Wednesday, June 30, 2010

பழங்குடி நிலப்பறிப்பும், ராணுவ உயிர்பறிப்பும்

செவ்வாய் கிழமை சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில், மத்திய சிறப்பு காவல் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் அரசுப் படையினர் பலியாகினர். இது போன்ற தொடர்ந்த உயிரிழப்புகள் இந்திய அரசை உலுக்கிவருகிறது. தனது தளபதிகளையும், அதிகாரிகளையும் இழந்தார் துணை ராணுவம் மனஉறுதியை இழக்கத் தொடங்கியுள்ளது. அபுஜ்மத் என்ற 40,000 சதுர கி.மீ. உள்ள காடுகளின் வாயில் பகுதியாக கருதப்படும் நாராயண்பூர்ஒர்சா சாலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அந்த காட்டுபகுதியை நக்சல்பாரிகளின் விடுதலைப் பகுதி என்று அழைக்கிறார்கள். பஸ்தர் பகுதியில் உள்ள தங்கள் முகாமிற்கு திரும்பி வரும் போது அந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதியம் 3 மணிக்கு நடத்தப்பட்ட அந்த தாக்குதலில், நவீன ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த மாவட்டத்தின் காவல் துறை அதிகாரிகள் வேறு ஒரு கதையை சொல்கிறார்கள். முக்கிய இடமான ஜரகதியில் ஒரு ராணுவ முகாமை நிறுவ வேண்டும் என்று தாங்கள் கூறியதாகவும், அதை துணை ராணுவம் மறுத்துவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் துணை ராணுவத்தினர் அந்த இடத்தில் முதலில் ஒரு கட்டிடத்தை உருவாக்கி அதில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும் என்று விரும்பியதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள். மத்திய சிறப்பு காவல்படையை, தொடர்ந்து மாவோயிஸ்டுகளிடம் பலியாகி வருவதாக காவல் துறையினர் அந்த மாநிலத்தில் குறைக் கூறுகின்றனர். காடுகளில் பணியாற்ற அனுபவம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் துணை ராணுவத்தினரை காவல்துறையினர் விமர்சிக்கிறார். பஸ்தர் பகுதியில் உள்ள காடுகளில் சோதனை நடவடிக்கைகளுக்கு செல்லும் போது, துணை ராணுவத்தினர் உளவுத்துறையினர் கூறும் கருத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் மோதல் பகுதிகளிலிருந்து, நேரடியாக பஸ்தர் பகுதிக்கு பெருவாரியான மத்தியச் சிறப்பு காவல்படையினர் கொண்டுவந்து தள்ளப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு இடைக்காலத்தில் ஒய்வு கூட கொடுக்கப்படவில்லை என்றும், அதனால் ஓய்வின்றி சோர்வாக வந்திறங்கியுள்ளனர் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.
சத்திஸ்கர் மாநிலத்தில் இருக்கும் காவல்துறைக்கும், துணை ராணுவத்திற்கும் இடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. கண்ணிவெடி புதைக்கப்பட்ட இடங்களில், அவற்றை அகற்றாமல் உள்ளே நுழைவது அவர்களுக்கு பழக்கமாகயிருக்கிறது. பஸ்தர் பகுதி, 5 மாவட்டங்களை கொண்டது. பஸ்தர், நாராயண்பூர், கான்கெர், பிஜபூர், தன்டேவாடா ஆகிய மாவட்டங்களை கொண்டது. அது தான் மாவோயிஸ்டுகளுடைய மைய பகுதியாகவும் இருக்கிறது. 80ன் கடைசியில் இருந்து கொரில்லா போராட்டப் பகுதியாக அது இருக்கிறது. பஸ்தர் பகுதியின் 40,000 சதுர கி.மீ. காட்டுப்பகுதியில், 25,000 சதுர கி.மீ. வரை மாவோயிஸ்டுகள், கண்ணி வெடிகளை புதைத்துள்ளனர் என்று சத்திஸ்கர் மாநில காவல்துறை தலைவர் விஸ்வரன்ஜன் கூறியுள்ளார். இதுவரை அந்த மாநிலத்தில் மத்திய சிறப்பு காவல்படையை சோர்ந்த 14 பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தெற்கேயுள்ள பஸ்தர் பகுதியில் மட்டும் 13 நிறுத்தப்பட்டுள்ளன. சுர்குஜா என்ற ஜார்கன்த் எல்லையை ஒட்டிய வடக்கு மாவட்டத்தில் ஒரு பட்டாலியன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு ஆயுதம் தாங்கிய அரசுப்படைகள் குவிக்கப்பட்டாலும் பழங்குடி மக்களின் காட்டுப்பகுதிக்குள் செல்வது என்பது எளிதாகயில்லை.
மேற்கண்ட பகுதிகளில் பழங்குடி மக்களுக்கு சொந்தமான காடுகளையும், நிலங்களையும் அவர்களிடம் இருந்து பறித்து, தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பதற்கு துணைபோனவர்கள் யார் என்பது இப்போது அம்பலமாகிறது. இந்தியாவின் சுற்றுசூழல் மற்றும் வன இலாக்கா தான், காட்டுநிலங்களை பழங்குடி மக்களிடமிருந்து பறித்தெடுக்க உதவிகரமாக இருந்திருக்கிறது.
காட்டு நிலங்கள் மீதான மத்திய வன அமைச்சரவையின் கட்டுப்பாடு, லட்சக்கணக்கான மக்களின் வீடுகள், வாழ்வாதாரம், வாழ்க்கை ஆகியவற்றின் மீது அதிகமான அதிகாரத்தையும் அதன் மூலம் அநிதியையும் இழைத்துள்ளது. 1980 ஆம் ஆண்டின் காடு வளர்ப்புச் சட்டம், இந்தியாவில் இருக்கின்ற நிலங்களில் 23% காடுகள் என்று பதிவு செய்துள்ளது. 2006ம் ஆண்டிலிருந்து இன்று வரை அன்றைய மத்திய பிரதேசத்திலும், இன்றைய சத்திஸ்கரில் மட்டும் கொள்கை ரீதியாக, சட்ட விரோதமாக பல்வேறு திட்டங்களுக்கு 15,411 ஹெக்டேர் காட்டு நிலங்களை இந்த அமைச்சகம் கொடுத்துள்ளது. அந்த வட்டாரத்தில் வாழும் பழங்குடி மக்கள் உட்பட, குடியிருக்கும் மக்களிடம் அவர்கள் பயன்படுத்தும் அல்லது சார்ந்து இருக்கும் நிலங்களை பறித்துக் கொடுப்பது பற்றி கலந்தாலோசிக்க வில்லை. 2009ம் ஆண்டு ஆகஸ்டு 3ம் நாள் இந்த வனஇலாகா அமைச்சகம் நடந்ததெல்லாம் சட்ட விரோத மென்றும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையை வெளி யிட்டது. ஆனாலும் வனப்பகுதிகளில் நிலப்பறிப்பு நின்றபாடில்லை. ஒவ்வொரு ஹெக்டேர் நிலம் வனங்களிலிருந்து மாற்றப்படும் போதும், அதற்கு சமமாக வருவாய் நிலத்திலிருந்து ஒரு ஹெக்டேரோ அல்லது கைவிடப்பட்ட வனப்பகுதிகளிலிருந்து 2 ஹெக்டேரோ, புதிய மரங்களை நடுவதன் மூலம் திருப்பி அளிக்கப்படவேண்டும் என்பதாக அந்த வனப்பாதுகாப்பு சட்டம் கூறுகிறது. இது ஆவண அளவில் நல்லதாக தோன்றினாலும், இயற்கை வனங்களுக்கு மாற்றாக ஒரு மரத்தை நடுவது என்பது பல்லுயிர் சூழலின் இழப்பை சரிகட்டாது. அதே போல நீர் நிலைகளின் இழப்பை ஈடுகட்டாது. தோட்டங்களும் கூட புதிய நிலப்பறிப்பை ஏற்படுத்தவே செய்யும். அது திட்டங்கள் பெயரில் இல்லாமல், வனத்துறை பெயரில் நடைபெறும். எந்த வகையிலும் வாழ்ந்து வரும் மக்கள் தங்களது நிலங்களை இழப்பார்கள்.
புதிய தோட்டங்கள் வனவாழ் மக்களது அல்லது கிராம பொது நிலத்தையோ பறிப்பதன் மூலம் தான் நடைபெறும்.
1980 முதல் 2009 வரை இது போன்ற ஈடுகட்டும் தோட்டங்கள் 11,83,472 ஹெக்டேர் நிலத்தில் உருவாக்கப் பட்டுள்ளன. அதில் 5,54,635 ஹெக்டேர் வருவாய் துறை நிலத்தி லிருந்து வனத்துறைக்கு எடுக்கப் பட்டது. இவை அனைத்துமே மத்திய பிரதேசத்திலும், சத்திஸ்கரிலும் நடந்த சட்ட விரோத திருப்பங்கள். கூட்டு வன மேலாண்மை என்ற முறையின்படி அதிகமான நிலங்களை கிராம மக்களிடமிருந்து பறித்து எடுத்தல் தொடர்கிறது. வன இலாகா காவலர்களால் தலைமை தாங்கப்பட்டு, பங்களிப்பு திட்டத்தின்படி வனச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சட்டமாக் கியுள்ளனர். ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு மரத்திலும், வருமானத்திலும் பங்கு கொடுப்பதற்கு பதில், அவர்களது இலவசமான உழைப்பை பெற்றுக் கொள்கிறார்கள். கூட்டு வன மேலாண்மைக் குழுக்கள் முழுமையாக ஒப்பந்தக்காரர்களையும், வர்த்தகர்களையும், மேட்டுக்குடி களையும் மற்றும் வனத்துறைக்கு வேண்டியவர் களையும் கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் வனங்களில் வாழ்ந்து வரும் மக்கள் நிலங்களிலிருந்து அந்நியப்படுத்தப் படுகிறார்கள். அந்த திட்டத்திற்காக 2008 லிருந்து 2010 வரை கொடுக்கப்பட்ட ரூ. 1056.74 கோடிகள் மேற்கண்ட லாபநோக்க சக்திகளால் கொள்ளை யடிக்கப் பட்டுள்ளது.
காடுகளை அழிப்பது மீண்டும் வனவாழ் மக்களது வாழ்க்கை அழித்து வருகிறது. 2009ம் ஆண்டு மாநில அரசாங்கங்களால் ரூ.5000 கோடி அனைத்து நாட்டு கடனாக பெறப் பட்டுள்ளது. அவற்றை அமுல் படுத்த கூட்டு வன மேலாண்மை பயன்படுத்தப் படவேண்டும். அது முழுமையாக வட்டார மக்களுக்கு எதிராகவே பயன்படுகிறது. இவ்வாறு வனத்துறை அமைச்சகம் பறிக்கப்பட்ட நிலங்கள் பழங்குடிகளை, மாவோயிஸ்டுகளிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது. அதன் விளைவாக அங்கே செல்லும் துணை ராணுவத்தினரின் உயிர்கள் பறிக்கப் படுகின்றன. நிலங்களை பறி கொடுத்த பழங்குடிகள், அரசப்படைகளின் உயிர்களை பறித்தெடுக்கிறார்கள் என்ற எதார்த்த உண்மையை எப்போது அரசு புரிந்து கொள்ளும் என்று தெரியவில்லை.

2 comments:

பல்லவர்கள் said...

தங்களை தொடர்ச்சியாக வின் தொலைக்காட்சி வழியாக பார்த்து வருகிறேன்.உங்களுடைய கருத்துக்கள் என்னை விழிப்படைய செய்கிறது.

Maniblog said...

நன்றி. ஈஸ்வரி. தங்களைப்போன்றோர் தரும் உற்ச்சாகம், மேலும், மேலும் என்னை எழுதவும், பேசவும் வைக்கிறது.தங்கள் ஆதரவுக்கு நன்றி.

Post a Comment