Tuesday, November 2, 2010

மொழிவாரி மாநில நாளில், இந்தியா ஒற்றையாட்சி என்பதா?


தமிழ்நாட்டிலும் ஐம்பத்து நான்கு ஆண்டுகள் கழித்து, நவம்பர் தொடக்கத்தை, மொழிவாரி மாநில அறிவிப்பை கடைப்பிடிக்கவேண்டும். ஆந்திராவில் அதை கொண்டாட என்னும் போதுதான், தெலுங்கானாகாரர்கள், அதை எதிர்த்து தகராறு செய்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் தகராறு செய்ய ஆள் இல்லாவிட்டாலும், யாரும் இதை கவனமாக கொண்டாடவில்லை. ஆனால் சண்டே இந்தியன் என்ற அந்த இதழ் மட்டும், தனது தமிழ் பதிப்பு மூலம் அதை ஒரு கருத்தரங்காக ஆக்கி நிகழ்ச்சி நடத்தியது. அதில் அறிய பல கருத்துக்கள் வெளிவந்தன. வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், வேல்முருகன், வெங்கடேஷ் ஆத்தரையா, தமிழ்நாடு திட்டக்குழு துணை தலைவர் நாகநாதன், ஆகியோர் உரையாற்றினார்கள்.மொழிவாரி மாநிலங்கள் 1956 இல் அறிவிக்கப்பட்டன. அதற்கு முன்பு அதற்காக நடந்த போராட்டங்கள் அங்கு வரிசைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டை பொறுத்த மட்டில், கேரளாவுடன் இன்று போய்விட்ட முல்லைபெரியாரும், அதையொட்டிய தேவிகுளம், பீர்மேடும், திருவனந்தபுரமும், நெய்யாறும், நெய்யாற்றங்கரையும்,பாலக்காடும், நமமுடன் இணைக்கப்படாமல் போய்விட்டது என்று வருத்தப்பட்டார் ராதாகிருஷ்ணன் . ஆந்திராவுடன் போய்விட்ட சித்தூரும், காளஹஸ்தியும், குப்பமும் நமக்கு வரவேண்டியவை என்றும் சொல்லிவைத்தார். கர்நாடகாவுடன் இன்று போய்விட்ட பெங்களூருவும், தங்கவயலும், மந்தியாவும், தமிழ்நாட்டில் இருந்திருக்கவேண்டும் என்றும் கருத்து சொன்னார். அதனால்தான் அந்த பகுதிகளுடன் இன்றும் தண்ணீர் பிரச்சனை தலைவலியாக இருப்பதாகவும் கூறினார்.

அடுத்து பேசவந்த ச.ம.உ. ரவிக்குமார், அமைதியா தொடங்கி இன்று மத்தியில் ஆள்வது கூட்டணி ஆட்சி என்று கூறுகிறோம், ஆனால் அதை பலரும் தவறாக கூட்டாட்சி என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற குண்டை தூக்கி போட்டார்.
அதாவது இந்தியாவில் நடப்பது கூட்டாட்சி அல்ல என்பதை கூறினார். ஏன் என்றால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருப்பதால் அவற்றை ஆளும் மத்திய அரசு கூட்டாட்சி அரசு என்ற தவறான பார்வை நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி, மாநில கட்சிகள் மத்தியில் ஆளும் கூட்டணி ஆர்சில் அங்கம் வகிக்கும் காரணத்தால், அந்த மத்திய அரசு கூட்டாட்சியாக மாறிவிடாது. அதைதான் அங்கே ரவிக்குமார் கூறினார். ரவி பேசத்தொடங்கும் போதே அன்று அண்ணா வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொன்னார்; ஆனால் இன்று அப்படி சொல்லமுடியாது என்று புதிய குழப்பத்தை ஏற்படுத்தினார். இன்று பல விசயங்களில் தமிழ்நாடு அல்லது தமிழர்கள் மேலாண்மை செலுத்துவதாக ரவி விளக்கமளித்தார்.அவர் கூறும் சில தமிழர்கள் ஒட்டுமொத்த வடவர் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி அடிபணிந்து நடந்து கொண்டு இருப்பதனால், அவர்களது மேலாண்மை என்பது அந்த குறிப்பிட்ட துறையில் அதாவது ஊடகத்துறை போன்ற துறைகளில் மேலோங்கி இருக்கலாம். இது எந்த விதத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற அண்ணா கூற்றை இன்றைக்கு பொருத்தமில்லாமல் செய்யும் என்பதை ரவியிடம்தான் கேட்கவேண்டும்.


கூட்டாட்சியாக கூட்டணி ஆட்சி உருவாகவில்லை என்ற ரவியின் கூற்று, கூட்டாட்சியல்லாத ஒரு அரசு இயந்திரம் அவ்வாறு கூட்டாட்சியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியையும் சேர்த்து எழுப்புகிறது. கூட்டணி ஆட்சியிலேயே மாநில கட்சிகள் திருப்தி அடைந்து விடுகின்றன என்று அப்போது ரவி கூறினார். அதாவது தங்கள் சொந்த அல்லது கட்சியின் தேவைகளை பெற்றுக்கொண்டால் போதும் என்றும், மாநிலத்தின் உண்மையான தேவைக்கு கூட்டாட்சி கட்டாயம் தேவை என்றாலும், மாநில கட்சிகள் அது பற்றி கவலை கொள்வதில்லை என்பதையும் அங்கே சுட்டிக்காட்டுவதாக இருந்தது.நாம் உடனடியாக தங்கள் குடும்ப தேவையை நிறைவு செய்யதால் போதும் என்று கட்சி நலனை சுருக்கி புரிந்து கொள்ளகூடாது. மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரிகள், மாநிலங்களுக்கு செலவழிக்கப்படாமல் பறிக்கப்பட்டு மத்தியில் குவிக்கப்படுகின்றன என்பது அடுத்த குற்றச்சாட்டாக ரவியிடம் இருந்து கிளம்பியது. என்.டி.ராமாராவ்,லாலு, போன்ற தலைவர்கள் மாநில கட்சியை தொடங்கும்போது, மாநிலங்களின் உரிமைகளை முன்வைத்தே அந்த கட்சிகளை தொடங்கினார்கள் என்றும், ஆனால் அவர்களுக்கு மத்திய ஆட்சியில் பங்கு கிடைத்தவுடன், மாநில உரிமைகளை விட்டுவிட்டார்கள் என்றும் ரவி குறிப்பிட்டார். சௌகரியமாக தமிழ்நாட்டில் அதுபோன்ற உதாரணங்களை சுட்டி காட்டுவதிலிருந்து தவிர்த்து விட்டார்.ஆனாலும் அனைவராலும் புரிந்துகொள்ளமுடிந்தது.

மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரியில்,ஐம்பது விழுக்காட்டையாவது மாநிலங்களின் நலனுக்கு செலவழிக்க வேண்டும் அல்லது மாநிலங்களின் கைகளில் கொடுத்து விடவேண்டும் என்று ரவி தெரிவித்தார். ஆனால் இரண்டு விழுக்காடு கூட மாநிலங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றார். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஒன்று புள்ளி ஆறு விழுக்காடுதான் மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகின்றன என்றார். இந்த புள்ளி விவரம் அதிர்ச்சியானதுதான் நேர்முக வரியையும், மறைமுக வரியையும் மத்திய அரசே எடுத்து கொள்கிறது என்றார். கார்கில் போர் நேரத்தில் ஒரு செஸ் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு விழுக்காடு செஸ் வரி கார்கிலுக்காக என்று நியாயப்படுத்தப்பட்டது. பிறகு அதையே கல்விக்காக என்று வசூலிக்கப்பட்டது. இதை பா.சிதம்பரம்தான் அமுல்படுத்தினார். அதில் ஒரு பைசா கூட கல்விக்காக இதுவரை மாநிலங்களுக்கு கொடுக்கப்படவில்லை. இதை எதிர்த்து எந்த மாநில கட்சியும் பேசவும் இல்லை. தமிழக முதல்வர் ஒருமுறை முதல்வர்கள் மாநாட்டில் பேசினார். அதற்குபிறகு அவரும் வலியுறுத்தவில்லை. அந்த செஸ் வரியிலிருந்து களிக்கு எவ்வளவு கொடுத்தீர்கள் என்று நாடாளுமன்றத்தில் கேட்டால், சிதம்பரம் பதில் சொல்லவில்லை. மாறாக ல்கல்விக்கு என்று வசூலித்த நாதா பணத்தை வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்கள்.இது மத்திய அரசு செய்துவரும் பெரும் மோசடி என்றார் ரவி. இருபது ஆண்டுகளாக சர்வ சப்த அபியான் என்ற அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் அமுலாகி வருகிறது. மாநிலங்களின் பாட்டியலில் இருந்த கல்வியை இந்திராகாந்தி காலத்தில் போது பட்டியலில் மாற்றினார். இப்போது மெல்ல, மெல்ல, அதுவே மத்திய பட்டியலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது.


அடுத்து பாவம் ரவிக்குமாருக்கு அரசியல் செய்யவேண்டிய கட்டாயம் இருந்ததால், டி.ஜி.பி. யை மாநில முதல்வர் தீர்மானிக்கமுடியாமல், நீதிமன்றம் தலையிடுகிறது என்றார். வழமையை விட்டுவிட்டு எப்படி முதல்வர் வரிசைகிரமத்தை மாற்றலாம் என்ற கேள்வி கேட்க அவரால் முடியவில்லை. தேசிய உளவு நிறுவனம் நிறுவி அதன்மூலம், அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கத்தை பின்பற்றி, இந்தியாவிலும் மாநிலங்களின் காவல்துறை மற்றும் உளவு துறையின் செயல்பாடுகளை கபளீகரம் செய்துவிட்டார்கள் என்று ரவி புலம்பிவிட்டார். இவ்வாறு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பவர்கள் அதன்விளைவாக சோவியத் யூனியன் உடைந்து போனதை போல, இந்தியாவும் நாளை உடைந்துபோக வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்தார். மொழிவாரி மாநிலங்களுக்கும் உரிமைகள் கொடுப்பதை அதாவது உரிமைகளை பிரித்து கொடுப்பதை செய்யப்போகிறார்களா? அல்லது ஒற்றை ஆட்சி முறைக்கு போவதா என்ற வாய்ப்புதான் உள்ளது என்றார். ஒற்றையாட்சியை கொண்டுவர முயற்ச்சிக்கிறார்கள் என்றார். அப்படியானால் இப்போது ஒற்றையாட்சி இல்லையா என்று நமக்கு அப்போது கேட்கத்தோன்றியது.

அடுத்து வேல்முருகன் ச.ம.உ. பேசினார். அவர் சங்கரலிங்கனார் பட்டினிப்போர் இருந்து கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைத்ததை நினைவு கூர்ந்தார். அவர் வைத்த பதினாறு கோரிக்கைகளில், கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்ப்பதும் போய்விட்டது, அதுபோல பூர்ண மதுவிலக்கும் அமுலுக்கு வரவில்லை என்றார்.1953 இல் நடந்த போட்டி ஸ்ரீராமுலு போராட்டத்தை நினைவுகூர்ந்தார். சும்மா வரவில்லை இந்த மொழிவாரி மாநிலங்களும் என்பதை எல்லோருமே உணர்த்தினார்கள். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மாநில றைசுக்கும் உரிமை இல்லை, மத்திய அரசும் உள்ளே போகமுடியாதவாறு பன்னாட்டு மூலாத குழுமங்களுக்குதான் அனுமதி உள்ளது என்று பொரிந்து தள்ளினார். இதுதானா மொழிவாரி மாநிலங்களின் இன்றைய நிலைமை என்ற கேள்வி எழும்பியது. தேசிய ஊரக வேலை வைப்பு திட்டம் சரிதான என்ற கேள்வியை வேல்முருகன் எழுப்பினார். இலவசங்களை சாடினார். மக்களுக்கு தொலைக்காட்சி வாங்க பணம் சம்பாதிக்கும் நிலையை வேலை வாய்ப்பின் மூலம் ஏற்படுத்தவேண்டும் என்றார். வட மாவட்டங்களை பிரித்து தனி மாநிலமாக ஆக்குவதற்கு உரிய காரணங்களாக அந்த வட மாவட்டங்களில் உள்ள வளர்ச்சி இன்மையை சுட்டிக்காட்டினார். சம சீரான வளர்ச்ச்சி இன்றி தமிழகம் கையேந்தி நிற்கிறது என்றார்.

பொருளாதார நிபுணர் அன்று அழைக்கப்படும் வெங்கடேஷ் ஆத்தரையா, அடுத்து பேசவந்தார். கடுமையாக பேசுவார் என்று எதிர்பார்த்தால் அவர் பூசிமெழுகி பேசினார். ஆனாலும் சில செய்திகளை நன்றாகவே கூறினார். ஆனால் ரவிகுமார் பேசியதுடன் உடன்பாடு என்று வேறு சொல்லிக்கொண்டார். இந்தியாவில் திட்ட குழுதான் முக்கிய அமைப்பு. அத்தகைய திட்டக்குழுவில் உறுப்பினர்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை என்றார். அதனால் அந்த திட்டகுழுவும், நிதிகுழுவும் அடிப்படையில் ஜனநாயக விரோதமானவை என்று அழுத்தம் திருத்தமாக ஆத்தரேயா கூறினார். மத்தியஅரசு பொதுப்பணி துறைகளில் உள்ள மூலதன பங்குகளை விற்க முற்படும்போது, எந்த மாநிலத்தையும் கேட்பது இல்லை என்றார். மனிதவள மேம்பாடு குறியீடு படி, சிசு மரண விகிதத்தில், பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை விட முன்னேறியுள்ளது என்றார். ஆனாலும் கேரலாவைவிடவும், இலங்கையை விடவும் அதிகமான விகிதத்தை கொண்டுள்ளது என்றார். எழுத்தறிவில் முன்னேறியுள்ளது என்றார். போக்குவரத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது. நூற்றெட்டு நகராட்சிகள் இங்கு இருக்கின்றன. போக்குவரத்துத்துறை முன்னேறியதற்கு, அது பொதுதுறையாக இருந்ததே காரணம் என்றார். முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைக்கு ஊக்குவிப்பு என்று பொருள்; ஆனால் மக்களுக்கு கொடுக்கும் சலுகைக்கு மானியம் என்று பொருள் என்றார். எதற்கு இந்த இரண்டு பெயர் என வினவினார்.தலித் மக்களுக்கு இன்னமும் தீண்டாமை சுவர்கள் டிக்கப்படவில்லை என்று வளர்ச்சி பற்றி கேள்வி எழுப்பினார். திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு ஏதாவது செய்யவிரும்பினால், அவற்றை உரிமைகள் என்ற பெயரிலேயே அன்க்கேகரிப்பது நல்லது என்றார்.

அடுத்து மாநில திட்டக்குழுவின் துணை தலைவர் நாகநாதன் பேசினார்.ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அறுபத்தாறு துறைகளில், முப்பத்துமூன்று துறையில், மற்ற மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள்தான் இருந்தார்கள். தமிழ்நாட்டை ஆள தமிழ் அதிகாரிகள் இல்லா நிலையும் இருந்தது உண்டு என்றார். நாகநாதன் அன்றைய மொழிவாரி மாநிலங்களுக்காக போராடிய வரலாற்றை சொல்லும்போது, காந்தி மொழிவாரி மாநிலங்களுக்கு ஆதரவாக இருந்தார் என்றும், ஆனால் நேரு அதற்கு எதிராக இருந்தார் என்றும் ஒரு வரலாற்று உண்மையை போட்டு உடைத்தார். அதுபற்றிய விவரங்களை தனது வெளிவர இருக்கும் புத்தகமான," இந்திய கூட்டாட்சியில் அதிகார குவிப்பா? அதிகார பகிர்வா?" என்பதில் குறிப்பிட்டிருப்பதாக கூறினார். காந்தியார் எவ்வளவு பேர் அஹிம்சையையும், ராட்டிணத்தையும், நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்று நொந்து பொய் கூறியதை நாகநாதன் குறிப்பிடுகிறார். அதேசமயம் இந்தியாவை ரானுவமயமாக ஆக்கவேண்டும் என விரும்புகிறார்கள் என்று காந்தி கூறியது நேருவின் சிந்தனையைத்தான் என்று கூறினார். உலகிலேயே ராணுவ தளவாடங்களை அதிகமாக வாங்கும் பதினாலு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஸ்டோக்ஹோம் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கூறியுள்ளதையும் எடுத்து சொன்னார்.


மொழிவாரி மாநிலங்கள் உருவாக்க யாருடைய போராட்டங்கள் எல்லாம் உதவின என்ற பட்டியலில், 1952 ஆம் ஆண்டிலேயே ஆந்திராவை சேர்ந்த சீதாராமன் இருந்த பட்டனி போரை குறிப்பிட்டார். மொழிவாரி மாநிலங்கள் பற்றி 1948 இல் டிசம்பர் பத்தில் சார் குழு போடப்பட்டது. நேரு அப்போது மொழிவாரி மாநிலங்கள் கூடாது என்ற கருத்தை வைத்திருந்தார். காந்தி மறைவுக்கு இரண்டு நாட்கள் முன்பு, மொழிவாரி மாநிலங்கள் பற்றி கூறியுள்ளார். ஆனால் சார் குழு காந்திக்கு துரோகம் இழைத்தது. நேரு,படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோர் இணைந்தே அப்போது செயல்பட்டனர். 1951 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில், ஆந்திராவின் கொல்லுபட்டி சீதாராமன் பட்டினி போரை தொடங்கினார். அதை முப்பத்தைந்து நாட்களில் முடிக்கவைத்தவர் நேரு. அதன் பிறகு, பலுசு உட்பட சென்னை வந்து, போட்டி ஸ்ரீராமுலு பட்டினி போரை தொடங்கினர். ஐம்பத்தெட்டு நாட்கள் பட்டினி போருக்கு பின், ஸ்ரீராமுலு அதிலேயே மரணமடைந்தார். அதுவே ஆந்திரா எங்கும் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. அந்த நிர்பந்தமே மாநிலங்கள் மறுசீரமைப்பு குழு ஒன்றை போடும்படி அரசை வற்புறுத்தியது. முதலில் அம்பேத்கர் மொழிவாரி மாநிலங்களை நிராகரித்தார். மாநிலங்களின் மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையை படித்தபின்பு அம்நேட்கர் அதில் உடன்பட்டார். அப்போது அவரது கருத்தை என் மாற்றிக்கொண்டார் என சிலர் வினவினர். அதற்கு, ஒரே கருத்தில் எப்போதும் இருப்பது கழுதையின் குணம் என்று அம்பேத்கர் கடுமையாக பதில் சொன்னார். இத்தனை விசயங்களை நாகநாதன் கூறி அன்றை இந்திய சூழலில் எப்படிப்பட்ட நிலையில் இந்த மொழிவாரி மாநிலங்கள் வந்தன என்பதை விளக்கியது அருமையாக இருந்தது.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மண்டலங்களை அமைக்கவேண்டும் என்ற கருத்தும் வந்தது இன்றோ எல்லா மாநிலங்களின் அதிகாரமும் மத்திய அரசில் உள்ள சில அதிகாரிகளின் கைகளில் அடங்கி கிடக்கிறது என்றார் நாகநாதன். இன்றைக்கு மாநிலங்களுக்குள் உள்ள கவுன்சில்கூட இன்று இயங்காத நிலை உள்ளதை சுட்டி காட்டினார். சில ஆலோசகர்களின் ஆட்சிதான் மத்தியில் நடந்து வருகிறதே தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடைபெறவில்லை என்றார்.நேரு அப்போதே மத்திய அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதில்தான் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதை, நாகனாதனது உரை நமக்கு உணர்த்தியது. இப்போது அரசியல்சட்ட விதிகள் நாட்டை ஆளவில்லை. மாறாக உயர் அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. இவ்வாறு நாகநாதன் கூறியது நமக்கு ஒரு சரியான தெளிவை கொடுத்தது. அத்தைகைய உயர் அதிகாரிகளும் பன்னாட்டு மூலதன நிறுவங்களுக்கு நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மையையும் கூறினார்.


1930 ஆம் ஆண்டிலேயே ராஜாஜி முதல்வராக இருந்த போதே, அவரால் அகில இந்திய வானொலியில் உள்ள அதிகாரி மூலம்தான் ஒரு செய்தியை வெளிக்கொண்டுவர வேண்டுகோள் வைக்கவேண்டி இருந்தது. ஆனால் இன்று அப்படிப்பட்ட மத்திய தொலை தொடர்பு இலாக்காவில்கூட, எல்லா கார்பரேட்களும் உள்ளே நுழைந்து விட்டன என்றார். விமான நிலையத்திலும், துறைமுகங்களிலும் கூட மாநில அரசுகள் நுழைய முடியாது; ஆனால் பல பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் அவற்றில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. தொலை தொடர்புகளில், அந்நிய பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றார். இந்தியாவில் நடப்பது ஒற்றையாட்சி என்பதை அப்போது நாகநாதன் அறிவித்தார். மாநிலங்களின் உரிமைகளை மதிக்காமல் இருந்தால், அதுவே தேசிய இனங்களை அங்கீகரிக்காமல் இருப்பதுதான் எனபதை நாகநாதனின் உரையில் நாம் கண்டுகொண்டோம். அப்படி ஒரு நாடு இருக்குமானால் அது ஒரே நாடு என்ற கூற்றை கூறும் பாசிசம் என்றார் அவர். இந்தியாவில் இப்போது இருப்பது ஒரு ஒற்றையாட்சி என்பதை அவர் புரியவைத்தபோது, ரவி கூறிய ஒற்றையாட்சியை கொண்டுவர முயற்சி எடுக்கிறார்கள் என்ற கூற்று பொய்யாகிவிட்டது என்பது புரிந்தது. இங்கே நடப்பது, இங்கே இருப்பது ஒரு கூட்டாட்சி அரசு கட்டமைப்பு அல்ல என்றும், ஒரு ஒற்றையாட்சி அரசு இயந்திரம்தான் என்றும் வெகு நாட்களாக நாம் கூறிவருவது இன்று நாகநாதன் மூலம் வெளிப்பட்டுள்ளது ஒரு நல்ல பதிவு. .

No comments:

Post a Comment