Wednesday, November 23, 2011

வால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.

வால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.
இன்று மாலை மத்திய அமைச்சகத்தில் கொண்டுவர இருக்கும் "திட்டம்" இந்தியாவில் உள்ள சாதாரண சில்லறை வணிகர்களை ஒழிப்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி இந்திய சந்தையை அமெரிக்காவின் ஏகபோக பன்னாட்டு நிறுவனமான "வால்மார்ட்" கைகளில் ஒப்படிக்க உள்ள தந்திரம். அமைச்சகம் முன்னால் வைக்கப்பட்டுள்ள நூற்று பத்து பக்கங்களில் "ஆயிரம் கொடிகளை" மூலதனமாக போடும் நிறுவனமே இந்தியாவின் பெரு நகரங்களில் "பெரும் பல்முனை அங்காடிகளை" நிறுவ அனுமதி அளிக்கப்பட்டு என்று உள்ளது. அதாவது அமெரிக்காவின் கார்பொரேட் ஆக இருக்கும் "வால்மார்ட்" நிறுவனத்தை உள்ளே நுழைய விடுவது மட்டுமல்ல, அதற்கு போட்டியாக எந்த ஒர் நிறுவனமும் வந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக உளது என தெரிகிறது.


பத்துலட்சம் மக்கள் தொகை உள்ள அனைத்து நகரங்களிலும் இனி "வால்மார்ட்" மாத்திரமே சந்தையை "கபளீகரம்" செய்யும். வால்மார்ட் நிறுவனம் தனது "தொழிலாளர்களை" நடத்துவது, மற்றும், நுகர்வோரின் உரிமைகளுக்கு மதிப்பு அழிப்பது ஆகிய விசயங்களில், "கடுமையான கெட்டபெயரை" சம்பாதித்து உள்ளது. இப்போது இருந்துவரும் "சில்லறை வணிகர்கள்- நுகர்வோர்" என்ற உறவு ஒரு ஆரோக்கியமான உறவாகும். நுகர்வோர் கைகளில் காசு இருக்கும் போது அதற்கு தகுந்தாற்போல பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோருக்கு தேவைப்படும்போது, அத்தகைய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோரின் கைகளில் இருக்கும் சிறிய அளவு காசுக்கு தகுந்தாற்போல பொருள்களை "பொட்டலம்" கட்டி வாங்கிக் கொள்ளலாம். இது இந்தியாவின் கிராமங்கள் சார்ந்த, விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில், நுகர்வோரின் தேவைகளையும், வாங்கும் சக்தியையும் பொறுத்து நடத்தப்படும் "பரிவர்த்தனை". ஆனால் ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம்தான் அத்தகைய பொருள்களை விற்கும் என்ற நிலை வந்துவிட்டால், நுகர்வோருக்கு ஒரு "உத்திரவாதமான" ஆரோக்கியமான உறவு வணிகர்களுடன் இல்லாமல் போய்விடும்.

இயந்திரமயமான ஒரு உறவில் என்னதான் அழகான பைகளில் சாமான்களை வாங்கினாலும், அவை நுகர்வோரின் திருப்தியை நிரப்புமா? ஏழை, எளிய நுகர்வோர்கள் அதிகம் உள்ள நமது நாட்டில் ஆரோக்கியமான உறவுடன் கூடிய வணிகம் மட்டும்தானே நுகர்வோரின் தேவையை சரியாக நிரப்ப முடியும்? இது "மனித உறவு" சம்பந்தப்பட்டது. நிலப்பிரபுத்துவ நில உறவுகளை இன்னமும் வைத்துக் கொண்டு, முழு முதலாளித்துவ பழக்கங்களுக்கு எப்படி செல்ல முடியும்? இந்த மத்திய அரசின் முயற்சி, கேள்விப்படும்போது "படாடோபமாக" தெரியலாம். ஆனால் நடைமுறையில் இந்திய நுகர்வோரை "வஞ்சிக்கின்ற" ஒரு செயலே.

2 comments:

பூங்குழலி said...

வால்மார்ட்டிடம் அல்ல மொத்தமாக நாட்டையே அமெரிக்காவின் வணிக குழுமங்களிடம் தாரை வார்க்கும் வேலையை அரசு செய்து வருகிறது .

Anonymous said...

நாட்டை காலனியாக்கும் வேலையை காங்கிரஸ் மிக வேகமாக செய்து வருகிறது.

Post a Comment