந்து இப்போது வரை காஷ்மீரில் அரசப்படைகள் நடத்திய 350 மீறல் குற்றங்களை வழக்குப்போட, அங்குள்ள அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. இதுவரை கிடைக்கவில்லை அதே சமயம் சுதந்திரமாக கருத்துச் சொல்பவர்களுக்கு எதிராக யு.ஏ.பி.ஏ. என்ற சட்ட விரோதமாக கூடுதல் தவிர்ப்பு சட்டம் என்பது பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற தவறுகளை எதிர்த்து, மற்ற மாநிலத்தில் உள்ள மக்கள் கேள்வி கேட்காவிட்டால், அவர்களது மௌனம் அத்தகைய தவறுகளுக்கு கொடுக்கின்ற ஆதரவு என்றும் பேராசிரியர் கடுமையாகவே கூறினார். இதுதான் நமக்கு நினைவுக்கு வருகிறது. ஈழத்தில் இன அழிப்பை அனுபவித்து துவண்டு போன தமிழ் நாட்டு மக்கள், காஷ்மீரில் நடத்தப்படும் இன ஒடுக்கலை எதிர்த்து கேள்வி கேட்கப் போகிறோமா? அல்லது மௌனத்தின் மூலம் ஆதரிக்கப் போகிறோமா? இதுதான் நமக்கு எழும் கேள்வி.

No comments:

Post a Comment