Friday, September 2, 2011

செங்கொடி, நீ திட்டமிடுவதில் எங்களை மிஞ்சிவிட்டாய்.


நாங்கள் ஏதோ நாற்பதுஆண்டு அனுபவத்தில், போராட்டங்களுக்கு திட்டமிடுகிறோம் என்றும், அது அனேகமாக வெற்றிபெறுகின்றன என்றும் எண்ணி இறுமாந்து இருந்தோம். ஆனால் செங்கொடி, நீ திட்டமிட்டு நடந்துகொண்டதில் உன் திட்டத்தை நிறைவேற்றியதில் , அதில் நீ வெற்றிபெற்றதில், நாங்கள் மட்டுமல்ல, இந்த உலகமே வருத்தப்படுகிறது. ஒரு இளம் தோழர் புரட்சிகரமாக வளர்ந்த இளம் பெண் தோழி,,தானே தனித்து திட்டமிடுவதில்,திட்டமிட்டதில், சக தோழர்களையும் கலந்துகொள்ளாமல் திட்டமிட்டதில், அதையும் சகதோழர்களுக்கு தெரியாமலேயே நிறைவேற்றியதில், உனது இளம் வயதில் நீ வெற்றி பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக ஆளாத்துயரத்தில் வீழ்ந்தோம். ஏன் தெரியுமா? நீ நாம் வைக்கும் கோரிக்கைகாக "உன் உயிரையே" தியாகம் செய்துவிட்டாய். இதை எப்படி செங்கொடி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்? நீ இப்படி உயிரை விடுவதற்கா உனக்கு உன் அக்காமார்கள் மார்க்சையும், லெனினையும், மாவோவையும், பிரபாகரனையும், அறிமுகம் செய்தார்கள்?

இத்தனை நாளும் எந்த விசயமானாலும் உன் தாய் போல உடன் இருந்து உன் வளர்ச்சிக்கு உதவிய உன் அக்கா மகேசிடம் சொல்லாமல், கேட்காமல் நீ எதையாவது செய்தது உண்டா? இப்போது மட்டும் மகேசுக்கு தெரியாமல்,, ஜெசிக்கு தெரியாமல், மகாவிற்கு தெரியாமல், மேகலாவிடம் கூறாமல்,வின்சென்ட் அண்ணனிடம் தெரிவிக்காமல்,நீவீட்டைவிட்டு கிளம்பும்போது வீட்டில் இருந்த நீலாவிடம் சொல்லிக்கொள்ளாமல், எப்படி உன்னால் கிளம்ப முடிந்தது? சின்ன தம்பிகளாக அந்த "கூட்டு வாழ்க்கையில்" உன்னுடன் "மக்கள் மன்றத்தில்" வாழ்ந்துவரும் "கவுதமும், பகத்சிங்கும்" உனக்கு நினைவுக்கு வரவில்லையா? அந்த "குழந்தை கலைஞர்கள்" அடிப்ப்படும்போது ரசிப்பாய்? நீ ஆடிப்ப்படும்போது அந்த குழந்தை செல்வங்கள் ரசிப்பார்களே? எல்லாம் எப்படி மறந்து, இப்படி ஒரு முடிவை எடுத்தாய்? எதிர்களை வீழ்த்தத் தானே நாங்கள் "கதைகள்" சொல்வோம். எப்போதாவது நாமே நம்மையே வீழ்த்திக் கொள்வதை ஏற்றுக் கொண்டுள்ளோமா? உனக்கு மட்டும் அந்த விபரீத எண்ணம்எப்படிவந்தது? நக்சல்பாரி இயக்கம் பல வர்க்க எதிரிகளை அழித்தொழ்த்தது பற்றி வேண்டுமானால் நான் பேசியிருப்பேன். என்றுமே "தன் உயிர் தியாகம்" செய்வதை ஆதரித்து பேசியது இல்லையே? முத்துகுமார் மறைவு உனக்குள் இப்படி விபரீத முடிவை ஊக்குவித்ததா?


உன் முடிவை நீ தேடிக்கொள்வதற்கு முந்திய நாள்,முத்துகுமார் பற்றி அவரது மறைவால் ஏற்பட்ட எழுச்சி பற்றி ஏன் வினவி இருக்கிறாய்?. அது உனக்குள் ஒரு நெருப்பாய் எழுந்து கடைசியில் உன்னை அழித்துவிட்டதா? செங்கொடி, நீ பெரும்பாலான மக்கள் மன்றத்தின் தோழர்கள் சென்னை சென்றுள்ள சூழலில்,இரு சக்கரவாகனத்தை தனியே எடுத்துக் கொண்டு, காஞ்சி நகருக்கு ஏன் கிளம்பியிருகிறாய்?என்றுமே சொல்லாமல் வெளியே செல்லாத நீ அன்று மட்டும் ஏன் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமலே, வெளியே கிளம்பினாய்? கையில் இருக்கும் இரு சக்கர வாகனத்தை காட்டி பெட்ரோல்பங்கில் பாட்டில் நிறைய பெட்ரோல் வாங்கி ஏன் ஊற்றிக் கொண்டுள்ளாய்? வட்டாட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக மக்கள் மன்றம் போராட்டங்களை நடத்தி வந்ததால், நீ திட்டமிட்ட போராட்டத்திற்கும் வட்டாட்சியர் அலுவலக வளாகமே உன்னால் தேர்வு செய்யப்பட்டதா? வழமையாக மக்கள் மன்றத்தினர் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திற்கு வரும்போதும், மனுக்கள் கொடுக்க வரும்போதும், வழக்குகள் பலவற்றையும் நடத்த அங்கே இருக்கும் நீதிமன்றத்திற்கு வரும்போதும், தேநீர் குடிக்கும் கடைக்காரர் உனக்கும் பழக்கமானதால், அதை எப்படி தந்திரமாக பயன்படுத்திக்கொண்டாய்? அந்த "தேநீர் கடைக்காரிடம்" போக்குவரத்து நெரிசல் என்பதால், இரு சக்கர வாகனத்தை இங்கே நிறுத்தி செல்கிறேன் என்றும், நாளை அக்கா வரும்போது "சாவியை" கொடுத்து விடுங்கள் என்றும் சொல்லும் தந்திரத் திட்டம் உனக்கு எங்கிருந்து வந்தது? ஞாயிற்று கிழமை என்பதால், ஆள் நடமாட்டம் இல்லை எண்பதை பயன்படுத்திக் கொண்டு, மறைவில் உடலெங்கும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, திடீரென வெளியே தோன்றி " மூவரையும் தூக்கிலிடாதே" என்று உரக்க கூவிக் கொண்டே கீழே வீழ்ந்துள்ளாயே?

எப்படிப் பெண்ணே இத்தனை "திட்டங்களையும்" நீயே போட்டு நீயே நிறைவேற்றி எங்கள் எல்லோரையும் வென்று விட்டாய்? நாங்கள் உன்னிடம் "தோற்று விட்டோம்". .

No comments:

Post a Comment