Saturday, July 24, 2010

இங்கொரு போபால் இனியும் வேண்டாம்

கடந்த வெள்ளி இரவு சென்னை அருகே திருபெரும்புதூரிலிருந்து வந்த செய்தி, அதிர்ச்சியை தந்தது. அங்கே ஒரு ஆலையில் நச்சு கசிவு வெளியாகி, நூற்று இருபது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வாந்தி எடுத்தனர். மருத்துவமனையில் காதிலிருந்து ரத்தம் கசிந்ததாக கூறுகின்றனர். விபத்து ஏற்ப்பட்ட ஆலை, சீனா நாட்டுக்காரர் ஆலை. சீனாவைச்சேர்ந்த அந்த பெரிய நிறுவனம், சீன நாட்டில் பெரிய அளவில் பெயர் பெற்ற ஆலை. அது ஒரு பன்னாட்டு மூலதன ஆலை என்று பிரபலம் அடைந்த நிறுவனம். சீன மக்கள் குடியரசுக்கு எதிரான சீன நாடாக உலகம் புரிந்துள்ள தைவான் நாட்டிற்கு சொந்தமான பன்னாட்டு மூலதன ஆலை அது. தைவானை சார்ந்த அந்த ஆலையில், ஹய்பேட் என்று கூறப்படும் காதில் வைத்து பாட்டு கேட்கும் இயந்திரம், அப்போலோ போன் என்ற பெயரில் உற்பத்தியாகிறதாம். அங்கு எப்படி நச்சு வாயு கசிந்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்த செய்தியை ஊடகங்களுக்கு வரவிடாமல் செய்வதில், ஆலை நிர்வாகம் அதிக கவனம் எடுத்ததாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட நூற்று இருபது தொழிலாளர் களும், அருகே உள்ள ஜெயா மருத்துவ மனைக்கு எடுத்து செல்லப்பட்ட தாகவும், அங்கே இருபத்தைந்து தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்ததாகவும், அதையொட்டி பூந்தமல்லி சுந்தர் மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றுக்கு அவர்களை எடுத்து சென்றுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் ஆலை நிர்வாகமும், காவல்துறையும் சேர்ந்து செய்திகளின் தாக்கம் வெளிவந்துவிடாமல் தவிர்க்க, ஊடகங்களுக்கு முறையான செய்திகளை செல்லவிடாமல் இருந்தனர் என்ற கருத்தும் நிலவியது. இந்த குறிப்பிட்ட நிறுவனம் பற்றி கிடைக்கும் செய்திகள் ஆவலை அதிகப்படுத்துகின்றன. அதாவது இந்த குறிப்பிட்ட சீன நிறுவனம், ஏற்கனவே சீன நாட்டில் மிகவும் பெயர் பெற்ற கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது.
உலகிலேயே அதிகமான அளவில் மின்னணு மற்றும் கணினி உறுப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெயரை பெற்றதுதான் இந்த பாஃக்ஸ்கான் நிறுவனம். மற்ற நாடுகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில், உற்பத்தியை முக்கியமாக இது செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்துக்கு, மக்மினி, ஐபெட், ஐபாட், ஐபோன் ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுக்கிறது. அமெரிக்கா கணினி நிறுவனங்களான டெல்,போன்றவற்றுக்கு பல்வேறு பொருள்களை தயார் செய்து கொடுக்கும் நிறுவனம் இது சில பாகங்களை .மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும், மோட்டாரோலா, நோக்கியா ஆகியற்றுக்கு செல்லுலார் போன்களையும் தயார் செய்து கொடுக்கும் நிறுவனம். 1974 ல் பிளாஸ்டிக் பொருள்களை தயார் செய்யும் நிறுவனமாக இது தொடங்கியது.தைவான் பங்கு சந்தையில் 1991 வரை இந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமாக இருந்தது. 1988 ல் தனது முதல் உற்பத்தி ஆலையை சீனாவில், ஷென்சென் பிராந்தியத்தில் தொடங்கியது. அதுதான் இப்போது இந்த நிறுவத்தின் மிகப்பெரிய ஆலையாக 420000 தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. அந்த தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் இயங்குகிறார்கள். ஆனால் அனைவரும் தொழிற்சாலையின் வளாகத்திற்கு உள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள். இப்போது பாஃக்ஸ்கான் ஆலை, தனது ஷென்சென் ஆலை உட்பட, மக்கள் சீன குடியரசில் மொத்தம் 800000 தொழிலாளர்களை கொண்டதான ஆலையாக இயங்கி வருகிறது. 1994 முதல், இந்த பாஃக்ஸ்கான் நிறுவனம், அமெரிக்காவிலும், ஜப்பானிலும், வளர்ச்சி மையங்களை விலைக்கு வாங்கி தொழில் புரிந்து வருகிறது.
1997 லும், 1998 லும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், கூடுதலான உற்பத்தி தொழிற்சாலைகளை இவர்கள் நிறுவினார்கள். 2007 ஆம் ஆண்டில், செக் குடியரசிலும், ஹங்கேரியிலும், மெக்சிகோவிலும், பிரேசிலிலும்,இந்தியாவிலும், வியட்நாமிலும், இந்த நிறுவனத்தின் ஆலைகளும், துணை ஆலைகளும் காணப்பட்டன. சமீபத்தில் இந்த நிறுவத்தின் மீது, அதன் தொழிலாளர் விரோதப் போக்குகளை பற்றிய பொதுமக்கள் விசாரணை என்பது வெளிவந்தது. சீனக்குடியரசில் இதுதான் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனம் என்றாலும், இதன் தொழிலாளர் விரோதப்போக்கு கம்யூனிஸ்ட் சீனா என்ற அந்த நாட்டிலேயே அதிகமாக இருந்தது என்பதே இந்த ஆலை பற்றிய ஒரு சித்திரத்தை நமக்கு தந்துவிடும்.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டிலேயே, ஐந்து மாதங்களுக்குள் இந்த ஆலையை சேர்ந்த பதின்மூன்று தொழிலாளர்கள், ஆலையின் சுவர்கள் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு பெரும் அதிர்ச்சியையும், அதே சமயம் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் மூன்று பேர் மட்டுமே உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். இது உலகம் முழுவதும் பாஃக்ஸ்கான் ஆலை பற்றிய ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. உடனே இந்த ஆலை நிர்வாகம், தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளத்தை நூறு விழுக்காடு கூட்டி அறிவித்தது. இந்த அளவுக்கு இந்த ஆலையின் தொழிலாளர் நிலைமை இருக்கிறது என்பது இதிலிருந்தே வெளிப் படுகிறது.
இந்த பாஃக்ஸ்கான் ஆலை தனது வளாகத்திற்குள், தொழிலாளர்களை கொத்தடிமை போல வைத்திருந்ததாலேயே, அவர்கள் சுவர் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது புரியப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ஆலையில்தான் இங்கே திருபெரும்புதூரில், இதே ஆலையின் கிளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எல்லையில்லா பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பு இந்த ஆப்பிள் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கையும், அதை அம்பலப்படுத்த முயற்சித்த ஊடகங்களுக்கு எதிரான போக்கையும் வெளிப்படுத்தி இருந்தது இவர்களை அம்பலப்படுத்திய சீனா வணிக செய்திகள் என்ற இதழாளர்களுக்கு எதிராக பாஃக்ஸ்கான் நிறுவனம் வழக்கு தொடுத்து அவர்களுக்கு நாற்பது லட்சம் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதிக்கச் செய்தார்கள். இதன் மூலம் ஊடகங்கள் இந்த நிறுவனம் கண்டு அஞ்சத் தொடங்கின.
சீன குடியரசில் இருக்கும் இந்த பாஃக்ஸ்கான் நிறுவனத்தில், 2007ம் ஆண்டு ஜூன் 18ம் நாள் ஹூ என்ற 19 வயது பெண் தொழிலாளி, ஆலை வளாகத்திற்கு உள்ளேயே கழிப்பிடத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் 1ம் நாள் 21வயது ஆண் தொழிலாளி லியூபிங், வேலையிலிருந்து நீக்கப்பட்ட 2மணி நேரத்தில் திடீரென இறந்து போனார். 2008ம் ஆண்டு மார்ச் 16ம் நாள் 28 வயது லீ என்ற ஆண் தொழிலாளி வேலை பளுவின் காரணமாக மரணமடைந்தார். 2009ம் ஆண்டு ஜூலை 16ல் சன் டன்யங் என்ற 25 வயது ஆண் தொழிலாளி தான் தங்கியிருந்த 12 வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 2009 ஆகஸ்ட் 20ல் 23வயது சென் சின் சாங் என்ற ஆண் தொழிலாளி ஆலையின் குளத்தில் இறந்து கிடந்தார். அதன் பிறகே 2010ம் ஆண்டு 5 மாதத்திற்குள் 13 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ள ஆலை சுவற்றிலிருந்து கீழே குதித்தனர் என்ற செய்தி வெளி வந்தது. இந்த அளவுக்கு கொடுமையான தொழிலாளர் விரோத போக்கை மேற்கொண்ட இந்த பாஃக்ஸ்கான் ஆலை, ஆஸ்திரேலிய இணையதளத்தில் இந்த உண்மைகளை வெளியிட்டதற்காக, வழக்கு போட்டது. 2010 பிப்ரவரி 17ம் நாள் சீனாவில் உள்ள இதன் ஆலையில் ஒரு வெளிநாட்டு நிருபர் தாக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஆலைதான் திருபெரும் புதூரில் நச்சு வாயு கசிவை ஏற்படுத்தி விட்டு, இப்போது அதை மறைக்கப் பார்க்கிறது.
சீன நாட்டினர் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் கொடியதொரு பாத்திரத்தை வகுத்தப் பின்பு, இப்போது தமிழ்நாட்டு தொழிலாளர் களை அழிப்பதற்காக வந்திருக்கிறார்களா என்று தமிழின உணர்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள். ஆனால் நம்மைப் பொறுத்தவரை போபால் நகரில் 26 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமெரிக்க நிறுவனம், நச்சு வாயுவை அவிழ்த்துவிட்டு இந்திய மக்களை கொன்றது போதும். நமக்கு மீண்டும் ஒரு போபால் வேண்டாம். மேற்கண்ட விபத்தை முன்வைத்து, இங்கொரு போபால் இனியும் வேண்டாம் என்ற குரலை எழுப்ப வேண்டாமா?

2 comments:

Deepa said...

Great post. Thanks Mani.

Maniblog said...

Thank you. Deepa.

Post a Comment