"
இப்போது பீகார் ராணுவ காவல்படை பற்றி சேதிகள் வெளிவருகின்றன. அந்த படையிலுள்ள சிலரை மாவோவாதிகள் சுட்டு கொன்று விட்டனர் என்றும், சிலரை கடத்தி விட்டனர் என்றும் பிறகு கடத்தியவர்களை விடுதலை செய்து விட்டார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் அந்த பீகார் ராணுவ படை அந்த மாநிலத்தில், 1970 களின் தொடக்கத்திலிருந்தே நிறுத்தப்பட்டுள்ளது. உங்கள் கிராமத்தில் ஒரு அந்நிய படை ஆயுதங்களுடன் தங்கி இருப்பதும், உங்கள் ஊரின் சிறிய பையன்களை பிடிக்க அது முயலுமானால், நீங்கள் பொறுமையாக இருக்க முடியுமா? அந்த இணை ராணுவ படை மீது தானாகவே உங்களுக்கு கோபம் வருமல்லவா? இந்த நிலைமை பீகார் மாநிலத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளாக இருக்கிறது என்றால், அந்த கிராமப்புற மக்கள் என்ன சிந்தனையில் இருப்பார்கள்? எண்ணி பாருங்கள்.
எழுபதின் தொடக்கங்களில் இருந்தே அந்த பீகார் மாநிலத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில், நக்சல்பாரி புரட்சியாளர்கள் வெற்றிகரமாக இயங்க தொடங்கி விட்டார்கள். பீகார் மாநில நக்சல் பொறுப்பாளராக இருந்த சத்ய நாராயன் சின்ஹா என்பவர், அகில இந்திய தலைவர் சாருவை எதிர்த்து கட்சியை விட்டு வெளியே வந்து, சமரச வாத பாதையை எடுத்தார். ஆனாலும் தொண்டர்கள் சாரு வழியில் உறுதியாக இருந்ததால், அவர்கள் ஆயுதப்போர் பாதையை விட்டு வெளியே வரவில்லை. அதனால்தான் சாரு மறைவுக்கு பிறகும், சாகர் என்ற சுப்ர தத்தா தலைமையில் பீகாரில் ஆயுதப்போராட்டம், கொரில்லா போர் முறையில் தொடர்ந்து நடந்து வந்தது. இருபத்தி நாலு மணிநேர கொரில்லா போரை இணை ராணுவத்திற்கு எதிராக நடத்தியதில், எழுபதின் மத்தியில் சாகர் பெயர் பெற்றார். சாகர் நடத்திய கொரில்லா போராட்டத்தில், சுரங்கம் தோண்டி அதிலிருந்து ராணுவத்தை எதிர்த்தது ஒரு வகை. அவ்வாறு கொரில்லா போர் நடந்து வரும் சூழலில்தான், அதன் எதிரொலியாக அரசியல் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.
அந்நேரம் இந்திரா காந்தியின் ஆட்சி மத்தியில் நடந்துவந்தது. எதேச்சாதிகார ஆட்சி என்று அது பெயர் பெற்றிருந்தது. அதை எதிர்ஹ்த்து அரசியல் போராட்டம் நடத்த எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் திராணி இல்லாத போது, பீகாரில் நடந்த நக்சல்பாரிகளின் எதிர்ப்புதான் பெரும் தலிவளியாக அந்த ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அப்போது மத்திய பீகாரில் நடத்தப்பட்ட கொரில்லா போராட்டத்தின் எதிரொலியாக, ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்திய மக்கள் இயக்கம் காணப்பட்டது. "எவ்ரிடேஸ் பெர்ஸ்பெக்டிவ் ஒப் டுடே அண்ட் டுமாரோ"l [ everydays perspective of Today and Tomarrow ] என்ற வார எட்டை ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்தினார். அதில் சாகர் தலைமையில் நக்சல்பாரிகள் நடத்திய கொரில்லா போராட்டத்தை பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவரும். அதை ஒட்டியே ஜே.பி. முழு புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்தார். அதில் கல்லூரி செல்வோரையும், ராணுவத்தில் பணியாற்றுவோரையும் கூட, வேலைகளுக்கு செல்லாமல் மக்கள் புரட்சியை நடத்த வரும்படி அறைகூவல் விடுத்தார். இவ்வாறாக ஒரு ஆழமான கொரில்லா போர், ஒரு இடத்தில் குவித்து நடத்தப்படும்போது, அதன் எதிரொலியாக பரந்த இடங்களில் அரசியல் போராட்டம் வெடிக்கும் என்பதை அப்போது நம்மால் காண முடிந்தது. அதுதான் இப்போது சென்ற ஆண்டு வன்னி போரில் நடந்த நிகழ்வும் என்பது புரியப்படவேண்டும். வன்னியில் தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் நடத்திய ஆயுதபோராட்டம் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக, அகில உலக அளவில் ஒரு " நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" என்ற பதாகை உயர்த்தி பிடிக்கப்படுகிறது. அதுவே உலகம் தழுவிய உரிமை போர் என்பதும், அரசியல் வடிவில் இப்போது வெளிப்படுகிறது என்பதும் அறியப்பட வேண்டும்.
அத்தகைய கொரில்லா போர் நடந்த பீகாரின், போஜ்பூர் மாவட்டத்திற்கு, 1978 ஆம் ஆண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது சாகர் ராணுவத்துடனான நேரடி போரில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தாரில் கொல்லப்பட்டதன் விளைவாக, வினோத் மிஸ்ரா தலைமை எடுத்து புரட்சிகர இயக்கத்தை, அதன் கொரில்லா போரை நடத்தி வந்த காலம். அப்போதுதான் அறுந்து போயிருந்த தொடர்பு தமிழ் நாட்டிற்கு மீண்டும் கிடைத்தது. அதனால் மத்திய குழு கூட்டத்திற்கு போஜ்பூர் செல்ல புறப்பட்டோம். அப்போது எங்களை ரயிலில் ஒரு பகுதிவரை அழைத்து சென்றார்கள். அதற்கு பிறகு ரயில் பொக்குவரத்து பீகார் முழுவதற்கும் இல்லாத சூழ்நிலையில், நடை மூலமே இருபதுக்கு மேற்ப்பட்ட கிலோமீட்டர்கள் கூட்டி சென்றார்கள். எங்களுக்கு முன்பும், பின்பும் துப்பாக்கியை மறைத்து வைத்துக்கொண்ட கொரில்லாக்கள் பாதுகாப்புக்கு வந்தனர். அவர்கள் கூலி ஏழை விவசாயிகளாக இருந்தனர். வயல்கள் வழியாக நடந்தோம். வழியில் சிலர் யானை மீது ஏறி செல்வதை காண முடிந்தது. அவர்கள் ஆதிக்க சாதி பண்ணையார்கள் என்று தெரிந்து கொண்டோம். எங்களை ஒரு பெரிய கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே இருந்த மிக பெரிய வைக்கோல்போரில், ஆயுதம் ஏந்திய கொரில்லாக்கள் ஒளிந்திருந்தனர். அவர்கள் குறி முழுவதும் வழியின் மேல் விழி வைத்தே இருந்தது.
நாங்கள் உள்ளே ஒரு பெரிய வீட்டிற்குள் கூட்டி செல்லப்பட்டோம். அங்கே எங்கள் ரகசிய கூட்டம் நடந்தது. அன்று மாலைக்குமேல், ஒரு தோழர் வந்து இந்தியில் ஏதோ கூறினார். உடனே தலைவர்கள் கவனமாக மாற்று இடம் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். அதை ஒட்டி நாம் எல்லோரும் இன்று நள்ளிரவில் இந்த ஊரைவிட்டு, அடுத்த இடத்திற்கு செல்லப்போகிறோம் என்று அறிவித்தனர். அவ்வாறே இரவில் எங்களை கொரில்லாக்கள் வெள்யே அழைத்து சென்றனர். வயல் வழி வழியாக சென்றோம். வரப்புகளில் நல்ல இரவு இருட்டில் கடந்து சென்றோம். ஒருவர் பின்னால் ஒருவர் சென்றோம். ஒவ்வுறு தோழருக்கும் முன்னாலும், பின்னாலும் ஒரு கொரில்லா தோழர் துவக்குடன் வந்தார். ஏ.கே.-47 அவர்கள் கரங்களில் இருந்தது. நடுவில் ஒருவர் எஸ்.எம்.ஜி. வைத்திருந்தார். அது சிறிய இயந்திர துப்பாக்கி. அப்போது எங்கள் பாதைக்கு மிக அருகில் ஒரு கூடாரம் இருந்தது. அதில் மினுக், மினுக், என்று விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. அதுதான் பீ.எம்.பி. முகாம் என்று ஒரு தோழர் கூறினார். அதாவது பீகார் ராணுவ காவலர் படை முகாம் அங்கேயே இருந்ததை கண்டோம். ஆனால் அவர்களுக்கு சிறிதும் சத்தம் கேட்காமல் நாங்கள் அடி எடுத்து வைத்து அவர்களது முகாமை கடந்து சென்றோம். இப்படியேதான் அங்குள்ள கொரில்லாக்களின் வாழ்நிலை அன்றாடம் நடக்கிறது.
முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதுதான் நிலைமை என்றால் இப்போது கேட்கவா வேண்டும்? பீகார் ராணுவ காவலர்கள் நாற்பது ஆண்டுகளாக அங்கேயே முகாம் போட்டு இருபாது இதிலிருந்தே தெரிகிறதே? அப்புறம் எப்படி ஐயா மக்கள் இந்த மத்திய அரசின் அர்சப்படைகளை ஏற்றுக்கொள்வார்கள்? அங்கு மக்களுக்கும், மத்திய அரசின் அரசபடைகளுக்கும் இடையேதான் மோதல் என்று விளங்குமா?
No comments:
Post a Comment